Skip to content
Home » காக்கைச் சிறகினிலே #4 – பறவைகள் எவ்வாறு தோன்றின?

காக்கைச் சிறகினிலே #4 – பறவைகள் எவ்வாறு தோன்றின?

பறவையியலின் தோற்றம்

பறவையைப் போல் மனிதனுடன் வேறு எந்த உயிரினமும் அதிக அளவில், வெவ்வேறு பரிணாமத்தில், தொடர்ச்சியான தொடர்பு கொண்டதில்லை. தூது செல்லும் ஊடகமாக, அமைதிக்கு ஓர் அடையாளமாக, இலக்கியத்தில் ஓர் அம்சமாக, படிப்பதற்கு ஒரு பாடமாக, விளையாட்டிற்கு ஓர் உயிர்ப்பொருளாக பறவையே இருக்கிறது.

ஒரு பறவையை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆர்வம் குன்றாமல் பார்த்துக்கொண்டே இருக்கமுடியும். அப்படியொரு ஈர்ப்புத் தன்மை அதற்கு இருக்கிறது. தொடக்கத்தில் தோன்றிய பல்வேறு நாகரிகங்களிலும் பறவைகள் இறைத் தூதர்களாகக் கருதப்பட்டு வந்தது ஒரு வியக்கத்தக்க செய்தியாகும்.

பறவைகளின் மொழி கடவுளின் மொழியாகவே ஒரு காலத்தில் கருதப்பட்டது. ஒரு பறவை எவ்வாறு பறக்கிறது என்பதை அறிந்தால் எதிர்காலத்தை அறிந்துகொள்ளலாம் என்ற கருத்தும் நிலவியதுண்டு. தமிழில் ‘கழறிற்றறிதல்‘ என்ற சொல் பறவைகளின் மொழி அறிதல் என்ற பொருளைத் தருகிறது.

‘கார்கொண்ட கொடை கழறிற்று அறிவார்க்கும் அடியேன்’ – திருத்தொண்டர் தொகை
‘தென்னர் பிரான் கழறிற்று அறிவான் எனும் சேரலனே’ – திருத்தொண்டர் திருவந்தாதி

சில பறவைகள் நன்மையைக் கொண்டுவரும் என்றும் சில தீமையைக் கொண்டுவரும் என்றும் நம்பப்பட்டது. புறா தாய்மைக்கும் அன்புக்கும் அமைதிக்கும் அடையாளமாகப் போற்றப்படுகிறது. கழுகு இறை தூதர் என்கிறது கிரேக்க இதிகாசம். காகம் அப்போலாவின் தூதர்.

பறவைகள் இலக்கியங்களில் அழகியலோடு வர்ணிக்கப்பட்டுள்ளன. குகை ஓவியங்களிலிருந்து தற்கால ஓவியங்கள்வரை பறவைகளின் உருவங்கள் இடம் பெற்றிருக்கின்றன. பிரான்சிலும் ஸ்பெயினிலும் உள்ள குகைகளில் கண்டுபிடிக்கப்பட்ட 1400 ஆண்டுக்கு முற்பட்ட ஓவியங்களில் பறவைகள் இடம்பெற்றுள்ளன.

பிகாசோவின் நவீன ஓவியங்களில் பறவைகளின் தாக்கம் இருக்கிறது. ஷேக்ஸ்பியருக்குப் பறவைகள் மீதிருந்த நாட்டம் அவர் படைப்புகளில் வெளிப்படுகிறது. ‘ஷேக்ஸ்பியரின் பறவையியல்’ என்ற பெயரில் ஜேம்ஸ் ஹார்டிங் என்பவர் (James Harting, 1871) ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு அவர் நாடகங்களில் பறவைகள் குறித்த செய்திகள் மிகுதியாக இருந்திருக்கின்றன.

பறவையியலின் தோற்றம்

பல அறிவுத் துறைகளின் முன்னோடியான அரிஸ்டாட்டிலே முதன் முதலில் பறவைகள் பற்றியும் பதிவு செய்தார். பறவைகளைப் பற்றி குறிப்பெடுத்து அதைத் தனியே எழுதி தன்னுடைய ‘விலங்குகளின் வரலாறு’ எனும் தொகுப்பில் சேர்த்ததைப் பறவையியலின் தொடக்கம் எனக் கூறலாம்.

அதன் பின்னர் பல்வேறு கிரேக்க, ரோமானிய எழுத்தாளர்களும் இயற்கை ஆர்வலர்களும் பல்வேறு காலகட்டங்களில் பறவைகளைப் பற்றிய செய்திகளைப் பதிவு செய்துள்ளார்கள். அவற்றில் எவ்வளவு உண்மையான தகவல்கள் இருந்தனவோ அவற்றுக்கு நிகரான தவறான செய்திகளும் இருந்தன என்பதை மறுக்கமுடியாது. பின்னால் வந்தவர்களில் நவீன பறவையியலில் சிறந்தவராக கில்பர்ட் ஒயிட் (Gilbert White, 1789) இருந்தார். இவருடைய பதிவுகள் மிகவும் நுட்பமாகவும் ஆதாரப்பூர்வமாகவும் இருந்தன.

கில்பர்ட் ஒயிட்
கில்பர்ட் ஒயிட்

பறவையியல் வளர்ச்சி அடைந்ததற்குப் பறவையியல் வல்லுநர்கள் மட்டுமே காரணம் என்று கூறமுடியாது. பொழுதுபோக்குக்குப் பறவைகளைக் கண்டு செய்திகளைப் பதிவு செய்பவர்களும் பறவையியல் வளர்ச்சிக்குப் பங்களித்திருக்கின்றனர். உயிர்ச் செயலியலுக்கும் மருத்துவத்துக்கும் நோபல் பரிசு வென்ற நிக்கோ டின்பெர்ஜென், கான்ராட் லொரென்ஸ் (Niko Tinbergen, Konrad Lorenz) இருவருடைய ஆய்வுகளும் பறவையியலை அடிப்படையாகக் கொண்டவை.

நிக்கோ டின்பெர்ஜென், கான்ராட் லொரென்ஸ்
நிக்கோ டின்பெர்ஜென், கான்ராட் லொரென்ஸ்

1920 வரை பறவையியல், அருங்காட்சியகத்தில் உள்ள பதப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் பறவை மாதிரிகளை மட்டுமே நம்பி இருந்தது. அதன்பின் அதிக அளவில் வேட்டைத் துப்பாக்கிகள் பயன்பாட்டுக்கு வந்தவுடன், களப் பறவையியல் உருவாக வழி பிறந்தது.

0

உலகின் அழகிய பெரிய கிளி வகைகளுள் ஒன்று, ‘ஸ்பிக்ஸ் மக்காவ்’. பிரேசிலைச் சேர்ந்த இந்த இனம் வாழிட அழிவின் காரணமாக அழிந்துவிட்டது. இன்று வெறும் 88 கிளிகளே ஐந்து வெவ்வேறு இடங்களில் கூண்டுகளிளும் பூங்காக்களிலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் பெரும்பாலானவை ஒரே இணையிடம் இருந்து தோன்றியவை என்பதால் இவற்றின் எதிர்காலம் கேள்விக்குரியது.

ஜோஹென் பாப்டிஸ்ட் ஸ்பிக்ஸ் 1817இல் இக்கிளியைக் கண்டறிந்தபோதே அதன் இனம் அழிய ஆரம்பித்திருந்தது. எண்ணிக்கை குறையக் குறைய பறவை வியாபாரிகளிடையே அதன் தேவை அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் விளைவால் 1988இல் இப்பறவை அழிவின் உச்சிக்கு சென்றுவிட்டது. வெறும் நான்கு பறவைகளே தப்பிப் பிழைத்திருந்தன.

ஸ்பிக்ஸ் மக்காவ், ஜோஹென் பாப்டிஸ்ட் ஸ்பிக்ஸ்
ஸ்பிக்ஸ் மக்காவ், ஜோஹென் பாப்டிஸ்ட் ஸ்பிக்ஸ்

அடுத்த இரண்டு ஆண்டுகளில் நான்கு, ஒன்றானது. 1990இல் பிரேசில் காடு ஒன்றில் ஒரே ஒரு ஆண் பறவை மட்டுமே இருந்தது. 1995இல் இப்பறவை இனத்தைக் காப்பற்ற ஓர் இறுதி முயற்சியாக வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு பெண் பறவையை ஆண் பறவை உள்ள அக்காட்டில் பறக்கவிட்டார்கள். இதில் ஓர் அதிசயம் என்னவென்றால் அந்தப் பெண் பறவை இதே ஆண் பறவையுடன் இருந்தபோதுதான் ஆறு வருடங்களுக்கு முன் வேட்டையாடுபவர்களால்  பிடிக்கப்பட்டது.

இரு பறவைகளும் ஆறு வாரங்கள் ஒன்றாக இருந்தன. பின் பெண் பறவை மின்கம்பிகள் கீழே ஒருநாள் இறந்துகிடந்தது. அந்த ஆண் பறவையும் 5 அக்டோபர் 2000க்குப் பிறகு காணாமல் போய்விட்டது. இன்று இப்பறவையினம் பூமியில் அதன் வாழிடத்தில் அழிந்த ஓர் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 153 பறவை இனங்கள் அழிந்திருக்கின்றன. அதாவது, உலகின் ஒட்டுமொத்த பறவைகளில் 20-25 சதவிகிதம் அழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்வது நம் அச்சத்தைப் பெரிதுபடுத்தும். பறவைகள் பற்றிய படிப்பு 500 வருட பழமையானதாக இருப்பினும் பறவை பாதுகாப்புப் பற்றிய கருத்துகள் வெறும் நூறு வருடங்களுக்கு முன்புதான் தோன்றின. பறவைகள் அழிவதற்கு இதுவும் ஒரு காரணம்.

0

பல மில்லியன் வருடங்களுக்கு முன் இரு கால்களால் நடக்கும் ஊர்வன ஒன்று டைனோசர்களுடன் வாழ்ந்து வந்தது. காலப்போக்கில் அதன் கடினச் செதில்கள் இலகுவான இறகுகளாகப் பரிணமித்தன. இந்த இறகுகள் அவ்வுயிரியின் உடல் வெப்பநிலையை நிலைப்படுத்த உதவியதால் அதன் செயல்திறன் அதிகரித்தது. அதன் நடை, தாண்டுதல் என்ற நிலையை அடைந்தது. இந்தச் செயல்திறனே படிப்படியாக வானில் உயர வழிவகுத்ததுடன் பறவைகள் எனும் உயிரினப் பிரிவு பின்னாளில் உருவாகக் காரணமாயிற்று.

பறவைகள் மற்ற முதுகெலும்புடையவற்றிடம் இருந்து தாம் பெற்ற இறகுகள் மூலம் வேறுபட்டுள்ளன. இறகுகளுக்கு ஈடாக எந்தவோர் அமைப்பும் பிற முதுகெலும்புடைய உயிர்களிடம் காணப்படுவதில்லை. இறகுகள் பறப்பதற்கும் உடல்வெப்பநிலையை நிலைப்படுத்தவும் பயன்படுகின்றன.

பறவைகளின் மற்றொரு சிறப்பம்சம் அவற்றின் அலகு. பறவைகளின் வேறுபட்ட அலகுகளின் அமைப்புகளே எளிதில் ஒரு பறவையிடமிருந்து மற்ற பறவைகளை வேறுபடுத்திப் பார்க்க உதவுகின்றன. இந்த அலகு என்ற கூறு பறவைகளைத்தவிர பிளாட்டிபஸ் எனும் ஒரே ஒரு முதுகெலும்புடைய பாலூட்டிக்கு மட்டும் உண்டு.

பறவைகளைப் பறக்கும் இயந்திரம் என்று அழைக்கலாம். வெளவால்களையும் இதில் சேர்க்கலாம். பறப்பதற்கு எற்ற சிறப்பான பரிணாமத்தை அடைந்தவை இவை. ஆனால் பறப்பதில் வெளவால்களுக்கும் பறவைகளுக்கும் ஒரு முக்கியமன வேறுபாடு உண்டு. பறவைகளின் முழு உடல் அமைப்புமே பறப்பதற்காகப் பரிணமித்திருக்கிறது. ஆனால் வெளவாலில் பறக்க உதவக்கூடிய மெல்லிய தோல் போன்ற அமைப்பு மட்டுமே பறப்பதற்காகப் பரிணமித்திருக்கிறது.

பறவைகளின் தோற்றம் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. அவற்றுள் திகோடாண்ட் மற்றும் தெராப்போட் (Thecodont and Theropod Hypotheses) கோட்பாடுகள் முக்கியமானவை. வெவ்வேறு காரணங்களால், வெவ்வேறு காலக்கட்டங்களில் இக்கோட்பாடுகள் ஆதரிக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் வந்திருக்கின்றன என்றாலும் இன்றுவரை அவற்றின் செல்வாக்கு நீடிப்பதை மறுக்கமுடியாது. பறவைகளின் தோற்றத்தை அறிந்துகொள்ள உதவும் என்பதால் இரண்டையும் எளிமையாக அறிமுகம் செய்துகொள்வோம்.

தெராப்போட் கோட்பாடு

தெராப்போட் என்பது டைனோசரைப் போன்ற ஓர் ஊர்வன வகை உயிரியாகும். இதன் கால்கள் தற்காலப் பறவைகளின் கால்களை ஒத்திருந்தது. அதன் தோள்பட்டை எலும்பினைத் தாங்கும் மூட்டுக் கிண்ணமும் தற்காலப் பறவைகளின் மூட்டுக் கிண்ணங்களைப் போல் காணப்பட்டது. மேலும் அவ்வுயிரினத்தின் கூட்டில் முட்டையிட்டு அடைகாத்தல் என்ற செயலும் தற்காலப் பறவையின் பண்பை ஒத்துக் காணப்பட்டது. ஆதலால் பறவைகள் தெராப்போட் உயிரினங்களில் இருந்து பரிணமித்திருக்கவேண்டும் என்பது இக்கோட்பாட்டின் சாரமாகும்.

இருப்பினும் இக்கோட்பாடு சில கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் இருப்பது அதன் பலவீனமாகும். உதாரணமாக, ஊர்வதற்காகப் பரிணாமத்தில் வடிவமைக்கப்பட்ட உடலைக் கொண்ட ஓர் உயிரினம் எப்படிப் பறக்கக்கூடிய ஓர் உயிரினமாகப் பரிணமிக்கமுடியும்? பறப்பதற்கு முன்பே பறக்க உதவக்கூடிய மிகச்சிக்கலான ஒரு வடிவமைப்பான இறகு எவ்வாறு அந்த உயிரினத்தில் தோன்றியிருக்கக்கூடும் என்ற கேள்விகளுக்கு இக்கோட்பாட்டால் பதில் அளிக்க முடியவில்லை.

ஆனால் இரண்டாவது கேள்விக்குத் தற்போது விடை கிடைத்துள்ளது. இறகானது முதலில் உடலை வெப்பத்தில் இருந்து காக்கும் உருவமைப்பாய்த் தோன்றி, பின் பறக்க உதவக்கூடிய ஒன்றாகப் பரிணமித்துள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

திகோடாண்ட் கோட்பாடு

பறவைகள் திகோடாண்ட் எனும் ஊர்வனவற்றில் இருந்து தோற்றம் பெற்றன என்று கூறுவது திகோடாண்ட் கோட்பாடாகும். ஓடும் விலங்கு பறக்கும் விலங்காக எவ்வாறு பரிணமிக்கமுடியும் என்னும் கேள்வியை ஆதரிக்கும் கோட்பாடு இது.

திகோடாண்ட் உயிரினம் ஆகாயத்தில் மிதக்கும் தன்மை கொண்டிருந்ததால் இதிலிருந்து பறக்கும் பறவை தோன்றுவதற்கு அதிக அளவில் சாத்தியங்கள் இருந்திருக்கலாம். இருப்பினும் தெராப்போட் கோட்பாடு போலவே இக்கோட்பாட்டிலும் சில கேள்விகளுக்குப் பதில் இல்லை. மேலும் இதற்கான ஆதாரங்கள் இன்னும் முழுமையாகக் கிடைக்காதது இக்கோட்பாட்டைச் சற்று வலுவிழக்க செய்கிறது.

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *