Skip to content
Home » காட்டு வழிதனிலே #23 – கொல்லிமலை

காட்டு வழிதனிலே #23 – கொல்லிமலை

vulture

‘அய்யா! பாறுகழுகு நம்ப கோயிலாண்ட வந்திருக்காம்யா!’ ஒரு வயதான பெண் வீரமணியின் காதருகே சொல்லச் சொல்ல அதைக் கேட்ட வீரமணியின் முகத்தில் மெல்லிய மகிழ்ச்சி படர்ந்து உறைந்தது. ஆம், வீரமணியின் உயிர் அப்போதுதான் பிரிந்தது. அந்த இடமே அழுகுரல்களால் உடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது.

வீரமணி பிறந்து வளர்ந்தது எல்லாமே இந்தச் செம்மேட்டு மலைக்குடியிருப்பில்தான். செம்மேடு கொல்லிமலையின் மேற்பரப்பில் இருக்கும் ஒரு பெரிய ஊர். கொல்லிமலை 485 சதுரக் கிலோமீட்டர் பரப்பில் உள்ள ஒரு தொடர்ச்சியற்ற மலைப்பகுதி.

ஒரே பிள்ளையாய் பிறந்தாலும் அவன் பெற்றோர்கள் அவனுக்கு வேண்டியதைத் தந்து வளர்த்து வந்தனர். ஊரிலேயே வசதி படைத்த மலைக்குடிகளுள் முதன்மையானவர் அவன் தந்தை. 1950களில் அனுமதி வாங்கித் துப்பாக்கி வைத்திருந்த குடும்பங்களில் அவனுடையதும் ஒன்று. பட்டாக்காரர் குடும்பம் அவருடையது. அவனுக்குப் பொருளாதார வசதி இருந்தது. அதனால் வீரமணிக்கு படிப்பெல்லாம் எளிதாகவே இருந்தது. படிப்பை முடித்துவிட்டு அரசுத் தேர்வெழுதி செம்மேட்டு அரசுப் பள்ளியில் பணியிலும் சேர்ந்து விட்டான். அடுத்த இருவருடங்களில் பாவையைக் கண்ணாலம் (அவர்கள் கல்யாணத்தை அப்படித்தான் கூறுகிறார்கள்) செய்து இரு வருடங்களையும் எந்தவிதக் கணவன் மனைவி பிணக்கமும் இன்றி ஓட்டி விட்டான்.

ஆனால், திடீரென அவன் மனைவி விவாகரத்து நாடி அவர்கள் இனத் தலைவர்களிடம் கூற (அவர்கள் இனத்தில் விவாகரத்து ஒரு சாதாரண நிகழ்வு!) ‘என்ன காரணம்’ என்றுகூடக் கேட்கும் தைரியம் இல்லாமல் தலைவர்களுக்குப் பணிந்து பணத்தைக் கட்டிவிட்டுப் பிரித்துவிட்டான். அன்றிலிருந்து தனிமைதான். அந்தத் தனிமைதான் அவனைக் கொல்லிமலை சார்ந்த மிருகங்களின் மீது பற்று வைக்கக் காரணமாயிற்று.

அவன் சார்ந்த மலையாளிப் பிரிவு விவசாயம் செய்வதையும், மரங்கள் வெட்டுவதையும், ஆடுகள், கோழிகள் வளர்ப்பதையும், மிருகங்களை வேட்டையாடுவதையும் பழக்கமாய் கொண்டதால் அவன் கண் முன்னே அவனும் அவன் சார்ந்த குடிகளும் கொல்லிமலையில் ஏற்படுத்திய வனவுயிரின அழிவுகள் அவனுக்கு நன்றாகத் தெரியும்.

திடீரெனத் தனிமை தந்த பயம் போக்க தன் சூழல்சார் மிருகங்களில் தன்னை இணைத்துக் கொள்ள ஆரம்பித்தான். அந்நேரத்தில் அன்னாசி பழக்குவியலுடன் முதலில் வந்தது ஒரு குழிவிரியன் பாம்பு (Bamboo pitviper Trimeresurus gramineus). அது என்ன வகைப்பாம்பு என உறுதிப் படுத்தவே அவனுக்கு ஒரு வாரம் பிடித்தது. அதனைப் பற்றிய விவரத் தேடலில்தான் கொல்லிமலையில் விலங்குகளைப்பற்றிய ஆய்வுகள் மிக மிகக் குறைவு என்பதைத் தெரிந்து கொண்டான். இருந்த தரவுகளில் அப்பாம்பின் பரவல் இடங்களில் கொல்லிமலை அக்காலக்கட்டத்தில் குறிப்பிடப்படவே இல்லை. அதுதான் அவனின் ஆர்வத்திற்கு முதல் தீனி போட்டது.

அதேபோல் தாவரங்களைப் பற்றி நிறைய ஆய்வுகள் இருந்ததையும் அறிந்தான். மக்களிடம் இருந்த சித்தர்கள் பற்றிய ஒரு நம்பிக்கை இக்கொல்லிமலையையே ஒரு விநோதத் தாவரங்களைக் கொண்ட ஓர் இடம் எனும் கருத்தை அவர்களிடையே பரப்பிவிட்டது. அடுத்த ஒரு சில மாதங்களிலேயே பெரிய பாலூட்டிகளைப் பற்றிய தேடலை ஆரம்பித்தான். அவனின் துரதிர்ஷ்டம் அப்போதே பெரும்பாலான மிருகங்கள் கொல்லிமலையில் இருந்து நிரந்தரமாய் அழிக்கப்பட்டிருந்தன. அவன் சிறுவயதில் இருக்கிறது என்று சொல்லப்பட்ட போத்து, கடமான், சிறுத்தை இன்று இல்லை என உறுதியாய் கூறப்பட்டது. அவனும் அதை உறுதிப் படுத்திவிட்டான்.

மரங்கள் நிறைந்து இருக்க வேண்டிய இடங்களெல்லாம் பாறைகள் வெளியில் தெரியும் அளவிற்கு மாற்றப்பட்டிருந்தன. ஓடைகள் ஓடும் இடங்கள் எல்லாம் அடைக்கப்பட்டு மக்களால் வயல்களாய் மாற்றப்பட்டிருந்தது. மழையின் அளவும் குறைந்து போய்விட்டது. கொல்லிமலையில் பாக்சைட் கிடைப்பது ஏற்கெனவே தனியார் மற்றும் பொதுத்துறைச் சுரங்க நடவடிக்கைகளை ஈர்த்துள்ளது. பாக்சைட் பிரித்தெடுப்பதற்காக மலை சோலைக்காடுகள் பெரும்பாலானவை அழிக்கப்பட்டன. அப்போது முற்றிலும் அழியாமல் ஒரளவிற்கு அழியும் தருவாயில் இருந்தது கொல்லிமலையில் பறவைகள்தான். அன்றிலிருந்து பறவைகளைத் தேடித்தேடி அவற்றைப் பற்றிக் குறிப்பெடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டான். 35 வயதில் கொல்லிமலையில் உள்ள அனைத்துப் பறவைகளையும் துல்லியமாக அதன் இருப்பிடம், அதன் நடவடிக்கைகள் என அனைத்தையும் தெரிந்துகொண்டு விட்டான்.

பறவைகளிலே கழுகுகள் இனத்தின் மீது அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தான். ஏனென்றால் அவன் குடிகளில் அப்போதும் துப்பாக்கியால் சுடப்பட்டு வருவது காட்டுப் பன்றிகளும் இந்தக் கழுகுகளும்தான். ‘வயல்களை நாசப்படுத்துவதற்காக, கோழிக்குஞ்சுகளைத் தூக்குவதற்காக’ என்று அதற்கு அவர்கள் காரணங்கள் சொல்வார்கள். உண்மையில் வேட்டையாடுபவர்களுக்கு வரும் ‘வேட்டையாடு’ எனும் உந்துதல், வேட்டையாட எதோ ஒன்று கிடைத்தவுடன் அதை வேட்டையாடிவிட்டு இதுபோன்ற பொதுவான காரணங்களையும் சேர்த்து வைத்துக் கொள்ளும். முதலில் சாதாரணமாய் ஆரம்பித்த இந்தக் கழுகுகள் தேடலைப் பின் நாட்களில் விஞ்ஞானம் கலந்து முறைப்படுத்திக் கொண்டான்.

அதன்படி கொல்லிமலையைப் பேளுக்குறிச்சி வலது இடதுபுறம், செம்மேடு-வாசலூர், செம்மேடு-எலாக்கிராய்பட்டி, புளியஞ்சோலை வலது இடதுபுறம், செம்மேடு அரப்பளிஸ்வரன் கோயில், செம்மேடு-சோலைக்காடு, சோலைக்காடு-குளிவளைவு, குளிவளைவு-ஆலத்தூர்நாடு, குளிவளைவு-நட்டுகுளி, நட்டுகளி-அரப்பளிஸ்வரன்கோவில், குளிவளைவு-செங்காரை, செங்காரை-ஒத்தகடை, பெரியகொம்பை- வால்குழி, அரப்பளிஷ்வரன்கோயில்-வண்டலபாடி, அரியூர் சோலைகாடு-பெரியசாமி கோயில், செம்மேடு-மிசன் செட்டில்மென்ட் எனப் பகுதிகளாய் பிரித்துக்கொண்டான். ஒவ்வொரு ஞாயிறன்றும் தன்னுடைய புல்லட்டை எடுத்துக்கொண்டு மேற்சொன்னப் பகுதிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து கழுகுகளைத் தேடுவான்.

அப்படித் தேடி எடுத்த குறிப்புகளை அவன் இறுதியாய் தொகுத்ததில் அவனுக்கே சில அதிர்ச்சிதரும் ஆச்சர்யங்கள் காத்திருந்தன. பொதுவாய் கொல்லிமலைக் கழுகுகளை இழந்து பல வருடங்களாகிறது என்ற உண்மை, மொத்தத்தில் பத்துக்கும் குறைவான கழுகு இனங்களே இப்போது கொல்லிமலையில் இருக்கின்றன என்பது, கொல்லிமலை அடிவாரங்களில் அதிகம் தென்படும் செம்பருந்து, கரும்பருந்து கொல்லிமலையின் மேற்பகுதிகளில் தென்படுவதில்லை என்பது, கொல்லிமலை முழுவதும் அதிகம் காணப்படுவதாய் வல்லூறு மற்றும் காட்டுப் பாம்புக் கழுகுகளே என்பது, வெண்முதுகு பாறுகழுகுகள் மிகக் குறைவான எண்ணிக்கையிலேயே இருக்கின்றன ஆகிய தகவல்களைத் தெரிந்துகொண்டான்.

அவனுடைய தேடலின் பயனாய் நிறைய வல்லூறுகளின் கூடுகளையும், காட்டுப் பாம்புக் கழுகுகளின் கூடுகளையும் கண்டுபிடித்தான். பலநாட்கள் அவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அவற்றின் இனப்பெருக்க நிகழ்வுகளையும் நன்கு தெரிந்துகொண்டான். அதேபோல் ஏப்ரல், மே மாதங்களில் சிறு எண்ணிக்கையில் கருந்தோள் பருந்தைக் கொல்லிமலையில் கண்டும் வியந்திருக்கிறான். குளிவளைவின் விரிந்த பள்ளத்தாக்குப் பகுதியொன்றில் செம்பருந்து ஜோடியின் களியாட்டத்தில் மனம் லயித்து நேரம் போவது தெரியாமல் இருந்ததும் உண்டு.

சிறுவயதில் பாறு கழுகுகள் வட்டமடிப்பதை வைத்தே அவன் தந்தை விலங்கு எங்கு செத்துக்கிடக்கிறது என அவனிடம் கூறிய நாட்கள் எல்லாம் உண்டு. ஆனால், அவன் பறவைகளைத் தேட ஆரம்பித்தபோதே பாறு கழுகுகளைச் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும்தான் பார்த்ததுண்டு. 1998இல்தான் கடைசியாய் அவன் பார்த்தது. அதன்பின் அவனால் அவற்றை கொல்லிமலையில் பார்க்கவே முடியவில்லை.

உலகில் 23 விதமான பாறு கழுகுகள் உள்ளன. அவற்றில் இந்தியாவில் மட்டும் 9 வகைகள் உள்ளன. இவற்றில் வெண்முதுகுப்பாறு, மஞ்சள்முகப்பாறு எனும் இரண்டு வகை பாறு கழுகுகளை 1998க்கு முன்புவரை கொல்லிமலையில் அவன் பார்த்திருக்கிறான். அதீதச் செரிக்கும் சக்தி கொண்டவையாய் இப்பாறு கழுகுகள் இருப்பதால் அழுகிய உடல்கள் முதல் எலும்புகள் வரை தின்று தீர்க்கும். இறந்துபோன விலங்குகளை உண்ணுவதன் மூலம் தன் சூழலைத் தூய்மைப் படுத்தும் ஓர் உயிரினம். எதனால் இவை இப்படித் திடீரெனக் கொல்லிமலையில் இருந்து காணாமல் போயின என்பது சற்றுச் சிக்கலான கேள்வியாகத்தான் எனக்குப்பட்டது.

அப்போதுதான் இந்தியாவும் உலகமும் அதாவது 1993-2002க்கு இடைப்பட்ட காலங்களில் பாறுகழுகுகளின் எண்ணிக்கையில் மாபெரும் சரிவைச் சந்தித்ததாகச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. அந்தச் சரிவிற்குக் காரணமாய் டைக்குளோபினாக் எனும் வலி நிவாரண மருந்து எனக் கூறப்பட்டு, அதற்கு 2006இல் தடையும் (கால்நடைகளுக்குத் தருவதை மட்டும்!) விதிக்கப்பட்டது. இந்த டைக்குளோபினாக் மருந்துகள் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு வலி நிவாரணியாகச் செலுத்தப்படுகின்றன. இம்மருந்து விலங்குகள் உயிரிழந்தபின்கூட அவ்வுடலில் இருக்கும். பாலூட்டிகளுக்கு இம்மருந்து ஊறு தருவதில்லை. ஆனால் பறவைகளுக்குப் பெரும் பாதிப்பைத் தருகின்றன. மருந்து தங்கிய, இறந்த கால்நடைகளைச் சாப்பிடும் பாறு கழுகுகளுக்குச் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன எனச் சில உறுதிப்படுத்தப்பட்ட ஆய்வுகள் கூறின.

ஆனால் இதைப்பற்றித் தெரிந்துகொள்ளும் முன்பே அவன் பாறுகழுகுகளைக் கொல்லிமலையில் இழந்துவிட்டான். அதனால் அதைப்பற்றி செய்திகள் சேகரிக்க ஆரம்பித்தான். அப்போதுதான் கோயில் பூசாரி ஒருவர் ‘வெண்முதுகுப்பாறுகள் அவர் கோயில் அருகே உள்ள உயரமான மாமரம் ஒன்றில் இருந்ததாகவும், அதில் கூடுகட்டி வருடத்திற்கு ஒரு முறை அல்லது இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை முட்டையிட்டு வந்ததாகவும்’ குறிப்பிட்டார். அந்த இடத்தை அடிக்கடி போய் பார்க்க ஆரம்பித்தான். அப்போதுதான் அவன் கண்களில் கொல்லிமலையில் அழிந்திருக்கலாம் எனக் கருதப்பட்ட தேவாங்கைக் கண்டான்.

அவனுக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை. அப்போது உறுதியாய் பாறுகழுகுகளும் ஒருநாள் வரும் என நம்ப ஆரம்பித்தான். இதற்கிடையே ஒருநாள் ஆகாயகங்கையில் குளிக்க இறங்கும்பொழுது டிரோகோ ஒன்றைப் பார்த்துவிட்டான். ஏதோ மஞ்சள் நிறத்தில் மின்னி மின்னி மறைவதுபோல் தெரிய அது என்ன என்று பைனாக்குலரில் பார்த்தபொழுதுதான் அது டிராக்கோ எனக் கண்டறிந்தான். பெட்டாஜியம் எனும் இருபக்கங்களிலும் முன்னங்கால்களுக்கும் பின்னங்கால்களுக்கும் இடையே உள்ள சவ்வு போன்ற தோலை விரித்துக் காற்றில் மிதந்து மரம் தாவிக்கொண்டிருந்தது.

அந்த மிருகத்தில் பெண் பெரிதாயும், ஆண் சிறிதாயும் இருக்கும். தொண்டைப்பகுதியில் மஞ்சள் நிறத்தில் காணப்படும் சிறு தோல்நீட்சீயைப் பட்பட்டெனச் சூரியஒளி வரும் திசையின் குறுக்கே படுமாறு நீட்டி நீட்டி இனக்கவர்ச்சி செயலைச் செய்யும். அவனின் வாழ்க்கை இதுபோன்ற நிறையச் சிறு சிறு வியப்புகளால் இனிமையாகவே கழிய ஆரம்பித்தது.

அவன் விசாரித்த வரையில் பாறுகழுகள் இறந்த நிகழ்வு எதுவும் கொல்லிமலையில் அறியப்படவில்லை. ஆனால் அவற்றுக்குத் தேவையான உணவுப் பற்றாக்குறை கொல்லிமலையில் ஏற்பட்டது உண்மை. காடுகள் அழிப்பு நடந்ததும் உண்மை. ஆக, ஒருங்கிணைந்த இதுபோன்ற சில காரணங்களால் பாறுகழுகுகள் கொல்லிமலையில் இருந்து முன்பே முற்றிலுமாய் இடம்பெயர்ந்திருக்கலாம் என நினைத்துக் கொண்டான்.

இந்நிலையில் திடீரெனத் தமிழக அரசாங்கம் சுற்றுலாத்துறையை மேம்படுத்த கொல்லிமலையைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டது. அதன் விளைவாய் நிறையத் தங்கும் விடுதிகள் உருவாக்கப்பட்டன. அடுத்த ஐந்து வருடங்களில் கொல்லிமலை அவனே எதிர்பார்க்காத அளவிற்கு ஒரளவிற்கு நல்ல சுற்றுலாதளமாய்ப்போனது. அவனும் அந்த வளர்ச்சியுடனே பயணித்தான். இந்தப் புதிய வளர்ச்சி அவன் சமுதாயத்திற்கு நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கிவிட்டது. அவனும் பாறுகழுகுகள் வரும் என்ற எதிர்பார்ப்புடனே வாழ்ந்து வந்தான்.

வயது மூப்பின் காரணமாய் சில மாதங்களாய் படுத்தபடுக்கையாய் இருந்து வந்தான். இந்நிலையில்தான் பெரியசாமி கோயில் பூசாரி கோயில் அருகே ஒரு ஜோடி பாறுகழுகுகளைப் பார்த்ததாய் வீரமணியின் தங்கை மகனுக்குப் போன் செய்து சொன்னார். அச்செய்தியைத்தான் ‘அய்யா! பாறுகழுகு ஒன்னு கோயிலாண்ட வந்திருக்காம்யா!’ என அவ்வின மூத்தப் பெண் ஒருத்தி வீரமணியின் காதருகே சொன்னாள்.

(தொடரும்)

பகிர:
nv-author-image

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *