Skip to content
Home » காட்டு வழிதனிலே #5 – ஒரு சிகரெட் துண்டு

காட்டு வழிதனிலே #5 – ஒரு சிகரெட் துண்டு

பாம்பு

தீ ! என்னைச் சுற்றிச் சற்றுத் தூரத்தில் எரிந்து கொண்டிருக்கிறது. தீயின் வெப்பத்தில் என் செதிள்கள் சூடாகிக் கொண்டிருந்தன. எந்தப் பக்கம் தலையைத் திருப்பினாலும் சூட்டின் தன்மைக் கூடுவதை உணர்ந்து தலையைப் பின்னால் இழுத்துக் கொள்கிறேன். தெரிந்து விட்டது! தீ என்னை விழுங்கப் போகிறது! எத்தனை உயிர்களை நான் விழுங்கியிருப்பேன் என நினைக்கையில் வியப்புதான் மேலிட்டது!

போடி மலைப்பகுதியில் இரண்டாயிரம் அடி உயரத்தில் உள்ள வனப்பகுதி அது. அதில் சோலைக்காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் இரண்டு மீட்டர் ஆழத்திலும் ஓர் அடி அகலத்திலுமாய் ஒரு பொந்து. நான்கு மாதங்களுக்கு முன்புதான் என் தாய் அப்பொந்தை ஆக்ரமித்து 65 முட்டைகளை ஈன்று இருந்தாள். அம்முட்டைகளுக்குத் தேவையான வெப்பத்தை, அவற்றை நடுவில் வைத்து தன் உடலால் சுற்றி வைப்பதன் மூலமும், அவ்வப்போது தன் உடலில் சிறு உதறல், நடுக்கத்தை ஏற்படுத்துவதன் மூலமும் அளித்தாள். சுமார் 31லிருந்து 34 டிகிரி வரையிலான வெப்பநிலை நாங்கள் முட்டைக்குள் வளரத் தேவையாய் இருக்கிறது. இதைத்தான் என் தாய் அச்செயல்கள் மூலம் எங்களுக்கு அளிக்கிறாள். இவ்வாறு முட்டைகளை 75 நாட்கள் அடைகாத்தாள். இதோ இன்று நான் முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

‘உடைத்து’ என்று சொல்லக்கூடாது. ‘கிழித்து’ என்று வேண்டுமானால் சொல்லலாம். ஓடு போல் கடினமாய் இல்லாமல் அது ரப்பர் போன்றுதான் இருக்கும். இச்செயலைச் செய்வதெற்கென்றே ஒரு முட்டைப்பல் என்னுடைய மேலுதட்டில் தோன்றி, பின் மறையும். இரவு நேரத்தில்தான் நாங்கள் பொரிக்கிறோம். காரணம் தெரியவில்லை! வெளியில் வரும் முன் நான் செய்தது என் நாக்கை வெளியே நீட்டி அந்தச் சுற்றுப்புறத்தினைச் (காற்றை) சுவைத்து, அதை “ஜகாப்ஸன்” உறுப்புக்கு அனுப்பியதுதான். ஜகாப்ஸன் அந்தச் சுவையில் கலந்துள்ள வேதியல் மூலக்கூறுகளைப் பிரித்தறிந்து அச்சுற்றுப்புறத்தைப் (காற்றை) பற்றிய செய்திகளை மூளைக்கு அனுப்பும். பின் மூளை, அச்சுற்றுப்புறத்தைப் (காற்றை) பற்றிய ஒரு முடிவை எடுத்து ஆணைகளை எனக்குப் பிறப்பிக்கும். இந்த எண்பது நாட்களாய் என் தாய் உணவேதும் உட்கொள்ளாததால் அவள் எங்களின் பொரித்தலைப் பார்த்தவுடன் பொந்தை விட்டு வெளியே சென்று உணவு தேட ஆரம்பித்துவிட்டாள். எங்களுக்கும் அவளுக்குமான தொடர்பு இனி ஏற்படப்போவது இல்லை. வெளியில் ஒரே இருளாய் இருந்தது.

என்னால் உலகத்தை இரண்டு வெவ்வேறு வழிகளில் பார்க்க முடியும். மனிதர்களைப்போல என் கண்களைப் பயன்படுத்தி, என்னைச் சுற்றியுள்ள உலகின் காட்சிப் படத்தை உருவாக்கலாம். இல்லையென்றால், என் அகச்சிவப்பு உணரிகளைப் பயன்படுத்தி, என் சூழலில் உள்ள பொருட்களால் உமிழப்படும் வெப்பத்தின் அடிப்படையில் ஒத்த படத்தை உருவாக்கலாம். இது என் தேவையை பொறுத்தது. என்னைச் சுற்றி நிலா வெளிச்சத்தில் சோலைக்காடு. மெதுவாய் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தேன். நேரம் செல்லச் செல்ல வெளிச்சம் மெல்ல ஊடுருவ ஆரம்பித்தது. திடீரென என்முன்னே ஒரு புல்வெளி. சற்றே ஊர்வதை நிறுத்திச் சுற்றுப்புறத்தை ரசித்தேன். அந்தப் புல்வெளி ஊடே கொட்டங்குடி ஆறு சலசலத்துக்கொண்டிருந்தது! கருப்பு, சிவப்பு செர்ரிப் பழங்களைத் தாங்கிய குறுஞ்செடிகள் ஆங்காங்கே அவ்விடத்தின் அழகை மெருகூட்டின. புல்வெளியினைச் சுற்றி இருக்கும் சோலைக்காட்டிலோ சிறுவகை நவ்வல் பழங்களும், தவிட்டுப் பழங்களும் கொண்டு மரங்கள் பறவைகளுக்காகக் காத்திருந்தன.

என் இருப்பிடம் இதுதான் என்பதைத் தீர்மானித்து விட்டேன். அவ்விடத்திலேயே சுருண்டு கொண்டேன். எவ்வளவு நேரம் இருந்தேன் எனத் தெரியவில்லை. திடீரென என் முன்னே தவளை ஒன்று தத்தித் தத்தி வந்து கொண்டிருந்தது. அது சரியான தூரத்தில் என்னை நெருங்கியதும் என்ன செய்தேன் என அறியாமலே ஒரு துல்லியத் தாக்குதல். ஆம்! தலையை மிக வேகமாய் முன்னோக்கிச் செலுத்தித் தவளையைக் கவ்வினேன். என் ரம்பம் போன்ற பற்களிடையே தப்ப இயலாது அத்தவளைச் சிக்கியது. அப்படியே விழுங்கினேன். இதுதான் என் முதல் உணவு! நாளாக நாளாக என் மெனுகார்டில் நிறைய விலங்குகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுவிட்டன. என்ன! பெரும்பாலும் பாலூட்டிகள்தான் என் மெனுகார்டை ஆக்கிரமித்து இருந்தன.

ரெண்டு நாட்களாய் என் தோலின் நிறம் மங்கலாய்த் தோன்றுகிறது. கண்களும் நீல நிறமாக மாறியிருக்கிறது. தோல் உரிக்கும் நேரம் வந்ததை உணர்ந்தேன். முதலில் கண் தொப்பியை உரித்து, பின் அருகில் இருந்த இரு பாறைகளுக்கிடையே அத்தோலைச் சிக்க வைத்து, முகத்தில் இருந்த பழைய தோலை அகற்றினேன். பின் கொஞ்சம் கொஞ்சமாக உடல் முழுதுமான தோலைப் போராடி நீக்கினேன். போராடி என்பது உரிப்பதற்கு வசதி கிடைப்பதில் உள்ள சிரமத்தைக் குறிப்பதாகும். இதோ! இதற்கே ஒரு வாரத்துக்கு மேல் ஆகி விட்டது. இந்தத் தோல் உரிதல் சிறு வயதில் வருடத்துக்கு மூன்று, நான்கு முறையும், பெரிதானவுடன் ஒரு முறையும் நிகழும்.

நான் காத்திருந்து இரையைப் பிடிக்கும் வகை. என் உடலும் அதற்குத்தான் பரிணமித்திருக்கிறது. இதோ ஒருமணி நேரமாய் காத்திருக்கிறேன். மிளா ஒன்று வருகிறது. சரியாய் என் அருகே வந்ததும் ஒரே தாக்குதலில் அதன் முன்னங்கால் தொடையைக் கவ்வினேன். அடுத்த வினாடியே அந்தக் கடியை இறுக்கிக்கொண்டு மிளாவின் உடலைச் சுற்றத் தொடங்கினேன். என் எடை தாங்காமல் மிளா கீழே சரிந்தது. சில நிமிடங்களிலேயே மிளாவை முழுவதுமாய் சுற்றியிருந்தேன். மிளாவின் கழுத்தையும் மார்பையும் அது மூச்சை இழுத்து, பின் வெளியே விட்டவுடன் அழுத்தத் தொடங்கினேன். என் எடை முழுதும் அதில் இருக்க, அதோடு என் அழுத்தமும் கூட சில நொடிகளிலேயே மிளா மூச்சுத் திணற ஆரம்பித்தது. மிளாவின் இதயம் வேகமாய் துடிப்பதையும் என்னால் உணரமுடிந்தது. எல்லாம் சில நிமிடங்கள்தான். இதோ அதன் துடிப்பு நின்றுவிட்டதை உணர்கிறேன். சிறிது நேரம் அதே அழுத்ததிலேயே மிளாவை வைத்திருந்து பின் அதன் தலையை மெதுவாய் விழுங்க ஆரம்பித்தேன்.

என் கீழ்த்தாடை இரண்டும் தனியே இயங்கும் திறன்கொண்ட எலும்புகளால் ஆனது. அதுமட்டுமின்றி அவை இரண்டும் நீளும்தன்மை அதிகம் கொண்ட தசைகளால் இணைக்கப்பட்டிருக்கும். மேல் தாடையால் பற்றி, கீழ்த்தாடை எலும்புகள் தனித்தனியே இருபக்கங்களிலும் விலக, மிளாவின் தலையின் சிறுபகுதி என் வாயின் உள்ளே நுழைந்தது.

இப்போது முதல் கீழ்த்தாடையின் பற்கள் இரையைப் பற்றி இருக்க, இரண்டாம் கீழ்த்தாடை முன்னோக்கி நகர்ந்து செல்கிறது. அதன் பற்கள் இப்போது இரையைப் பற்றிக்கொள்ள, முதல் கீழ்த்தாடை பிடியை விடுத்து முன்னோக்கி நகர்ந்து இரண்டாம் கீழ்த் தாடைக்கு நேராய் வருகிறது. இதன்பிறகு மேல்தாடை முன்பிருந்த இடத்தில் இருந்து நகர்ந்து கீழ்தாடைக்கு நேர் மேலே வர, மிளாவின் தலையின் அடுத்த ஒரு குறிப்பிட்டப் பகுதி என் வாயின் உள்ளே போனது.

இப்படியாய் அம்மிளா முழுவதையும் வயிற்றுக்குள் அனுப்பினேன். இரையின் மேல் தாடை நடந்து செல்வது போலத்தான் இது. மிளாவை விழுங்கியவுடன் மெதுவாய் நகர்ந்து ஒரு பாதுகாப்பான இடத்தில் என்னைக் கிடத்தினேன். நான் படுத்துக்கிடக்கும் காட்சியைச் சங்ககாலத் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாமில், பெருங்குன்றூர் பெருங் கௌசிகனார் என்னும் புலவர், குளம் போன்ற அகன்ற வாயைக் கொண்டதும், யானையையும் அழிக்க வல்லதுமான மலைப்பாம்பு மரம் போலத் தூங்கி கிடக்கும் என்று கீழ் கண்டவாறு படுகிறார்.

கயம்கண் டன்ன அகன்பை யங்கண்
மைந்துமலி சினத்த களிறுமதன் அழிக்கும் . . . .[260]
துஞ்சுமரங் கடுக்கும் மாசுணம் விலங்கி
இகந்துசேட் கமழும் பூவும் உண்டோ ர்
மறந்தமை கல்லாப் பழனும் ஊழிறந்து
பெரும்பயங் கழியினும் மாந்தர் துன்னார்
இருங்கால் வீயும் பெருமரக் குழாமும் . . . .[265]
இடனும் வலனும் நினையினர் நோக்கிக்
குறியறிக் தவையவை குறுகாது கழிமின்”

என் உடலில் உணவைச் செரிக்க உதவும் நொதிகள் சுரக்க ஆரம்பித்து விட்டன. அவ்வமிலங்கள் எலும்பைக்கூட கரைக்கும் திறனுடையது. குளம்புகள், முடிகள் இவைகள் மட்டும் ஓர் உருண்டையாய், கழிவாய் வெளியே அனுப்பப்படும். இறந்த உணவில் உள்ள பாக்டிரியாக்கள் செயல்படும் முன்னே இந்த வேலையெல்லாம் நடந்துவிடும்.

வருடங்கள் என்னைப்போல் ஊர்ந்து செல்லவில்லை! ஓடி விட்டன. துணையைத் தேடிச் செல்ல ஆரம்பித்தேன். எங்கெங்கோ திரிந்து இறுதியில் அவளைக் கண்டும் பிடித்துவிட்டேன். இருவரும் ஒருவரை ஒருவர் பின்னிப் பிணைந்து கொண்டோம். என் புழை அருகே காணப்படும் இரண்டு சிறு பரிணாமத்தில் சுருங்கிய கால்கள் போன்ற நீட்சிகளால் அவளை இறுகப் பற்றி என் இரு ஆணுறுப்புகளில் ஒன்றை, அவளின் புழைக்குள் செலுத்தி இணைந்தேன். அது அரைமணி நேரத்திற்கும் குறைவான ஒரு நிகழ்வு. இந்நிகழ்வில் மட்டும்தான் இருவராய் சேர்ந்து இருக்கிறோம். மற்றபடி தனித்து இருப்பதுதான் எங்கள் வாழ்க்கை. இருவரும் பிரிந்தோம். சற்று வேகமாகவே வந்து ஓர் இடத்தில் சுருண்டு கொண்டேன்.

நல்ல மார்ச் மாத வெயில்காலப் பகலில் நன்கு வளர்த்த புற்களிடையே சுருண்டு கிடந்தேன். நான் இருப்பது அறியாமல் இரண்டு சுற்றுலாப் பயணிகள் சற்றுத் தூரத்தில் வந்து அமர்ந்தனர். இருவர் கைகளிலும் சிகரெட் புகைந்துகொண்டிருந்தது. புரிந்து விட்டது! குரங்கணி ட்ரெக்கிங்குக்கு வந்திருக்கிறார்கள்.

‘என்னடா இது! ஒரு புலியையும் காணும்! சிங்கத்தையும் காணோம்!’ அவர்களில் ஒருவன் சிரித்துக்கொண்டே கேட்டான்.

‘அடேய்! சிங்கம்லாம் குஜராத்தில்தான் இருக்கும்.’

‘அப்போ புலியைக் காமி! ’

இருவரும் சிரித்தார்கள். எதுவும் பேசாது ஏதோ ஒன்றை இருவரும் பகிர்ந்து அருந்திவிட்டு சிறிது நேரத்தில் புறப்பட்டு விட்டனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்று என்னால் கேட்க முடிந்தது. என்னால் 200இல்லிருந்து 500Hz அளவில் உள்ள குறைந்த அதிர்வெண்கள் கொண்ட ஒலிகளைத்தான் கேட்க முடியும். அவர்கள் பேசியது ஏறக்குறைய 350Hz இ ல்தான் இருந்தது. நான் மெதுவாய் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தேன். அவர்கள் விட்டு சென்ற சிகரெட் துண்டில் இன்னமும் நெருப்பு இருந்தது. அதைத் தவிர்த்துவிட்டு நகர்ந்தேன்.

ஒரு மணி நேரத்தில் அங்கு வந்த மிளாவின் குட்டி ஒன்று என் குறியில் சிக்க, அதைக் கவ்வி, இறுக்கி, மூச்சுத் திணற வைத்து, இறக்க வைத்து விழுங்கினேன். உடலின் உள்ளே மான் இருப்பதால் சுருண்டு படுக்காது, நெடுஞ்சாண்கிடையாய் அந்தப் புல்வெளியில் நான்! புற்கள் நன்கு காய்ந்து பெரிதாய் வளர்ந்து கிடந்ததால் நான் இருப்பதுகூட யாருக்கும் தெரியாது. திடீரென காற்றின் வேதியல் தன்மையில் மாற்றம். நான் உண்ட மயக்கத்தில் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அடுத்த சில நிமிடங்களில் ‘ஓடுடா சீக்கிரமா!’ என ஒருவன் அலறிக் கொண்டே என்னைப் பார்க்காது என் அருகே காலை வைத்துத் தாவி ஓடினான். அட! இவன் அந்தச் சுற்றுலாப் பயணியல்லவா! என நினைவுப்படுத்திக் கொண்டபோதே மற்றவனும் வேகமாய் எனை ஓடிக் கடந்தான். எனக்குச் சுற்றுப்புறத்தில் ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது என்பது மட்டும் புரிந்தது. மெதுவாய் உடலை அசைத்துப் பார்த்து ஊர்ந்து செல்ல ஆரம்பித்தேன். பிரசவமாய் இருக்கும் ஒரு பெண்ணின் நிலை போன்றதுதான் இப்போது நான் இருப்பது. சில நிமிடங்களிலேயே புற்கள் உயரம் குறைந்து காணப்பட்டுத் தூரம் சற்றுத் தெரிய ஆரம்பித்தது. அதென்ன ஒரே கருப்பாய்! புகை! கரும்புகை! காட்டுத்தீயால் உண்டானது.

புரிந்துவிட்டது எல்லாப் பக்கங்களிலும் அது பரவியிருந்தது. தூரத்தில் அப்பயணிகள் அங்கிமிங்கும் ஓடுவது தெரிந்தது. குரங்கணிக் காட்டுத்தீயைப் பற்றிய எந்த அறிவும் இல்லாத அப்பிராணிகள். நான் கோடைக் காலங்களில் இதைப் பார்த்திருக்கிறேன். தீ வந்ததை அறிந்தால் சோலைக்காட்டில் பதுங்கி விடுவேன். சோலைக்காட்டை அடைந்தால் தப்பிப்பேன் என மனது சொன்னது. அதற்குள் டிரெக்கிங் வந்த பெண்ணைத் தீப்பற்றியது. நான் இனிமேல் எங்கும் பார்க்கக்கூடாது என மனதில் சொல்லிக் கொண்டு வேகமாய் நகர ஆரம்பித்தேன். அந்த பெண்ணின் கூக்குரல் வேகமாய் கேட்டுப் பின் மெதுவாய். இறந்திருப்பாளோ! அப்படியென்றால் மற்றவர்களும் அப்படித்தானா! பயம் வந்து தப்ப வேண்டும் என உள்ளுணர்வுக்குச் சொன்னது. எப்படியும் இன்னமும் 200 மீட்டரில் சோலைக்காடு வந்துவிடும். புல்வெளி போன்று தீப்பற்றி எறிய அங்குக் காய்ந்தவைகள் ஏதும் இருக்காது. தொடர்பற்றுப் போவதால் பாதிப்பும் இருக்காது. இதென்ன! அப்பாதையையும் தீ கவ்விப் படருகிறதே. இனி அடுத்த வழி பொந்தைத் தேடுவதுதான். காற்று முழுதும் தீயின் வாசம். எதையும் என்னால் பிரித்தறிய இயலவில்லை. ஒன்றிரண்டு பொந்துகளும் தலையை நுழைத்தவுடனே முடிபவையாகவே இருந்தது. தெரிந்து விட்டது. இதோ! தீ என்னை விழுங்க அதற்கு அனுமதி அளித்துவிட்டேன்.

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *