பறவைகள் ஓர் இடத்தில் இருப்பதும் திடீரென அவ்விடத்தைவிட்டு மறைவதுமான செயல்பாடுகள் ஆரம்பகால ஆராய்ச்சியாளர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தின. அவர்களால் அதைப் பற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அரிஸ்டாட்டில், கொக்குகள் பருவகாலத்தில் ஓரிடம் விட்டு வேறோர் இடம் தேடுகிறது என்பதை அறிந்திருந்தார். கி.பி.1600வரை பறவைகள் இடப்பெயர்வு பற்றிய அறிவு பெரிய அளவில் இல்லையென்றே கூறலாம்.
இன்று சுமார் ஐந்து மில்லியன் பறவைகள் (சுமார் 187 சிற்றினங்களைச் சார்ந்தவை) ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருந்து ஆப்ரிக்காவிற்குப் புலம் பெயர்கின்றன என்று அறியப்பட்டுள்ளது. இன்று மெக்சிகோவின் வீராகுருஸில் இருந்து 2.5 மில்லியன் கழுகுகள் இடம் பெயரும் நிகழ்வைக் காணலாம்.
புலம் பெயர்தல் (Migration) மூலம் ஒரு பறவை தனக்குச் சாதகமான இடத்தில் வருடம் முழுக்க இருக்கத் தெரிந்துகொள்கிறது. அதற்காக ஒரு பறவை அதிக அளவு சக்தியைச் சேமித்து அதைப் புலம்பெயர்தலின் போது செலவிடுகிறது.
புலம்பெயரும் வழிகள் பறவைகளிடையே மாறுபடுகின்றன. இம்மாறுபாடுகள் அப்பறவையின் வரலாறு, அது தூரம் கடக்கும் திறம், நிலப்பரப்புத் தடைகள், கோடை மற்றும் குளிர்கால இடங்கள் போன்றவற்றைப் பொறுத்து அமைகின்றன.
இன்று நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளின் புலம் பெயரும் தன்மை பற்றி நன்கு அறியப்பட்டுள்ளது. பொதுவாக வட அமெரிக்காவில் உள்ள பறவைகள் வலது மற்றும் இடது திசைகளில் புலம்பெயர்கின்றன. பழங்காலத்தில், உலகில் கிழக்கு மேற்காகவும் பறவைகளின் இடப்பெயர்வு நடைபெற்றிருக்கிறது. தென்பகுதியின் கடைசியில் இருந்து வடபகுதியின் கடைசிக்குச் செல்லும் இடப்பெயர்வு என்பது பெரும்பாலும் இல்லை என்றே கூறவேண்டும்.
உண்மையில் இந்தப் புலப்பெயர்வு என்பது எதற்காக? இந்தக் கேள்விக்கு முழுமையான விடை இன்னும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் சாதகமான சூழ்நிலைகளைத் தேடிப் பறவைகள் செல்கின்றன என்பது ஒரு பொதுவான விடையாகத்தான் இருக்கிறது. இது ஒரு முழுமையான விடையல்ல.
சான்றாகச் சில பறவைகளின் இடப்பெயர்வுக்கான காரணமாக இவ்விடையைக் கூறமுடியவில்லை. ஒரே இனத்துப் பறவைகளில் சில புலம்பெயர்ந்தும், சில பறவைகள் புலம் பெயராமலும் வாழ்வைக் கழிக்கின்றன. அதே போல் சில பறவைகள் சிறிய தூரத்திலேயே இந்நிகழ்வை நிகழ்த்த, அதே இனத்தைச் சேர்ந்த சில பறவைகள் அதிக தூரம் புலம் பெயர்கின்றன. ஏன் இப்படி நிகழ்கின்றன? என்று வினா எழுப்பினால் இதற்குரிய காரணங்களை அறிய முடியவில்லை.
அதிக தூரத்திலுள்ள சாதகமான சூழல் மிகக்குறைந்த தூரத்திலும் உள்ளது. அப்படி இருக்கும்போது நீண்ட தூரம் செல்ல காரணம் யாது? இந்நிலையில் மற்றொரு நிகழ்வை நாம் அறிந்துகொள்ள வேண்டும். புலம் பெயர்தல் அல்லாத வேறு ஓர் இடப்பெயர்ச்சியையும் சில பறவைகள் மேற்கொள்கின்றன. அது எதிர்பாராத, காலம் சாராத, வாய்ப்புகளைத் தேடிச் சில பறவைகள் மேற்கொள்வது.
இப்பறவைகள் எந்தவித முன்னேற்பாட்டையும் செய்துகொள்வதில்லை. உணவு எங்கெல்லாம் கிடைக்கின்றதோ அங்கெல்லாம் தங்கி தன் வாழ்நாளைக் கழிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. இந்த இடப்பெயர்வு சிறு தொலைவு முதல் பெருந்தொலைவுவரை நடக்கிறது.
சிறிய தொலைவு என்பது மலையின் மேற்பகுதியிலிருந்து அடிவாரத்திற்கு வருவதாகும். நீண்ட தொலைவு என்பது 12,000 கிலோமீட்டர்வரை நீள்கிறது. ஆர்டிக் ஆலா என்னும் பறவை வடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் கடல் பிரதேசங்களில் இருந்து அண்டார்டிக் பகுதிக்கு இடம் பெயர்வதை இதற்குச் சான்றாகக் கூறலாம்.
ஏன் பறவைகள் புலம் பெயர்கின்றன?
புலம் பெயர்தலின்போது ஒரு பறவை அடைகின்ற சிரமங்கள் அதற்கு இணையான பயன்களைத் தரும்போதுதான் இந்தப் புலம்பெயர்தல் என்ற பரிணாமத்தின் கூறு சிறப்பானதாக அமையும்.
ஒரு நீண்ட பயணத்தில் ஒரு பறவை அதிக சக்தியைச் செலவழிக்க வேண்டும். போகும் வழியில் புதிய சூழலைச் சந்திக்க வேண்டும். புதிய எதிரிகள், சோர்வு எனப் பல்வேறு இன்னல்களையும் எதிர்கொள்ள வேண்டும். பெரும்பாலான புலப்பெயர்வு நிகழ்வுகளில் 20 விழுக்காட்டுக்கும் மேலான பறவைகள் இச்சிரமங்களுக்குப் பலியாவது தவிர்க்க முடியாததாகிறது.
வட அமெரிக்காவில் இருந்து இடம் பெயரும் 100 மில்லியன் நீர்ப் பறவைகளில் 40 மில்லியன் பறவைகள் மட்டுமே திரும்பி வருகின்றன. இந்நிகழ்வில் கடல், பாலைவனம் என வேறுபட்ட இடங்களைக் கடந்து செல்லும் போது அவ்விடங்களுக்கு உரித்தான இயற்கைச் சீற்றங்களான சூறாவளி, புயல், மணற்புயல் போன்ற ஆபத்துகளுக்கு உள்ளாவதோடு தங்களின் பகல்சார் எதிரிகளான கழுகு போன்ற பறவைகளுக்கும் இப்பறவைகள் இரையாகின்றன.
பறவைகளுக்கு புலம் பெயருதலினால் கிடைக்கும் பயன்தான் என்ன என்ற கேட்டால் அது ஒரு சிற்றினம் அல்லது ஒரு குழுவைப் பொறுத்து அமைகிறது என்பதே விடை. ஓர் இனம் சார்ந்த குழுமம் புலம்பெயர்தல் தன்மையைப் பெறவோ இழக்கவோ நேர்வதற்கும் வாய்ப்புண்டு. ஆக இப்பழக்கம் புதிய சூழலுக்கு ஏற்ப உருவாகிறது.
பறவைகளின் புலம்பெயர்தல் என்ற பரிணாமம் மூன்று படிநிலைகளைக் கொண்டுள்ளது. முதலில் சிறிய அளவில் இடம்பெயரும் பறவையாய் இருப்பது ஆகும். ஒரே இடத்தில் நிலையாய் வாழ்ந்த ஒரு பறவை இனத்தை ‘மழையின்மை’, ‘பஞ்சம்’ போன்ற நிகழ்வுகள் முதற்கட்டமாக இவ்விடப்பெயர்ச்சிக்குத் தள்ளும்.
இந்த நிகழ்வு, தொடரத் தொடர புலம் பெயரா மற்றும் புலம் பெயரும் பறவைகள் என இரு பிரிவுகள் அவ்வினத்தில் தோன்றிவிடும். நீண்ட காலவோட்டத்திற்குப் பிறகு புலம் பெயராத பறவைகள் அவ்வினத்திலிருந்து முற்றிலும் வெளியேற்றப்பட்ட பறவைகளாய் ஆகிவிடும்.
மேற்கூறிய இயற்கை மாற்றத்தின் நீண்ட தொடர் நிகழ்வின் காரணமாகப் புலம்பெயராப் பழக்கம்கொண்ட பறவைகள் அவை இருக்கும் இடத்திலிருந்து புலம்பெயரும் பறவைகளால் வெளியேற்றப்படும் நிகழ்வில் சிறிது தூர இடப்பெயர்ச்சியை ஆரம்பிக்கும். இது இரண்டாவது படிநிலையாகும். பறவைகள் பிறகு தங்களின் தூரத்தைத் தேவைக்கேற்ப அதிகரித்துக் கொள்கின்றன. இது மூன்றாவது நிலையாகும்.
நீண்ட தூர இடப்பெயர்ச்சிக்குத் தேவையான அனைத்துத் திறன்களையும், தாங்கும் சக்தியையும் பறவைகள் பெற்றிருக்கின்றன. உதாரணமாக, ஆர்க்டிக் டெர்ன் பறவைகள் வருடத்திற்கு 25,000 கிலோ மீட்டர் அளவில் ஒரு நீண்டதூரப் பயணத்தை மேற்கொள்கின்றன.
இப்பயணம் கடற்பகுதிக்கு மேலாகவும் நிலப்பரப்பிற்கு மேலாகவும் நிகழ்கிறது. குறிப்பிட்ட இடத்தை அடைய, சில நேரங்களில் ஆபத்திற்கு உட்பட்ட பாதைகளையோ அல்லது ஆபத்து இல்லாத நீண்ட சுற்றுப்பாதைகளையோ பறவைகள் தேர்ந்தெடுக்கின்றன. பறவைகள், ஆபத்தைத் தவிர்க்கத் தேர்ந்தெடுக்கும் பாதைகூட ஆபத்தற்ற பாதை என்று சொல்ல முடியாது.
பறவைகள் இடப்பெயர்ச்சிக்காகத் தங்களின் உடலில் கொழுப்பைச் சேமித்துக் கொள்கின்றன. அக்கொழுப்பு பறவைகளுக்குச் சக்தியையும் நீரையும் கொடுக்கும் தன்மை கொண்டது. இச்சக்திகள் கொழுப்பாய் அடிப்போஸ் திசுக்களாகத் தோலுக்கடியில் உள்ள தசைகளில் சேமித்து வைக்கப்படுகிறது. மனிதனின் இதயம் போன்று இல்லாமல், பறவைகளின் இதயம் இடப்பெயர்ச்சியின் போதுகூட கொழுப்பைச் சேமித்து வைப்பதில்லை. மற்றபடி உள்ளுறுப்புகளில் சிறிதளவு சக்தி இடப்பெயர்ச்சிக்காகச் சேமித்து வைக்கப்படுகிறது.
அடிப்போஸ் திசு, கொழுப்பைச் சாதாரணமாக வைத்திருக்காமல் லிபிடு உருவாக்கத்திற்குத் தேவையான இயக்கம் உடையதாய் வைத்திருக்கிறது. லிப்பேஸ் நொதியானது கொழுப்பைச் சிதைத்துக் கொழுப்பு அமிலமாகவும் கிளிசராலாகவும் மாற்றி, தேவைப்படும் இடத்திற்கு அவற்றை அனுப்புகிறது.
இந்த அமிலங்கள் ரத்தம் மூலமாய் மைட்டோகாண்டிரியாவிற்கு (தசைகளில் உள்ளவை) அனுப்பப்பட்டு அங்கு ஆக்ஸிகரணம் செய்யப்படுகிறது. மைட்டோகாண்ட்ரியாவில் கொழுப்பு அமிலங்கள் இரு கார்பன் துண்டுகளாக்கப்பட்டுப் பின் கிரப் சுழற்சியில் ஆக்ஸிகரிக்கப்பட்டு, அடினோசின் ட்ரைபாஸ்பேட் மூலக்கூறாய் மாறி, தசை நார்களுக்குத் தேவையான சக்தியை அளிக்கின்றன. தசைகளில் உள்ள லிப்பேசின் செயல் பறவையின் இடப்பெயர்ச்சிக்கு ஏற்ப வேகமாகச் செயல்படுகிறது.
இடப்பெயர்ச்சிக்குத் தயாராகும் நிலையில் கொழுப்பைச் சேமித்துத் தங்களின் எடையைப் பறவைகள் அதிகரித்துக் கொள்கின்றன. இந்நிலையில் சில பறவைகள் தங்களின் உடல் எடையைவிட இருமடங்கு எடையைப் பெறுகின்றன. இந்தச் சேமிக்கப்பட்ட கொழுப்பு அதன் தேவைக்குத் தக்கவாறு உதவுகிறது.
மிகக் குறைவான தூரம் இடம் பெயரும் பறவைகளுக்குக் குறைவான சக்தியே தேவைப்படுவதாலும், சக்தியை இடையில் பெறும் வழி இருப்பதாலும், மிகக் குறைவான அளவில் கொழுப்பைச் சேமித்துக் கொள்கின்றன. அதுவே நீண்ட தூரப் பயணத்தின்போது சக்தியைச் சேமிக்க சில நாட்களை ஒதுக்கிக்கொள்கின்றன.
இது போன்று மூன்று அல்லது நான்கு இடங்களில் தங்களின் சக்தியை மீண்டும் மீண்டும் சேமித்து வைத்துக்கொள்கின்றன. 30,000கி.மீ. அளவு தூரம் செல்வதையே இங்கு நீண்ட தூரப் பயணம் என்று குறிப்பிடப்படுகிறது. குறிப்பிட்ட இடத்திற்கு இடம்பெயர நினைக்கும் பறவைகள் அவ்விடத்தில் தங்களுடைய இரையின், உணவின் அளவு அதிகமாய் இருக்கும் காலத்திற்கு ஏற்ப தங்களின் பயணத்தைத் தீர்மானிக்கின்றன.
ஆக இடம்பெயரும் ஒரு பறவை, தான் இருக்கும் இடத்தைப்பற்றிய அறிவு மட்டுமல்லாது தான் இடம்பெயரும் இடங்களைப் பற்றிய அறிவையும் கொண்டுள்ளது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.
இடப்பெயர்ச்சிக்காக எவ்வளவு தூரம் ஒரு பறவை நிற்காமல் பறக்கும்? அப்பறவையால் சேமிக்கப்பட்ட சக்தியின் கடைசித்துளி இருக்கும்வரை பறக்கும் என்பதே அதற்கான விடையாகும். ஆனால் சில பறவைகள் சக்தி தீர்ந்துப் போவதற்கு முன்பே ஓரிடத்தில் இறங்கி சக்தியைச் சேமிக்கத் தொடங்கிவிடுகின்றன.
இதில் ஒரு சிறப்பு அம்சம் யாதெனில் பல பறவைகள் காற்றின் திசைகளை அறிந்து அவற்றின் போக்கில் தங்களின் வழியை அமைத்துக்கொள்கின்றன. இதன் மூலம் சக்தியைச் சேமிக்கும் திறனையும் பறவைகள் பெறுகின்றன.
இடம்பெயரும் நிகழ்வில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் காலம் தவறாமையாகும். பறவைகளின் உடலில் அமைந்துள்ள உயிரியல் கடிகாரம் காலம் தவறாமையை நிலைநிறுத்துகிறது. இதுபோல் இடம்பெயரும் பறவைகளைக் கூண்டில் அடைத்து ஆராய்ந்ததில், குறிப்பிட்ட இடம்பெயரும் காலத்தில் அப்பறவைகள் கூண்டில் ஓய்வற்று இருப்பதைக் கண்டறிந்தனர்.
இந்நிகழ்வை இடம்பெயரத் துடிக்கும் நிலை என்று கூட அழைத்தனர். ஆனால் இந்நிலை, இடம்பெயரும் பழக்கமிலாப் பறவைகளிடம் காணப்படவில்லை. அட்ரீனோகார்டிகல் எனும் ஹார்மோன் இந்நிகழ்வைத் தூண்ட காரணமாய் இருக்கலாம் என சில பறவைகள் குறித்த ஆய்வில் அறியப்பட்டிருக்கிறது. ஆனாலும் நாளமிலாச் சுரப்பிகளின் பங்கு இடம்பெயரும் நிகழ்வில் குறைவாய் இருப்பது அறியப்பட்டுள்ளது.
பகல் நேரம் அதிகரிக்கும் நிகழ்வு பறவைகளுக்குச் சக்தியைச் சேமிக்கும் பழக்கத்தைத் தூண்டுவதாய் இருக்கிறது. இக்காலம் பறவையின் உணவு உண்ணும் பழக்கத்தின் காலத்தையும், உணவின் அளவையும் அதிகரிக்கச் செய்கிறது. அத்துடன் அவ்வுணவைக் கொழுப்பாகச் சேமிக்கும் பண்பையும் அதிகரிக்கிறது. இது பறவைகளிடத்தில் உள்ள உயிரியல் கடிகாரத்தின் தூண்டுதலால் நடப்பதாகக் கொள்ளலாம். பகல்நேரக்குறைவு பறவையை இடம்பெயரத் தூண்டுகிறது. இடம்பெயரும்போது பறவைகள் அவை செல்லும் வழிகளின் வானிலையைப் பற்றி தெளிவான அறிவைப் பெற்றிருக்கின்றன.
அதிக அளவு சக்தியை இழக்கக்கூடாது என்ற அறிவும் பறவைகளுக்கு உண்டு. இதன்படி சில பகலிலும் சில இரவிலும், சில அதிக உயரத்திலும் சில குறைந்த உயரத்திலும் அப்பறவைகளின் செயலியல் மற்றும் உடற்கூறுக்கு ஏற்பப் பயணிக்கின்றன. இரவில் புலம்பெயரும் பறவைகள் பெரும்பாலும் 200 முதல் 800 மீட்டருக்குக் கீழே பறந்தாலும், சில பறவைகள் காற்றில் ஏற்படும் மாறுபாடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ள 7000 மீட்டர் உயரத்திற்கும் மேலே பறக்கின்றன. கடற்பறவைகள் பெரும்பாலும் 2000 முதல் 4000மீ உயரத்தில் பறக்கும் தன்மை கொண்டவையாகும்.
(தொடரும்)