Skip to content
Home » காட்டு வழிதனிலே #6 – காணி

காட்டு வழிதனிலே #6 – காணி

காட்டு வழிதனிலே

‘சங்கரன்! இது உனக்கு வேணாமே’ என் தந்தை.

‘காணியில் யாரும் இதுபோலெல்லாம் போக மாட்டாங்க! உன்னைப் போக வேணாம்ன்னு சொல்லவில்லை! நீயே பார்த்துக்க’ என்றார் மூட்டுகாணி (எம் இன மூத்தவர்).

‘பயப்பட வேணாம்! எல்லாம் வனக்காவலர் கிருஷ்ணன் ஐயா சொல்லித்தான்’  நான்.

என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் இப்படித்தான்  ஆரம்பித்தது! முண்டந்துறையின் மழைக்காட்டைக் கொண்ட  ஒரு பகுதிதான் ‘கன்னிகட்டி’. இங்குதான் காணி இனத்தைச் சேர்ந்த நாங்கள் வாழ்ந்து வருகிறோம். வசித்து எனச் சொல்ல முடியாது!  அவ்விடத்தில் எல்லாவற்றோடும் நாங்களும், எதையும் அழிக்காமலும் உருவாக்காமலும் இருந்து வருகிறோம். அரிசி, திணை, மரவள்ளிக்கிழங்குதான் பெரும்பாலும் உணவாக இருக்கும். அவ்வப்போது காட்டுப் பன்றியும் உணவாகும்.  நாங்கள் மரம் ஏறுவதிலும் தேன் எடுப்பதிலும் அபரிதமான திறன் படைத்தவர்கள். பிலாத்தி என  எங்களால் அழைக்கப்படும்  மருத்துவம் தெரிந்த  எம் இனத்தவர் ஒருவர், இக்காட்டில் உள்ள அனைத்து மூலிகைகளையும் அறிந்துணர்ந்து அதிலிருந்து நோய்களுக்குத் தேவையான கசாயம் மூலிகைப் பொடி போன்றவற்றைத் தயார் செய்வார். எங்களுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால்  எங்களை அதிலிருந்து மீட்பார்.

அவர்களிடம் அறிவுத்திருட்டு இன்றுவரை நடக்கவில்லை. அவரின் வழித் தோன்றியவர்க்கு அப்படியே அவரால் அவ்வறிவு ரகசியமாகவே கடத்தப்படும். எங்களின் வீடுகள் எம் இடத்தைச் சுற்றியுள்ள மண், கற்கள், புற்கள், பிறம்பு, தென்னை ஓலை போன்றவற்றால் ஆக்கப்பட்டிருக்கும்.  பார்ப்பதற்குச் சாதாரணமாய் காட்சியளித்தாலும், வீடுகள் நீண்ட காலம் உழைக்கும் தன்மை கொண்டவை. எம் இடமே எப்போதும் கரும்பச்சையிலும், சல சலக்கும் ஓடைகள் பசும் நீலத்திலும் இருக்கும். மழைக்காலம் வெயிற்காலம் எனப் பிரிக்கமுடியா வண்ணம் ஒரு மிதமான ஒளியில்தான் இடமே இருக்கும்.

மிக நீண்ட உயரத்தில் மரங்கள். அதன் உயரத்தைத் தாங்க மரத்தின் அடிப்பாகத்தில் பக்கச்சுவர்கள்போல் வேர்கள் மூன்று, நான்கு பக்கங்களிலும் மண்ணிற்கு வெளியே நீண்டு செல்லும். சூரிய வெளிச்சம் கீழே விழாத அளவிற்கு மரங்களின் மேற்பகுதி மூடியிருக்கும். எம்மவர்களில் சிலர் மட்டும் கீழிறங்கி, ஆம்! கன்னிகட்டி முண்டந்துறையில் இருந்து உயரத்தில் இருக்கும் ஒரு பகுதியாதலால், தேவையான பொருட்களைக் கடைகளில் வாங்கி, சில நேரங்களில் தங்கள் பொருட்களை விற்று பின் மேலே ஏறி வருவார்கள். அவர்கள்தான் எங்கள் தொலைத்தொடர்புச் சாதனங்கள்.

இந்தக் கன்னிகட்டியில் எப்போதோ வெள்ளைக்காரர்கள் தங்குவதற்காகக் கட்டப்பட்ட மூன்று அறைகளைக் கொண்ட ஒரு இடிந்த கட்டடம், இன்றும் வனத்துறையின் கையில் ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்காக! ஆய்வு வருடத்திற்கு ஒரு முறை இருக்கலாம். அல்லது, இரண்டு வருடத்திற்கு ஒரு முறை கூட! மீதி நேரம் அது பூட்டியே கிடக்கும். கன்னிகட்டி பீட் பார்க்கும் கிருஷ்ணன் ஆய்வென்று முடிவானதும் ஒரு நாளுக்கு முன்னாடியே மேலே வரும் எம்மாளுங்க கிட்ட சாவியும் செய்தியும் சொல்லிடுவார். நான் அந்த அறைகளை அவர்களுக்காகச் சுத்தம் செய்து வைத்துவிடுவேன்.

இரண்டு நாள், ஐந்து பேர் தங்குவது போன்று சமையலுக்குத் தேவையான பொருட்களுடன்தான் பெரும்பாலும் கிருஷ்ணன் வருவார். ஆனால், அதிகாரிகள் வந்து ஒரு தேநீர் அருந்தி, அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் கீழே இறங்க அரம்பித்து விடுவார்கள். இதுதான் வழக்கமாய் இருக்கும். இடம் தரும் பயம்கூட இதற்குக் காரணமாய் இருக்கலாம். குறிப்பாய், ஆற்றில் வெள்ளம் வந்தால் அதைக் கடக்க முடியாது. மேலே பெய்யும் சிறிய மழைகூட ஆற்றில் வெள்ளம் வரக் காரணமாயிருக்கும். ஆனால், அந்த ஆய்வு ஆயுத்தப் பணிகளில் மட்டும் எந்தவித மாற்றமும் இருக்காது. அதே பதட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை. ஆனால் பதட்டமின்றி அந்தக் கட்டடம் எப்போதும் இருக்கும். இந்த இடத்தில் இருக்கும் எல்லா மரங்களின், விலங்குகளின் வாழ்வியல் முறைகளை எம்மவர்களைவிட நான் சற்று அதிகமாகவே அறிந்திருந்தேன். அதற்குக் காரணம் சிறு வயதில் இருந்தே உயிர்களிடத்தில் எனக்கிருந்த ஆர்வம். அதுதான் அந்த வனக்காவலரை என்பால் ஈர்க்கக் காரணமாயிற்று. இப்பகுதியில் எதாவது விலங்கு இறந்தாலோ,  வேட்டையாடப்பட்டாலோ,  வேட்டையாடுபவர்கள் தென்பட்டாலோ நான் அவருக்கு உடன் தெரிவித்து விடுதலால் இந்த பீட் வனத்துறைக்கு என்றும் சவாலானதாய் இருந்ததில்லை. இதுவே கிருஷ்ணனுக்கு என்னைப் பிடிக்கவும் காரணம்.  இந்தக் கிருஷ்ணன்தான் ‘செந்நாய் பற்றிய ஆய்வுக்காக வந்திருக்கும் ஒருவருக்கு இக்கானக  வழிகாட்டியா இருக்கிறாயா?’ என்று எனைக் கேட்டதற்குதான் எம்மவர்களின் எச்சரிக்கை அது!

கன்னிகட்டியில் இருந்து என் வாழ்க்கை முண்டந்துறையில் உள்ள ஒரு வனக்குடியிருப்புக்கு மாறியது. கால ஓட்டத்தில் என் வாழ்வில் நிறைய மாற்றங்கள்: காலில் செருப்பாய், பேண்டாய், சட்டையாய், பாக்கெட்டில் பணமாய். ஆய்வாளரும் நானும் சேர்ந்து இயற்கையைப் பயின்றோம். நான் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொண்டுவிட்டேன். அன்றன்று களத்தில் பார்த்தவற்றை, அன்றே நேரத்துடன் சிறு பாக்கெட் நோட்டில் குறித்துக் கொள்ளும் பழக்கமும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ஆய்வாளருக்கு முடியாத நாட்களில் செந்நாயைத் தேடித் தொடர்ந்து அதைப்பற்றிச் செய்திகள் சேகரித்தும் கொடுத்தேன். அவருக்கும் எனக்கும் வயதில் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை. அம்பாசமுத்திரம் சென்று தியேட்டரில் படம் பார்க்கவும், பஸ் நிலைய நெய்பரொட்டா சாப்பிடவும் என்னைப் பழக்கியும் விட்டார். பஸ் ஏறி தனியே செல்ல ஆரம்பித்து விட்டேன். எம்மவர்கள் காரையாறு சேர்வலாறு முண்டாந்துறை, அதிக பட்சமாய் லோயர்டாம் வரைதான் பயணித்திருப்பார்கள். அதுவும் செருப்பிலா நடையில்தான். நான் அவர்களைப் பொறுத்தவரை இப்போது அவர்களிடம் இருந்து வேறுபட்டவன். நானும் அதை விரும்ப ஆரம்பித்து விட்டேன்.

இரண்டாம் ஆண்டின் துவக்கத்தில்  புதிதாய் ஒரு பிரச்சனை முளைத்தது. புலி ஒன்று பாண்டியன் கோட்டையருகே இறந்து கிடந்ததை நாங்கள் இருவரும் பார்த்து வந்து வனத்துறை அதிகாரிகளிடம் கூற, அவர்களும் சரி, சரி எனக் கூறிவிட்டு, அவ்விசயத்தை வெளியில் தெரியாமல் எரித்து (புதைத்தால் பற்கள் நகங்கள் எலும்புகளுக்காய் வெட்டைக்காரர்களால் தோண்டப்பட வாய்ப்பு இருப்பதால்) மறைத்து விட்டனர். இது அறியாமல் ஒரு நாள் என் ஆய்வாளர் செய்தியாளரிடம் வேறொரு செய்திக்கான நேர்காணலில் கசியவிட, சில மாதங்கள் வனத்துறையினரும் நாங்களும் நெருக்கம் குறைந்து போனோம். அவர்களின் ஆயுதப் பற்றாக்குறையும், மனிதஆற்றல் குறைவும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்குப் பெரும் காரணங்களாய்  இருப்பதும், செய்திகள் வெளியில் வரும்போது  அதில் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் வனத்துறையில் இருக்கும் கடைநிலை ஊழியர்கள்தான் என்பதும் எனக்கு அப்போது தெரியாது.

ஆய்வாளருடன் இன்று அதிசயமாய் கன்னிகட்டி கிளம்பினோம்.  முண்டந்துறையில் இருந்து கன்னிகட்டி செல்ல வேண்டும் என்றால் சொரிமுத்தையனார் கோவிலுக்கு மேலே செல்லும் பாதையைக் கடந்து வானதீர்த்த அருவி கொட்டும் இடத்தின் மேலே சென்றுதான் செல்ல முடியும். அவ்வருவியைக் ஜாக்கிரதையாய் கடந்து சென்று மேலே ஏறினோம்.  இடையே இஞ்சிக் குழி என்ற இடத்தை அடைந்து சிறிது ஓய்வெடுத்துப் பின் கிளம்பினோம். கீழே உண்ணிக்கடி எந்த அளவிற்கு மோசமோ அதே அளவிற்கு இங்கு அட்டைக்கடி உண்டு. உண்ணிக்கடிக்கு எதுவும் செய்ய முடியாது.  களப்பணி முடிந்தவுடன்  அன்று உபயோகித்த ஆடைகளை  நன்றாகக் கொதிக்கின்ற நீரில் சிறிது நேரம் போட்டுவிட்டுதான் நாங்கள் குளிக்கச் செல்வோம். கண்ணுக்குத் தெரிந்த உன்னிகளை அகற்றிவிட்டு, குளித்துவிட்டு வந்தாலும் உன்னிக் கடித்த இடம் பல நாட்கள் அரிப்புத் தரக்கூடியதாகவே இருக்கும். அது மட்டும் அல்லாமல், அந்த இடத்தில் ஒரு சிறிய கருப்பு நிற தழும்பு போன்றும் உருவாகிவிடும். இது எந்த மருந்துக்கும் அடங்காது. ஆனால், அட்டைக் கடி ரத்தம் உறிஞ்சுவதுடன் நின்று விடும். அட்டைக்கடிக்குப் புகையிலை, சவுகாரம். (அப்போது உபயோகப் படுத்தப்பட்ட துணிசோப்பிற்குப் பெயர்) சில நேரங்களில் உப்பு போன்றவற்றைப் பயன்படுத்துவது உண்டு.  கன்னிகட்டி சென்று என்  வீட்டில் தங்கி அவ்விடத்தை மூன்று நாட்கள் சுற்றிக் காண்பித்தேன். செந்நாய்கள் இங்குக் கிடையாது. ஆகவே இது அவருக்கு ஒரு சுற்றுலா மாதிரிதான். இரண்டு புதியவகை விரியன் பாம்புகள் பார்த்தோம். நிறையத் தாவரங்களை அவருக்காகச் சேகரித்துக் கொண்டேன். அதையெல்லாம் நான்தான் கீழேப் போய் செய்தித்தாள் இடையே காயவைத்து, பூச்சி ஏதும் தாக்காமல் இருக்க, அதில் மெர்குரிக் குளோரைடு தடவி ஹெர்பாரியம் தயார் செய்ய வேண்டும். எம்மவர்கள்  வழக்கம்போல்  எங்களிடம் இருந்து விலகிதான் இருந்தனர்.  அது அவர்கள் இயல்பு. கீழே வந்து மீண்டும் பழைய வேலையில் நாட்களை இழந்தோம்.

மூன்று வருடங்கள் கழிந்தன. ஒரு நாள் ஆய்வாளர் தன் வேலையை முடித்துவிட்டுக் கிளம்ப, என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாமல் அவரை வழியனுப்பினேன். மீண்டும் நான் கன்னிகட்டியில். அந்த இரவு தூக்கம் வர வெகு நேரமாயிற்று. எதோ ஒரு சப்தத்தில் கண் விழித்தேன். வீட்டினுள் சூரிய வெளிச்சம்! ‘ஓ! “மணி பத்தாகிடுச்சா’ என நினைத்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தேன். பேண்டில் நான் இருந்ததை அப்போதுதான் கவனித்தேன். அதையே பார்த்துக் கொண்டிருந்த நான், பழைய நிலைக்கு என்னை மாற்றத் தயாராகினேன். மாறுவதற்கு மிகவும் சிரமப் பட்டேன். கையில் கொஞ்சம் பணம் இருந்ததால் ஒரு வருடம் கடினம் இன்றிச் சென்றது. பணம் தீர்ந்தவுடன்தான் எனக்கும் எம்மவர்களுக்குமான வித்தியாசம் தெரிந்தது.  அவர்கள் அது இன்றியும் வாழ்வார்கள். நான் தடுமாற ஆரம்பித்து விட்டேன். மூன்று வேளை அரிசி சாப்பாட்டிற்குப் பழகிய நான், ஒரு வேளைக்குத் தள்ளப்பட்டேன். என் வயதொத்தவர்கள்  திருமணம் செய்து குழந்தையுடன்! நான் என் தாய் தந்தையைப் பிரிந்து அவர்கள் வீடு அருகே மற்றொன்றை அமைத்துக் கொண்டேன்.

நேற்றுதான் கிருஷ்ணன் சாரைப் சேர்வலாறில் பார்த்தேன். ஆய்வாளர் வடஇந்தியாவில் எங்கோ விஞ்ஞானி வேலை கிடைத்துச் செட்டில் ஆகி விட்டதாயும், நம்ம ரேன்ஜர் அவரை ஒரு டிரெயினிங்ல பார்த்தபோது சொன்னதாகவும் சொன்னார்.  ‘உன்னை ரொம்ப விசாரிச்சாராம்பா!’ கிருஷ்ணன். எனக்குப் பெருமையாய் இருந்தது. சேர்வலாறு டீக்கடையைத் திரும்பிப் பார்த்தேன். களப்பணி முடித்தபின் பெரும்பாலும் இங்கு டீ அருந்தி விட்டுதான் செல்வது வழக்கம். டீ குடிக்க வேண்டும்போல் இருந்தது. வேண்டாம் என்றது என் சட்டையின் பை!

மூன்று வருடம் ஓடிவிட்டது. யாரோ என்னைத் தேடி முண்டந்துரையில் வந்திருக்கிறார்கள் என்றதும், அவராய் இருக்குமோ என்ற ஆசையில் கீழே இறங்கி வந்தேன். 20 வயது இளைஞர்கள் மூன்று பேர் அங்கு வந்திருந்தனர். அவர்கள் மூவரும் முன்னய ஆய்வாளருக்கு மாணவர்களாம். இங்கு ஐந்து வருட ஆய்வுப் பணியாம். அவர்தான் என்னைப் பார்க்கச் சொன்னாராம். மீண்டும் நான் விரும்பிய வாழ்க்கை!  நாம் ஏமாற முதல் காரணமே நம் விரும்பம்தான். நம் விருப்பமற்ற ஒன்று நம்மை ஏமாற்றாது.

அவர்கள் கருமந்தி, மலையணில், மிளாவில் ஆய்வு செய்ய போகிறார்களாம். இம்முறை சேர்வலாறில் மின்சார ஆணையக் குடியிருப்பில் வாசம். மீண்டும் ஒரு மகிழ்ச்சியான தருணம். இந்த மூன்று பேர்களில் ஒருவர் மட்டும் உடல் வலிக்காமல் வேலை செய்வது தெரிகிறது. மற்ற இருவரும் அதிகாலையிலே சென்று விடுவார்கள். ஒரே இடத்தில் நின்று கொண்டு நடத்தைகளைக் குறிப்பெடுக்கும் வேளை. காலையில் சமையல் செய்து அவர்களுக்கு டப்பாவில் கொடுத்து விடுவேன். அவர்களின் ஆய்வுக்குரிய இடமும் அருகே இருப்பதால் அவர்களே சென்று திரும்பிவிடுவர். இவர்தான் என் துணையுடன் தூரம் செல்ல வேண்டும். ஆரம்பத்தில் நன்றாய் இருந்தவர் விரைவிலேயே மாறிவிட்டார்.

நான் மட்டும் சென்று செய்திகளைச் சேகரித்து எடுத்து வருமாறு என்னைப் பழக்கிவிட்டார். ஆனால், ஆசிரியர் இவர்களைப் பார்க்க வரும்போது ஆசிரியரிடம் இவர்தான் பெயரெடுப்பார். மற்ற இருவரும் இவரைப் பற்றி தெரிந்திருந்தும் ஆசிரியரிடம் சொல்ல மாட்டார்கள். ஆசிரியர் நல்ல பணக்காரர் ஆகிவிட்டார்போல. வரும் போதே காரில்தான் வந்தார். வனத்துறை மின்சாரத்துறை அதிகாரிகள் தவிர்த்து, கான்ட்ராக்டர் ஒருவர்தான் இங்குக் கார் வைத்திருக்கிறார். அதனால்தான் அப்படி நினைத்தேன். வருடங்கள் ஓடிவிட்டன. இதில் வேலை செய்ய பயந்தவர்க்கும் விஞ்ஞானி வேலை. அதுவும் ஆசிரியர் பணி செய்யும் இடத்திலேயே கிடைத்துவிட அவர் அவசர அவசரமாய் களப்பணியை முடித்து விட்டு கிளம்பி விட்டார். மற்ற இருவரும் அடுத்து ஒருவருடம் இருந்து கிளம்ப மீண்டும் நான் கன்னிகட்டியில் ஐக்கியமானேன். அதே மனநிலை. ஆனால் திருமணம் செய்து விட்டேன். ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. காணியாயும் மாறியும் விட்டேன். ஆம்! வயிறுதான் என்னை இப்போது வழிநடத்துகிறது. மற்ற இருவரும்கூட விஞ்ஞானிகளாய் இருக்கிறார்களாம். கீழேச் சொன்னார்கள். அனைவரும் இங்கே வரும்போது சாதாரணமாய் இருந்து பின் இங்கே இருந்து சென்றவுடன் பெரியாளாகி விட்டனர். ஆனால் நான் மட்டும் ஏன் இப்படி? ஏறக்குறைய பத்து வருடங்கள் கழித்து மூன்று மாணவர்கள் மீண்டும் முண்டந்துறையில். இதோ மீண்டும் கீழே இறங்கி விட்டேன்.

(தொடரும்)

குறிப்பு: சங்கரனின் பையன்  2022ல் முண்டந்துறையில் உள்ள குரங்குகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்று விட்டார்.

பகிர:
nv-author-image

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

1 thought on “காட்டு வழிதனிலே #6 – காணி”

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *