ரத்த ஓட்ட மண்டலம்
ரத்த ஓட்ட மண்டலம் பறவையின் வளர்சிதை மாற்றத்திற்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளது. ஒரு பறவைக்கு அதிக அளவு வளர்சிதை மாற்றம் நடைபெற வளர்சிதை மாற்றம் நிகழும் இடத்திற்கும் அது நடைபெறுவதற்குத் தேவையான பொருட்களைச் சேகரிக்கும் இடத்திற்கும் இடையே ரத்த ஓட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும்.
பாலூட்டிகளைப் போல் பறவைகளும் இரண்டு ரத்த ஓட்ட நிகழ்வைக் கொண்டுள்ளன. இது மட்டுமின்றி நான்கு அறைகள் கொண்ட இதயமும் உள்ளன. உண்மையில் பறவையின் இதயம் பெரிய உறுப்பாகக் காணப்படுகிறது. அதன் மொத்த உடல் எடையில் நான்கு விழுக்காடு எடை கொண்டதாக இதயம் இருக்கிறது. உடல் எடை, இதய எடை விகிதத்தைப் பொறுத்தவரையில், பறவைகளின் இதயம் பாலூட்டிகளைவிட 50 முதல் 100 விழுக்காடு பெரியதாகவும் மிகுந்த திறனையும் கொண்டுள்ளது.
திசுக்களிலிருந்து நுரையீரலுக்கு வலது வெண்டிரிக்கள் மூலம் காற்று நேரடியாக அனுப்பப்படுகிறது. அதுபோலவே ஆக்ஸிஜன் கொண்ட ரத்தம், நுரையீரலில் இருந்து இடது வெண்டிரிக்களை அடைந்து அங்கிருந்து உடலின் வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது. பறவையின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்துக்கு அது ஓய்வாக இருக்கும்போது 150 முதல் 350 என்ற முறையிலும் சராசரியாக 220 துடிப்புகள் உடையதாகவும் இருக்கிறது. இது இடைப்பட்ட அளவு கொண்ட பறவைகளுக்கும் பொருந்தும்.
சிறிய பறவைகளுக்கு ஒரு நிமிடத்துக்கு 1200 துடிப்புகள். ரத்த அழுத்த அளவு அதிகபட்சமாகச் சில பறவையினங்களில் 300 முதல் 400 பாதரச மி.மீ உள்ளது. இதனால் மாரடைப்பு என்பது பறவைகளில்கூடக் காணப்படுகிறது. வார்பலர் எனும் ஓர் இனப்பறவை தன் இணையுடன் கூடும்போது மாரடைப்பால் இறந்ததாக அதனை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சில பறவைகள் இ ரைதேட நீரினுள் நீந்தும்போது அதற்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனை அதற்கென்று உள்ள சில திசுக்களில் இருந்தும் நாளமில்லாச் சுரப்பிகளில் இருந்தும் பெற்றுக் கொள்கின்றன.
குளிர் உளைச்சல் (Cold stress)
குளிரால் பாதிக்கப்படும் பறவை முதலில் செய்யும் செயல் நடுங்குதல். அந்நடுக்கத்தின் மூலம் ஆக்ஸிஜனின் தேவையை அதிகரித்து, உடலைச் சிறிது வெப்பப்படுத்திக் கொள்ளும். எவ்வளவு குறைந்த வெப்பநிலையில் முதல் நடுக்கத்தைப் பறவை ஏற்படுத்திக் கொள்கிறதோ அதையே கீழ்மட்ட வெப்பநிலை என்கிறோம். இந்த நடுக்கத்தை இறக்கைத் தசைகள் மூலம் செய்து வெப்பமேற்றுதலைப் பறவைகள் மேற்கொள்கின்றன.
சில பறவை இனங்களில் இறக்கைத் தசைகளுடன் கால் தசைகளும் இந்நிகழ்வில் இணைந்துகொள்கின்றன. பாலூட்டிகள் இதுபோன்ற குளிர் காலங்களில் நடுக்கத்தை மேற்கொள்ளாமலேயே ‘பழுப்புநிற அடிபோஸ் திசுக்களின்’ மூலமாக வெப்பத்தைப் பெறுகின்றன. அவ்வகை திசுக்கள் பறவைகளிடம் கிடையாது.
மேற்கூறிய முக்கியமான கீழ்மட்ட வெப்பநிலை பெரிய பறவைகளிடம் மிகக் குறைவாகவும் சிறிய பறவைகளிடம் (பாலூட்டிகளில் காணப்படுவது போல்) சற்று உயர்வாகவும் இருக்கின்றன. இதனால் சிறிய பறவைகள் குளிருணர்வு மிக்கனவாக இருக்கின்றன. பறவைகளின் இந்தத் திறன் அவை இருக்கும் இடத்தைப் பொறுத்து மாறுபடுகிறது.
குறிப்பாக, குளிர்ப் பிரதேசங்களில் வாழும் பறவைகள் 9 டிகிரி வெப்பம் குறையும் பொழுதுதான் நடுக்கத்தை உணர்கின்றன. ஆனால் அதே அளவுள்ள பறவைகள் வெப்பப் பிரதேசங்களில் 18 டிகிரி வெப்ப நிலையிலேயே நடுங்குகின்றன.
குளிர்காலத்தில் ஏற்படும் வெப்ப இழப்பைப் பறவைகள் தங்களைச் சுற்றி அருகிலேயே அமைந்திருக்கும் குறுவாழிடம் மூலம் ஈடுசெய்துகொள்கின்றன. வெப்பம் அதிகமுள்ள பொந்துகள், அடர்த்தி நிறைந்த மரங்கள் போன்றவற்றில் இரவில் தங்குவதன்மூலம் பறவைகள் தம் உடலுக்குப் போதுமான வெப்பநிலையைத் தக்கவைத்துக் கொள்கின்றன.
பறவைகள் பனிக்கட்டிகளுக்கிடையே பொந்தினை ஏற்படுத்திக்கொண்டு குளிரிலிருந்து தங்களைக் காத்துக்கொள்கின்றன. இதன் உச்சகட்டமாக ‘நத்தாட்ச்’ எனும் பறவை இனம் நூற்றுக்கணக்கில் ஒரு குளிர்கால இரவில் மூச்சு முட்டுமளவு ஒரு பைன் மரத்தில் தங்கிய உண்மை நிகழ்வும் உண்டு. இந்தப் புறாக்கள் இது போன்ற குளிர் நாட்களில் ஒன்றின் மீது ஒன்று, இரண்டு அல்லது மூன்று அடுக்குக் கொண்ட பிரமிட் வகை அமைப்பில் அமர்ந்து குளிரைத் தவிர்த்துக் கொள்கின்றன.
பறவைகளின் உடல் வெப்பம் பகலில் சற்று உயர்வடைந்தும் இரவில் சற்றுக் குறைவாகவும் இருப்பதால் (ஏறக்குறைய 2 முதல் 3 டிகிரி) அவற்றின் சக்தி சேமிக்கப்படுகிறது. உடல் வெப்பம் சாதாரண நிலையைவிட கீழிறங்கினால் அதை இறங்கு வெப்பநிலை என்கிறோம். சில நேரங்களில் பறவைகள் இந்த இறங்கு வெப்பநிலைக்கும் கீழே தன் வெப்பநிலையை வைத்துக்கொள்கின்றன. இதனை Torpor என்கிறோம். இந்நிலையில் பறவைகள் எந்த ஒரு தூண்டலுக்கும் எதிர்வினை செய்ய முடியாது. ஏனென்றால் இது ஒரு மயக்கநிலை அல்லது தூக்கநிலையாகும்.
இம்மயக்க நிலையிலிருந்து விடுபட பறவைகளுக்கு ஒரு மணியிலிருந்து 12 மணிநேரம்கூட ஆகிவிடும். தேன்சிட்டு ஒரு மணி நேரத்திற்குப் பிறகும்; கெஸ்ட்ரல் எனும் கழுகினம் 12 மணி நேரத்திற்குப் பிறகும் விழிக்கின்றன. அமெரிக்காவிலும் மெக்சிகோவிலும் உள்ள சில பறவைகள் (Poorwill எனும் ‘நைட்ஜார்’ வகை பறவைகள்) மூன்று மாதம்வரை உறக்கநிலைக்குத் தங்களை உட்படுத்திக் கொள்கின்றன.
வெப்ப உளைச்சல் (Heat stress)
மிகுதியான வெப்பத் தாக்குதல்களிலிருந்து தப்பித்துக்கொள்ள பறவைகள் சில வழிமுறைகளை மேற்கொள்கின்றன. அதிக வெப்பநிலைச் செயல்களை நிறுத்துவது, நிழல்களில் தஞ்சமடைவது, நீரில் நனைத்துக்கொள்வது அல்லது குளிர்க்காற்றுச் சூழலில் இருப்பது ஆகியவற்றின்மூலம் பறவைகள் வெப்பத்தைத் தவிர்த்துக் கொள்கின்றன.
மேலும் அலகுகளைத் திறந்து வைப்பதன் மூலமாகவும் தொண்டைப் பகுதியில் காணப்படும் ஹையாய்டு தசைகள் அது சார்ந்த எலும்புகள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக அசையச் செய்வதன் மூலமாகவும் (வாயின் உட்புறம் உள்ள நீரை ஆவியாக்குதல்) பறவைகள் வெப்பத்தைக் குறைத்துக் கொள்கின்றன.
இத்திறன் கடற்பறவைகளிலும் காணப்படுகிறது. பறவைகளுக்கு வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் அவை தமது தோலின் மூலம் நேரடியாக வெப்பத்தை ஆவியாக்குகின்றன. நீண்ட கால்களுடைய பறவைகள் தங்கள் பாதங்களின் வழியே வெப்பத்தை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளன. இதற்கென சிறப்பு ரத்தக் குழாய்களைப் பாதங்களில் பெற்றிருப்பதால் இவை வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ளவோ வெளியேற்றவோ முடியும்.
நீர்த் தேவை
பறவைகளுக்கு நீர்ச்சத்து இன்றியமையாதது. இயங்குதலினால் இழக்கும் நீரை உடனடியாக அவை மீண்டும் பெறவேண்டியுள்ளது. பறவைகள் நீர்ச்சத்தைத் தான் உண்ணும் உணவு மூலமாகவோ நீரை அருந்துவதன் மூலமாகவோ அல்லது வளர்ச்சிதை மாற்றத்தில் உருவாகும் நீர் மூலமாகவோ பெறுகின்றன.
கழிவு நீக்கம்
பறவைகளின் உடல்களிலிருந்து தேவையற்ற நீர் மற்றும் நைட்ரஜன் கழிவுகள் குடல், சிறுநீரகம் ஆகியவற்றின் மூலம் வெளியேற்றப்படுகின்றன. அது மட்டுமல்லாது சில பறவைகளிடம் உள்ள சுரப்பிகளும் கழிவுகளை வெளியேற்றுகின்றன. பறவைகளின் சிறுநீரகம் ஒரு தட்டையான அமைப்புடையதாக வயிற்றுக் குழியில் காணப்படுகிறது. இது ஊர்வன மற்றும் பாலூட்டிகளின் சிறுநீர் அமைப்பு மற்றும் செயல்பாட்டில் இருந்து வேறுபடுகிறது.
பறவைகளின் சிறுநீரகத்தில் உருவாக்கப்படும் சிறுநீர், குடல் பகுதியில் உள்ள மலத்துடன் சேர்ந்து அங்குள்ள மிச்ச நீரையும் உறிஞ்சிக்கொண்டு வெளியே வருகிறது. பறவைகளின் கழிவுகள் யூரிக் அமிலமாய் வெள்ளையாய், கடினமானதாய் வெளியேற்றப்படுவது அவை நீரைச் சேமித்து வைக்கும் திறனாலேயே சாத்தியமாகிறது.
கழிவுகளில் 75 முதல் 90% வரை நீராக இருந்தாலும் சில பறவைகளின் கழிவுகளில் உள்ள நீர் 55% இருக்கும். பறவைகள் தங்களின் கழிவை வெளியேற்றும் முன் தங்களின் ரத்தத்தில் இருக்கும் யூரிக் அமிலத்தைவிட 3000 மடங்குக்கும் அதிகமான யூரிக் அமிலத்தை கிளயோகா பகுதியில் சேமித்து வைக்கின்றன.
பாலூட்டிகளில் நீர் சேமிப்பில் முதன்மையான இடத்தைப் பெறும் கங்காரு எலியின் ரத்ததிலுள்ள நீரைவிட 20 முதல் 30 மடங்கு நீரை அதிகம் சேமிக்கும் திறன் கொண்டதாகப் பறவைகள் விளங்குகின்றன. இது பறவைகளுக்கே உரிய சிறப்பம்சமாகும்.
உப்புச் சுரப்பிகள்
உப்புச் சுரப்பிகள் கண்களுக்கு மேலுள்ள மண்டையோட்டின் குழி போன்ற ஓர் அமைப்பில் உள்ளன. கடற்பறவைகள் கடல் நீரை அருந்தியபின் நீரில் கரைந்துள்ள உப்பினை இந்தச் சுரப்பிகள் மூலம் வெளியேற்றுகின்றன. இச்சுரப்பிகள் உப்பினை உற்பத்தி செய்யவும் உப்பினை வெளியேற்றவும் செய்கின்றன.
இச்சுரப்பிகள் கடற்சார் பறவைகளிடையே நன்கு பரிணமித்துள்ளது. இருப்பினும் பாடும் பறவை இனங்களில் இந்த உப்புச் சுரப்பிகள் காணப்படுவதில்லை.
கால நிர்ணயம்
பறவைகள் தங்களின் செயல்பாடுகளை நீர்த்தேவை, வெப்பத்தேவை, வளர்ச்சிதை மாற்ற அளவுகள் ஆகியவற்றுக்குத் தகுந்தவாறு வைத்துக்கொள்கின்றன. இதற்கு ஏற்ப தன் ஒரு நாள் செயல்பாடுகளைப் பங்கிட்டுக்கொள்கின்றன. குறிப்பாக இன்றைய பொழுதில் எவ்வளவு நேரத்தை எதற்காக நாம் செலவழிக்க வேண்டும் என்ற கால மேலாண்மை அறிவை அவை பெற்றிருக்கின்றன. ஒரு பறவை நடப்பது, பறப்பது, உணவு தேடுவது போன்ற வேலைகளால் இழக்கும் சக்தியை மீண்டும் உணவு மூலம் பெறுகிறது.
(தொடரும்)