Skip to content
Home » காக்கைச் சிறகினிலே #18 – கூடுகளின் கதை

காக்கைச் சிறகினிலே #18 – கூடுகளின் கதை

எந்த ஒரு பறவையும் நேரடியாக ஓர் இளம் உயிரியைத் தோற்றுவிப்பதில்லை. அதற்குப் பதிலாக அவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன. கூடு ஒன்றைத் தயார் செய்தோ அல்லது முன்பே இருக்கும் கூடு போன்ற ஒன்றைக் கொண்டோ முட்டையையும் இளம் உயிரியையும் பாதுகாக்கிறது.

ஒரு பறவை முட்டையையும் தன்னுடைய இளம் உயிரியையும் பாதுகாக்கத் தன்னுடைய நேரம், சக்தி போன்றவற்றை மிகுதியாகத் தியாகம் செய்கிறது. இந்நிகழ்வுசார் பரிணாமம் பறவைக் கூடுகளின் வகைப்பாடுகளைப் பெரிய அளவில் வேறுபடுத்தியுள்ளது. இதேபோல முட்டையை அடைகாத்தலும் இளம் உயிரியின் வளர்ச்சியும் பறவைகளின் வாழ்க்கையைச் சார்ந்திருக்கின்றன.

கூட்டின் கட்டமைப்பு

உண்மையில் இனப்பெருக்கத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் சவால்களை எதிர்கொள்ளும் வகையிலேயே பறவைகளின் கூடுகட்டும் பண்புகளை நாம் காணவேண்டும். பெரும்பாலான பறவைகள் தனியாக, மறைவாக இருப்பது போல்தான் கூடுகட்டும்.

எதிர்மாறாகச் சில பறவைகளின் கூடுகள் வெளியில் பெருந்தொகுதியாக (10 லட்சத்திற்கும் அதிகமாக) காணப்படும். பெருவியன் கடற்பகுதியில் “கார்மராண்ட்” என்னும் பறவைகள் ஒரு ஏக்கருக்கு 12,000 கூடுகளைக் கட்டிக்கொண்டு கூட்டமாய் வாழும். ஆப்ரிக்காவில் 20 முதல் 30 லட்சம் ஜோடி குவலியா (Red-billed Quelea) பறவைகள் 100 ஹெக்டர் நிலத்தில் கூட்டமாய்க் கூடுகட்டி வாழ்கின்றன.

பெருவியன் கடற்பகுதியில் காணப்படும் “கார்மராண்ட்” பறவைகள்
பெருவியன் கடற்பகுதியில் காணப்படும் “கார்மராண்ட்” பறவைகள்
குவலியா (Red-billed Quelea) பறவைகள்
குவலியா (Red-billed Quelea) பறவைகள்

பறவைகள் தங்களையும் தங்களுடைய முட்டைகளையும் இளம் உயிர்களையும் எதிரிகளிடமிருந்தும் கடினமான தட்பவெப்ப சூழ்நிலைகளில் இருந்தும் காத்துக்கொள்ளவே கூடுகளைக் கட்டிக்கொள்கின்றன. கூடுகளின் கட்டமைப்பும், அவற்றின் தொழில் நுட்பமும், பின்னிப் பிணைந்தவையாகும்.

மேலும், பாதகமான வானிலைகளிலிருந்து இளம் உயிர்கள், பெற்றோர், முட்டைகள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும் கூடுகள் உதவுகின்றன. பறவைகளின் கூடுகள் பலதரப்பட்டனவாக உள்ளன. மிகக் கடினமாகச் செறிந்த பின்னிய தொழில்நுட்பம் மிகுந்த கூடுகளும் உள்ளன. ஓரிரு சிறு குச்சிகளைக் கொண்டு அமைக்கப்படும் கூடுகளும் இருக்கின்றன. சில பறவைகள் நிலத்தில் சிறிய குழியைப் பறித்து அதில் முட்டையிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன.

கூடுகள் கட்டுவதற்கு எளிதாகக் கிடைக்கும் சிறுகுச்சிகள், கற்கள், அரிதாகக் கிடைக்கும் இயற்கை நார்கள் ஆகியவற்றைப் பறவைகள் பயன்படுத்துகின்றன. சில பறவைகள் சிறிய குச்சிகளை மட்டுமே கொண்டு கூடுகள் கட்டிக் கொள்கின்றன. சில கழுகுகள் உடைந்த கிளைகளைக் கொண்டு தங்கள் கூடுகளைக் கட்டுகின்றன. அமெரிக்க வெண்தலை கழுகு (Bald Eagle) ஒன்றின் கூடு கீழே விழுந்தபோது அதன் எடையைப் பார்த்ததில் சில கிலோக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

அமெரிக்க வெண்தலை கழுகின் கூடு

பாடும் பறவைகள்தான் மிக நேர்த்தியான கூடுகட்டும் திறன்களைக் கொண்டுள்ளன. சுருக்குப்பை போன்று கிளையிலிருந்து தொங்கும் கூடுகள் மிகுந்த உழைப்பும் நுட்பமும் கொண்டு அமைந்தவை. தூக்கணாங் குருவியின் கூட்டையும் தையல் பறவையின் கூட்டையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

தொங்கும் கூடுகள்
தொங்கும் கூடுகள்

பல பறவைகள் கூட்டமாகச் சேர்ந்து கூடுகட்டுவதைப் பார்க்கிறோம். பல அறைகளைக் கொண்ட ஒரு கூட்டுக்கூட்டைத் தனியே கட்டும் திறனை சில பறவைகளே பெற்றிருக்கின்றன. ‘சோசியபல் வீவர்’ எனும் பறவையின் கூட்டை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இப்பறவையினம் பாலைவனத்திற்கு ஈடான தென்மேற்கு ஆப்பிரிக்காவின் வெப்பப் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.

பல அறைகளைக் கொண்ட ‘சோசியபல் வீவர்’ பறவையின் கூடு

கூடுகட்ட உபயோகப்படுத்தப்படும் பொருட்கள் புற்கள், இளம் கொடிகள், இலைகள், கிளைகள் போன்றவற்றைக் கொண்டே பறவைகள் கூடுகளைக் கட்டுகின்றன. வெளிப்புற ஒட்டுண்ணிகளைத் தவிர்க்கவும், நோய்களைத் தவிர்க்கவும் சில தாவர இலைகளைப் பறவைகள் பயன்படுத்துகின்றன. பொதுவாகத் தாவரங்கள் அல்லது பொந்துகளில் கட்டப்படும் கூடுகளில்தான் இத்தகைய இளம் மற்றும் பசுமையான இலைகள் மிகுதியாகப் பயன்படுத்தப்படுகின்றன.

களிமண் உருண்டை, சிறு கூழாங்கற்கள், மனிதனால் தூக்கி எறியப்பட்ட சில தேவையற்ற பொருட்களும் பறவைகளுக்குக் கூடுகட்ட உதவுகின்றன. சிலந்திகளின் கூடு, சிறு இறகுகள், முடிகள் ஆகியவற்றைக் கொண்டு தங்கள் கூடுகளை அழகு படுத்திக்கொள்ளும் பழக்கமும் சில பறவைகளிடையே உண்டு.

கூட்டின் பாதுகாப்பு

ஒரு பறவையின் இனப்பெருக்க வெற்றியானது கூட்டாலும், அக்கூட்டைச் சார்ந்த பெற்றோர்கள், முட்டை, இளம் உயிரிகள் போன்றவற்றை வேட்டையாடும் எதிரிகளாலும் பாதிக்கப்படுகின்றது. உலகில் பறவைகளின் கூட்டை 85 சதவிகிதம் பாழாக்குவது அப்பறவைகளின் எதிரிகளேயாகும். ஆனால் இந்தப் பாதிப்புகள் பறவைகளின் பரிணாமத்தில் ஒரு முன்னேற்றத்தைக் கொண்டு வருகின்றன. கூட்டின் கட்டமைப்பு, கட்டப்படும் இடம் போன்றவற்றைத் தீர்மானிக்க இப்பாதிப்புகள் காரணங்களாகின்றன.

எதிரிகள் நெருங்கமுடியாத இடம், எளிதில் தெரியாத தன்மை மற்றும் எளிதில் வெல்ல முடியாமல் இருப்பது போன்றவை கூட்டின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத காரணிகளாய் இருக்கின்றன. இதற்காகவே சுற்றுப்புறத்தோடு ஒத்துப்போகும் நிறமுடைய கூட்டைப் பறவைகள் அமைத்துக் கொள்கின்றன. இப்படி எதிரிகளால் எளிதில் கூட்டைக் கண்டறிய முடியாத சூழ்நிலையைப் பறவைகள் உருவாக்குகின்றன.

தரையில் கூடுகட்டும் பறவைகளின் கூடுகளும் கூடுசார் உயிர்களும் மரத்திலோ குறுஞ்செடிகளிலோ உள்ள கூடுகளைவிட எளிதில் இரைகொல்லிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன.

பெரும்பாலான பறவைகள் முழுமையாக மூடுண்ட அமைப்பில் கூட்டைக் கட்டிக்கொள்வதன் மூலம் எதிரிகளின் நெருக்கத்தைக் குறைத்து விடுகின்றன. பாம்புகள் போன்ற ஊர்வனகூட எளிதில் நுழைய முடியாத வகையில் இருப்பது இக்கூடுகளின் சிறப்பம்சமாகும்.

பொந்துகளில் காணப்படும் கூடுகளைவிடத் திறந்த நிலையில் கட்டப்படும் கூடுகளுக்குப் பாதுகாப்புக் குறைவானதாகவே இருக்கின்றது. உண்மையில் தங்கள் பாதுகாப்புக்காகப் பெரும்பாலான பறவைகள் பொந்துகளிலேயே தங்கள் கூடுகளை அமைத்துக் கொள்கின்றன. உதாரணமாக மீன்கொத்தி, ஆந்தை, கிளிகள், பார்பெட் ஆகியன பொந்துகளில் கூடுகட்டி வாழும் பறவையினங்களாகும்.

இப்படிக் கூடுகட்டும் பறவைகளைப் பொந்துகளை உருவாக்கிக் கூடுகட்டுபவை, முன்பே இருக்கும் துவாரங்களைச் சிறிது மாற்றியமைத்துக் கூடுகளாக்கிக் கொள்பவை என்று இரு பிரிவாகப் பகுக்கலாம். இந்த இரண்டாம்நிலைப் பறவைகள் எப்பொழுதும் முதல்நிலைப் பறவைகளின் கூடு இருக்கும் பொந்துகளையோ (அ) இயற்கையாகக் கிடைக்கும் பொந்துகளையோ சார்ந்துள்ளன.

இறந்துபோன மரங்கள்கூட இந்தவகையில் பறவைகளுக்குப் பெரும் உதவி செய்கின்றன. இறந்துபோன, அழுகிப்போன மரங்களை அகற்றும் செயல்கூட ஒரு சூழ்நிலை மண்டலத்தில் இருக்கும் பறவைகளின் வாழ்க்கையை மாற்றும் சக்தி வாய்ந்ததாய் இருக்கிறது. வேறு சில பறவைகள் தந்திரமாகப் பெரிய விலங்குகள் இருக்கும் இடத்திலோ அல்லது கொட்டும் பூச்சிகள் இருக்கும் இடத்திலோ கூடுகட்டி, தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. ‘ஐரோப்பிய திக்நீ பறவை (European thick-knee) முதலைகள் தங்கும் இடத்தில் தன்கூட்டை அமைத்துக்கொள்ளும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறது.

ஒரு பறவை அடைகாத்துக் கொண்டிருக்கும் போது வேறு வழியே இல்லை என்ற நிலையில்தான் தன்னை எதிரிகளிடம் காட்டிக்கொள்ளும். அதுவரை மிக அழகாகச் சுற்றுப்புறங்களுடன் தன்னை இணைத்துக்கொள்ளும்.

சில பறவைகள் அப்படிப் பறக்க நேரிடும்போது மிகக்கெட்ட வாசனை வரும்படியான கழிவுகளை முட்டைகள் மீது தெளித்துவிட்டுப் பறக்கின்றன. பல பறவைகள் இந்நிலையில் எதிரிகளைத் தாக்க முற்படுவதும் உண்டு. பறந்த பறவை மீண்டும் கூட்டை உடனே வந்து அடைவதில்லை. சிறிது நேரம் கழித்து, எதிரிகள் அறியாவண்ணம் பதுங்கிப் பதுங்கி கூட்டை அடைவதும் உண்டு.

கூட்டமாகக் கூடுகட்டி வாழும் பறவைகள்

பறவைகள் 13 விழுக்காடு கூட்டமாய்க் கூடுகட்டி வாழும் பழக்கம் உடையனவாகக் காணப்படுகின்றன. கூட்டமாய்க் கூடுகட்டி வாழும் பழக்கமானது, இடமின்மையால் ஏற்பட்ட பரிணமிப்பு என்று சொல்வதுண்டு. பழக்கம், சாதக பாதகங்களைச் சரிசமமாகக் கொண்டது என்றுதான் கூறவேண்டும்.

கூட்டமாகக் கூடுகட்டுவதன் சாதகம் என்றால் இளம் உயிரிகள் நல்ல பாதுகாப்பில் இருக்க வாய்ப்பு உண்டு என்பதையும் பாதகம் என்றால் கூடுகட்டும் இடத்திற்குப் போட்டி, கூடுகட்டும் பொருட்களை இழக்கும் வாய்ப்பு, உடலியல் தொந்தரவு போன்றவற்றையும் கூற வேண்டும். மேலும் கூட்டமாய் வாழ்வது எதிரிகளை எளிதில் அழைக்கும்படியான ஒரு செயலாகவும் இருக்கிறது.

கூடுகட்டுதல்

கூடானது பெற்றோர் பறவைகள் இரண்டினாலோ அல்லது அவற்றில் ஒன்றாலோ கட்டப்படும். இது பெரும்பாலும் இணை உருவான பிறகு நடக்கும். கூடுகட்டும் இடத்தைத் தேர்ந்தெடுத்தபின் இந்தக் கடின வேலை நிகழ்கிறது. இக்கூடு கட்டப்பட்ட பின் இரு பறவைகளும் ஒன்றையொன்று தங்களுக்கு இணையாக அங்கீகரித்துக் கொண்டால்தான் அடுத்த நிகழ்வான இனச்சேர்க்கையும் முட்டையிடுதலும் நடைபெறும். கூடுகட்டுதல் சில பறவைகளுக்கு மிக எளிதான வேலையாகவும் சில பறவைகளுக்கு மிகக் கடினமான ஒன்றாகவும் இருக்கிறது.

கூடுகட்டும் நடத்தை

கூடுகட்டும் பழக்கம் குறித்து மிகத் தெளிவாகக் கூறவேண்டுமானால், வெறும் கூடுகட்ட உதவும் பொருட்களின் குவியலாக சில பறவைகளின் கூடுகளும், மிக நேர்த்தியான பொருள்களைக் கொண்டு நுட்பத்துடன் நெய்யப்பட்டதாக சில பறவைகளின் கூடுகளும் இருக்கின்றன. கூடுகட்ட உதவும் பொருட்களைச் சற்றே வரிசைப்படுத்துவதன் மூலம் அருகே உள்ள இடத்திலிருந்து கூட்டை வேறுபடுத்த மட்டுமே இச்செயலைச் செய்கிறது. பின் பரிணாமத்தில் இதுவே நேர்த்தியான கூடுகட்டும் திறனாகப் பறவைகளிடத்தில் பரிணமித்துள்ளது.

கூடுகட்டுவதற்குப் பொருட்களைப் பறவை தன் அலகினாலோ அல்லது கால்களினாலோ எடுத்துச் செல்கின்றது. இருப்பினும் சில பறவைகள் தங்களின் இறகுகளில் பொருட்களைச் செருகிக்கொண்டு வருவதும் உண்டு. இப்படிப் பறவைகளின் அலகும் கால்களுமே கூடுகட்ட உதவும் கருவிகளாக இருக்கின்றன. பொதுவாகப் பறவைகளின் அலகுகள், உணவுக்காகப் பரிணமித்தவையாக இருப்பினும் மிக அபூர்வமாக சில பறவைகளில் இந்த அலகுகள் கூடுகட்டுவதற்காகவே பரிணமித்து இருக்கலாம் என்ற கருத்தும் சொல்லப்படுவதுண்டு.

வயதும் கூடுகட்டும் திறனும்

கூடுகட்டும் திறன் என்பது மரபியல் சார்ந்ததாக இருப்பதால் இளம் பறவைகள் இதனைப் பெற்றோர்களிடம் இருந்தோ அல்லது வேறொரு உறுப்பினரிடமிருந்தோ கற்க வேண்டியதில்லை. கூடு என்ற ஒன்றைப் பார்க்காமலேயே இளம் பறவை ஒன்று குறிப்பிட்ட காலத்தில் கூடுகட்டும் திறனைப் பெற்றிருக்கும். இருப்பினும் கூடுகளின் நேர்த்தி என்பது அதன் வயதைச் சார்ந்ததாக இருப்பதையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். மிக நேர்த்தியான கூட்டை இளம் பறவையைவிட வயது முதிர்ந்த பறவை மிக எளிதாகச் செய்கிறது.

கூடுசார் நுண் தட்பவெப்பம்

ஒரு கூட்டில் நிலவும் நுண் தட்பவெப்பம் மிக முக்கியமான ஒன்றாகும். இதுவே அடைகாக்கும் நேரத்தை நிர்ணயிப்பதாகவும் பெற்றோர்களின் சக்தித் தேவையை நிர்ணயிப்பதாகவும் இருக்கிறது. இந்நுண் தட்பவெப்பமே அதீத வெப்பம், குளிர், மழை போன்றவற்றிலிருந்து பறவைகளைப் பாதுகாக்கிறது. பெரும்பாலான கூடுகளின் அமைப்பு, முட்டைகளுக்கும் இளம் உயிரிகளுக்கும் ஏதுவான வெப்பம் தரக்கூடியதாகவே இருக்கிறது. இதனால் கூடுகள் சூரியக் கதிர்கள் நேரடியாகப் படாதவாறும், காற்றால் சிதைக்க இயலாத வகையிலும், மழையால் அழிக்கப்படா வகையிலும் கட்டப்படுவது இன்றியமையாததாகிறது.

(தொடரும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *