1947ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெயங்கொண்ட சோழபுரத்தில் இருந்து கங்கைகொண்ட சோழபுரம் வரை பெரும்பாலும் முந்திரிக் காடுகளும் குறுஞ்செடிகளுடன் கூடிய புல்வெளிக் காடுகளும்தான் நிறைந்து காணப்பட்டன. முற்றிலும் வானம் பார்த்த பூமி. மழை பெய்தால் ஆங்காங்கே இருக்கும் ஏரிகள் நிரம்பி விவசாயத்திற்கு உதவும் சூழல்தான்.
அப்பகுதியில் இருக்கும் ஏரிகளிலேயே பொன்னேரி சற்றே பெரிது. பாண்டியனுக்கு அப்போது 17 வயது. ஐந்து வருடங்களுக்கு முன் ஜெயங்கொண்டத்தில் கட்டப்பட்ட மாதக்கோவிலில் இரு ஆண்டுகளாய் பணி செய்து வருகிறான். ஒவ்வொரு வார இறுதியிலும் விருத்தாசலத்தில் இருந்து ஃபாதர் பிரான்சிஸ் வந்து பூசைகளைச் செய்துவிட்டு திங்கள் காலை திரும்பிச் சென்று விடுவார். பாண்டியன் அவருக்கு உதவி செய்வது மட்டுமன்றி அவர் இல்லா நாட்களில் அக்கோவிலை அவன்தான் பார்த்துக் கொள்வான். அவனது குடிசை அக்கோவில் சார்ந்த இடத்திற்கு அடுத்துதான் இருந்தது. அதுதான் அவனுக்கு அங்கு வேலை கிடைத்ததற்குக் காரணம்.
ஃபாதர் பிரான்சிஸ் பூசை நேரம் தவிர்த்து பாண்டியனை அழைத்துக் கொண்டு அருகே உள்ள ஏரிப் பகுதிகள், முந்திரிக் காடுகள், புல்வெளிக்காடு நோக்கிப் புறப்பட்டுச் சென்று பறவைக் காணல் செய்வதைப் பழக்கமாக்கி வைத்திருந்தார். ஆரம்பத்தில் பாதருக்கு வெறும் உதவிக்காகச் சென்ற பாண்டியன் கொஞ்சம் கொஞ்சமாய் பறவைகளின்பால் ஈர்க்கப்பட்டுக் கடந்த சில மாதங்களில் பறவைக் காணலில் நன்கு தேர்ந்து விட்டான்.
இன்றும் காலைப் பூசையை முடித்துவிட்டு இருவரும் பொன்னேரியின் அருகே இருந்த ஒரு புல்வெளிக்காட்டிற்குச் சென்று பறவைக் காணலைச் செய்ய ஆரம்பித்தனர். அது அவர்களுக்கு அறிமுகமான இடம்தான். பலவிதமான பறவைகளைப் பார்த்து ஃபாதர் குறிப்பெடுத்துக் கொண்டார். பாண்டியனுக்கு அந்தப் பழக்கம் இன்னமும் முழுதுமாய் வரவில்லை. ஆனால் அவரைவிட பாண்டியன் ஆர்வமாய் பறவைக் காணலைச் செய்து கொண்டு இருப்பான்.
புதுப் பறவைகளை ஃபாதருக்கு முன்பே இவன் கண்டுபிடித்து விடுவான். நேரம் மதியத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது தூரத்தில் மணல் நிறம் தோய்ந்த வெளிர் மஞ்சள் நிறமாக, முதுகில் கருப்பு நிற அம்பு வடிவமான சிறு கோடுகளையும், தொண்டையிலும் மார்பிலும் இரு கருங்கோடுகள் கொண்ட வீட்டுக் கோழிபோல ஒரு பறவையைப் பார்த்து விட்டான். அவன் உள்ளுணர்வு ‘அது புதிய பறவை’ எனச் சொல்லிவிட்டது.
‘ஃபாதர்! ஃபாதர்! இந்தப் பக்கம் கொஞ்சம் வந்து அங்க பாருங்க!’ என அழைத்தான்.
பாண்டியன் ஏதோ புதிதாய் பார்த்து விட்டான் என்பதை அனுபவத்தால் உடன் அறிந்த ஃபாதர், அவனை நோக்கி வேகமாயும் சப்தம் எழுப்பாமலும் சென்று அவன் கை காட்டிய திசையில் தன் பைனாகுலரின் வழியே பார்த்தார். ஒரு சில நிமிடங்கள் அமைதியாய் கழிந்தன. தன் கண்களுக்குப் பைனாகுலரில் இருந்து விடுதலைக் கொடுத்த பாதர் முகமலர்ச்சியுடன் பாண்டியனை நோக்கி,
‘அது வரகுக் கோழி (Lesser Florican: Sypheotides indicus) பாண்டியா! ஒரு புதுப் பறவை இவ்விடத்திற்கு’ என்றார். ‘இது பெண் பறவை! ஆண் பறவை இருக்கான்னுத் தேடு!’ என்றும் கூறினார்.
பாண்டியன் வழக்கமான முறையில் அப்பறவையையே பார்த்துக் கொண்டிருந்தான். இதுதான் அவன் பறவைகளை அதன் நிறம், நடத்தை, அளவு போன்றவற்றை மனதில் நிறுத்தச் செய்ய கடைப்பிடிக்கும் முறை. அந்த இடத்தில் உயரமான புற்களும் புதர்களும் நிரம்பி இருந்தன. ஒரு முட்செடியின் கீழ் உள்ள நிழலில் அந்த வரகுக் கோழி அமர்ந்திருந்தது.
பசி எடுக்க ஆரம்பித்ததால் ஃபாதர், ‘என்ன போகலாமா?’ என்றார். பாண்டியனும் தலை அசைத்துக்கொண்டே அவருடன் பின் சென்றான். மறுநாள் மீண்டும் அதேபோல் அதே இடத்தில் இருவரும். பாண்டியன் மட்டும் வரகுக் கோழியைத் தேடிக் கொண்டிருந்தான். ஏறத்தாழ ஒரு மணி நேரத் தேடலின் பின் நேற்று பார்த்த இடத்தில் இருந்து வெகு தூரத்தில் அக்கோழியைக் கண்டான். இன்றும் பெண்தான் இருந்தது.
ஃபாதர் அக்கோழியை மஹாராஷ்டிராவில் பணிபுரியும்போது பார்த்து இருந்ததினால் அவரின் கவனம் வேறு பறவைகளை நோக்கிச் சென்றது. பாண்டியனுக்கு இது புதிது. அப்பறவையை விட்டு அவன் வேறு பறவைக்குப் போக மனமில்லை. அப்பறவையின் நடத்தைகளை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான். திறந்த புல்வெளியில் சிறு சிறு பூச்சிகளைப் பிடித்து அது சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இடை இடையே தானியங்களையும் உண்டது. இரண்டு மணியாகியும் ஆண் பறவை எதுவும் கிட்டாததால் கோவிலுக்குத் திரும்ப ஆரம்பித்தனர். வரும் வழியில் அதேபோல் மற்றொரு பறவை மற்றோரு இடத்தில்! இது சற்று அளவில் சிறிது போல் இருந்தது.
ஃபாதர் ‘பாண்டியா! இதுதான் ஆண்’ என்றார்.
அதைச் சில நிமிடங்கள் பார்த்துப் பின் கோவிலுக்குத் திரும்பினார்கள். மாலை பாண்டியனை அழைத்த ஃபாதர் அவனை அருகில் உட்காரச் சொன்னார்.
‘பாண்டியா, இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்கப் போகிறாங்க! என் வேலை இந்தியாவில் முடிந்து விட்டது. அதனால நான் லண்டனுக்குத் திரும்பிப் போகப் போறேன். அப்புறம் திரும்பி வருவது சிரமம்’ என்றார்.
ஃபாதர் எனக் கத்தியே விட்டான் பாண்டியன்.
‘பொறுமையாய் இரு!’ என்றார் ஃபாதர்.
‘என் நண்பனோட பையன் ஊட்டிக்கு அருகில் ஒரு தேயிலைத் தோட்டத்தை இப்போதான் வாங்கிப் போட்டிருக்கான். அவனுக்கு உதவியாய் அங்க போயிடறயா என்றார்’.
‘எனக்கென்னயா, நீங்க சொன்னால் எங்க வேணும்னாலும்…’ என்றான் பாண்டியன்.
அவன் யாருமற்றவனாய் இருந்தது அதற்கு உதவியது.
அடுத்த சில மாதங்களில் சுதந்திர இந்தியாவில் ஊட்டியின் நடுவட்டத்தில் ஃபாதரின் நண்பரின் பையன் ஜஸ்டஸுடன் பாண்டியன்! ஜஸ்டஸ் பாண்டியனைவிட இரு வயதுதான் மூத்தவன். அதனால் பாண்டியனைப் பிடித்து விட்டது. அது மட்டுமன்றித் தன்னைப் போலவே அவனும் பறவைகளில் ஆர்வத்துடன் இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தே போய்விட்டான்.
ஒரு வருடத்திலேயே முதலாளி தொழிலாளி முறை மெதுவாய் மறைந்து தோழர்கள் ஆனார்கள். காலையும் மாலையும் பைனாக்குலர்களுடன் அவர்கள் யானைகள் நிறைந்த அப்பகுதியில் அலைய ஆரம்பித்தனர். அப்படி ஒரு நாள் செல்லும் போதுதான் மீண்டும் வரகுக் கோழியைப் பார்த்தான் பாண்டியன். ஜஸ்டஸுக்கு அதுதான் முதல் முறை! ஜஸ்டஸ் வெகு நேரம் அந்தக் கோழியை ரசித்துக் கொண்டிருந்தான். இருவரும் அந்தக் கோழியை ஒரு மாதத்திற்குத் தொடர்ந்து பார்த்து வந்தனர். அதன் பின்னர் அப்பறவை அவர்கள் கண்களில் சிக்கவில்லை.
ஜஸ்டஸ் குஜராத்தில் உள்ள தன் தந்தையின் நண்பர் தர்மகுமார் சின்ஜியிடம் அப்பறவையைப் பற்றி விசாரிக்க, அவர் அப்பறவையைப் பற்றி சொன்னது மட்டுமன்றி இவர்களை ஒருமுறை குஜராத் வந்து செல்லுமாறும் அழைத்தார். தர்மகுமார் சின்ஜி பாவ்நகர் மகாராஜா பரம்பரையின் கடைசி ராஜாவான கிருஷ்ணகுமார் சின்ஜியின் இளைய சகோதரர். அவர் மன்னர் பரம்பரையில் இருந்தாலும் பறவைகளில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். இவர்களைவிட 13 வயது மூத்தவர். லண்டனில் அவர் படிக்கும்போது ஜஸ்டஸின் தந்தைக்குப் பழக்கம்.
அது முடிந்து சில மாதங்கள் கழித்து ஒரு நாள் இருவரும் குஜராத் சென்று அவரின் உதவியுடன் பஞ்ச்மகல் மாவட்டத்தில் உள்ள ராம்புரா புல்வெளித் தளத்தில் இந்த வரகுக் கோழியின் இனப்பெருக்க நிகழ்வுகளைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற்றனர். அப்போதுதான் ஆண் பறவையின் நிறங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்தனர். பருவ காலத்தில் கருமையைத் தன் தலை மற்றும் கழுத்துப் பகுதிகளில் பெறுவது மட்டுமன்றி, தன் தலையில் சில சிறப்புக் கொண்டை இறகுகளையும் ஆண் பெற்றிருப்பதை அறிந்தனர்.
ஆண் பறவை நின்றுகொண்டு தன் கழுத்தை உயர்த்தி தன் தொண்டை மற்றும் தாடைப் பகுதிகளிலும் உள்ள வெண் சிறகுகளை நன்கு விரித்தது. பின், காலைக் கிழே அழுத்தி வானில் எழும்பியது. இறக்கைகளை வேகமாய் அடித்துக் கொள்வதன் மூலம் இரண்டு மீட்டர் உயரம் எழும்பியது. அப்பொழுது தன் கழுத்தைப் பின் பக்கம் ஒரு திரும்பிய கேள்விக்குறிபோல் வளைத்து வைத்திருந்தது. பின்னர் இறக்கைகளை மடக்கி கீழிறங்கி சில நிமிடங்கள் கழித்து மீண்டும் மேல் சொன்னது போலவே செய்தது.
இது ஒரு 10 நிமிடங்கள் தொடர்ந்தது. மேல் எழும்போது இறக்கைகளால் எழுப்பப்படும் ஒரு சப்தம் கேட்டது. இது பருவ காலங்களில் ஆண் பறவைகளில் புதிதாய் முளைக்கும் முதன்நிலைச் சிறகுகளால் உருவாவது. பெண் பறவைகளில் இது முளைப்பதில்லை. அங்குள்ள புற்களின் உயரம்தான் இக்கோழியின் எழும்பும் உயரத்தைத் தீர்மானிக்கிறதாம். உயரம் நிறைந்த புற்கள் உள்ள இடத்தில் உயரமாயும், உயரம் குறைந்த புற்களிடைய குறைவான உயரத்திலும் எழும்புமாம் இக்கோழி. பருவ காலங்களில் தன்னை வெளிப்படுத்தச் செய்யும் நிகழ்வாதலால் இந்த உயர வேறுபாடு அவசியமாகிறது. இதெல்லாம் தர்மகுமார்சின்ஜி சொன்னது.
மூவரும் மாலை வரை இருந்து பார்த்துவிட்டுக் கிளம்பினர். வரும் வழியில் தர்மகுமார் சின்ஜி, ‘இப்பறவை கோழிபோல கால் நகங்களால் நிலத்தில் கீறி, சிறிய பள்ளம் போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதில் 3 அல்லது 4 முட்டைகள் இட்டு அடைகாக்கும்’ என்றார்.
‘எப்படியும் இருபது நாட்களுக்குக் குறையாமல் அடைகாத்துப் பின் கண் திறந்த நிலையில் குஞ்சுகள் வெளிப்படும்’ என்றார்.
அவருடன் நான்கு நாட்கள் இருந்து விட்டு, பின் நடுவட்டம் திரும்பினர்.
இருவரும் நன்கு உழைத்தனர். நன்கு பறவைகளை நோக்கினர். மக்கள் புல்வெளிக் காடுகளை அவசியமற்ற காடுகளாய் நினைக்க ஆரம்பித்தனர். அதற்குப் பணம் நிறைந்தவர்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளும் காரணமாய் இருந்தனர். புல்வெளிக் காடுகள் இருந்த பகுதிகள் குப்பை மேடுகளாகவோ, கட்டடங்கள் கட்டப்பட்ட இடங்களாகவோ மாறுதல் அடைந்தன. புல்வெளிக்காடுகள் சார்ந்த பறவைகள் போன இடம் தெரியவில்லை. அதைப்பத்தி பேசுவோரும் இல்லை. அதென்ன புலியா! முக்கியத்துவம் கொடுக்க!
பாண்டியனுக்கு மட்டும் அக்கோழி மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரக்கூடாதா என்ற ஏக்கம்! குறைந்தது வழி தவறியாவது! ஒவ்வொரு வருடமும் அக்கோழியை எதிர்பார்த்துக் காத்திருந்தான். இதுவரை ஏமாந்ததுதான் மிச்சம். ஜஸ்டஸும் பாண்டியனும் தொழில்சாரா விவாதங்களில் ஈடுபடும்போது இந்தக் கோழியும் புல்வெளிக் காடுகளும்தான் அதில் பிரதானமாய் இருக்கும்.
இருவருக்கும் வயதாகி விட்டது. தொழிலுக்குச் சற்று ஓய்வும் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். இருவரின் புதல்வர்களும் அவர்களின் தொழிலை எடுத்து நடத்த ஆரம்பித்துவிட்டனர். 1998இன் அதிகாலை வேளை ஒன்றில் பாண்டியனின் வீட்டில் ஜஸ்டஸின் கார் வந்து நிற்க, அதில் இருந்து இறங்கி பாண்டியனின் வீட்டுப் பணியாளர்களின் வணக்கங்களை வாங்கியும் திருப்பியும் தந்து, பாண்டியனின் அறை உள்ளே சென்றான் ஜஸ்டஸ். குளித்து அப்போதுதான் வந்த பாண்டியன்.
‘ஏய்! என்ன காலையிலே!’ என்றான்.
‘பாண்டியா! மேட்டுப்பாளைய வனக்கல்லூரியின் உள்ளே உள்ள வனாந்திரத்தில் வரகுக் கோழியை நேற்று பார்த்திருக்காங்க!’
பாண்டியனின் கண்களின் ஒரத்தில் நீர்த்துளி!
(தொடரும்)