Skip to content
Home » காக்கைச் சிறகினிலே #21 – பறவை நோக்குதல்

காக்கைச் சிறகினிலே #21 – பறவை நோக்குதல்

பறவை நோக்குதல்

பறவை நோக்குதல் அண்மையில் தோன்றிய ஒரு பழக்கம் அல்ல. மனிதன் உணவு தேடல், வேட்டையாடுதல், தற்காப்பு, இனப்பெருக்கம் போன்றவற்றில் இருந்து மற்ற நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்கிய காலக்கட்டங்களில்தான் பொழுதுபோக்கு நடத்தைகளில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என்று ஒரு கருத்து உண்டு.

மேற்சொன்ன அனைத்து நிகழ்வுகளுக்குமான சாதகமான ஒரு சூழ்நிலை தன்னைச் சுற்றி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திய பிறகுதான் மனிதன் இச்செயலில் ஈடுபட்டிருக்கமுடியும். அப்படியொரு சாதகமான சூழ்நிலையில்தான் தன்னைச் சுற்றியுள்ள தாவர, விலங்குகளைப் பற்றிய அறிவைப் பெற ஆரம்பித்தான். அதுதான் பறவை நோக்குதலின் துவக்கம் என்று கூறலாம்.

முதன்முதலாக உணவுக்கான ஒரு பொருளாகப் பறவையைப் பார்க்காமல் அழகுக்காகப் பறவையை மனிதன் பார்க்கத் தொடங்கினான். நாகரிகம் வளர வளர மனிதன் தான் பார்த்தவற்றை எதிர்காலச் சந்ததியினருக்காகப் பதிவு செய்ய ஆரம்பித்தான்.

வழக்கம் போல அரிஸ்டாட்டிலே இதிலும் முன்னணியில் உள்ளார். தன்னைச் சுற்றியுள்ள சில பறவைகள் ஒரு சில காரணங்களுக்காக இடம்பெயர்வதை இவர் பதிவு செய்துள்ளார். இதுவே பறவை நோக்குதலின் மூலம் பதிவு செய்யப்பட்ட முதல் பறவையியல் அறிவியல் தகவலாகும்.

இந்தப் பறவை நோக்குதல் மூலம் சாதாரணமானவன்கூட பறவையியலுக்குப் பெரிய பங்காற்றிட முடியும். இன்று பறவையியலில் முக்கியப் பங்காற்றிய பலர் சாதாரணமானவர்களாகவே பறவை நோக்குதலைத் தொடங்கியதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். இதன் மதிப்பு அறிந்தே பறவை நோக்குதல் பல்வேறு வழிமுறைகளுடன் அறிவியல் சார் பொழுதுபோக்கில் முதன்மையாக இருக்கிறது.

இப்பழக்கமும் பிறவற்றைப்போல ஐரோப்பியர்களால் மிக எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று உச்சநிலை பெற்றுள்ளது. பறவை இனங்களை அதிகம் கொண்ட ஆசியநாடுகளில் இப்பழக்கம் ஆரம்ப நிலையில்தான் உள்ளது என்பது சிறிது வருத்தமளிக்கின்றது.

இன்று இந்தியாவில் மிகச்சிலரால் மேற்கொள்ளப்படும் இப்பழக்கமானது ஆங்கிலேயர்களின் வழியிலானது என்று கூறலாம். இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில் இப்பழக்கம் நன்கு வளர்ச்சி அடைய மும்பை இயற்கை வரலாற்றுக் கழகம் பெரும் பங்காற்றியிருக்கிறது. எந்தவொரு பழக்கத்தையும் கலாசார, பொருளாதார, மதரீதியில் அணுகும் நாம் மேற்சொன்ன எந்தக் காரணியுடனும் தொடர்பற்ற இப்பழக்கத்தைக் காலந்தாழ்த்தித்தான் ஏற்றுக்கொள்வோம் என்பதற்கு இது ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இன்று அரசு மற்றும் பல அரசுசாரா அமைப்புகள் பறவை நோக்குதலை மக்களிடம் கொண்டு செல்ல ஆரம்பித்திருக்கின்றன. இருப்பினும் ஊருக்கு ஒரு நூலகம், கல்விக்கூடம் தேவையாக இருப்பது போன்று பறவை நோக்குதலை ஒரு பழக்கமாகக்கொண்ட ஒரு குழு இருக்க வேண்டியது எதிர்காலத்திற்கான தேவையாகும்.

பறவை நோக்குதலை எப்படித் துவங்குவது? இதற்குத் தேவையான நுண்ணறிவை நாம் எல்லோரும் பெற்றிருக்கிறோம் என்பது உண்மையாகும். காகத்தையும் சிட்டுக்குருவியையும் எப்போது நாம் சரியாக மற்ற பறவைகளிடத்தில் இருந்து வேறுபடுத்தி அறிய ஆரம்பிக்கிறோமோ அப்போதே பறவை நோக்குதலைப் பற்றிய நுண்ணறிவு நம்மிடம் தோன்றிவிட்டது என்பது பொருளாகும்.

முதலில் பறவை இனங்களில் பரவியிருக்கும் அழகை ரசிப்பதில் இருந்து இப்பழக்கத்தைத் தொடரலாம். நம் வீட்டுக்கருகில் வரும் காக்கையிடமிருந்தே இதைத் தொடங்கலாம். முந்தைய வழிமுறைகளில் அல்லாது சில கருவிகளை இதற்குப் பயன்படுத்தமுடியும்.

ஒரு ஜோடி பைனாக்குலர், ஒரு டெலஸ்கோப் (பறவையியலுக்கு உதவுவது), சிறுகையேடு, நம் இடம் சார்ந்த பறவைகள் குறித்த கையேடு போன்றவை போதுமானவை. வெறும் கண்களால் பார்த்த அதே காகத்தை பைனாக்குலரில் பார்க்க ஆரம்பிக்கலாம். இதுவரை தெரியாத பல ரகசியங்கள் இந்தக் கருங்காகத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும். காகத்தின் இறகுகள் நன்கு புலப்படும். கால் நகங்களின் கூர்மை தெரியும்.

காகம் எப்படி அமர்கிறது? எப்படி உண்கிறது? போன்றவற்றைச் சில மணித்துளிகள் பைனாக்குலரின் மூலமே பார்க்கவேண்டும். கண்ணிலிருந்து பைனாக்குலரை எடுக்காது அதன் மூலமாகவே நகரும் காகத்தைத் தொடரவேண்டும். ஆரம்ப நிலையில் இந்த ஒருங்கிணைப்பில் சிரமம் இருப்பினும் காலப்போக்கில் எளிதாகிவிடும்.

இதே போன்று வேறு ஒரு பறவையை மறுநாள் பார்க்க தொடங்குங்கள். இப்போது முன்பு பார்த்த காகமும் இப்பறவையும் எப்படி வேறுபடுகின்றன என்பதை மெதுவாக ஆராயத் தொடங்குங்கள். உருவ அமைப்பில், நிறத்தில், நடத்தையில் என அது வேறுபடுவதைக் கண்களால் அறியுங்கள்.

காகத்தையும் வேறு பறவையையும் ஒரு சில நாட்கள் இதே போன்று ஆராயத் தொடங்குங்கள். அந்த இரண்டு பறவைகளிடமும் காணப்படும் வேறுபாடுகள் மனதில் நன்கு இப்போது பதிய ஆரம்பித்திருக்கும். அதனை அவ்வப்பொழுது உங்கள் குறிப்பேட்டில் எழுதுங்கள்.

உங்களால் இயன்ற முறையில் இரண்டு பறவைகளையும் படமாக வரைந்து நிறம், அளவு, நடத்தையில் ஏற்படும் வேறுபாடு ஆகியவற்றைக் கையேட்டில் குறிக்கவும். இப்பொழுது நம்மிடமுள்ள பறவைக் கையேட்டை எடுத்து அந்த இரண்டு பறவைகளைப் பற்றியும் என்ன கூறப்பட்டுள்ளன என்பதனைப் படியுங்கள். நீங்களும் சில சிறப்புத் தகவல்களைக் கவனமாகக் குறித்து வைத்திருப்பதைப் பார்ப்பீர்கள். இதுவே உங்கள் சிறப்பான துவக்கம்.

மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைச் செய்தவுடன் தற்போது பறவைக் கையேட்டில் காணப்படும் பறவையின் வெவ்வேறு மாறுபட்ட பாகங்களின் பெயர்கள் மற்றும் அப்பாகங்கள் பறவைகள் பறக்கும் போதும், அமர்ந்திருக்கும் போதும் எந்நிலையில் உள்ளன போன்ற தகவல்களையும் படித்து மனதிலிருத்திக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் ஒரு சில நாட்கள் செய்தவுடன் நாம் இப்பொழுது வீட்டை விட்டு வெளியே செல்லலாம்.

பறவைகளை எங்கிருந்து நோக்கலாம் என்றால் எங்கிருந்தும் என்பதே விடை. பலவிதமான பறவை இனங்களைக் காணவேண்டும் என்றால் என்றால் பறவைகள் அதிகம் வரும் சில சிறப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும். நம் தோட்டத்தில் மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தால் குறைவான எண்ணிக்கையிலான பறவைகளையே காணமுடியும். இன்றைய காலக்கட்டத்தில் நம்மைத் தேடிவரும் பறவை இனங்கள் குறைவுதான். ஆகவே சிறிது சிறிதாக நாம் இடத்தை விரிவுபடுத்துதல் நல்லது.

நோக்கும் இடம் அல்லது களத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். நீர்சார் பகுதிகளான ஏரி, குளம், சதுப்பு நிலம் நிறைந்த வயல்வெளி, ஆற்றோரம், கடலோரம் போன்றவை ஒரு விதம். நிலம்சார் பகுதிகளாகப் பாலைவனம் தொடங்கி அடர்ந்த பசுமை மாறாக் காடுவரை குறிப்பிடலாம்.

ஒவ்வொரு களமும் பறவை நோக்குதலுக்கு வேவ்வேறு விதமான ஆய்வுக்கும், பயிற்சிக்கும், பழக்கத்திற்கும் நம்மை உட்படுத்தும். ஒவ்வொரு களமும் பறவைகள் பற்றிய அறிவை மட்டும் தராமல் அக்களம் சார் ஆபத்துகள், அவற்றைத் தவிர்க்கும் முறை, அக்களம் சார் தாவர விலங்குகளைப் பற்றிய அறிவு போன்றவற்றையும் பறவை நோக்காளருக்கு அளிக்கும். இவற்றையெல்லாம் அறிந்துகொள்ள தனியே சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியிருக்காது. கூர்மையான பார்வை போதும்.

எந்தவொரு புதுக்களத்திற்கும் செல்லும்முன் அக்கள அறிவு பெற்றவருடன் முதல் பயணம் மேற்கொள்வது நல்லது. காடு போன்ற இடங்களில் பறவை நோக்கலை மேற்கொள்ளும் போது அக்களம்சார் பாம்பு, கரடி, யானை போன்றவற்றால் ஏற்படும் திடீர் ஆபத்துகளை எதிர்கொள்ளும் அறிவைப் பெற்றிருத்தல் அவசியம். எந்தவித பயமும் இன்றி பறவை நோக்கலைச் செய்ய பறவைகள் சரணாலயம் மிகச்சிறப்பான இடமாகும்.

பறவை நோக்கலைப் பெரும்பாலும் சூரியன் உதிப்பதற்கு முன்னால் ஆரம்பிப்பது நல்லது. அந்நேரம் தொடங்கி நடுப்பகல் வரையான காலத்தில் பறவைகள் மிகவும் சுறுசுறுப்பாய் இருப்பதால் பறவைகளைப் பார்ப்பதற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

பறவை நோக்குதல் கண்ணிற்கு மட்டும் வேலை கொடுக்கும் பழக்கம் என்று நினைத்தால் அது தவறு. கவனம் கொடுத்துக் கேட்பதும் முக்கியப் பங்கு வகிக்கிறது. வெவ்வேறு குரலெழுப்பும் திறனும் மறைந்து வாழும் பழக்கமும் கொண்ட சில பறவைகளை அவற்றின் குரலைக் கொண்டுதான் இருப்பிடத்தைக் கண்டறிந்து பார்க்க இயலும். இது, பறவை நோக்காளர்களைப் பறவைகளின் குரல்களை வைத்தே இனமறியும் திறனுடையவர்களாய் மாற்றுகின்றது. மேலும் இவ்வறிவு பறவைக் கணக்கெடுப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

எந்த இடத்தில் பறவை நோக்குதலை மேற்கொண்டாலும் அவ்விடத்தின் நிலவியல் தகவலைத் துணைக்கோள் உதவியுடன் குறித்துக்கொள்ள வேண்டும். இதற்கு முன்பு நிலம்சார் வரைபடத்தை நம்பிய நாம் இன்று ஜிபிஎஸ் (Global Positioning System) கருவியின் மூலமாகவோ ஸ்மார்ட் போனின் உதவியுடனோ இதைப் பதிவு செய்கிறோம்.

பறவை நோக்குதலை மேற்கொள்ளும்போது வலசை போகும் பறவைகளைக் கண்காணிக்க காலில் மாட்டியுள்ள வளையங்களைக்கூட சில நேரங்களில் காணக்கூடும். இதுவும் அக்கணிப்பை மேற்கொள்பவர்களுக்கு உதவும். (வலசை போகும் பறவைகளைத் துணைக்கோள் மூலம் கண்காணிப்பது இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றம்).

இன்று பறவை நோக்குதலை மேலும் எளிதாக்க ஸ்மார்ட் போன்களில் சில சிறப்புச் செயலிகள் உள்ளன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து பறவைகளின் புகைப்படங்கள் மற்றும் குரல் போன்றவற்றை எளிதில் ஒப்பீடு செய்து ஓர் இடத்திற்குத் தேவையான பறவைப் பட்டியலை எளிதில் தயார் செய்துகொள்ளலாம்.

ஒரு புது இடத்திற்குரிய பறவைப் பட்டியலைத் தயாரிக்க எந்த இடத்தில் பறவை நோக்கலை மேற்கொள்கிறோமோ அவ்விடத்தின் கால வரலாற்றைத் தெரிந்து கொள்வதும் அவசியம். அவ்விடத்தில் பறவைகளுக்குச் சாதகமாக உள்ள தகவல்களையும் பறவைகள் வாழ்வியலைப் பாதிக்கும் அம்சங்களையும் குறித்துக் கொள்ள வேண்டும். இத்தகவல்கள் பிற்காலங்களில் பறவையினங்களின் எண்ணிக்கைக் கூடுவதற்கும் குறைவதற்கும் உரிய காரணங்களாகப் பெரும்பாலும் அமையும்.

பறவை நோக்குதல் என்பது ஒரு தொடர் பழக்கம். வார்பலர் போன்ற பறவையினங்களை அவசரத்தில் தவறாக இனங்கண்டறிவதைத் தவிர்க்க நீடித்த வழக்கம் உதவுகிறது. உண்மையில் தூரத்தில் உள்ள பறவையைக்கூட எளிதில் இனம் காணலாம். அதுவே கையில் இப்பறவை கிடைத்தால் உண்மையில் அதை இனம் காண்பது அவ்வளவு எளிதல்ல என்று வலசைப் போதலைப் படிக்கும் ஆய்வாளர்கள் கூறுவார்கள்.

நமக்கு இங்கு அந்த வேலை இல்லாததால் பறவைக் கையேட்டில் எங்கு நோக்க வேண்டும் என்ற குறிப்பைப் படித்துணர்ந்து, அந்தக் குறிப்பைப் பறவைகளின் வெளித்தோற்றத்தில் கண்டு வேறுபாட்டை அறியவேண்டும். இதன் மூலம் பறவை இனங்களை எளிதில் வேறுபடுத்த முடியும்.

எந்தவொரு பழக்கம் போல் பறவை நோக்குதலும் பழகப் பழகவே மேம்படும். எனவே நம்பிக்கையோடு பறவை நோக்குதலைத் தொடங்குங்கள். நீங்களும் ஒரு சலிம் அலியாகலாம்.

(முற்றும்)

பகிர:
வ. கோகுலா

வ. கோகுலா

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.comView Author posts

1 thought on “காக்கைச் சிறகினிலே #21 – பறவை நோக்குதல்”

  1. நன்றி சொல்ல முடியாது .உங்களுடைய பதிவுக்கு. அறிவு சார்ந்த பதிவுகளை பதிவிடலில் தாங்களே வியக்கத்தக்க மனிதர். நாங்கள் தங்களிடம் பயின்ற காலத்திலும் சரி.இன்றும் சரி.உங்களிடம் பெருமிதமும் கோடான கோடி நன்றிகள் உங்களின் பாதம் வைத்து.வாழ்த்துக்களுடன் உங்கள் மாணவன் .

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *