பரிணாம வளர்ச்சியின் வரலாற்றில் பறவை ஒரு மரபுக்கவிதை எனில் அதன் இறகு புதுக் கவிதை. அவ்வளவு கவித்துவம் கொண்டுள்ளன இறகுகள். பறவையின் உடல் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றன. பறப்பதற்கு உதவுகின்றன. இனப்பெருக்கக் காலங்களில் தங்கள் துணையை தேர்ந்தெடுப்பதற்கு ஒரு கருவியாகவும், எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாகவும் இறகுகள் பயன்படுகின்றன.
இறகுகளின் அமைப்பு
பறவைகளின் இறகுகள் கெரட்டின் என்னும் புரத அணியால் ஆனவை. கெரட்டின் நீண்ட நாள் தாங்கும் திறன் கொண்டது. மேலும் புரதத்தைச் செரிக்கும் நொதிகளைக் கொண்ட நுண்ணுயிரிகளின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கும் வல்லமையையும் கெரட்டின் பெற்றிருக்கிறது.
பாலுட்டிகளின் நகம், முடி போன்றவற்றில் காணப்படும் கெரட்டின் பறவைகளின் இறகுகளிலும் கால்களிலும், கால்களில் உள்ள செதில்களிலும் காணப்படுகிறது. பறவைகளின் உடல் செயலியலுக்குப் பலவகையிலும் உதவுகின்ற கெரட்டினை அறிவியலாளர்கள் ஓர் அற்புதமாகவே கருதுகின்றனர்.
பறவையின் ஓர் இறகை எடுத்துப் பார்த்தால் நடுவில் ஒரு மைய இழை தெரியும். அதன் இரு பக்கங்களிலும் குறு இழைகள் காணப்படும். மைய இழை ஷாஃப்ட் (shaft) என்றும் அதன் இருபுறமும் உள்ள இழை அடர்ந்த பகுதிகள் வான் (vane) என்றும் அழைக்கப்படுகின்றன. மைய இழையின் கீழ்ப்பகுதி குறு இழைகளின்றி வெற்றிடம் கொண்ட குழாய் போன்று காணப்படும். அதனைக் கலாமஸ் (calamus) என்று அழைப்பர். மைய இழையிலிருந்து பக்கவாட்டில் பிரியும் குற்றிழை பார்ப்ஸ் (barbs) என்று அழைக்கப்படுகிறது. இதன் மேலும் கீழும் நோக்கியவாறு குறுங்குற்றிழைகள் அமைந்துள்ளன. இந்தக் குறுங்குற்றிழைகள் பார்பியூல் (barbule) என அழைக்கப்படுகிறது. இந்த இழைகள் தங்களிடமுள்ள கொக்கி போன்ற அமைப்பால் (barbicel) பின்னிப் பிணைந்து காணப்படும். இப்படி பார்ப்ஸ் மற்றும் பார்பியூல் ஆகியன சேர்ந்து இலகுவான ஒரு வலைப்பின்னல் போன்ற அமைப்பாக இறகுகளில் அமைந்துள்ளன.
பறவைக்குப் பறவை இறகுகள் மாறுபடுகின்றன. சில பறவைகளில் இறகுகள் சிறுசிறு அமைப்புகளாக இணைந்து அழகான வேறு சில அமைப்புகளைத் தோற்றுவிக்கின்றன.
பறவைகளின் வெப்பத்தை உடல் இறகுகளே காக்கின்றன. இறகுகளை உடற்சிறகுகள் (contour feathers) என்றும் பறக்க உதவும் சிறகுகள் (flight feathers) என்றும் இரண்டு வகைப்படுத்தலாம்.
பார்வைக்கு எளிதில் தெரிபவை உடற் சிறகுகள்தான். பறவையின் உடல் முழுக்கச் சிறிதாக இவை பரவிக் காணப்படுகின்றன.
பறப்பதற்கு உதவும் இறகுகள், வால் ஆகியன இறக்கைகளில் காணப்படும். பறக்க உதவும் இறகுகள் ஒன்றன் மீது ஒன்றாகப் படர்ந்து காற்றின் அழுத்தம் மற்றும் உராய்வைக் குறைக்க உதவுகின்றன. அதே போன்று நீரினால் ஏற்படும் உராய்வைக் குறைக்கவும் இந்த இறகுகள் உதவுகின்றன.
பறவைகளின் வயது முதிரும்போது இறகுகள் முழுவதுமாகச் சிதைகின்றன. இதனால் இறகுகளின் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது. சிறகுகள் உதிர்வதாலும் வேறு சில காரணங்களாலும் பறவைகளின் பல செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன.
இறக்கைகளில் உள்ள இறகுகள் பெருமளவில் பறவைகள் பறப்பதற்கு உதவும் வகையில் அமைந்துள்ளனவே தவிர அவை பறவைகளின் உடல் வெப்பத்தைப் பெரும்பாலும் காப்பதில்லை.
இறக்கையில் முதல் நிலை இறகுகள், இரண்டாம் நிலை இறகுகள் மற்றும் மூன்றாம் நிலை இறகுகள் என மூன்று வகை இறகுகள் உள்ளன. பொதுவாக இறக்கையில் 10 முதன் நிலை இறகுகள் காணப்படுகின்றன. இருப்பினும் ஒரு சில பறவைகளில் இதன் எண்ணிக்கை மிகுதியாக உள்ளது. இந்த முதன்நிலை இறகுகள் குறைந்தபட்சம் நான்கிலிருந்து அதிகளவாகப் பதினாறு வரை உயர்ந்து காணப்படுகின்றன. எடுத்துக்காட்டுக்கு கிவியிடம் 4, வான்கோழியிடம் 14 முதல் நிலை இறகுகள் காணப்படுகின்றன.
முதல் நிலை இறகுகளில் பெரிய கொக்கிகளைப் (பார்பிசெல்களை) பார்பியூல்கள் கொண்டிருக்கின்றன. இந்தப் பெரிய கொக்கிகள் பறவைகள் பறக்கும்போது அதன் முதல் நிலை இறகுகள் தனித்தனியே பிரிந்து போகாமல் இணைந்திருக்க உதவுகின்றன.
ஆந்தைகளிடம் பார்ப்கள் சற்றுச் சிறப்பாக நீண்டு வளைந்து அமைந்துள்ளதால் அவை சத்தமின்றிப் பறக்கின்றன. முதல் நிலை இறகுகளின் அமைப்புக்கும் பறக்கும் திறனுக்கும் நேரடியாகத் தொடர்பிருப்பதால் பறவைகளிடையே முதல் நிலை இறகுகளின் அமைப்பில் பெரிய அளவில் வேறுபாடுகள் இருப்பதில்லை.
இருப்பினும் சில பறவைகள் இனக்கவர்ச்சிக்காக முதல் நிலை இறகுகளில் சில மாற்றங்களைக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இந்த மாற்றங்களை உடைய இறகுகள் பருவ காலம் முடிந்தவுடன் பெரும்பாலும் கொட்டிவிடுகின்றன. அல்லது பறவையே அவற்றைக் கொத்தியோ கடித்தோ வெளியேற்றிவிடுகிறது.
இரண்டாம் நிலை இறகுகள், முன்கை எலும்பில் ஒன்றான அல்னா (Ulna) என்பதுடன் இணைந்திருக்கும். சுமாராக ஆறிலிருந்து இவற்றின் எண்ணிக்கை 40 வரை (16 ஹம்பிங் பறவை, 40 ஆல்பட்ராஸ்) இருக்கின்றன. இச்சிறகுகளும் பறவைகளின் பருவகால இனக்கவர்ச்சிக்காகச் சில மாறுதல்களைக் கொண்டுள்ளன. மாண்ட்ரின் எனும் வாத்து வகையில் பெரிய கொடி போன்ற அமைப்பாக இதனைக் காணலாம்.
வால் பகுதியில் காணப்படும் இறகுகளை ரெக்டிரிசஸ் (ரெக்டிரிக்ஸ்-ஒருமை ‘Rectrix’) என அழைக்கின்றோம். பொதுவாக இவற்றின் எண்ணிக்கை 12 வரை இருப்பினும் ஸ்னைப் போன்ற பறவைகளில் 24ஐ தொடுகிறது. இவை பறவைகள் பறக்கும்போது திசையை மாற்றவும் வேகத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இந்த அமைப்பு சில பறவைகளில் மாறுபட்டுக் காணப்படுவது இனக்கவர்ச்சிக்காகவே ஆகும். சான்றாக, மயிலின் தோகையைக் கூறலாம். இத்தோகை மயிலின் இனக்கவர்ச்சிக்குப் பெரிய அளவில் பயன்பட்டாலும் பறப்பதற்கு அது சுமையாகத்தான் இருக்கிறது.
உடல் இறகுகள் பெரும்பாலும் மைய இழையைக் (Rachis) கொண்டிராமல் மென்மையாகக் காணப்படும். இதில் குற்றிழைகள் மற்றும் குறுங்குற்றிழைகள் மட்டும் மைய இழையிலிருந்தே நேரடியாf வளர்ந்திருக்கும். உடல் இறகுகள் எடையைக் குறைக்கவும் வெப்பத்திலிருந்து பறவைகளைக் காக்கவும் செய்கின்றன.
மேற்சொன்ன வால் இறகுகள் மற்றும் உடல் இறகுகள் ஆகியவற்றிற்கு இடையில் செமிபுலூம்ஸ் (Semiplumes) எனப்படும் வேறு வகை உடலிறகுகள் காணப்படுகின்றன. இந்தச் செமிபுலூம்ஸ் வெப்பத்திலிருந்து பறவைகளைப் பாதுகாப்பதோடு இனக்கவர்ச்சிக்கும் பயன்படுகிறது.
பைலோபுலூம்ஸ் (Filoplumes) எனும் அடுத்த வகை இறகு பறக்க உதவும் இறகுகளின் அசைவுகளையும் அமைப்புகளையும் கண்காணிப்பதற்காக அமைந்துள்ளது. ஒரு நீண்ட மைய இழையாக இருக்கும் இவ்விறகின் நுனியில் மட்டும் ஒன்றிலிருந்து ஆறு வரையிலான குற்றிழைகள் காணப்படும். இதன் நுனியில் ஏற்படும் சிறு மாற்றமும் மைய இழையின் வழியாக அதன் அடியில் உள்ள உணர்செல்லுக்குக் கடத்தப்படுகிறது. அங்கிருந்து இறகுகளின் அமைப்பினை மாற்றும் சமிக்ஞை தசைகளுக்கு அளிக்கப்படுகிறது.
இறுதியாக, தூரிகை போன்று காணப்படும் சில இறகுகள் பாதுகாப்புத் தருவதாகவும் உணர் உறுப்பாகவும் செயல்படுகின்றன. இதன் நுனியில் உள்ள உணர்செல்கள் உணர்வுகளைக் கடத்த உதவுகின்றன.
இறகு உறை
பொதுவாக ஒரு பறவையின் உடலில் பல ஆயிரக்கணக்கில் இறகுகள் காணப்படும். அந்த இறகுத் தொகுப்பையே இறகு உறை என்கிறோம். உதாரணமாகத் துருவப் பகுதியில் ஒரு வாத்துக்கு 25,000 இறகுகள் உள்ளன. இவற்றில் 20,000 இறகுகள் தலை மற்றும் கழுத்துப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன.
இறகுகளின் மென்மையை ஒரு பறவையின் மொத்த எடையுடன் ஒப்பிடும் போதுதான் நன்றாக அறியமுடிகிறது. சான்றாக 4 கிலோ எடையுள்ள வழுக்கைத்தலை கழுகு (Bald Eagle) இனத்தின் எடையில் 700 கிராம் அதன் இறகுகளின் எடையாக உள்ளது. அதாவது அதன் மொத்த எடையில் இறகுகளின் எடை 17 விழுக்காடு (4082 கிராம்) ஆகும். ஆனால் அதன் எலும்பின் எடை 272 கிராம்தான் இருக்கிறது. ஆக இறகுகளின் எடை எலும்பின் எடையை விட 2 அல்லது 3 மடங்கு அதிகமாக உள்ளது.
எனவே பறவைகள் எளிதாகப் பறப்பதற்கு இந்த எடை குறைந்த இறகுகளும் எலும்புகளும் தகவமைப்புக் கூறுகளாக உள்ளன என்று உறுதியாகக் கூறலாம். பொதுவாகப் பறவைகளின் உடல் முழுவதும் இறகுகளால் போர்த்தப்பட்டது போன்ற தோற்றம் தருவதைப் பார்க்கிறோம். ஆனால் அது உண்மையில்லை. பறவைகளின் உடல் முழுவதும் இறகுகளால் சூழப்பட்டிருப்பதில்லை. உடலில் இறகுகள் உள்ள பாதை, இறகுகள் அற்ற பாதை என்று இரு பகுதிகள் உள்ளன.
இறகுகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கியது போல் காணப்படுதலால் இந்த இரு பகுதிகளையும் எளிதில் இனம் பிரித்துக் காண இயலாது. இறகு பாதை என்பது முக்கியமாக 8 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டுப் பாதைகளும் மேலும் சிறு சிறு உட்பிரிவுப் பாதைகளாகப் பிரிக்கப்பட்டு நூறு பிரிவுகள் வரை இருப்பது அறியப்பட்டுள்ளது.
இந்தப் பாதைகளே சிற்றினங்களை இனங்காண வகைப்பாட்டியலில் உதவுகிறது. இருப்பினும் பறவைகளின் இவ்வேறுபாட்டிற்கான காரணம் இன்னமும் தெளிவாக அறியப்படவில்லை. பறவைகளில் உள்ள அனைத்து இறகுகளும் மிக அழகான நுண்ணிய தசை நார்களினால் வலைப்பின்னலைப் போன்று இணைக்கப்பட்டிருக்கும்.
இதன்மூலம் பறவைகளால் தேவைப்படும்போது குறிப்பிட்ட இறகுகளை மேலுயர்த்திக் காட்டவும் மறைக்கவும் முடிகிறது. இப்படி இல்லாது போனால் இறகுகளை இயக்கும் தசைகளின் பணி கடினமானதாகிவிடும். இறகற்ற பாதை பறவைகளின் கால் மற்றும் இறகுகளின் அசைவை மேம்படுத்தும் உறுப்புகளை மடக்கி வைக்கும் இடமாக இருக்கிறது. சில பறவைகளில் இந்த இறகற்ற பாதைகள் எனும் பகுதியே காணப்படுவதில்லை.
(தொடரும்)