Skip to content
Home » காட்டு வழிதனிலே #25 – வன உயிரின ஓவியக்கலை

காட்டு வழிதனிலே #25 – வன உயிரின ஓவியக்கலை

நான் டாப்ஸ்லிப்பில் உள்ள விருந்தினர் விடுதியின் வெளியே அமைந்துள்ள ஒரு பெரிய பாறை. பசால்ட் வகைன்னு சொல்லுவாங்க. எரிமலை லாவா வெளிவந்து குளிர்ந்து இறுகி பாறையானதால் என்னை இப்படி அழைப்பார்கள்.

என் போன்ற பாறைகளைப் பற்றிய படிப்பிற்குப் பாறையியல் (Petrology) எனப் பெயர். என்னில் ஒரு பகுதி மட்டும் மேல் உயர்ந்து மற்றவை பூமிக்கடியில் புதைந்து இருப்பதால் என்னைச் சுற்றி நல்ல புற்கள் வளர்ந்து விடுதியில் யார் வந்தாலும் என் மீது அமர்ந்து ஓய்வு எடுக்கவோ அல்லது போட்டோ எடுக்கவோ ஆசைப்படுவார்கள். ஆனால் வனவிலங்குகள் என் அருகில் வந்து அடிக்கடி மேய்வதால் என் மீது சுற்றுலாப் பயணிகள் உட்காருவதை வனத்துறையினர் பெரும்பாலும் அனுமதிப்பதில்லை.

இந்த விடுதியில் தங்க வருபவர்களிடம் அவர்கள் முதலில் சொல்வது ‘என் மீது அமர வேண்டாம்’ என்பதே. ஆனால் அதிசயமாய் இன்றொருவர் என் மீது அமர்ந்து அங்கே தூரத்தில் புல் மேய்ந்துகொண்டிருந்த போத்துகளைத் தன் நோட்டில் வரைந்து கொண்டிருந்தார். வனவிலங்குகளைப் பற்றியும் இவ்விடத்தைப் பற்றியும் நன்கு அறிந்தவர் போல!

வனத்துறையால் அனுமதிக்கப்பட்ட ஒரு மலைக்குடி ஒருவர் அவர் அருகே மிருகங்கள் வந்தால் எச்சரிக்கை செய்யவும், அவரின் பாதுகாப்பிற்காகவும் இருந்தார். அவ்வோவியர் சில தூரிகைகள், பைனாகுலர், நீர் வண்ணப் பெட்டி ஒன்றில் சிறு சிறு வண்ணக் கட்டிகள், நிறைய கலர் பென்சில்கள் எனத் தன்னைச் சுற்றிப் பரப்பி வைத்துத் தன் செயலைச் செய்துகொண்டிருந்தார்.

வன உயிரின ஓவியக்கலை மனிதன் குகைகளில் வாழ்க்கையை ஆரம்பிக்கும்பொழுதே ஆரம்பித்துவிட்டது என்று சொல்வதில் தவறேதும் இருப்பதாய் சொல்லமுடியாது. இக்கலையின் பரிணாம உச்சங்கள் ஏதுமின்றி அப்போது தனி அழகில் பிரதிபலித்தது. வனவிலங்குகள் அவன் ஓவியத்தில் இருந்தாலும், அவற்றைத் தேடிச்சென்று அதை வரைவதற்காக அணுகவில்லை. தன் உணவாய் வெளியில் பார்த்தவற்றை முதலில் வரைய ஆரம்பித்தான். அட பாறையாகிய நான் எதற்கு இந்த ஓவியக்கலையைப் பற்றிப் பேச வேண்டும் எனக் கேட்கலாம். மனிதனின் முதல் ஒவியத்திறமை என் மீதுதான் வெளிப்பட்டது. நானே அதற்கு முதல் தளமாய். எனவே அத்திறமையைப் பற்றிக் கூற எனக்கு முழுவுரிமை உண்டு.

இன்று அறியப்பட்ட மிகப் பழமையான குகை ஓவியங்கள் பழைய கற்காலத்தில் மனிதனால் வரையப்பட்டவை. அன்றைய காலகட்டத்தில் அவனைச் சுற்றி எல்லாமே வனம்தான். லாஸ்காக்ஸ் (பிரான்ஸ்) குகை ஓவியம் அனைத்துக் குகை ஓவியங்களிலும் மிகவும் பிரபலமானது. 1940ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி, பதினெட்டு வயது நிரம்பிய மார்ஸல் ரவிடட் என்பவன் தன் நிலத்தில் வேரோடு பிடுங்கப்பட்ட ஒரு மரத்தின் அருகே இருந்த பிளவு வழியே அவனுடைய வளர்ப்பு நாய் உள்ளே சென்றுவந்ததைப் பார்த்துவிட்டு ‘அது எதோ குகை’ என நினைத்து தன் நண்பர்களைக் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றுபார்த்தான்.

ரவிதாத் ஜாக் மார்சல், ஜார்ஜஸ் ஆக்னெல், சைமன் கோன்காஸ் ஆகியவர்கள்தான் அவனுடைய மூன்று நண்பர்கள். அவர்கள் ‘இது ஏதோ அருகில் உள்ள இடத்திற்குச் செல்லும் ரகசியப் பாதையாய் இருக்கும்’ என்றுதான் நினைத்தார்கள். ஆனால், அவர்களுக்கு அதிர்ச்சியைத் தரும் விதமாகப் பழங்கால மனிதர்கள் வரைந்த ஓவியங்களைக்கொண்ட மிகப்பெரிய ஓவியக்கூடம் அவர்கள் கண்கள் முன்னே பிரமாண்டமாய் விரிந்தது!

குகைச் சுவர்கள் முழுவதும் பல்வேறு விலங்குகளின் ஓவியங்கள். ஒரு வழியாக அந்தக் குகை முழுவதும் முற்றிலுமாய் ஆராயப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு, மக்களுக்காக ஜூலை 14, 1948இல் திறக்கப்பட்டது. திடீரென வெளிஉலகிற்குத் திறந்துவிடப்பட்டதாலும், ஒரு நாளைக்கு 1,200 பார்வையாளர்களால் வெளியிடப்பட்ட கார்பன் டை ஆக்சைடு வாயுவினாலும், வெப்பம், ஈரப்பதம் மற்றும் பிற அசுத்தங்களினாலும் அந்த ஓவியங்கள் சிதைய ஆரம்பிக்க, 1963இல் குகை பொதுமக்களுக்கு மூடப்பட்டது.

குகையில் கிட்டத்தட்ட 6,000 உருவங்கள் இருந்தன. அவை மிருகங்களாகவும், மனிதர்களாகவும், குறியீடுகளாகவும் இருந்தன. மற்றபடி எந்தவித நிலப்பரப்போ தாவரங்களோ அதில் காணப்படவில்லை. ஓவியங்கள் அப்போது மனிதர்களுக்குக் கிடைத்த தனிமங்களையும் தாவரங்களையும் பயன்படுத்திச் சிவப்பு, மஞ்சள், கருப்பு வண்ணங்களை உருவாக்கி குகையின் மேற்புறத்தில் வரையப்பட்டு இருந்தன. அந்த உயரத்திற்கு உறுதியாகச் சாரம் ஏதேனும் கட்டித்தான் வரைந்திருக்க வேண்டும்.

ஹெமாடைட், கோதைட், மாங்கனீசு, கரியும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில ஓவியங்கள் நிறத்தை ஏதோ ஒன்றின் மூலம் ஒற்றி வரைந்தது போலவும், சில இடங்களில் குழல் ஒன்றின் மூலம் நிறங்கள் ஊதப்பட்டதைப்போலவும் காட்சி அளிக்கின்றன. தூரிகைகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படவில்லை. அல்லது, மழுங்கிய தூரிகை போன்ற ஒன்றை உபயோகப்படுத்தி இருக்கலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அதில் குறிப்பாக ‘நேவ்’ என்று அழைக்கப்படும் அறையில் காணப்படும் ‘தி கிராஸ்டு பைசன்’ என்ற ஓவியம், பழங்காலக் குகை ஓவியர்களின் திறமைக்கு ஒரு சான்றாகச் சொல்லலாம். அதில் எருமைகளின் பின்னங்கால்கள் வரைந்த விதத்தில் ஓவியருக்கு ஓவியத்தில் ஆழத்தை வெளிப்படுத்தும் விதம் நன்கு தெரிந்திருப்பதைக் காட்டுகிறது.

குகை ஓவியத்தின் மற்றொரு உதாரணம், க்யூவா டி லாஸ் மொனெடாஸ் என்னும் ஸ்பானியக் குகையில் உள்ளது. அந்த ஓவியம் கடைசி பனி யுகத்தின்பொழுது வரையப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதேபோல் வேறு சில பழமையான குகை ஓவியங்கள் பிரான்சிலும், க்ரோட்டே சாவ்வெட்டில் காணப்படுகின்றன. குதிரைகள், காண்டாமிருகம், சிங்கங்கள், எருமைகள், மாமூத் மற்றும் மனிதர்கள் இதில் காணப்படுகின்றன.

பிற்காலக் குகை ஓவியங்களில் மனிதன் வேட்டையாடுவது சித்தரிக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவில் காணப்படும் குகை ஓவியங்களில் பெரும்பாலும் விலங்குகள் அடங்கும். அமெரிக்காவின் குகை ஓவியங்களில் முயல், பூமா, லின்க்ஸ், மான், காட்டு ஆடு மற்றும் செம்மறி ஆடு, திமிங்கிலம், ஆமை, சூரை, மத்தி, ஆக்டோபஸ், கழுகு மற்றும் பெலிகன் போன்ற விலங்கு இனங்கள் அடங்கும். ஆஸ்திரேலியப் பழங்குடியினரால் வரையப்பட்ட பாறை ஓவியங்களில் விலங்குகள் அவற்றின் எலும்புகளையும் உறுப்புகளையும் காட்டுமாறு வரைந்திருந்தார்கள்.

பிற்காலங்களில் மனிதனின் நாகரிகம் வளர வளர வனவிலங்குகள் அவனுடைய கலாசாரத்தை, மதத்தை, நாகரீகத்தை அவனுடைய ஓவியங்களில் வெளிப்படுத்த ஆரம்பித்தன. அதோடு சேர்ந்து கற்பனை விலங்குகளும் அவனிடம் இருந்து வெளிப்பட்டன. அதைப் புராண உயிரிகள் என வைத்துக்கொள்வோம். இதுவரை சரியான அளவுகளோடு, நிறங்களோடு, சூழலோடு வரையப்படும் வனஉயிரின ஓவியங்கள் ஒன்றும் வரையப்பட்டதாகத் தோன்றவில்லை.

உண்மையில் தூய வனவிலங்கு ஓவியங்கள் சீனாவில் மிங் வம்சத்தில் இருந்தது என்று சொல்லலாம். மிங் வம்சத்தின் சீனக் கலையானது, வாத்துகள், ஸ்வான்ஸ், குருவிகள், புலிகள் உள்ளிட்ட பிற தூய வனவிலங்குகளைக் கொண்டுள்ளது. 7ஆம் நூற்றாண்டில், யானைகள், குரங்குகள், பிற விலங்குகள் இந்தியாவின் எல்லோராவில் உள்ள கல்சிற்பங்களில் சித்தரிக்கப்பட்டன. இதில் மதகலப்பு இருப்பினும் உண்மையான விலங்குகளும் தூய தன்மையுடன் வரையப்பட்டு இருந்தன.

ஏறத்தாழ பதிமூன்றாம் நுற்றாண்டிற்குப் பின்தான் இந்த வனஉயிரின ஓவியக்கலை பெரிய அளவில் வளர்ந்தது. உயர் மறுமலர்ச்சியின் சிறந்த ஓவியரான லியோனார்டோ-டா-வின்சியின் ‘பூனைகள் மற்றும் ஒரு டிராகன்’ (c. 1513-1517; பேனா மற்றும் பழுப்பு நிற மை, காகிதத்தில் கோவாச் மற்றும் கரியைத் தொடும் தூரிகை, 271 x 205 மிமீ; விண்ட்சர், ராயல் லைப்ரரி) ஒரு தூய வனவுயிரின ஓவியத்திற்கு எடுத்துக்காட்டு. இன்னமும் சொல்லப்போனால் அதுதான் இன்றைய வனஉயிரின நடத்தைகளின் படிப்பில் வரையப்படும் ஓவியங்களுக்கு முன்னோடி. அதே காலகட்டங்களில் வடக்கு ஐரோப்பிய மறுமலர்ச்சியின் சிறந்த ஓவியரான ஆல்ப்ரெக்ட் டுரேர் வரைந்த முயல், காண்டாமிருகம், புல்ஃபிஞ்ச், சிறிய ஆந்தை, அணில், நீல உருளையின் இறக்கை, குரங்கு, நீல காகம் போன்றவை வனஉயிரின ஓவியங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு. ஆனால் இவ்வோவியங்கள் விலங்குகளுக்குரிய சூழல் இன்றியே வரையப்பட்டு இருந்தன.

பதினேழாம் நூற்றாண்டில் மேல்சிவ்ர் டே ஹொண்டுகோட்ர் என்னும் டச்சு ஓவியர் குறிப்பாய் பறவைகளைத் தன் ஓவியத்தில் பிரதானப்படுத்தி இருந்தார். வனஉயிரிகள் இல்லாது, அவர் வீட்டு விலங்குகளையும், வீட்டைச் சுற்றி வேட்டையாடப்படும் விலங்குகளையும் வரைந்து இருந்தார். இருப்பினும் அதில் வனஉயிரின ஓவியத்திற்குரிய பண்புகள் எல்லாம் இருந்தன. அதாவது விலங்குகளின் உண்மையான நிறம், தோற்றம், அளவு, போன்றவை மிகை ஏதும் இன்றிச் சரியாகப் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

ஆரம்பக்கால அறிவியல் வனவிலங்கு விளக்கப் படங்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்ற ஆரம்பித்துவிட்டன. எடுத்துக்காட்டாக, ஓவியர் ‘வில்லியம் லெவின்’இன் பிரிட்டிஷ் பறவைகளை விளக்கும் புத்தகத்தைக் குறிப்பிடலாம்.

அக்காலத்தில் ஃபிராங்கோயிஸ் லீ வைலண்ட் (1769-1832) தன்னுடைய பறவைகள் புத்தகத்திற்கு முழுவதும் வண்ண ஓவியங்களை முதன் முதலில் உபயோகப்படுத்தி இருந்தார். இவர் கார்ல் லின்னேயஸ் அறிமுகப்படுத்திய முறையான பெயரிடலை எதிர்த்த ஒருவர். அவர் கண்டுபிடித்த இனங்களுக்கு பிரெஞ்சுப் பெயர்களை மட்டுமே வைத்து அதையே புத்தகத்திலும் குறிப்பிட்டு இருந்தார். இது எல்லாவற்றிற்கும் மேலாக இவருடைய பறவைகள் புத்தகத்தில் பறவைகளின் சப்தங்களை விளக்கி எழுதி இருந்தது குறிப்பிடத்தகுந்த ஒன்று. அக்காலகட்டத்திலேயே ‘போன் ஜார்ஜஸ் குவியர்’, (1769-1832), 5000க்கும் மேற்பட்ட மீன்களின் துல்லியமான படங்களை வரைந்து புத்தகமாய் வெளியிட்டு இருந்தார்.

இந்தக் காலத்தில் ஜான் ஜேம்ஸ் ஆடுபோன் மிகவும் பிரபலமான பறவைகள் ஓவியராக இருந்தார். தனக்கென்ற பாணியில் பறவைகளை யதார்த்தமாகவும், அதற்குரிய சூழலிலும் ஓவியம் வரையும் பணியை உருவாக்கி வைத்திருந்தார். இருப்பினும் தோற்றங்கள் சற்றே வியக்கத்தக்க வகையில்தான் இருந்ததன. அவரது இந்தப் படைப்புகள் அப்போது பெரியளவில் அறியப்படவில்லை.

அதேநேரத்தில் ஐரோப்பாவில், ரோசா போன்ஹூர் ஒரு நல்ல வனஉயிரின ஓவியராகப் புகழ்பெற்றார். பிற்கால இயல்பிய (realism) ஓவியங்கள் தொடங்கி அடிமனித வெளிபாட்டிய (surrealism) ஓவியங்கள் வரை ஒரு புள்ளியில் வனவுயிரின ஓவியங்களுடன் தொடர்பு இருந்தாலும், அவை நேரிடையாய் அறிவியலுடன் தொடர்புடையதால் இயல்பிய, அடிமனித வெளிபாட்டிய ஓவியங்களில் இருந்து வனவுயிரின ஓவியங்கள் நன்றாகவே வேறுபட்டு இருந்தன. உதாரணமாய் ரியலிஸ்ட் ஓவியரான மானெட்டின் ‘தி ரேவன்’ பறவையாக வரையப்பட்டு இருந்தாலும் அது சூழலற்று வரையப்பட்டிருந்தது.

இந்நேரத்தில்தான் வனவிலங்கு கையேடுகள் பெரிய அளவில் உருவாக ஆரம்பித்தன. ஐரோப்பாவில் இந்த வகையான வேலைக்காக அறியப்பட்ட ஒரு பெயர் ‘ஜான் கோல்ட்’. ஆனால், அவர் பெயர் போடப்பட்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டு வந்தாலும், அவர் அப்படி ஒன்றும் பெரிய ஓவியர் அல்ல. அவரின் கீழ் நிறைய ஓவியர்கள்கொண்ட ஒரு குழு இப்பணியைச் செய்துவந்தது. அதில் அவரின் மனைவி எலிசபெத்தும் இருந்தார்.

எலிசபெத் ஒரு நல்ல ஓவியர், அவர்தான் பறவைகள் பற்றிய புத்தகங்களுக்குப் பெரும்பாலான பறவைகளை வரைந்து கொடுத்தவர். உண்மையில், ஓவியங்களில் உள்ள இம்ப்ரெஷனிசம், பிந்தைய இம்ப்ரெஷனிசம், சர்ரியலிசம், ரியலிசம், ஃபாவிசம், சமகாலக் கலை, பின்நவீனத்துவ கலை, போன்ற அனைத்துப் படைப்பு வகைகளிலும் ஏதோ ஒரு வகையில் வனஉயிரினங்கள் இடம்பெற்று இருக்கத்தான் செய்கின்றன.

ஆனால் அது ஒரு தூய்மையான வனஉயிரின ஓவியக்கலையாகக் கருதப்படுவதில்லை. இருப்பினும் சில வகை ஓவியங்கள் வனஉயிரின வகையாகவும் அங்கீகரிக்கப்பட்டு உள்ளன. சால்வடார் டாலிகூட (சர்ரியலிஸ்ட் ஒவியர்களில் முதன்மையானவர்) (1920களின் ஃபிரான்ஸ், முதல்) தன்னுடைய சில ஓவியங்களில் வனவிலங்குகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.

அந்த வனஓவியங்களில் உள்ள பெரிய சிரமங்களே மிகக் குறைவான நேரத்திலேயே விலங்குகள் ஓவியனுக்குக் காட்சியளிப்பதும், மிக வேகமாகத் தன்னுடைய நடத்தைகளைச் செய்வதும், மனிதனைக் கண்டதும் மறைவதும் ஆகும். இதையெல்லாம் கடந்துதான் அவ்வோவியன் ஓவியனாய்ப் பரிணமிக்கிறான். இதற்காகவே முதலில் உயிரியல் பூங்காவிற்குச் சென்று வனவிலங்குகளை நன்கு வரைந்து பழக்கப்படுத்திக்கொண்டு அதன்பின் அவ்விலங்கின் சுழலிற்குச் சென்று ஓவியங்கள் வரைய ஆரம்பிக்கின்றான்.

இந்தியாவில் வனவயிரின ஓவியர்களில் முதன்மையாகக் கருதப்படுபவர் கார்ல் எ டிசில்வா. இவர் கோவாவைப் பூர்வீகமாகக்கொண்டு மும்பையில் வளர்ந்தார். சர் ஜே ஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டில் கலைஞராகப் பயிற்சிபெற்று பாம்பே நேச்சுரல் ஹிஸ்டரி சொசைட்டியில் (BNHS) சேர்ந்து சலீம் அலியின் பறவைகள் கையேட்டிற்குப் பெரும் பங்காற்றினார். அவர் இறந்தபின் பெரிய அளவில் இந்தியாவில் யாரும் உருவாகவில்லை. மலேசியாவின் சூ பேங் டெவ்ங் ’ஸ் உலகிலேயே மிகச் சிறந்த வனஉயிரின ஓவியராய் தன்னை இன்று நிலைநிறுத்திக் கொண்டுவிட்டார்.

ராபர்ட் பேட்மேன், கார்ல் பிரெண்டர்ஸ், டேவிட் ஷெப்பர்ட், ஆலன் எம். ஹன்ட் மற்றும் ஜார்ஜ் மெக்லீன் போன்றவர்கள் பிரபலமான வனவிலங்கு ஓவியர்களாய் ஆனதோடு மட்டுமின்றி இயற்கை ஆர்வலர்களாகவும், பாதுகாவலர்களாகவும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டார்கள்.

வனஉயிரின ஓவியங்கள் அழகை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, பார்வையாளர்களுக்கு இயற்கையைக் கற்பித்து அதோடு நம்முடனான உறவுகளை உருவாக்கவும், புதுப்பிக்கவும் ஒரு பாலமாய் அமைகின்றன.

அட! அவரும் படம் வரைவதை நிறுத்திவிட்டார்போல. ஆமாம். மழை தூர ஆரம்பித்துவிட்டது. அந்த மலைக்குடி அவசர அவசரமாய் எல்லாவற்றையும் எடுத்துப் பையில் வைக்க ஆரம்பித்து விட்டார். இதோ முதல் மழைத்துளி என்னை நனைக்கிறது.

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *