Skip to content
Home » காட்டு வழிதனிலே #21 – மரம் அறுக்கும் இயந்திரம்

காட்டு வழிதனிலே #21 – மரம் அறுக்கும் இயந்திரம்

மரம் அறுக்கும் இயந்திரம்

வ்விர்ர்ர்ர்ரூம்! வ்விர்ர்ர்ர்ரூம்! என விட்டு விட்டு ஒலித்து நின்றது மரம் அறுக்கும் இயந்திரங்கள். அவைகள் என் கிளைகளைக் கலைக்கும் போதே எனக்குத் தெரிந்து விட்டது மனிதர்கள் என்னை அழிக்க முடிவெடுத்து விட்டனர் என்று! கிளைகள் ஒவ்வொன்றாய் என்னை விட்டுச் சரியும் போதே வலி போய் வேறொரு நிலையை நினைத்து வருந்தினேன். என்னால் எதிர்ப்பே தெரிவிக்க இயலாத நிலை!

ஆம்! வெறும் மரமான என்னால் என்ன செய்ய முடியும்?

அடுத்து என் அடிப்பாகத்தில் மீண்டும் அந்த வ்விர்ர்ர்ர்ரூம் ஒலி!

ஓர் அரை மணி நேரத்தில் கயிறு கட்டிக் கீழே சாய்க்கப் பட்டேன். முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டேன். வேரைத் தோண்டி எடுக்கப் பெரிய இயந்திரம் வேறு தயாராகி விட்டது. சாலைக்கு இடையூறாக இருந்ததால் இம்முடிவை எடுத்துச் சாய்த்து விட்டனர். 20 வயதில் இருந்த என்னை அழித்து விட்டனர். ஒரு புலியையோ யானையையோ சட்டென இது போல் முடிவெடுத்து அழிக்க முடியாது. நான் வெறும் மரம்தானே!

20 வருடங்களுக்கு முன் ஜூன் மாதம் ஒன்றில் என் விதையை மலை மைனா ஒன்று தன் கழிவுடன் வால்பாறையில் ஓர் இடத்தில் இருந்த பாறையின் மீது வெளியேற்றியது. அது அப்படியே அந்தப் பாறையில் வழிந்து ஓர் இடுக்கு வழியே உள்ளே சென்று அங்கிருந்த மண்ணை அடைந்தது. அடுத்த சில நாட்களில் நான் துளிர்க்க என் மனதும் துளிர்த்தது.

அட! இருங்க சொல்றேன்.

நான் ஓர் அத்தி மரம். ஆல் வகை சார்ந்த மரவகைகளில் நானும் ஒருவன். ஏறத்தாழ 735க்கும் சற்றே அதிகமான சிற்றின வகைகளில் நாங்கள் உலகில் இருக்கிறோம். பெரும்பாலும் நாங்கள் அனைவரும் நாங்கள் இருக்கும் இடங்களைச் சார்ந்த மதத்தால் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகவே சித்தரிக்கப்பட்டு இருக்கிறோம். எங்களின் பழங்கள், இலைகள் விலங்குகளால் உண்ணப்படுவதாகவும், மருத்துவ குணம் நிறைந்ததாகவும் இருப்பது எங்களின் மற்றொரு சிறப்பம்சம். இவை எல்லாவற்றையும் விட மாசைத் தாங்கும் சக்தியுடையவைகளாயும் நாங்கள் இருக்கின்றோம்.

இந்தியாவில் மட்டும் 115 சிற்றினங்கள் அறியப்பட்டு இருந்தாலும் 89 மட்டும்தான் உண்மையான சிற்றினங்களாக உறுதி செய்யப்பட்டு உள்ளன. இவைகளில் பெரும்பாலானவைகள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும்தான் காணப்படுகின்றன. பத்து சிற்றினங்கள் இந்தியாவைத் தவிர்த்து உலகில் வேறெங்கும் காணப்படுவதில்லை. கார்ல் லின்னேயஸ்தான் இந்த ‘பைகஸ்’ என்ற பெயரை எங்களுக்கு அளித்தவர். ஆசியாவில் இருந்து மற்ற இடங்களுக்குப் பரவியதாக விஞ்ஞானம் கூறுகிறது. அட போதும்! என்னோட கதைக்குப் போகலாம்.

வளர ஆரம்பித்தேன். முதன் முதலில் பழங்கள் தோன்றியவுடன் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தனியாய் பூக்களாய் மலருவதில்லை. தலைகீழாய் கொத்தாய் சைகோனியமாய்! பழத்தினுள்ளே பூக்களாய்! அன்றொருநாள் ஒரு பெண் குளவி ஒன்று என் பழத்தின் ஒரு பகுதியில் உள்ள சிறு துவாரம் வழியே வெளியிருந்து உள்ளே வந்து தன் கால்களில் ஒட்டியிருக்கும் மகரந்தத்தை உள்ளே உள்ள பூக்களில் சேர்ப்பது மட்டுமன்றித் தன் முட்டைகளை உள்ளேயும் இட்டு விட்டது. அடுத்த ஓரிரு நாட்களில் அது என் பழத்தின் உள்ளேயே இறந்து விட்டது.

எனக்கு எல்லாம் புதிதாய் இருந்தது. என் பழம் என்ன இடுகாடா என நினைத்து விட்டேன்.

முட்டை இருக்கும் பகுதி மட்டும் கருவுறாது ஓர் அடை போன்ற ஒன்று முட்டையைச் சுற்றி உருவானது. மற்றவைகள் மகரந்தச் சேர்க்கையால் விதைகளாய் உருவாகிவிட்டன. முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள் அந்த அடையைத் தின்று வளர்ந்தன. முதலில் வருவது ஆண் குளவிகள். அவைகள் எல்லாம் நன்கு வளர்ந்து பெண் குளவிகளுடன் இனப்பெருக்கம் செய்து பின் உள்ளே வரும் துவாரத்தைச் சற்றுப் பெரிதாக்கிப் பின் எல்லா ஆண்களும் பூவிலேயே இறந்து விடுகின்றன. பெண் குளவிகள் வளர்ந்து அத்துவாரம் வழியே அப்பூவின் மகரந்தங்களை உடலில் ஒட்டிக் கொண்டும் தன் கால்களில் பழங்களின் மகரந்தத்தைச் சுமந்து கொண்டும் முன் சொன்ன துளை வழியே பூவை விட்டு வெளியேறுகின்றன. பின் வேறொரு மரத்தின் பூவில்!

இதுதான் விதைகள் உருவாகின்ற வழி. இது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பரிணாம நிகழ்வு. இருவரும் பயன் பெறும் நிகழ்வல்லவா!

எங்கள் இனம் சார்ந்த குளவிகள் இனமாய் அவைகளும் பரிணமித்துவிட்டன. இந்த ஆல்-குளவி நெருக்கம் 50 மில்லியன் வருடங்களுக்கு முன்பே பரிணமித்திருக்கிறது என்பதை, கிடைத்த ஆல் பழப் படிமங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றனவாம். இதுவரை இந்தியாவில் மட்டும் 115 வகையான ஆல்சார் குளவிகளின் சிற்றினங்கள் அறியப்பட்டுள்ளன. என்னில் காணப்படும் எறும்புகள் இந்தப் பழங்களைத் தாக்கும் ஒட்டுண்ணிக் குளவிகளையும், மகரந்தச்சேர்க்கை செய்யாதக் குளவிகளையும் உணவாக உட்கொள்ளுவதன் மூலம் ஒரு மறைமுகத் நற்தொடர்பை ஆல் இனத்துடன் வைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

நன்கு பெருக்க ஆரம்பித்து விட்டேன். மற்ற ஆல் இனங்கள் போல் என்னிடம் விழுதுகள் வளர்வதில்லை. நான் இருக்கும் இடத்தில் நான் ஒருவன்தான் இருக்கிறேன். மற்ற மரங்கள் எல்லாம் வேறு வகைகள். அதிசயமாக எல்லா மரங்களும் சொல்லி வைத்தது போல் ஒன்றாகப் பூ பூத்து, கனிகள் உடையதாக மாறி விட்டன. ஆனால் நானோ ஏதுமற்ற ஒன்றாக அக்காலத்தில். எல்லா மிருகங்களும் பழத்திற்காகவும். இலைகளுக்காகவும், பூக்களுக்காகவும் என்னைத் தவிர்த்து அம்மரங்களில் அமர்ந்தன! அடுத்த சில மாதங்களில் நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது. நான் முற்றிலுமாகப் பழங்களைத் தாங்கிப் பொலிந்தேன்!

அந்த இடத்தில் உள்ள எந்த மரத்திலும் இது எதுவும் இல்லாததால் அனைத்து மிருகங்களும் என்னில் வந்து சூழ்ந்தன! நான் அத்தனை விருந்தினர்களையும் மூச்சுத் திணற உபசரித்துக் கொண்டிருக்கிறேன். பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் முதுகெலும்பற்றவைகள் என வெவ்வேறு விதமாக என்னிடம் வந்து போகிறார்கள். என்னை என் இருப்பை முழுமையாக இப்போதுதான் நான் உணர ஆரம்பிக்கிறேன்.

எனக்கு ஒரு வருத்தம்! பறவைகள் பொந்துகளை உருவாக்கிக் கூடுகட்ட என்னைப் பெரும்பாலும் நாடுவதில்லை. இறந்த கிளைகளில்தான் அதுவும் நடக்கும். என்னுடலில் சுரக்கும் பால் போன்ற திரவம் பறவைகள் பொந்தைத் தோண்டும் போது வருவதைக் கண்டு பின் அதோடு பொந்தைத் தோண்டுவதைத் தவிர்த்து விடுகின்ற மாதிரி தோன்றுகிறது. அதேபோல் நிறையப் பறவைகள் கூடுவதனால் மற்றப் பறவைகளும் வேட்டையாடிகளுக்குப் பயந்து மற்ற விதமான கூடுகளைக் கூடக் கட்டத் தவிர்த்து விடுகின்றன. அதையும் மீறி காகங்கள், ஷிக்ரா வகைப் போன்ற சில பறவைகள் மட்டும் கூடு கட்டுவதுண்டு.

நான் நன்கு வளர ஆரம்பித்து விட்டேன். யானைகள் தங்கள் பருத்த உடலை என் மீது வைத்துத் தேய்க்க ஆரம்பித்துவிட்டன. அவைகளின் சேறு ஓர் அடையாளமாகவே என் உடலில் பதிந்து விட்டது. அந்தத் தேய்த்தலின் அடையாளம் என் உடலில் பதிந்திருக்கும் உயரம் கொண்டுகூட ஆராய்ச்சியாளர்கள் யானையின் உயரத்தை ஓரளவிற்குக் கணக்கிட்டுச் சொல்லிவிடுவார்கள்.

திடீரென ஒருநாள் என் உடலைத் தன் நகங்களால் பற்றி ஒரு சிறுத்தை ஒரு புள்ளிமானுடன் மேல் ஏறி ஒரு கிளையில் அமர்ந்து அதில் மானைப் போட்டு உண்ண ஆரம்பித்தது. என் மேலெல்லாம் மானின் ரத்தம். ஒரே இறைச்சி நாற்றம். முதன் முதலாய்! ஓர் இரண்டு மணி நேரத்தில் தேவைப் பட்டதை உண்டு விட்டு அது கீழிறங்கிச் சென்றுவிட்டது. ஆனால் அது விட்டுச் சென்ற மான் அழுகி, புழு புழுத்துப் பல நாட்கள் தொங்கிப் பின் கீழே எலும்புகளாகச் சரிந்தது. அதுவரை என்னால் அதன் நாற்றத்தைப் பொறுக்க முடியவில்லை. பின் வந்த நாட்களில் அது எனக்குப் பழக்கமாகி விட்டது.

இருவாச்சி பறவைகள் என் பழத்தைத் தூக்கிப் போட்டு உண்ணும் அழகே ஒரு கவிதையைப் போல இருக்கும். பகல் இரவு என எந்த ஒரு நேரத்திலும் என்னிடம் வேறு உயிரிகளின் நடமாட்டம் இருந்து கொண்டுதான் இருக்கும். அளவில் சிறிய பாலூட்டிகளான மரநாய், சிவெட் இனங்கள், காட்டுப் பன்றிகள் எனப் பல உயிரினங்கள் இரவில் என் மீது ஏறி பழங்களைப் பறித்தும் அல்லது கீழே உதிர்ந்து கிடக்கும் பழங்களை எடுத்தும் உண்பது வழக்கம். இதனாலேயே மற்ற மரங்களை விட ஒரு வாழிடத்திற்கு நாங்கள் மிக முக்கியமானவர்கள்.

ஒரு நல்ல வாழிடத்தின் குறியீடாக எங்களைக் குறிப்பிடுவதுண்டு. எங்கள் இனங்கள் அதிகமாக ஓர் இடத்தில் இருந்தால் அந்த இடம் பல்லுயிரியம் மிக்க இடமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இப்படி எல்லாமே நன்றாகப் போய்க் கொண்டிருந்த வேளையில்தான் ஒரு நாள் நாலைந்து ஜீப்புகளில் மனிதர்கள் வந்து என்னருகே இறங்கி நின்று கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் அந்தப் பகுதிகளை அளந்து கொண்டும் இருந்தனர். நான் இருக்கும் இடத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் செல்லும் ஒரு சாலையின் விரிவாக்கப் பணிக்காக, நான் இருக்கும் இடம் இருக்கும் ஒரு வழி மாற்றுவழிப் பாதையாக மாற்றப்படப் போவதற்கான வேலையின் துவக்கம்தான் அது.

அடுத்த ஓரிரு மாதங்களில் என் அருகே ஒரு பாதை உருவாக்கப்பட்டு பயணங்கள் துவங்கின. ஆரம்பத்தில் வித்தியாசமான சப்தங்களுடனான ஒரு புதிய துவக்க மயக்கம் என்னைக் கவர்ந்தாலும் போகப் போக அதுவே என் உடலியலைப் பாதிக்கும் அம்சமாக மாற மாற பயம் என்னைத் தொற்ற ஆரம்பித்தது. புழுதி என் இலைகளில் படியப் படிய என்னுடைய ஒளிச்சேர்க்கை திறனில் பாதிப்பு ஏற்படுவது தெரிகிறது. உண்மையில் மற்ற மரங்களை விட எங்கள் இனத்திற்கு மாசைத் தாங்கும் திறன் அதிகம் என்பதால் ஓரளவிற்கு என்னால் ஈடு கொடுக்க முடிந்தது.

இந்தச் சாலை இரு வேறு இடங்களை இணைத்தாலும் அதே வேளையில் என்னோடு என்னைச் சார்ந்து இருந்த மற்ற உயிரினங்களின் இணைப்பைக் கொஞ்சம் கொஞ்சமாகத் துண்டிக்க ஆரம்பித்தது தெரிந்தது. முதலில் பெரிய மிருகங்கள் வருவது குறைந்தது. யானைகள் முதுகு தேய்ப்பது நின்றது. வாகனங்கள் தொடர்ந்து சென்று வருவதன் காரணமாக அச்செயலை அவைகளால் செய்ய இயலாமல் போய்விட்டது. சிறுத்தையைக் காணமுடிவதில்லை. இருவாச்சியோ எப்போதாவதுதான் தலைகாட்டியது!

திடீரென ஒருநாள் என்னைச் சுற்றி ஆட்கள் வந்து வண்டிகளில் இறங்க ஆரம்பித்தார்கள். சிலர் கைகளில் மரம் அறுக்கும் இயந்திரக் கருவிகள். சாலை விரிவாக்கப் பணி முடிய நாட்கள் அதிகம் ஆகுமாம். ஆகவே இந்த மாற்றுச் சாலையின் தேவை சற்று அதிக மாதங்களுக்கு நீடிக்குமாம். இந்த மாற்றுச் சாலையைச் சற்றுச் சீரமைக்க எடுத்த முடிவில் என் இருப்பு ஒரு தடையாக இருப்பதாகச் சொல்லி என்னை அகற்ற முடிவு எடுத்து விட்டிருக்கிறார்கள்!

வ்விர்ர்ர்ர்ர்ரூம்! வ்விர்ர்ர்ர்ரூம் என முதல் மரம் அறுக்கும் இயந்திரம் ஒன்று ஒருவனால் இயக்கப்பட்டு ஒலித்தது!

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *