புகழ்பெற்ற ‘ஸ்டடி இன் ஸ்கார்லெட்’ இல், ஷெர்லாக் ஹோம்ஸ் ஸ்காட்லாந்து யார்டு காவலர்களிடம் ஒரு சந்தேகத்திற்குரிய நபரை எப்படி விவரிப்பார் தெரியுமா?
‘அவர் ஆறடிக்கு மேல் உயரமானவர். கரடுமுரடான, சதுரக் கால் பூட்ஸ் அணிந்திருந்தார். திருச்சினாபோலிச் சுருட்டு புகைத்தார்’ என்று!
அத்தகைய புகழ் பெற்ற திருச்சினாபோலியில் (இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு தற்போதைய திருச்சிராப்பள்ளி திருச்சினாப்போலி என்றுதான் அழைக்கப்பட்டது) இருந்து லால்குடி போகும் வழியில் இருந்தது புல்வெளிக்காடு. என் தாய் அங்கே அடர்ந்து, உயர்ந்து வளர்ந்த புற்களுக்கிடையே ஓர் இடத்தைத் தேர்வு செய்து, தன் கால்களால் கீழே சிறிது கூட்டி, பின் அமர்ந்து ஓர் பழுப்பு நிற முட்டையிட்டாள். என் தாய் மூன்று வருடங்கள் முன் அரிதாய் இருமுட்டைகளையும் இட்டிருக்கிறாள். என் இனப் பெண்கள் மூன்று வயதைத் தொட்டவுடன், வருடத்துக்கு ஒரு முறை இந்த முட்டையிடும் பழக்கம் கொள்கிறார்கள். நாய்கள், உடும்புகள், பறவைகள், நரிகள் ஆகியவற்றிடம் இருந்து அம்முட்டையைக் கவனமாய் பாதுகாத்தது மட்டும் இன்றி, என் தாய் 27 நாட்கள் வெற்றிகரமாய் அதை அடைகாத்தும் விட்டாள்.
அந்த அழகிய முட்டையை (பறவைகளின் முட்டைகளைச் சேகரிப்பதை வழக்கமாய் கொண்ட இப்பகுதியில் வசிக்கும் ஆங்கிலேயர் ஒருவர் அப்படித்தான் சொல்லுவார்!) உடைத்துக் கொண்டு வெளியே வந்தேன். என் தாய் நான் வெளியில் வருவதை ஆசையுடன் கவனித்துக் கொண்டிருந்தாள். மூன்று வருடங்களாய் ஒரு முட்டையைக் கூட அவளாள் பாதுகாக்க முடியவில்லை. நாங்கள் கோழியைப் போன்று பிறந்தவுடன் தாயின் பின் செல்லும் பிரிவைச் சேர்த்தவர்கள். சில பறவைகளின் இளம் உயிரிகள் கண் திறக்காது, உடலில் இறகுகளற்று பிறந்து, பின் வளரும்.
நாங்கள் இருக்கும் இடம் நல்ல புல்வெளிகள் நிறைந்தும், ஆங்காங்கே நீர் நிரம்பிய வயல்கள் நிறைந்தும், தூரத்தில் கொள்ளிடம் ஆறு நிறைய நீருமாயும் இருந்தது. இலந்தைக் குருமரங்களும், நெடியப் பனை மரங்களும் புல்வெளிக்கிடையே நிறைந்து காணப்பட்டன. மழைக்காலம் நெருங்கி விட்டால் அழகழகாய் பூச்சியினங்கள் அவ்விடத்தை நிரப்பும். எங்களுக்கு வேறு எங்கும் செல்லத் தோனாது. இவ்விடமே எங்கள் வாழ்க்கை என்று பல வருடங்களாய் பல சந்ததிகளாக இருந்து வருகிறோம். ஆனால் எங்களின் உயரம் எங்களை வேட்டையாட உகந்த ஒரு பறவையாய், இப்பகுதியைச் சார்ந்த வேட்டையைப் பொழுதுபோக்கிற்குப் பயன்படுத்தும் சிற்றரசக் குடும்பத்தினர், ஆங்கிலேய அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு ஆக்கிவிட்டது.
நின்றால் சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் இருக்கும் எங்களை வேட்டையாட அவர்களுக்கு நிரம்பப் பிடிக்கும். இது ஒருபுறம் என்றால், நாய்களும் நரிகளும் எங்கள் முட்டைகளையும் இளம் உயிர்களையும் எளிதில் வேட்டையாடி விடுகின்றன. இதன் விளைவு எங்களின் எண்ணிக்கை சமீப காலங்களில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்துவிட்டது. என்னையும் சேர்த்தே இப்பொழுது ஐந்துதான். அட ஆமாம்! என் தாய், தந்தை, இவர்களுக்குப் பிறந்த நான், எனக்கு மூன்று வயதிற்கு முன் என் தாய்க்குப் பிறந்த ஒரு பெண், ஒரு ஆண். இதுதான் கடந்த சில வருடங்களாய் இருக்கும் எங்களின் எண்ணிக்கை!
உணவுக்கு எந்தப் பஞ்சமும் இங்கு இருந்ததில்லை. சிறு பழங்கள் (இலந்தைப் பழம் உட்பட), வண்டுகள், தேள், சிறு பூச்சிகள், மண்புழுக்கள், எலிகள், வெட்டுக்கிளி, தானியங்கள் எனக் கிடைக்கின்றவைகள் எல்லாம் என் உணவுகளாய் இருப்பது அதற்கு ஒரு காரணம். தூரத்தில் அதிசயமாய் ஒரு ஆங்கிலேயர் என்னைத் தன் பைனாக்குலரில் பார்ப்பதும் பின் ஏதோ தன் நோட்டில் எழுதுவதுமாய் இருப்பதை இருநாட்களாய் பார்த்து வருகிறேன். நாங்கள் பெரும்பாலும் மனிதர்கள் அருகில் செல்வதில்லை. அவர்கள் வருவதைப் பார்த்தாலே பறந்து வேறு இடம் சென்றுவிடுவது உண்டு. சில நேரங்களில் புதர்களுக்கிடையே உட்கார்ந்து மறைந்து கொள்வதுண்டு. அவர் லால்குடியில் உள்ள சர்ச்சுக்கு லண்டனில் இருந்து பணிபுரிய வந்திருக்கிறாராம். பறவைகளில் ஆர்வம் கொண்டவராம். முட்டைகள் சேகரிக்கும் பழக்கமுடையவராம். முதலில் நான் அவரை வேட்டையாட வந்த ஒருவர் என நினைத்துப் பயந்து விட்டேன்.
அட என்ன இது! என் இனப் பெண் ஒருத்தி தூரத்தில் தெரிகிறாளே! அவளைக் கவரும் வேலையை முதலில் செய்யவேண்டும்! உடன் மூச்சை உள்ளே இழுத்து என் மார்புப் பகுதியில் செலுத்தி மார்புப்பையை நீர் நிரப்பப்பட்ட பலூன்போல் ஆக்கினேன். இப்படிச் செய்யும்போது கொப்பளிப்பது போன்ற சப்தத்தை நான் எழுப்புவதுண்டு. அச்சத்தமும் பெண்ணைத் தூண்டுவதாய்தான் இருக்கும். பின் நெஞ்சை நிமிர்த்தி அப்பையை இடது வலதாய் குலுக்குவதும், வால் இறகுகளை மேல் உயர்த்தி விரித்து மூடுவதுமான இனச்சேர்க்கைக்கான வெளிப்பாட்டைச் செய்ய ஆரம்பித்தேன். இது என் இடம் என்று நான் வகுத்துள்ளதால், அதில் நடந்து கொண்டு அச்செயலைச் செய்து கொண்டிருந்தேன்.
அதற்குள் அருகில் இருந்து மற்றொருவன் பறந்து வந்து அமர்ந்தான். அவன் வேறு யாருமில்லை. எனக்கு முன் பிறந்தவன்தான்! அப்பெண்ணும் அவனுடன் பிறந்தவள்தான்! எது நடந்தாலும் இனி எங்கள் ஐந்து பேருக்குள்தான். ஆரம்பக் கால மனித இனம் கடந்து வந்த ஒரு சூழல்தான். ஆயிரம் இருப்பினும் (அட இருப்பதே ஐந்துதான்! நீங்க வேற) அவன் வந்து இறங்கியது என் இடம்! உடன் எம்மிருவருக்குள் போட்டி ஆரம்பமானது.
‘சபாஷ்! சரியான போட்டி!’ எனச் சொல்ல எம்மிடம் நோக்கி வேக வேகமாய் அவள் வர ஆரம்பித்தாள். அதற்கு முன்பே எங்கள் ‘இடப்போட்டி’ ஆரம்பித்து விட்டது. இதில் நான் வெற்றி பெற்றால் என்னுடைய இடம் என்னுடையதாகவே இருக்கும். அவன் வெற்றி பெற்றால் என் இடத்தை அவனிடம் தாரைவார்த்துவிட்டு வேறு இடம் நோக்கி நான் செல்ல வேண்டியதுதான். அதுமட்டுமல்ல! அவளும் அவனுக்குச் சொந்தமாகி விடுவாள். இந்தச் சண்டை உண்மையில் ஒரு ராணுவச் சண்டை போன்று ஒழுங்குடையதாய் இருக்கும். இருவரும் எங்கள் மார்புப் பைகளைக் காற்றடைத்துப் பெரிதாக்கி, வலது இடதாய் ஆட்டிக்கொண்டு, பின் வால்ச்சிறகுகளை மேலுயர்த்திச் சில அடிகள் நடைபயின்று (வாகா எல்லை ‘கொடிகளிறக்கச்’ சடங்கில் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் நடையை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்!) திரும்பி அதேப் போல் நடைபயின்று பழைய இடத்தை அடைந்தவுடன் இருவரும் விலகி உயரே எழும்பி மார்பால் முட்டிக் கொண்டோம். பின் காற்றிலேயே கால்களால் எம்பி உதைத்துக்கொண்டோம். இதேப்போல் இரு முறை செய்து இருவரும் ஒருவருக்கொருவர் தலையைப் பின்னிக் கொத்திக்கொள்ளத் தொடங்கினோம்.
இரண்டொரு முயற்சியிலேயே அவன் விலகி வேகமாய் நடந்து பின் மேலுயர்ந்து பறந்தான். நான் பெருமையுடன் மீண்டும் ஒருமுறை நடை பயின்றேன். அதற்குள்ளாகவே அவள் என்னைச் சுற்றியிருந்தாள். அவளிடம் என் பெருமையை இடமாற்றினேன். எங்களுக்குள் ‘ஒரு ஆண் ஒரு பெண் கோட்பாடு’ எப்போதுமே இருந்தது இல்லை. ’பல்லிணைவுக் கோட்பாடுதான்’. இதற்கு ஆண், பெண் விகிதாசாரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வே காரணம். இருவர் எண்ணிக்கைகளும் சமமாய் இருந்ததில்லை. தூரத்தில் இருந்து இதையும் அவர் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். மனிதர்களுக்குப் பொழுதுபோக்கு அவசியமான ஒன்றாகி விட்டது. சேமித்து வைக்கும் பழக்கம் எங்களிடம் இல்லையாததால் பொழுதுபோக்கும் எங்களிடம் இல்லை.
நாட்கள் ஓட ஆரம்பித்தன. அவரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தவறாது என்னைப் பார்க்க வந்து விடுவார். நான் இருக்கும் இடத்தில் அவரைப் பார்த்துவிட்டால் ஏதோ எனக்கு ஒரு துணை இருப்பதுபோல அது ஆறுதலைத் தந்தது. என் தாயும் தந்தையும் சமீபத்தில்தான் வேட்டையாடப்பட்டு இறந்தனர். என் சகோதரனைப் பார்த்து நாளாகிவிட்டது. அவளும் இரண்டுமுறை முட்டையிட்டும் அதைக் காப்பாற்ற முடியாமல் பறிகொடுத்துவிட்டாள். அவள்தான் எனக்கு என் இனத்தில் இப்போது துணையாய் இருக்கிறாள். வாரத்தில் இரண்டுமுறை எங்காவது பார்த்துவிடுவேன். அதுவே எனக்குப் போதும்.
என் புல்வெளித்தளம் இப்போது மனிதர்களால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. வீடுகள் நிறைய கட்ட ஆரம்பித்து விட்டார்கள். மெட்ராஸுக்கு விரைவாய் செல்ல அரியலூர் வழியே விழுப்புரத்தை இணைத்துப் புதிதாய் ஒரு புகைவண்டித் தடம் ஆரம்பிக்க, அதுவும் என் இருப்பிடத்தைப் பாதித்தது. எங்கும் மனிதர்கள்! தனிமை என்னை வாட்டி எடுத்தது. சாப்பிடுவது, ஓய்வெடுப்பது, பறப்பது, சாப்பிடுவது என இந்த வட்டத்தில்தான் சுற்றவேண்டி இருக்கிறது. அவளையும் இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை. ஒரு வழியாய் பதிமூன்று வருடங்கள் வாழ்ந்துவிட்டேன். ஆச்சர்யமாய்த்தான் இருக்கிறது. அதுவும் நான் மட்டுமே கடந்த நான்கு வருடங்களாய் இந்த வாழிடத்தில்! இரண்டுமுறை நாயிடம் மாட்டி உயிரிழந்திருப்பேன். நல்லவேளையாக அவர்தான் நாயைத் துரத்தி என்னைக் காப்பற்றி இருந்தார்.
சில நாட்களாய் உடல் நிலையில் மாற்றம். எளிதில் சோர்வடைந்து விடுகிறேன். சரியாய் சாப்பிடவும் முடியவில்லை. இறுதிக் காலம் வந்துவிட்டதை அறிந்தேன். என் சந்ததியே என்னோடு இப்பகுதியில் அழியப் போகிறது என்பது எனக்கு மிக வேதனையளித்தது. இதோ அவரும் வந்துவிட்டார். குறிப்பெடுக்கவும் ஆரம்பித்து விட்டார். நான் அனாதையாக இறக்கப் போவதில்லை என்ற நினைப்பு என்னைச் சற்றே மகிழ்வடையச் செய்தது. கண்கள் இருள ஆரம்பித்தன. உட்கார்ந்து விட்டேன். அவர் என்னை இன்னமும் பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்துக் கொண்டே சரிந்தேன். ஆசையாய் மூச்சை ஒரு இழு இழுத்தேன். அதுதான் தெரியும். இறந்து கிடந்தேன். அவர் வேக வேகமாய் வந்தார். என்னைத் தூக்கி வைத்து ஏதேதோ செய்து பார்த்தார். இறந்ததை உறுதி செய்து விட்டார். அப்படியே எனைத் தூக்கிக் கொண்டு அவரின் வீட்டுக்குள் நுழைந்தார்.
என் இறந்த உடலை எடுத்துச் சென்று ஒரு மேசையில் வைத்தார். சிறிது நேரம் எங்கேயோ சென்று கைகளில் பைபிளுடன் வந்து என் இறப்பிற்கு மரியாதைச் செலுத்தும் விதமாய் ‘Go forth, Christian soul, from this world
in the name of God the almighty Father, who created you, …” எனப் படித்து, பின் என் உடலில் ஆசிர்வதிக்கப்பட்ட நீரைத் தெளித்தார். பின் சிறிது நேரம் அமைதியாய் இருந்துவிட்டு, மஞ்சள், உப்பு, கத்திரிக்கோல், நூற்கண்டு, ஊசி, பஞ்சு உருண்டை, இரு கோலிக் குண்டுகள், கட்டுக்கம்பி போன்றவைகளை எடுத்து வந்து அந்த நீண்ட மேசையில் பரப்பி ‘மாரியப்பா’ என அழைத்தார். ‘ஐயா’ எனக் கூறிக் கொண்டே மாரியப்பன் அவசர அவசரமாய் கையுரைகள், நீர், போரக்ஸைக் கொண்டு வந்து அருகில் நின்று கொண்டார்.
அழகாய் என் வயிற்றின் வழியே ஒரு கத்திரியைச் செலுத்தி மேலாகத் தோலை மட்டும் குறுக்காய் வெட்டிக்கொண்டே கீழ் அலகின் கீழ்வரைச் சென்று உள்ளே இருக்கும் உறுப்புகளை வெளியே பிய்த்து எடுத்தார். அவ்வழியே கால், கை எலும்புகளையும் மெதுவாய் உருவி வேளியே எடுத்தார். கண், மூளை என என் தலையில் இருந்த மென்மையான பாகங்களை அகற்றினார். அதேப்போல் தொடை எலும்பையும் அகற்றி, தோலை நன்கு விரித்து வைத்து நன்றாய் ஒரு துணி கொண்டு துடைத்து போரக்ஸ் பவுடரை நன்கு தெளித்துத் தடவினார். நன்றாய் காய்ந்தபின் அதற்குள் பஞ்சையும் கம்பியும் கொண்டு அதன் வடிவம் மாறாத வகையில் தோலினுள் அடைத்து, பின் தோலை இணைத்து தைத்து இரு போலிக் கண்களை அதற்குரிய இடத்தில் பொருத்தி என்னை நிற்கவும் வைத்து விட்டார். எனக்கு உயிர்தான் இல்லை! மற்றபடி நான் அவரைப் பார்ப்பது போலவே நின்று கொண்டிருந்தேன். அவரின் கண்கள் கலங்கின.
குறிப்பு: திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறத்தில் இக்கானமயில் (Great Indian Bustard) இருந்ததிற்கு அடையாளமாய் திருச்சி தூய வளனார் கல்லூரி சார்ந்த அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்ட இப்பறவை இன்றும் இருக்கிறது.
(தொடரும்)