Skip to content
Home » காட்டு வழிதனிலே #9 – கொண்டை ஊசி வளைவு

காட்டு வழிதனிலே #9 – கொண்டை ஊசி வளைவு

நீலகிரி வரையாடு
ஒரு நகரத்தின் நாகரீகத்தை அதன் இரவு வெளிப்படுத்திவிடும். அதேபோல, ஒரு காட்டின் தூய்மையை அதன் மணம் வெளிப்படுத்திவிடும். பாலைவனம் தொடங்கி மழைக்காடு வரை காடுகளுக்கென்று தனி மணம் உண்டு. அந்த மணம் எப்போது மாறுகிறதோ அப்போதே அக்காடு அதன் தனித்துவத்தை இழந்து விட்டது எனலாம். அந்த மணத்தை மிருகங்களும் அறிந்திருக்கின்றன; மலைவாழ் மக்களும் அறிந்திருக்கின்றனர்.
வால்பாறையின் ஐந்தாவது கொண்டை ஊசி வளைவில், என் தாய் என்னை வயிற்றில் 187 நாட்களாய்ச் சுமந்து கொண்டு, பிப்ரவரி மாத இரண்டாம் வாரம் ஒன்றில் எம்மவர்களுடன் சேர்ந்து நடந்து கொண்டிருந்தாள். கடந்த வருட ஆகஸ்ட் மாத மழைக்கால நாள் ஒன்றில்தான் என் தந்தையுடன் இணைந்து என்னை உருவாக்கியிருந்தாள். இதோ இன்று அவள் என்னைப் பிரசவிக்கும் நேரம் நெருங்கியதை அறிந்து ஓர் இடத்தில் சற்று நின்றாள். அவளுக்கு அதிகம் மூச்சு வாங்கியது. அவள், தன் வயிற்றில் சிறிய அழுத்தம் கொடுக்க, பனிக்குடம் முதலில் வந்துடைந்து, பின் இரு குளம்புகள் முதலில் வெளியே வர, அதனோடு சிறிது நேரத்தில் என் முகமும் வெளியே!
ஒரு மணி நேரத்தில் நான் முழுவதுமாய் வெளிவந்து தரையில் விழுந்தேன். கால்களை உதைத்துக் கொண்டு எழுந்து நிற்க முயன்று தோற்றுத் தோற்று விழுந்தேன்! என் தாய் என்னைத் தன் நாவால் நக்கிச் சுத்தப்படுத்தினாள். அந்தச் சில்லென்ற மலைக் காற்றின் உயிர்வளி என் நுரையீரலை நிரப்பியது. மெதுவாய் எழுந்து நின்று! ஆம் வெற்றி பெற்றுவிட்டேன். எங்களைச் சங்கத் தமிழ் “வருடை” என வர்ணிக்கிறது (அகம் 378: ஐங்குறுநூறு 287, குறுந்தொகை 187, கலி 43:15, கலி 50:4,21, மலை 503).
நான் தற்போது இருப்பது சுமார் 1770 மீட்டர் உயரத்தில் உள்ள ஐந்தாவது கொண்டை ஊசி வளைவின் சரிவுகளில். ஆழியாரின் குரங்கு அருவியின் சோதனைச் சாவடியில் தொடங்கி, வால்பாறை வரையிலான அந்த மலை வழிச் சாலையில் பெரும்பாலும் ஒரு பக்கம் சரிவாயும், சில இடங்களில் மட்டும் இருபக்கங்களிலும் சரிவுகள் இருக்கும். அதில் இருக்கும் 40 கொண்டை ஊசி வளைவுகளில், பத்திலிருந்து மூன்றாவது வளைவு வரை உள்ள ஏற்ற இறக்கங்களில்தான் ஏறத்தாழ 26 பேருடன் நான் இருக்கிறேன். இதில் என் வயதில் மட்டுமே ஏழு குட்டிகள். அனைத்தும் நான் பிறந்த மாதத்தில் பிறந்தவை.
எங்கள் தாய்கள் வேறுபட்டாலும் தந்தை ஒன்றுதான். எம் குடும்பத்தில் மூன்று ஆண்கள் உள்ளனர்: மூத்த வயதில் ஒன்று, இளம் வயதில் இரண்டு. இவர்களைத்  தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் பெண்கள். இரண்டு வாரங்கள் தாய்பால் அருந்தி, பின் புற்களைத் தின்ன ஆரம்பித்து விட்டேன். பகலில் உணவு தேடி ஏறுவதும் இறங்குவதுமாய்! ஆமாம்! எங்களின் குளம்புகள் செங்குத்தான பாறைகளில் ஏறுவதற்காகவே பரிணமித்திருக்கின்றன. இதுதான் எங்களை எதிரிகளிடம்  இருந்தும் பாதுகாக்க உதவுகிறது. அதிகாலையிலும் மாலையிலும் உணவு தேடி உண்ணுவதும் மதிய வேளையில் ஓய்வும்தான் வேலைகளாய் இருக்கின்றன. ஆழியாறு காட்சி முனை வழியே மேலே ஏறி மறுபக்கம் இறங்கினால் மிக அழகான ஒரு புல்வெளி தளம் உண்டு. அதுதான் எங்களின் விருப்பமான இடம். அங்கும் இங்கும்தான் நாங்கள் இடம் பெயர்ந்து உணவு உண்ணுவது வழக்கம்.
இந்த இடம் உண்மையில் ஒரு பாதுகாப்பான இடமாய்த்தான் இருக்கிறது.  சிறுத்தை நடமாட்டம் இங்கு அரிதாகவே இருக்கும். புலியும் செந்நாயும் அறவே இல்லை. ஓர் அமைதியான வாழ்க்கை போலத்தான் தெரிகிறது. அப்போது ஏதோ சப்தம் வருகிறதே என்று திரும்பிப் பார்க்கும் முன்னே என்னுடன் வந்த இன்னொரு குட்டி என்னை இடித்துக்கொண்டு கீழே விழுந்தது. வேகமாய் சுழன்று வந்த கம்பு அதன் மண்டையை உடைத்திருந்தது. எல்லோரும் அந்தச் சப்தத்தில் வெவ்வேறு இடங்களுக்கு துள்ளினோம்.
 ‘என்னடா குட்டியப் போய் காலி பண்ணிட்ட’ என்றான்  அவன்.
 ‘குறுக்கால வந்துடுச்சு! விடு, என்ன பண்ண!’  மற்றவன்.
 ‘இனிமே எல்லாம் சுதாரிச்சுக்கும்! இன்னைக்கு அவ்ளோதானா?’ என்றவாறு மறைத்து இருந்த அந்த இருவரும் கீழே கிடக்கும் குட்டியை  நோக்கி வர ஆரம்பித்தனர். எங்களில் பெரியவர்களின் கறி சாப்பிட சற்றுக் கடினமாய் இருப்பதால் இளம் உயிரிகளைத்தான் மனிதர்கள் வேட்டையாடுவது உண்டு. ஆனால் இன்று அதனினும் இளம் உயிரியாய்! அமைதியான வாழ்க்கையில் மனிதர்கள் அபாயமாய்!
ஒரு வழியாய் பருவ வயதை அடைந்து விட்டேன். ஆமாம், மூன்று வயதை அடைந்து விட்டேன். தேவைப்படுமபொழுது என் சிறுநீரை உடலில் சிறிதாய் பீச்சிக் கொண்டு, அதன் வழியே என்னுடைய சமூக அந்தஸ்து, வீரியம், தனித்தன்மையைப் பிறர்க்குத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டேன். ஆனால் துணையை அடைவதில்தான் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி நிறைய பருவ வயதில் பெண்கள். ஆனால் நான் நினைத்தவுடன் இணைய முடியாது. அக்குழுவில் இருக்கும் முதிர்ந்த ஆண் இதை அனுமதிப்பதில்லை. ஆறு மாதங்கள் எப்படியோ கடத்தி விட்டேன். இன்று எதற்கும் துணிந்து பருவத்தில் தயாராய் இருந்த அவளுடன் இணைய முயன்றேன்.
ஆனால், அவளைத் தன் அதிகாரத்தின் கீழ்  வைத்திருந்த அவன் தூரத்தில் இருந்து வேகமாய் வந்தான். முதன் முதலாய் அவனுடன் மோத வேண்டிய சூழல். வேறு வழியில்லை! என்னை நிலை நிறுத்த வேண்டிய கட்டாயம். இருவரும் தயாரானோம். பின்னால் சென்று வேகமாய் முன்னோக்கி வந்து நேருக்கு நேர் மண்டையில் மோதிக் கொண்டோம். கொம்புகள் எழுப்பிய ’மட்டார்’ எனும் அச்சத்தம் அந்தப் பள்ளத்தாக்கில் எதிரொலித்தது.  அவனுக்கு இது புதிதில்லை. அவன் என்னைப் போன்று பலரை வீழ்த்தித்தான் இந்நிலை அடைந்திருக்கிறான்.  ஆனால் எனக்கு இது புதிது. அதனால் என் பலம் முழுதும் அதில் செலுத்துவது எப்படி எனத் தெரியவில்லை.
அவன் அதை அறிந்திருந்ததால், அம்முதல் மோதல் என்னைச் சற்றே பின்தள்ளியது. நானும் தளராது நான்கு முட்டலைச் செய்துவிட்டேன். என் இளமை இதற்கு எனக்கு உதவியது. இருவரும் பக்கவாட்டில் மோதத் தயாராகினோம். தலையைப் பக்கவாட்டில் சாய்த்து இருவரும் தோள்பட்டையில் மோதிக் கொண்டோம். முதல் இரண்டு மோதலில் பெரிதாய் ஒன்றும் நிகழவில்லை. மூன்றாவதில் என்னுடைய வளைந்த கொம்பில் அவனின்  முன்னங்காலின்   தொடை வசமாய் சிக்கிக் கிழிந்தது. அது தாக்கும் கோணத்தில் ஏற்பட்ட விளைவே அன்றி என் திறன் அல்ல என்று எனக்குத் தெரியும்!. அடுத்தடுத்த மோதல்களில் அவனின் தன்நம்பிக்கையில் ஏற்பட்ட தொய்வு நன்றாகவே தெரிந்தது. பின் அவனாகவே பின்வாங்கிச் சென்று விட்டான். அதோடு அவனுடன் சேர்ந்து அக்குழுவே என் வசமானது.
எங்கள் வாழிடம் தேயிலைத் தோட்டங்களாலும், யூக்கலிப்டஸ், வாட்டல் பயிரீடுகளாலும், சாலைகள் அமைப்பு, சுற்றுலாத்துறை வளர்ச்சிகளாலும் பாதிக்கப்பட, உணவுக்காக ஏறத்தாழ இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் இங்குப் புலம் பெயர்ந்து இருக்கிறோம். அதற்கு முன் எங்களை இங்குப் பார்த்திருக்கவும் முடியாது. இந்த இடமும் எங்களுக்கான உகந்த இடமம் இல்லை. வேறு வழி இன்றி இங்கு வாழ்ந்து வருகிறோம். உண்மையைச் சொன்னால் மனிதர்களைக் கண்டால் ஓடிவிடும் பழக்கம் உடைய நாங்கள் இன்று மனிதர்களை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.
கொண்டை ஊசி வளைவுகளில் சிறிது நேரம் நின்று பாருங்கள். எங்களைத் தொட அனுமதிப்பதும், சுயமி எடுத்துக்கொள்ள அனுமதிப்பதும், வேகமாய் வரும் வாகனங்களுக்கு அருகே நிற்பதுமாய் என வீட்டில் வளர்க்கப்படும் விலங்குபோல் நாங்கள் மாறியிருப்பது தெரியும். அவர்களின் கண்களுக்கு விருந்தாய், அவர்களின் நெருக்கத்திலேயே, நாங்கள் ஒருவருக்கொருவர் துரத்துவதும், புழுக்கை இடுவதும், சண்டை போடுவதும், இனச்சேர்க்கை செய்வதுமாய்!  1980களில் ‘கிலிஃபோர்ட் ஜீ ரைஸ்’ என்னும் ஆய்வாளர் எரவிகுளத்தில் எங்களைப் படிக்க வரும்போது, எங்களைப் அருகில் பார்ப்பதற்கே மிகவும் சிரமப்பட்டார். ஒரு முழு வருடத்தை எங்கள் அருகே வருவதற்காகச் செலவிட்டார். மனிதர்களைத் தூரத்தில் பார்த்தாலே அப்போதெல்லாம் நாங்கள் மறைவிடம் நோக்கிப் போய் விடுவோம். ஆனால் இன்று அப்படி இல்லை. ஓநாய்களை நம்பும் ஆடுகளாய் நாங்கள்! வெள்ளாடு, செம்மறி ஆடுகளின் குடும்பத்தில் வருபவர்கள்தானே நாங்கள்.
நான் அதிகபட்சமாய்  120 வகை  செடிகள், மற்றும் புற்களை உணவாக கொள்கிறேன். சிலவற்றின் மஞ்சரி, சிலவற்றின் இளம் குருத்துகள்,  சில முழுமையாய் எனத் தேர்வு செய்துதான் உண்ணுவது வழக்கம்.  ‘ரோடோடென்றான்’ போன்றவற்றை உண்டது இல்லை. எங்களின் உணவுத் தாவரங்கள் ஒரே இடத்திலோ, ஒரே காலத்திலோ கிடைப்பதில்லை. தேடல்தான் எங்களை வாழ வைத்திருக்கிறது. தாது உப்புகளை இடையிடையே ஆங்காங்கே தேடி (பெரும்பாலும் பாறைகளில்) அதன் குறைபாட்டையும் தவிர்க்கிறோம். வனத்துறை இங்கெல்லாம் உப்புக்குழி போடுவார்கள் என எதிர்பார்ப்பதில்லை. எங்களின் எச்சமும் புல்வெளிக்குத் தேவை. அது விதைப் பரவலுக்கும் உதவுகிறது. தீ அழித்துப் புதிதாய் வரும் இளம் புற்கள் மீது எங்களுக்கு ஓர் ஈர்ப்பு உண்டு. ஆனால் காட்டுத்தீ எங்களில் சிலரை விழுங்குவதும் உண்டு.
எங்கள் கூட்டமே இன்று பல சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்றுக்கொன்று தொடர்பற்று வாழ்ந்து வருகிறோம். நாங்கள் இந்த வால்பாறையின் காடுகளில்தான் பரவி இருக்கிறோம். ஆனால், சந்திக்க முடியா ஒரு சுழலில்! காரணம், சிறு சிறு துண்டுகளாய்ப் பிரிக்கப்பட்ட எம் வாழிடம். அதுவும் வருடா வருடம் மக்களின் தேவையால் மேலும் சுருக்கப்பட்டுத் துண்டுகளின் இடைவெளியை மேலும் அதிகரித்துவிட்டது. இந்தத் துண்டுகளில்தான் நாங்கள் குழுக்களாய்!   இது எங்களுக்குள்ளாகவே இனச்சேர்க்கையை அதிகரித்து மரபுப் பன்மயத்தைக் குறைத்து எங்களை மிக பலவீனமாய் ஆக்கி வருகிறது.
நான்கு வருடங்கள் கடந்து விட்டன. முன்பெல்லாம் எம்மவர்கள் எட்டு, ஒன்பது வயது வரை உயிர் வாழ்ந்தார்கள். ஆனால், இப்போதெல்லாம் நான்கைத் தொடுவதே  பெரிய விஷயமாய் இருக்கிறது. கடந்த சில நாட்களாய் அதிகம் நடக்க முடியவில்லை. சிறிது தூரம் நடந்து புல் மேய்வதும் பின் கொண்டை ஊசி வளைவில் கட்டியுள்ள தடுப்புச் சுவரில் அமர்ந்து கொள்வதுமாய் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் எதை எதையோ தருகிறார்கள்! என் இயலாமையில் அதையெல்லாம் தின்றும் வைக்கிறேன்.
இன்று காலையிலிருந்தே எதுவும் தின்ன முடியவில்லை. அந்தச் சுவரின் மேல்தான் படுத்துக் கொண்டிருக்கிறேன். இன்று பணி நாளானதால் சுற்றுலா பயணிகள் வருகை சுமாராய்த்தான் இருந்தது. இளம் தூரலில் என் உடல் நனைந்து கொண்டிருந்தது. அப்படீயே என் உயிர் பிரிந்தது. ‘யேய் நிறுத்து! நிறுத்து!’ ’அங்கப் பாரு வரையாடு!’ என்று சொன்னபடியே காரை ரோட்டில் நிறுத்தி என்னை நோக்கி ஒரு குடும்பம் வரத் தொடங்கியது!
(தொடரும்)
பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *