பிரான்சிஸ் டிரேக் வாழ்க்கையில் மறக்கமுடியாத நாள் அது. அது வரைக்கும் இங்கிலாந்து தீவிற்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே கிடந்த சிறு நீர்பரப்பான ஆங்கிலக் கால்வாய் மற்றும் அதை ஒட்டிய கடல் பகுதிகளில் நீர் ஓட்டம் நடத்திய அவனுக்கு, அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலின் முன்தளத்தில் நின்று கொக்கரிக்கவேண்டும் என்ற பெருங்கனவு நிறைவேறும் தருணமது.
ஜான் ஹாக்கின்ஸின் ஐந்து கப்பல்களில் சிறியதான ஜூடித்தில் அவனுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. இங்கிலாந்தின் தெற்கு துறைமுகமான பிளைமவுத்திலிருந்து ஜான் ஹாக்கின்ஸின் கப்பல்கள் கரீபியன் தீவுக்கூட்டங்களையும் தென் அமெரிக்க நாடுகளையும் குறிவைத்து புதையல் வேட்கையுடன் அட்லாட்டிக் பெருங்கடலில் குதித்தன.
14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளில் கிழக்கு நோக்கி புது உலகம் தேடப் புறப்பட்ட அனைத்து ஐரோப்பிய சாகசப் பயணங்களும் துரதிர்ஷடவசமாக மேற்கு நோக்கி அடித்துச் செல்லப்பட்டது. அவையனைத்தையும் சாட்சியாக்கிய அட்லாண்டிக் பெருங்கடலுக்கு நம்மிடம் சொல்வதற்குப் பழங்கதைகள் பல இருக்கின்றன. அவற்றைப் பார்த்து கையசைத்து அனுப்பிவிட்டு டிரேக்குடன் பயணிக்கலாம்.
1341இல் அதிகாரபூர்வமாக போர்ச்சுக்கல் நாடு தனது நாடு காணும் ஆசையைக் கப்பல்களாக்கி சாகச வீரர்களுக்கு வெகுமதியும் புதையல் ஆசையும் காட்டி கடலில் இறக்கியது. சிலுவைப் போர்களில் இருநூறு வருடங்களுக்கு மேல் முதலீடு போட்டு பெருத்த சேதாரமடைந்த ஐரோப்பிய நாடுகளின் புது விளையாட்டுக்கான தேடலாகவும் இதை நீங்கள் கருதலாம்.
மத நம்பிக்கைக்காக பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்த வீரர்கள் மாண்டு மண்ணோடு மண் ஆனதை அவர்கள் வாரிசுகள் தொடர விரும்பவில்லை. தங்களது மூர்க்கத்தனமான தைரியத்தையும் உடல்வாகையும் செல்வம் சேர்க்கும் அபாயக் கடல் பயணங்களில் முதலீடாகக் கொட்ட இளைஞர்கள் முன்வந்தனர்.
போர்ச்சுகலின் 14ஆம் நூற்றாண்டு கடல் பயணங்களில் பெருத்த ஆதாயங்கள் எனச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அமெரிக்கக் கண்டத்தையும் கரீபியன் தீவுகளையும் எந்த நிலப்பரப்பு என்று கணிக்காத அந்தப் பயணங்கள் அட்லாண்டிக் கடலுக்கான சுற்றுலா போலானது. அவற்றினுள் கடல் சுருட்டி வாயில் போட்டு ஏப்பம் விட்ட போர்ச்சுகீசியர்கள் ஏராளம். சுமார் அறுபது வருடங்களுக்கு பிறகு, போர்ச்சுகல் தீவிரமாக யோசித்தது. கடலில் விளையாடியது போதும். மேற்கில் பயணித்தது போதும். அப்படியே தெற்கே போனால் என்ன?
விளைவு, ஐரோப்பியாவின் தென்மேற்கு முனையான ஜிப்ரால்டர் வழியாக போர்ச்சுகல் கப்பல்கள் தெற்கே இறங்கின. மேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ அவர்களுக்குத் தோதாகப்பட்டது. அங்கு நங்கூரமிட்டு புதையல் தேடினர். எதுவும் பெரிதாக சிக்கவில்லையென்றாலும், கடல் பயணத்தின் மேலான புது நம்பிக்கை பிறந்தது. நாற்பது ஆண்டுகளில் தொடர்ச்சியான கடல் பயணங்கள். அவ்வாறாக 1460இல் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியானாவில் காலனி அமைத்தனர்.
அப்போதும் அதற்கு முன்பாகவும் அவர்களது இதயம் விரும்பிய திசையானது இந்தியத் தீபகற்பம். அது ஒன்றும் கையெட்டும் திசையில் இல்லை என்பதைத் தொடர்ச்சியான அவர்களது தோல்விப் பயணங்கள் உணர்த்தியிருந்தன. போர்ச்சுகலின் அரச தர்பாரில் ஒவ்வொரு மாலுமியின் பயணக் கதைகளையும் கவிதை போல் கேட்டிருக்கும் அரச குடும்பத்திற்கு, இந்தியா சென்று திரும்பிய தங்களது கடல் பயணியின் ஒற்றைவரி செய்தியே தேவலோகத்திற்கு ஒப்பான செய்தியாயிருந்தது. அது இப்போதைக்கு ஈடேறப்போவதில்லை என்பது கடலில் பயணித்தவர்கள் அறிந்திருந்தனர். புராணக் கதைகள் போல இந்தியத் துணைகண்டத்தின் கதைகள் அவர்கள் அன்றாட உணவோடு ஊட்டப்பட்டிருந்தன.
1488இல் ஓர் இரவில் போர்ச்சுகல் மன்னரின் அரண்மனை பரபரப்பாக காணப்பட்டது. அமெரிக்கக் கண்டத்தின் அனைத்து நாடுகளையும் அட்லாண்டிக் பெருங்கடலில் வளர்ந்த ஆமைகள் போல் கிடந்த சிறு தீவுகளையும் பார்த்து வந்த பார்த்தலோமியோ டயஸின் பயணக்கதை கேட்க அமர்ந்திருந்த கூட்டம் அது. டயஸின் கப்பல் கரையைத் தொட்டது அறிந்தது முதல் மன்னருக்குக் கதை கேட்கும் காய்ச்சல் பிடித்துக்கொண்டது.
இரவோடு இரவாக அழைக்கப்பட்டார் டயஸ். அவரது கதைகளைக் கேட்டு வாயில் விரல் வைத்து ஆச்சரியத்தின் நுனியில் அமர்ந்திருந்த ஏராளமானோரில் ஒருவர் கிறிஸ்டோபர் கொலம்பஸ். அட்லாண்டிக் கடலின் வனப்பை வியந்து சொல்லிய டயசின் வார்த்தைகள் கொலம்பஸை மயக்கின. வெறுமனே கதை கேட்டுவிட்டு திரும்பாமல் கடலில் நெடுந்தூரம் பயணிப்பதற்கான கலைகள் அனைத்தையும் கற்றுக்கொள்ள திட்டமிட்டான். கடல் பயணத்தில் ஆர்வம் கொண்ட கொலம்பஸ் பெரும் முயற்சி மற்றும் திட்டத்துடன் சில வருடங்களிலேயே மன்னர் முன்பாக வந்து நின்றான்.
‘இதெல்லாம் நடக்கற மாதிரியா இருக்கு? வேற ஆள பாரு’ என்கிற தொனியில் அமைந்தது போர்ச்சுகல் மன்னர் ஜானின் பதில். ஒரு கடை மூடினால் என்ன? அடுத்த கடை திறந்திருந்தது. ஆம், போர்ச்சுகலுடன் வணிகச்சண்டை நடத்தி வந்த ஸ்பெயின் கொலம்பஸைச் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்றது. அதன்பின் நடந்தது அனைத்தும் வரலாறு.
கொலம்பசுக்கு நேர்ந்தது பின்னர் மெகல்லனுக்கும் நடந்தது. ஆனால் இம்முறை போர்ச்சுகல் இழந்தது உலகம் சுற்றப் புறப்பட்ட மெகல்லனை. ஸ்பெயினின் கப்பல்களுடன் அட்லாண்டிக்கின் தென்மேற்கில் தனிப்பாதை வகுத்த மெகல்லன், உலகத்தைச் சுற்றிவரும் பெரும் முயற்சியாக ஸ்பெயினுக்கு நற்பெயரைப் பெற்றுத்தர புறப்பட்டார். உலகத்தை அவர் மட்டும் சுற்றி வந்திருந்தால், பிரான்சிஸ் டிரேக் வரலாற்றில் இரண்டாம் இடம் பிடித்திருப்பார். 1521இல் பிலிப்பைன்ஸ் வந்தடைந்த மெகல்லன் கொல்லப்பட்டது வரலாற்றில் நடந்த கொடும் நிகழ்வாகும்.
1497இல் வாஸ்கோடகாமாவுக்கு நான்கு கப்பல்களையும் 170 ஆள்களையும் அளித்து கடலில் இறக்கியது போர்ச்சுகல். ஆப்பிரிக்காவின் தென்முனையை தொட்டு நம்பிக்கை காட்டிய அவருக்கு மேற்கொண்டு செல்ல வழி தெரியவில்லை. மோசம்பிக் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரைகளில் திருவிழாவில் அம்மாவின் கையை உதறிய குழந்தைப் போல் சுற்றித்திரிந்தார். ‘இந்தியா’ எந்த திசையில் இருக்கிறது எனத் தெரியாமல் அவரது கப்பல்கள் மடகாஸ்கர் தீவுக்கும் ஆப்பிக்காவுக்குமிடையே வட்டமடித்தது.
போர்ச்சுகலிலிருந்து தெற்கே ஆப்பிரிக்கா இருந்தது போல் இந்தியாவும் அதற்கு கீழே இருக்கலாம் என இறுதி முடிவெடுத்து தெற்கு நோக்கி கப்பல்களைப் பாய்ச்சியிருந்தால் என்ன ஆகியிருக்கும்! ஆர்ட்டிக் பனித்தீவுகளில் சிக்கி சின்னாபின்னமான இங்கிலாந்து கடல்பயணி சர் ஜான் வில்லோபியின் கதைதான் நினைவுக்கு வருகிறது.
சரி, நடந்ததைப் பார்ப்போம். வாஸ்கோடகாமாவின் நூல் துண்டிக்கப்பட்ட பட்டங்களான கப்பல்களுக்குத் தேவதூதனாக ஒரு சேரநாட்டு வாணிபன் வந்தான். நூற்றாண்டுகளாக நீங்கள் தவமிருந்த உங்கள் கனவு தேசத்திற்கு நேராக உங்களை வழி நடத்துகிறேன் என்று தனது சிறு கப்பலில் அழைத்துச்சென்றான். கேரளக் கரையோர நகரமான கோழிக்கோடில் அவன் கால் பதித்ததும் ஐரோப்பியர்களுக்கான பெரும் சந்தையாக இந்தியா மாறுவதற்கான முதல் தடமாகவும் அது மாறியது.
வாஸ்கோடகாமா இந்தியாவைத் தொட்ட அதே ஆண்டு 1497இல் இங்கிலாந்து மன்னர் எழாம் ஹென்றியால் அட்லாண்டிக் பெருங்கடலில் இங்கிலாந்து சார்பாக ஒரு முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. போர்ச்சுகலும் ஸ்பெயினும் மாறி மாறி கடல் வாணிபத்தைக் கையகப்படுத்திக் கோலோச்சுகையில், இங்கிலாந்து தனது பங்கிற்கு ஒரு கட்டுமரத்தையாவது கடலில் தூக்கியெறிந்து முஷ்டி முறுக்க முடிவெடுத்தது.
ஜான் கோபட் என்பவரது தலைமையில் எழாம் ஹென்றி அனுப்பிய குழுவுக்கு ஆரம்பத்தில் இலக்கும் பயணப்பாதையும் தெரியவில்லை. ‘இதுதான் அட்லாண்டிக் கடல்’ என மன்னர் வழிகாட்டியதோடு, சரி. லட்சியமற்ற கோபட்டின் கப்பல் அட்லாண்டிக் கடலைத் தாண்டியதே ‘குருடன் ஓட்டிய தேர் வென்றது’ கதைப் போலமைந்தது. தற்போதைய கனடாவின் கிழக்கு பகுதியான நோவா ஸ்காட்டியாவை வெற்றிகரமாக முத்தமிட்டுத் திரும்பிய கோபட்டின் முயற்சிகளுக்கு எழாம் ஹென்றி துணை நிற்கவில்லை.
அவருக்குப் பின் அரியணைக்கு வந்த எட்டாம் ஹென்றிக்கு தனது காதல்கள், மனைவிகள் தலைவெட்டுதல் மற்றும் போப்பாண்டவருடன் போர் ஆகியவற்றுக்கே நேரம் போதவில்லை. அருகாமை நாடுகளின் கடல் பாய்ச்சலில் சந்தேகமோ பொறாமையோ கொள்ளாத எட்டாம் ஹென்றி தனது கடல் பரப்பில் கடற்படையின் பலத்தை அதிகரிப்பதிலே குறியாக இருந்தார். ஸ்பெயினும் போர்ச்சுகலும் தங்கம் தேடி நாலாபுறங்களுக்கும் வகைவகையாக கப்பல்களைச் செதுக்கிப் பாய்ந்துகொண்டிக்கையில், பிரம்மாண்ட கப்பல்களைச் செய்து பீரங்கிகள் தருவித்து தனது கடலில் நிறுத்தி அழகு பார்த்து தனது புது எதிரியான ஒட்டுமொத்த ஐரோப்பியக் கத்தோலிக்கத்தை மிரட்டி நின்றார் ஹென்றி.
எட்டாம் ஹென்றியின் மரணத்தோடு அரியணையேறினார் பதின்ம வயது மகன் ஆறாம் எட்வர்ட். ஐரோப்பிய நாடுகளின் புது காலனியமைக்கும் பாய்ச்சலில் தனது நாட்டைச் சூழ இருந்த கடற்பரப்பில் தான் தனித்து விடப்பட்டிருப்பதை உணர்ந்தார். தனது தந்தைக் கட்டியெழுப்பிய பெரும் கடற்படையால் செலவினமே தவிர வருவாய் இல்லை. அப்போதைய ஸ்பெயினின் ஆண்ட்வெர்ப் (தற்போது பெல்ஜியத்தில்) நகரை மையமாக கொண்ட ஐரோப்பிய வணிபத்தைப் பெரிதும் நம்பியிருந்த லண்டன் செல்வந்தர்களுக்கு அருகிவரும் ஆண்ட்வெர்ப்பின் வியாபார ரகசியம் அறிய காலதாமதம் எடுத்தது. கடலில் வாணிபத்துக்கு புறப்பட்ட ஏனைய ஐரோப்பிய நாடுகளால் ஆண்ட்வெர்ப் நகரம் வெறுமை கொண்டது. அதனை நம்பியிருந்த இங்கிலாந்து வணிகர்கள், வர்த்தகத்தின் பரிணாம மாற்றத்தை அறிந்து டீன்ஏஜ் மன்னரிடம் முறையிட்டனர்.
அரசவையைக் கூட்டிய மன்னருக்கு அறிவுரைக் கூற இயலாமல் தலைமை மந்திரியும் ஏனையோரும் அமர்ந்திருந்தனர். ஸ்பானிய போர்ச்சுகீசிய கப்பல்கள் வெகுதூரம் சென்றாயிற்று, தீவுகளை வென்றாயிற்று, தென் அமெரிக்க அரசுகளைச் சூறையாடி கவர்னர்களை நியமித்து அதிகாரபூர்வ ஆட்சிகளைக் கடல்கடந்து நடத்தத் துவங்கியாயிற்று. அவர்கள் கவர்ந்து வந்த வளங்களால் கருவூலங்கள் நிரம்பி வழிந்தது. கத்தோலிக்கத்துக்கு எதிரான போரில் கவனத்தைத் தொலைத்த தந்தையைச் சபித்தான் எட்வர்ட். இனி பல நூற்றாண்டுகள் பயணப்பட்டாலும் முந்தியவர்களைத் தொடமுடியாது என்ற நிதர்சனத்தை இளம் மன்னர் புரிந்துகொண்டார். கண்களைக் கருப்புத் துணியால் கட்டி சுற்றிவிட்ட நிலையில் இங்கிலாந்து காணப்பட்டது. தாமதிக்கும் ஒவ்வொரு வருடங்களும் ஆபத்தானது என்று இங்கிலாந்து நினைத்தது.
மற்றொரு பக்கம், ஸ்பெயினுக்கும் போர்ச்சுகலுக்கும் புதிய நாடுகள் பிடிப்பதில் பகை மூண்டது. பாகப்பிரிவினை வேண்டி போப்பாண்டவர் முன்பு போய் நின்றார்கள். பிரச்னையைத் தீர்க்க அட்லாண்டிக் பெருங்கடலை இரண்டாகப் பிரிக்குமாறு ரோம் நகரிலிருந்து ஆணை வந்தது. கடலைப் பிரித்த போப்பாண்டவருக்கு நிலத்தைப் பிரிப்பது பெரும் வேலையா என்ன! அமெரிக்கக் கண்டங்களில் காலனியமைத்த இரு நாடுகளுக்கும் வடக்கு தெற்கு எனப் பகுதிகளைப் பிரித்து பாகப் பிரிவினையைச் சுபமாக்கினார்.
இந்தப் பெரும் பஞ்சாயத்திற்கு இடையே, லண்டன் நகரின் தேம்ஸ் நதிக்கரையோரம் திருவிழா கோலம் கொண்டது. மூச்சைப் பிடித்துக்கொண்டு களமாடிய ஆறாம் எட்வர்ட், தனது அரசாட்சியின் பங்காக கடற்பயணத்திற்கு கால்கோல் போட்டார்.
பழம் தின்று கொட்டை போட்ட ஸ்பானிய போர்ச்சுகீசிய கடல் வித்தகர்கள் மத்தியில் இங்கிலாந்து ஏளனப் பார்வையாகிப் போனது. கடல் பயணத்திற்கு அரசர் ஆள் தேடுகிறார் என ஹுக் வில்லோபிக்கும் தகவல் சொல்லப்பட்டது. கடற்படையில் பணியிலிருந்து அனுபவம் பெற்ற அவர் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முன்வந்தார். அலங்கரிக்கப்பட்ட இரு கப்பல்கள் தேம்ஸ் நதிக்கரையில் மக்களின் பெருத்த ஆரவாரத்துக்கு மத்தியில் அரச மரியாதையுடன் பீரங்கிகள் முழங்கப் புறப்பட்டன.
ஆங்கிலக் கடல் வழியாக புதிய உலகம் தேடிப் புறப்பட்ட 140 பேர் கொண்ட ஹுக் வில்லோபியின் இருகப்பல்கள் அட்லாண்டிக் வழித்தடத்தை மறந்து வடக்கு நோக்கிப் பயணப்பட்டன. ஆர்டிக் பகுதியில் நார்வேக்கு அருகில் அந்தக் கொடும் சோகம் நடந்தேறியது. பனிப்புயலும் வறுமையும் இரு கப்பல்களில் இருந்த அனைவரையும் கொன்று போட்டது. ஆளில்லா ஒரு தீவின் கரையில் இரு கப்பல்களும் பனியில் உறைந்துவிட்டன. அவர்களது அழுகுரல்களையும் பசி கதறல்களையும் கேட்பார் ஒருவருமில்லை. அந்தப் பனிக்காலம் முழுக்க இரு கப்பல்களும் உறைந்து போன உடல்களைத் தாங்கி அங்கேயே நின்றது.
பனிக்காலம் முடிந்து மீன் பிடிக்கச் சென்ற ரஷ்ய மீனவர்கள் இரு கப்பல்களின் நிலையைத் தங்கள் மன்னர் இவானுக்கு தெரிவித்தனர். இங்கிலாந்திற்கு தகவலைச் சொல்லியனுப்பிய இவான் இரு கப்பல்களையும் பாதுகாக்க உத்தரவிட்டான். வில்லோபியின் துன்பியல் கதையைக் கேட்பதற்கு அவரை அனுப்பிய ஆறாம் எட்வர்டும் உயிரோடு இல்லை. வில்லோபிமீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை பொய்த்தது. அந்த நேரத்தில் பிளட்டி மேரிக்கு பயந்து கெண்ட் கடற்கரையிலும் கடலிலும் காலம் தள்ளினான் சிறுவன் பிரான்சிஸ் டிரேக். இயற்கையின் கருணையின்மையை வில்லோபியின் மரணம் அவனுக்கு உணர்த்தியது.
இறந்தவர்களின் உடல்களை இங்கிலாந்துக்கு அனுப்ப ரஷ்ய மன்னர் இவான் பெரும் முயற்சி எடுத்தான். இரு கப்பல்களையும் இறுதி மரியாதை செய்து அனுப்பி வைத்தான். இயற்கை அவர்கள் மேல் கொண்ட கோபம் தீரவில்லை என்பதுபோல், இரு கப்பல்களும் கடல் சீற்றத்தில் மூழ்கடிக்கப்பட்டது. இங்கிலாந்தின் மானம் காக்க புறப்பட்ட ஹுக் வில்லோபியின் உடலையாவது மீட்டெடுக்கவேண்டும் என்ற முனைப்பு இங்கிலாந்து கடற்படையினருக்கு கைக்கொடுத்தது. அவரது உடலைச் சுமந்து வந்த இங்கிலாந்தின் கடற்படைக் கப்பல்களுக்கு கடற்கரையோரமாக நின்று மக்கள் பிரியாவிடை கொடுத்தனர். அவர்களுள் பிரான்சிஸ் டிரேக்கின் பிஞ்சு கரமும் அடங்கும்.
ஸ்பெயினுக்கு எதிராகப் புரட்சி செய்த தாமஸ் வயாட்டின் கொலையும், ஸ்பெயினை வர்த்தகத்தால் வீழ்த்த புறப்பட்ட வில்லோபியை இயற்கை வீழ்த்தியதும் சிறுவன் டிரேக் இதயத்தை வெகுவாக பாதித்தது.
ஆறாம் எட்வர்டுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவனது ஒன்றுவிட்ட அக்காவுக்கு தனது ரத்தச் சொந்தங்களான ஸ்பெயின் போர்ச்சுகலுடன் வணிகச் சண்டை நடத்தும் நாட்டம் இருந்திருக்கவில்லை. அவள் புரோட்டஸ்டண்டுகளைக் கொல்வதிலேயே நேரத்தைப் போக்கினாள் என்று பார்த்தோம்.
மேலும், இங்கிலாந்து கடற்படையைச் சார்ந்த தாமஸ் விந்தம் (Thomas Wyndham) மேற்கொண்ட ஆப்பிரிக்கக் கடற்பயணமும் தோல்வியைக் கொடுத்தது. மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனின் கடற்பரப்பிலே அவர் உயிர் துறந்ததோடு அந்தப் பயண முன்னெடுப்பும் மாய்ந்து போனது. தோல்வியை ஒப்புக்கொண்ட இங்கிலாந்து தனது அண்டை நாடுகளின் பராக்கிரமச் செய்திகளின் தீவிர வாசகனாக மாறும் கையறு நிலை ஏற்பட்டது. தன்னைச் சுற்றியமைந்திருக்கும் கத்தோலிக்க நாடுகளின் வளர்ச்சியானது ஒருநாள் தன்னைப் பலிகொடுக்க வைக்கும் என்ற உண்மையானது அரண்மனை முதல் இங்கிலாந்தின் சாதாரண குடிமகன்வரை பரவி வயிற்றில் புளியைக் கரைத்தது.
புதிதாக ஆட்சிக்கு வந்த எலிசபெத்துக்குச் சகல விதத்திலும் ஐரோப்பியக் கத்தோலிக்க நாடுகளுடன் மல்லுகட்டும் தேவை வந்தது. தனது தந்தைக்குக் கடற்படைக் கட்டியமைக்க உதவிய பிளைமவுத்தின் வில்லியம் ஹாக்கின்சின் மகன்கள் ஜான் மற்றும் வில்லியம் அவள் நினைவுக்கு வரவில்லை. தந்தையுடன் அட்லாண்டிக் கடலில் வலம் வந்த அனுபவத்தில் ஜான் ஹாக்கின்ஸ் தனி ஆவர்த்தனம் செய்து வந்தான். ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளைக் கப்பலில் ஏற்றி தென் அமெரிக்காவிலுள்ள தனது காலனி பகுதிகளுக்கு செல்லும் ஸ்பானிய போர்ச்சுகீசிய கப்பல்களை மோப்பம் பிடித்து காத்திருந்தான் ஹாக்கின்ஸ். அவனது வேட்டையில் கைமேல் பலன் கிடைத்தது. ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளைக் கடத்தி வியாபாரம் செய்ய இறங்கிய ஜானுக்கு லண்டனில் பெரும் செல்வந்தர்கள் ரசிகர்களாக இருந்தனர். அவனது வியாபாரத்தில் முதலீடு செய்யப் போட்டியிட்டனர்.
ஜான் ஹாக்கின்சைத் தட்டிவைக்க வேண்டும் என்ற தாக்கீது ஓலைகள் எலிசபெத் ராணியின் மேசையில் குவிந்தன. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கான இங்கிலாந்து தூதுவர்கள் நேரடியாக வந்து முறையிட்டனர். தனது எதிரிகளுக்குக் கடலில் தண்ணி காட்டும் ஜான் ஹாக்கின்ஸ்மீது பெரும் மதிப்பு கொண்டாள். தனது மீட்பனை தனக்கு அடையாளம் காட்டிய மகிழ்ச்சியில் வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு இனிப்பளித்து சாக்குப்போக்கு சொல்லி அனுப்பினாள். ஜான் ஹாக்கின்ஸை வைத்து வேறொரு திட்டம் அவளுக்கு இருந்தது.
(தொடரும்)