ஒலிகள் பறவைகளுக்குத் தேவையான செய்திகளைத் தருகின்றன. தங்கள் இருப்பிடங்களைப் பாதுகாக்க, துணையைத் தேடி அறிந்துகொள்ள, இரையைக் கண்டறிய, எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள, பயணவழியைத் தேட என்று அனைத்துக்கும் பறவைகளுக்குக் கேட்கும் திறன் இன்றியமையாததாக இருக்கிறது. பறவைகளின் ஒலி அறிவியல் பற்றிய படிப்பு, சற்றுப் பின்தங்கியே உள்ளது.
பறவைகளின் காதை வெளிக்காது, நடுக்காது, உட்காது என மூன்று பிரிவுகளாக நம்முடைய வசதிக்காகப் பிரித்துக் கொள்ளலாம். இவற்றில் முதல் இரண்டு காதுகளும் ஒலி அலைகளைத் திரவம் நிரம்பிய சுருண்டு அமைந்த ‘காக்ளியா’ எனும் உட்காது பகுதிக்குச் செலுத்தக்கூடிய புனல்களாக உள்ளன.
ரோமச்செல்கள் இந்தக் காக்ளியாவின் திரவத்தில் ஏற்படும் ஒலி அலைகளின் அதிர்வுகளை அறிந்து அவற்றைச் சமிக்ஞைகளாய் நரம்புகளின் வழியாக மூளையின் உணர்வுப் பகுதியில் பதிவு செய்கின்றன. உண்மையில் பறவையின் காது அமைப்பு பாலூட்டிகளைவிட எளிதானதாக அமைந்துள்ளது. ஆனால் அதன் வேலை மற்றும் திறனில் பாலூட்டிகளின் காதுகளுக்கு இணையானது.
வெளிப்புறக் காது எனக் கூறினாலும் இதனைத் தெளிவாகக் காணமுடியாத வகையில் கண்ணிற்கு நேர் பின்னே கீழே அமைந்துள்ளது. பாலூட்டிகளைப் போல காதுமடல் என்ற அமைப்புப் பறவைகளுக்கு இல்லை. பாலூட்டிகளில் உள்ள மூன்று எலும்புகளால் ஆன நடுக்காது போல் அல்லாமல் பறவைகளிடம் ‘காலுமெலா’ (அ) ஸ்டேப்ஸ் எனும் ஓர் எலும்பைக் கொண்ட நடுக் காது உள்ளது.
இந்த எலும்பே காதுப் பறையையும் அழுத்தம் தரும் மென்மையான உட்காதின் திரவ அமைப்பையும் இணைக்கிறது. காக்ளியாவுடன் இணைந்துள்ள காலுமெலா (Columella) அதன் அருகில் உள்ள வட்டவடிவ ஜன்னல் போன்ற அமைப்பு ஏற்படுத்தும் அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து காதுகளைப் பாதுகாக்கிறது. காலுமெலா, பறவை இனங்களிடையே அமைப்பில் சிறிது வேறுபட்டுக் காணப்பட்டாலும் இது ஊர்வனவற்றில் இருப்பது போல சாதாரணமாய் இருக்கிறது.
சில சிறப்பு இறகுகள் வெளிப்புறக் காதுக்கருகில் இருந்து கொண்டு பறவைகள் பறக்கும்போது காற்றினால் உருவாகும் பாதிப்புகளைத் தடுத்து ஒலி அலைகளைக் காதிற்கு உள்ளே அனுப்புகின்றன. இதே போன்று நீரினுள் செல்லும்போது நீரின் அழுத்தப் பாதிப்புகளைத் தடுக்கவும் இச்சிறப்பு இறகுகள் பயன்படுகின்றன. இச்சிறகுகள் வட்ட வடிவில் வெளிக்காதைச் சுற்றி அமைந்துள்ள தசைகளில் பொருந்தி இருக்கின்றன.
பறவைகளிடம் இந்த அமைப்பு முழுவதும் ஒரு புனல் போன்று இருக்கிறது. ஆனால் இந்த அமைப்பு சில பறவைகளில் குறிப்பாகக் கழுகு இனங்களில் முற்றிலும் இல்லை. ஆந்தைகளில் இவ்வமைப்பு மிகச்சிறப்பாய் அமைந்துள்ளது. இவ்வமைப்பு ஆந்தையிடத்தில் மற்ற பறவைகளைவிட ஐந்து மடங்கு தெளிவான ஒலியை உணரும் வகையில் அமைந்துள்ளது. அதற்குக் காரணம் ஆந்தைக்குக் காதுகளும் மண்டையோடும் இருபக்க சமச்சீரில் இருப்பதே ஆகும்.
ஒலிச் செய்திகள் அனைத்தும் பின் மூளையில் ஆய்வு செய்யப்படுகின்றன. பெரும்பாலும் ஊர்வனவற்றில் இந்த அமைப்பின் செயல்பாடு எப்படி இருக்கிறதோ அது போலவே பறவைகளிடத்திலும் உள்ளது. இருப்பினும் சில சிறப்பு அம்சங்களும் பறவைகளிடம் காணப்படுகின்றன. இரவில் இரைதேடும் ஆந்தைகளுக்கு மெடுல்லா பகுதியில் உள்ள செல்கள் இன்றியமையாத ஒலிகளைத் துல்லியமாய் உணரும் வகையிலும் ஆராயும் வகையிலும் அமைந்துள்ளன.
குறிப்பாகப் பொந்து ஆந்தைகளில் மட்டும் ஒலியை உணரும் 47600 கேங்கலியானிக் (Ganglionic) செல்கள் உள்ளன. பறவையின் கேட்கும் திறன் குறித்து முழுமையாக அறியப்படாவிடினும் அதைப்பற்றிய சில ஆய்வு முடிவுகள் வியப்பளிக்கக்கூடிய வகையில் உள்ளன.
மனிதர்களைவிட, பறவைகள் குறைவான அலைவரிசை கொண்ட ஒலிகளையும் சில அதிக அலைவரிசை கொண்ட ஒலிகளையும் கேட்கும் திறனைக் கொண்டுள்ளன. சில பாலூட்டிகளைப் போல அல்டராசோனிக் சத்தத்தைப் பறவைகளால் கேட்கமுடியாது. ஆனால் 20 ஹெர்ட்ஸ்களுக்குக் குறைவான குறைந்த அலைவரிசை ஒலிகளைக் கேட்கும் திறனுடைய பறவைகளும் இருக்கின்றன. மிகக் குறைவான அதாவது (50 டெசிபல்) 1 முதல் 10 ஹெர்ட்ஸ் ஒலிகளைப் பறவைகளால் கேட்க இயலும்.
சில பறவைகள் ஒலிகளை எழுப்பி அவ்வொலிகள் எதிர்ப்படும் பொருட்களில் பட்டுத் தெரிப்பதைக் கேட்டு தன் வழியைமுறைப்படுத்தும் பழக்கத்தைக் கொண்டுள்ளன. குகைகளில் வாழும் சில சுவிட்லெட் (Swiftlet) பறவைகள் வெளவால்கள் போல் அல்ட்ரா சோனிக் சப்தத்தை எழுப்பாமல் சில குறைவான சப்தங்களை எழுப்பி வழிகளைக் கண்டறிகின்றன.
ஆந்தைகள், அடர்ந்த இருளில் எலியின் நகர்வால் உண்டாகும் மிக நுண்ணிய ஒலிகளை மிகத் துல்லியமாய்க் கேட்டு எலியின் இருப்பிடத்தை மிகத் துல்லியமாகக் கணக்கிடுகின்றன. தூரம் மட்டுமல்ல எலி நகர்வின் வேகமும் திசையும்கூட இதில் ஆராயப்பட்டு கணக்கிடப்படுகின்றன.
ஆந்தைகளும் மனிதனும் ஒலி எழுப்பும் காரணிகளை, ஒலியானது இருகாதுகளை வந்தடையும் நேரத்தைக் கொண்டும், அவ்வொலியின் வீரியத்தைக் கொண்டும் அறிகின்றனர். ஒலி வரும் திசையை நோக்குவதன் மூலமும் இத்தூண்டல்கள் சமன் செய்யப்படுகின்றன. சில ஆந்தைகளிடம் சமச்சீரற்ற முறையில் காதுகள் அமைந்துள்ளதாலும் அவை வெவ்வேறு நேரத்தில் ஒலி அலையை உணர்வதாலும் அவற்றால் மிக வேகமாகவும் துல்லியமாகவும் தன் இரையைக் கண்டறிய முடியும்.
சுவை மற்றும் நுகர்வுணர்ச்சி
பறவைக்கு நுகரவும் சுவையை உணரவும் கூடிய திறன் இருக்கிறது. ஆனால் அத்திறன் எவ்வளவு சிறப்பானது என்பது இன்னும் அறியப்படவில்லை. சில பொருட்களின் கலவையை மனிதனுக்குச் சமமாகவோ அல்லது அதற்குச் சற்றுக் குறைவாகவோ உணரும் சக்தியைப் பறவைகள் பெற்றுள்ளன.
பறவைகளிடம் உணர்விகள் நாக்கிற்குக் கீழேயும் சில தொண்டைக்குழல் தரையிலும் உள்ளன. இவை பாலூட்டிகளுக்கு இருப்பது போல இருந்தாலும் எண்ணிக்கையில் மிகக் குறைவாக உள்ளன. 10,000க்கு மேற்பட்ட எண்ணிக்கையில் மனிதனிடம் உள்ள இச்சுவைவுணர்விகள் பறவைகளிடத்தில் 100க்கும் கீழ்தான் உள்ளன.
நுகரும் உணர்ச்சிக்குத் தேவையான அல்பாக்ட்ரி குமிழ்கள் மிகச் சிறியனவாய் இருப்பதால் மிகக் குறைவான நுகரும் உணர்ச்சிகளைத்தான் பறவைகள் பெற்றிருக்கின்றன என்ற முடிவிற்கு நம்மை வரச் செய்கிறது. பிணம் தின்னும் கழுகுகள், கிவி மற்றும் பெட்ரல்ஸ் பறவைகள் ஆகியவற்றில் நுகருணர்வு சற்று அதிகம் இருப்பதால் வாசனையைக் கொண்டு தங்களின் அன்றாட வாழ்க்கையில் தம் இரைகளைத் தேடிக்கொள்கின்றன.
பறவைகள் தங்களின் ஆண் பெண் உடலில் தோன்றும் பருவகால வாசனையை நுகர்ந்து இனவிருத்திக்கு ஆயத்தமாவதும் தற்போது அறியப்பட்டுள்ளது. அழுகிய பிணங்களில் இருந்து வெளிப்படும் ஈதைல் மெர்கேப்டன் (Ethyl Mercaptan) எனும் வேதியியல் பொருளின் வாசனை டர்கி கழுகுகளை அழுகிய பிணங்களை நோக்கி வந்தடையச் செய்வதை ஒரு காரணியாக அறிவியலாளர்கள் கண்டறிந்தனர். அவ்வேதியியல் பொருளை 42 மைல் நீளமுடைய குழாய்களினூடே செலுத்தி அக்குழாய்களில் ஏதேனும் கசிவு ஏற்படுத்தும் துளைகள் உள்ளனவா என்பதனை அறிய அக்கசிவை நுகர்ந்து அவ்விடத்திற்கு மேல் பறக்கும் டர்கி கழுகுகளை வைத்துக் கண்டறியும் முறையை மேற்கொண்டு வருகிறார்கள். மனிதனால் நுகரமுடியாத கார்பாக்ஸிலிக் அமிலத்தை நுகரும் தன்மை கொண்ட கடற்பறவைகளும் உண்டு.
காட்சித் தொடர்பு
பறவைகள் ஒன்றுக்கொன்று தங்களின் செய்கைகள் மூலம் ஏற்படுத்திக்கொள்கின்ற தகவல் தொடர்பு பரிமாற்றங்கள், செய்திகளை அனுப்புபவர் பெறுபவர் என்ற வகையில் அமைந்துள்ளன.
இச்செய்திகள் பார்வைகள் மற்றும் ஒலிகளால் உணரப்படுகின்றன. இடத்தைப் பாதுகாக்க, துணையை அறிய, இணையை நெருங்க, இணையுடன் கூட என இவைபோன்ற பரிமாற்றங்கள் பறவைகளுக்குத் தேவையாகின்றன. இந்தச் செய்கையும், வெளிப்பாடும், செய்திப் பரிமாற்றமும் பரம்பரைப் பரம்பரையாய்க் கடத்தப்பட்டு வருவதாகவும் உயிரில் பதிந்த உணர்வாகவும் இருக்கின்றன.
வண்ணப் பரிமாற்றம்
நிறங்கள் பறவைகளின் ஓர் அழகு அம்சமாகும். பறவைகளிடத்தில் அடர்ந்த நிறம் முதல் மங்கலான நிறம்வரை உள்ளன. பல பறவைகள் சுற்றுப்புற நிறத்துடன் ஒத்துப்போகும் நிறங்களில் உள்ளன. இது எதிரிகளிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் கவசமாகப் பறவைகளுக்கு இருக்கின்றது.
மேலும் பருவகாலங்களில் தங்களிடம் புதிய நிற இறகுகளைத் தோற்றுவித்துத் தங்களின் இணையைக் கவர்கின்றன. இந்நிறங்கள், பறவை ஆய்வாளர்களுக்கு எளிதில் பறவைகளை இனங்காண பயன்படுகின்றன. முழுமையான கருநிறம்கொண்ட பறவைகளை இனமறியவும் இது பயன்படுகிறது. எப்படியென்றால் முழுமையான கருநிறம்கொண்ட பறவைகள் தங்களின் அலகுகளிலோ அல்லது விழிகளிலோ, கால்களிலோ வேறு நிறம் கொண்டிருப்பதால் அவற்றை வேறுபடுத்தி எளிதில் இனங்காண முடிகிறது.
ஓர் இனத்தைச் சார்ந்த பறவைகள் தங்களிடையே வேறுபாட்டைக் காண்பிக்க சப்தம், நடத்தை மற்றும் அளவுகளில் மாறியிருப்பது மட்டுமின்றி இறகுகளின் அமைப்பிலும் வேறுபாட்டைக் காண்பிக்கின்றன. சில பறவைகளின் அலகில் காணப்படும் நிறப்புள்ளிகளின் எண்ணிக்கை மற்றும் அளவில் காணப்படும் வேறுபாட்டை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
இனப்பெருக்கக் காலங்களில் ஆண் பெண் பறவைகள் ஒன்றையொன்று கவர வெவ்வேறு விதமான செய்கைகளைச் செய்கின்றன. இது ஒரு விதமான செய்திப் பரிமாற்றமாகும். இதன் மூலம் தங்களின் வீரியத்தை ஒன்றுக்கொன்று தெரியப்படுத்திக்கொள்கின்றன. இச்செய்கைகள் பரம்பரை பரம்பரையாய்க் கடத்தப்பட்டுவரும் பண்புகளால் நிகழ்கின்றன. சில சூழ்நிலைக்கு ஏற்ப செய்கைகளை உருமாற்றிக் கொள்வதும் உண்டு. பல புத்தகங்களில் விவரிக்கப்படும் அளவிற்குப் பறவைகளின் செய்கைகளும் அவற்றிற்கான காரணங்களும் மிகுந்து கிடக்கின்றன.
தொல்பழக்கம் (Ritualized Behaviour)
பறவைகளிடத்தில் சமிக்ஞை அல்லாத இயக்கத்தில் இருந்து பரிணமித்த சமிக்ஞைகளையும் வெளிப்பாட்டுச் செயல்களையும் உள்ளடக்கிய ஒரு செயல்பாட்டையே தொல்பழக்கம் என்கிறோம். உதாரணமாக, வெப்ப இழப்பைத் தவிர்ப்பதற்காகப் பறவைகளிடத்தில் உருவான இறக்கைகளை விரிக்கும் நிகழ்வானது, பிறகு இனத்தைக் கவரும் வகையில் பரிணமித்ததைச் சொல்லலாம் (மயில் தோகை விரித்து ஆடுதல்).
பெரும்பாலான பறவைகள் இன்று இனக்கவர்ச்சிக்காக அவை செய்கின்ற செயல்பாடுகள் ஒரு காலத்தில் இடப்பெயர்ச்சிக்காக அப்பறவைகள் செய்த செயல்களில் இருந்து பரிணமித்தவையாகும்.
போட்டிப் பண்பு (Agnostic Behaviour)
உணவு, இருப்பிடம், இணையைத் தேர்ந்தெடுப்பதில் இரு போட்டியாளர்களிடையே நடக்கும் போட்டி, வெவ்வேறு விதமான முறையில் நடக்கும் தாக்குதல், பயமுறுத்துதல், தப்பித்தல் ஆகியனவற்றின் ஒட்டுமொத்தச் செயல்பாட்டைப் போட்டிப் பண்பு நடத்தை என்கிறோம்.
போட்டிச் சண்டையில் ஈடுபடும் பறவைகள் பொதுவாகத் தங்களைக் காயப்படுத்திக் கொள்ளாமலிருக்க பெரும்பாலும் நேரிடைச் சண்டையைத் தவிர்த்து ஒன்றை மற்றொன்று பயமுறுத்தும் செயல்களையே அதிகம் செய்கின்றன. இதற்குத் தங்களின் அலகுகளையும் இறகுகளையும் பெரும்பாலும் பயன்படுத்துகின்றன. தோற்கக்கூடிய ஒரு பறவை பெரும்பாலும் தன் தலையை எதிராளிக்கு எதிர்ப்புறம் திருப்பிக்கொண்டு சிறிது தூரம் விலகி நிற்கும்.
ஓசையின் மூலம் தொடர்பு கொள்ளுதல்
பறவைகள் தங்களின் வாழ்நாள் முழுவதும் வெவ்வேறு விதத்தில் குரல்களை எழுப்புகின்றன. இந்த ஓசைகள் சிறிய ‘கிளிக்’ ஓசையில் இருந்து அழகான சுவரங்களுக்கு இணையான ஓசைகள் எழுப்பப்படுவது வரை உள்ளன.
இந்த ஓசைகளில் சில பாடல்கள் என்றும் சில அழைப்புகள் என்றும் அழைக்கப்படுகின்றன. பாடல் என்பது சற்றே நீண்ட ஏற்ற இறக்கங்களைக் கொண்ட ஓசையாய் இருக்கிறது. அழைப்பு என்பது சிறிய கால அளவு கொண்டதாகவும், மிக எளிமையானதாகவும் இரண்டு பாலினமும் எழுப்பப்படுவதாகவும் உள்ளது. மேலும் அழைப்பு ஓசையானது இடையூறை வெளிப்படுத்தவும், மிரட்டலைக் குறிக்கவும், உணவுக்காகவும், கூட்டத்திற்காகவும் எழுப்பக்கூடியதாக இருக்கிறது.
(தொடரும்)