Skip to content
Home » காட்டு வழிதனிலே #11 – சுளுக்கி

காட்டு வழிதனிலே #11 – சுளுக்கி

மலபார் மலை அணில்

திடீரென என் உடல் சற்றே உயர்ந்து இறங்கியது. இறங்கிய நொடியில் வலியை உணரும் முன்பே என் உயிர் பிரிந்தது! மிகத் துல்லியமான தாக்குதல்! சுளுக்கி மார்பூடே நுழைந்து முதுகில் வெளியே வந்திருந்தது. செந்தில் சுளுக்கியைக் கீழ்த் தாழ்த்தி, அதன் நுனியில் இறந்து தொங்கிய என் உடலை உருவி, அருகில் இருந்த வசந்தியின் கைகளில் இருந்த சாக்கினுள்ளே போட்டார். அதன் உள்ளே என்னைப்போல மூன்று உடல்கள். உறைந்தும் உறையாததுமான இரத்தத்தின் வாசனையுடன்.

‘அவ்வளவுதாங்கய்யா! இனித் தோட்டத்தில் ஒரு பிரச்சனையும் வராது’ என்றார் செந்தில்.

சரி! சரி! ஜாக்கிரதை. வனத்துறைக்கிட்ட மாட்டாம பார்த்துக்க எனக் கூறி, சில பத்து ரூபாய் தாள்களைச் செந்திலிடம் தந்தார் அத்தோட்ட காவலாளி. அது புளிய மரங்களால் நிறைந்த ஒருத் தோட்டம்.

அழகர்கோவில் பள்ளத்தாக்கு மேற்கு மலைத்தொடரில் ஒரு அமைதியான இடம். காப்புக் காடுகளும், கோயில் இடங்களும், தனியாருக்குச் சொந்தமான புளிய, மாமரத் தோட்டங்களும் நிறைந்த ஒரு பகுதி. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்குப் பருவக் காற்றால் இப்பகுதி மழையால் நனையும். மற்றபடி வெயில்! வெயில்! ரிபீட்டுதான்!

இப்பள்ளத்தாக்கினூடே மங்கநாதாறு, மழைக் காலத்தில் நீர் நிறைந்த ஆறாகவும் கோடையில் மணலும் பாறைகளுடனும் காட்சியளிக்கும். ஆற்றின் இருமருங்கிலும் நன்கு வளர்ந்த மரங்கள் தங்கள் கவிகைகளுடன் ஒன்றுக்கொன்று தொடர்புற்று ஆற்றுடன் இணைந்து மேற்செல்லும். அந்த ஆற்றின் அருகே ஒரு பெரிய தான்றிமரம் (Terminalia bellerica) தன் கிளைகளைப் பரந்து விரித்துக் கொண்டிருந்தது. அதன் அடர்ந்த கவிகையூடே உச்சியில் ஒரு பந்து போன்று இளம் குச்சிகளாலும் கொடிகளாலும் கூடு ஒன்று புதியவர்களின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.

இதோ என் தாய் எங்கள் இருவரையும் பிரசவித்து விட்டாள். 28 நாட்கள் தாயின் வயிற்றுச் சூட்டில் இருந்து, பின் வெளியில் வந்தவுடன் இக்கூட்டின் இளஞ்சூடு புதிதாய் என்னைப் பற்றியது. அதே நேரத்தில் காற்றும் உடலினூடே செல்ல மெதுவாய் சிணுங்கினேன். என்னுடன் பிறந்தவனும் அதையே செய்தான். எங்களை நன்றாய் அணைத்த என் தாய் ஆசை ஆசையாய் எங்களுக்குப் பாலூட்டி மகிழ்ந்தாள். கண் திறக்காததால் பசிக்கும்பொழுது கத்துவதும், பால் குடிப்பதும், உறங்கவுமாய் தாயின் அரவணைப்புடன் மூன்று வாரங்களைக் கழித்து விட்டோம். கண்கள் திறந்து பார்த்தபொழுதுதான் உலகம் வலது இடதாய் பிரிந்திருப்பது தெரிந்தது.

அதுபற்றிக் கவலையின்றி நாங்கள் கூட்டுக்கு வெளியில் வருவதும், உள்ளே சென்று விளையாடுவதுமாய் இருந்தோம். தாய்ப் பாலைத் தவிர்த்துச் சிறு சிறு பழங்கள், பூக்கள் என உண்ணவும் பழகி விட்டோம். வெப்பம் அதிகமிலா இளம் காலை, மாலை வேளைகளில் உணவு தேடி வெளியில் செல்வதும் நடுநாளின் வெப்பத்தைத் தவிர்க்கக் கூட்டுக்குள் அடைந்து கொள்வதுமாய் இருந்தோம்.

அன்றொரு நாள் நடுநாளின் வெப்பம் காரணமாய் நானும் உடன் பிறந்தவனும் கூட்டில் உறங்கிக் கொண்டிருந்தோம். வெளியில் சென்ற தாய் வரும் நேரம். திடீரென “ச்ஓ..ச்ஓ..ச்ஓ” என அவளின் எச்சரிக்கைக் குரல் அந்தப் பள்ளத்தாக்கு முழுதும் எதிரொலித்தது. நாங்கள் இருவரும் அவசரமாய் கண் விழித்து அபாயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். கூடு ஆட ஆரம்பித்தது! அடுத்தச் சில வினாடிகளில் கூட்டின் உள்ளே ஆங்காங்கே சூரிய வெளிச்சம் கீற்றாய் நுழைய, அவசர அவசரமாய் நான் கூட்டில் மறைவாய் இருக்கும் மற்றொரு திறப்பருகே தயாராய் நின்று கொண்டேன்.

அவனையும் கூப்பிடலாம் என நினைக்கும்பொழுது கருங்கழுகின் (Black Eagle) அலகு ஒன்று கூட்டைக் கிழித்து, சரியாய் அவனைப் பற்றி மேலே இழுத்தது. அலகின் அழுத்தத்தில் அவனின் உடல் கிழிந்து இரத்தம் வர ஆரம்பித்திருந்தது. எனக்கு மூச்சே நின்று விட்டது. வெளியில் என் தாய் இன்னமும் நிறுத்தாமல் கத்திக் கொண்டிருந்தாள். நான் ஆடாது அசையாது அரை மணி நேரம் அப்படியே இருந்தேன். மனஉளைச்சலில், பயத்தில் இதுபோல் நாங்கள் இருப்பது உண்டு. இது அடுத்த இரு நாட்களுக்கு என் உணவின் அளவு, உடலின் சுறுசுறுப்பு, உறக்கம் எனப் பலவற்றையும் பாதிக்கும்.

கூட்டில் அசைவேதும் இல்லை. தாயும் கத்தலை இப்போது நிறுத்தி இருந்தாள். மெதுவாய் தலையைத் திருப்பிப் பார்த்தேன். கூண்டில் ஒரு இரத்தத் துளி ஒரு கொடியில் மேலிருந்து கீழாய் வழிந்து கொண்டிருந்தது. மெதுவாய் அந்த ரகசிய திறப்பு வழியே வெளியே வந்தேன். வேக வேகமாய் சென்று இலைகளூடே என்னை நுழைத்துக் கொண்டேன். அடுத்தச் சில நிமிடங்களில் என் தாய் கூட்டருகே வந்து எங்களைத் தேட ஆரம்பித்தாள். அதோடு எங்களுக்கான சமிங்ஞைகளை எழுப்பவும் ஆரம்பித்து விட்டாள். பயத்தில் இருந்து விடுபடாத நான் என் இருப்பிடத்தைக் காட்டும் குரல் எழுப்ப, முதலில் தயங்கி பின் உலர்ந்த நாக்கை ஈரப்படுத்தி எழுப்பினேன்.

தாய் வேக வேகமாய் என்னை அடைந்து உச்சி முகர்ந்தாள். அவளின் கண்கள் மற்றவனைத் தேடியது. என்ன செய்ய! பரிணாமம் கதை சொல்லும் வித்தையை எங்களுக்கு வழங்கவில்லை. அவசர அவசரமாய் என்னை அழைத்துக் கொண்டு தூரத்தில் இருந்த மற்றொரு பழைய கூட்டில் நுழைந்தாள். நாங்கள் பெரும்பாலும் பழைய கூட்டையே சரி செய்து குட்டிகளை ஈணுவது வழக்கம். கூடு மிகச் சேதமடைந்திருந்தாலும், சக்தி செலவழிப்பில் பெரிதாய் பாதிப்பு இல்லாமல் இருந்தாலும் மட்டும்தான் புதிய கூட்டைக் கட்டுவது வழக்கம். பழைய, புதிய கூடுகள் பெரும்பாலும் அருகருகே உள்ள மரங்களில்தான் இருக்கும். கூட்டில் எளிதில் தெரியுமாறு ஒரு நுழைவாயிலும் எளிதில் அறியாவாறு மற்றொரு நுழைவாயிலும் இருக்கும். அருகே வேட்டையாடிகள் தென்பட்டால் பெரும்பாலும் பின்புறத் திறப்பை உபயோகப் படுத்துவது வழக்கம். அந்தப் பழைய கூட்டில் இன்னமும் பதட்டத்துடன் என் தாயின் இருக்கத்தில் நான்! மூன்று மாதங்கள் அவளுடனே வாழ்ந்து பின் பிரிந்தேன்.

நாங்கள் தனித்து வாழும் பிரிவைச் சேர்ந்தவர்கள். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும் அதிகபட்சமாய் ஒருநாள் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருப்போம். பின் குட்டிகளுடன் தாய் மட்டும் மூன்று மாதங்கள் இருப்பாள். மற்றபடி தனிமைதான்! தாயிடம் இருந்து பிரிந்து வந்து இரு வருடங்களாகிவிட்டது. எனக்கென ஒரு இருப்பிடத்தை அந்தப் பள்ளத்தாக்கிலேயே ஏற்படுத்திக் கொண்டு விட்டேன். அந்த இடம் புளிய மரங்கள் நிறைந்த பகுதி. நிறைய பழங்கள், பூக்கள், மரப் பட்டைகள், இளம் தளிர்கள், இலைக் காம்புகள் எனத் தேவைக்கேற்ப உண்ணுவதை வழக்கப்படுத்திக் கொண்டு விட்டேன்.

சிறிது கரையான் புற்று மண்ணைத் தாது உப்பின் தேவைக்காக உண்ணுவதும் உண்டு. அதுவும் மரத்தில் படர்ந்த கரையான் புற்றில். கீழே இறங்கும் பழக்கமே இல்லை. அதற்கென மரக்கவிகைத் தொடர்ந்து இருக்கும் இடமாய் தேடிப் பிடிக்கிறோம். தொடர்பற்ற இடைவெளிகளைச் சிறு தாவல்கள் மூலம் இணைத்துக் கொள்கிறோம். இன்று எனக்கும் மற்றொருவனுக்கும் இடத் தகராறு. என் இடத்தை ஆக்ரமிக்க வந்தவனுடன் கடுஞ் சண்டை. கிளைகளூடே ஓடி, நின்று, தாவி, உருண்டு பிரண்டோம். என்னைவிட அவன் சற்றுப் பலம் கூடித்தான் இருந்தான். விடாது போராடினேன். திடீரென இருவரும் மரத்திலிருந்து பொத்தெனக் கீழே விழுந்தோம். உடன் எழுந்து மரத்தை நோக்கி அவசர அவசரமாய் நான் தவ்வ ஆரம்பித்தேன். மரத்தின் மேல் ஏறி.. ஏறி..ஏறிக்கொண்டே..போட்ட சண்டை சட்டென ஞாபகத்திற்கு வர கீழே பார்த்தேன். அடக் கொடுமையே! வேட்டை நாய் ஒன்று அவனைக் கவ்வி எலும்பை முறித்துக் கொண்டிருந்தது. நாயிடமும் அவனிடமும் இருந்து தப்பித்ததை நினைத்துப் பெருமூச்சு விட்டவாறே மர உச்சுக்குச் சென்றேன்.

செந்திலும் வசந்தியும் இரண்டு குழந்தைகளுடன் செண்பகத் தோப்புக்கு வந்து சில வருடங்கள்தான் ஆகிறது. அவர்களுடன் சேர்ந்து ஒரு மூன்று குடும்பங்கள் பிழைப்பிற்காய் இங்கு வந்து கட்டட வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்துகிறார்கள். மற்றவர்கள்போல் வேலை செய்தாலும், அவர்கள் சமூகத்தைக் காரணமாய் வைத்து மற்றவர்களுக்குக் கொடுப்பதில் கால்வாசி பணம்தான் இவர்களுக்குத் தருவார்கள். முகம் சுழித்தால் வேலை இராது. எனவே அதைப் பற்றி எதுவும் பேசாது பணியில் இருந்தனர். மிகவும் அவசரமான தேவை இருக்கும் போதுதான் இவர்களை வேலைக்குக் கூப்பிடுவார்கள். மற்ற சமுதாயத்தினர் எப்போதும் இவர்களுடன் வேலை செய்வதை விரும்புவதில்லை.

பெரும்பாலும் எலிகள், அணில்கள்தான் இவர்களின் சாப்பாடு. சில நேரங்களில் எலி பிடிக்கச் சொன்ன தோட்ட முதலாளிகள் எலிகளைப் பிடித்தவுடன் ‘அதான் சாப்பாட்டுக்குக் கிடைச்சாச்சில்ல! அப்புறமென்ன’ எனக் கூலி தராது அனுப்புவதும் உண்டு. அவ்வப்போது அழகர்கோவில் பள்ளத்தாக்குச் சென்று மற்றவர்களுக்காகவும் வீட்டுக்காகவும் தேவையான சுள்ளிகளைப் பொறுக்கி வருவதுண்டு.

செந்தில் அங்கிருந்த பலையர் இன மலைக்குடியினர்களுடன் மனம் விட்டுப் பேசுவதுண்டு. அவர்களில் மாசி என்பவரிடம் செந்தில் விரைவில் நெருக்கமானார். அப்படியொரு நாள் மரம் வெட்டும்பொழுதுதான் செந்தில் அந்த அணிலைப் பார்த்தார். ‘இவ்வளவு பெரிதாய் அணிலா!’ என வியந்து கொண்டே அதைப் பற்றி மலைக்குடியினரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அந்த அணிலுக்காக இந்திய அரசாங்கம் இந்த இடத்தை விரைவில் சரணாலயாமாக மாற்ற போகிறார்களாம்ன்னு மாசி சொன்னதைக் கேட்டு இன்னமும் அதன் மீது அலாதிப் பிரியம் வர, எப்போதெல்லாம் காட்டுக்குள் போகும் சூழல் வருகிறதோ அப்போதெல்லாம் அதைப் பார்க்க முயல்வது அவரின் வழக்கமாயிற்று.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் வசந்தியிடம் அவ்வணிலைப் பற்றிப் பேசுவதும் உண்டு. எதேச்சையாய் ஒருநாள் செந்திலை அவர் வீட்டருகே சந்தித்த மாசி ‘என்ன செந்தில்! நம்ம எசமான் ஒருத்தரு தோட்டத்தில் அணில் தொந்திரவு தருதான். அவருகிட்ட உடனே உன்னபத்திச் சொல்லிட்டேன், என்ன போலாமா?’ என்றார்.

‘காசு தருவாங்களா!’ செந்தில்.

‘அட வாம்யா! அதில்லாமலா!’ என அழைத்துக்கொண்டு மாசி நடக்க ஆரம்பித்தார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த வசந்தி ஒரு சாக்குப் பையையும் சுளுக்கியையும் எடுத்துக் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தாள். இக்காட்டுக்கு அவள் வந்ததில்லை. இரண்டு மணி நேர நடையில் அவர்கள் அழகர்கோவில் பள்ளத்தாக்கில் அந்தப் புளியந்தோப்பில்!

செந்திலுக்கு எதோ தவறாகப் பட்டது. அப்போது அங்கு வந்த ஜீப் அவர்களைக் கண்டு நின்றது. மாசி அவசர அவசரமாய் ஜீப்பில் இருந்தவரிடம் ஏதோ பேசிவிட்டு திரும்பினார். ஜீப் சென்றுவிட்டது. ‘எசமான்தான்! காவலாளிட்ட சொல்லிட்டாராமா’ என்றவாறே மாசி நடக்க ஆரம்பித்தார். சிறிது தூர நடையில் தோப்பின் வாயில் வந்தது. ‘என்ன மாசி! ரொம்ப நாளா ஆளக் காணோம்!’ என்றவாறே கையில் பிடித்திருந்த வேட்டை நாய்களுடன் அந்தக் கம்பிக் கதவைத் திறந்து அவர்களை அந்தக் காவலாளி உள்ளே விட்டார்.

இரு நாய்களும் குலைக்காமல் அவர்களையே கூர்மையாய் பார்த்துக் கொண்டிருந்தன. ‘இங்கதாம்ல பிடிக்கனும்’ என்று கூறிவிட்டு விடைபெற்றார் மாசி. செந்தில் சுற்றும் முற்றும் பார்த்தார். தெரிந்து விட்டது! அவர் கூட்டியாந்தது பெரிய அணிலைப் பிடிக்கவா! சில நிமிடங்கள் செந்தில் அப்படியே மௌனமாய் நின்றார்.

’அட இது அவரு இடம்’. ’நீ எது செஞ்சாலும் யாரும் கேக்க மாட்டாங்க, பயப்பட வேணாம்’ என்றார் காவலாளி. எதுவும் பேசாது அடுத்த இரண்டு மணி நேரத் தேடலில் என்னையும் சேர்த்து நான்கு பேரைச் சுளுக்கியில் கொன்று சாக்கில் எடுத்துக் கொண்டு ‘அவ்வளவுதாங்கய்யா! இனித் தோட்டத்தில் ஒரு பிரச்சனையும் வராது’ என்றார் செந்தில்.சரி! சரி! ஜாக்கிரதை, அவங்க கிட்ட மாட்டாம பார்த்துக்க எனக் கூறி சில நூறு ரூபாய் தாள்களைச் செந்திலிடம் தந்தார் அத்தோட்ட காவலாளி. வாங்கிக் கொண்டு தோட்டத்துக்கு வெளியே வந்தார்கள் இருவரும்.

‘என்னங்க’ என வசந்தி!

செந்தில் அவள் பக்கம் திரும்பி ‘அதுதான் காசு இருக்கில்ல’ என்றவாறே அவ்வணில்களைப் புதைக்க இடம் தேடினார்.

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *