எங்கெங்கோ பணி செய்துவிட்டு என் ஐம்பத்தாறாவது வயதில் ஊட்டிக்குப் பணிமாற்றம் பெற்றேன். உண்மையில் என்னுடைய 32 வயது பணியில் இன்றுதான் ஊட்டி வருகிறேன். ஊட்டி வருகிற வாய்ப்பு உண்மையில் ஏற்படவில்லை. ஆனால் ஊட்டிக்கு நான் புதிதில்லை! நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.
ஸ்ஸ்ஸ்! ஸ்ஸ்ஸ்! சூடான அந்தச் சலவைப் பெட்டியில் நான் தெளித்த நீரை அச்சூடு சிறு சிறு குமிழ்களாய் மாற்றி பாலே நடனம் ஆட வைத்தது. சிறு வயதில் என் தந்தை என்னை மகிழ்விக்கச் செய்து காட்டியது. இன்றும் நான் அதைச் செய்து மகிழ்கிறேன். அந்தப் பெட்டிதான் என் தந்தையுடன் ஓயாது உழைத்து இன்று என்னை முதுகலைப் பட்டம் பெறும் அளவிற்கு வளர்த்து விட்டிருக்கிறது. அதுவும் செம்பனார் கோவில் என்ற ஊரில் இருந்து!
‘கோபாலு! ஒரு கடிதாசி உனக்கு வந்திருக்குப் பாரு, இந்தா!’ என்றவாறு என் தந்தை என்னிடம் இருந்த சலவைப்பெட்டியைப் பிடுங்கி வேலையைத் தொடர்ந்தார். உடனே தமிழ்ப் படங்களில் காண்பிப்பதுபோல் எனக்குப் பின் கழுதை ஒன்று இருப்பதுபோல் கற்பனையெல்லாம் செய்து கொள்ளவேண்டாம்.
எனக்குத் தெரிந்து எங்கள் குடும்பத்தில் அது இருந்ததும் இல்லை, இருந்ததாய் யாரும் சொல்லிக் கேள்விப்பட்டதுமில்லை. தந்தை கொடுத்த கடிதத்தைப் பிரித்துப் படித்தால் ‘JRFஆக பணியாற்ற எனக்கான அழைப்பு’ அதில் இருந்தது. கோவைப் பல்கலைக்கழகப் பேராசிரியருக்குக் கிடைத்த மத்தியச் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையால் நிதி வழங்கப்பட்ட ஆய்வுத் திட்டத்தில்தான் அப்பணி. மாதம் 1800 ரூபாய் உதவித் தொகை!
விலங்கியலில் முதுகலைப் பட்டம் வாங்கியிருந்தாலும் வனஉயிர்களின்பால் எனக்கு எப்போதும் ஓர் ஈர்ப்பு இருந்தது. அதற்குக் காரணம் கல்லூரியில் படிக்கும்போது காடுகளில் விலங்குகள் கணக்கெடுப்பில் அடிக்கடிக் கலந்து கொண்டதால் ஏற்பட்டது. ஏற்கெனவே வங்கிப் பணிக்கான மூன்று தேர்வுகளை எழுதி இருப்பினும் அதற்கான முடிவுகள் அறிவிக்கப்படாததால் அது வரும்வரை இந்தப் பணியை எடுக்கலாம் என மனது சொன்னது. வீட்டுச் சூழலும் அப்படி! படிக்காத தாய் தந்தையர்கள் படித்த எனக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் என் தகுதியைக் குறை சொல்ல மாட்டார்கள். என் படிப்பைத்தான் சொல்லுவார்கள். அதைத் தவிர்க்கவாவது இதில் இணைய வேண்டும் எனத் தீர்மானித்தேன். எனக்குத் தெரியும் இது பணியல்ல! வீட்டில் எல்லாவற்றையும் தெளிவாய்ச் சொல்லிவிட்டுக் கோயம்புத்தூர் கிளம்பினேன்.
அடுத்த ஆறு மாதங்களும் அந்தப் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுடனும், என் பேராசிரியருடனும், மற்ற பேராசிரியர்களுடனும் கழிந்தது. நிறைய விசயங்களைத் தெரிந்து கொண்டேன். அதில் ஒன்று, அங்கும் சாதி இருந்தது; மாணவர்களிடையே, பேராசிரியர்களிடையே, ஏன் அங்கிருக்கும் உயிரற்ற பொருள்களின் மீதும்! அது நான் இறந்தும் இருக்கும் என நன்றாய் தெரிந்திருந்ததால் பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.
மற்றொன்று போட்டோகிராபி. என் திட்டத்தில் நல்ல கேமராக்களைப் பேராசிரியர் வாங்கி வைத்திருந்தார். ஸ்டீபன் என்ற மற்றோரு ஆய்வாளன்தான் எனக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தான். அவன்தான் கேமரா கொண்டு கேமராப்பொறி செய்து இரவாடிகளைப் படிப்பது பற்றிச் சொல்லிக் கொடுத்தான். அதோடு மட்டுமின்றி கம்ப்யூட்டரில் வேர்ட்ஸ்டார், ஹார்வார்ட் கிராபிக்ஸ், ஸிஸ்டட், ஈமெயில் என அனைத்தும்! அவன் மூலம் காட்டில் ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுடனும் தொடர்பு உருவானது.
இதற்கிடையே ஒரு நான்கு நாட்கள் நானும் பேராசிரியரும் சென்னையில் தங்கி தமிழக வனத்துறையிடம் ஆராய்ச்சிக்கான அனுமதி வாங்கினோம். பின் ஒரு பத்து நாட்கள் நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளை அவருடன் சேர்ந்து காரில்! ஆம் காரில் சுற்றினேன். இது ஆய்விற்குரிய தகுதியான காட்டு வாழிடங்களைத் தேடுவதற்கு நடந்தது. நீலகிரி மாவட்டத்தின் வனப்பகுதிகளைச் சுற்றிப் பார்த்து, அங்கிருந்த ஆய்வாளர்களுடனும் மக்களுடனும் பேசிப்பார்த்து, ஒரு வழியாக நீலகிரியில் குறிப்பிட்ட இடங்களை முடிவு செய்துவிட்டார் என் பேராசிரியர். அதன் பின் ‘நீதான் இனிமே எல்லாத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என என்னிடம் அவர் பொறுப்பை விட்டுவிட்டார். நானும் ஆய்வைத் தொடங்கினேன்.
‘நீலகிரி மாவட்டத்தில் மாமிசம் உண்ணும் சிறிய விலங்குகளின் தற்போதைய நிலை’ இதுதான் ஆய்வின் தலைப்பு! பாலூட்டிகளில் மாமிசம் உண்ணும் சிறு உயிரிகள் இந்தியாவில் இன்றளவும் அதிகம் அறியப்படாமலேயே இருக்கின்றன. இது இந்தியாவில் மட்டுமல்ல! உலகளவிலும்தான். சிங்கம், புலி, யானை போன்ற விலங்குகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற உயிர்களுக்கு இந்தியாவில் கொடுக்கப்படுவதில்லை. அதில் உச்சகட்டமாய் தாவரங்களையும் உயிர்களாய் மதித்து இதில் கொண்டு வருவதே இல்லை (மரம் நடுங்கள் என்ற சொல்லாடலில் இதை முடித்தே விடுவார்கள்!).
அழிந்து வரும் விலங்குகளை அதிகம் பேசுகின்ற அளவிற்கு அழிந்து வரும் தாவரங்களைப் பற்றிப்வ்பேசியிருக்கிறோமா? அல்லது அந்தத் தாவரங்களின் பெயர்களையாவது மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோமா? இதிலும் மதம், மூடநம்பிக்கைகள் நன்றாய் ஊடுருவி விட்டன. சூழியலில் ஒவ்வொன்றும் தங்களின் பங்கைச் செய்து கொண்டிருந்தாலும் சிலவற்றை மட்டும் உயர்த்திப் பிடிப்பதும் மற்றதைக் காணாதுபோல் இருப்பதும் மனிதனின் (அப்படி பொதுவாய் சொல்ல முடியாது! அதிகாரத்தில் இருக்கும் அல்லது அதிகாரத்தையே எப்போதும் தங்கள் வீட்டிற்கு வெளியே நிற்க வைக்கும் ஒரு சில..) சிறுபுத்திக் கோளாறன்றி வேறேதும் இல்லை. மயிலுக்குக் கிடைக்கும் மரியாதை கோட்டானுக்கு இல்லை. மயில் விவசாயிகளுக்குச் சேதமும் கோட்டான் நன்மையும் செய்கிறது என்றெல்லாம் நான் இங்கு சொல்ல வரவில்லை. இரண்டும் அதற்கான சூழியல் பங்கைத்தான் ஆற்றுகின்றன.
சரி சரி! முதலில் யாரெல்லாம் இந்த மாமிசம் உண்ணும் சிறு பாலூட்டிகள்ன்னு பார்ப்போம்! இந்தியாவில் ஃபெலிடே (பூனைகள்), மஸ்டெலிடே (வீசல்கள், பேட்ஜர்கள், ரேடல் மற்றும் மார்டென்ஸ்), விவெர்ரிடே (சிவெட்ஸ் மற்றும் லின்சாங்ஸ்) மற்றும் ஹெர்பெஸ்டிடே (கீரிகள்) குடும்பங்களைச் சேர்ந்தவைகள்தான் இந்தச் சிறிய மாமிச உண்ணிகள். இவ்வினங்கள் கிழக்கு இமயமலைகளிலும் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் அதிகமாய் காணப்படுகின்றன.
ஐந்து கிலோ எடைக்கும் குறைவாய் உள்ள கார்னிவோர் வகுப்பைச் சேர்ந்த விலங்குகளைத்தான் இந்தப் பிரிவில் இப்படிக் குறிப்பிடுகிறோம். அவற்றின் சிறிய அளவு, மிகக் குறைவான எண்ணிக்கைகளில் அதன் இருப்பிடங்களில் காணப்படுவது, இரவாடிகளாய் இருப்பது போன்றவை அவற்றைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணங்களாய் ஆகிவிட்டன. அதுவே அவற்றை எப்படிப் பாதுகாப்பது என்பதற்கும் தடைகளாயும் இருக்கின்றன.
அவற்றின் உடல் அளவில் உள்ள ஒற்றுமைகளின் காரணத்தினாலேயே அவை உண்ணும் உணவான சிறு பாலூட்டிகள், பறவைகள், இருவாழ்விகள், ஊர்வன, மீன்கள், பழங்கள், விதைகள் என்பனவற்றிலும் ஒற்றுமை காணப்படுகிறது. பெரிய ஊண் உண்ணிகள்போல குறுகிய உணவு ஆதாரங்களைச் சாராமல் இந்த விலங்குகள் பல உணவு ஆதாரங்களைச் சார்ந்துள்ளன. ஆகவே அவற்றின் அடர்த்தி ஓர் இடத்தின் பல்லியத்தை எடுத்துரைப்பதாகவேதான் இருக்கும்.
அதோடு மட்டுமின்றி அவை மூலம் நடக்கும் விதைப்பரவல் அவ்விடத்தின் தாவரங்களின் இயக்கத்திற்கும் காரணமாயிருக்கிறது. இதில் சிறுத்தைப் பூனை (Leopard cat Prionailurus bengalensis), செம்பழுப்புப்புள்ளி பூனை (Rustyspotted cat Prionailurus rubiginosus), மீன்பிடி பூனை ( Fishing cat Prionailurus viverrinus ), காட்டுப் பூனை (Jungle cat Felis chaus ), இந்திய சிறு சிவேட் (Small Indian civet Viverricula indica), ஆசிய மரநாய் (Asian palm civet Paradoxurus hermaphroditus ), பழுப்பு மரநாய் (Brown palm civet Paradoxurus jerdoni ), கீரி (Common mongoose Herpestes edwardsii), செம்பழுப்புக் கீரி (Ruddy mongoose Herpestes smithii) வரிக்கழுத்துக் கீரி (Stripe-necked mongoose Herpestes vitticollis ) பழுப்புக் கீரி (Brown mongoose Herpestes fuscus ), ஐரோப்பிய நீர்நாய் (Eurasian otter Lutra lutra ), வழுவழுப்பான நீர்நாய் ( Smooth-coated otter Lutrogale perspicillata ), கரும்வெருகு (Nilgiri marten Martes gwatkinsii ) தேன் வளைக்கரடி (Ratel Mellivora capensis) மட்டும் தமிழ்நாட்டில் இருக்கின்றதை உறுதிசெய்து அதை மட்டும் என் ஆய்விற்கு எடுத்துக்கொண்டேன்.
இதில் மலபார் சிவட் (Viverra megaspila ssp. civettina Blyth, 1862. Malabar Civet), மிகவும் அழியும் தருவாயில் உள்ள விலங்காய் IUCNஆல் அறிவிக்கப்பட்ட ஒன்று, தமிழகக் கேரள எல்லையில் இருந்தாகக் கூறுவது உண்டு. உண்மையில் இவ்விலங்கு இப்போது இருக்கிறதா, இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. தேடல்களும் பதிலின்றியே முடிந்தன. சுமாராக எண்ணிக்கையில் 250க்கும் கீழாக இருக்கலாம் என்ற ஒரு கருத்தில் இந்நிலை இதற்குத் தரப்பட்டுள்ளது. அழிந்துவிட்டது எனச் சொல்லவும் ஆதாரம் இல்லை. இதற்குக் காரணம் அதன் வகைப்பாட்டியலில் உள்ள குழப்பம். அதை ஓர் அறிமுகப்படுத்தப்பட்ட விலங்கு என்றும், இந்தியச் சூழலில் பெருக்கத்தில் தோல்வி அடைந்திருக்கலாம் எனவும் கூறுவது உண்டு. சென்னையின் அருங்காட்சியகத்தில் பதப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு இன்றும் இருக்கிறது. அதனால் இதை என் பட்டியலில் சேர்க்கவில்லை!
மேற்சொன்ன விலங்குகளைத் தேடித்தான் நான் போகிறேன். திட்டத்தில் பயணத்திற்குப் பெரிய அளவில் நிதி ஒதுக்காததால் (இது பயணத்திற்கு ஆகும் செலவைப்பற்றிய புரிதல் என் ஆசிரியர்க்கு இல்லாததால் ஏற்பட்ட விளைவே அன்றி நிதி வழங்கியவர்களின் குற்றம் அன்று!) பெரும்பாலும் என் பயணம் பேருந்தில்தான்! தேவைப்பட்டால் எப்போதாவது காரை வாடகைக்கு எடுப்பது வழக்கம்.
என் ஆய்வின் முதல் தனிப்பயணத்தை மேல் பவாணியில் இருந்து ஆரம்பிக்க நினைத்தேன். அவ்விடத்திற்குக் காலையில் ஒரு பஸ் மாலையில் ஒரு பஸ். மாலையில் செல்லும் பஸ் அந்த இரவு அங்கே இருந்து பின் காலை புறப்படும். மின்வாரிய ஊழியர்கள் தவிர வேறு யாரும் மேல்பவாணி வரை பஸ்ஸில் பிரயாணிப்பதில்லை.
நான் அந்த பஸ்ஸில் ஏறி மேல்பவானி அடைந்தேன். அங்கு இருந்த ஒரு மின்வாரிய ஊழிய நண்பரின் (முதல் பயணத்தில் பேராசிரியர் ஏற்படுத்திய நட்பு!) வீட்டில் தங்கி அந்த இடங்களை ஆய்வு செய்ய ஆரம்பித்தேன். நல்ல குளிரும் காற்றும் என்னை வாட்டி எடுத்தது. சில இடங்களில் அடிக்கும் காற்று ஆளைக் கூடக் கீழே தள்ளிவிடும். அது எனக்குப் புதிது. அங்கிருந்த சோலைக் காடுகளும், வாட்டில் ஒருமரக் காடுகளும், புற்காடுகளும்தான் அந்தப் பகுதியில் நான் தேடிவந்த இடங்கள்.
அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவரை வாழிகாட்டியாய் வைத்துக் கொண்டேன். குமாருக்கு வழி தவிர மிருகங்களைப் பற்றியெல்லாம் ஏதும் தெரியாது. திடீர் திடீரெனப் பீடி குடிக்க மரத்திடைய மறைந்து விடுவான். முதல் மூன்று நாட்கள் படிக்க வேண்டிய எந்தவித மிருகங்களும் என் கண்களில் சிக்கவில்லை. இதற்கிடையே முதன் முதலாய் அன்று இரவு வெப்பநிலை ஜீரோவுக்குக் கீழே சில நிமிடங்கள் சென்று ஐந்தில் நின்றது. நண்பரும் நானும் தூக்கமின்றி அவ்விரவைக் கழித்தோம். காலையில் சற்றுத் தாமதமாகவே நான் கிளம்பினேன். நண்பர் இன்னமும் தூக்கத்தில்!
வெளியில் இன்னமும் பனி மூடியிருந்தது. கைகளை பேண்ட் பாக்கெட்டுக்குள் நுழைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். கை நீட்டும் தூரம்தான் பார்க்கவே முடிந்தது. நேரம் செல்லச் செல்ல பார்வை தூரம் அதிகரித்தது. கேரளாவின் அமைதி பள்ளத்தாக்குக்குச் செல்ல அங்கே இருந்து ஒரு வழி இருக்கிறது. அப்பகுதியை நோக்கித்தான் சென்று கொண்டிருந்தேன்! மதியம் வரை ஒன்றும் கிடைக்கவில்லை. திரும்ப ஆரம்பித்து விட்டேன்.
நடந்தே வனத்தில் ஆய்வு செய்பவர்கள் பெரும்பாலும் வெளிச்சம் குறையும் முன்னே வீட்டிற்குத் திரும்பி விடுவார்கள். இது வழி தவறுதலையும், வேறு அசம்பாவிதங்களையும் தவிர்க்க உதவும். வெறும் SOI (Survey of India) யின் வரைபடங்கள்தான் காடுகளில் வழியை அறிய உதவும். அதைச் சரியாகப் படிப்பதே ஒரு கலை!
சரியாக அரைமணி நேரத்திலேயே தூரத்தில் இரண்டு நீலகிரி மார்டன்கள் நாங்கள் நடந்து வந்த பாதையைக் குறுக்காய் கடந்து கொண்டிருந்தன. அரிதிலும் அரிதான அம்மிருகத்தைப் பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பைனாக்குலரில் ஓர் அரை மணி நேரம் அவற்றைக் கண்காணித்தேன். என் கேமராவை எடுத்து அவற்றை முடிந்த அளவிற்குப் பதிவு செய்து கொண்டேன். உள்ளுக்குள் பிலிம் ரோல் எதுவும் சிக்கல் தரக்கூடாது என வேண்டிக்கொண்டேன். போதிய வெளிச்சம் வேறு இல்லை. அதன்பின் அவை காட்டின் உள்ளே சென்று விட்டன.
ஒரு மணி நேரம் அதே இடத்தில் இருந்து விட்டுப் பின் அவற்றைக் கண்ட இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அவ்விடத்தில் இருந்த அவற்றின் கால் தடங்களை என் கேமராவில் பதிவு செய்து விட்டு, சற்றுத் தூரத்தில் கீழே கிடந்த ஒரு மரத்தின் மேல் இருந்த அதன் கழிவை ஒரு பையில் சேகரித்துக் கொண்டு வீடு திரும்பினேன்.
அதிகப்பட்சம் நூறுக்குக் கீழ்தான் உலகிலேயே அதன் எண்ணிக்கையில் இருக்கும் அவ்விலங்கு! இதை நோக்கின் புலியின் எண்ணிக்கையெல்லாம் பலமடங்கு அதிகம். அரசாங்கம் புலிக்குச் செலவழிப்பதுபோல் எதுவும் இதற்குச் செய்ததாகத் தெரியவில்லை. இந்த விலங்கின் பெயரைச் சொன்னாலோ அல்லது புகைப்படத்தைக் காட்டினாலோ பலர் ‘இது என்ன?’ எனக் கேட்கும் நிலைதான்.
சுடு நீரில் நல்ல குளியல் ஒன்றைப் போட்டு, நண்பருடன் சேர்ந்து சூடாகக் கஞ்சிசாதமும் கருவாடும் உண்டு விட்டுப் படுக்கச் சென்றேன். மறுநாள் மீண்டும் அதே இடத்திற்குச் சென்று சற்றே அதிக நேரம் நீலகிரி மார்டனைக் கண்டு தேவையான குறிப்புகளை எடுத்துக் கொண்டு, அது மறைந்ததும் வேறு திசை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
அடுத்தடுத்த நாட்கள் எந்த மிருகங்களும் காணாத நாட்களாய் இருந்தன. மூன்றாவது நாள் வெஸ்டர்ன் கேட்ச்மெண்ட் அருகே வரிக்கழுத்துக் கீரி ஒன்றைப் பார்த்தேன். என்னைப் பார்த்தவுடன் அது காட்டிற்குள் மறைந்து விட்டது. இதுவும் மிக அரிதாகவே காணப்படுகிறது. அதே இடத்திலேயே இரண்டு மணி நேரம் இருந்தும் எதுவும் பார்க்க முடியாததால் வீடு திரும்பினோம். இன்று சற்றுத் தாமதமாகத்தான் படுக்கச் சென்றேன். டிவியில் கிரிக்கெட் பார்த்ததால்! மேலும் இரண்டு நாட்கள் அங்கே தங்கி இருந்து பின் கோத்தகிரி நோக்கிப் பயணத்தைத் தொடங்கினேன்.
கோத்தகிரியில் மலிவான விலையில் ஒரு அறையைச் சில நாட்கள் வாடகைக்கு எடுத்துத் தங்கினேன். அறைக்குச் சற்றுத் தூரத்தில் ஒரு மலையாளி ஹோட்டல்! அதில்தான் சாப்பாடு. இங்குதான் முதன்முதலாய் பீஃப் கரி சாப்பிட்டேன். இரண்டு பரோட்டோக்களும் ஒரு பிளேட் பீஃப்பும்! செம டேஸ்ட். அறைக்கு எதிரே ஒரு தேயிலைத் தோட்டம். இங்கு யானை மற்றும் கரடித் தொந்தரவு இருந்ததால் ஒரு மலைக்குடியைத் துணைக்கு வைத்துக் கொண்டு என் பணியை ஆரம்பித்தேன்.
இங்கு மழைக்காடுகளில்தான் தேடல். ஒரு நான்கு இடங்களைத் தேர்வு செய்து புகைப்படக் கருவிப்பொறிகளை வைத்துவிட்டுக் கிளம்பினேன். அது நானும் ஸ்டீபனும் சேர்ந்து தயார் செய்தது. ஓர் ஆட்டோபோகஸ் கேமராவில் இருந்து வந்த இரண்டு வயர்கள் காற்றுத் தலையணையுடன் இணைக்கப்பட்டிருந்தது. காற்றுத்தலையணை உள்ளே மேலும் கீழும் அலுமினியம் பாயில் வைக்கப்பட்டு இரு வயர்களுடன் தனித்தனியே இணைக்கப்பட்டிருந்தது. இந்தத் தலையணை மிருகங்கள் நடமாடும் இடத்தில் தரையில் வைக்கப்பட்டிருக்கும். மிருகங்கள் அந்தத் தலையணை மேல் கால் வைத்து நடக்கும்போது அதன் எடையின் காரணமாய் தலையணையின் இரு பக்கங்கங்களும் தொடும்போது கேமரா இயக்கப்படும்.
பெரிய மிருகங்கள் மிதித்து விட்டால் கேமராவின் இணைப்பு தொடர்ந்து இருந்து பிலிம் ரோல் முழுதும் காலியாகிவிடும். மழைநீர் தேங்கியோ அல்லது உள்ளே போனாலோ அதே தொந்தரவுதான்! மறுநாள் போய் பார்த்ததில் மிருகங்கள் எதுவும் வந்தது மாதிரி தெரியவில்லை. கேமராவின் பிலிம் ரோல் ஆகவே இல்லை. அப்படியே அதை விட்டுவிட்டு வேறு இடங்களுக்குச் சென்று திரும்பினேன். இன்றும் என் மிருகங்கள் எதுவும் கண்ணில் தட்டுப்படவில்லை. அறைக்குத் திரும்பினேன்.
மறுநாள் கேமரா 12 போட்டோக்களை எடுத்து இருந்தது. மிருகம் எதோ வந்து போயிருக்கிறது! பிலிம் ரோலைக் கழுவினால்தான் தெரியும். மறுநாள் பழுப்புக் கீரி ஒன்றும், பழுப்பு மரநாயும் ஒன்றும் அந்த மழைக்காடுகளில் கண்டேன். போட்டோ எதுவும் எடுக்க முடியவில்லை. மிகக் றைவான நேரத்தில்தான் அவற்றைக் காண முடிந்தது. மேலும் அப்பகுதி ஒரு மழைக்காட்டுப் பகுதி. வெளிச்சமின்மை ஒரு பெரிய பிரச்னை! இருப்பினும் மிருகங்களைப் பார்த்ததில் திருப்தி இருந்தது!
அந்த இடத்தின் சில நுண்வாழிடச் சிறப்புகளைக் குறித்துக் கொண்டும், கீழே இருந்த கழிவுகளைச் (அது அவைகளுடையதா என உறுதியிட்டுச் சொல்ல முடியாத நிலை!) சேகரித்துக் கொண்டும், கேமாராப்பொறிகளை எடுத்துக் கொண்டும் அவ்விடத்தை விட்டுக் கிளம்பினேன். அந்த ஊரின் பழங்குடிகள் கரும் வெருகைச் சில மாதங்களுக்கு முன் அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் கண்டதாய் சொன்னார்கள். குறித்துக் கொண்டேன்! மறுநாள் காலையில் முதுமலைக்குக் கிளம்பினேன்.
முதுமலையில் பிக்காக் டார்மெட்ரியில் தங்க அனுமதி வாங்கவும், ஆய்வு செய்யக் கிடைத்த அனுமதிக் கடிதத்தை வனத்துறையிடம் காண்பித்து விட்டும் வருவதற்குள் எனக்கு உயிர் போய் உயிர் வந்தது. அனுமதி இன்றித் தனியே இங்கு ஆய்வு செய்வது கடினம். பின் கூடலூர் வண்டி வரும்வரை காத்திருந்து அது வந்தபின் அதில் ஏறி, கார்குடி வந்து இறங்கி டார்மெட்ரியை அடைந்து வேலாயுதத்திடம் இரவு உணவிற்குச் சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்று விட்டேன் (SPB யின் ‘மண்ணில் இந்தக் காதல்’ பாடல்போல படிச்சா நீங்க சூப்பர்!).
அந்தக் குளிரில் நாலு சப்பாத்திகளையும், டார்மெட்ரியில் வேறு விருந்தினர் யாருக்கோ செய்த கரிக்குழம்பையும் வேலாயுதம் எனக்குத் தந்தார். பசியில் ருசி தெரியவில்லை. நான் “நாகப்பட்டினத்தில் இருந்து வருகிறேன்” என்றதும், அவர் “நானும் அந்த ஊருதான்”.. என்ற சொன்னபோது இருந்த கரிசனம் இப்போதுதான் வெளிப்பட்டது. சாப்பிட்டு விட்டுத் தூங்கச் சென்றுவிட்டேன். அங்கு சாதாரணமாக வெளியே யாரும் சுற்ற முடியாது. யானைகள் நடமாட்டம் அதிகம்! நண்பர் பாஸ்கரிடம் சொல்லி சென்னா என்ற மலைக்குடியை வழிகாட்டியாய் வைத்துக் கொண்டேன்.
மறுநாள் பென்னே சென்று தேட ஆரம்பித்தேன். எதுவும் புதிதாய் தென்படவில்லை! அடுத்த நாள் கக்கனஹல்லாவை நோக்கிப் பயணித்தேன். அங்கு சாம்பல்நிறக் கீரிகளை இரண்டு இடங்களில் பார்த்தேன். என்னுடன் வந்த சென்னாவுக்குக் காடு பற்றியும், மிருகங்கள் பற்றியும் அறிவு அதிகம். காலில் செருப்புகூட அணிய மாட்டார். அவர் BNHSல் ஆறு வருடங்களாய் பணி புரிந்து வருபவர். அவரே எந்த மிருகத்திற்கு எங்கெல்லாம் எப்போதெல்லாம் போகலாம் என மிகுந்த ஆர்வத்துடன் கூட்டிச் சென்றார்.
மோயாற்றில் நீர்நாய் ஜோடிகளையும், சிவட் பூனைகளையும், மரநாய்களையும் வாழைத்தோட்டம் மற்றும் பொக்காபுரத்திலும் சென்னா காண்பித்துக் கொடுத்தார். அவர்தான் தேன் வளைக்கரடியைப் பொக்காபுரத்தில் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் பார்த்ததாகச் சொன்னார்! அடுத்த நாள் நான் எங்கும் செல்லவில்லை. நடந்ததினால் உடல்வலி!
முதுமலையில் விலங்குகளைவிட ஆராய்ச்சியாளர்கள் அதிகமோ என என்னும் வகையில் அப்படி ஒரு கூட்டம்! பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகம், இந்திய அறிவியல் நிறுவனம், சலிம் அலி பறவைகள் ஆராய்ச்சி மற்றும் இயற்கை வரலாற்று மையம், பாண்டிச்சேரிப் பல்கலைக்கழகம், இந்தியத் தாவர வளக் கணக்கெடுப்பு நிறுவனம். இந்திய விலங்கு வளக் கணக்கீடு நிறுவனம் என! இதில் சில நிறுவனங்கள் தமக்கென்று தனி வீடுகளும், வாகனங்களும், வழிகாட்ட மலைக்குடிகளும் முதுமலையில் வைத்து இருந்ததால் அவர்களுக்கு என்னைப்போல் ஆய்வு செய்யும் இடத்திற்கு நடந்து செல்வதால் ஏற்படும் கால விரயம், தங்க இடம் தேடி அலைவதில் ஏற்படும் கால விரயம் இதெல்லாம் இல்லை.
நான் நடந்து செல்லும்போது அந்த நிறுவனங்களின் வாகனங்கள் ஆய்வாளர்களுடன் என்னைக் கடந்து செல்வதைப் பார்க்க நேரிட்டால் மனதிற்கு வருத்தமாய் இருக்கும். ‘எதற்கும் அதிர்ஷ்டம் வேணும்போல’ என்று நினைத்துக்கொள்வேன். அவர்கள் திரும்பிவரும்போது வழியில் என்னைப் பார்த்தால் நிறுத்தி ஏற்றிக்கொள்வதும் உண்டு. இருப்பினும் அதில் எனக்குத் திருப்தி இருக்காது!. அதுவும் ஒரு முறை வயிற்று உபாதைக்குக் காட்டினுள் அவசரமாய் ஓர் இடத்தில் ஒதுங்கி ‘இருந்த’ நேரத்தில் திடீரென அவ்வழியே வந்த அவர்களின் ஜீப்பைக் கண்டவுடன் வெட்கம் பிடிங்கித் தின்றது. அவர்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. எனினும் அந்த நேரம் இன்றும் மனதில் அசிங்கமாய் இருக்கிறது.
கீரிச்ச்ச்! பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக வாகனம் திடீரென வந்து என்னருகே நின்றது! ‘சென்னாவைப் புலி அடிச்சிடிச்சி! போலாம் கிளம்பு! என அக்கழக ஆய்வாளர் பாஸ்கர் சொல்ல அதிர்ச்சியுடனே அவர் வாகனத்தில் ஏறினேன். கக்கனல்லாஹ் அருகே குட்டியுடன் புலி இருந்தது தெரியாமல் போய் மாட்டிகிட்டாப்லயாம்! அடுத்த அரை மணி நேரப் பயணத்தில் அந்த இடத்தில்! பார்க்கவே அதி பயங்கரமாய்! கழுத்துக் கிழிந்து மூச்சுக் குழல் அறுந்த திருகுச் சுருள் போன்று வெளியே தொங்கிக்கொண்டிருந்தது . வேறு எந்தக் காயமும் இல்லை. அடுத்த சில மணி நேரங்களில் அவரின் உடல் ஆய்விற்கு எடுத்துச் செல்லப் பட்டது. நினைத்துப் பார்க்க முடியவில்லை! முதன் முதலாய் என் உடலில் பயம் படிய ஆரம்பித்தது. விளையாட்டாக இனி எதுவும் இந்தக் காட்டில் செய்யக்கூடாது என மனதில் நினைத்துக்கொண்டேன். அனைத்து ஆராய்ச்சியாளர்களும் அங்கு இருந்தனர். எல்லோரிடமும் நன்றாகப் பழகியவர் சென்னா!
நானும் ஒரு மூன்று நாட்கள் மலைக்குடி யாரும் கிடைக்காததால் ஏதும் செய்யாது இருந்தேன். பின் கிடைத்த ஒருவருடன் முதுமலையின் மற்ற பாகங்களில் தேடலை முடித்து அவருடைய உதவியுடன் தெங்குமரஹடாவை அடைந்தேன். போகும் வழியில் நிறையச் சாம்பல் கீரிகளையும், மரநாய் கழிவுகளையும் சேகரித்துக்கொண்டு அங்கிருந்த வனத்துறை அறை ஒன்றில் அன்றைய பொழுதைக் கழித்தேன்.
மறுநாள் கிளம்பி பல்கலைக்கழகம் சென்று, இரண்டு நாட்கள் இருந்து விட்டு பேராசிரியரிடம் ஒரு வாரம் விடுமுறை பெற்று எட்டு மாதங்களுக்குப் பிறகு வீட்டிற்குச் சென்றேன். வீட்டில் இரண்டு நாட்களாய் மீன்குளம்புதான்! என் தாயும் தந்தையும் அவர்கள் கண்டிராத காட்டின் கதைகளை என்னிடம் கேட்டு ‘ஜாக்கிரதையா!’ உன்னை விட்டா எங்களுக்கு யாரும் இல்லை!” எனக் கூறியதோடு நிறுத்திக் கொண்டனர். மறுநாள் வங்கித்தேர்வில் நான் தேர்வானதிற்கான கடிதம் வந்தது. வீடே மகிழ்ந்தது. எனக்கும் தான்! ஆனால் மனதின் ஒரு ஓரத்தில் வனஉயிரின ஆய்வாளர் ஒருவன், குரல் வெளியில் வராமல் அழ ஆரம்பித்தான்.
‘சார்! வங்கி வந்துவிட்டது சார்!’ என்ற என் கார் ஒட்டுனரின் குரலில் நான் மீண்டும் 2023க்கு திரும்பினேன்.
(தொடரும்)