Skip to content
Home » காக்கைச் சிறகினிலே #12 – மூளையும் உணர்வுகளும்

காக்கைச் சிறகினிலே #12 – மூளையும் உணர்வுகளும்

மூளையும் உணர்வுகளும்

மனிதர்கள் உலகத்தைப் பார்ப்பது போலத்தான் பறவைகளும் உலகத்தைப் பார்த்து உணரமுடியும் என்ற கருத்து இன்று மாறிவிட்டது. ஏனென்றால் இவ்வுலகத்தைப் பறவைகள் நம்மிலும் வேறுவிதமாகப் பாரக்க வாய்ப்புண்டு என்பதற்குச் சான்றுகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அதற்குப் பறவைகளின் நிறம் அறியும் திறன், புற ஊதாக் கதிர் வரை நெருங்கும் பார்வைத்திறன், மனிதர்களைவிட நுட்பமான ஒலியைக் கேட்கும் திறன் ஆகியவற்றைக் காரணம் காட்டுகின்றனர்.

பறவைகள், தமது மூளையின் உள்ளே வரும் சமிக்ஞைகளைத் தங்களின் பழைய அனுபவங்களுடன் ஒருங்கிணைத்து, அவற்றை வழிப்படுத்தி கட்டளைகளை உடலெங்கும் அனுப்புகின்றன. பறவையின் மூளை மூன்று பகுதிகளைக் கொண்டது. முன் மூளை மிக நுண்ணியதாகவும் கடினமானதாகவும் உள்ளது. இது பாரம்பரிய பழக்கங்கள், கட்டளைகள், உணர்வு ஒருங்கிணைப்பு, கற்ற அறிவு ஆகியவற்றிற்குப் பொறுப்பாக உள்ளது.

நடு மூளையானது பார்வை, தசை ஒருங்கிணைப்பு மற்றும் நிலைநிறுத்தம், உடற்செயலியல் முறைப்படுத்தல், நரம்பு சம்பந்தப்பட்ட ஹார்மோன் சுரப்பு, காலம்சார் இனப்பெருக்க முறைப்பாடு ஆகிய பணிகளுக்குப் பொறுப்பாக இருக்கிறது. பின் மூளையானது தண்டுவடம் மற்றும் வெளி நரம்பு மண்டலத்தை மூளையின் முக்கியக் கட்டுப்பாட்டுக் களத்துடன் இணைக்கும் இடமாக உள்ளது.

பார்வை மற்றும் நுகர்வுக்கான நரம்புகளைத் தவிர மற்ற நரம்புகள் அனைத்தும் இந்த நடுமூளை வழியாக மூளையை அடைகின்றன. இதில் உள்ள முன்மூளை, நடுமூளை இரண்டும் ஊர்வனவற்றில் இருப்பதைவிடப் பறவைகளிடத்தில் நன்கு வளர்ச்சி அடைந்து காணப்படுகின்றன. இருப்பினும் பறவையின் மூளையும் பாலூட்டியின் மூளையும் வேறுபட்டு இருப்பதை சுட்ட வேண்டும்.

பறவை மூளையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் மூன்று அடுக்குகள் சற்றுத் தெளிவாகத் தெரியும். அவ்வடுக்குகளில் அவை ‘செரிபிரல் கார்டெக்ஸ்’ எனவும் அதன்கீழே உள்ள பகுதி ஹைப்பர்ஸரையேட்டம் என்றும் அடியில் உள்ள பகுதி நியோஸ்ட்ரையேட்டம் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தக் கடைசி இரு அடுக்குகளையும் சேர்த்து கார்பஸ் ஸ்ட்ரையேட்டம் என்று அழைக்கிறோம்.

இந்தக் கார்பஸ் ஸ்ட்ரையேட்டமே முன்மூளையின் பெரும்பகுதியாய் இருக்கிறது. மிக நுண்ணியதாகப் பிரித்து எடுத்தால் மேலும் இரண்டு அடுக்குகளான ஆர்க்ஸ்ரையேட்டம் மற்றும் பாலியோஸரையேட்டம் அதில் இருப்பது தெரியும்; கார்பஸ் ஸ்ட்ரையேட்டத்தின் பகுதிகள்தான் உண்பது, கண் அசைவு, இனப்பெருக்கத்திற்குத் தேவையான சில சிக்கலான உள்ளுணர்வுப் பழக்கங்களாக உள்ள கூடுகட்டுதல், இனக்கூடல், அடைகாத்தல், குஞ்சுகளைப் பேணுதல் போன்ற பணிகளைக் கட்டுப்படுத்துகின்றது.

பொதுவாக, இடது மூளை உடலின் சிக்கலான ஒருங்கிணைப்பைக் கற்றறியும் முறையைக் கட்டுப்படுத்துவதாகவும், தாக்கும் பழக்கம் மற்றும் இனப்பெருக்க பழக்கத்தைக் கட்டுப்படுத்துகின்ற சக்தியைக் கொண்டும் இருக்கிறது. வலது மூளை சுற்றுப்புறத்தைக் கண்காணித்து அதற்கேற்ப மேற்கொள்ள வேண்டிய செயல்பாட்டிற்கான தூண்டலை இடதுமூளையின் உதவியுடன் செய்கிறது.

பறவைகளின் அறிவு, பாலூட்டிகளிலிருந்து வேறுபட்டுப் பரிணமித்துள்ளது. இவ்வேறுபாடுகளில் ஒன்றாக முன்மூளையில் இருக்கும் செரிபரல் கார்டெக்ஸைக் கூறலாம். செரிபரல் கார்டெக்ஸ் என்பது கார்பஸ் ஸ்ரையேட்டத்தின் மேல்புறத்தில் பெரிதாக வளர்ந்து நன்கு ஆழமான வெடிப்புகளுடன் மனிதனிடத்திலும் குரங்கினத்திலும் காணப்படுகிறது. செரிபரல் கார்டெக்ஸ் பறவைகளின் அறிவுக்கான ஒரு காரணியாக இருப்பதில்லை.

ஏனெனில் செரிபரல் கார்டெக்ஸ் நீக்கப்பட்ட ஒரு பறவை ஆராய்ச்சியில் அப்பறவையின் அறிவுசார் செயல்களில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. இப்பகுதி இல்லாமலேயே அப்பறவை இனவிருத்தி செய்து இளம் உயிரியைப் பேணி காக்கவும் செய்தது. ஆனால் அதில் உள்ள ஹைபர்ஸ்ரையேட்டம் மிக முக்கியமானது. அதுவே பறவைகளுக்கு அறிவுசார் செயல்களில் திறன் அளிப்பதாக இருக்கிறது.

இரு கண்சார் குமிழ்கள் (Optic Lobes) பறவையின் நடுமூளையில் சற்றுப் பெரிய அளவில் அமைந்துள்ளன. பெரிய கண்களும் இந்தக் குமிழ்களும் மூளையின் பிற பகுதிகளை மண்டை ஓட்டின் வாய்ப்புறத்திலிருந்தும் பக்கவாட்டிலிருந்தும் இடம்மாற்றி அமைத்துள்ளன.

பறவைகளுக்கே உரித்தான குரல்வளம் அதன் தொண்டைக் குழலில் காணப்படும் சிரிங்ஸ் (Syrinx) எனும் உறுப்புக்கும் மூளைக்கும் இடையே ஏற்படும் ஓர் ஒருங்கிணைப்புச் செயல்மூலம் அமைகிறது. முன் மூளையில் இருந்து புறப்படும் நரம்புத் துடிப்புகள் ஸ்ரிங்சைச் சார்ந்த தசைகளைச் சென்றடைகின்றன. அதன்மூலம் பல்வேறு விதமான குரல் ஒலிகளைப் பறவைகள் எழுப்புகின்றன. இக்குரல் ஒலிகள் அனைத்தும் நடுமூளையின் தூண்டலால் வெளிப்படுகிறது.

பொதுவாக இடது மூளையானது பறவையின் குரலைக் கட்டுப்படுத்துகிறது. இம்மூளை செயல்படாதபோது வலது மூளை அச்செயலை ஏற்றுக்கொள்கிறது. இக்குரல் வளத்தில் ஹார்மோன்களின் பங்கும் இன்றியமையாதது. பறவைகளிடம் காணப்படும் ஒரு சிறப்பம்சம் என்னவெனில் பழைய நியூரான்களுக்குப் பதிலாகப் புதிய நியூரான்களை உருவாக்கும் திறனைக் கூறலாம். இதனை ஆராய்ந்தால் நோய்களால் சிதைக்கப்படும் நியூரான்களைப் புதுப்பிக்க மனித மருத்துவத்தில் வழி கிடைக்கும். இந்தப் புதுப்பித்தலுக்குத் தேவையான புரதம் நியூரோலுகின் (Neuroleukin) ஆகும்.

மற்றொரு சிறப்பம்சம் ஹிப்போகாம்பல் காம்ப்ளக்ஸ் (Hippocampal Complex) ஆகும். இது முன்மூளையின் நடுப்பகுதிக்கு அருகில் உள்ளது. இது பறவைகளிலும் பாலூட்டிகளிலும் ஒரே மாதிரியான வேலையைத்தான் செய்கிறது. இடங்களைப் பற்றிய நினைவுகளை நினைவில் நிறுத்தப் பறவைகளுக்கு உதவுகிறது. பறவைகள் போன்று இடம்பெயரும் உயிரினங்களுக்கு மீண்டும் தங்கள் உணவுதேடும் இடங்களையோ கூடுகட்டும் இடங்களையோ கண்டறிய இது உதவுகிறது.

பாதிக்கப்பட்ட பறவைகள் தங்கள் வழியைக் கண்டறிவதில் சிரமம் அடைவதை ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். இடங்களைப் பற்றிய நினைவு சில பறவைகளிடம் வியப்பூட்டுவதாக இருக்கிறது. சில பறவைகள் எதிர்காலத் தேவைக்காக உணவுகளை வெவ்வேறு இடங்களில் சேமித்து (மறைத்து) வைக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. அது போன்று எட்டு மாதம் கழித்து உணவு சேமித்துவைக்கப்பட்ட (மறைத்து வைக்கப்பட்ட) சுமார் 200க்கும் மேற்பட்ட இடங்களைச் சரியாக அடையாளம் காணும் பறவைகளும் உண்டு. இதற்காகப் பறவைகள் அவ்விடங்களைப் பற்றிய சிறு குறிப்புகளை வைத்துக் கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பறவையின் மற்றொரு உணர்சக்தியாகப் பார்வை விளங்குகிறது. தேடவும், கண்டறியவும், எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ளவும், இனத்தை அடையாளம் காணவும் எனப் பல்வேறு செயல்களுக்குப் பார்வைத்திறன் இன்றியமையாததாக உள்ளது. புறாக்கள், கழுகு இனங்கள் ஆகியன மனிதனின் பார்வைத்திறனை விட 2.5 அல்லது 3 மடங்கு மிகுதியான பார்வைச் சக்தியைக் கொண்டுள்ளன.

பறவையின் கண்கள் சற்று பெரிதாகவே இருக்கின்றன. ஐரோப்பிய ஸ்டார்லிங் பறவையின் கண் அதன் தலையில் 15 சதவிகித பரப்பை ஆக்கிரமித்துள்ளது. பாலூட்டிகளில் காணப்படும் வட்ட வடிவக் கண்கள் போலன்றி பறவைகளின் கண்கள் பல வடிவங்களில் காணப்படுகின்றன. வட்டவடிவிலும், தட்டையாகவும் மற்றும் குழல் போன்றும் பறவையின் கண்கள் அமைந்துள்ளன. பறவைகளுக்கு இயற்கையாகப் பக்கவாட்டில் கண்கள் உள்ளதால் அவற்றால் முன்புறமாகப் பார்ப்பதைவிட பக்கவாட்டில்தான் நன்றாகப் பார்க்கமுடியும்.

கண்ணின் குறுக்குவெட்டுத் தோற்றத்தின் முற்பகுதி சிறிய கார்னியா மற்றும் லென்ஸ் அடங்கியதாகவும், பெரியதாக உள்ள பிற்பகுதி கண்ணின் உடலாகவும் உள்ளது. இந்த இரு பகுதிகளும் ‘ஸ்கிளிரல்’ எனும் வளையத்தால் பிரிக்கப்படுகிறது. இவ்வளையம் 12இல் இருந்து 15 வரை சிறிய எலும்புகளால் (ஆசிக்ள்ஸ்) ஆனது. இரு கிராம்ப்டன்ஸ் மற்றும் புருக்கிஸ் வரித்தசைகள் இவ்வெலும்புகளுடன் இணைக்கப்பட்டுப் பொருட்களைத் தெளிவாக்கிப் பார்க்க (ஃபோகஸ்) உதவுகின்றன.

என்ன பயன்பாட்டிற்காக உள்ளது என்று அறியப்படாத பெக்டன் எனும் தெளிவாகக் காணக்கூடிய ஓர் உறுப்பும் கண் நரம்பிற்கு அருகில் உள்ளது. வருவதல்ல. அது டேப்டம் (Tapetum) எனும் ஒரு சவ்வினால் ரெட்டினாவின் மேற்புறத்தில் உள்ள நிறமிகள் மூலம் தோன்றுகிறது. இது கிவி, சில வகைநாரைகள், நைட்ஜார், ஆந்தை மற்றும் பல இரவுசார் பறவைகளிலும் காணப்படுகிறது.

ரெட்டினாவும் அதன் ஒளிசார் உணர்விகளும் பறவைகளுக்கு நன்கு பார்க்கும் திறனைக் கொடுத்துள்ளன. ரெட்டினாவில் அதிக அளவில் காணப்படும் கூம்புசெல்கள் (Cone cells) ஒரு தெளிவான படத்தைப் பறவைகளுக்கு அளிக்கின்றன. இந்தக் கூம்புகளின் எண்ணிக்கை ஒரு மி.மீ-க்கு 4 லட்சத்தில் இருந்து ஒரு மில்லியன் வரை உள்ளது. அந்தக் கூம்புகள் மனிதனிடத்தில் வெறும் இரண்டு லட்சம் மட்டுமே உள்ளன. போவியா (Fovea) எனும் ஒரு பகுதி பறவைகளிடத்தில் விழிக்கொன்றாகக் காணப்பட்டாலும் அது கூர்மையான பார்வைக்கு உதவுமா என்பது தெளிவாய் அறியப்படவில்லை.

இது சிறிய அசைவுகளையும் நுணுக்கமாய்க் கண்டறிய உதவும் என்பது மட்டும் அறியப்பட்டுள்ளது. வேகமாகப் பறக்கும் பறவைகள் தங்களுக்கான இரைகள் இருக்கும் தூரத்தைக் கணித்து அதற்குத் தக்கது போல் வேகத்தை அதிகரிக்கவும் போவியா உதவுகிறது.

முன்பே கூறப்பட்ட பெக்டன் என்பது பறவைகளிடத்தில் காணப்படும் மற்றொரு சிறப்பான உறுப்பாகும். இவ்வுறுப்பில் 20 வரையிலான துடுப்புகள் போன்ற மடிப்புகள் காணப்படுகின்றன. இம்மடிப்புகள் இரவுசார் பறவைகளில் குறைவாய் உள்ளன. இது பலமுறை ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட ஓர் உறுப்பாகும். இதுவரை 30க்கும் மேற்பட்ட ஆய்வு முடிவுகள் பெக்டன் இருப்பதற்கான காரணத்தைக் கூறியுள்ளன.

ஆனால் இது பற்றி இன்னும் முழுமையான முடிவுகள் கூறப்படவில்லை. சிலர் இது கண்ணின் உட்புற வெப்பநிலையை முறைப்படுத்தும் என்றும், சிலர் ஒளியை மட்டுப்படுத்துகிறது என்றும் கூறுகின்றனர். ஆனால் பெரும்பாலானோர் பெக்டன் என்பது ரெட்டினாவிற்குச் சக்தியையும் ஆக்ஸிஜனையும் அளிப்பதாகக் கூறுகிறார்கள்.

பறவையின் நிறமறியும் திறன் மனிதனைவிடக் கூடுதலானதாகும். முதல் நிலை பாலூட்டிகள் இரவுசார் விலங்குகளாய் இருந்ததால் நிறத்தை அறிவதற்குத் தேவையான ரெட்டினல் எண்ணெய்த் திசுக்களை இழந்திருக்கின்றன. இதனால் ஒரு பொருளைப் பறவைகள் தெளிவாகப் பார்க்கும்போது கார்னியாவும் லென்சும் தங்களின் அமைப்பை மாற்றிக் கொள்கின்றன. ஆனால் பாலூட்டிகளில் லென்சு மட்டுமே தன் அமைப்பை மாற்றிக்கொள்ளும்.

கிராம்டன் தசை சுருங்கி கார்னியாவின் வளைவைப் பெரிதாக்க உதவுகிறது. அதனால் கார்னியாவின் ஒளிப்பாதை வளைவு (Reflection index) அதிகரிக்கும். கார்னியாவின் அமைப்பு மாறும் போது நீரில் பெரிய விளைவு எதுவும் ஏற்படுவதில்லை. ஏனெனில் நீரில் ஒளிப்பாதை வளைவும் கார்னியா ஒளிப்பாதையும் ஒன்றாகிவிடுகிறது. இதனால் நீரில் மூழ்கி இரைதேடும் பறவைகளில் கிராம்டன் தசைகள் வலிமைகுன்றி காணப்படுகிறது. இதனைச் சமன்செய்வதற்குப் புருக்கி தசைகள் (Brucke’s muscle) நல்ல வலிமையுடன் லென்சின் வடிவத்தைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் பறவைகள் நீரில் மூழ்கும் முன்பே தங்களின் உணவை நன்றாகப் பார்வையில் தெளிவாக்கிக்கொள்ள முடிகிறது.

பறவைகளின் லென்சு வடிவம் வெவ்வேறு அமைப்பில் காணப்படுகிறது. கொண்டைலாத்தி போன்றவற்றில் லென்சு முன்புறம் தட்டையாகவும் பின்புறம் நன்கு குவிந்தும் காணப்படும். வாத்து, ஆந்தை போன்றவற்றில் இருபுறமும் குவிந்த லென்சும், கழுகு இனங்களில் முன்புறத்தைவிட பின்புறம் நன்கு குவிந்த லென்சும் இருக்கும்.

இந்த வேறுபாட்டினால் உண்டாகும் பயன்பற்றி முழுமையாக இன்றுவரை அறியப்படவில்லை. விழியின் நடுவில் காணப்படும் பியூப்பிள் பொதுவாக வட்டவடிவில் இருக்கிறது. ஆனால் இது ஸ்கிம்மர் எனும் பறவையில், வெளிச்சத்தில் பூனையின் கண்ணில் காணப்படுவது போன்று ஒரு கோடு போலவும், வெளிச்சம் குறைய அது வட்ட வடிவமாயும் தோன்றுகிறது.

பறவைகளில் உள்ள ஐரிஸ் என்பது பழுப்பு நிறத்தில் இருந்து சிகப்பு, மஞ்சள், பச்சை எனப் பல நிறங்களில் காணப்படுகின்றது. இதுவே பறவைகளை அடையாளம் காண உதவுகிறது. இரவில் சில பறவைகளின் கண்கள் சிகப்பு வண்ணத்தில் ஒளிரும் தன்மையைக் கொண்டுள்ளன. இது ஐரிசின் நிறத்தால் ரெட்டினல் எண்ணெய்த் திசுக்கள் மீண்டும் பாலூட்டிகளில் பரிணமிக்கவில்லை.

அதற்குப் பதிலாக மனிதனும் குரங்கினமும் நிறம் அறிவதற்கான இந்த ரெட்டினல் எண்ணெய்த் திசுக்கள் இல்லாமலேயே வேறொரு வகையில் நிறம் அறிவதற்கான திறனைப் பெற்றுள்ளனர். இன்று பறவைகளிடம் இருக்கும் கோன்களின் எண்ணிக்கையின் அடர்த்தி, ஆழமான ஃபோவியா, புற ஊதாக் கதிருக்கு அருகில்வரை அறியும் உணர்விகள், நிற எண்ணெய்த் திவளைகள் ஆகிய அனைத்தும் சேர்ந்து எல்லா உயிரினத்தின் பார்வைத் திறனைவிடப் பறவைகளின் பார்வைத் திறனை உயர்த்திக் காட்டுகின்றன.

பார்வை நிறமிகளை அதிகம் கொண்ட கூம்பு உணர்விகள் இருப்பதால் பகலில் தேர்ந்த பார்வைத் திறனுடன் பறவைகள் இருக்கின்றன. அதற்கு நேர்மாறாக இரவுசார் பறவைகளில் ஒன்றான ஆந்தைக்கு அதிக அளவு தடிசெல்களே (Rod cells) நிரம்பியுள்ளன. தடிசெல்கள் அதிக அளவு நிழல் வெளிச்சத் தோற்றத்திற்கு முக்கியமானதாய் இருக்கின்றன.

நிறம் அறியும் பார்வைத்திறன் என்பது பார்வை நிறமிகளால் கொடுக்கப்படுவது ஆகும். இப்பார்வை நிறமிகள் ஒளியின் மின்காந்த சக்தியை நரம்புசார் சக்தியாக மாற்றுவதால் ஏற்படுகின்றன. கரோடினாய்டு நிறமிகள் சிகப்பு நிறத்தைக் கொடுத்தாலும் வடிகட்டிகளாய் எண்ணெய்த் திவளையில் செயல்பட்டாலும் நிற உருவாக்கத்தில் அதற்குள்ள பங்கைத் தெளிவாக அறியமுடியவில்லை.

மஞ்சள் எண்ணெய்த் திவளைகள் நீலநிறப் பின்புலத்தில் தோன்றும் தோற்றங்களின் வெளிச்சத்தைக் கூடுதலாக்கி நீலநிறத்தைக் குறைத்துத் தோற்றத்தைத் தெளிவாக்கிப் பார்க்க உதவுகிறது. இதைப்போல் சிகப்பு எண்ணெய்த் திவளைகள் பச்சைப் பின்புலம் கொண்ட தோற்றத்தில் பச்சை நிறத்தை மங்கலாக்கி தோற்றத்தின் வெளிச்சத்தைக் கூடுதலாக்கி தோற்றத்தைத் தெளிவாகப் பார்க்க உதவுகிறது. மஞ்சள் நிற எண்ணெய்த் திவளை ரெட்டினாவின் கீழ் மையத்திலும் சிகப்பு நிற எண்ணெய்த்திவளை ரெட்டினாவின் மேல் பகுதியிலும் காணப்படுகின்றன.

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *