Skip to content
Home » காட்டு வழிதனிலே #10 – வேட்டைத் தடுப்புக் காவலர்கள்

காட்டு வழிதனிலே #10 – வேட்டைத் தடுப்புக் காவலர்கள்

Nilgiri marten - கரும்வெருகு

மாதன், பொம்மன், சிரில், குன்மாரி ஆகிய நால்வரும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள். மேல் பவானி அணைக்கு அருகே உள்ள பங்கிதப்பால் எனும் இடத்தில் பணி செய்பவர்கள்.

இடம், வேலை என்றவுடன் உங்கள் மனதில் ஒரு படம் இந்நேரம் விரிந்திருக்கும்! அதில், ஒர் ஊரில், ஒரு கட்டடத்தில், பலரில் ஒருவராய், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, இடையிடையே டீ, வடை…போதும் நிறுத்துங்கள் உங்கள் கற்பனையை! பங்கிதப்பால் ஒரு காடு! என்றோ, யாரோ ஒருவர் அடையாளத்துக்காக இட்டபெயர். மற்றபடி அங்கே மக்களோ, வீடுகளோ கிடையாது. வேலை என்பது அங்கு இருக்கும் ஒரே அறையைக் கொண்ட ஒரு கட்டடத்தில் குளிரிலும் மழையிலும் தங்கி, அரிய வகை வன உயிரினங்கள், மரங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பது, காடுகளில் அந்நிய நபர்கள் ஊடுருவுவதைக் கண்காணிப்பது, காடுகளிலிருந்து வெளியேறும் உயிரினங்களை மீட்டு, அவற்றின் வாழ்விடங்களில் விடுவது, இறக்கும் பெரிய உயிரினங்களின் பிரேதப் பரிசோதனைகளில் உதவியாளராகப் பணியாற்றுவது, கஞ்சா பயிரிடுதலைத் தடுப்பது, வனத்தில் தீத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, வன உயிரினங்களைக் கணக்கெடுப்பது… என்ன கண்ணைச் சுத்துதா?

இதற்கு மாதம் தொகுப்பூதியமாய் 12,500 ரூபாய். அந்த ஊதியமும் முதல் தேதியெல்லாம் வந்ததில்லை. இரண்டு மாதம் கழித்துக்கூட வரும். ஏன் எனக் கேட்டால், அதற்குரிய நிதி வரவில்லை என அதிகாரிகள் தெரிவிப்பார்கள். தமிழகத்தின் வனத் துறையில் இன்று அதிகாரப்பூர்வமில்லாமல் ஆயிரத்துக்கும் மேல் இதுபோல் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் அபாயகரமான நிலையில் பணிபுரிகிறார்கள்.

அது ஒரு புல்வெளிக்காடு. அதைச் சுற்றி பசுமை நிறத்தில் மடிப்பு மடிப்பாய் மலைகள். இடையிடையே சோலைக்காடுகள். இச்சூழலில் வெள்ளைக்காரன் இளைப்பாற கட்டிய பாறைகளால் ஆன 15×15 அடி கட்டடத்தில்தான் அந்நால்வரும் தற்போது இருக்கிறார்கள். கதவுகளிலும் ஜன்னல்களிலும் இருந்த கண்ணாடிகள் உடைந்து பிக்காசோவின் ஓவியம்போல் இருந்தன. பனிக் காலத்தில் பனிக்காற்று அந்த இடைவெளிகள் மூலம் அறையின் உள்ளே வராமல் இருக்க உடைந்த இடத்திலெல்லாம் துணிகள் அடைக்கப்பட்டு இருந்தது. இல்லையென்றால் பனிக்காற்றுத் தூக்கத்தைக் கெடுக்கும்.

அவர்கள் படுப்பது, சமைப்பது எல்லாம் இங்கேதான். அறையின் வெளியே எக்காலத்திலும் நீரோடும் ஒரு ஓடை. கட்டடத்தின் பின்னே தகரத்தால் அடைக்கப்பட்ட ஒரு சமையல் அறை. அங்குச் சுடுதண்ணீர் வைப்பதோடு சரி. மற்றபடி சமையல் உள்ளேதான். அறையின் பின்புறம் 100 அடி தூரத்தில் ஒரு சோலைக்காடு. அந்த அறையில் கட்டில்கள் மடக்கப்பட்டிருந்தால் அது காலை! விரிக்கப்பட்டிருந்தால் இரவு!

இரண்டு வருடங்களுக்கு முன்வரை தரையில் அட்டைப் பெட்டிகளை விரித்து வைத்துதான் அவர்கள் படுத்திருந்தனர். அந்த இரு கட்டில்களும் அணையில் வேலை செய்த மின்வாரிய ஊழியர் ஒருவர் பணி ஓய்வு பெற்று வீட்டைக் காலி செய்தபோது கொடுத்தவைகள்தானே தவிர வனத்துறை செய்து கொடுத்தது இல்லை! அவ்வறையில் சமையல் செய்ய நான்கைந்து பாத்திரங்கள், இரண்டு மண்ணெண்ணெய் ஸ்டவ், இரண்டு வாளிகள், வெந்நீர் வைக்க ஒரு குண்டான், அதோடு அவர்களின் ஆடைகள், அதற்குரிய நான்கு பைகள் என அவ்வளவுதான்.

காலை எழுந்து வெளியே சென்று காலைக் கடன் முடித்து, காலைக்கும் மதியத்துக்குமாய் சமைத்து வைத்து, காலை உணவைச் சாப்பிட்டு விட்டு, பின் இருவர் இருவராய் இரு வேறு திசைக்குச் சென்று கண்காணிப்பைச் செய்து, பின் அறைக்குத் திரும்புவதுதான் வேலை. வந்து சிறிது தூங்கி எழுந்து, பின் இரவு சமையல், இரவு சாப்பாடு என வாழ்க்கை ஓடும். படுக்கும் முன் அன்றைய நடவடிக்கை அனைத்தையும் அதற்குரிய நோட்டில் பதிவு செய்துவிடுவார்கள்.

எத்தனை யானை, புலி, சிறுத்தை, செந்நாய் அன்று பார்த்தார்கள், வேட்டையாடுபவர்கள் யாரையாவது பார்த்தார்களா என்பதெல்லாம் தேதி நேரம் வாரியாக அதில் இருக்க வேண்டும். அதிகாரிகள் அதைப் பார்த்து ஒப்புகை இடவேண்டும். இதோடு மேல் அதிகாரிகள் இப்பகுதிக்கு வரும்போது அவர்களுடனே அவர்கள் போகும் வரை இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து தருவதுதான். நல்லவேளையாய் அணைசார்ந்த விருந்தினர் அறை சமைப்பவருடன் மேல்பவாணியில் இருப்பதால் பெரிய அளவில் அவர்களுக்குத் தொந்தரவு இருந்ததில்லை. மாதம் இரு நாள்தான் அவர்களுக்கு விடுமுறை. அதை அவர்களுக்குள் சுழற்சி முறையில் எடுத்துக் கொள்வார்கள். மற்றபடி அனைத்து நாட்களும் வேலைநாட்களே. செல்போன் கோபுரம் ஏதும் அருகில் இல்லாததாலும் மின்வசதி இல்லாததாலும் கைபேசி இருந்தும் உபயோகமில்லை. வீட்டுக்குச் சென்று வந்தவரின் கைபேசி மூன்று, நான்கு நாட்களுக்குப் படம் பார்க்கப் பயன்படும். யார் வீட்டிற்குச் சென்று வந்தாலும் வரும்போது கருவாடும், இறைச்சியும், மதுவும், காய்கறிகள், அரிசி, மாவு வாங்கி வந்துவிடுவார்கள். அதற்குரிய செலவை நால்வரும் பகிர்ந்து கொள்வோம்.

நேற்று மாதன் காய்கறிக் கழிவுகளைப் பின்புறம் கொட்டிவிட்டு ஒரு பீடியுடன் புதர் அருகே ஒதுங்கினான். அப்போது சோலைக்காட்டில் இருந்து கீரியைப்போல், ஆனால் அதைவிட அளவில் பெரிய விலங்கு ஒன்று வந்து காய்கறிக் கழிவுகளை ஆய்ந்து, ஒரு தக்காளியைத் தன் முன்னங்கால்களால் எடுத்துத் தின்றுவிட்டு சென்றது. முதலில் வேட்டையாடியாய் இருக்குமோ என்ற பயத்தில் இருந்த மாதன் அது தக்காளி திண்பதைப் பார்த்தவுடன் பயம் தெளிந்து, மறைவில் இருந்து வெளிவந்து அது போன திசையைப் பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான். பின் நடந்ததை எல்லோரிடமும் விவரித்தான்.

சிரிலைத் தவிர குன்மாரியும் பொம்மனும் அதில் பெரிதாய் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் மல்லிப்பூப் பாடலில் லயித்திருந்தனர். அதோடு அன்று கழிந்தது. அடுத்தநாளும் அதே மிருகத்தை அதே நேரத்தில் அங்குப் பார்த்தபோதுதான் அம்மிருகத்தைத் தான் மறந்தவிட்டதை நினைத்து மாதன் நொந்து கொண்டான். இன்றும் அதே செயலைச் செய்துவிட்டு அம்மிருகம் சென்றுவிட்டது. அறைக்குச் சென்று ‘நாளை இந்நேரத்துக்கு எல்லோரும் அங்கே போகனும்! எனக்கு அது என்ன மிருகம்ன்னு தெரியனும்’ எனச் சொன்னான்.

‘போயிடுவோமே!.. மே!.. மே!’ எனக் குன்மாரி சொல்ல அந்த அறையில் எழுந்த சிரிப்பை அக்காடு எதிரொலித்தது. பொம்மன், அன்று செந்நாய் அடித்துப் போட்ட மானின் கறியைத் தன் அருவாளால் கொஞ்சம் வெட்டி எடுத்து வந்து சமைத்திருந்தான். இது அவ்வப்போது நடக்கும். உடலின் சூட்டை வைத்து அது அப்போது இரையாக்கப் பட்டதா அல்லது பழையதா என்பதை அறியும் திறன் அவனுக்கு உண்டு. அதோடு பயமின்றி அருவாளைத் தூக்கியும் கத்தியும் வேட்டையாடிகளை எப்படியாவது துரத்தியும் விடுவான்.

மறுநாள் மறக்காமல் நால்வரும் அங்கு மறைந்து இருந்தார்கள். அதே நேரத்தில் சரியாய் அம்மிருகம் சோலைக்காட்டில் இருந்து வெளியே வந்தது. ‘அட! கரும்வெருகு’ சட்டெனப் பொம்மன் கிசுகிசுத்தான். இன்றும் அது தக்காளி மட்டும் தின்றுவிட்டுச் சென்றுவிட்டது. நால்வரும் மறைவில் இருந்து வெளியே வந்தார்கள். அதில் மூவர் பொம்மனைப் பார்க்க, ‘இது கூடலூர் பக்கம் பத்து வருடங்களுக்கு முன்பு ஐந்தாறு இருந்தது. அப்புறம் கேரளாவில் இருந்து மருந்துக்கு அது வேணும்ன்னு சொல்லி ஒரு குரூப் எங்க சனங்களுக்குப் பணம் கொடுத்து எல்லாத்தையும் வேட்டையாடிட்டானுங்க. அதுக்கப்புறம் இப்போதான் இங்க இதை நான் பார்க்கிறேன்’ என்றான் பொம்மன்.

‘எதுக்கு மருந்தாம்?’ சிரில்.

‘ஆஸ்த்துமான்னு நினைக்கிறேன்’ பொம்மன்.

‘சரி சரி! இதையெல்லாம் டைரியில ஏத்திடாதீங்க, அப்புறம் நம்ம தலைதான் உருளும்’ குன்மாரி.

‘இது தெரியாதா! கருஞ்சிறுத்தையை எழுதி அல்லல் பட்டது எனக்குதானே தெரியும்’ மாதன்.

அடுத்த இரு மாதங்களில் மாதனுக்கும் சிரிலுக்கும் கரும்வெருகைப் பழக்கப்பட்டுவிட்டது போலத்தான் தெரிந்தது. அது இவர்களைக் கண்டு பயப்படாமல் வருவதும், தின்பதும், போவதுமாய் இருக்கிறது. அவர்களும் அதைக் கண்டவுடன் எதுவும் பேசாது, அசையாது, அது போகும் வரை இருப்பார்கள். இருவரின் ஆர்வம் அப்படி! இதை ஒரு பொழுதுபோக்காய் அவர்கள் வைத்து இருந்தார்கள். அந்த அறையின் பின்புறத்தில் உள்ள சோலைக்காட்டில் சற்றுத் தூரத்தில் ஒரு மரத்தின் மேல் அது வசிப்பதையும், சிறு அணில், சிறு பறவைகள், பறவையின் முட்டைகள், பூச்சிகள் என அது திண்பதையும் கண்டுவிட்டார்கள். இங்கே தயிர் சாதம். பிரெட், வெங்காயம், தக்காளி என இதுவரை சாப்பிட்டுருக்கிறது.

இம்மாதத்தில் முதல் எட்டு நாட்களையுமே அவர்கள் விடுமுறையாக்கி விட்டதால் இரண்டாவது வார இறுதியிலேயே அவர்களுக்கு டல்லடிக்க ஆரம்பித்து விட்டது. மழை வேறு தொடர்ந்து பெய்கிறது. இறைச்சி தின்று ஒரு வாரம் ஆகிவிட்டது. கருவாடும் இல்லை. எதோ வேலை செய்து கொண்டிருக்கிறோம். இன்று பொம்மன் குன்மாரியை மட்டும் கண்காணிப்புக்கு அனுப்பி விட்டு அறையிலேயே தங்கிவிட்டான். சிரிலும் மாதனும் அவர்கள் இடத்துக்குச் செல்ல ஆரம்பித்து விட்டனர்.

அவர்கள் திரும்பி வர மாலை மணி ஐந்தாகிவிட்டது. மழையில் மாட்டியதால் இருவரும் மதிய உணவு உண்ணவில்லை. இருவரும் அவசர அவசரமாய் சூடுதண்ணீரில் உடலை நனைத்து, பின் துவட்டி, கைலிக்கு மாறினார்கள். மின்சார வசதியில்லாததால் பெரும்பாலும் ஏழு மணிக்கெல்லாம் உறங்க சென்றுவிடுவதுண்டு. இரவு உணவு செய்ய நேரம் ஆகும் போது இந்நேரம் சற்று மாறலாம். ‘சமைச்சாச்சு! போய் சாப்பிடுங்க’ குன்மாரி.

‘இன்னைக்குக் குட்டிமான் கறி கிடைச்சுது! உங்க இரண்டு பேருக்கும் இருக்கு பாருங்க!’ பொம்மன்.

நல்ல பசியில் சப்பாத்தியும் இறைச்சியும் போன இடம் தெரியவில்லை.

மறுநாள் சற்று மழை நின்றிருந்தது. சிரிலும் மாதனும் பணி முடித்து மழையால் நேற்றுப் பார்க்க முடியாத கரும்வெருகை இன்று பார்க்கச் சென்றார்கள். அன்று அது வரவில்லை. மறுநாள் மாதத்தின் இறுதிநாள்! அடுத்த மாத முதல் இரண்டு நாட்களைப் பொம்மன் விடுமுறையாக எடுத்துக் கொள்வதாய் முன்பே சொல்லியிருந்ததால் அவன் மாலை வீட்டுக்குக் கிளம்புவதில் ஆயுத்தமானான்.

அவனை வழியனுப்பிவிட்டு சிரிலும் மாதனும் இரவு உணவுக்குக் காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தனர். வெளியில் குன்மாரி வெந்நீர் வைத்துக் கொண்டிருந்தான். இடையில் இருவரும் சென்று கரும்வெருகைப் பார்க்காமல் திரும்பி வந்தனர். ஆறரை மணி வாக்கில் தட்டில் சப்பாத்தியையும் தக்காளிச் சட்டினியையும் வைத்துக் கொண்டு மூவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். இரண்டு மூன்று வாய் சென்றவுடன்,

‘என்னடா ஆச்சு! கரும்வெருகை இரண்டு நாளா காணோம்’ சிரில்.

‘மழைல வெளியே வராம இருந்திருக்குமோ, என்னமோ!’ மாதன்.

இன்னைக்கென்ன மழையா பெய்தது? சிரில்.

குன்மாரி இதில் எந்த ஓர் ஆர்வமும் இன்றிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

‘குன்மாரி நீ எப்போதாவது பார்த்தியா?’ மாதன்.

குன்மாரி உண்பதை நிறுத்தித் தலையை உயர்த்தி ‘முந்தாநாள் கறி நல்லா இருந்துதா!’ என்றான்.

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *