Skip to content
Home » காட்டு வழிதனிலே #16 – பொந்து

காட்டு வழிதனிலே #16 – பொந்து

பொந்தில் இருந்து வெளியே தலையை நீட்டிப் பார்த்தேன். சூரியன் மறைந்து அரை மணி நேரம் ஆகியிருந்தது. நான் உணவு தேட ஆரம்பிக்கும் நேரம். என்னுடைய நேர மேலாண்மை மீது எனக்கு எப்போதும் காதல் உண்டு. நான் மட்டுமல்ல என் இனத்தில் உள்ள அனைவருமே இதில் மேம்பட்டவர்கள். பொந்திலிருந்து கீழே தாவினேன். என்ன இது! மிதக்காமல் கீழேயல்லவா சென்று கொண்டிருக்கிறேன். ஓ! தாவும் போது நான் இறந்து விட்டேன் போல!

ஆனைமலைச் சரணாலயத்தில் கரியஞ்சோலை எனும் ஓர் இடம் உண்டு. அவ்விடத்தில் வளர்ந்துள்ள உயரமான டிப்டீரோகார்ப் மரமொன்றின் உச்சியில் சிறிய பொந்தொன்று இருந்தது. அப்பொந்து என்றோ எப்போதோ ஒரு பறவையால் உருவாக்கப்பட்ட ஒன்று. அப்பொந்தில்தான் என் தாய் என்னை ஈன்றிருந்தாள்.

இவ்வகை மரங்களின் உயரமும், அவற்றின் கிளைகள் பெரும்பாலும் உச்சியில் இருப்பதுமே அவற்றின் பொந்துகளை நாங்கள் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம். இந்த உயரமும், கிளைகளற்ற திறந்த வெளியும், நாங்கள் தாவிக் குதித்து மிதப்பதை எளிதாக்குகின்றன. கடந்த நாற்பது நாட்களும் என்னைச் சுமந்தபடியேதான் என் தாய் வானில் மிதந்திருக்கிறாள். சுமையுடன் மிதப்பதில் உள்ள சுகம் தெரிந்தவள்.

அவளின் பால் குடித்து, மூன்று நாட்களில் கண் திறந்த நான் அந்தப் பொந்தைப் பார்த்தேன். ஒரே இருளாய் இருந்தது. அரையடி உயரத்தில் பொந்தின் வாயில் வழியாக உள்ளே வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. நானும் தாயும் உள்ளே அவளால் நிரப்பப்பட்டிருந்த புற்களும் இலைகளாலுமான படுக்கையில். இது தேவையில்லா நுண்ணுயிர்களைப் பொந்தில் வராமல் தடுக்கும். இது பகல் போலிருக்கிறது. என் தாய் உறங்கிக் கொண்டிருந்தாள். நாங்கள் இரவில் உணவு தேடும் இரவாடிகள். அதுவும் இலைகளை அதிகம் தின்பவர்கள். தாயின் பால் குடித்து மெல்ல நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன்.

ஆனைமலை சரணாலயத்தின் உள்ளே இருந்த ஒரு சில வீடுகளில் காமராசனுடையதும் ஒன்று. அவன் இந்தக் காட்டிலேயே பிறந்து வளர்ந்தவன். அங்கேயே உள்ள ஓர் உணவுக் கடையில் கடந்த மூன்று வருடங்களாய் இப்போது பணி செய்து வருகிறான். இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தாய் இறந்தவுடன் தனியேதான் வாழ்கிறான். ஆகவே குடும்பம் என்ற ஒன்று இல்லை.

பறவைகளைப் பற்றிய நல்ல கள அறிவு உண்டு. இருபது வருடங்களுக்கு முன் பறவைகள் ஆய்வுக்காக வந்த குழுவிற்கு வழிகாட்டியாய் ஐந்து வருடங்கள் பணி செய்தபோது அவர்களிடமிருந்து பறவைகளையும் ஆங்கிலத்தையும் கற்றுக் கொண்டான். அவர்களுடன் இருந்தபோது பணம் தந்த தைரியத்தில் தன் சமூகத்தினரை மதிக்காமல் விட்டதால் அவர்கள் சென்றவுடன் அவன் சமூகம் அவனை ஒதுக்கி விட்டது. இதற்கெல்லாம் அவன் கவலைப்பட்டதில்லை. கிடைத்ததைச் சாப்பிடுவதும் புது பறவைகளைத் தேடுவதுமாய் காலத்தைக் கழித்தான்.

எந்தக் கெட்ட பழக்கங்களும் அவனிடம் இல்லாதது அவனுடைய ஆர்வம் குறையாமல் இருக்க ஒரு காரணம். உள்ளூர்வாசியாய் இருப்பதால் காட்டில் அலைவதை யாரும் கேள்வி கேட்டதில்லை. அரசியல்வாதிகள் குடும்பமோ, வனத்துறை அதிகாரிகள் குடும்பமோ யார் வந்தாலும் காமராசன்தான் அவர்களுக்கு வழிகாட்டி. பறவைகள் கணக்கீட்டிற்கும் அவன் உதவியைத்தான் வனத்துறை நாடும்.

ஆனால் பறவைகளைத் தவிர்த்து வேறு உயிரினங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள மாட்டான். அதை ஒரு குறிக்கோளாகவே வைத்துக் கொண்டான்.

இரண்டு மாதங்கள் முன்பு ஒரு ஜோடி தவளைவாயன்களைக் (Ceylon Frogmouth- Batrachostomus moniliger) கண்டதும் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இவன் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து அரைக் கிலோ மீட்டர் தூரத்தில்தான் அந்தப் பறவைகள் வாழ்ந்து வருகின்றன. ஆனால் வெளிநாட்டினரை அவ்வழியே அழைத்துச் செல்லாமல் முக்கால் மணி நேரச் சுற்றுப் பாதையில் அழைத்துச் சென்றுதான் அப்பறவைகளைக் காண்பிப்பான். இப்படித்தான் அவர்களிடமிருந்து பணம் பார்த்து வருகிறான். உடனே காண்பித்தால் பணம் குறைத்துக் கொடுப்பார்கள் என்பது அவன் எண்ணம். சிலரிடம் அமெரிக்க டாலர்களில்கூட வசூலிப்பதும் உண்டு. அதனாலேயே ஆராய்ச்சியாளர்கள் யாரும் அவன் பக்கம் போகவே சற்றுப் பயப்படுவார்கள். வெளிநாட்டுப் பண உதவியுடன் வரும் ஆய்வாளர்கள் இவனை வைத்துக் கொள்ளவதுண்டு.

நான் வளர்ந்து தனிப் பொந்து வைத்து வாழ ஆரம்பித்து விட்டேன். நல்ல இளம் தளிர்கள், பழங்கள், பூக்கள், விதைகள், இளம் மரப்பட்டைகள்தான் என்னுடைய உணவுகள். இலைகள்தான் என் முதல் உணவு. இருப்பினும் இளம் யூக்ளிப்டஸ் மரப் பட்டைகளும், ஆல மற்றும் நாவல் மரப் பழங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். பெரும்பாலும் வெடிப்பலா, நாகமரம், செம்புவம், குளமாவு போன்ற மரங்களிடம் இருந்துதான் மேற்சொன்ன உணவுகளை எடுப்பதுண்டு.

மிதக்கும் பழக்கம் இருப்பதால் இரவாடிகளாய் பரிணமித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். பகலாடியாய் இருந்து நிறைய வேட்டையாடிகளிடம் சிக்கி அதன்பின் இரவாடியாய் பரிணமித்திருக்க வாய்ப்புகள் அதிகம். அணில் இனங்களில் மிதக்கும் திறன் பெற்ற நாங்கள் மட்டும்தான் இரவாடிகள். மற்ற நிலங்களில், மரத்தில் வாழும் அணில்கள் யாவும் பகலாடிகள்தான். இரவில் எங்களைத் தேடி வேட்டையாடும் வேட்டையாடிகள் பெரும்பாலும் இல்லை. அரிதாய் ஆந்தை ஒருமுறை என் இனத்தவரை வேட்டையாடியதைக் கண்டதுண்டு.

இந்த மேற்கு மலைத்தொடரில் நாங்கள் இரு சிற்றினங்களாய் பரவியுள்ளோம். அதுவே அருணாசலப் பிரதேசத்தில் 14 சிற்றினங்கள் உண்டாம். முன்னங்கால் தொடங்கி பின்னங்கால் வரை எங்கள் உடலின் இரு பக்கங்களிலும் இருக்கும் மெல்லிய சவ்வு போன்ற சதை, நாங்கள் தாவும்போது பாராசூட்போல் விரிந்து மிதப்பதை உறுதி செய்கிறது. மற்ற நேரங்களில் அச்சதை சுருங்கி இருக்கும்.

இரவில் நான் உணவு தேடும்போது மிகக் குறைவான இரவாடிகளைத்தான் பார்த்திருக்கிறேன்: ஆந்தைகள், வௌவால்கள், சில பூனைகள். அவ்வளவுதான். அதனால் இந்தக் காடே இரவில் என்னுடையது என எண்ணிக் கொள்வேன். அப்படி ஒருமுறை இரவில் பூக்களைத் தின்று கொண்டிருக்கும்போது கிளையின் ஓர் ஓரத்தில் படுத்து இருந்த கருஞ்சிறுத்தை எழுந்து உடலை ஒரு சிலுப்பு சிலுப்பி கர்ச்சனை செய்ய, ஒரு நிமிடத்தில் சகலமும் ஒடுங்கி ஆடிப் போனேன். அதிலிருந்து இந்த உரிமை கொண்டாடும் நினைப்பைத் துறந்தேன்.

ஏறத்தாழ நாலே முக்கால் வருடங்கள் இக்காட்டில் கழித்து விட்டேன். மிதத்தல் முக்கிய செயலாய் இருப்பதால் என் தேடல் பாதைகள் ஓர் ஒழுங்கில்தான் இருக்கும். எல்லா உயரமான மரங்களையும் தாவலுக்கு உரியத் தளமாய் வைத்துக்கொண்டு அங்கிருந்துதான் உணவு தேடல் தொடங்கும். மிதத்தல் எங்களுக்கு நீண்ட பயணத்தைத் தராது. ஆகவே, முப்பது அல்லது நாற்பது மீட்டர் நீளம் கொண்ட சிறு சிறு தாவல்கள் மூலமே நீண்ட தூரம் பயணிக்க முடியும்.

இன்று சற்று தூரம் சென்று பாக்குமரத் தோப்பில் உணவை முடித்து விட்டுப் பொந்தை அடைந்தேன். பாக்கும் இப்போதெல்லாம் எனக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இன்றும் நேர்த்தியாய் முன்னங்கால்களால் முதலில் மரத்தைப் பற்றி, பின் பின்னங்கால்களையும் வாலையும் மரத்தில் மெதுவாய் படரவிட்டேன். மிக நேர்த்தியான தரைச்சேரல் அது. பின் மெதுவாய் மரத்தின் மேல் சில அடிகள் ஏறி என் பொந்திற்குள் இறங்கினேன்.

அன்று ஏனோ உறக்கம் சரியாக வரவில்லை. பகல் மிக இரைச்சலாய் இருக்கும் என்று அன்றுதான் உணர்ந்தேன். பகலில் எத்துணை விதமான சப்தங்கள்! இரவு அப்படியல்ல. எப்படியோ ஒரு வழியாய் தூங்கிப் போனேன். இருப்பினும் சரியான அதே நேரத்தில் கண் விழித்தேன். பொந்தில் இருந்து வெளியே தலையை நீட்டிப் பார்த்தேன். சூரியன் மறைந்து அரை மணி நேரம் ஆகியிருந்தது. பொந்திலிருந்து கீழே தாவினேன். தாவும்போது உயிர் பிரிந்திருந்தேன்!

அந்த மாலை நேரத்தில் காமராசனைத் தேடி இரு வெளிநாட்டவர்கள் வந்தனர். அவர்களிடம் பறவைக் கையேடு, பாலூட்டிகள் கையேடு, விலை உயர்ந்த புகைப்படக் கருவிகள் என அனைத்தும் இருந்தன. பார்த்தவுடனே தெரிந்து விட்டது அவர்கள் எவ்வளவு பணம் கேட்டாலும் தருவார்கள் என்று. ஏனென்றால் அவர்கள் மிருக ஆர்வலர்கள். புதிய மிருகங்களைக் காண்பது எவ்வளவு அரிதான நிகழ்வு என்று அவர்களுக்குத் தெரியும். அதுவும் ஒரு மிருகத்தை மிகக் குறைவான காலத்தில், அதன் இயற்கையான இடத்தில் பார்ப்பதில் உள்ள சிரமம் அறிந்தவர்கள். காமராசன் அவர்களிடம் பணத்தை எல்லாம் பேசி முடித்து, காலை ஆறு மணிக்கு உணவுக்கடைக்கு வரச்சொல்லி அனுப்பிவிட்டான். வழக்கமாய் செய்வதுபோல் சாலிம் அலியின் புத்தகத்தை எடுத்துச் சிறிது நேரம் புரட்டி விட்டு உறங்கி விட்டான். இது அவனுடைய இருபது வருடப் பழக்கம். அதிலிருக்கும் படங்களை மனதில் நிறுத்தி விட்டால் புதிதாய் ஒரு பறவையைப் பார்த்தால்கூட பட்டென அப்பறவையை அடையாளம் கண்டுபிடிக்க முடியும் என்பதை அறிந்து வைத்திருந்தான்.

காலை சரியாக 5.50க்கெல்லாம் உணவுக் கடைக்குச் சென்று அவர்களுக்காகக் காத்திருந்தான். அடுத்த சில நிமிடங்களில் அவர்களும் வர ‘சேட்டா! மூன்று கட்டஞ்சாய்’ எனச் சொல்லி அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தான். பால் முதல் பேருந்தின் மேல்தான் வரும். அதுவரை பாலில்லாத் தேயிலை நீர்தான் (உண்மையில் தேநீர் கட்டஞ்சாய்க்குத்தான் பொருந்தும்!).

கட்டஞ்சாயாவைப் பருகி அவர்களை வழக்கமான முறையில் ஒரு சுற்றுப்பாதையில் அழைத்துக் கொண்டு சென்றான். முக்கால் மணி நேரம் கழித்து மூங்கில் அடர்ந்த பகுதியில் அவர்களை நிறுத்தி, வாயில் விரலை வைத்து அமைதியாய் இருக்கும்படி செய்துவிட்டுத் தேடினான். ஒரு சில நிமிடங்களிலேயே அப்பறவைகளைக் கண்டு அவர்களிடம் காட்டினான். அந்தத் தவளைவாயன்கள் அசையாது அப்படியே தலையை மேல்நோக்கி வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தன. சட்டெனப் பார்த்தால் அவை அங்கு இருப்பதே தெரியாது.

அவர்கள் அதைப் பல விதத்தில் போட்டோ எடுத்தும், தங்கள் பறவைக் கையேட்டுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதுமாய் அரை மணி செலவழித்தனர். எல்லோரும் வந்த வழியே திரும்பி நடக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் அங்கே இன்னோரு பறவையும் பார்த்தான். ஆம்! அது ஓரியண்டல் வளைகுடா ஆந்தை (Oriental Bay-Owl: Phodilus badius). இந்தப் பகுதியில் முதல் முதலாய் இப்போதுதான் அந்தப் பறவையைப் பார்க்கிறான். ஆச்சர்யத்தோடு அந்த இடத்தை மனதில் நிறுத்திக் கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

ஒரு கால் மணி நேர நடையில் அந்த இரு வெளிநாட்டவர்களில் ஒருவரின் கண்களில் கீழே இறந்து கிடந்த நான் பட்டுவிட்டேன். என்னைக் கையிலெடுத்து இது என்ன மிருகம் என்று காமராசனிடம் வினவ, அவன் சற்றுத் தடுமாறித்தான் போனான். ஏனென்றால் அவனே அப்போதுதான் என்னைப் பார்க்கிறான். அதற்குள் பாலூட்டிகள் கையேட்டை ஆராய்ந்த மற்றோருவன் ‘திருவான்கூர் பறக்கும் அணில் என்றான்’.

(தொடரும்)

பகிர:
nv-author-image

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *