Skip to content
Home » காக்கைச் சிறகினிலே #15 – பறவைகளின் வாழ்வியல்

காக்கைச் சிறகினிலே #15 – பறவைகளின் வாழ்வியல்

பறவைகளின் வாழ்வியல்

வழி அறியும் திறன்

ஒரு பறவை நீண்ட தொலைவிலுள்ள ஓர் இடத்தை எவ்வாறு சென்றடைகிறது என்பது ஒரு புதிராகவே இருக்கிறது. இதற்கான காரணங்கள் சில கண்டறியப்பட்டுள்ளன என்றாலும் தேடல் நீண்டுகொண்டேதான் இருக்கிறது. பறவைகளின் காலில் வளையத்தைப் பொருத்தி அறியும் ஆய்விலிருந்து தேடல் தொடங்குகிறது. பின், இது பறவைகள் குறித்த ஆய்வில் ஆழப்படுத்தப்பட்டு இன்று பல உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

எகிப்தியர்களும் ரோமானியர்களுமே முதன் முதலில் பறவைகளுக்குத் தங்கள் இடத்தைச் சரியாகக் கண்டறியும் திறனுண்டு என்பதை உணர்ந்து, அத்திறனைத் தங்களின் தேவைகளுக்குப் பயன்படுத்தினர். பிறகு இவ்வழக்கம் பல நாடுகளுக்கும் பரவியது.

புறாக்களின் இனங்கள் மிகுதியான அளவில் புலம்பெயரும் தன்மையைக் கொண்டுள்ளன. பறவைகளின் வழி அறியும் திறனை ஆராய்ந்ததில் பல வியத்தகு உண்மைகள் புலப்பட்டன. இப்பறவைகள் பல்வேறு உத்திகளைக் கொண்டு எளிதில் தங்கள் வழிகளை அறிகின்றன என்பது கண்டறியப்பட்டது.

பறவைகள் தமது கூடு இருக்கும் இடத்திலிருந்து உணவு இருக்கும் இடத்திற்குச் சென்று, பின் மீண்டும் கூட்டை வந்தடைவதற்கும் அத்திறன்கள் உதவுகின்றன. பறவை பல்வேறு சமிக்ஞைகளை இச்செயல்களுக்குப் பயன்படுத்தினாலும் ஏதோவொரு குறியீட்டை மட்டும் அதிக அளவில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமான நில அமைப்பு, கட்டடங்கள் போன்ற சமிக்ஞைகள் மட்டுமன்றி பகலில் சூரியனையும் இரவில் நட்சத்திரங்களையும் தங்களின் தடங்களையறியப் பயன்படுத்துகின்றன. தங்களிடம் அமைந்துள்ள காந்தபுலம் கொண்டும் வழியறியும் பழக்கம் பறவைகளுக்கு உண்டு.

நிலக் குறியீடுகள்

பறவைகளின் நீண்ட, குறுகிய இடப்பெயர்ச்சிக்கு நிலக்குறியீடுகள் பயன்படுகின்றன. வழியில் காணப்படும் பெரிய மலைகள், நீர்நிலைகள் போன்றவற்றை நிலக்குறியீடுகளாகத் தங்களின் நினைவில் பதிவு செய்துகொண்டு பறவைகள் பயன்படுத்துகின்றன. அதே நேரத்தில் பறவைகளில் சில இக்குறியீடுகளை ஒதுக்கிவிட்டு வெறும் உணர்வுகளால் மட்டுமே புலம்பெயர்வது ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

சூரியத் திசைக்காட்டி

சூரியனை ஒரு திசைக்காட்டியாகப் பறவைகள் பயன்படுத்தக்கூடும் என்ற நம்பிக்கை ஆரம்பகாலத்திலிருந்து நீடிக்கிறது. இந்நம்பிக்கை 1950களில் உண்மையென நிரூபிக்கப்பட்டது. வெவ்வேறு நாட்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட புறா ஒன்று சூரியனைத் தெளிவாய் வானத்தில் காணும்போது அதன் இடமறியும் திறன் வலுவாக இருப்பது போன்றும், சூரியன் தெரியாத மேகமூட்டமுள்ள நாட்களில் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை என்பதும் அறியப்பட்டுள்ளது.

அந்தப் புறாவானது மேகமற்றுச் சூரியன் தெளிவாகத் தெரியும் நாட்களில் எளிதில் தன் இடத்தைக் கண்டறிவதையும், மேகமூட்ட நாட்களில் வழியினை அறிந்துகொள்ள சிரமப்படுவதையும் ஆய்வில் கண்டறிந்தனர். அதே நேரத்தில் சூரியனை வைத்துத் திசை மட்டுமல்லாது நேரத்தையும் பறவைகள் அறிகின்றன என்ற உண்மையையும் கண்டறிந்தனர்.

நட்சத்திரத் திசைக்காட்டி

பறவைகள் தங்கள் பயணங்களின்போது பகலில் சூரியனைத் திசைக்காட்டியாய்ப் பயன்படுத்துவது போல் இரவில் நட்சத்திரங்களைத் திசைக் காட்டியாய்ப் பயன்படுத்துகின்றன. ஒரு கோளரங்கத்தில் இரவுச்சூழல் உருவாக்கப்பட்டு அதில் வளர்க்கப்பட்ட பறவைகள் புலம்பெயரும் காலம் நெருங்கியவுடன் அவற்றின் செயல்பாடுகளில் வேகம் கூடுவதனையும், அவை தங்கள் இடம்பெயரும் திசைநோக்கி அமர்ந்திருப்பதையும் ஆய்வாளர்கள் கண்டனர்.

அதுவே இரவுச்சூழல் இல்லாத கோளரங்கில் பறவைகள் திசையறிவதில் குழப்பமடைவதைக் கண்டனர். பகல்சார் பறவைகள் சூரியனைத் திசையறியப் பயன்படுத்துவது போல் இரவுசார் பறவைகள் நட்சத்திரங்களின் இருப்பைக் கொண்டு திசையறிகின்றன என்பது உறுதியாக நிரூபிக்கப்படவில்லை.

நுகர்வு உணர்ச்சியில் வழியறியும் திறன்

பெட்ரல் மற்றும் புறாக்கள் நுகர்வுணர்ச்சியின் மூலமாகக்கூட தங்களின் வழியை அறியும் திறனைப் பெற்றுள்ளன. இதனையும் ஆய்வு மூலம் உறுதி செய்துள்ளனர். இத்திறனை இழந்த பறவைகள் தங்களின் வழியறியாத நிலையில் நுகர்வுணர்வு இழக்காத பெட்ரல் பறவை எளிதில் தன் இடத்தை அடைவதை உறுதிப்படுத்தினர்.

இதைப்போன்ற ஓர் ஆய்வை ஹோமிங் புறாக்களிலும் நடத்தினர். ஆனால் முடிவுகள் அவ்வளவு உறுதியானதாய் இருக்கவில்லை. இருப்பினும் சில பறவைகளின் திசையறியும் திறனில் நுகர்வுணர்ச்சிக்கும் பங்குண்டு என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

புவிகாந்த புலம்

புவிகாந்த புலமறிந்து பறவைகள் தம் வழியைக் கண்டறிகின்றன என்ற கூற்றை மிகத் தாமதமாகத்தான் பறவையியலாளர்கள் ஒத்துக்கொண்டனர். இதற்குக் காரணம் தொடர்ச்சியற்ற ஆய்வுகளே என்று குறிப்பிடலாம். இன்று இது தொடர் ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டு அனைவராலும் ஏற்கப்பட்டிருக்கிறது.

நாம் பயன்படுத்தும் காந்தத் திசைக்காட்டியிடம் இருந்து பறவைகள் பயன்படுத்தும் காந்தத் திசைக்காட்டி வேறுபடுவதாகவும் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

வழியறியப் பழகுதல்

இடப்பெயர்வின் பயண வழியறிதல் என்பது பாதியளவிற்குப் பறவைகளின் உள்ளுணர்வு மூலம் நடந்தாலும், பாதி அவற்றின் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகின்றது. இதனால்தான் இளவயது பறவைகள் மூத்தப் பறவைகளைவிட எளிதில் வழிமாறிப் போகின்றன.

0

வாழ்வியல்

பறவைகள் இரைக்கொல்லிகளாகவும் இரைகளாகவும் இருக்கின்றன. பறவைகளுக்கான உணவும் பாதுகாப்புமே அவற்றை எங்கு எப்படி வாழ்வது என்பதனைத் தீர்மானிக்கின்றன. அவ்விரு காரணிகளே அப்பறவைகளைக் கூட்டமாய் இயங்குவதா அல்லது தனித்து இயங்குவதா என்பதையும் தீர்மானிக்கின்றன. இவற்றில் எது நடந்தாலும் வளங்களைப் பகிர்ந்துகொள்ளல் என்பது இன்றியமையாததாக இருக்கிறது.

தனிநபர் இடப்பகிர்வுப் பண்பு

ஒவ்வோரு சிறு பறவையும் தனக்கென்று ஒரு சிறு இடத்தைத் தன்னைச் சுற்றி உருவாக்கிப் பாதுகாத்துக் கொள்கிறது. உதாரணமாகத் தொலைபேசி கம்பியில் வரிசையாய் அமர்ந்துள்ள பறவைகள் ஒன்றுக்கொன்று தொந்தரவு தராத வகையில் குறிப்பிட்ட இடைவெளி விட்டு அமர்ந்திருப்பதைச் சொல்லலாம். இந்த இருபக்க இடைவெளி அப்பறவைக்குரிய தனிநபர் இடம் என்று கொள்ளலாம்.

கூட்டமாய் உணவு தேடும் சிட்டுக்குருவிகள்கூட ஒரு குறிப்பிட்ட இடைவெளியினைத் தங்களுக்கிடையே வைத்துக்கொள்கின்றன. இந்த இடைவெளியானது அப்பறவைகளுக்கிடையே பகை உணர்வினைக் குறைக்க உதவுவதோடு மட்டுமன்றி தனியொரு பறவையின் இரைதேடல் திறனையும் அதிகரிக்கிறது.

இது போன்ற இடைவெளியை உருவாக்குதல் மட்டுமின்றி அதைக் காப்பதும் பறவைகளிடையே காணப்படும் ஒரு பொதுவான பண்பாகும். இந்த இட உரிமையைப் பறவைகள் உருவாக்கிக்கொள்ளுதல் என்பது அவற்றின் வாழ்வியலில் ஓர் இன்றியமையாத பகுதியாய் அமைகின்றது.

ஒரு காலத்தில் பறவையியலாளர்கள் இச்செயலை இயக்கமற்ற ஒன்றாகவும் அது மரபுகளால் தீர்மானிக்கப்படுவதாகவும் கருதினர். உண்மையில் இந்த இடைவெளியை உருவாக்கிக் கொள்ளும் செயல் மாறக்கூடியதாகவும் இயக்கம் உடையதாகவும் பயனுக்கிடையேயான தொடர்பை வெளிப்படுத்துவதாயும் இருக்கிறது. உதாரணமாகத் தேவையற்ற காலங்களில் சக்தியைச் சேமித்து வைத்துக்கொள்வதற்கு ஏதுவாகப் பாதுகாத்து வைத்துள்ள தங்களது இடத்தைக்கூட பறவைகள் சில நேரங்களில் விட்டு விடுவதுண்டு.

பறவைகள் பாதுகாக்கும் இடம் என்பது அதன் உடல் எடை, தேவைப்படும் சக்தி, பறவையின் பாதுகாப்பு, உணவுப்பழக்கம் ஆகியவற்றுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறது. பறவைகளுக்குரிய இடத்தின் முக்கியத்துவமானது அப்பறவைக்கு வாய்க்கும் உணவு வளத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்து அமைகிறது.

இந்த முக்கியத்துவம் ஒரு தனிப்பறவையின் வாழ்வியலில் நன்கு புலப்படும். உணவுவளம் குறைந்த இடத்தில் பாதுகாக்கும் இடத்தின் அளவு பெரிதாகவும், உணவுவளம் அதிகம் கொண்ட இடத்தில் பாதுகாக்கும் இடம் சிறிதாகவும் இருப்பதனை அறியலாம். ஆனால் உணவு மட்டுமே இதற்கு முழு காரணமாய் அமைவதாகக் கூற முடியாது. ஓரிடத்தில் இருக்கின்ற போட்டிப் பறவைகளும் இந்த அளவை நிர்ணயம் செய்வதில் பங்கு வகிக்கின்றன. போட்டி அதிகம் இருக்கும்போது இடத்தின் அளவு சுருங்கியும் போட்டி குறைவாய் உள்ளபோது இடம் விரியவும் செய்கிறது.

ஓர் இடத்தைத் தனக்காகப் பாதுகாக்கும் முயற்சியில் பறவைகளுக்குப் பலன் கிடைப்பதைப் போல அதற்காக அதிக அளவில் சக்தியையும் செலவழிக்க வேண்டியுள்ளது. செலவைவிட பலன் இந்நிகழ்வில் அதிகரிக்கும்போது ஒரு பறவையின் பாதுகாக்கும் திறன் அதிகரிக்கிறது. பறவையின் பொருளாதார அடிப்படையில் அதற்குரிய வளம் பறவையால் பாதுகாக்க முடியும்.

ஒரு வளத்தின் முக்கியத்துவம் அது காலமாறுதலுக்கு உட்பட்டதா அல்லது இடமாறுதலுக்கு உட்பட்டதா என்பதைப் பொறுத்து அமைகிறது. குறிப்பாக ஒரு நிகழ்வைக் கூறலாம். ரீங்காரச் சிட்டுகள் பூக்களில் தேன் உறிஞ்சும்போதும் பறக்கும் பூச்சிகளை உண்ணும்போதும் அருகருகே அமர்ந்து தங்களுக்கென்று தனி பாதுகாக்கும் இடத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை.

இதைப் போல் வளம் அதிகம் உள்ள இடங்கள் அதிக அளவில் போட்டியாளர்களைக் கவர்வதால் அங்கேயும் பாதுகாக்கும் இடம் உருவாக வாய்ப்பு ஏற்படுவதில்லை. வளம் குறைந்த இடங்களைப் பாதுகாப்பதில் பெரிய அளவில் பயனில்லை.

பறவைகள் பொதுவாகத் தம் இனப்பறவைக்கு எதிராகத்தான் இடங்களைப் பாதுகாக்கும் நிகழ்வை மேற்கொள்கிறது. இருப்பினும் அந்த இடப் பாதுகாப்பு பல நேரங்களில் ஒரே வளத்தைச் சார்ந்து வாழும் வேறுபட்ட இனப் பறவைகளுக்கு எதிராக நிகழலாம். ஆக, ஓர் இடம் ஒரு தனிப்பறவையாலோ இனப்பெருக்கத்திற்காகச் சேர்ந்த இணைப் பறவைகளாலோ ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பறவைகளாலோ அல்லது வேறு இனம் சார்ந்த ஒரு பறவை கூட்டத்தாலோ காக்கப்படலாம்.

பறவைகள், தங்களுக்குத் தெரிந்த இடத்தைவிடத் தெரியாத இடத்தில் தங்களுடைய ஆளுமையை வெளிப்படுத்த விரும்புவதில்லை. பொதுவாகத் தங்களுக்குத் தெரிந்த இடத்திலும், தான் பாதுகாக்கும் இடத்திலும் பிற பறவைகள் ஆக்கிரமிப்புச் செய்யுமானால் அவற்றைப் பெரும்பாலும் அந்த இடத்துப் பறவைகள் தோற்கடித்து விடுகின்றன. அந்தப் பறவைகளுக்கு, அந்த இடத்தைப் பற்றிய தெளிவான அறிவு இருப்பதால் இது சாத்தியமாகிறது.

அதுமட்டுமல்லாது ஒரு பறவை தன்னுடைய இடத்திற்காக அதிக அளவில் சக்தியைச் செலவு செய்துள்ளதால் எளிதில் எதிராளிகளுடனான சண்டையைக் கைவிடுவதில்லை. ஆனால் ஆக்கிரமிப்புப் பறவைகள் சண்டையைக் கைவிடுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

வாழ்வியலில் வெல்லும் பறவை ஆளுமை நிறைந்ததாகவும் தோற்கும் பறவை தாழ்மையுடையதாகவும் இருந்து ஒரு சமுதாய வாழ்வைப் பறவைகள் மேற்கொள்கின்றன. சமுதாய வாழ்வில் இத்திறனைக்கொண்டு பறவைகளுக்கான மதிப்புக் கிடைக்கும். வெல்லும் பறவைகள் தோற்கும் பறவைகளின் வளங்களில் எளிதில் உரிமை கொண்டாடும் நேரத்தில், தோற்ற பறவைகள் தங்களின் இயலாமையை, வென்ற பறவைகளிடம் வெளிப்படுத்தும் வழக்கமும் உண்டு.

இந்த ஆளுமை ஒரு பறவையின் வயது, அதன் பாலினம் போன்றவற்றைச் சார்ந்தது. பொதுவாகப் பெரிய பறவைகள் சிறிய பறவைகளைத் தங்களின் ஆளுமை அமைப்புக்குள் கொண்டுவந்துவிடும். ஆண், பெண்ணை ஆளுமைப்படுத்தும். அட்ரினல் சுரப்பியின் செயல்பாடும், மூளை வேதியியலில்; காணப்படும் சிறிய வேறுபாடும் பறவைகளில் இந்த ஆளுமையை உருவாக்குகின்றன. இவ்வாளுமையைச் செயற்கையாகக் கூட பறவைகளிடத்தில் உருவாக்கமுடியும்.

பறவைகள் கூட்டமாக இருக்கும் பழக்கமானது கூட்டமாய்ச் சேர்ந்து உணவு தேடுவதற்கும் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் உருவான ஒன்று என்று கூறலாம். மேற்சொன்ன இடப்பாதுகாப்பு விஷயத்தில் இருப்பது போல், பலம் மற்றும் சக்தியைச் செலவழித்தல் ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பை வெளிப்படுத்துவதாய் இப்பழக்கம் உள்ளது. இதில் நிலையான உணவு மற்றும் பாதுகாக்க ஏதுவான இடம் ஆகியன பறவைகளுக்குப் பாதுகாக்கும் பண்பையும் நிலையற்ற உணவு மற்றும் பாதுகாக்க இயலாத இடம் ஆகியன கூட்டமாய் வாழும் பண்பையும் உருவாக்குகின்றன.

கூட்டமாய் இயங்கும்போது ஒரு பறவை தன் செயல்பாடுகளைச் சிறிது நேரம் தவிர்த்து ஓய்வெடுக்க வழியுண்டு. ஏனெனில் கூட்டத்தில் வேறு சில பறவைகள் அந்த வேலைகளைச் செய்வதால் இந்த ஓய்வுக்கு வழி கிடைக்கிறது. ஒரு கூட்டத்தில் இணையும் செயலே ஒரு பறவைக்கு எதிரிகளிடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ளும் பாதுகாப்பைத் தருகிறது.

ஏனெனில் இரைக்கொல்லிக்குத் தனி ஒரு பறவையைக் குறிவைப்பது கூட்டத்தில் சற்றே கடினமான செயலாகும். இதனால் சற்று விலகிப் பறக்கும் பறவைக்கூட்டம் கூட இரைக்கொல்லி ஒன்றைப் பார்த்தவுடன் நெருக்கமாகப் பறக்கத் தொடங்கிவிடும். இந்தக் கூட்டம் கூடுதல் பெரும்பாலும் ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகளிடத்தில் நடக்கிறது. ஆனால் ஒரே இனத்துப் பறவைகள் மட்டும் கூட்டமாகக் கூடும் என்று அறுதியிட்டுச் சொல்லமுடியாது.

உணவிற்காகப் பல்வேறு இனப் பறவைகளும் கூட்டமாகக் கூடும் வழக்கமும் உண்டு. சில நேரங்களில் 30க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் ஒரு சில சிற்றினங்களின் தலைமையில் உணவு தேடி இயங்குவது கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய கட்டுக்கோப்பு எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்வதற்காகவே அமைக்கப்பட்டிருப்பதாகக் கொள்ளலாம்.

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *