ஆண் பறவைக்கு இரண்டு விந்தகங்களும் பெண் பறவைக்கு ஓர் அண்டமும் உள்ளன. இவையே இனச் செல்களையும் இன ஹார்மோன்களையும் உருவாக்குகின்றன.
விந்தகம் என்பது அவரை விதை வடிவில் சிறுநீரகப் பையின் மேற்பாகத்தில் அமைந்திருக்கிறது. இது இளம்சிவப்பு நிறத்தில் பொதுவாகக் காணப்பட்டாலும் சில பறவைகளிடம் கருமை நிறத்திலும் காணப்படுகிறது. ஆரம்பத்தில் சில மில்லி மீட்டர்களில் இருக்கும் விந்தகம் பருவகாலங்களில் 400 முதல் 500 மடங்குவரை அளவில் அதிகரிக்கும்.
உதாரணமாக ஜப்பானியக் குயில் எனும் பறவையின் விந்தகம் மூன்றே வாரத்தில் 8 மில்லி கிராமிலிருந்து 3000 மில்லி கிராம் வளர்ச்சியை அடைகிறது. அண்டம், சிறு திராட்சைக்கொத்து போன்று காணப்படும். பெரும்பாலான பெண் பறவைகள் இடதுபுற அண்டத்தை மட்டுமே பெற்றிருந்தாலும் சில கழுகு இனங்களில் இரண்டு புறத்திலும் அண்டங்கள் அமைந்திருப்பது உண்டு.
முதல்நிலை இனச்செல்கள் (Premordial Germcell) கரு வளர்ச்சியின்போது இனச்செல்கள் உருவாகும் இடத்திற்கு இடம்பெயரும். FSH (Follicle Stimulating Hormone) எனும் ஹார்மோன், அண்டத்திலும் விந்தகத்திலும் இனச்செல்களின் உருவாக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது.
அதேபோல் லியூட்டினைசிங் ஹார்மோன் இரு இடத்திலும் உருவாகும் ஹார்மோன்களின் உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிறது. டெஸ்டோஸ்டீரோன், எஸ்டோரஜன் ஆகிய ஹார்மோன்கள் இரண்டாம் நிலை இனப்பண்புகளின் வெளிப்பாட்டிற்குக் காரணமாக இருக்கின்றன.
இதில் டெஸ்டோஸ்டீரோன் மற்றும் எஸ்டோரஜன் முறையே ஆண் பெண் ஹார்மோன்களாய் இருப்பினும் இவை இரண்டுமே ஆண் பெண் பறவைகளில் காணப்படுகின்றன. ஆனால் இவற்றின் அளவில் காணப்படும் வேறுபாடுகளே ஆண் பெண் பண்புகளை வெளிப்படுத்துகின்றன.
இரண்டாம் நிலைப் பண்புகள்
உடலின் அளவில் மாறுபாடு, இறகுகளில் மாறுபாடு, குரல் மாறுபாடு ஆகிய அனைத்தும் டெஸ்டோஸ்டீரோன் மற்றும் எஸ்ட்ரோஜனின் உதவியால் உண்டாவதாகும். இனப்பெருக்கக் காலங்களில் ஆண் பறவைகள் பல்வேறு வண்ணங்களில் பல்வேறு இறகுகளை அதன் ரத்தத்தில் டெஸ்டோஸ்டீரோனின் அளவு உயர்வதன்மூலம் பெறுகின்றன. இனப்பெருக்கக் காலத்தில் ஆண் பறவைகள் சிறப்பான வண்ண அமைப்பினை இப்படித்தான் பெறுகின்றன. மேலும் சில பெண் பறவைகள்கூட சிறப்பு வண்ணச் சிறகுகளை இனபெருக்கக் காலத்தில் பெறுவதற்கும் இந்த டெஸ்டோஸ்டீரோனே வழிவகை செய்கிறது.
ஆனால் டெஸ்டோஸ்டீரோன் மற்றும் எஸ்டோரஜன் மட்டுமே இந்த இறகு வேறுபாட்டை உருவாக்கும் காரணிகளாய் இருப்பதில்லை. இந்த இரு ஹார்மோன்களையும் ஒழுங்குப்படுத்தும் லியூட்டினைசிங் ஹார்மோன்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். ஏனெனில் இது தனியே செயல்பட்டுச் சில வேறுபாடுகளை உருவாக்கும் காரணியாய் இருக்கின்றது.
பாலூட்டிகளைப் போலன்றி, வண்ணத்துப்பூச்சியில் காண்பது போன்று பெண் பறவைகள் செயலற்ற W இன குரோமோசோம் ஒரு Z இன குரோமோசோம் என ZW குரோமோசோம்களைப் பெற்றுள்ளன. ஆனால் ஆண் பறவை இரு Z இன குரோமோசோம்களைக் கொண்டுள்ளது.
சில நேரங்களில் செல் பிரிவின்போது உண்டாகும் சில எதிர்பாரா நிகழ்வில் கருவானது பாதி ZW குரோமோசோம்களையும் பாதி ZZ குரோமோசோம்களையும் கொண்டு தோன்றுவதும் உண்டு. இதன் விளைவாக உடலில் ஒருபுறத்தில் விந்தகமும் மறுபுறத்தில் அண்டமும் உருவாகிவிடும். இதன் விளைவாக ஆண் பெண் என்ற இரண்டு பாலினத்திலும் காணப்படும் சிறப்புச் சிறகமைப்புகள் மேற்சொன்ன பறவைகளில் கலந்து காணப்படும்.
விந்து உருவாக்கம்
இன ஹார்மோன்கள் மற்றும் விந்தை உருவாக்கும் ஜெர்மினல் எபிதீலியாக்களைக் கொண்ட செமினிபெரஸ் (Seminiferous Tubules) குழல்கள் மொத்தமாக விந்தகத்தில் காணப்படும். டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் செமினிபெரஸ் குழல்களில் உள்ள செர்டோலி (Sertoli Cells) செல்களிலும் லேடிக் (Leudig) செல்களிலும் சுரக்கப்படுகிறது.
முழுவதும் வளர்ச்சியடைந்த விந்து செல் விந்தகத்தைவிட்டு வெவ்வேறு குழல்கள் வழியே வெளியேறுகிறது. விந்து செல்களை வெளி வெப்பநிலையில் இருந்து காப்பதற்காகப் பாலூட்டிகள் மற்றும் ஊர்வனவற்றில் விந்தகம் உடல் வெப்பநிலையில் இருந்து சற்றே குளிர்வான ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது பறவைகளில் உடல் வெப்பநிலையிலேயே வைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த விந்து உருவாக்கம் இரவில், அதாவது உடல் வெப்பநிலை சிறிது குறைந்து இருக்கும்போது பறவைகளில் நிகழ்கிறது.
புதிய விந்து செமினல் வெசிகிள்களில் சேகரித்து வைக்கப்படுகிறது. செமினல் வெசிகிள்கள் மற்றும் இரு துணைச் சுரப்பிகளும்தான் விந்து செல்லுக்குத் தேவையான உணவூட்டத்தைப் பாலூட்டிகளில் அளிக்கின்றன. ஆனால் இந்நிகழ்வு நடைபெற பறவைகளிடத்தில் சுரப்பிகளும் இல்லை; உணவூட்டமும் இல்லை.
முதுகு நாணுடைய விலங்குகளுக்கே உரித்தான முறையில் பறவைகளின் விந்து செல்கள் உள்ளன. இதைத் தலைப்பகுதி, உடல், வால் என்று மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இதில் தலைப்பாகம், மரபணுக்களைக் கொண்டும் உடல்பாகம், சக்தியைத் தருவதாகவும், வால், விந்து நீந்திச் செல்லவும் பயன்படுகின்றன. பறவைகளின் விந்து செல்கள் வெவ்வேறு வடிவங்களில் காணப்படுகின்றன.
கருமுட்டை உருவாக்கம்
பறவையின் முட்டையை உண்மையில் பரிணாம விந்தை என்றே சொல்ல வேண்டும். புதிதாய் இடப்பட்ட முட்டையில் 1) கருவற்ற நிலையும் (அ) கருவும் 2) அந்தக் கருவுக்கு உணவு மற்றும் பாதுகாக்கும் அடுக்குகளும் உள்ளன. ஆரம்பத்தில் மிகச்சிறிய நுண்ணிய அளவில் இந்தக்கரு இருந்தாலும் அது ஆயிரம் மடங்கு பெரிதான நிலையில் வெளியே முட்டையாக இடப்படுகிறது.
இதற்குக் காரணம் கருவுக்கான உணவு அதிகரிப்பும் முட்டைக்கரு உருவாகும் முறை போன்றவற்றையும் சொல்லலாம். நுண்ணிய அளவில் இருக்கும் முட்டை ஆரம்ப அளவைவிட ஆயிரம் மடங்கு பெரியதாகக் கருவுணவின் சேர்க்கையினாலும், வெள்ளைக்கருவின் சேர்க்கையாலும் முட்டை ஓட்டின் விளைவாலும் உருவாகிறது.
கருமுட்டை இரு தனித்தனியான ஆனால் தொடர்புடைய நிகழ்வுகளால் வளர்ச்சி அடைகிறது. கரு அடுக்குகளின் உருவாக்கமும், சக்தி சேமிப்பும் ஜெர்ம் செல்களின் வேறுபாட்டையும் அதன் வளர்ச்சியையும் கொண்டு அமைகிறது. முட்டைகளை உருவாக்கும் முதல்நிலை முட்டைச்செல்கள் (Primary Oozytes) குஞ்சுகளிலேயே காணப்படினும் தெளிவான நல்ல உருவிலமைந்த முட்டையானது வளர்ந்த பறவைகளில்தான் காணப்படுகிறது. ஏனெனில் பறவைகளின் வளர்ச்சி நிலையில்தான் சிறிய அளவில் உண்மையான கருஉணவு, முட்டைச் செல்களுக்குச் செல்கிறது.
கருவுணவு உருவாக்கம் பறவைகளில் இனத்திற்கு இனம் வேறுபட்ட நாட்களில் நடைபெறுகிறது. இது சராசரியாக நான்கு நாட்களில் இருந்து 15 நாட்களுக்குள் நடக்கிறது. உருவில் பெரிய அளவிலான துகள் கொண்ட (0.025 to 0.15mm சுற்றளவில்) மஞ்சள்கரு, சிறிய அளவிலான துகள்கொண்ட (0.004 to 0.075mm) வெண்கரு என இருவகையில் கரு உள்ளது. இவை அடுக்குகளாக உருவாவதால் அடுக்குகளின் எண்ணிக்கையை வைத்து இக்கருவுணவின் தோற்ற நாட்களைக் கணக்கிடமுடியும். இவ்வாறு கரு முழுமையடைந்த பிறகு அது கருவுறுதலுக்காக இன்பண்டிபுலம் என்ற இடத்தை அடைகிறது.
இனப்பெருக்கம்
பறவைகள் பெரும்பாலும் வெளிப்புற இன உறுப்புக்கள் இல்லாத காரணத்தினால் மிகக் குறைவான நேரத்திலேயே அவற்றின் இனச்சேர்க்கை நிகழ்வு முடிந்துவிடுகிறது. இதனால்தான் இதனை இனப்புழை முத்தம் என அழைக்கிறோம்.
ஆண் பறவை, பெண் பறவைமீது அமர்ந்து தன் வாலிறகுகளைச் சற்றுத் தூக்கி இனப்புழையைச் சற்றுப் பெண் புழைக்கு ஏதுவாகத் திருப்பிக்கொள்கிறது. அதேபோல் பெண், ஆண் புழையை முத்தமிடுவது போல் தன் பகுதியை அமைத்துக் கொடுப்பதுதான் பறவைகளின் இனச்சேர்க்கைச் செயல்பாடாகும்.
இந்நிகழ்வு ஸ்விட் இன பறவைகளில் நிமிடத்தில் நடைபெறுகிறது. அகுவாட்டிக் வார்ப்லர் எனும் பறவை 25 நிமிடம் வரை இவ்வுறவை மேற்கொள்கிறது. இப்பறவையில் ஆண் பறவை பெண் பறவையின் தலை இறகுகளைத் தன் அலகால் கவ்விக்கொண்டு, ஒவ்வொரு நிமிடத்திற்கும் அதாவது முட்டையிடுவதற்கு முன்னும் பின்னுமாய் உறவைக்கொண்டு தன் விந்து செல்தான் முட்டையைக் கருவுறச்செய்கிறது என்பதை உறுதிப் படுத்துகிறது.
ஓர் ஆண் பறவை சுமார் 1.7 முதல் 3.5 பில்லியன் வரையிலான விந்து செல்களை ஒரு முறையில் வெளியேற்றினாலும், இந்த எண்ணிக்கை அடுத்தடுத்த வெளியேற்றத்தில் குறைகிறது. குறைந்தது 100 மில்லியன் செல்கள் சராசரியாகக் கருவுறுதலுக்குத் தேவைப்படுகின்றன. இந்தச் செய்திகள் யாவும் வளர்ப்புப் பறவைகளிடம் இருந்தே பெறப்பட்டுள்ளன. பறவைகள் கருவுறுதல் பற்றிய ஆய்வுகள் இயற்கைச் சூழலில் குறைந்த அளவே நடைபெற்றுள்ளன.
ஒருசில பறவைகள் இனப்புழையில் மாறுபட்ட வடிவில் விரைக்கும் தன்மை கொண்ட ஆணுறுப்புப் போன்ற ஓர் உறுப்பையும் கொண்டுள்ளன. பெரும்பாலான நீர்ப் பறவைகளான டினாமஸ் (Tinamous), கரசாவ்ஸ் (Curassows) மற்றும் நெருப்புக் கோழிகள் (Ostriches) ஆகியனவற்றில் 20செமீ நீளமுடைய நல்ல சிகப்பு நிறத்தில் ஆணுறுப்புகள் காணப்படுகின்றன.
இத்தனை வேறுபாடு எதற்காக என்பது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. நீர்ப் பறவைகளிடத்தில் உள்ள இவ்வுறுப்பு நீர் வழியாக இனச்செல்களின் இடப்பெயர்ச்சிக்கு உதவுமென்று கூறினாலும் மற்ற பறவைகளில் இதன் தனித்தன்மை கேள்விக் குறியாகவே உள்ளது.
இனச் சேர்க்கைக்கு முன்பாக ஆண் பெண் பறவைகள் ஒன்றையொன்று ஈர்த்துக்கொள்வதற்காக வெவ்வேறு விதமான செய்கைகளைச் செய்கின்றன. இதனை இனக்கவர்ச்சியின் வெளிப்பாடு என்று கூறலாம். ஒவ்வொரு பறவையிலும் இது ஒரு காவியநிகழ்வு போன்று நடக்கிறது.
உள்ளே நுழைந்த விந்துசெல் முதிர்ந்த கருவுறா முட்டையினை அடைகிறது. உடலுறவு நடைபெற்ற ஒரு சில நாட்களிலேயே முட்டை கருவுற்றாலும் விந்து செல் சில வாரம்வரை அத்தகுதியுடன் இருப்பதனை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். இயற்கையாகவே சில பறவைகள் விந்து செல்களைச் சேமித்து வைக்கும் சுரப்பிகளையும் கொண்டுள்ளன.
ஒரு பெண் பறவை பல ஆண்களுடன் உடலுறவில் ஈடுபடும் போது இரு உடலுறவிற்கும் இடையேயான நேரம் அப்பறவையின் இளம் உயிரியின் தந்தையை நிர்ணயிப்பதாகக் கூறப்படுகிறது. உதாரணமாகத் தொடர் உடலுறவிற்கு இடையேயான இடைவெளி 4 மணி நேரம் இருக்கையில் கடைசி உடலுறவில் பெற்ற விந்து செல்கள் முட்டையைக் கருவுறச்செய்வதில் முன்னிலையில் உள்ளதென்று கூறப்பட்டாலும் இது முழுவதுமாக ஏற்கப்படாத நிலையில்தான் உள்ளது.
சேகரிக்கும் முறை இருக்கும் என்றால் கடைசியாகச் சேகரிக்கப்பட்ட விந்து, முட்டையை அடையும் பாதையில் முன்னே இருக்கும். அந்நிலையில் உறவில் ஈடுபட்ட கடைசி ஆண் பறவையே இளம் உயிரியின் தந்தையாகும். ஆனால் இதுபோன்ற அடுக்கு முறையில் விந்து சேகரிக்கும் வழக்கம் என்ற ஒன்று இருப்பதற்குச் சாத்தியமில்லை என்றும் சில அறிஞர்கள் கருதுகின்றனர்.
இதற்கு மாறாக மற்றொரு கருத்தும் உண்டு. சில இனங்களில் ஆண் பறவையானது உடலுறவிற்குப் பெண் பறவையின் இனப்புழையைத் தூண்ட செய்வதன் மூலம் அது முன்பு சேகரித்து வைத்துள்ள விந்துச் செல்களை வெளியேற்றச் செய்கிறது. பின்பு தனது விந்துச் செல்களை அனுப்புகிறது. இது டன்னாக் என்ற பறவை இனத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அதுவே அப்பறவையின் இனப்பெருக்க வரலாற்றில் புதைந்துவிட்டது.
சில நேரங்களில் பறவைகளில் கருவுறா முட்டைகள் வளர்ந்து கன்னிமாறா இனப்பெருக்கத்திற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுவிடும். இப்படி உருவாவதில் பெரும்பாலானவை கருவிலேயே இறந்து விடுவதும் உண்டு. உயிருடன் வெளிவரும் பெரும்பாலானவை zz இன குரோமோசோம்களைக் கொண்ட ஆண் பறவைகளாக இனப்பெருக்கம் செய்யும் தகுதி உடையனவாகவும் உள்ளன.
(தொடரும்)