Skip to content
Home » காட்டு வழிதனிலே #7 – புகை

காட்டு வழிதனிலே #7 – புகை

கழுதைப் புலி

புகை! என்னைச் சுற்றிப் புகை பரவ ஆரம்பித்தது. என்னவென்று அறியக்கூட முடியவில்லை. மூச்சுத் திணற ஆரம்பித்தது. இந்தக் குகையில் இருந்து வெளியே செல்ல இருக்கும் ஒரே வழியில் இருந்துதான் அந்தப் புகையும் வந்து கொண்டிருக்கிறது. வெளியேயும் செல்ல முடியாது. வெளியில் மனிதர்கள் இருப்பார்கள் போல! அவர்களின் சப்தமும் கேட்கிறது. கண்கள் எரிச்சலைச் கொண்டன. நினைவுத் தப்ப ஆரம்பிக்கிறது

முதுமலைச் சரணாலயத்தின் கிழக்குப் பகுதி வறண்ட முட்புதர் காடுகளைக் கொண்டது. இடையிடையே மசினகுடி, மாவனல்லா, செம்மனத்தம், பொக்காபுரம், சிங்கார போன்ற மக்கள் குடியிருக்கும் பகுதிகளும் உண்டு. மாவனல்லாவின் காட்டில் ஒரு சிறிய வாயிலைக்  கொண்ட  இயற்கையாய் அமைந்த ஓர் குகையினுள் (என் தாயால் சற்று மாற்றி அமைக்கப்பட்டதும் கூட!) கண்கள் திறக்காது நானும் என்னருகில் மற்றவனும் படுத்துக்கொண்டிருந்தோம். எங்களை 85 நாட்கள் வயிற்றில் சுமந்தவள் நேற்றுதான் பிரசவித்திருந்தாள். என் தந்தையும் எங்களுடன் இருப்பவராகவும், அவ்வப்போது வெளியில் சென்று வருபவராகவும்  இருந்தார். என் தாய், என் தந்தையைவிட சற்று உருவத்தில் பெரிதாய்க் காணப்பட்டாள். என் தாய், தந்தையைப்போல எங்கள் உடலிலும் வரிகள்! ஆனால்! மங்கிய நிறத்தில். நாங்கள் பார்ப்பதற்கு நாய்கள்போலத் தோன்றினாலும், கீரி இனத்திடம்தான் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறோம். அவ்வப்போது தாய்ப்பாலை அருந்திக்கொண்டு நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தோம். பத்தாவது நாளில் எங்கள் கண்களின் உணர்வுகள் விழிக்க, நாங்களும் இவ்வுலகைக் காண ஆரம்பித்தோம். நாங்கள் இருக்குமிடம் பாறைகளைக் கொண்டிருந்தது. ஆங்காங்கே குறு மரங்களின் வேர்கள் பாறைகளிடையே படர்ந்தும், தொங்கிக்கொண்டும் இருந்தன. ஒரு பெரிய பொந்து என்று கூட அதைச் சொல்லலாம்.

நாங்கள் பெரும்பாலும் தனித்து வாழ்பவர்கள். இனப்பெருக்கக் காலங்களில் மட்டும் ஆண், பெண் எனச் சேர்ந்து ஒரே குடும்பமாய் இருப்பதுண்டு. அதிலும், அக்குடும்பத்தில் சில நேரங்களில், தந்தை தாயுடன் இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகியும் வெளியேறாத இளம் பெண்ணும் (பெரும்பாலும் அந்த தாய்க்குப் பிறந்தவள்தான்!) இணைந்து, புதிதாய் பிறக்கும் குட்டிகளை வளர்க்கும் வேலையில் ஈடுபடுவது உண்டு. ஆனால், என் தாய்க்கு இது முதல் முறையாதலால் என் குடும்பம் தாய், தந்தை, குட்டிகள் எனக் குறுகிவிட்டது. என் தாய்க்குத் தேவையான உணவை என் தந்தைக் கொண்டு வந்து அவள் முன்னே போட, அதை அவள் உண்ணுவதுதான் வாடிக்கையாய்  இருக்கிறது. ஒரு மாதம் சென்று விட்டது. என் தாய் அவளுக்கு வந்த உணவில் சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அதை எங்கள் பக்கம் தள்ளிவிட்டு, எங்களைப் பார்க்கிறாள். உடனே நானும் என் சகோதரனும் அதை உண்ணத் தொடங்குகிறோம். என் தாயின் மொழி எங்களுக்குப் புரிய ஆரம்பித்துவிட்டது.

நாங்கள் எம் தாயுடன் ஒரு மழைக்கால இரவில் வெளிக் கிளம்பினோம். நாங்கள் இருக்கும் இடமே முட்புதர் காடுகளாலும், இடையிடையே யூக்கலிப்டஸ் (மனிதர்களால் வைக்கப் பட்டது) மரங்களாலும் நிறைந்தது. முட்புதர் காடுகளில் இலந்தைக் குறுமரங்களும், சப்பாத்திச் செடிகளும், வெள்ளைநாகை மரங்களும் அடர்ந்து காணப்படும். இதோடு பள்ளங்களும் மேடுகளும் நிறைந்து நாங்கள் வாழ வசதியான ஒரு இடமாய்த்தான் அது இருக்கிறது. என்ன! கோடைக் காலத்தில் தண்ணீர் கிடைப்பதுதான் பெரும்பாடாய் இருக்கும்.

நல்ல இருள். என் தாய் திடீரென நடை வேகத்தைக் கூட்டினாள். எதையோ அறிந்துவிட்டாள் போல! சற்றுத் தூரத்திலேயே கடமான் ஒன்று அரைகுறையாய் தின்னப்பட்டுக் கிடந்தது. புலியின் செயலாய்த்தான்  இருக்கவேண்டும். வேகவேகமாய் தாவி ஓடி அவ்வுணவை உண்ண ஆரம்பித்தோம். எங்களின் பற்கள், குறிப்பாய் முன்கடவாய் பற்கள், எலும்புகளை உடைத்துத் தின்பதற்காகவே பரிணமித்து இருப்பதால் அந்தக் கடமான், அது இருந்ததிற்கான தடயமே இல்லாது முழுமையாக எங்களால் தின்றுத் தீர்க்க முடிந்தது. இது செய்முறை வகுப்பு!

எங்கள் கேட்கும் திறன் மிகச் சிறப்பானது. எங்களால் மனிதர்கள் கேட்க முடியாத ஒலியையும்கூட தெளிவாய்க் கேட்க முடியும். வெகு தூரத்தில் வேட்டையாடிகளால் வீழ்த்தப்படும் இரையின் சிறு முனகல் ஒலியினைக்கூட எங்களால் தெளிவாய்க் கேட்டு, உடன் அந்த இடத்திற்குச் செல்ல முடியும். இதுவே மற்றவர்கள் வேட்டையாடுவதை அறிந்துகொள்ள எங்களுக்குள் பரிணமித்த ஒன்று.

இன்றும் இரைதேடி நடந்துகொண்டிருந்தோம். தூரத்தில் காட்டெருமை ஒன்று இறந்துகிடந்தது. அதைச்  சுற்றி வெண்முதுகுப்பாறுக் கழுகுகள்! என் தாய் எருமையருகே சென்றதும் அக்கழுகுகள் பறந்து, நகர்ந்து அமர்ந்தன. அப்போது என் தாய் தன் உடலைச் சிலிர்த்துக் காண்பிக்க, பல கழுகுகள் அங்கிருந்து தூரம் சென்றன. அப்போதுதான் என் தாயை அப்படி ஒரு கோலத்தில் பார்க்கிறேன்.  சிலிர்த்த நிலையில் அவளின் உடல் அளவு இருமடங்கு பெருத்துக் காணப்பட்டது. அதுவே அக்கழுகுகளைப் பயமுறுத்த உதவியிருக்கிறது. எங்களுக்கு ஓர் இடத்தைக் (அட இறந்த காட்டெருமையில் தான்!) கொடுத்து உண்ண சொல்லிவிட்டும், எங்களைக் கண்காணித்துக்கொண்டும்,  என் தாய் தன் உணவை உண்டு கொண்டிருந்தாள்.

வனம், இறைச்சிக் கழிவுகளால் ஆன ஒரு பெரிய குப்பைக் கூடாரமாகி விடாமல் நாங்கள் (வெண்முதுகுப்பாறுக் கழுகுகளையும் சேர்த்துதான்) பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும், புலி, சிங்கம் போன்ற விலங்குகளுக்குக் கொடுக்கும் மரியாதையைப் போன்று மக்கள் எங்களுக்குக் கொடுக்கவில்லை என்பதில் வருத்தமும் உண்டு. எங்கள் அழகைப் பரிணாமம் தேர்ந்தெடுத்துவிட்டது! இதில் இடையே மக்களாகிய நீங்கள் யார்? பாலூட்டிகளில் மிக வலுவான தாடைகள் கொண்ட விலங்குகளில் நாங்களும் ஒருவர்! அதுமட்டுமின்றி அதிக அமிலத்தன்மை கொண்ட திரவங்களுடன் மிகவும் சக்திவாய்ந்த செரிமான அமைப்பையும் நாங்கள் கொண்டுள்ளோம். இது தோல், பற்கள், கொம்புகள், குளம்புகள், எலும்புகள் உட்பட அவற்றின் முழு இரையையும் சாப்பிட்டு ஜீரணிக்கக்கூடிய திறன் கொண்டது. இறந்து அழுகிப் போனவற்றையும் நாங்கள் சாப்பிடுவதால், அதில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்கொள்ளும்  திறனுடைய  ஒரு செரிமான அமைப்பையும் நாங்கள் கொண்டுள்ளோம்

ஒரு வருடம் கழிந்து விட்டது. என் தாயிடம் இருந்து தனியே வேட்டையாடுவது எப்படி, வேறொன்று வேட்டையாடியதைப் பிடுங்கி தனதாக்குவது எப்படி என்பதை ஓரளவுக்குக் கற்றுக் கொண்டுவிட்டேன். பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், பழங்கள், இறந்த உயிரினங்கள் எனப் பலவற்றை உண்ணப் பழகியும் விட்டேன். அதோடு இல்லாமல் சில நேரங்களில் சுடுகாட்டில் கிடக்கும் எலும்புகளையும்தான்! இதைத்தான் உலோகத்தால் ஆன கடகஞ் செறிந்த கையைக் கடகத்தோடு சேர்த்து உடையும்படி கழுதைப் புலி கடித்துக் கவ்வியதாகக் மணிமேகலை கீழ்க் கண்டவாறு கூறுகின்றது.

‘கடகஞ் செறிந்த கையைத் தீநாய்
உடையக் கவ்வி யொடுங்கா வோதையுஞ்’ – மணிமேகலை : 6 : 114-15.

தீநாய் என்பது கழுதைப் புலியைக் குறிக்கும்.

இனி தனியே வாழ்வில் போராடுவோம் எனத் தீர்மானித்து தாயிடம் இருந்து விலகி என் வழியில் நடக்க ஆரம்பித்தேன். எங்களின் பின்னங்கால்கள் முன்னங்கால்களை விட உயரம் குறைவாய் இருப்பதால் எங்களின் நடை சற்று வித்தியாசமாய்தான் இருக்கும். உடலின் பின்பகுதி சற்றேச் சரிந்ததுபோல் இருக்கும். அந்த நடையில்தான் நடந்து கொண்டிருக்கிறேன். வாழைத்தோட்டம் தாண்டி கல்லட்டிச் சரிவுகளை  நோக்கி  நடக்க ஆரம்பித்தேன். நல்ல பௌர்ணமி வெளிச்சத்தில் அவ்விடமே நிலவு நிறத்திலேயே! திடீர் பள்ளங்களும் மேடுகளும் அவ்விடத்தை எனக்குப் பிடித்ததாக ஆக்கிக் கொண்டிருந்தது. தாயிடம் இருந்து ஒரளவிற்குத் தொலைவில் வந்தாகிவிட்டது. அங்கேயே வசிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன். அங்கே இருந்த முள்ளம்பன்றியின் குகைகளும், பொந்துகளும் அதற்குக் காரணம். எதோ ஒரு உந்துதலில் நன்றாய் ஒலியெழுப்பி உருமினேன்.

‘ரொம்ப காலமா இல்லாம இருந்தது! திரும்ப வந்திடுச்சுப்போல!’

சற்றுத் தூரத்தில் இருந்த வாழைத்தோட்டம் என்ற ஊரில் வீட்டின் வெளியே முதியவர் ஒருவர் அருகில் படுத்திருந்தவரிடம் கூறினார்.  அவரிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. அவர் தூங்கியிருந்தார். முதியவர் வானத்தில் இருந்த நிலவைப் பார்த்துக்கொண்டே தூங்கிப் போனார்.

புது இடத்தில் அடிக்கடி வேட்டையாடினேன். அது  மட்டும் இல்லாமல் இங்குக் கால்நடைகள் நடமாட்டமும் அதிகமாதலால் அவை இரையாடிகளிடம் மாட்டி, பின் என்னிடம்!  அவ்விடத்தில் ஒரு குகையைத் தேர்ந்தெடுத்து அதில் வசிக்கவும் ஆரம்பித்து விட்டேன். நான் இருக்கும் குகை மனிதர்கள் வந்து போகும் பாதையின் அருகில் இருந்தது. எனக்கு அவர்களைப் பற்றிப் பயம் ஏதும் இல்லை. இங்கே வந்து இரு மாதங்கள் ஆகினும் என் இனத்தவர் ஒருவர் கூட என் கண்களில் படவில்லை. என் தாய் அப்போதே சொல்லியிருக்கிறாள் ‘நாம் அழிந்து கொண்டிருக்கிறோம்’ என்று! மற்ற இனங்களின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது எனக்கு அதில் உண்மை இருக்குமோ என்று தோன்றியது.

அது ஒரு மழைக்கால மழையுடன் கூடிய  மாலை நேரம். மதம் கொண்ட யானை ஒன்று இருப்பதை அறியாப் பெண்ணொருவள் அவ்விடம் வர, பட்டென யானை துதிக்கையால் அவளைத் தட்ட, மரத்தில் வீசப்பட்டுக் கீழே விழுந்தாள். அதோடு விடாமல் யானை அவளை உதைப்பதும் எத்துவதுமாய்! தூரத்தில் இருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் அங்குச் சென்றால் எனக்கும் அதுதான் என்பது எனக்குத் தெரியுமாதலால், அவ்வழி தவிர்த்து வேறு வழியில், வேறு இடம், சென்று நன்றாய் இரையாடி விட்டுத் திரும்பினேன்.

மழை நின்றிருந்தது. ஓர் அற்ப ஆசை! அந்தப் பெண் என்ன ஆனாள்? சரி அவ்வழியே போய்தான் பார்ப்போமே என நினைத்து அப்பாதையில் பயணித்தேன். தூரத்திலேயே தெரிந்துவிட்டது. அவள் அங்கே இறந்து கிடப்பது. அருகே சென்றேன். மனிதர்களை நான் இதுவரை உணவாக்கியதில்லை. மேலும் நான் நன்கு உண்டும் விட்டேன். எனவே அந்த மனநிலையில் நான் அங்கு இல்லை. சும்மாவேனும் அச்சடலத்தை இரண்டு சுற்றுச் சுற்றினேன். அப்போது என் காலில் அவளின் கிழிந்தப் பாவாடை சிக்கி, நான் நடக்கும்போது என் காலுடனே கிழிந்து வந்தது. தூரத்தில் மனிதர்கள் வரும் சப்தம் கேட்டது. அவசர அவசரமாய் இடத்தைக் காலி செய்தேன். என் இடம் வரும்போதுதான் என் காலில் அப்பாவாடைத் துண்டு இன்னமும் சிக்கியிருப்பது தெரிந்தது. அதைக் கடித்துக் குதறி காலிற்கு அதனிடம் இருந்து விடுதலை அளித்து குகையின் உள்ளே சென்றேன். குகையின் வெளியே அப்பெண்ணின் பாவாடைத் துண்டுகள்!

மழை நனைத்தத் தரையில் உறைந்த இரத்தமும், கிழிந்த சதையுமாய் பெண்ணின் சடலம். அவளைச் சுற்றி என் காலடித் தடங்கள். அதுவும் அழுத்தமாய், யானையின் கலைந்த காலடித்தடங்களின் மேல்! கூட்டம் அவ்விடத்தை நெருங்க, நெருங்க பெண்களின் அழுகைச் சத்தம் கூட ஆரம்பித்து விட்டது. தூரத்தில் இருந்தே தலையில் அடித்துக் கொண்டே வந்த பெண்மணி, இறந்த உடலைக் கண்டவுடன் மேலும் வீறிட ஆரம்பித்தாள். அவளுடன் அதுவரைப் பொறுமை காத்த வேறு சிலப் பெண்களும் வாயிலும் வயிற்றிலும் அடித்து அழ ஆரம்பித்தனர். ஆண்கள் அவசர அவசரமாய் அவ்விடத்தை ஆராய ஆரம்பித்தனர்.

‘அந்த ஒத்த யானைதான்!’ ஒருவர் ஆரம்பிக்க, அதற்குள் மற்றொருவர் என் காலடித் தடத்தைக் காட்டி  ‘எனக்கென்னமோ இதோட வேலை மாதிரித்தான் தெரியுது!’ எனக்கூற  கூட்டத்தில் ஒரு பிரிவினர் இரு பிரிவாய் விவாதிக்க ஆரம்பித்தனர். மற்றொரு பிரிவினர் இதனைக் காவல்துறைக்கும் வனத்துறைக்கும் தெரிவிப்பதைப் பற்றி முயற்சிகள் எடுக்க, பெண்கள் அழுது கொண்டிருந்தனர். திடீரென ஒர் இளைஞன் என் தடத்தைப் பின்பற்றி வர ஆரம்பித்தான். சரியாய் என் இடத்தின் அருகே வந்து அந்த பெண்ணின்  கிழிந்த துணித் துண்டுகளைப் பார்த்தவுடன் சப்தம் போட்டுக் கூட்டத்தைக் கூப்பிட, அடுத்த சில நிமிடங்களில் என்  குகை முன்னே பலர்.  ‘குகையில்தான் இருக்கும்! விடாதீங்கடா அதை’ ஒரு பெரியவர்.  ‘வாசலை அடைச்சுப் பொகை போடுங்க, செத்துடும்’ இன்னொருவர்.  இளைஞர்கள் சுறுசுறுப்பாய் காரியத்தில் இறங்கினர். ஒரு மணி நேரத்தில் துணிப்பந்துகளும் மண்ணெண்ணெயும் கொண்டுவரபட்டன. குகையின் வாசல் துணிப் பந்துகளால் அடைக்கப்பட்டது. யேய்! அங்க கேப் இருக்குப் பார். அதை அடை முதலில்.’

‘இந்தா! இதை வைத்து அடை.’

‘போதுங்க. தப்பிக்க வாய்ப்பே இல்லைங்க.’

ஏழு, எட்டுப் பேர் அந்தக் குகை அருகே நின்று அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது ஒருவன் தன்னிடம் இருந்த தீப்பெட்டியில் இருந்து ஒரு குச்சியை எடுத்து, அதில் உரசி பற்ற வைத்து, அந்த வாயை அடைத்திருக்கும் துணிப்பந்தைப் பற்ற வைத்து பின் அணைத்துவிட்டான்.  அத்துணி மெதுவாய் கனிந்து புகையை உண்டாக்கியது.

‘இன்னும் ஒரு அரைமணியில அது செத்திருங்க.’

‘செத்தா சரி!’

‘இருந்து பாத்திட்டு போவோம்’ என்று கூறியவாறு அவர்கள் அங்கேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். புகை உட்புறமும் பரவ ஆரம்பித்தது!

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *