Skip to content
Home » காக்கைச் சிறகினிலே #5 – டைனோசரும் பறவையும்

காக்கைச் சிறகினிலே #5 – டைனோசரும் பறவையும்

டைனோசரும் பறவையும்

1964இல் ஒரு வெப்பமான ஆகஸ்ட் மாதத்தில் மோன்டானா மாகாணத்திலுள்ள பிரிட்ஜர் நகரில் ஓரிடத்தில் புதைபடிமவியல் வல்லுநரான ஜான் ஆஸ்ட்ரமும் (J.H. Ostrom) அவருடைய உதவியாளரும் அன்றைய களப்பணியை முடித்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். இருவரும் நன்றாகக் களைத்திருந்தனர். வெளிச்சம் குறையத் தொடங்கியிருந்தது.

வரும் வழியில் செந்நிற மண்ணில், ஒரு பெரிய நகமும் சில எலும்புகளும் படிமங்களாகத் துருத்திக் கொண்டிருப்பதை இருவரும் கண்டனர். போதிய வெளிச்சம் இல்லாததால் அந்த இடத்தைக் குறித்துக் கொண்டு மறுநாள் வந்து தோண்டி வெளியே எடுத்தனர். அதுதான் 20ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான டைனோநிகஸ் (Deinonychus) எனும் டைனோசரின் படிமம்.

கொடூர நகம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட அந்த உயிரி, சுமார் 70 கிலோ எடையில் இரு கால்களால் நடக்கும் டைனோசர் என்பதை ஆஸ்ட்ரம் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதுவே டைனோசர்கள் எவ்வாறு வாழ்ந்தன என்றும் பறவைகள் எவ்வாறு பரிணமித்தன என்றும் அறிவதற்குக் காரணமான படிமமாக இருக்கிறது.

Deinonychus
டைனோநிகஸ்

இவ்விலங்கு டெரொபாட் வகையைச் சார்ந்தது. ஜான் ஆஸ்ட்ரம் மருத்துவம் படிப்பதை விட்டுவிட்டு ஆர்வம் காரணமாகப் புதைபடிமவியலுக்கு வந்தவர். அதில் முனைவர் பட்டமும் பெற்றவர். அவருடைய திறன் கண்டு ஏல் பல்கலைக்கழகம் அவருக்கு முதுகுநாண் புதைபடிமவியலின் காப்பாளர் பதவியைத் தந்து அழகு பார்த்தது.

இப்பதவி 1866இல் மார்ஷ் என்பவருக்காக உருவாக்கப்பட்டது. சார்லஸ் மார்ஷ், எட்வர்ட் கோப் ஆகிய இருவரும்தான் நவீனப் புதைபடிமவியலுக்கு வித்திட்டவர்கள். ‘எலும்பு யுத்தம்‘ என அழைக்கப்பட்ட புதைபடிமத் தேடலின் இரு பெரும் வீரர்கள் இவர்கள். போட்டி, பொறாமை, வஞ்சம், துப்பாக்கி, குதிரை என ஹாலிவுட் படத்தில் உள்ள அனைத்தும் இவர்களுடைய எலும்பு யுத்தத்தில் இடம்பெற்றன. இருப்பினும் அவர்கள் சேகரித்த படிமங்கள்தான் இன்று நமக்குப் பல திறப்புகளை அளித்திருக்கின்றன.

1970இல் ஆஸ்ட்ரம் பண்டைய காலத்துப் பறவையான ஆர்க்கியாப்டெரிக்ஸை (Archaeopteryx) நோக்கித் தன் கவனத்தைத் திருப்புகிறார். அப்போது 4 ஆர்க்கியாப்டெரிக்ஸ் புதைபடிமங்கள்தான் இருந்தன. ஒன்று, இறகுப் படிமம், மற்ற மூன்றும் எலும்புப் படிமங்கள். ஜெர்மனியில் ஆர்க்கியாப்டெரிக்ஸ் கிடைத்த குவாரிகளையெல்லாம் பார்த்துவிட்டு நெதர்லாண்டுக்குச் செல்கிறார்.

அங்குள்ள அருங்காட்சியகத்தில்தான் டிரோசார் எனப்படும் பறக்கும் ஊர்வனவற்றின் படிமங்கள் இருந்தன. இது ஆர்க்கியாப்டெரிக்ஸ் வாழ்ந்த காலத்தில் இருந்தாலும் அதனுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டதல்ல. அந்த அருங்காட்சியம் இயற்கை வெளிச்சத்தை அதிகம் சார்ந்து இருந்ததால் குளிர்காலங்களில் வெளிச்சமின்மை காரணமாக அருங்காட்சியகத்தை முன்பே மூடிவிடுவது வழக்கம். ஆகவே ஆஸ்ட்ரம் அந்த அருங்காட்சியகத்தில் உள்ளவற்றைப் பற்றி கவனமாகவும் அவசரமாகவும் குறிப்புகள் எடுத்துக்கொண்டார்.

‘டெரொடாக்டைலஸ் கிராசிபஸ்’ எனக் குறிப்பிடப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த படிமம் ஒன்று சற்று வெளிச்சமின்மைக் காரணமாகத் தெளிவாகத் தெரியாததால் ஆஸ்ட்ரம் அதை ஜன்னல் அருகே நல்ல வெளிச்சத்தில் வைத்துப் பார்க்க ஆரம்பித்தார். சில நிமிடத்திலேயே, அது டெரொடாக்டைலஸ் அல்ல, ‘ஆர்க்கியாப்டெரிக்ஸ்’ என்பதை அறிந்தார்.

ஆம், அந்தப் படிமம் 1855இல் கண்டுபிடிக்கப்பட்டு அன்றுவரை தவறாகப் பெயரிடப்பட்டு வந்திருக்கிறது. அந்த உண்மையை அறிந்தவுடன் அருங்காட்சியகக் காப்பாளரே மேலாய்வுக்காக அவரிடம் அதை ஒப்படைத்தார்.

அருமையான பொக்கிஷம் அல்லவா! உடனடியாகப் படிமத்துக்குக் காப்பீடு ஒன்று எடுத்துக்கொண்டு, பயபக்தியோடு தன் மடியில் வைத்துக்கொண்டே பயணம் செய்து ஏல் பல்கலைக்கழகம் அடைந்தார். (இன்றுவரை 11 ஆர்க்கியாப்டெரிக்ஸ் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன. இருந்தும் இந்த ஆர்க்கியாப்டெரிக்ஸுக்கு மட்டும் ஏன் இத்தனை முக்கியத்துவம்? டார்வின் தன் நூலை எழுதி 2 ஆண்டுகள் கழித்து அவருடைய பரிணாமக் கோட்பாட்டுக்கு முதல் ஆதாரமாக இந்த ஆர்க்கியாப்டெரிஸ்தான் இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது).

ஆஸ்ட்ரம் காலத்தில் ஜெரார்ட் ஹெயில்மன் எழுதிய பறவைகளின் தோற்றம் எனும் நூல்தான் பைபிளாகக் கருதப்பட்டு வந்தது. அது அப்போது தீகோடாண்ட் கோட்பாட்டைச் சொல்லி வெளிவந்த நூல். இப்போது ஆஸ்ட்ரம் அவர் ஆரம்பத்தில் கண்டுபிடித்த டைனோநிகஸையும் ஆர்க்கியாப்டெரிக்ஸையும் சேர்த்து ஆராய்ந்தபோது ஹெயில்மன் கருத்து தவறு என்ற முடிவுக்கு வந்தார்.

ஹெயில்மன் ஓர் ஓவியர். ஆஸ்ட்ரம் ஒரு புதைபடிமவியலாளர். எனவே ஆஸ்ட்ரமால் மிக நேர்த்தியாக ஒரு முடிவுக்கு வந்தடைய முடிந்தது. பறவைகள் டைனோசர்களுடன் தொடர்பு கொண்டவை மட்டுமின்றி அவை டைனோசர்கள்தாம். அதாவது, பறவைகள் டெரொபாட் டைனோசர்களிடம் இருந்து தோன்றியவை என்று அருதியிட்டு அவரால் கூறமுடிந்தது. பறவைகள் டைனோசர்களே (Birds as Dinosaurs – BAD) என்று ஒரு பிரிவும் சிறு பறவைகள் டைனோர்கள் அல்ல (BAND) என்று இன்னொரு பிரிவும் பின்னாளில் தோன்றின.

ஆலன் பெருசியா போன்ற பறவையியலாளர் மற்றும் புதைபடிமவியலாளர் கூட BAD-ஐ எதிர்த்து எழுதி வந்தார். ஆனால் சீனாவில் 2000 தொடங்கி இன்றுவரை கிடைத்துவரும் புதைபடிமங்கள் ஆஸ்ட்ரமின் கருத்துக்கு ஆதரவாகவே இருக்கின்றன. அப்படியென்றால் வெறும் 1850 டைனோசர் இனங்களைக் கொண்ட அக்காலம் டைனோசர் காலமா அல்லது 10,000க்கும் அதிகமான பறவையினங்களைக (பறவைதான் டைனோசர் இல்லையா?) கொண்ட இக்காலம் டைனோசர் காலமா எனும் கேள்வி எழுகிறது அல்லவா?

இருப்பினும் பிரேன் ஜேம்ஸ், ஜான் போர்ட்லெஸ் இருவரும் இன்னமும் சில உறுதியற்றத்தன்மை இக்கோட்பாட்டில் நிலவுவதாக எச்சரிக்கிறார்கள். எது எவ்வாறாயினும் பறவைக்கும் டைனோசருக்கும் நெருங்கிய தொடர்புள்ளதை டிரெக்ஸ் எனும் டைனோசர் படிமத்திலிருந்து எடுக்கப்பட்ட புரதம் பற்றிய ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது. டிரெக்சின் புரதம் தற்கால கோழி இனங்களின் புரதத்துடன் ஒத்துப்போவது கண்டறியப்பட்டுள்ளது. இன்று எலும்புகளில் காணப்படும் நார் புரதத்தை உருவாக்கும் அமினோ அமிலங்களை வரிசைப்படுத்துவதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இது படிம வரலாற்றையும் சற்று ஆட்டிப்பார்த்தது. ஏனெனில் இதற்கு முன்பு இது போன்று நார் புரதம் படிமத்தில் கிடைக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இப்படி இருக்கையில் 2000ஆம் ஆண்டில் மைக்ரோராப்டர் வகை டைனோசர் படிமம் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு, பறவைகள் மரம் சார்ந்த டைனோசர்களிடம் இருந்தே பரிணமித்திருக்க வேண்டும்; நிலம்சார் டைனோசர்களிடம் இருந்து அல்ல என்னும் கொள்கையை உருவாக்கியுள்ளது.

இவ்வகை டைனோசர்கள் ஆர்க்கியாப்டெரிக்ஸுக்குப் பிற்காலத்தில் வாழ்ந்த ஓர் உயிரினமாகக் கருதப்படுகிறது. அதாவது மைக்ரோராப்டர் வாழ்ந்தகாலம் ஆர்க்கியாப்டெரிக்ஸுக்கு 20 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு. இப்பறவை பறப்பதற்கு ஏற்ற வகையில் உடல் சிறுத்தும், மரம்சார் வாழ்க்கையைக் கொண்டதாகவும் இருந்தது.

0

பறவைகள் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகளாகப் பரிணமித்து இயற்கையோடு தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளன. உலகளவில் உயிரினங்களை எளிதாக அறியும் வகையில் பொதுப் பெயர்களை அறிஞர்கள் சூட்டுகின்றனர். இது பறவைகள் பற்றிய தகவல்களை எளிதில் ஐயமின்றிப் பரிமாற வகைசெய்கிறது.

உதாரணமாக, காகம் என்று தமிழில் அழைக்கப்படும் பறவை இந்தியாவில் மட்டுமே பதினாறு மொழிகளில் பதினாறு விதமாக அழைக்கப்படுகிறது. ஆனால் அது கார்வஸ் ஸ்ப்லென்டன்ஸ் (Corvus splendens) எனப்படும் ஒரே அறிவியல் பெயரால் உலகெங்கிலும் அழைக்கப்படுகிறது. ஆக மொழிமூலம் உருவாகக் கூடிய குழப்பம் பொதுவான அறிவியல் பெயரால் தவிர்க்கப்படுகிறது.

இதற்கு மூலக்காரணம் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்வீடிஷ் தாவரவியல் அறிஞரான கரோலஸ் லின்னேயஸ்  (Carolus Linnaeus). உயிரினங்களுக்கு இது போன்று பெயரிட்டு அவற்றின் பரிணாம ஒற்றுமையை வைத்து வரிசைப்படுத்தும் படிப்பை நாம் வகைப்பாட்டியல் (Taxonomy) என்று அழைக்கிறோம். இந்த வகைப்பாட்டியலின்படி விலங்குகள் இரு பெயர் மூலம் அழைக்கப்படுகின்றன. இப்படிப் பெயரிடுமாறு அறிவுறுத்தியவர் கரோலஸ் லின்னேயஸ். இந்த இரு பெயர் கொண்ட வார்த்தையின் முதல் பெயர் பேரினத்தைக் குறிப்பதாகும். இரண்டாவது பெயர் சிற்றினத்தைக் குறிக்கும். அதாவது கார்வஸ் பேரினத்தையும் ஸ்ப்லென்டன்ஸ் சிற்றினத்தையும் குறிக்கும்.

இப்பெயர் சூட்டல்கள் பறவைகளுக்கு அளிக்கப்படும் பெயர்களின் குழப்பத்தைத் தவிர்த்துத் தெளிவைத் தருகின்றன. இருப்பினும், அறிவியல் பெயர்களுக்கு இணையாக ஓர் ஆங்கிலப் பெயரும் அந்தந்த நாடுகளின் மொழிகளில் மற்றொரு பெயரும் பறவைகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. உலகளவில் கிளிமென்ட் (1991), ஹைவார் முரே (1991), சிஃப்லி மற்றும் மன்ரோ (1990) ஆகியோர் பறவைகளின் வகைப்பாட்டியலைத் தொகுத்துப் பட்டியலிட்டுள்ளனர்.

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *