Skip to content
Home » கடல் நாய் #3 – ரத்த மேரி

கடல் நாய் #3 – ரத்த மேரி

ரத்த மேரி

தாமஸ் குரோம்வெல், தாமஸ் கிரான்மெர் என்று தொடங்கி தாமஸ் எனும் பெயருக்கும் மேரிக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பகை போலிருக்கிறது. அவர் தாயின் திருமணத்தைச் செல்லாததாக்கி, தந்தை எட்டாம் ஹென்றியின் அத்தனை அட்டகாசங்களுக்கும் முழு ஆதரவளித்தவர் தாமஸ் குரோம்வெல். நல்லவேளை, பிளட்டி மேரியின் கோரமுகத்தைக் காண்பதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார்.

மற்றொரு தாமஸுக்கு அந்தப் பாக்கியம் கிட்டவில்லை. முன்னாள் கத்தோலிக்க கார்டினலாகவும் பின்னர் புரோட்டஸ்டண்ட் பிரிவின் தலைமை மத குருவாகவும் இருந்த கிரான்மெரின் தலையைச் சுலபத்தில் வெட்டி அகற்றுவதில் மேரிக்கு உடன்பாடில்லை. போப்பாண்டவரைச் சாத்தான் என்று சொன்னதோடு இங்கிலாந்து சீர்திருத்த சபையருக்கு அதனைப் போதித்தவரல்லவா! கிரான்மெர் திருத்திய காமன் பிரேயரை மறுபடியும் கத்தோலிக்க முறைக்கு மாற்றியதோடு மேரி அடங்கவில்லை. ராஜ துரோகம் மற்றும் மத துவேஷக் குற்றச்சாட்டுகளுடன் அவரைச் சிறைக்கு அனுப்பி, வாடிகனின் போப்பரசரை மகிழ்வித்தாள்.

பிரான்சிஸ் டிரேக் கடலில் காலந்தள்ள பணித்த எட்மண்ட், கென்ட் மற்றும் கில்லிங்கத்தின் கடற்கரையோரமாக ரகசியமாக புரோட்டஸ்டண்ட்டின் மகத்துவத்தை மக்களுக்குக் கடத்தி வந்தார். காற்றின் பருவ மாறுதல்களையும் அலையின் அளவுகளையும் டிரேக் கற்றுக்கொண்டான். மாலுமி கிழவனைவிட கடல் அவனுக்கு அதிகம் கற்றுக்கொடுத்தது. பிரான்சுக்கும் இங்கிலாந்துக்குமிடையே மேரியின் ஆட்சியின் பெரும் காலத்தை அவன் கழித்துக்கொண்டிருந்தான்.

புரோட்டஸ்டண்டுகளை மொத்தமாகக் கொல்வதில்தான் கவனம் செலுத்தி வந்தார் மேரி. கத்தோலிக்க மன்னரைத் திருமணம் செய்துகொண்டு கத்தோலிக்க வாரிசை உருவாக்கி, இங்கிலாந்தில் சீர்திருத்த சபையின் சுவடே இல்லாமல் செய்யவேண்டும் என்றொரு பெருங்கனவு அவளுக்கு இருந்தது.

கிரான்மெரை இரண்டு வருடங்கள் சிறையில் வைத்து, எலியைப் பூனை தட்டி, விளையாடுவது போல் விளையாடிக்கொண்டிருந்தாள் மேரி. உயிரா, கொள்கையா என்று முடிவெடுக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்ட கிரான்மெர் கொள்கையைக் கைவிட முடிவெடுத்தார். காமன் பிரேயரைத் தவறாக திருத்திவிட்டேன். கத்தோலிக்கத்தை ஏற்றுக்கொள்கிறேன். போப்பாண்டவரை நான் சாத்தான் என்று கூறவில்லை. அது திரித்துச் சொல்லப்பட்டது என்றெல்லாம் பல்டியடிக்க ஆரம்பித்தார்.

தன்னுடன் கைது செய்யப்பட்ட புரோட்டஸ்டண்ட் பிஷப்புகளும் போதகர்களும் பொதுமக்கள் முன்பாக தீக்கிரையாக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டிருந்ததை கிரான்மெர் அறிவார். தன்னை மட்டும் விட்டு வைத்திருப்பதால் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது என்றே அவர் நினைத்தார்.

ஆனால் மேரிக்கு அத்தகைய எண்ணங்கள் இல்லை. ஒரு நாள் அவருடைய மரண தண்டனைக்கான ஆணையில் கையெழுத்திட்டு, நாள் குறித்தாள். அப்போதும் அவளது குரூர மனம், பொசுங்கிப்போகும் அவரது உடலின் பால் ரௌத்திரம் கொண்டது. மரண தண்டனைக்கு முன்பாக போப்பாண்டவரையும், கத்தோலிக்க சபையையும் விமர்சித்ததற்கு மன்னிப்புக் கேட்டு ஒரு உரைநிகழ்த்த அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

பல்கலைக்கழகங்களோடு படிப்புக்கு புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு நகரில் மரண தண்டனை நிச்சயிக்கப்பட்டது. அங்குள்ள செயிண்ட் மேரி தேவாலயத்தில் கிராம்வெர் இறுதி உரை ஆற்றிக்கொள்ளலாம் என நிச்சயிக்கப்பட்டது. சரி, இதையே வாய்ப்பாக எடுத்துக்கொண்டு போப்பாண்டவரையும் ராணியையும் குளிர்வித்து தப்பித்துவிடலாம் என கிரான்மெருக்குத் தோன்றியது. கிரான்மெரின் உரையை எழுதித்தரவேண்டும் என்ற கோரிக்கையோடு தற்போதைய கார்டினல் சிறைக்கே வந்திருந்தார். உரையும் தயாரானது. அதைப் படித்த ராணியும் கத்தோலிக்க அரண்மனை லாபிக்களும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

15, 16ஆம் நூற்றாண்டுகளில் மரண தண்டனைக்கு உட்பட்டவரைக் கம்பத்தில் கட்டி சுற்றிலும் தீ வளர்த்துக் கொல்வது வழக்கமாக இருந்தது. தாமஸ் வயாட் போன்ற அரிதான வீரர்கள்தான் வேறு விதமாகக் கொல்லப்பட்டிருந்தனர். செயிண்ட் மேரி தேவாலயத்திற்கு வெளியே நகரின் மத்தியில் கிரான்மெருக்காக மரக்கட்டைகள் அடுக்கப்பட்டு தீமேடை உருவாக்கப்பட்டிருந்தது. செயிண்ட் மேரி தேவாலயத்தில் அவருடைய இறுதி உரைக்குச் சிறப்பு சலுகை கொடுக்கப்பட்டிருந்தது. முந்தைய நாள் எழுதிக்கொடுத்த உரையை அவர் படிப்பார் எனக் கூடியிருந்த நகரத்தார் நினைத்தனர். அவரோ, போப்பாண்டவரையும் ராணியையும் வறுத்தெடுத்தபடி, தனது உயிரை இயேசுவிடம் ஒப்படைப்பதாக மேடையிலே கதறியழுதார். தண்டனை அதிகாரிகள் இடைமறித்து இழுத்து வந்து தீயிலிட்டனர்.

0

தாமஸ் வயாட்டின் துண்டித்த தலையைக் கண்ட டிரேக் பல நாட்கள் உறக்கமின்றித் தவித்தான். ஸ்பெயின் இளவரசர் இங்கிலாந்தின் மன்னராவதை மானசீகமாக வெறுத்தான்.

மேரியைத் திருமணம் செய்துகொண்ட இளவரசர் பிலிப் மாதமொருமுறை லண்டன் வந்தார். அவளுடன் ஊடல் கொள்வதைவிட, அவள் கொன்ற புரோட்டஸ்டண்டுகளைக் கணக்கெடுப்பதையும் குரூரக் கதைகளைக் கேட்பதிலுமே அவருக்கு நாட்டம் இருந்தது. மேரியை எப்போதும் உடல் கோளாறுகள் வாட்டி வதைத்துக்கொண்டிருந்தன. ஒப்பனைக்கு அவ்வப்போது லண்டன் வந்து சென்ற பிலிப்பின் யோகம் வேறு வகையில் வந்தது. அவரது தந்தை பேரரசர் சார்லஸ் இறந்துபோகவே அவர் இளம் வயதிலே ராஜாவானார்.

ஆனி போலினின் மகள் எலிசபெத்தைக் கொல்லமுடியாத காரணத்தால் அவளை வீட்டுக்காவலில் கடும் கண்காணிப்பில் வைத்திருந்தாள் மேரி. மரண தண்டனை ஆணைகளுக்குக் கையெழுத்திடுவதில் களித்திருந்த மேரி தனது உடல்நலனைக்கூட பேணவில்லை. அடிவயிறு பருத்து முகத்தை மறைக்குமளவிற்கு கன்னங்கள் உப்பிவிட்டன. தனது மத எதிரிகளைக் கொன்றொழிக்கக் கையெழுத்திடும் ரோபோ ராணியாக மட்டுமே மேரியைக் கருதினார் கணவன் பிலிப். குழந்தைப் பெறவேண்டுமென்ற அவளது ஆசை போலி கர்ப்ப நாடகம் ஆடும் அளவுக்கு இட்டுச் சென்றது. கர்ப்பம் தரிக்க இயலாத நிலையிலும் ஊதி பெருகும் வயிறுடன் வலம் வந்து அரண்மனை மருத்துவர்களை ஏமாற்றினாள்.

ராணி என்பதால் அவளது நாடகத்தை யாரும் பரிசோதிக்கவில்லை. ஒன்பது மாதங்கள் கழிந்தன. ராணிக்குக் குழந்தை பிறக்கப்போகிறது என்ற செய்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. லண்டனிலிருந்து 25 மைல் தொலைவில் கேட்பீல்டு அரண்மனையில் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்த தனது உடன் பிறவா சகோதரி எலிசபெத், தனக்குக் குழந்தைப் பிறக்கையில் உடனிருக்கவேண்டுமென மேரி விரும்பினாள். கொல்லவதற்காகக் கொண்டு செல்கிறார்களோ என்ற பதைபதைப்பில் லண்டன் வந்த எலிசபெத், தனது அக்காவின் போலி கர்ப்ப நாடகத்தைப் பார்த்து சிரித்து, தனது உயிருக்குத் தானே உலை வைக்கவேண்டாமென சிறைக்குத் திரும்பிவிட்டாள்.

அரியணையேறிய ஆறாவது வருடத்தில் மரணப் படுக்கையில் விழுந்தாள் மேரி. அவளுடைய மரணச் செய்தியை எதிர்நோக்கி இங்கிலாந்தின் நிலப்பரப்பில் புரோட்டஸ்டண்டுகள் பிரார்த்தனை செய்தபடி காத்துக்கொண்டிருந்தனர். அவர்களோடு சேர்த்து டிரேக்குக்கும் அந்தச் செய்தி கிடைத்தது. ஸ்பெயினைப் பார்த்து தொண்டைக் கிழிய கத்தி தனது கோபத்தைக் கடலின் ஈரக்காற்றில் அவன் கரைத்துவிட்டான்.

கேட்பீல்டு அரண்மனையின் மேல்மாடத்தின் ஜன்னலைத் திறந்துவைத்து சாவு நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் எலிசபெத். லண்டனிலிருந்து குதிரை வீரர்கள் கையில் செய்தி ஓலையுடன் வந்தாலே அவளது தொடை நடுங்கியது. போலி பிரசவம் பார்க்க லண்டன் செயின்ட் ஜேம்ஸ் அரண்மனைக்கு அழைத்துச் செல்ல வீரர்கள் வருகையிலும் அப்படித்தான் அவள் நினைத்தாள். மரணப் படுக்கையில் எலிசபெத்தைத் தனது வாரிசாக மேரி அறிவித்துவிட்டது என்னவோ உண்மைதான். ஆனாலும் எலிசபெத்துக்கு நிம்மதி இல்லை. புரோட்டஸ்டண்டுகளை அடியோடு வெறுத்த தனது அக்கா எப்போது, என்ன முடிவெடுப்பாள் என்ற நடுக்கத்திலேயே அந்தச் சிறிய அரண்மனையில் அவள் காலம் தள்ளியிருந்தாள்.

அன்று காலை பெருந்திரளாக ராணுவ வீரர்கள் கேட்பீல்டு அரண்மனைக்கு வந்தனர். திகைத்தபடி ஜன்னலில் பார்த்து நின்ற எலிசபெத் மறுநாள் சூரிய உதையத்தைப் பார்க்க முடியுமா என்ற நிச்சயத்தன்மை இல்லாமல் வெறுமையாக நின்றாள். இம்முறை வந்த வீரர்கள் அவள் முன்பாக மண்டியிட்டு ‘ராணி எலிசபெத் வாழ்க’ எனக் கோஷமிட்டனர். அதிகமாகக் கத்தோலிக்க எதிர்ப்பாளர்களைக் கொன்று குவிக்காததால் கடவுள் கோபம் கொண்டுவிட்டார் என்று மரணப்படுக்கையில் அழுதுப் புலம்பியபடி மேரி இறந்துபோயிருந்தாள்.

கடலிலும் கரையிலும் ஒரே கொண்டாட்டம்தான். இங்கிலாந்து மறுபடியும் புரோட்டஸ்டண்டுகள் வசமானது. டிரேக்கின் தந்தை கெண்ட் பகுதியில் அப்சர்ச் என்னுமிடத்தில் ஒரு தேவாலயத்தின் போதகராக மாறினார். கடல் தொடர்பான அனைத்துக் கலைகளிலும் வித்தகனாக மாறியிருந்தான் இளைஞன் டிரேக். நட்சத்திரங்களும் நிலவும் நகரும்போது கடலில் தனக்கான பாதைகளை எவரது போதனையுமின்றி அவன் அடையாளம் கண்டுகொண்டான். இந்த அனுபவங்களின் உதவியால் பின்னாள்களில் டிரேக் கடல் திசைக்காட்டியை வெற்றிகரமாக உருவாக்கினான்.

வட கடல் என்றழைக்கப்பட்ட ஆர்டிக் தென்பகுதியிலிருந்து கீழே இங்கிலாந்துவரை கிழக்கில் ஸ்கான்டினேவியன் நாடுகள், ஜெர்மனி, இவற்றை எல்லையாகக் கொண்ட பெருங்கடலில் ஏறத்தாழ 12 வருடங்கள் அந்தக் கிழவனின் சிறு கப்பலில் கடலோடியாகவும் மாஸ்டராகவும் பின்னர் கேப்டனாகவும் திகழ்ந்தான். ஆங்கிலேயக் கால்வாய் அவனுக்கான நீச்சல் குளமானது. ஸ்பெயினின் கரையை மோதி திரும்பிவரும் கடல் அலைகள் அவனது கப்பலைத் தொடுகையில் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்ந்தான்.

கடல் அவனை மகனாகப் பாவிக்கத் துவங்கியது. ஒரு தந்தை கொடுக்கும் தண்டனையாகவே கடல் கொடுக்கும் துன்பங்களை அவன் கருதினான். தந்தை மகனைக் கொல்லமாட்டார் என்ற மந்திரத்தை அவனுக்காக மட்டும் விதிவிலக்காகக் கடல் அவன் காதில் ஓதியிருக்கலாம். அப்பாவின் தோளிலேறி விளையாடும் மகனாக அவன் கடலைக் கருதினான். அந்தத் தோளிலிருந்து விழுகையில் அவனுக்கு வலிக்கவில்லை, சுலபமாக மறுபடியும் தோளைச் சாய்த்து அவனைக் கடல் ஏற்றுக்கொண்டது.

கப்பல் பயணத்தின் நெருக்கடிகளைப் பழகிக்கொண்டான் டிரேக். கிடைக்கும் இடங்களில், கிடைக்கும் நேரங்களில் உறங்கினான். உடலை விழிப்பாக வைத்துக்கொண்டான். அனைத்துக் கப்பல் விதிகளையும் கற்றுத்தேர்ந்தான். கிழவனின் மரணத்துக்குப் பிறகு கப்பல் அவனுக்குச் சொந்தமானது. கூட்டிலிருந்து சிறகு முளைத்துப் பறக்கும் குஞ்சு வானமெங்கும் பறக்க ஆசைப்படுவது போல் ஆங்கிலக் கடலில் மிதந்தான்.

பிளைமவுத் சென்று தனது உறவினரான வில்லியம் ஹாக்கின்சிடம் தான் கற்ற கடல் வித்தைகளைக் காட்டலாம் என்னும் கனவு இனி ஈடேறப்போவதில்லை என்பதை அவன் அறிந்திருந்தான். 1555இல் அவர் மரித்திருந்தார். அவரது மூத்த மகனின் பெயரும் வில்லியம் ஹாக்கின்ஸ்தான். டிரேக்கைவிட பத்து வயது மூத்தவரான வில்லியம் ஹாக்கின்சின் இரண்டாவது மகன் ஜான் ஹாக்கின்ஸ் பிளைமவுத் துறைமுகத்தின் கதாநாயகனாகவும் எலிசபெத் ராணியின் பிரதான கடற்படை தளகர்த்தாவாகவும் இருந்ததை டிரேக் அறிந்துகொண்டான்.

தனது அண்ணன்களான ஹாக்கின்ஸ் சகோதரர்களின் கப்பல் பட்டறையில் தனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா என்று ஏங்கினான். ஜான் ஹாக்கின்ஸ் ஏராளமான கப்பல்களுடன் தனது தந்தை விட்டுச்சென்ற கடல் வணிகத்தையும் அரச பந்தத்தையும் சீராகப் பேணி வந்தார்.

டிரேக் நினைத்திருந்தால் நேராக பிளைமவுத் சென்று தனது உறவினரைத் தொடர்பு கொண்டிக்கமுடியும். ஆனாலும், இளம் வயது வலிகள் அவரைத் தடுத்தன. கத்தோலிக்கம் ஏற்படுத்திய புண்ணை மறக்கமுடியவில்லை. பரம எதிரியான ஸ்பெயினை என்ன செய்யமுடியும் என்ற ஏக்கத்தோடு கடலில் சதாகாலமும் திரிந்தான்.

ஒரு நாள் ஜான் ஹாக்கின்சிடமிருந்து செய்தி வந்தது. ‘உடனடியாக பிளைமவுத் வரவும்.’ டிரேக் ஒரு கப்பல் காப்டனாக இருந்த செய்தி அவருக்குப் போயிருந்தது. ஒருவேளை டேவிஸ்டோக்கில் இருந்த டிராகேவின் பெரியப்பா, சித்தப்பாக்கள் சொல்லியிருக்கலாம். எட்மண்ட்டைத் தவிர அனைவரும் டேவிஸ்டோக்கில் தங்கியிருந்தனர். உடனடியாகத் தனது கப்பலை விற்றான். கிடைத்த பணம் மற்றும் தனது கப்பலில் பணிபுரிந்த திறமையான கடலோடிகளுடன் பிளைமவுத் விரைந்தான்.

டிரேக்கின் இளம் வயது கனவுகளில் பெரும்பாலும் வில்லியம் ஹாக்கின்ஸ்தான் நிறைந்திருந்தார். அட்லாண்டிக் கடலிலும் தென் அமெரிக்க நாடான பிரேசிலிலும் அவர் நிகழ்த்திய சாகசங்களை எட்மண்ட் பைபிள் வசனங்களுடன் சேர்த்து போதித்திருந்தார். பிரேசிலில் கடற்கரையோரம் காலனித்தளம் அமைத்திருந்த போர்ச்சுக்கல் அரசின் வணிகர்களோடும் ராணுவத்துடனும் ஹாக்கின்ஸ் நடத்திய பராக்கிரமச் செயல்கள் லண்டனின் அரண்மனையில் துதிப்பாடல்களாக பாடப்பட்டிருந்தன. அவர் பெருதாகச் சாதிக்கவில்லை என்றாலும் கடலில் வணிகம் செய்யும் வழியைத் திறந்துவிட்டிருந்தார். பின்னாள்களில் அந்த வழி பெரும் செல்வாக்கு பெற்றிருந்தது.

இருபதுகளின் மத்தியத்தில் இருந்த டிரேக்கின் கண்களில் மின்னிய அசுர நம்பிக்கையும் பயமின்மையும் ஹாக்கின்ஸ் சகோதரர்களைப் பெரிதும் கவர்ந்தது. ஸ்பெயினுக்குச் செல்லும் தங்களுடைய பயணிகள் கப்பல் ஒன்றில் டிரேக்கைப் பொறுப்பாளராக நியமிக்க முடிவு செய்தனர். பர்ஸர் (Purser) என்ற அந்த பதவியானது ஓர் அலுவலகத்தின் கணக்கருக்குச் சமமானது. கப்பலில் தான் செலுத்தும் அபார நிர்வாகத்தனத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டும் வெள்ளோட்டமாக அந்தப் பயணத்தை மாற்றிக்கொள்ள டிரேக் விரும்பினான்.

தனியாளாக, கட்டற்றுத் திரிந்துகொண்டிருந்த காளைக்கு வந்து சேர்ந்த முதல் பொறுப்பு அது. தன் தந்தை தனக்கு போதித்த ‘இறைவன் மேலான விசுவாசத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்’ என்ற வாசகத்தை மனதில் நிறுத்திக்கொண்டு, தனது பிரியமான பைபிளைப் பிடித்துக்கொண்டு ராணுவத் தளபதியின் மிடுக்கோடு அந்தக் கப்பலில் ஏறினான் டிரேக்.

(தொடரும்)

பகிர:
கு.கு. விக்டர் பிரின்ஸ்

கு.கு. விக்டர் பிரின்ஸ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்ட இளங்கலைப் பயின்று, இங்கிலாந்தில் உயர் கல்வி முடித்து, சென்னை, நாகர்கோவிலில் வழக்கறிஞாகப் பணிபுரிந்து, தற்போது அமெரிக்காவில் வசிக்கிறார். 'செற்றை' என்ற சிறுகதைத் தொகுப்பையும், சிறாருக்கான சில புத்தகங்களையும் எழுதியுள்ளார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *