Skip to content
Home » காட்டு வழிதனிலே #13 – சத்துணவுக்கூடம்

காட்டு வழிதனிலே #13 – சத்துணவுக்கூடம்

Lion-tailed macaque

வால்பாறையில் அரசுப் பள்ளியின் தலைமை அசிரியர் ஒருவர் அவருடன் வந்த நகராட்சி அதிகாரிகளுக்குப் பள்ளியின் ஒவ்வொரு அறையையும், பள்ளிக் காவலாளியின் உதவியுடன் திறந்து காண்பித்துக் கொண்டு வந்தார். வரும் நகராட்சித் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளில் இப்பள்ளியும் ஒன்று. அதில் உள்ள அறைகளையும், வசதிகளையும் பற்றி அறிக்கை அளிக்கத்தான் இந்த முன்னோட்டம்.

கொரோனாப் பெருந்தொற்று ஊரடங்கினால் ஐந்து மாதங்களாய் அந்தப் பள்ளி திறக்கப்படவில்லை. இன்றுதான் தலைமை ஆசிரியருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் உதவியுடன் சரி பார்க்கப்படுகிறது. இறுதியாய்ச் சத்துணவுச் சமையல்கூடம்!

பள்ளியின் காவலாளி அக்கதவைத் திறந்தவுடன் குப்பென துர்நாற்றம் வீசியது. ஏற்கெனவே கொரோனாவுக்கான முகக் கவசத்துடன் இருந்த அனைவரும் சற்றுத் தடுமாறித்தான் போனார்கள். அவசரமாய் உள்ளே சென்ற வேகத்தில் திரும்ப வந்த காவலாளி ‘சார்! ஒரு குழந்தையோட எலும்புக்கூடு!’ எனப் பதற, அதற்கு மேல் உள்ளே போக யாருக்கும் துணிச்சல் இல்லாமல் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அரைமணி நேரத்தில் காவல்துறை அதிகாரிகள் வந்து, அறையின் உள்ளே சென்று பார்த்து, சிறிது நேரத்திலேயே வெளியே வந்து ‘குழந்தை இல்லை! குரங்குபோல் தெரிகிறது. வனத்துறைக்குச் சொல்லியிருக்கிறோம்! அவங்க வரட்டும், பார்ப்போம்’ எனச் சொல்ல, வனத்துறையினருக்காக எல்லோரும் காத்திருந்தனர்.

இப்பகுதியில் அழிந்து வரும் சிங்கவால் குரங்கும் இருப்பதால் காவல்துறை இதைச் சற்றுக் கவனத்துடன்தான் கையாள வேண்டிய அவசியம் இருந்தது. ஏனெனில் அதை வேட்டையாடுவது குற்றம். இயற்கையான மரணம் அன்றி வேறு ஏதாகிலும் இருப்பின் அது சூழல் ஆர்வலர்கள் இடையில் கசப்பை விதைக்கும். வனத்துறையும் அதற்குப் பதிலளிக்க வேண்டும்.

சிறிது நேரத்தில் வந்த காட்டிலாக்கா அதிகாரிகளும் கால்நடை மருத்துவரும் உள்ளே சென்று சிறிது நேரத்தில் திரும்பி வந்தனர். அதற்குள் செய்தியாளர்கள் அங்குக் கூடிவிட்டனர். வேறு வழியின்றி அம்மருத்துவர் ‘இறந்து கிடப்பது சிங்கவால் குரங்குதான். ஆகவே முறைப்படி விசாரணை நடக்கும்’ எனக் கூறியவுடன் ‘தப்பித்தோம்’ என நினைத்த காவல்துறை, அங்கிருந்த கூட்டத்தைக் கலைத்துவிட்டுக் கிளம்பியது. கால்நடை மருத்துவர் அங்குக் கிடந்த எலும்புத் துண்டுகள், முடிகள் என அது சார்ந்த அனைத்தையும் ஒரு அட்டைப் பெட்டியில் சேகரித்துக் கொண்டார். காட்டிலாக்கா அதிகாரிகள், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தொடங்கி காவலாளி வரை விசாரித்து முடிவில் உணவிற்காக உள்ளே நுழைந்த சிங்கவால் குரங்கு, அறையைவிட்டு வெளியேற வாய்ப்பில்லாமல் இறந்திருக்கலாம் எனவும், பள்ளி கடந்த ஐந்து மாதங்களாய் மூடப்பட்டிருப்பதால் எலும்பைத் தவிர மீதமனைத்தும் அழுகிவிட்டிருக்கலாம் எனவும் முடிவுக்கு வந்தனர்.

புதுத்தோட்டம், வால்பாறையில் மழைக்காடுகளைக் கொண்ட ஒரு பகுதி. மழைக்காடுகள் மற்ற காடுகள் போன்றதல்ல. அம்மரங்களின் அடர்ந்த கவிகை சூரிய ஒளியைக் கிழே விடாது. அதனால் சிறு குறுஞ் செடிகள் அற்றதாய் கிழ்ப்பரப்பு காணப்படும். அம்மரங்களில் இருந்து உதிர்ந்த இலைகள் கீழே அடுக்குகளாய் அமைந்து அதனுள்ளே பல உயிரினங்களுக்கு நுண் வாழிடங்களாய் அமையும். இயற்கை அமைத்த ஒரு நளிர் அரங்கு இது.

நெடு நெடுவென வளர்ந்த மரங்களைத் தாங்குவதற்குக் கீழ்பாகத்தில் திசைக்கொன்றாய் வேர்முட்டுகள் (buttress), அதுவே ஆளுயுரம்தாண்டி, இருக்கும். இலைகள் பச்சை, காய்ந்த, கருகிய, நரம்புமட்டுமே எனப் பல வகைகளில், சில மரங்களில் பல நிறங்களில் கூட, ஆனால் அனைத்தும் ஈரவாசனையுடன் இருக்கும். மழைக்காடுகளுக்கேயான தனி மூலிகை வாசனையுடன் தான்!

அட்டைகள் தனக்கு உணவு தரும் உயிர் தேடி பக்கவாட்டில் அசைந்து கொண்டிருக்கும். அழகிய வண்ணங்களில் குழிவிரியன்கள் மரக்கிளைகளிலும் பாறைகளுக்கு இடையிலும் சுருண்டு படுத்திருக்கும். வித விதமான வண்ணங்களில் பறவைகள் இருந்தாலும் அவற்றைப் பார்க்க முடியாமல் அடர்ந்த இலைகள் மறைக்க, அவை எழுப்பும் சப்தங்கள் மட்டும் அவற்றின் இருப்பைச் சொல்லும். சில்வண்டு ஒன்று தனது டிம்பள்ஸ் தசைகளை இழுத்தும் தள்ளியும் எழுப்பும் சப்தம், ஒவ்வொரு சில்வண்டுகளுக்குமாய் பரவி, பின் அப்பகுதியில் உள்ள அனைத்துக்குமாய் மாறி, பட்டென நிற்கும். ஒரு ஹெலிகாப்டர் திடீரென நம் தலைமேல் பறந்து, கடந்தால் வரும் ஒலியைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்! அவ்வளவுதான்!

இடையிடையே வேட்டையாடிகளின் நடமாட்டத்தைத் தன் இனத்தவருக்கு உணர்த்த மான், பெரு அணில், குரங்குகள் எழுப்பும் ஒலிகள் ஒருப்பக்கம், ‘இணைக்கு நான் தயார், அப்ப நீங்க’ என மான், தேவாங்கு, புலி எழுப்பும் ஒலிகள் ஒரு பக்கம், மரக்கிளைகளை ஒடிக்கும் யானைகளின் ஒலிகள் ஒரு பக்கம், மரத்தில் பொந்து செய்ய மரங்கொத்தியின் டட்டட்டட் ஒலிகள் ஒரு பக்கம், குக்குருவானின் டொட்ரு டொட்ரு ஒலி ஒரு பக்கம்.. ரொம்ப சப்தமாயிருக்குமோன்னு நினைக்க வேண்டாம்! அது அது அவ்வப்போது ஒலி எழுப்பும்! எப்போதுமல்ல! உங்களுக்கு c4, c5, c6யில் வலியை வரவழைக்கும் வெவ்வெறு உயர வகுப்புகளில் மரங்கள். குறைந்தது நான்கு அடுக்களால் ஆனது. பென்ஹர் படம் போன்ற இயற்கையின் பிரமாண்டம் அது. ஆனால் நல்ல மழையில் அது ஒரு நரகம். எங்கும் இருளாய், மிகுந்த சப்தத்துடன்… மழைத்துளிகள் அனைத்தும் இலைகளில் படுவதால் உருவாகும் சப்தம். மழையற்ற நேரங்களில் மழைக்காட்டின் அழகே தனி. இரவில் ‘டிக் டிக்’ தவளை ஒலியும், ஆந்தைகளின் அலறல் (வகை வகையாய் ஆந்தைகள்! வகைவகையாய் ஒலிகள்! அலறல் என ஒரே வார்த்தையில் சொல்லலாமா! கொஞ்சம் மாற்றலாமே!).

ஒரு காலத்தில் மழைக்காடுகளாயும் புல்வெளிகளாயும் இருந்த வால்பாறை, கிழக்கு இந்தியக் கம்பெனியின் வருகைக்குப் பின் காபி, தேயிலை, யூக்காலிப்டஸ் தோட்டங்களுக்காகவும், மனித குடியிருப்புகளுக்காவும், சாலைகளுக்காவும், அணைகளுக்காகவும் துண்டாடப்பட, பின் அவர்களின் பணியைச் சுதந்திரம் பெற்றபின் நம் அரசியல்வாதிகள் செவ்வனே தொடர, இன்று மழைக்காடுகள் தீவுகள் போன்று வால்பாறை மலைப் பகுதியில் ஒன்றுக்கொன்று தொடர்பற்று இங்கொன்றும் அங்கொன்றுமாய் காணப்படுகிறன. இதன் விளைவால் அதில் வாழும் மிருகங்கள் இடப் பற்றாக்குறையாலும், உணவுப் பற்றாக்குறையாலும், இணைப் பற்றாக்குறையாலும் இவ்விடம் விட்டு வெளியேறி மனிதர் வாழும் பகுதிகளுக்குச் செல்ல, அங்கு மனித-விலங்கு மோதல் உருவாகிறது.

அது கிடக்கட்டும் விடுங்க! இந்த மழைக்காட்டின் 50 மீ உயரத்தில் மரத்தின் ஒரு கிளையில் என் தாயின் மார்பில் பால் குடித்துக் கொண்டிருக்கிறேன். அது காட்டுத்துரியன் (Cullenia exarillata) மரம். அம்மரத்தின் பரந்த கிளைகளில் மூன்று ஆண்களும், ஏழு பெண்களும் கொண்ட எம் குடும்பம் உணவு தேடிக் கொண்டிருக்கின்றன. ஒரு ஆறு மாதச் சுமையை இறக்கி வைத்த சந்தோசத்தில் என் தாய், தான் உணவு உண்ணுவதைச் சற்று நிறுத்தி எனக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தாள். கீழிருந்து மேல் பார்ப்பதைவிட மேலிருந்து கீழ் பார்ப்பது தன்னம்பிக்கையை நன்கு வளர்க்கும்போல! நான் அப்படித்தான் வளர்கிறேன். கீழே நடந்து போகும் புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமைகள், மான்கள் யானைகளைப் பார்க்கும்போது எனக்கு என்னை நினைத்துப் பெருமையாய் இருக்கும். இதற்காகவே உச்சக் கிளையில் தாயுடன் இருக்கும் நேரங்களில் கண் சிமிட்டாமல் கீழே பார்ப்பதுண்டு.

கீழே இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை. பழங்கள், பூச்சிகள், இளம் தளிர்கள் என எல்லாமே மர உச்சியிலேயே கிடைக்கிறது. காட்டுத்துரியன் பூக்களில் தேன் அளவு குறைவாய் இருப்பினும் தடித்த அதன் பூவிதழ்கள் தின்பதற்கு நன்றாய் இருக்கும். அதுமட்டுமன்றி இது மற்ற மர இனங்கள் பூக்காலம் முடித்திருக்கும் காலத்தில் பூ வைக்கத் தொடங்குவதால் எங்களின் தவிர்க்க முடியா உணவாய் மாறிவிட்டது. அதேப் போல் நாவலும், ஆல் வகை மரப் பழங்களும்தான்! எங்கள் குடும்பம் ஒரு மூத்த ஆணின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவன்தான் எங்களை வழி நடத்துபவனாய் இருக்கிறான் (என் தந்தையாகவும்!). அவனுக்குத்தான் எதிலும் முதல் உரிமை. இக்குழுவில் யாருடனும் அவன் இணையலாம். பெண்ணுக்கு உரிமையில்லை. உயிரோடு அவனிருக்கும் வரை அவன் விருப்பம்தான். மற்ற ஆண்கள் நிலை அவன் போடும் பிச்சை. கீழ் நிலையில் (தலைவனால் ஒதுக்கப்படும் பெண்கள்) உள்ள பெண்களுடன் வேண்டுமானால் அவர்கள் இணையலாம். இதோடு அனைவரும் அவனுக்கு ஒட்டுண்ணி நீக்கலைச் செய்வது அறிவிக்கப்படா உத்தரவு. இது குழுவினருக்கு அவ்வப்போது தலைமையை உணர்த்துவதற்காய்! இருப்பினும் எங்களில் மற்ற குரங்கினங்களில் நடப்பதுபோல் அதிக நேரம் இதற்காகச் செலவிடப்படுவதில்லை.

நாங்கள் விதைப் பரவலுக்கு முக்கியமான ஒரு காரணியாகவும் இருக்கிறோம். எங்கள் கன்னக் கதுப்பில் அவசர அவசரமாய் பழங்களை அடக்கிக் கொண்டு அவ்விடம் விட்டு விலகி பாதுகாப்பான இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கு உண்டு பின் கழிவை வெளியேற்றுவதன் மூலம் விதைகள் எளிதாய் இடம் பெயர்கின்றன. காற்றில் இடம் பெயரும் வாய்ப்பற்ற பல இன மரவிதைகள் எங்களின் செயல்களால் பயனடைகின்றன. மனிதனால் ஒரு பக்கத்தில் மழைக்காடுகள் அழிக்கப்பட்டு வரும் காலகட்டத்தில் எங்களின் விதைப்பரவல் செயல், மழைக்காடுகளுக்கு ஒரு உயிர்நீர்!

மலம்பின்னையின் (Elaeocarpus tuberculates) மலர்கள், பழங்கள், இலைகள், பால்வடிந்தானின் (Palaquium ellipticum) மலர்களும் பழங்களும், காபியின் பழங்கள், இலைகள், பலாவின் (Artocarpus heterophyllus) பழங்கள் ஆகியவையும் எங்களுக்கு விருப்பமான உணவுகளாய் இருக்கிறது. இதனுடன் காளான், சிறு பூச்சிகள், கவிகையில் வாழும் சில தவளைகளையும் உணவாய் உட்கொள்வதும் உண்டு.

ஏழு வருடங்களைக் கடந்த இன்று நான் ஆணுக்குரிய வேதியியல் மாற்றங்களை என் உடலில் உணர்ந்தேன். எங்கள் இனப் பெண், நான்கு அல்லது ஐந்து வருடங்களில் இனப்பெருக்கத்துக்குத் தயாராகி விடுவாள். இருப்பினும் எம் தலைவனைத் தாண்டி நான் எதுவும் செய்ய முடியாது. அவனின் கீழ் உள்ள பெண்களுடன் அவனிருக்கும் வரை வாய்ப்பு அரிதுதான்.

எம் கூட்டத்தை அதிசயமாய் ஒரு சாலையைத் தாண்டி மறுபக்கம் கூட்டிச் சென்றான் என் தலைவன். உணவுத் தேடலில் புதிய இடத்தில் நுழைவது எப்படித் தவிர்க்க முடியாதோ, அதேப்போல் அவ்விட ஆபத்துகளையும் தவிர்க்க முடியாது. இவ்விடம் எப்படியோ என நினைத்துக் கொண்டே பின் தொடர்ந்தேன். சாலை கவிகைத் தொடர்பைத் துண்டித்திருந்ததால் மரம் விட்டு கீழிறங்கிச் சாலையை நடந்து கடந்து மறுபுறம் மீண்டும் மர உச்சியை நோக்கி! முதல் முறையானதால் பயம்தான் அதிகம் இருந்தது. நாளாக நாளாக இது பழகி விட்டது. மனிதர்களைக் கண்டால் இப்போது பயமில்லை. சாலையில் அவர்களின் வாகனம் பெரும்பாலும் எங்களுக்கு வழி விட்டது, அரிதாய் எங்கள் மேலும் விடப்பட்டது. எங்கள் மேல் பரிதாபமோ, ஆசையோ எதோ ஒன்றை வைத்து மனிதர்கள் தூக்கி எறியும் உணவுகள் ஆரம்பத்தில் ஒதுக்கப்பட்டு இன்று எங்களின் உணவுகளாய் மாற்றப்பட்டும் விட்டது. சாலையைக் கடக்கும்போது நின்று அவர்கள் தருவதை வாங்கிச் செல்லும் அளவுக்கு எங்களில் சிலர் மாற்றப்பட்டனர்.

‘கீகுயும் கீகுயும்’ என என் தலைவன் கத்தியவுடன் பட்டெனப் பதுங்கி அவன் பார்க்குமிடம் நோக்கினேன். ஒரு சிறுத்தை பசியுடன் வந்து கொண்டிருந்தது. தலைவன் கத்திக் கொண்டே தான் நிற்கும் கிளையை மேலும் கீழூம் ஆட்ட ஆரம்பித்தான். நாங்கள் அனைவரும் அமைதியாய் அதைக் கவனித்துக் கொண்டிருந்தோம். நல்ல வேளையாய் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. சிறுத்தை அவ்விடத்தை கடந்திருந்தது. இது அவனின் முக்கிய பணி. எங்களைப் பாதுகாப்பது. நாங்கள் எங்களிடையே பத்துக்கும் அதிகமான விதத்தில் ஒலி எழுப்பி எங்களிடையே தகவல்களைப் பரிமாறிக் கொள்வோம். அதோடு உடற்சார் மொழிகளும் உண்டு. பருவக் காலங்களில் பெண் உடல் வெளியேற்றும் வாசனைகளும் ஒரு தகவல் பரிமாற்றம்தான். பெண் பருவத்திற்குத் தயாராகும்போது அதன் வாலின் பின்பாகம் வீங்கி காணப்படும். அப்போது அது ஒலி எழுப்பி தன் இச்சையை அறிவிக்கும்.

இன்று அதிகாலையிலே எழுந்து விட்டேன். தூரத்தில் திருவாங்கூர் பறக்கும் அணில் ஒன்று தன் இரவுப் பணியை முடித்து விட்டு வானில் மிதந்து வந்து ஒரு மரத்தில் பற்றி மெதுவாய் மேலே ஏறி தன் பொந்துக்குள் சென்று அடைந்தது. அதைப் பார்த்துக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தேன். என் தலைவன் இருக்கும் இடம் காலியாக இருந்தது. ஆச்சர்யமாய் இருந்தது. தேட ஆரம்பித்தேன்! அன்று முழுதும் அவனைப் பார்க்கவே இல்லை. அவனுக்கு என்ன நடந்திருக்கும் என்று யூகிக்கக்கூட என்னால் இயலவில்லை. அடுத்த சில நாட்களில் என் இளமையும் பலமும் எளிதாய் என்னை இக்குழுவிற்குத் தலைவனாக்கியது. தலைவனாகவே ஒரு பத்து வருடத்தை ஓட்டி விட்டேன். என் கீழே இருந்த நான்கு ஆண்கள் என் பதவிக்குக் குறி வைப்பது நன்றாய் தெரிகிறது. எந்த நேரத்திலும் எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆம்! நடந்தே விட்டது. அதில் ஒருவனால் பலமாய்த் தாக்கப்பட்டு, கூட்டத்தில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் எனப் பிரிந்து சாலையோரம் ஒதுங்கிவிட்டேன். சாலையோர மரம் ஒன்றில் இருப்பதும் கீழிறங்கிச் சிந்திய அல்லது தூக்கிப் போடும் உணவுப் பொருட்களை தின்பதுமாய் சில நாட்களை ஓட்டிவிட்டேன்.

இந்நிலையில்தான் கொரோனாப் பெருந்தொற்று ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உணவு தேட காட்டின் உள்ளே சென்றால் அவர்களால் மீண்டும் விரட்டப்படவோ, கொல்லப்படுவதோ உறுதி என்பது அறிந்து நகரின் உள்ளே செல்லத் துணிந்தேன். நுழைவதில் பெரிதாய் சிரமம் இல்லை. மனித நடமாட்டமே இல்லாததால் எங்கும் என்னால் போக முடிந்தது. ஆனால் அதனால் பயனொன்றும் இல்லை. உணவு கிடைத்தபாடில்லை. அப்போது ஒரு வீட்டின் மேல் இருந்த ஜன்னல் ஒன்றில் நாட்டுக் குரங்கொன்று என்னைப் பார்த்துப் பல்லைக் காண்பித்து, பின் ஜன்னல் அருகிலிந்த கிளை வழியே வேறு இடம் போனது. என்ன செய்வது என்பது அறியாமல் பசி காரணமாய் அம்மரத்தில் ஏறி அக்கிளையில் சென்று அமர்ந்தேன். ஏதேச்சையாய் அந்த ஜன்னல் வழியே உள்ளேப் பார்க்க, காய்கறிகளும் உணவுப் பொருட்களுமாய் இருந்தது. அது ஒரு சத்துணவுக்கூடம். கொரோனா ஊரடங்குப் பயத்தால் பொருட்களுடனே மூடப்பட்டிருக்கிறது. உடன் ஜன்னலுக்குத் தாவினேன். உள்ளே உடலை நுழைப்பது எளிதாகவே இருந்தது. ஆனால் கீழே இறங்க வழியின்றி குதிக்க வேண்டியாதாக இருந்தது. கீழே குதித்து சில காய்கறிகளையும் மாவுப் பொருட்களையும் தின்று விட்டு வெளியேறலாம் என நினைக்கும்போதுதான் ஜன்னலின் உயரம் எம்பிக் குதித்தாலும் எட்டா உயரத்தில் இருப்பது தெரிந்தது!

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *