நிலவியல் வல்லுநர்கள் உயிர்களின் தோற்றத்துக்கு முன்பான பூமியின் தோற்றக் காலத்திலிருந்து இக்காலம் வரையிலான கால இடைவெளியை வெவ்வேறாகப் பிரித்துப் பெயரிட்டுள்ளனர். அவற்றைச் சுருக்கமாகத் தெரிந்துகொண்ட பிறகு உயிர்களின் தோற்றத்தைப் பார்ப்போம்.
பூமியின் ஆரம்ப நிலை அல்லது தோற்றத்திலிருந்து நான்கு பில்லியன் வருடங்கள் வரை உள்ள காலம் ஹாடியன் (Hadean) என்று அழைக்கப்படுகிறது. அதாவது இக்காலம் 4.6 பில்லியனிலிருந்து 4 பில்லியன் வருடங்களுக்கு இடைப்பட்டதாகும். ஹாடியன் என்பது கிரேக்க மொழியில் நரகம் அல்லது பாதாளம் என அழைக்கப்படும். இது ஹேடஸ் எனும் சொல்லிலிருந்து உருவானது. இக்காலம் பற்றி சிறிதளவே நமக்குத் தெரியும்.
இக்காலத்தின் சான்றுகளாக நிலவில் எடுக்கப்பட்ட பாறை மாதிரிகளும் விண்வெளிக் கற்களும் உள்ளன. பூமியும் நிலவும் சமகாலத்திலேயே உருவாகியிருக்க வேண்டும் என்ற கருத்தில் இவற்றையே இக்காலத்திற்கான சான்றுகளாகக் கூறுகிறார்கள். பூமியில் இருந்த வெவ்வேறு சான்றுகள் அனைத்தும் அழிந்துபோன நிலையில், மேற்சொன்னவையே நமக்கு உதவும் நிலையில் உள்ளன.
இக்காலத்தில் நைட்ரஜன் மட்டும் பூமியைச் சுற்றி இருந்ததாகத் தெரிகிறது. சிலர் கார்பன்-டை-ஆக்சைடு, நீராவி, எரிமலை வாயுக்கள் கொண்ட வாயுமண்டலம் இருந்ததாகக் கூறுகிறார்கள். இந்நிலையில் பாறைகளின் நிலையைக் கனடாவில் காணப்படும் ‘அகஸ்டா நிஸ்’ என்ற 4 பில்லியன் வருடத்திற்கு முன் தோன்றிய பாறைகளைக் கொண்டு அறியமுடிகிறது.
உயிரினத் தோற்றம் ஏதுமின்றி மிகச் சூடாக நரக நிலையை ஒத்து பூமி காணப்படுவதாகச் சொல்லும் காலகட்டம் ஆர்கியான் எனப்படும். இந்த இரண்டாவது காலநிலையானது 4 பில்லியன் வருடத்தில் இருந்து 2.5 பில்லியன் வருடத்திற்கு உட்பட்டது. ஆர்கியான் என்றால் பழமையான என்று பொருள். இக்காலகட்டத்தின் ஆரம்ப நிலையில் பூமியில் வெப்பம் தணிந்து, ஆக்சிஜன் மிக மிகக் குறைவாகக் கொண்ட வாயுமண்டலம் உருவானதாகக் கூறுகின்றனர்.
கடல் உருவான காலம் இதுதான். அப்போது நீராவி அதிகம் காணப்பட்டது. இதுவே முதல் உயிர் தோற்றத்திற்கு வழிவகுத்தது எனக் கூறவேண்டும். இம்முதல் உயிரின் மூலமே தற்கால உயிர்களின் அடிப்படை. இக்கால இறுதியில் ஒளிச்சேர்க்கை நடத்தும் உயிரினங்கள் தோன்றி ஆக்ஸிஜனை வெளியிட்டு வாயு மண்டலத்தில் அதன் அளவை மிகுதிப்படுத்தின. நீர்ச்சுழற்சி அக்காலத்தில் நடைபெற்றதற்கான ஓர் ஆதாரம் கிரீன்லாண்டில் கிடைக்கப்பெற்ற ஒரு பாறையில் பதிவாகியுள்ளது. இக்காலத்தில்தான் முதல் உயிர் தோன்றியிருக்க வேண்டும். அதனைப் பற்றி நாம் முன்பே பார்த்துவிட்டதால் அதனைத் தாண்டி வேறு காலப்பகுதிக்குச் செல்வோம்.
இப்பொழுது ஆஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட படிவத்தில் இருந்து 3.5 பில்லியன் வருடத்திற்கு முன்பு காணப்படும் ஸ்ரோமடோலைட்ஸ் வகை உயிரினம் இருந்தது அறியப்பட்டுள்ளது. ஆக உயிரினம் 2.7 பில்லியன் வருடத்திற்கு முன்பாகக் குறிப்பாக 3.5 பில்லியன் வருடக் காலகட்டங்களில் தோன்றியிருக்கலாம் என்று உறுதியாகக் கூறலாம்.
2.5 பில்லியன் வருடங்களிலிருந்து 542 மில்லியன் வருடங்கள் வரை உள்ள இடைப்பட்ட காலத்தை புரோட்டீரோசோயிக் (Proterozoic) என அழைக்கின்றனர். இதுவும் முதல் உயிர் எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்லாகும். இதனைத்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை ‘புரோகேம்பிரியன்‘ என அறிஞர்கள் அழைத்தனர். இந்தக் காலத்தில் உண்டான பாறைகள் ஆஸ்திரேலியா, கனடா, சீனா போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டன. இப்போது சிறந்த அமைப்புடைய செல் உயிர்கள் தோன்ற ஆரம்பித்தன. பல செல் உயிராக்கமும் இக்காலத்தில்தான் நிகழ்ந்தது.
இப்படிப் பல செல் உயிர்கள் தோன்றியதற்கான சான்றுகள் தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள எடியாகரன் மலைத்தொடரில் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிகழ்வு அம்மலையின் பெயராலேயே அழைக்கப்பட்டது. ஒளிச்சேர்க்கையின் தாக்கத்தினால் வாயுமண்டலத்தில் ஆக்ஸிஜனின் அளவு அதிகரிக்க ஆரம்பித்தது என்று முற்பகுதியில் கண்டோம். இதற்குக் காரணமாக அமைவது கடலில் காணப்பட்ட ஒரு செல் பாசி இனங்களும் பாக்டீரியாக்களும் ஆகும்.
தொடர்ந்து வந்த காலத்தை பனிரோசோயக் (Phanerozoic) என அழைக்கிறோம். இக்கால அளவு 542 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து (மிஆமு) தற்சமயம் வரையிலான காலமாகக் கருதப்படுகிறது. இதனை மேலும் பகுத்து Paleozoic (542-252 மிஆமு), Mesozoic (252-65.5 மிஆமு) மற்றும் Cenozoic (65.5 மிஆமு – இன்றுவரை) என்று பிரித்துள்ளனர்.
கேம்பிரியன் (Cambrian) என்பது 542-488 மிஆமு காலமாகும். பாலியோசோயக் தொடக்க காலத்தினைக் கேம்பிரியன் என அழைக்கிறோம். கேம்பிரியன் என்பது ரோமன் பெயரில் வேல்ஸ்சைக் குறிப்பதாகும். இக்கால வகையைச் சார்ந்ததாக நமக்குக் கிடைத்த விலங்குப் படிவங்களில் பெரும்பாலானவை விலங்குகளின் ஓடுகள் உருவானதை உறுதிசெய்வதாய் இருக்கின்றன.
இக்காலத்தில்தான் விலங்குகளில் இனப்பெருக்கம் அதிகம் நடைபெற்றதாக அறிவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இக்கால இடைவெளியில் மிக அதிகமாய் இருந்தது ட்ரைலொபைட்ஸ் எனும் பூச்சியினத்தைச் சேர்ந்த ஒரு முன்னோடி விலங்கினமே ஆகும்.
ஆர்டோவிசியன் (Ordovician) என்பது 488 – 444 மிஆமு காலம். கேம்பிரியன் காலத்தைத் தொடர்ந்து ஆர்டோவிசியன் எனும் காலம் வருகிறது. இது சுமார் 488 மில்லியன் வருடங்களுக்குப் பிறகு ஆரம்பித்து 444 மில்லியன் வருடங்கள் வரையிலான இடைப்பட்ட காலமாகும். இக்காலத்தில் தோன்றிய உயிரின ஆதாரங்கள் முதலில் வேல்ஸில்தான் கிடைத்தன. வேல்ஸில் ஒருகாலத்தில் வாழ்ந்த ஆர்டோவிசியன் எனும் பழங்குடியினர் பெயரால் இக்காலம் அழைக்கப்பட்டது.
இவ்வுயிரினங்கள் ஆரம்பத்தில் சில கேம்பிரியன் காலத்தையும் சில சைலூரியன் காலத்தையும் சார்ந்தவை. இக்காலத்தைச் சரியாகக் கணித்துப் பெயரிட்டவர் சார்லஸ் லேப்ஒர்த் (1879) ஆவார். இக்காலத்தின் சிறப்பே முதல் தரைவாழ் உயிர்களான லைகன் மற்றும் பிரையோபைட்ஸ் தாவரங்கள் தோன்றியதுதான்.
இக்கால இறுதியில் பனியுகம் (Ice Age) தோன்றி மாபெரும் பேரழிவு ஏற்பட்டது. இது பற்றி விரிவாக வேறொரு பகுதியில் பார்ப்போம். இக்காலத்தில் பல மாறுபட்ட சூழ்நிலை மண்டலங்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. இக்காலத்தில் ஏற்பட்ட பேரழிவு அப்போது உருவான உயிரினங்கள் பலவற்றையும் அழித்தது. பல்வேறு சூழ்நிலை மண்டலங்களில் ஆழ்கடல் உயிரினங்கள் பரிணமித்ததும் இத்தருணத்தில்தான்.
சைலூரியன் (Silurian) என்பது 444-416 மிஆமு காலம். சைலூரியன் என்ற பழங்குடியினர் பெயரால் அழைக்கப்பட்டது. தெளிவான நன்நீர், தரை சூழ்நிலை மண்டலம், அலையாத்திக் காடுகள் போன்றவை இக்காலத்தில் உருவாயின. குறிப்பாகத் தாடையிலா மீனினம் உருவாகிச் செழித்தது. வாஸ்குலார் தாவர இனங்கள் முதன் முதலாக இக்காலத்தின் இறுதியில் தோன்றின. பூமியின் கண்டங்களில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்தன.

தேவோனியன் (Devonian) என்பது 416-359 மிஆமு காலம். இக்காலம் இங்கிலாந்தின் தேவோன்ஷயர் பெயரால் அழைக்கப்பட்டது. இதுவே ‘மீன்களின் காலம்’ என்று விலங்கியல் வல்லுநர்களால் அழைக்கப்பட்டது. இக்காலத்தில் முதுகெலும்பற்ற விலங்குகளின் சிற்றினப் பெருக்கம் அதிகரித்து ஒரு கட்டத்தில் முதல் நிலம்சார் முதுகெலும்புடைய விலங்குகள் தோன்றின.

தேவோனியன் என்ற காலத்தின் இடைப்பகுதியில் குறுஞ்செடி மற்றும் மரம் போன்ற தாவரங்கள் உருவாயின. இக்காலத்தின் இறுதியில் உண்மையான மரங்கள் தோன்றின. பூச்சியினங்கள் எண்ணிக்கையிலும் இனத்திலும் நன்றாகப் பெருக ஆரம்பித்தன. ஆனால் அவற்றில் 70 விழுக்காட்டிற்கும் மேல் இக்கால இறுதியில் ஏற்பட்ட ‘இன அழிவு’ நிகழ்வில் அழிந்தன. இதில் நீர் வாழ் உயிரினங்கள், நிலம்சார் உயிரினங்களைவிட அதிக அளவில் பாதிக்கப்பட்டன.
கார்போனிபெரஸ் (Carboniferous) என்பது 359 – 299 மிஆமு காலம். இது இன்று இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு மிசிசிபியன் (359-318 மிஆமு) என்றும் பென்சில்வேனியன் (318 – 299 மிஆமு) என்றும் அழைக்கப்படுகிறது.
பென்சில்வேனியன் என்பது வட அமெரிக்காவில் நிலக்கரி அதிகம் நிறைந்த ஒரு பகுதியாகும். இதனால் இதன் பெயரிலேயே இக்காலம் அழைக்கப்பட்டது. இக்காலம் இரு வாழ்வினங்களின் காலம் எனக் கூறலாம். இதன் தொடர்ச்சியாகத்தான் ஊர்வனவும் தோன்ற ஆரம்பித்தன.

பெர்மியன் (Permian) என்பது 299 – 252 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலம். ருஷ்யாவின் பெர்ம் பகுதிகளில் உள்ள பாறைகளை ஓர் ஆய்வாளர் (Roderick Murchison) ஆராய்ந்து இக்காலகட்டத்து நிகழ்வுகளைக் கூறியதால் இக்காலம் பெர்மியன் என்று அழைக்கப்படுகிறது.
முதன் முதலாய் உயிரினங்களிடையே உண்மையான மாற்றமும் பரிணமிப்பும் இக்காலகட்டத்தில் தோன்றின. இளம் உயிரியின் வாழ்வு முறை அது வளர்ந்த உயிரியிடத்திலிருந்து முற்றிலுமாக மாறி இருப்பதை அக்கால தாவரப் படிவுகளில் கண்டனர். இது ‘உலக வெப்பமடைதலுக்கு’ உட்பட்ட காலமாக இருந்தது. ஆகவே அதிக அளவில் பாலைவனத்தில் பெருகியிருந்த தாவர இனங்கள் அக்கால இறுதியில் ஒரு மாபெரும் ‘இன அழிவை’ச் சந்தித்தன. இதில் 90% கடல்சார் உயிரினங்கள் அழிந்தன.

மீசோசோயக் (Mesozoic) என்பது 252 – 65.5 மில்லியன் ஆணடுகளுக்கு முந்தைய காலம். பானெரோசோயக் காலத்தின் இரண்டாவது பிரிவாக மீசோசோயக் கருதப்படுகிறது. இது மூன்று உட்பிரிவுகளைக் கொண்டது. அவற்றில் பழையது டிரையாசிக் (252-200 மிஆமு) காலமாகும். தெற்கு ஜெர்மனியில் இக்கால பாறை வடிவங்கள் 3 அடுக்குகளாய் அமைந்திருந்ததால் இதனை டிரையாசிக் என அழைத்தனர். இக்காலம் பெர்மியன் இன அழிவில் இருந்து தப்பிய உயிரினங்கள் மீண்டும் உயிர்ப் பெருக்கத்திற்கு உட்பட்ட காலமாகும்.
இதன் மையக் காலப்பகுதியில்தான் டைனோசர் இனம் தோன்ற ஆரம்பித்தது. முதல் பறக்கும் ஊர்வனவான டீரோசார் (Pterosaur), மற்ற ஊர்வனவான முதலை, ஆமை போன்றவை தோன்றின. இன அழிவிலிருந்து தப்பிய உயிரினங்கள் மீண்டும் தழைக்க ஆரம்பித்த காலமாக இக்காலத்தைக் குறிப்பிடலாம்.

ஜுராசிக் (Jurassic) என்பது 200 – 146 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலம். டிரையாசிக்கைத் தொடர்ந்து வந்த காலமான ஜுராசிக் காலம், ஜிரா மலையின் பெயரால் வழங்கப்படுகிறது. இதுவே ‘டைனோசர்களின் காலம்’ என அழைக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் இக்காலத்தைப் பறவையினத்தின் தொடக்கம் என்றும் அழைக்கலாம்.
கிரிடேசியஸ் (Cretaceous) என்பது 146-65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலம். டைனோசர்களின் ‘இன அழிவு’ காலம். உலக வெப்பமயமாக்கல் அப்போது பெரிய அளவில் நிகழ்ந்தது. பூக்கும் தாவரங்கள் தோன்றிப் பெருக ஆரம்பித்தது இக்காலத்தில்தான். அப்போது ஏற்பட்ட இன அழிவுக்குப் பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன. விண்வெளிக் கற்கள் மோதியதால் ஏற்பட்ட பாதிப்பு பெரிதாக இருந்தது. இருப்பினும் இதனை மறுக்கும் வகையில் இந்நிகழ்வுக்கு முன்பே அழிந்துபோன டைனோசர் படிவங்கள் கிடைத்ததால் மேற்சொன்ன காரணத்தை மறுப்பவர்களும் உள்ளனர்.
சீனோசோயக் (Cenozoic) (65.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தற்காலம் வரை) : இந்தக் காலம் இரண்டு பிரிவாகப் பிரிக்கப்படுகிறது. பாலியோஜின் மற்றும் நியோஜின்.

பாலியோஜின் (Paleogene) என்பது 65.5 – 23 மில்லியன் வருடங்களுக்கு இடைப்பட்ட காலமாகும். இதுவே பாலூட்டிகளின் பெருக்கத்திற்கும் பாலூட்டிகளின் வளர்ச்சிக்கும் அடிகோலிய காலம். இக்காலத்தின் ஆரம்பத்தை, விண்வெளிக் கற்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட அழிவிலிருந்து தப்பி உயிர்கள் உயிர்த்தெழுந்த காலம் என்றும் கூறலாம்.
இந்தக் காலகட்டம் பாலியோசின் (66.5-55.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு), இயோசின் (55.8-33.9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) ஆலிகோசின் (33.9-23 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது.
அதற்குப் பிறகு நான்கு காலகட்டங்கள் வருகின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
நியோஜின் (Neogene) என்பது 23 – 5.3 மில்லியன் வருடங்களுக்கு இடைப்பட்ட காலமாகும். இக்காலத்தில் குதிரை மற்றும் மான் இனங்கள் தோன்றின. கடல் நீரால் கடல் உயிரினங்கள் தழைக்க ஆரம்பித்தன.
லியோசின் (Pliocene) 5.3 – 1.8 மில்லியன் வருடங்களுக்கு இடைப்பட்ட காலமாகும். பாலூட்டிகளின் தொடர்ச்சி காலம், மனிதனின் மூதாதையர் அதாவது இரு கால்களில் நடக்கும் முன்னோர்கள் பரிணமித்த காலம் இதுவாகும்.
லிஸ்டோசின் (Pleistocene) என்பது 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 11,500 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தைக் குறிக்கும். இக்காலத்தில் மனித நாகரிக வளர்ச்சி ஆரம்பித்துவிட்டது. மனிதன் இடம்பெயர ஆரம்பித்ததும் இக்காலத்தில்தான்.
ஹலாசின் (Holocene) என்பது 11,500 ஆண்டுகளுக்கு முன்னிருந்து தற்காலம் வரையிலானது. இக்காலத்தில் மனிதனின் மூளை வளர்ச்சி உச்சகட்ட நிலையை அடைந்தது. இம்மூளை வளர்ச்சியைக் கொண்டு பூமியை மனிதன் ஆதிக்கம் செலுத்திய காலம் இதுவாகும்.
(தொடரும்)