Skip to content
Home » காட்டு வழிதனிலே #14 – ஆழிப்பேரலை

காட்டு வழிதனிலே #14 – ஆழிப்பேரலை

Otter

அந்தக் கம்பியை விரல்களால் மெதுவாய் உருட்ட உருட்ட அந்த எலியின் உடற்பாகங்கள் முழுமைக்கும் நெருப்பின் சூடு சமமாய் பரவியது. அவ்விடமே கருகல் வாசம் மனதை அள்ளியது. சிறிது நேரம் சுட்டு, பின் அதைக் கம்பியில் இருந்து உருவி, கீழே செய்தித்தாளில் முன்பே வைக்கப்பட்டிருந்த இரு சுட்ட எலிகளுடன் சேர்த்து விட்டு ‘காமாட்சி! காமாட்சி!’ என மனைவியை அழைத்தேன். அவள் குடிசையில் இருந்து கைகளில் இரண்டு குவளைகளுடனும், சில மிளகாய்களுடனும் வர இருவரும் இரவு உணவை உண்ண ஆரம்பித்தோம். கஞ்சி, சுட்ட எலி, மிளகாய் இதுதான் அவை.

கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல உணவு உண்ணும் அளவுக்கு வேலை செய்து சம்பாதிக்கப் பழகிவிட்டோம். இருப்பினும் எலியைத் தேடித் தின்னும் அளவுக்கு அது எங்களுடன் இணைந்த ஒன்றாகி விட்டது. அது எங்களின் வாழ்வியலை ஞாபகப்படுத்த உதவுகிறது. பழகிவிட்டோம்! இந்தக் கிள்ளை கிராமத்துக்கு வந்த பின் மீன்கள் எங்களுக்கு நன்றாய் கிடைக்கிறது. கடற்காற்றின் குளிரிலும் அருகே இருந்த வெள்ளாற்றின் சலசலப்பிலும் நாங்கள் இருவரும் ஒரு மிடறு கஞ்சியும், ஒரு கடி எலியும், மிளகாயுமாய் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தோம்.

நாங்கள் இருளர் பிரிவைச் சேர்ந்தவர்கள். தம்பதிகளாகி எட்டு வருடங்கள் ஆனாலும் குழந்தை எதும் இல்லை. ‘ஏன் இல்லை’ எனக் குத்திக்காட்ட ஓர் உறவினரும் அருகில் இல்லை. எட்டு வருடங்கள் முன்பு புலிகேட்டில் இருந்து இருவரும் உறவினர்களை விட்டு விட்டு இங்குப் பிழைப்புக்காக வந்துவிட்டோம். எங்களினத்தவர் இப்படிப் பிரிந்து அந்தந்த இடத்தில் அப்படியே வாழ ஆரம்பித்து விடுவது வாடிக்கை. பழையவர்களுடனான தொடர்பும் பெரிதாய் வைத்துக் கொள்ளும் பழக்கமும் இல்லை. அதற்குப் பதில் புது இடத்தில் உள்ள எங்களினத்தவருடன் உறவு உருவாகுவது வழக்கம். அதைத் தான் நாங்களும் செய்தோம்.

இங்குள்ள எம்.ஜி.ஆர் நகரில் இருப்பவர்களுடன்தான் இப்பொழுது எங்களுக்கு உறவு. எங்கள் இனத்தவர்களுக்காக முன்னாள் முதல்வர் இடமும் வீடும் தந்ததால் அவர் பெயரிலே அவ்விடம் அழைக்கப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்க, படகு ஓட்டப் பழகி பணம் சம்பாதிக்க ஆரம்பித்தாகி விட்டது. ஆனாலும் அன்றாடம் உண்ண மட்டுமே அப்பணம் போதுமானதாக இருக்கும். என் குடிசை வெள்ளாறும் கடலும் சேரும் இடத்திற்கு அருகில் உள்ளது. சுவரென்று ஒன்று இல்லாது வெறும் பனை ஒலைகளாலும் மூங்கில் கழிகளாலும் ஆனதுதான் என் குடிசை. ஒரு டிரங்க் பெட்டியில் எங்கள் பொருட்களை எல்லாம் வைத்து விட முடியும். யாரும் இதுவரை எதுவும் சொன்னதில்லை. ஊருக்கு ஒதுங்கி இருப்பது அதற்குக் காரணம்.

பெருமழை வந்தால் நானும் காமாட்சியும் சற்றுத் தொலைவில் உள்ள மாதாக் கோவிலிலோ, அதன் அருகில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திலோ தஞ்சமடைவோம். மழை நின்றவுடன் மீண்டும் திரும்பி விடுவோம். உள்ளூர் மீனவர்களுடன் நன்றாய் இணைந்து வாழ்க்கையை மாற்றிக் கொண்டிருந்தோம். எங்களுக்கு அரசுசாரா நிறுவனம் ஒன்றும், அரசாங்கமும் ஓரளவுக்கு உதவிகள் செய்தன. எல்லாம் நன்றாய் போய்க் கொண்டிருந்த நேரத்தில் ஆந்திராவில் இருந்து அலையாத்திக் காடுகளின் மண்ணில் உள்ள சிகப்புப் புழு (polychaet) கொடுத்தால் பணம் தருவோம் என ஒரு நிறுவனம் எங்களிடம் கூற அதிலிருந்து ஆரம்பித்தது சிக்கல்.

நாங்கள் அதை எடுக்க, மீனவர்கள் அதை எதிர்க்க இப்போது வாழ்க்கை சற்றுச் சிரமமாகத்தான் செல்கிறது. அப்புழுக்களுக்காக நாங்கள் தோண்டும் குழிகளும், எடுக்கும் புழுக்களும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாய் அவர்கள் உறுதியாய் நம்பியதன் விளைவு அவர்களுடனான எங்கள் தொடர்பு சிதைந்துதான் போனது. இப்பொழுதெல்லாம் மீனவ நண்பர்கள் சில இடங்களில் எங்களை அடித்துக் கூட துரத்துவதும் உண்டு. இருப்பினும் நாங்கள் போய் நின்றால் உணவிற்காக மீன்களை அவர்கள் தருவது மட்டும் நிறுத்தப்படவில்லை. அந்தக் கடல் உப்புப் படிந்த உடல் முழுதும் மனிதம் கடல் போல் வியாபித்திருந்தது.

ஆறேழு மாதங்களாய் நானும் காமாட்சியும் ஒரு மணி நேரத்தை ஆற்றங்கரையில் செலவழிப்பதை வழக்கமாக்கிக் கொண்டோம். அந்நேரங்களில் குழந்தையின்மை ஒரு விவாதப் பொருளாகி விடும். ஆனாலும் இதுவரை ஒருவருக்கொருவரைக் காயப்படுத்தியது இல்லை. அப்படி ஒரு நாள் ஆற்றில் நல்ல நீரோடிக் கொண்டிருந்த வேலையில்தான் அவற்றைப் பார்த்தோம். நீர்நாய்கள்! இரண்டு நீர் நாய்கள் மிக நேர்த்தியாக நீரில் விளையாடிக் கொண்டிருந்தன.

நீரில் முங்கி மீனைப் பிடிப்பதும், அதைக் கடித்து உண்ணுவதுமாய் அந்த இடமே மகிழ்ச்சிகரமாய் காட்சியளித்தது. அன்றிலிருந்து அவைகளைப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டோம். எங்களுக்குக் குழந்தை இல்லாத நிலைகூட அதற்குக் காரணமாக இருக்கலாம். காமாட்சிக்கு அவற்றைப் பிடித்திருந்தது. குறிப்பாக அவை குழந்தைகள்போல விளையாடுவது! ஆரம்பத்தில் எங்களைப் பார்த்துப் பயந்து நீருக்குள்ளும் அருகில் உள்ள புதற்குள்ளும் பதுங்கியவை நாளாக நாளாக எங்களின் இருப்பை அனுமதிக்க ஆரம்பித்து விட்டன. இப்போதெல்லாம் எங்கள் முன்பே அவை இயல்பாய் தங்கள் வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டன.

அந்த ஆற்றங்கரையின் ஓரத்தில் உள்ள ஒரு சிறிய பொந்தில்தான் அவை வசிக்கின்றன என்பதை ஒரு முறை கண்டும் விட்டேன். அதைக் காமாட்சிக்கு ஆசையாய் காட்டியும் விட்டேன். இப்படியே சில நாட்கள் ஓட, ஒரு நாள் அந்தப் பெண் நீர்நாயின் உடலில் மாற்றம் தெரிவதைக் காமாட்சி கண்டுபிடித்து விட்டாள்! ‘என்னங்க அது கருவுற்று இருக்குங்க!’ என்றாள். அவளின் முகத்தில் பழைய புத்துணர்ச்சியைப் பார்த்தேன். திருமணமான புதிதில் பார்த்தது. அதுவும் நாகராசன் என்ற என் பெயரைத் தன் கையில் பச்சைக் குத்தி அதை என்னிடம் காட்டும் போது! அதன் பின் இன்றுதான் பார்க்கிறேன்.

ஏதேதோ சொல்கிறாள்! நான் அவள் முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்கிறேன். என் கண்ணில் நீர் திரள ஆரம்பித்தது. தலையைத் திருப்பி அதை மறைத்துப் பின் பழைய நிலைக்கு வந்தேன். காமாட்சியோ இன்னமும் அதே உற்சாகத்தில்! எனக்கு இது நிரந்தரமாக இருக்க வேண்டும் என ஆசைப் பட்டேன். எறத்தாழ இரண்டு மாதங்கள் நாள் தவறாமல் அவற்றைப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டோம். அவை மீன்கள், நண்டுகள். பூச்சிகள், தவளைகள் எனப் பல தரப்பட்டவற்றை உண்ணுவதைப் பார்த்து வியந்திருக்கிறோம். ஒருமுறை நீர் பறவை ஒன்றைக் கூட அவை தின்பதைப் பார்த்திருக்கிறோம்.

அப்போதுதான் மீனவர்களிடையே இதற்கு நல்ல பெயர் கிடையாது என்பது தெரிந்தது. அவை மீன்களை உணவாய் உட்கொள்ளுவதால் மீன்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறதாம். இதுதான் மீனவர்களின் நம்பிக்கை. ஆனால் நாங்கள் பயந்தது மார்ச் தொடங்கிச் செப்டம்பர் வரை இந்த ஆற்றில் நீர் வற்றி விடுமே, அப்போது அவை எங்குப் போகும் என்பதே!

திடீரென இரண்டு நாட்களாய் அவற்றைக் காணவில்லை. காமாட்சி, ‘அநேகமாய் குட்டிப் போட்டிருக்குங்க! பார்க்கலாங்க’ என நச்சரித்துக் கொண்டிருந்தாள். நானும் வேறு வழியின்றிப் பொந்துக்குச் சற்றுத் தூரம் வரை அவளை அழைத்துச் சென்றேன். பொந்தை நெருங்கியவுடன் ‘இதற்கு மேல வேணாம்! குட்டியுடன் இருக்கும் மிருகம் எப்படி நம்மை எதிர் கொள்ளும் எனத் தெரியாது’ என்றேன். அமைதியாய் சில நிமிடங்கள் கழிந்தன. திடீரென ‘கீச் கீச்’ சப்தங்கள் உள்ளே இருந்து வர, ‘போட்டுடுச்சுங்க!’ என்றாள் காமாட்சி முகமெல்லாம் மலர!

இதையே பத்து நாட்கள் கேட்டு மகிழ்ந்தாள். அவளால் நானும் மகிழ்ந்தேன். அன்றும் பொந்தை நோக்கிச் செல்லத் தூரத்திலேயே ஐந்து குட்டிகளுடன் தாயும் தந்தையும் அக்கரையின் மேல் ஒரு புல்வெளியில் படுத்துக் கிடந்ததைக் கண்டோம். அப்படியே நின்று அவைகளை ரசிக்க ஆரம்பித்தோம். பள பள முடியுடன் கண்கள் திறந்த நிலையில் குட்டிகள் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருந்தன. காமாட்சியின் கண்களில் நீர்! சட்டென என் தோளில் சாய்ந்து தேம்ப ஆரம்பித்தாள். அன்று அவள் பழைய நிலைக்கு வர வெகு நேரமாயிற்று.

குட்டிகள் நன்கு வளர்ந்து இப்போது நீரில் விளையாட ஆரம்பித்து விட்டன. காலையிலும் மாலையிலும் நன்கு வேட்டையாடி மதியம் ஒய்வு எடுத்துக் கொள்கின்றன. உணவுத் தேடல்போல் துரத்தி விளையாடுவது அவற்றுக்கிடையே விருப்பமான ஒன்றாய் இருக்கின்றன. மூன்று நாட்களாக அருகே உள்ள அலையாத்திக் காடுகளுக்கு இறால், புழு சேகரிப்புக்காக எம்மவர்களுடன் சென்றோம். மழை வேறு பெய்து கொண்டிருந்தது. மழையிலேயே வாயில் கூடையைக் கவ்விக் கொண்டு நீரில் இறங்கிக் கையால் இரால்களைப் தேடிப் பிடித்து பனங்கூடையில் போடுவதும், பின் நீந்துவதுமாய் இருந்து சிகப்புப் புழுக்களுக்காகக் கரையின் சேற்றை வெட்டி அம்மண்ணில் புழுக்களைத் தேடிச் சேகரிப்பதுமாய் இருந்தோம்.

மீனவர் கண்களில் படாது திரும்பி அதைக் கடலூரின் கடைவீதியில் வழக்கமானவரிடம் கொடுத்துப் பணம் வாங்கி வீடு சேர்ந்தோம். மறுநாள் மதியமே இருவரும் ஆற்றங்கரை வந்து விட்டோம். தூரத்தில் ஒரே ஒரு நீர் நாய் மட்டும் நீரில்! ஆச்சர்யமாய் இருந்தது! நாங்கள் வழக்கமாய் அமரும் இடத்தில் சென்று அமரும்பொழுது ’ஏங்க! அது அசையவே இல்லீங்க என்றாள்’. அமர்ந்த நிலையில் நான் அதைப் பார்க்க எதோ விபரீதம் நடந்திருப்பதை உள்ளுணர்வு சொன்னது. அவசர அவசரமாய் நீரில் குதித்து நீந்தி அருகில் சென்றேன். அங்கே அது உடல் ஊதி இறந்து கிடந்தது! அதன் உடலைப் பற்றி இழுக்கும் போதுதான் அதன் உடல் முழுக்க காயங்களாய் இருப்பதைப் பார்த்தேன். அதை அப்படியே விட்டு விட்டு, கரைக்குச் சென்று காமாட்சியிடம் கண்டதை விவரித்தான்.

அவள் எதையும் கேட்கும் நிலையில் இல்லை. அழுது கொண்டே பொந்தை நோக்கி என்னை இழுக்க, நானும் பின் தொடர்ந்தேன். தெரிகிறது! அவள் குட்டிகளைத் தேடுகிறாள்! அங்கு எதுவும் இல்லை. வெகு நேரம் ஆகியும் ஒன்றையும் பார்க்க முடியவில்லை. இரவு வெகு நேரம் அழுது கொண்டிருந்தாள். அன்று கிருத்துமஸ். திடீரென ‘வீட்டில் தங்க வேண்டாம்! மாதா கோவிலுக்குப் போலாம்யா!’ என்றாள். ‘மனசு அதையே நினைக்குது!’ என்றவளைத் தேற்றி இரவு பதினோறு மணிக்கு மாதா கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். கிருத்துமஸ் கொண்டாட்டங்கள் முடிய அதிகாலை ஆகிவிட்டது. கொண்டாடியவர்கள் சென்றவுடன் அங்கேயே ஓர் ஒரத்தில் படுத்து விட்டோம்.

அடுத்த நாள் 26 திசம்பர் 2004! ஓர் ஆழிப்பேரலை அந்தப் பகுதிகள் அனைத்தையும் அழித்துப் போட்டு விட்டு அமைதியானது.

மூன்று நாள் கழித்து, ‘சார் இங்கே ஒரு பொண்ணு பொணம்!’ என்றவாறே ஒருவர் கூப்பிட, அவசரமாய் அந்தக் குழு அங்கே சென்றது. அருகே வந்த அக்குழுவின் ஓர் அதிகாரி ‘கையில நாகராசன்னு பச்சை குத்திருக்கு, அப்போ அடையாளம் கண்டு பிடிச்சிடலாம்’ என்றவாறே அருகே பார்த்து ‘அங்கே கிடப்பது என்னய்யா?’ என்றார். ‘சார் இது நீர்நாய் குட்டி சார்! என்றார். ‘சரி! சரி!’ என்றவாறு அவர் நோட்டை எடுத்துக் கொண்டு அடுத்த பிணத்தைத் தேடிப் போனார். குழுவும் அவர் பின் சென்றது. பின் ஓர் ஊழியர் தன் கையிலிருந்த தடியால் அந்த நீர்நாயை எத்த, அது அந்தப் பெண்ணின் கை அருகே சென்று விழுந்தது.

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *