வெளிச்சம் மெதுவாய் வானில் பரவ ஆரம்பித்தது. அதன் இளஞ்சூடு இறகுகளூடே ஊடுருவிச் செல்ல, என் கீழே, என் கண் முன்னே ஓர் ஓவியம் மெதுவாய் விரிய ஆரம்பித்தது. தூரம் காரணமாய் சென்னை நகரம் கோடுகளாய், வட்டங்களாய், சதுரங்களாய் என் கீழே! இது கழுகுக் கண் பார்வையல்ல. கூழைக்கிடாவாகிய என்னுடைய கண்பார்வை. ஒருபுறம் ஆனந்தம், மறுபுறம் நீண்ட தூரம் வலசை செய்தலால் உண்டான களைப்பு. இதோ சென்னை வந்தாகி விட்டது. இன்னும் சிலமணி நேரத்தில் வேடந்தாங்கலை அடைந்து விடலாம் என உள்ளுணர்வு சொல்ல ஆரம்பித்து விட்டது.
இதுபோன்ற நிலம், நீர், நட்சத்திரங்களின் அமைப்புகள்தான் எங்களைப் போன்ற பறவைகள் வலசைப் போதலுக்கு வழிகாட்டும் குறியீடுகளென்று என் தாய் கூறியிருக்கிறாள். இவற்றில் நில, நீர் குறியீடுகள் அவ்வப்போது மனிதர்களால் பெரிய அளவில், குறுகிய காலத்தில் மாற்றியமைக்கப்படும்போது எங்கள் வழி தவறுமாம். அதனால் வானின் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களின் திசை மற்றும் புவிகாந்தப் புலனையும் மேற்சொன்ன குறியீடுகளுடன் இணைத்தால் பெரும்பாலும் திசை தவறாதாம்! அவள் சொன்னதுதான். ஆனாலும் எதிர்பாராமல் நிகழும் வானிலை மாற்றம் சற்றுப் பயணத்தைப் பாதிக்கச் செய்வதும் உண்டு. இது இப்பயணத்தின் அனுபவத்தில் நான் உணர்ந்தது.
இப்பொழுது பள்ளிக்கரணை ஈரநிலம் மேலே எம்கூட்டத்துடன் பறந்து கொண்டிருக்கிறேன். கடந்த வருடத்தில் என் தாய் என்னை இங்குக் கூட்டிக்கொண்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. அதை நினைத்துக் கொண்டே பறந்து கொண்டிருந்தேன். இதுவும் ஒரு நன்னீர் நிலம்தான். எம்மவர்கள் எப்போதும் நன்னீரில்தான் புழங்குபவர்கள். நீர்வற்றிய காலங்களில் அரிதாய் உப்புநீர் கலந்த நீர்நிலைகளில் உணவு தேடுவதும் உண்டு.
இதோ வேடந்தாங்கலும் வந்தாகிவிட்டது. நீண்டு நெளிந்த பெரிய நீர்நிலை. நடுநடுவே விரிந்த மரங்கள். மரங்கள் முழுதும் சின்னதும் பெரிதுமாய், வெள்ளையாய், கருப்பாய், மஞ்சளாய்ப் பல இனப் பறவைகள். இனிய குரல் தொடங்கிக் கரகர முரட்டுக் குரலும் கலந்த ஒரு கிராமிய இசை அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது. என் இனத்தில் மட்டும் ஏன் குரல்வளம் இவ்வளவு மோசமாய் இருக்கிறது என எனக்கு வருத்தமும் உண்டு. எமக்கென்று தனித்துவமான குரலோசை ஒன்று இல்லை. சிறு உறுமலும், மேலலகையும் கீழலகையும் வேகவேகமாய்ப் படபடவென அடித்துக்கொள்வதால் ஏற்படும் ஓசையும்தான் எங்களுடையது.
மெதுவாய் வேகம் குறைத்து எல்லோரும் ஒரே நேரத்தில் கீழே இறங்க ஆரம்பித்தோம். வானில் பாதி உயரம் கடக்கும்போது அவரவர் தாங்கள் இறங்க வேண்டிய மரங்களைத் தேர்வு செய்தோம். பின் பட்டென்று தங்களின் திசையை மோதல் ஏதுமின்றி மாற்றியமைத்து இறங்க வேண்டிய மரங்களை அடைந்தோம்.
கூழைக்கிடாக்களான நாங்கள்தான் இறுதியாக வேடந்தாங்கலை அடையும் பறவையினம். அதனால் மற்றப் பறவையினங்கள் எங்களுக்கு முன்பே வந்து கூடுகட்ட இடம் பிடித்து, பருவச் செயல்களைச் செய்ய ஆரம்பித்திருக்கும். காதலுக்கான போட்டிச் சண்டை தொடங்கி, கூடுகட்ட இட ஆக்கிரமிப்பு வரையிலான அனைத்துச் சண்டைகளும் முடிந்திருக்கும். இதனால் மீதியிருக்கும் இடத்தைத்தான் நாங்கள் நம்பியிருக்க வேண்டும்.
பெரும்பாலும் மர உச்சியில்தான் இடங்கள் காலியாக இருக்கும். அதை உபயோகிக்க எப்போதும் எங்களுக்குச் சிரமம் இருந்ததில்லை. எங்களின் பெரிய உடலும், நீண்ட இறக்கைகளும் மர உச்சியில் கூடுகட்டவும், மரத்தின் மேற்பகுதியில் இறங்கி, மேலெழும்புவதற்கு மட்டுமே ஏற்புடையதாய் இருப்பது எங்களுக்கு ஒரு வசதி.
மரங்களின் ஊடே பறந்து எளிதில் வெளியே வர இயலாத உடலமைப்பு எங்களுடையது. அதனாலேயே மரங்களின் மேல்பகுதியை நாங்கள் விரும்புவதுண்டு. ஆனால் அது இரையாடிகளுக்கு எளிதாய் வேட்டையாட வழிவகுக்கும் என்பதால் மற்றச் சிறு பறவையினங்கள் மேற்பகுதியைத் தவிர்த்து மரங்களில் இலைகள் அடர்ந்த பகுதிகளில் கூடுகட்டுவது உண்டு. இதனால் எங்களுக்கு இரையாடிகளினால் ஆபத்தில்லை என மறுக்க முடியாது. எங்களின் பெரிய உடல் இரையாடிகள் எங்களைத் தவிர்க்கக் காரணமாய் இருப்பதுண்டு.
இனப் பெருக்கக் காலங்களில், எங்களின ஆண் அதன் இளஞ்சிவப்புக் கண்களைச் சுற்றிப் பிரகாசமான மஞ்சள் தோலை உருவாக்குகிறது. இனப்பெருக்கம் செய்யும் பெரியவர்கள் அடர் சாம்பல் நிற முதன்மைச் சிறகுகளுடன் நல்ல வெள்ளை நிறத்தில் இருப்பார்கள். இனப் பெருக்கத்தின் ஆரம்பக் காலத்தில் இரு பாலினருக்கும் சாம்பல் மற்றும் வெள்ளை கலந்த கொண்டை போன்ற ஒன்று உருவாகிறது. இது இனப்பெருக்கம் முடிந்தவுடன் படிப்படியாகக் குறைந்துவிடும்.
இரு பாலினத்திலும் அலகுகள் மஞ்சள் நிறமாகவும், இனப்பெருக்கக் காலத்தில் குறிப்பிடத்தக்க அடர் பழுப்பு நிறப் புள்ளிகளுடன் இருக்கும். இனப்பெருக்கம் செய்யத் தகுதியானவர்கள் கூடு கட்டிய 5-10 நாட்களுக்குப் பிறகு முட்டையை இட ஆரம்பிப்பார்கள். இரண்டிலிருந்து மூன்று முட்டைகள் வரை பெரும்பாலும் இடுவது வழக்கம். ஒரு 25 நாட்கள் அடைகாத்த பின் குஞ்சுகள் வெளிவர ஆரம்பிக்கும்.
எனக்கு இரண்டு வயது தொடங்கச் சில நாட்களே உள்ளது. எங்களுக்குப் பிறந்தநாள் முட்டை வெளி வந்த நாளா? இல்லை முட்டையில் இருந்து நான் வெளியே வந்த நாளா? என்னுடன் பிறந்தவன் என்னிடம் அடிக்கடிக் கேட்கும் கேள்வி இது. போன வருடம் என் தாய் இந்த வேடந்தாங்கலில்தான் என்னை ஈன்றாள். என்னோடு சேர்ந்து மொத்தம் நான்கு பேர். அதிசயமாய் நால்வருமே ஆண் பறவைகள். அதில் ஒன்று கூண்டில் இருந்து தவறி நீரில் விழுந்து இறந்தது. என்தாய் வெகுநேரம் அதற்காகச் சத்தமிட்டது இன்னும் நினைவில் இருக்கிறது.
அடுத்த இரு நாட்களில் மற்றொன்று கழுகுக்கு இரையானது. நீருக்கும் இரையாடிகளுக்கும் நிறைய பறவைக் குஞ்சுகள் இரையாவதைக் கடந்த வருடம் கண்டதுண்டு. ஆயிரங்களில் கூடுகளும் குஞ்சுகளும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வேடந்தாங்களில் நிரம்பி வழியும்போது இவ்விறப்புகளைச் சாதரணமாய் காணலாம். அதன் பிறகு வேறு அசம்பாவிதம் ஏதும் நிகழாததால் நானும் மற்றொன்றும் இன்று நன்கு வளர்ந்து வலசை வரை வந்துவிட்டோம். என்ன! இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆனால்தான் பருவவளர்ச்சி அடைய முடியும். அதனால் என்ன! வாழ்க்கை இனிமையாய் இருக்கிறது. அதுவே போதுமானது.
என் அருகே சிகப்பும் வெள்ளையும் கொண்ட பெரிய நாரை. மிக அழகு. பருவ வயது அடைந்திருக்கும்போல. பருவ வயதில் உடலில், உடற் சிறகுகளில் ஏற்படும் மாற்றத்தைப் பற்றி என் தாய் சொல்லிக் கொடுத்திருக்கிறாள். அந்நாரையின் அருகிலேயே அதன் இணையும் கூடு அமைத்துக் கொண்டிருந்தது. எனக்கு இரவைக் கழிக்க உட்காரத் தோதாகக் கிளை இருந்தால் போதும். அந்த இணைகளின் அருகே இருந்த கிளையில் இடமிருந்தது. நானும் என் சகோதரனும் இடத்தைப் பிடித்துக் கொண்டோம். பயணக் களைப்பில் உட்கார்ந்த சிறிது நேரத்திலேயே சற்றுக் கண்ணயர்ந்து விட்டேன்.
திடீரென ஏற்பட்ட சத்தத்தில் கண் விழித்தேன். கழுகு ஒன்று தாழப் பறந்து ஒரு பறவையைப் பிடிக்க எத்தனித்ததினால், பறவைகள் இங்கும் அங்குமாய் கூக்குரலிட்டுத் திசைக்கொன்றாய்ப் பறக்கத் தொடங்கியதில் உண்டான சத்தம் அது. பசி வயிற்றைப் பிசைந்தது. அருகே எம்மவர் ஒருவரும் இல்லை. எல்லோரும் நீரில்.
அவசர அவசரமாய் உடலை ஒரு சிலிர்ப்புக்கு உள்ளாக்கி, கிளையில் இருந்து உந்திப் பறந்து சென்று நீரில் வழுக்கி இறங்கினேன். நீரின் இளம் சூடு மெதுவாய் உடலூடே பரவியது. பறப்பதைவிட இது ஆனந்தமாய் இருந்தது! மெதுவாய்க் கால்களால் நீரைப் பின் தள்ளி நீந்தத் தொடங்கினேன். நீரில் ஒரு முறை தலையை முக்கி வெளியே எடுத்தேன். எம்மிறகுகளில் மெழுகு போன்ற ஒன்றை அலகுகளால் அவ்வப்போது நாங்கள் கோதிவிட்டுக் கொள்வதால் நீர் இறகுகளில் ஒட்டுவதில்லை.
ஏரியில் நீர் நன்றாகத் தெளிவாக இருந்தது. அப்போது படபடவென நீர்க் காகங்கள் பல என்னருகே நீரில் வந்து இறங்கின. எனக்கு என் தாய் கடந்த வருடம் பயிற்றுவித்தது ஞாபகத்திற்கு வந்தது. இந்நீர்க் காகங்கள் நீரில் மூழ்கி மீன் கூட்டத்தைக் கலைத்து, அதில் ஒரு மீனைப் பிடித்து நீருக்கு வெளியே வரும். இந்தத் திடீர் தாக்குதலால் அதிரவுறும் நீருக்கடியில் நீந்தும் மீன்களானது கூட்டத்திலிருந்து சிதறி ஒழுங்கின்றி நீந்தத் தொடங்கும். பல நீரின் மேற்பரப்பில் வர ஆரம்பிக்கும். இது எம் போன்ற நீரின் மேற்பரப்பில் வேட்டையாடும் பறவைகளுக்கு வேட்டையை எளிதாக்கி விடும்.
இதோ அவை நீரினுள்! கண்கள் விரிய நீரைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். இதோ பதற்றமடைந்த மீன்கள் நீரின் மேற்பரப்பில்! ப்ளாப்ப்! மிக அழகான ஒரே வாரல். சிறுமீன்கள் பல எளிதில் என் வாய்ப் பையில். ரசித்து விழுங்கி அடுத்தடுத்த வாரல்களைத் தொடங்கினேன். கொஞ்ச கொஞ்சமாய் எம்மவர்கள் என்னுடன் இணைய ஆரம்பித்தனர். என் சகோதரனுந்தான்!
வெகுநேரம் இது தொடர்ந்தது. நன்கு உண்டு களித்தவுடன் நன்றாக நீந்தினோம். சில நேரங்களில் தலையை முதுகில் சாய்த்துக் காலில் அசைவின்றி மிதந்தேன். வாழ்க்கையா! இல்லை இது விளையாட்டா! ‘நேரமாகிவிட்டது, கிளம்பலாமா?’ என் சகோதரன். இருவரும் சிறு உந்தல்களில் நீரில் இருந்து எழும்பி பறந்து எங்கள் கிளைச் சென்று அமர்ந்தோம்.
நாட்கள் கழிந்தன. என் தாய் காதலுற்றிருந்தாள். இணையோடு சேர்ந்து கூடு கட்டி காதல் புரிந்தாள். அவர்களின் காதல் பரிபாசனைகளை நோக்குவதும், வேட்டையாடுவதும், நீந்துவதுமாய் நாட்கள் சென்றன.
‘வேறு இடம் சென்று தேடலாமா?’ என் சகோதரன். அதை எதிர்பார்த்திருந்ததுபோல் பட்டென்று ‘போகலாம்!’ என்றேன். முதல் முயற்சியாய் அருகே உள்ள கரிக்கிளி ஏரியில் சோதனையைத் தொடங்கினோம். சிறிய ஏரிதான். ஆனால் எம்மவர்களை அதிகம் பார்க்க முடிந்தது. ஏரியைச் சுற்றிக் காணப்பட்ட வயல்களிலும் பறவைகள் காணப்பட்டன. நெல் வயலில் சிறுபூச்சிகள், நத்தைகள், சிறு நண்டுகள் அதிகம் கிடைக்கும்.
இரண்டு மூன்று நாட்கள் இப்படிக் கழித்தோம். முதன் முறையாய் எனக்குப் பள்ளிக்கரணை ஞாபகத்திற்கு வந்தது. இம்முறை சகோதரனை நான் அழைத்தேன். மறுப்பானா என்ன! முடிவாயிற்று. மறுநாள் அந்தப் பகுதிக்குச் செல்லுபவர்களுடன் நாங்களும் இணைந்து பறக்க ஆரம்பித்தோம்.
பள்ளிக்கரணை ஒரு மிகப்பெரிய நீர்நிலை. மீன்கள் மட்டுமின்றி நத்தைகள், நண்டுகள், புழுக்கள், பூச்சிகள், அதிகம் கொண்ட ஒரு உணவுச் சுரங்கம். ஆனால் சில வருடங்களாய் பரப்பளவில் குறைவதுமாய், ஒரு பகுதி குப்பை மேடாய் மாறுவதுமாய்! அவ்வப்போது அக்குப்பைகள் எரிந்து புகைமூட்டமாய் இருப்பதாக என் தாய் கூறியதுண்டு. அவளுக்கு இப்பகுதி பிடித்ததில்லை. காரணம் கூறியதில்லை. கடந்த வருடக் கடைசி நாட்களில் அவள் எங்களை இங்கே கூட்டி வந்து பதற்றத்துடன் கூட்டிச் சென்றாள். வேடந்தாங்கலில் நீரின் அளவு குறைந்ததால்தான் அவள் எங்களை இங்குக் கூட்டி வந்ததாய் ஞாபகம். இல்லையென்றால் எங்களின் தேடல் வேடந்தாங்கலைச் சுற்றியே இருக்கும்.
இதோ பள்ளிக்கரணைத் தெரிய ஆரம்பித்து விட்டது. பிரமாண்டமான நீர்நிலை, பிரமாண்டமான கட்டடங்கள், மிக உயரமான மின்அழுத்த கோபுரங்கள் எனப் பள்ளிக்கரணை எல்லா விதத்திலும் என்னைக் கவர்ந்தது. நீரில் இறங்க எங்கள் பறக்கும் நிலை மாற்றி இறங்கிய நேரத்தில்.. ப்ட்டடட்ட்ட்.. எம்மவர்களில் ஒன்று உயர்மின் அழுத்தக் கம்பியில் உரசித் தூக்கி எறியப்பட்டு உயிரற்று நீரில் விழுந்தது.
அதைப் பார்த்துக்கொண்டே நீரில் இறங்கினேன். சிறுவயதிலிருந்தே இறப்பைப் பார்த்துப் பழகியதால் பெரிதாய் இந்நிகழ்வு என்னைப் பாதிக்கவில்லை. நன்றாய் வேட்டையாடினேன். பின் மேலெழும்பிக் கோபுரத்தில் உட்கார்ந்து கொண்டேன். என் சகோதரன் இன்னும் நீரில். என்னைச் சுற்றிலும் எம்மவர்கள்.
சூரிய ஒளியில் இறகுகளைச் சுத்தப்படுத்திக் கொண்டும், ஒழுங்கு படுத்திக்கொண்டும், சென்னையின் அழகை ரசிக்க ஆரம்பித்தேன். சரசரவென அவசர அவசரமாய் பயணிப்பவர்களூடே ஒரு சிலர் எங்களைக் கையைக் காண்பித்து அவர்களுக்குள்ளாகப் பேசுவது பார்ப்பதற்குப் பெருமையாய் இருந்தது. ஒரு சிலர் நின்று பைனாகுலரில் எங்களைப் பார்ப்பதும் நோட்டில் ஏதோ குறிப்பதுமாய் இருந்தனர். என் கோபுரத்தை அடுத்துள்ள கோபுரத்திட்டில் இருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இப்படியாய் ஆரம்பித்த பள்ளிக்கரணை வாழ்க்கை போகப் போக மிகப் பிடித்திருந்தது. இருப்பினும் மாலை நேரத்தில் வேடந்தாங்கலில் சென்று அடைவதை நாங்கள் மாற்றிக் கொள்ளவில்லை.
நாட்கள் செல்லச் செல்ல நீரின் அளவு குறைய ஆரம்பித்தது. பல சிறு பறவைகள் தங்கள் இனப்பெருக்க வேலையை முடித்துத் திரும்பிச் செல்ல ஆரம்பித்து விட்டன. ஆனால் எம் இனக் குஞ்சுகள் வளர அதிகக் காலம் தேவைப்படுதலால், நாங்கள் ஏப்ரல் மாத இறுதிவரை பொதுவாய்த் தங்குவது உண்டு. கூட்டம் குறைய குறைய பொதுவாய்ப் பயம் தோன்றுவதுண்டு. இப்போதெல்லாம் எம்மவர்கள் ஒன்றாய்ப் பறந்து, இரை தேடி, பின் அடைவது வழக்கமாகி விட்டது.
நானும் என் சகோதரனும் பள்ளிக்கரணைக் குழுவுடன் செல்வதும் வருவதுமாய் இருந்தோம். என தாய் இவ்வருடம் ஈன்ற நான்குமே எந்தப் பாதிப்புமின்றி நன்கு வளர்ந்திருந்தன. ஏப்ரல் இறுதி வாரம் நெருங்கியது. இன்னும் இரு நாட்களில் வேடந்தாங்கலை விட்டுக் கிளம்பலாம் என எங்குழு தீர்மானித்து விட்டது.
இம்முறை பயணத்திற்குத் தேவையான சக்தியைக் பள்ளிக்கரணையிலேயே தங்கித் தேடலாம் என நானும் என் சகோதரனும் முடிவு செய்தோம். பறந்து சென்று பள்ளிக்கரணை மின்கோபுரத்தை அடைந்தோம். அழகுச் சென்னையை எரியும் குப்பை மேடு தெளிவற்றதாக்கி இருந்தது. வழக்கமாய் மீன் பிடிக்கும் இருவரும் தூண்டிலைப் போட்டு விட்டிருந்தனர். நீர் வற்ற ஆரம்பித்து விட்டதால் நீர் தெளிவை இழந்திருந்தது.
மீன்பிடிப்பதும் எங்களுக்குச் சற்றுச் சிரமத்தைக் கொடுத்தது. நீர்க் காகங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைத்திருந்தது. கூட்டாய் உணவுத் தேடலில் சக்தி பெருமளவில் சேகரிக்கப்படும். இரையாடிகளிடமிருந்து பாதுகாப்பும் அளிக்கும். ஆனால் இது இரண்டுமே தனித்தேடலில் குறைவு. ஆனால் தனித்தேடல் தனிப்பறவையின் தேடல் திறனையும், சோதனையை எதிர்கொள்ளும் திறனையும் அளிப்பதை மறுக்க முடியாது.
இன்றைய இரவைப் பள்ளிக்கரணையில் கழிக்கப் போகிறோம் என்ற நினைவு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதிகாலையில் இவ்விடத்தைக் கடக்கும் எம்மவர்களுடன் இணைவதாய்த் திட்டம். இருவரும் நன்றாய் மீன்களைத் தேடி உணவாக்கிக் கொண்டிருந்தோம். எங்கள் இருவரைத் தவிர யாரும் அங்கு இல்லை. மீன் பிடிப்பவர்கள் தங்கள் இடத்தை இப்போது மாற்றி இருந்தனர்.
இரவு நெருங்கியது. நிலவொளியும் சென்னை விளக்கொளியும் பள்ளிக்கரணையைப் புதிய உலகமாய் காட்டியது. வெவ்வெறுவிதமான ஒலிகள் வேறு அதன் அழகை மெருகேற்றின. வேடந்தாங்கல் அப்படியில்லை. எல்லாப் பறவைகளும் அடையும் நேரத்தில் பறவைகளின் குரல்கள் வேகமாய் ஒலிக்கத் தொடங்கி அடுத்த அரை மணித்துளியில் நிசப்தமே அங்குப் பிரதானமாகிவிடும். அரிதாய் பாம்பு ஏதேனும் வேட்டையாட இரவில் மரத்தில் ஏறும்போது சிறிது நேரம் சப்தம் கேட்கும். அதிலிருந்து முற்றிலுமாய் வேறுபட்ட நிலையில் இந்தப் பள்ளிக்கரணை. திடீரென நீரில் சலசலப்பு.. சுதாரிக்கும் முன்பே மூச்சு முட்ட ஆரம்பித்தது. என் கழுத்தை ஒரு கரம் அழுத்திப் பிடித்திருந்தது. வலுவான பிடி அது. என் கண்கள் சொருக.. என் உடன் பிறந்ததைத் தேடினேன். அருகிலேயே அதன் கழுத்தை ஒடித்தபடி அந்த இருவரில் ஒருவன்.
மளுக்… கக்ரக்… அந்த இருவரும் கைகளில் கூழைக்கிடாக்களுடன் கரையை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். சளக்க்..சளக்க்..சளக்க்.
(தொடரும்)