Skip to content
Home » காட்டு வழிதனிலே #19 – பொறி

காட்டு வழிதனிலே #19 – பொறி

தோலாக, நகங்களாக, எலும்புகளாகப் பிரிக்கப்பட்ட நான், மூடி, அரசு முத்திரையிடப்பட்ட ஓர் அட்டைப் பெட்டியின் உள்ளே! அப்பெட்டியின் மேற்புறத்தில் ‘வழக்கு எண், பறிமுதல் செய்யப்பட்ட இடம், பறிமுதல் செய்யப்பட்டத் தேதி’ என நிறைய குறிப்புகள் இந்தியில் எழுதப்பட்டிருந்தன. அது மும்பையில் பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்குக் கடத்தல் பொருட்களை வைத்திருக்கும் முக்கியமான அறை. தமிழகத்தின் அவலான்ச்சியில் பிறந்த நான், எப்படி இந்த மும்பையில், அதுவும் உயிரற்ற பொருட்களாய்?

அரசூர் பேருந்து நிலையத்தில் கோயம்புத்தூரில் இருந்து வந்த ஓர் அரசுப் பேருந்தில் இருந்து அவர்கள் ஆறு பேரும் இறங்கினார்கள். ராகுல், சோனு, துள்சி, நிதின், பிமலா, சுனிதா என்பது அவர்களின் பெயர்கள். அதில் ராகுல், சோனு, பிமலா ராஜஸ்தான் மாநிலத்தையும், துள்சி பஞ்சாப்பையும், நிதின், சுனிதா ஹரியானாவையும் சார்ந்தவர்கள். மாநிலங்கள் வேறுபட்டாலும் இவர்கள் அனைவரும் பவாரிய* இனத்தைச் சேர்த்தவர்கள். அவர்கள் அனைவரின் கைகளிலும் நான்கு கம்பளிப் போர்வைகளும், தோளில் ஒரு பையும் இருந்தன. அட! புரிந்து கொண்டு விட்டீர்களே! ஆம், கம்பளி விற்கும் வட இந்தியர்களேதான். பயம் வேண்டாம்! அவர்களின் உரையாடலைக் கொடுக்க நேர்ந்தால் தமிழில்தான் கொடுப்பேன்.

அந்த ஐவரும் பகலில் பிரிந்து கம்பளி விற்கப்போவதும், இரவில் இணைந்து பேருந்து நிலையத்தில் உறங்குவதுமாய் இருபது நாட்களைக் கழித்து விட்டனர். எனக்கென்னமோ அவர்கள் கம்பளி விற்பவர்கள் மாதிரி தெரியவில்லை. ஏனென்றால், அவர்கள் வைத்து இருக்கும் கம்பளிகளின் எண்ணிக்கையில் இதுவரை எந்த மாற்றமுமில்லை. ஆனால் அவர்களுக்குக் காவல்துறையிலிருந்து பொதுமக்கள் வரை அனைவரையும் நண்பர்களாக்கும் வித்தைத் தெரிந்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் அருகே ஒரு பண்ணைத் தோட்டத்தில் பணியாளர்களாய் வேலைக்குச் சேர்ந்து, அங்கிருந்த சிறு அறையில் தங்கி வாழவும் ஆரம்பித்துவிட்டனர்.

நான் இருக்கும் இடம் ஊட்டியில் இருந்து 29 கிலோ மீட்டரில் உள்ள அவலான்ச்சி! நல்ல மழைக்காடுகளைக் கொண்ட வனத்துறையின் கீழ் உள்ள ஒரு பகுதி. இங்குள்ள ஒரு குகையில்தான் என் தாய் 105 நாட்கள் வயிற்றில் சுமந்து பின் நான்கு குட்டிகளில் ஒன்றாய் என்னையும் பெற்றெடுத்தாள். மூன்று வாரங்கள் கண் திறக்காது இருந்து பின் இவ்வுலகைப் பார்க்க ஆரம்பித்தேன். உலகென்ன உலகு! அவலான்ச்சியைச் சுற்றி 30 மைல் சுற்றளவில் இருந்த மழைக்காடுதான் என்னுலகு.

சரியாய் இரு மாதங்கள் கழித்துதான் என் தாய் என்னை அந்தக் குகைக்கு வெளியில் அழைத்து வந்தாள். அவளுடன் சேர்ந்து காட்டைப் பயின்றேன். இரண்டு வருடங்கள் எனக்கு வேட்டையாடுவது எப்படி, இரையைத் தேர்ந்தெடுப்பது எப்படிப் போன்றவற்றை என் தாய் கற்றுக் கொடுத்தாள்.

சிறு தவளையில் ஆரம்பித்து பெரிய மிளா வரை எங்களின் இரைகளின் பட்டியல் விரிந்தது. அதற்கு மாறாக மழைக்காடுகளின் பரப்போ சுருங்கிக் கொண்டிருந்தது. வயிற்றில் ஏதேனும் கோளாறு ஏற்படும்போது மட்டும், வாந்தி வரச்செய்ய புற்களை உண்பதுண்டு. என் நகங்கள் தேவைப்படும் போது மட்டுமே வெளியில் நீளும்படியும் மற்ற நேரங்களில் உள்ளே இருக்குமாறு பரிணமித்திருக்கின்றன. அதனால் நாயினம் போன்று தடத்தில் நக அச்சுப் படாது.

நல்ல பார்வைத் திறனும், கேட்கும் திறனும் எங்களை மேலும் வலுவான மிருகங்களாய் ஆக்கியுள்ளன. இரவில் பெரும்பாலும் வேட்டையாடினாலும் பகலிலும் சில நேரங்களில் அது நடக்கும். இரு வருடங்கள் கழித்துத் தாயிடம் இருந்து பிரிந்து, ஒரு வருடம் ஓர் இடத்தில் இராது எங்கும் அலைந்து திரிந்திருக்கிறேன். நன்கு வளர்ந்த எம்மின ஆண், பெண் தனக்கென ஓர் இடத்தை நிர்ணயித்து அதை மற்றவர்களிடம் இருந்து பாதுகாக்கவும் செய்யும். அது போன்ற இடங்களுக்கு சென்று துரத்தப்பட்டும் இருக்கிறேன்.

என் தாயும் தந்தையும் மட்டும் அவர்களிடத்தில் என் ஊடுருவலைப் பெரிதாய் எடுத்துக் கொண்டதில்லை. அவ்வருட இறுதியில் ஒரு வயதான ஆண் அதன் இடத்தை என்னிடம் இழந்தது. அன்றிலிருந்து ஆறு வருடங்களாய் இப்பகுதியில்தான் என் வாசம். நான் ஆணாய் இருப்பதால் என்னுடைய பாதுகாக்கப்பட்ட இடத்தில் மூன்று பெண்களின் பாதுகாக்கப்பட்ட இடங்களும் அடக்கம். பெண் பாதுகாக்கும் இடம் ஆண் பாதுகாக்கும் இடத்தைவிட சிறிது. அவ்விடத்தில் தேர்ந்தெடுத்த சில இடங்களில் சிறுநீரைத் தெளிப்பதன் மூலம் தங்களை இணைக்கு வெளிப்படுத்தி வைத்திருப்பார்கள். அதுவே எங்களிடையே தொடர்பை ஏற்படுத்தும் காரணி.

பருவகாலத்தில் மட்டும் இவர்களுடன் சில நாட்கள் சேர்ந்து கழிப்பதுண்டு. மற்றபடி எம்மினத்தில் எல்லோருக்குமே ‘என் வழி, தனி வழி’ கொள்கைதான். என் குரலைச் சங்கத்தமிழ் ‘புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி’ – (பெரும். 156) எனப் பதிவிடுகிறது. அதாவது மத்தினால் தயிர் கடையும்போது உருவாகும் ‘கர்..கர்’ போன்று என் குரலாம்! உண்மையில் துணைத் தேடும்போது நான் இவ்வொலி எழுப்புவதுண்டு.

நாம் ஆரம்பத்தில் சந்தித்த அந்த ஆறு பேரில், நால்வரை முதன் முதலாய் அவலான்ச்சியில், காட்டில், அதுவும் மாலை நேரத்தில் பார்க்கிறேன். காட்டில் அன்னியர்களை இதுவரை பார்த்து இல்லை. வனத்துறையினரே வருடத்திற்கு ஒரு முறைதான் கணக்கெடுப்புக்கு வருவார்கள். அந்த நால்வருடன் ‘குன்மாரி!’. குன்மாரி இங்கேயே வாழும் ஒரு மலைக்குடி. இவர் எப்படி அவர்களுடன்? நான் என் வேலையைப் பார்க்க ஆரம்பித்தேன்.

அவர்கள் வாராவாரம் இப்பகுதிகளில் என் கண்ணில் படுகிறார்கள். சில நாட்களாய் என் இடத்தில் இருந்த இரு பெண்களின் உறுமல் சத்தமும் இல்லை. அவர்களால் பாதுகாக்கப்பட்ட இடத்தில் அவர்களின் சிறுநீர் வாசமும் இல்லை. புதிராய் இருந்தது. இந்த இடம் இரைகளுக்கு இன்னமும் ஒரு நல்ல இடமாகவே இருந்து வருகிறது.

அந்த நால்வரும் அந்த இடத்திற்கு வந்தவுடன் நின்றார்கள். ஒருவர் தன்னுடன் சுமந்து வந்த சாக்கு மூட்டையை அவிழ்த்து நான்கு ‘jaw trap’ பொறிகளையும் வெளியே எடுத்தான். ‘நான் இரண்டை செட் பண்றேன், நீ ரெண்டை செட் பண்ணு’ என்று மெதுவாய் கூறியவாறு எடுத்துச் சென்றார். தன் பாக்கெட்டில் இருந்த பான்பராக் பாக்கெட்டை எடுத்து ஒரத்தில் கிழித்து அதில் இருந்த அனைத்தையும் வாயில் கொட்டினார் மற்றவர். கிழித்த பாக்கெட்டைத் தூக்கி எறிந்து விட்டுக் கண்ணை மூடி தலையைப் பலமாய் ஓர் ஆட்டு ஆட்டினார். பாக்கின் சுவை சுர்ரென மண்டைக்கு ஏறியதும் கண்ணைத் திறந்த அவரும் இரண்டு பொறிகளை எடுத்து வைத்தார். என்ன ஆச்சர்யம்! அவர்கள் பொறி வைத்த இடங்கள் நான் வழக்கமாய் நடந்து போகும் இடங்கள். அப்படியென்றால்! இத்தனை நாளும் நான் கவனிக்கப்பட்டு இருந்திருக்கிறேன்!

இதோ நான் இரைத்தேடி அவ்விரவில் நடக்க, கால் பொறியில் சிக்க, மறைந்திருந்த நால்வரும் வெளியில் வர, ஒருவன் சுளுக்கி போன்ற ஒன்றை என் மூக்கில் குத்துவதுபோல செய்ய, அதை நான் பட்டென வாயில் கவ்வ! தவறிழைத்து விட்டேன். திடீரென அவன் கொடுத்த அழுத்தத்தில் சுளுக்கி நேராய் தொண்டையில் இறங்கியது. சிறிது சுதாரிக்கும் முன்னே மற்றொரு சுளுக்கியும் வாயின் வழியே இறங்கியது. மூச்சுக்குழாய் சிதைக்கப்பட்டுச் சிறிது நேரத்தில் மயக்கமானேன்.

மிக விரைவாய் அவர்கள் வேலையைத் துவங்கினர். என் வாய் கம்பியால் கட்டப்பட்டது. உயிருடனே என்தோல் உரிக்கப்படும் இடைவெளியில் என் உயிரும் பிரிந்தது. என் தோல் முழுதுமாய் உரிக்கப்பட்டது. நகங்களும் பற்களும் பிடுங்கப்பட்டன. என் உடல் அங்கிருந்து தூக்கிச் செல்லப்பட்டு ஏற்கெனவே தோண்டப்பட்டு மறைக்கப்பட்டிருந்த ஓர் இடத்தில் புதைக்கப்பட்டு, பழையபடி மூடப்பட்டு, மறைக்கப்பட்டது. இதற்கு முன் அவர்கள் என் ஆணுறுப்பை மட்டும் வெட்டி எடுத்து, அங்கேயே நெருப்பு மூட்டி, சுட்டு, பகிர்ந்து உண்டனர். குன்மாரி அதைச் செய்யவில்லை. இதெல்லாம் முடிந்தவுடன் அந்த இடம் இது நடந்த தடமறியாதவாறு அவர்களால் சுத்தமாக்கப்பட்டு விட்டது. அந்தப் பான்பராக் பாக்கெட் மட்டும் இன்னமும் அங்கே அப்படியே! அவர்கள் சென்று விட்டார்கள்.

இது நடந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஒருங்கிணைந்த விலங்குகள் கணக்கெடுப்பிற்காக வந்தவர்களில் ஒருவர் அந்தப் பான்பராக் பாக்கெட்டைத் திட்டிக்கொண்டே எடுக்க, ‘இந்த இடத்திற்கு யாரும் வரமாட்டாங்களே! இதெப்படி’ என்றவாறே அந்த வனத்துறை அதிகாரி கோபத்துடன் தன் கீழ்ப் பணிபுரிபவர்களைப் பார்க்க, அதில் கணேசன் என்ற வனக்காவலர், ‘சார் அது இந்த மலைக்குடி யாராவது..’ என ஆரம்பித்து பின் வாய் மூடிக்கொண்டார். சுமார் ஒருமாதம் முன் ஊட்டி வனஅலுவலகத்தில் பணி நிமித்தமாய் இருந்தபோது இந்தக் குன்மாரி அங்கு இருந்த பெட்டிக் கடையில் பான்பராக் வாங்குவதைப் பார்த்திருக்கிறார். குன்மாரி இதுபோன்ற எதுவும் உபயோகிப்பவர் அல்ல என்று கணேசனுக்குத் தெரியும். அவர் அருகில் ஒரு வடஇந்தியனையும் பார்த்ததாக நினைவு.

இந்நிலையில் அடுத்த மாதத்தில் சென்னை வனவிலங்குக் குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகத்தில் இருந்து சில அதிகாரிகளுடன் கோயம்புத்தூர் வனத்துறை உயர் அதிகாரிகளும் இப்பகுதிக்கு ஓர் ஆய்வுக்கு வந்தனர். அதில் ஒருவர் வனக்காவலர்களை எல்லாம் அழைத்து, ‘இங்கு ஏதோ கடத்தல் நடந்து வருவதாய் எங்களுக்கு நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்திருக்கு. கொஞ்சம் ஜாக்கிரதை! வித்தியாசமாய் ஏதேனும் இருந்தால் கவனிக்கவும்’ என்றார்.

கணேசனுக்கு இதெல்லாம் சற்று வியப்பாய் இருந்தது. அன்று அவரின் கனவில் குன்மாரி அடிக்கடி வந்தார். விடிந்தவுடன் தன் குடியிருப்பில் இருந்து வெளியே வந்து அமர்ந்து கொண்டார். அங்கேயிருந்து பார்த்தால் பேருந்து நின்று போகும் இடம் நன்கு தெரியும். அதற்கு மேல் செல்லும் ஒற்றையடிப் பாதைதான் மலைக்குடியினர் இடத்திற்கு போக வர! ஐந்து வருடங்களாய் இங்கு இருப்பதால் அனைத்து மலைக்குடியினரையும் அவருக்குத் தெரியும். மொத்தமாகவே முப்பது பேர்களைக் கொண்டதுதான் அக்குடியிருப்பு. அதோ குன்மாரி! தனியே வந்து கொண்டிருந்தார்.

மலைக்குடிகள் பேருந்தைப் பெரும்பாலும் தவிர்த்து விடுவார்கள். ஊட்டி போவதாய் இருந்தால் மட்டுமே அவர்களுக்குப் பேருந்து. குன்மாரி அந்த நிறுத்தத்தில் போய் நின்று கொண்டார். ஒரு பீடி எடுத்துப் பற்றவைத்த நேரத்தில் கணேசனைப் பார்த்து விட்டார். உடன் முகம் திருப்பிக் கொண்டார். கணேசன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அடுத்தடுத்த நிகழ்வுகளில் குன்மாரி கணேசனைப் பார்ப்பதும் சட்டென முகத்தைத் திருப்புவதுமாய்! ஏதோ ஒரு தவறின் தொடக்கப் புள்ளியோ? கணேசனுக்கு உள்ளுணர்வு சொன்னது.

அன்றைய பணியில் இதை முழுவதுமாய் மறந்து மாலை அலுவலக அறையில் இருந்து சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள வெளியே வந்தால், தூரத்தில் குன்மாரி பை நிறைய வீட்டுப் பொருட்களுடன் மேலே ஏறிக் கொண்டிருந்தார். பேருந்து போய்க் கொண்டிருந்தது. திரும்ப நினைக்கையில் பொம்மன் கணேசனை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவரும் மலைக்குடிதான். அருகே வந்து ‘ஐயா! ஊட்டி ஆப்பிஸ்ல இதைக் கொடுக்க சொன்னாங்க’ எனக் கூறி நாலைந்து தபால்களைக் கொடுத்து கிளம்ப எத்தனிக்கையில் ‘கொஞ்சம் இரு பொம்மா’ என்றார் கணேசன்.

‘என்ன பொம்மா எப்படி இருக்கீங்க’

‘ஐயா சுவம்யா! சொல்லுங்க’ என்றார் பொம்மா.

‘என்ன குன்மாரி…’ எனக் கணேசன் ஆரம்பிக்கும் முன்னே ‘ஐயா எனக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லையா!’ என்றார் பொம்மன். கணேசன் ஒரு நிமிடம் ஆடித்தான் போனார். மெதுவாய் அவர் தோளில் கைப்போட்டு அறைக்குள் கூட்டிச் சென்றார். ‘எதுக்கும் உனக்கும்!’ என்றார் கணேசன்.

“உங்களுக்குத் தெரியாம ஒரு நாலு வடஇந்திய மலைக்குடி மக்களுக்கு நம்ம காட்டைச் சுத்திக் காட்டினார்.. அவங்ககிட்ட காசெல்லாம் கிடையாதாம்’ என்றார் பொம்மன்.

அவரிடம் மேலும் பக்குவமாய், ‘எப்போது வந்தனர்? எவ்வளவு நேரம் இருந்தனர்?’ போன்ற தகவல்களை வாங்கிக் கொண்டு விசாரித்ததை யாரிடமும் பகிர வேண்டாம் எனக் கூறி கணேசன் பொம்மனை அனுப்பி விட்டார்.

இது நடந்த இரு வாரங்களுக்கு முன்பே அந்த ஆறு பேர்களில் இருவர் என் தோல், நகங்கள், எலும்புகளை எடுத்துக்கொண்டு கோயம்புத்தூரில் இருந்து மும்பைக்கு இரயிலில் சென்று, அங்கிருந்து 20 கிலோமீட்டர் பயணம் செய்து ஒரு கிராமத்தில் இருந்த வீட்டில் அப்பொருட்களைக் கொடுத்துவிட்டு மீண்டும் அரசூர் வந்து விட்டனர்.

கணேசன் மறுநாள் காலையிலேயே தன்னுடன் பணி புரியும் சுப்ரமணியைக் கூட்டிக் கொண்டு மலைக்குடிப் பகுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அவர்கள் சரியாய் இரண்டு மணி நேரத்தில் மலைக்குடியை அடைந்தனர். சிறிது நேரம் அந்த வேலிப் பகுதியிலே அமர்ந்து விலங்கு கண்காணிப்புக்கு வந்ததுபோல் வெளியில் நின்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தனர். ஒரு பத்து நிமிடத்திலேயே அங்குப் பொம்மன் வர, கணேசன் பொம்மன் மட்டும் அறியுமாறு வாயில் விரல் வைத்து சமிஞ்கை செய்தார்.

அவர் அருகில் வந்ததும் மற்றவர்களைப் போகச் சொல்லிவிட்டு ‘குன்மாரி வீடு ஏது?’ என மெதுவாய் கேட்க, பொம்மன் ஒரு குடிலைக் காட்ட, அவரும் அதை உறுதிப் படுத்திக் கொண்டு அவ்வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். வீட்டில் குன்மாரி!

இவர்களைப் பார்த்ததும் மிரண்டு விட்டார். பட்டெனச் சுப்ரமணி குன்மாரியைப் பிடித்துக் கொள்ள, கணேசன் குன்மாரியின் வீட்டை ஆராய ஆரம்பித்தார். ஒரு பானையில் மட்டும் ஒன்பது ஐநூறு ரூபாய்தாள்கள் இருந்தன. மற்றபடி புதிதாய் எதுவும் இல்லை. வித்தியாசமாய் ஒரு பானை நிறைய சிறியதும் பெரியதுமாய் எலும்புத் துண்டுகள் இருந்தன.

கணேசனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘எலேய் என்னடா பண்ற!’ எனக் கேட்டவுடனே ‘ஐயா! வுட்ருங்கையா! தெரியாம செஞ்சுட்டேன்!’ எனக் கூறிக்கொண்டே சுப்ரமணியையும் இழுத்துக் கொண்டு காலில் விழுந்தார் குன்மாரி. ஏதோ நடந்திருக்கிறது என்பதை ஊகித்த சுப்ரமணி, பட்டென அங்குக் கிடந்த கயிறொன்றால் குன்மாரியின் கையைக் கட்டிவிட்டார். குன்மாரி எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

‘சொல்லுடே! என்ன செஞ்ச’ எனக் கணேசன் கேட்க ‘மூணு புலியும் இரண்டு சிறுத்தையும்யா’ என்றார் குன்மாரி. கணேசனுக்கும் சுப்ரமணிக்கும் இதயத் துடிப்பு நின்றே விட்டது. கணேசன் அவசர அவசரமாய் அங்கிருந்த குவளையில் இருந்த நீரை எடுத்து மடக் மடக்கென குடித்தார். அவர் பத்து நிமிடம் எதுவும் பேசவில்லை. அவரின் கண்கள் அந்த எலும்புகளையே பார்த்துக் கொண்டிருந்தன. ‘எல்லாத்தையும் எடுடா’ எனக்கூற, குன்மாரி தயங்கித் தயங்கி வீட்டின் பின்பறம் அழைத்துச் சென்றார்.

அங்கு இருந்த கூரையில் சுருட்டி வைக்கப்பட்ட ஒரு சிறுத்தையின் தோலை மட்டும் காண்பிக்க, கணேசன் அதை அவரமாய் உருவி எடுத்தார். அது உப்பும் மஞ்சளும் தடவி வைக்கப்பட்டு இருந்தது. ‘மீதியெல்லாம் அவங்கள்ட குடுத்திட்டேன்யா’ என்றார். அவர்கள் அவசர அவசரமாய் மேலும் ரெண்டு மலைக்குடியினரின் உதவியுடன் எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு கீழே அலுவலகத்துக்குச் செல்ல ஆரம்பித்தனர்.

அலுவலகத்தில் இருந்து ஊட்டி அலுவகத்திற்குத் தொடர்பு கொண்டு செய்தியைப் பகிர அடுத்த இரண்டு மணி நேரத்தில் ஊட்டி அலுவலக உயர் அதிகாரிகளுடன் வாகனங்கள் அவலான்ச்சியை வந்தடைந்து, குன்மாரியிடம் சில விசாரணைகளைச் செய்துவிட்டு, (ஒரு சில அடிகள், மிரட்டல்களுடன்தான்) குண்மாரியையும் அழைத்துக்கொண்டு ஊட்டி புறப்பட்டது. அன்றே சென்னைக்கும் தகவல் தெரிவிக்கப்பட, மறுநாள் மாலை அரசூரில் ஆறு பேரும் மடக்கப் பட்டனர்.

அவர்களின் தகவலின் பெயரில் மும்பையின் அருகே உள்ள ஓர் இடத்தில் ஏறத்தாழ என்னைப்போல் பலரின் பொருட்களைப் (அட! தோல், நகங்கள், எலும்புகள்தான்) பறிமுதல் செய்தனர். இதற்கெல்லாம் மூளையாய் ராஜஸ்தான் மாநில அல்வார் மாவட்டத்தில் உள்ள தானகாசியைச் சேர்ந்த சன்சார் சந்த் செயல்பட்டதாய் கூறி கைதுசெய்யப்பட்டாலும், அவன்தான் என்பதை நிருபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறிப் பின்னர் நீதிமன்றம் விடுவித்துவிட்டது.

சன்சார் சந்த் மீது மட்டும் 200 புலிகளைக் கொன்ற வழக்குகள் உள்ளன. சிலவற்றில் அரிதாய் சில தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் பெரும்பாலும் அவர் இதுவரை பெரிதாய் சிக்கியதில்லை. அதற்குக் காரணம் அவர் இதில் நேரிடையாய் ஈடுபடாததுதான். குன்மாரி உட்பட அந்த ஆறு பேருக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை கிடைத்தது. அவாலான்ச்சியில் இருந்து நாங்கள் ஜந்து பேரும், சரிஸ்கா புலிகள் சரணாலயத்தில் இருந்து ஒரு எட்டு பேரும் இன்றும் மும்பையின் பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்குக் கடத்தல் பொருட்களை வைத்திருக்கும் அறையில் உயிரற்ற பொருட்களாய்!

(தொடரும்)

 

________
* 1881ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவர்களை வேட்டையாடும் சமூகம் என்று விவரித்தது, அவர்கள் காட்டு விலங்குகளை வலையில் சிக்க வைக்கும் பாவர் அல்லது கயிறு என்ற வார்த்தையிலிருந்து தங்கள் பெயரைப் பெற்றனர். பவாரியாக்கள் ‘குற்றங்களுக்கு மிகவும் அடிமையானவர்கள்’ என்றும், திருடுவது அவர்களுக்கு எளிதில் வந்துவிடும் என்றும், ‘வன விலங்குகளைக் கண்காணிப்பதில் அவர்களின் திறமை இழிவானது’ என்றும் அது கூறுகிறது.

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *