அடைகாக்கும் போது பறவைகளின் ரத்தத்தில் புரோலாக்டின் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இது அதிகமாகும்போது அந்தப் பாலினம் அடைகாக்கும் செயலைச் செய்கிறது. இச்செயலை நிறுத்துவதற்கு டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் பயன்படுகிறது.
பெரும்பாலான பறவைகள் அனைத்து முட்டைகளையும் இட்ட பின்புதான் குஞ்சுபொரிக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சில பறவைகள் தாம் இட்ட முதல் முட்டையிலிருந்தே அடைகாக்க ஆரம்பித்தாலும் அனைத்து முட்டைகளையும் இட்டபிறகே அவற்றிற்குத் தேவையான வெப்பத்தை அளிக்க முற்படுகின்றன.
அடைகாத்தல் திட்டு
பெற்றோர் பறவைகள் தங்கள் உடலின் வெப்பத்தை அடைகாத்தல் திட்டு வழியாக முட்டைகளுக்குச் செலுத்துகின்றன. அடைகாத்தல் திட்டு என்பது அடைகாக்கும் காலத்தில் பெற்றோர் பறவைகள் தங்களின் மார்பிலிருந்து வயிறுவரை உள்ள இறகுகளை உதிர்த்து வைத்துள்ள பகுதியைக் குறிக்கும்.
இது பறவைகளிடத்தில் ஒரே மையத்திட்டாகவோ அல்லது இருபக்கவாட்டுத் திட்டாகவோ காணப்படும். இந்தத் திட்டுப்பகுதியில் ரத்தக் குழாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இத்திட்டு அடைகாத்தலில் ஆரம்பித்து, அச்செயல் முடிந்தவுடன் மறைகிறது.
புரோலாக்டின் அல்லது எஸ்டோராஜன் அல்லது இரண்டும் சேர்ந்து இத்திட்டில் இறகு உதிர்ப்புக்கும் ரத்தக் குழாய் அதிகரிப்புக்கும் காரணமாக இருக்கின்றன. இருப்பினும் சில பறவைகளில் இத்திட்டுகள் தோன்றாமலேயே அடைகாத்தல் நிகழ்கிறது. இத்திட்டுகள் இல்லாப் பறவைகள் முட்டைகளை ரத்தக்குழாய்கள் நிறைந்த பாகங்களுக்குக் கீழோ அல்லது கால்களின் மேற்பரப்பிலோ வைத்து அடைகாக்கின்றன.
முட்டையை இளஞ்சூட்டில் குறிப்பாக 37ல் இருந்து 38 டிகிரி செல்சியஸ் வரை வைப்பது இதில் முக்கியமான ஒன்றாகும். அதிக வெப்பம் அல்லது அதிகக் குளிர் முட்டைக்கும் இளம் உயிர்களுக்கும் ஆபத்தைத்தான் விளைவிக்கும். இந்தச் சரியான வெப்பத்தை முட்டைக்கோ இளம் உயிருக்கோ ஒரு பறவை தருவது இன்றியமையாததாய் இருக்கிறது. அதே சமயத்தில் வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் குளிர்ச்சியைத் தருவதும் முக்கியமானதாகும்.
அடைகாக்கும் காலம்
அடைகாக்கும் காலம் என்பது முட்டையில் கரு நன்றாய் வளர்ந்து, முழுமையடைந்து வெளியேறும்வரை உள்ள காலமாகும். சரியாகச் சொன்னால் கடைசி முட்டை இட்டதிலிருந்து முட்டைகள் பொரிக்கும் வரையிலுமான காலத்தை அடைகாக்கும் காலம் எனலாம்.
பெரும்பாலும் பறவைகளிடையே நிர்ணயிக்கப்பட்ட காலமாய் இருந்தாலும் இக்காலத்தில் நிலவும் தட்பவெப்பம் இதனைப் பாதிப்பதும் உண்டு. சில பறவைகளில் அடைகாக்கும் காலம் வெறும் 10 நாட்கள் என்ற குறைவான காலமும் வேறு சில பறவைகளில் 90 நாட்கள் என்ற மிகுதியான கால வேறுபாடும் காணப்படுகின்றன.
கரு வளர்ச்சி : கரு வளர்ச்சியும் முன்னேற்றமும்
பறவைகள் முட்டைகளை எத்தனை நாட்கள் அடைகாத்தாலும் கருவுறுதலிலிருந்து முட்டை உடைந்து உயிர் வெளியேறும்வரை பறவையின் கரு 42 நிலைகளில் வளர்ச்சியைப் பெறுகிறது.
முதல் 33 நிலைகளில் அனைத்துவகைப் பறவைகளின் முட்டைக் கருக்களில் அதிக வேறுபாடின்றி உறுப்பு வளர்ச்சி, திசுப்பாகுபாடு போன்றவை நடைபெறுகின்றன. இதற்குப்பின் வரும் நிலைகளில் சிற்றினங்களுக்குரிய சிறப்புப் பண்புகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. உதாரணமாக 39ஆம் நிலையானது மெகாபோட் போன்ற பறவையின் முட்டைக் கருவில் நீண்டும், பாடும் பறவைகளில் மிகக் குறைந்தும் காணப்படுகிறது.
பொரித்தல்
முட்டையை உடைத்துக்கொண்டு இளம் உயிரி வெளியே வருவது உண்மையில் உடல்சார் சவால் என்றே சொல்லவேண்டும். கருவின் கடைசிக்கட்ட வளர்ச்சியில் இளம் உயிரிக்கு முட்டையில் போதுமான இடம் இல்லாமல் போகிறது. இந்நிலையில் இளம் உயிர் தன்னுடைய தலையைத் தம் இறகுகளிடம் இருந்து வெளியே விடுவித்துக்கொண்டு முட்டையை உடைத்து வெளியே வருகிறது.
முதலில் சவ்வைக் கிழித்துப் பின் மெதுவாய் ஓட்டைக் கொத்தி ஒன்று அல்லது இரண்டு நாட்களில் முட்டையில் விரிசல்களைத் தோற்றுவிக்கிறது. கொத்துவதற்காக இளம் உயிரிகளின் கழுத்துப்பகுதியில் புதுவகை தசைகள் தோன்றி பின் மறைந்து விடுகின்றன.
அலகில் உள்ள பல் போன்ற அமைப்பும் கொத்துவதற்கு உதவுகிறது. இப்பல் போன்ற அமைப்பும் இளம் உயிரி முட்டையை விட்டு வெளியே வந்தவுடன் மறைந்து விடுகிறது. உடைக்கப்பட்ட முட்டையிலிருந்து குஞ்சு வெளிவர பெற்றோர்கள் உதவுவதும் உண்டு. பொதுவாக இளம் உயிர்கள் முட்டையில் சிறு துளையை மட்டுமே உருவாக்கிப் பின் தன் உடலின் அழுத்தத்தால் மீதிப்பகுதியை உடைக்கின்றன. ஆனால் நெருப்புக்கோழி இனத்தின் இளம் உயிரிகள் முட்டையை வெடிப்பது போல் தூள்தூளாக்கி வெளியே வருகின்றன.
இளம் உயிரிகள் வெளியே வந்தவுடன் பெற்றோர்கள் கூட்டைச் சுத்தமாக வைத்திருப்பதற்காகக் கூட்டைவிட்டு முட்டை ஓடுகளை வெளியேற்றவோ, அவற்றைத் தங்களுக்கும் இளம் உயிர்களுக்கும் உணவாக்கிக் கொள்ளவோ செய்கின்றன.
முட்டைகள் அனைத்தும் ஒரே நாளிலோ மாறுபட்ட நாட்களிலோ பொரிக்கப்படலாம். எவ்வாறாயினும் முதலில் பொரிக்கப்பட்ட குஞ்சு மற்ற இளம் உயிர்களைவிட முன்னுரிமை பெற்றதாகவே இருக்கிறது. முட்டைக்குள் இருக்கும்போதே சிறு சப்தங்கள் மூலம் குஞ்சுகள் தங்களுக்குள்ளாகவே தகவல் பரிமாற்றம் செய்கின்றன. முதலில் வெளிவரும் இளம் உயிரியின் சப்தத்தைக்கொண்டு மற்ற இளம் உயிர்கள் தங்களை முட்டையிலிருந்து விரைந்து வெளிக்கொண்டுவரும் முயற்சிகளை மேற்கொள்கின்றன.
வெளியே வந்த குஞ்சுகளால் சில நாட்களுக்கு வெளிப்புற வெப்பத்துடன் ஈடுகொடுக்க முடியாது. அதனால் பெற்றோரின் அரவணைப்பு மீண்டும் இன்றியமையாததாய் இருக்கிறது. இந்நேரத்தில் பெற்றோர்களின் பாடு சற்றுக் கடினம்தான். ஏனெனில் இளம் உயிரிக்குத் தேவையான வெப்பத்தைத் தந்தவுடன் அவற்றிற்கான உணவையும் உடனே தேடி அலைய வேண்டும். தாயின் வெப்ப அரவணைப்பினை உயிர்கள் சில நாட்களிலேயே தவிர்ப்பதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றன.
குஞ்சுகள் சில, முட்டையிலிருந்து வந்தவுடனேயே தாய்ப் பறவையின் உதவியின்றி தன்னிச்சையாய் இயங்கும் தன்மையைக் கொண்டுவிடுகின்றன. சில தாயின் உதவியைச் சில நாட்கள் பெற்றுக் கொண்டிருக்கும். இந்தத் திறனை வைத்து இளம் உயிர்களை 6 வகைகளாகப் பிரிக்கலாம்.
1) உச்ச தன்னிச்சைத் திறம் கொண்டவை
2) தன்னிச்சைத் திறம் கொண்டவை
3) தன்னிச்சைத்திறன் சற்றுக் குறைவானவை
4) பாதி தன்னிச்சைத் திறன் உடையவை
5) பாதி பெற்றோர் சார்புடையவை
6) முழுதும் பெற்றோர் சார்புடையவை
இந்த வகைப்பாட்டிலேயே பெயர்க்காரணம் இருப்பதால் அதிக விளக்கம் தேவையில்லை. பெற்றோர் சார்புடைய குஞ்சுகள் பிறக்கும்போது இறகுகள் முளைக்காமலும் கண்திறக்காமலும் நகர முடியாமலும் இருக்கின்றன. அதற்கு மாறாகத் தன்னிச்சையான இளம் உயிர்கள், பொரித்தவுடன் தன் பெற்றோர் உதவியைத் தவிர்க்கும் அளவிற்குக் கண் திறந்தும் நடமாடும் திறன் கொண்டதாகவும் இருக்கின்றன.
மேலும் இவை பெற்றோர் உதவியைத் தவிர்ப்பதாயும் இருக்கின்றன. இவ்வேறுபாட்டிற்கு முட்டையில் இருக்கும் கருவுணவு அளவே காரணமாகும். பெற்றோர் சார்புடைய இளம் உயிர்கள் இருக்கும் முட்டைகளில் 15% முதல் 27% கருஉணவு மட்டுமே இருக்கும். தன்னிச்சையாய்ச் செயல்படும் இளம் உயிர்கள் இருக்கும் முட்டைகளில் 30% முதல் 40% வரை கரு உணவு இருப்பதைக் காணலாம்.
உண்மையில் பறவைகளைத் தன்னிச்சையாகச் செயல்படுவதிலிருந்து பெற்றோர் சார்புடைய தன்மைக்குப் பரிணமித்தாகக் கூறமுடியாது. இரண்டும் தனித்தனியே பரிணமித்திருக்க வாய்ப்புகள் அதிகம். பெற்றோர் சார்புடைய இளம் உயிரிகள் இருப்பது பரிணாமத்தின் வியப்பு என்றே கூறலாம். ஏனெனில் அவை உணவூட்டம், பேணல், உணவு தேடும் திறன் ஆகியவற்றைப் பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றன. அதனால் இச்சார்புப் பறவைகளுக்கு மூளையின் எடை சற்று அதிகமாக இருப்பதைக் காணமுடிகிறது.
வெப்பக் கட்டுப்பாடு
இளம் உயிர்கள் இறப்பதற்கு அதீத வெப்பம், நீரிழப்பு, வெப்பக் கட்டுப்பாடின்மை போன்றவை முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. இளம் உயிர்கள் வளரும்போது அவற்றின் வளர்ந்துவருகின்ற இறகுகளும் எலும்புத் தசையும் மேற்சொன்ன பாதிப்பிலிருந்து இளம் உயிர்களைக் காப்பாற்ற உதவுகின்றன.
சக்தியும் உணவூட்டமும்
இளம் உயிர்களுக்கு அதிக அளவில் புரதம் தேவைப்படுவதால் அவற்றின் பெரும்பாலான பெற்றோர்கள் புரதம் அதிகம் கொண்ட சிறிய மெல்லிய பூச்சிகளை உணவாய்த் தருகின்றன. அதன் பின்னர் பூச்சிகளுடன் பழங்கள், விதைகள் முதலியவற்றைப் பெற்றோர் பறவைகள் இளம் உயிர்களுக்குக் கொடுக்கின்றன. புறாக்கள், பிளமிங்கோ மற்றும் பென்குயின் பறவைகள் தம் குஞ்சுகளுக்குக் கொடுக்கும் பாலில் புரதமும் கொழுப்பும் நிறைந்துள்ளன.
வளர்ச்சி நிலை
பறவையின் வளர்ச்சி நிலை மெதுவாய் ஆரம்பித்து, படிப்படியே வேகம் அடைந்து, எடை கூடி முதிர்ந்த நிலையில் எடை குறைந்து வளர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது. இந்த வளர்ச்சி நிலையை ‘S’ வடிவத்துடன் ஒப்பிடலாம்.
இளம் உயிர்களிடையே பகைமை
சில பறவைகளின் குஞ்சுகளுக்கிடையே பகைமை உணர்வு இருப்பது வெளிப்படையாகத் தெரியக்கூடியது. குறிப்பாகக் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு பொரித்த குஞ்சுகளிடையே பகைமை உருவாகிறது.
ஏனெனில் அங்கே வெவ்வேறு வளர்ச்சி நிலையில் குஞ்சுகள் இருப்பதால் முதலில் பொரித்த முதிர்ந்த குஞ்சு, பிறகு பிறந்த அதைவிடச் சிறிய குஞ்சுகளை எளிதில் ஏமாற்றுவதுடன் தரப்படும் உணவுகளைப் பறித்துக்கொள்வதும் உண்டு. இந்நிலையில் சகோதர கொலை நிகழ்வதும் உண்டு. மூத்த இளம் உயிர் தம் வாழ்விற்காக இளைய இளம் உயிரியைக் கொல்வதும் உண்டு. குறிப்பாக இது கழுகு இனங்களில் காணப்படும் நிகழ்வாக உள்ளது.
இளம் உயிரிகளுக்கு உணவூட்டம்
ஓர் இளம் உயிர்க்குத் தாய்ப்பறவை உணவு ஊட்டிவிடவேண்டும். இவ்வாறு செய்யவேண்டுமெனில் தாய் சேய்க்கிடையே ஒலிகளாலும், செய்கைகளாலும், தொடுதலாலும் தொடர்பிருக்க வேண்டும். உதாரணமாக உணவுத் தேவைக்கான ஒரு செய்கையை ஒரு சேய் செய்ய, அதன் மூலம் தாய்த் தூண்டப்பட்டுக் குஞ்சுக்கு உணவளிக்கிறது.
சேய்களின் வாய் திறந்து மூடும் அசைவுகள்தான் தாய்ப் பறவையைத் தூண்டுகின்றன. இதற்காகவே இளம் உயிர்கள் வாய்ப் பகுதியில் மிக வெளிச்சமான நிறங்களைக் கொண்டிருக்கும் (உதாரணத்துக்கு, மஞ்சள்) சேயின் வாய்க்குள் தன் அலகை நுழைத்துத் தாய்ப்பறவை உணவைத் தரும்.
உணவு தரும் முறை பறவைகளுக்கிடையே வேறுபட்டுக் காணப்படுகிறது. சில பறவைகள் தங்கள் குஞ்சுகளுக்கு 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறையே உணவூட்டுகின்றன. சில பறவைகள் ஒரு நாளில் மூன்று முறையும், இன்னும் சில பறவைகள் ஒரு நிமிடத்திற்கு ஒரு முறையும் தங்கள் குஞ்சுகளுக்கு உணவூட்டும் பழக்கத்தைக் கொண்டுள்ளன.
கூடு சுத்தம்
பறவைகள் பெரும்பாலும் தங்கள் கூடுகளில் தம் கழிவுகளை வெளியேற்றுவதில்லை. ஹார்ன்பில் போன்ற பறவைகள் கழிவுகளை வெளியேற்ற கூடுகளில் ஒரு துளையை ஏற்படுத்தி வைத்துக்கொள்கின்றன. மாறாக சில பறவைகள் கூட்டை மிக அசுத்தமாய் வைத்திருப்பதையும் பார்க்கலாம். சில பறவைகள் அசுத்தங்களை வெறியேற்ற சிறு பூச்சிகளைக் கூடுகளில் பிடித்து வைத்துக்கொள்கின்றன.
கூட்டிலிருந்து வெளியேற்றம்
இறகில்லாமல் பிறந்தாலும், இறகுடன் பிறந்தாலும் பிறந்த கூட்டை விட்டு வெளியேறுதல் என்பது பறவைகளின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைகிறது. இவை கூட்டைவிட்டுக் குறுகியகால இடைவெளியில் வெளியேறும் பறவைகளாகவும் (கோழி மற்றும் மெகபோட் பறவைகளைக் குறிப்பிடலாம்) கூட்டில் நீண்டகாலம் தங்கி வெளியேறும் பறவைகளாகவும் உள்ளன.
கூட்டைவிட்டு வெளியேறும் காலம்தான் அப்பறவைகள் அவற்றின் இரைக் கொல்லிகளிடம் எளிதில் இரையாகும் காலமாகவும், மோசமான காலநிலைக்குப் பலியாகும் காலமாகவும் இருக்கிறது. இந்த இரண்டு ஆபத்துக்களையும் தாண்டிவிட்டால் அவற்றின் வாழ்க்கை உறுதிப்பட்டு விட்டது என்று கூறிவிடலாம்.
குஞ்சுகள் கூட்டைவிட்டு வெளியறும் திறன் பெற்றவுடன் அவை இரையுள்ள இடங்களுக்குப் பெற்றோருடன் செல்லத் தொடங்குகின்றன. இச்செயல் ஒரு போர் வீரனுக்குரிய துணிச்சலுடன் ஒப்பிடத்தக்கது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில் குஞ்சுகள் இருக்கும் தாய்ப்பறவையின் கூடானது உயரத்தில் இருக்கும் மரத்தின் துவாரத்திலோ அல்லது மலை முகட்டிலோ அமையப் பெற்றிருப்பின், கூட்டிலிருந்து கீழே குதித்துப் பெற்றோருடன் இரைதேடச் செல்கின்றன. கூட்டைவிட்டு உடனடியாக வெளியே செல்லும் பறவைகளும் இத்தகைய துணிச்சலுடன் விளங்குகின்றன.
இந்த முதல் பறத்தலுக்குச் சற்று முன்பாகக் குஞ்சுகள் தங்கள் இறக்கைகளை நன்றாக மேலும் கீழும் அடித்துக்கொண்டும் மேலும் கீழும் குதித்தும் தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றன.
கற்றுக்கொள்ளுதல்
கூட்டைவிட்டு வெளியேறியவுடன் ஒரு குறிப்பிட்ட சிறிய கால இடைவெளியில் இளம் பறவைகள் வாழ்வின் பெரும்பாலான நடவடிக்கைகளைக் கற்றுக்கொள்கின்றன. உதாரணமாக உணவுதேடும் திறன், எதிரிகளைத் தவிர்த்தல், தன்னைப்போன்ற பறவைகளிடம் போட்டியிட்டு வென்று தன் நிலையை உறுதிப்படுத்தும் திறன் போன்றவற்றைக் கூறலாம்.
பெற்றோருடன் சிறிது காலம் தங்கியிருக்கும் இளம் பறவைகள் இக்காலகட்டத்தில் இவற்றை ஓரளவிற்குப் பெற்றோர்களிடமிருந்து கற்றுக்கொள்கின்றன.
பாடும் பறவைகளின் குஞ்சுகள் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தங்கள் பெற்றோர்களிடம் தங்கியிருக்கும். நீண்டதூரம் இடம்பெயரும் அன்னம், பிவிக் சவான் (Bewick’s swan) எனும் பறவையினக் குஞ்சுகள் ஒன்று அல்லது இரண்டு வருடம் வரை தங்கள் பெற்றோரிடம் தங்கிக்கொள்ளும். தாயைவிட்டு உடனடியாகப் பிரியும் இளம் பறவைகளின் சில பண்புகள் மரபு சார்ந்தவையாகவும் சில தானாகக் கற்றுக்கொள்வதாகவும் இருக்கின்றன.
(தொடரும்)