ஒரு பறவை தன் மென்மையான இறகுகளை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பது இன்றியமையாதது. தற்காப்புக்கான ஆற்றலோ அமைப்போ இறகுகளுக்கு இல்லை. ஆனால் தன் இறகுகளைப் பாதுகாக்கும் தகவமைப்பு நுட்பம் பறவைகளிடம் இருக்கிறது.
பறவைகள் தங்கள் வால் பகுதியில் யூரோபைஜியல் சுரப்பியைக் (Uropygial gland) கொண்டுள்ளது. பறவையின் வால் பகுதிக்குப் பின்னால் அமைந்துள்ளது. இது வெளிப்படுத்தும் மெழுகு (பசை, திரவம்) போன்ற ஒன்றைப் பறவைகள் தங்கள் அலகினால் எடுத்து இறகுகளை அடிக்கடி கோதிக்கொள்கின்றன. இப்படிச் செய்வதன்மூலம் அந்த இறகுகள் நீண்டகாலம் காக்கப்படுகின்றன.
நீர்ப்பறவைகளிடம் பிரின் (Preen) என்ற சுரப்பி அமைந்திருக்கும். இதிலிருந்து வெளிப்படும் மெழுகு போன்ற திரவம் பறவைகளின் இறகுகளைச் சிதைக்கும் பூஞ்சையிடமிருந்தும் பாக்டீரியாக்களிடமிருந்தும் பாதுகாக்கிறது. சில பறவைகள் இந்தச் சுரப்பியிலிருந்து மிக மோசமான வாசனையை வெளியேற்றி, தங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்கின்றன. இதனால் ஒரு பறவை அடிக்கடி இந்த மெழுகு கொண்டு தன் இறகுகளைத் துடைத்துக் கொண்டிருப்பது அவசியமாகிறது. மேலும் காற்றாலும் மழையாலும் இறகுகள் பாதிக்கப்படாமல் இருக்க இம்மெழுகு போன்ற திரவம் உதவுகிறது.
இவ்வாறு பறவைகளால் தங்களின் இறகுகளைப் பாதுகாக்கவும் ஒழுங்குபடுத்தவும் அழகுபடுத்தவும் முடிகின்றது. இதற்காக ஒரு சில பறவைகளின் கால்களில் நுண்ணிய சீப்பு போன்ற அமைப்பும் காணப்படுகிறது.
ஒரு பறவை எவ்வாறு தன் தலையைத் தன் கால்களைக் கொண்டு சொறிந்துகொள்கிறது என்பதைப் பார்க்கலாம். இந்தப் பண்பு வகைப்பாட்டியல் படிப்பில் ஒரு முக்கியமான கூறாக விளங்குகிறது. சில பறவைகள் நேரடியாகக் காலை தூக்கி (இறகுக்குக் கீழ்) தலையைச் சொறிந்துகொள்கின்றன. சில பறவைகள் அதற்கு எதிர்மாறாகக் காலை இறகுகளுக்கு மேலே தூக்கிச் சொறிந்துகொள்ளும் பழக்கம் கொண்டவை. வேறுபட்ட முறையில் சொறிவதன் மூலம் ஒரு பறவை பெறும் நன்மை என்னவென்பது இன்றளவும் அறிவியலாளர்களுக்குப் புலப்படவில்லை.
பொதுவாகத் தீங்கு விளைவிக்கும் நச்சுப்பொருள் எதுவும் பறவைகளின் இறகில் இல்லை. இருப்பினும் நியூ கினி நாட்டில் உள்ள ஒரு பறவையின் (Shrike thrush) இறகில் நஞ்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நஞ்சானது முன்பு கூறிய பிரின் சுரப்பிமூலம் இறகை அடைகிறது. இதைப் பற்றி தெளிவாக நாம் அறியமுடியாவிட்டாலும் நியூ கினி பழங்குடியினருக்கு இப்பறவையின் இறகுகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை என்பது தெரியும். எனவே இப்பறவையைச் சமைப்பதற்கென்று சில சிறப்பு முறைகளை இவர்கள் கையாளுகின்றனர். இந்த நஞ்சு அலகுமூலம் இடம்பெயரும்போது பறவையை எவ்வாறு பாதிக்காமல் இருக்கிறது என்பது வியப்புக்குரியது.
இறகுகளின் வளர்ச்சி
இறகு என்பது ஓர் உயிரற்ற அமைப்பு. இது முழுமையாக வளர்ந்தவுடன் அதன் நிறத்தையோ அமைப்பையோ மாற்ற இயலாது. ஆனால் காலப்போக்கில் இறகுகள் தேய்ந்து போதலும் ஒழுங்கற்றுப் போதலும் உண்டு. இப்படி ஏற்படுகின்ற சிதைவுகளைச் சரிசெய்ய பறவைகள் புதிதாக இறகுகளை உருவாக்குவது ஒன்றுதான் வழி. இதைத்தான் ‘சிறகுதிர்தல் நிகழ்வு’ என அழைக்கின்றோம். பறவைகளின் வயது மற்றும் பருவகாலங்களுக்கு ஏற்ப இச்செய்கை நடைபெறுகின்றது.
புதிய இறகுகள் எபிடெர்மல் செல்கள் மற்றும் டெர்மல் செல்கள் அடங்கிய பை போன்ற ஓர் அமைப்பிலிருந்து உருவாகின்றன. இந்தப் பையில் மொட்டு போன்ற ஒரு பகுதி தோன்ற ஆரம்பிக்கின்றது. அந்த மொட்டானது டெர்மல் செல்களின் விரைவான வளர்ச்சியால் இறகாக வளர்ச்சி பெறுகிறது. இந்த மொட்டுக்கு மேல் வளர்ந்த பகுதி இறகாக இருக்க, அம்மொட்டுப் பகுதி இறகின் வளர்ச்சிக்குத் தேவையான உணவூட்டம் அளிக்கும் இடமாக மாறுகிறது. அந்த எபிடெர்மல் செல்கள் முதலில் ஒரு குழல் போன்று உருவாகி பின்னர் பார்ப்ஸ் மற்றும் பார்பியூல் ஆக வளர்கிறது.
இறகு இருக்கும் அடிப்பகுதியில் மீண்டும் புதிய மொட்டு தோன்றுகிறது. அவ்வாறு புதிய மொட்டு தோன்றும் இடத்தில் ஏற்கெனவே இருக்கும் இறகு தனது உறுதியைப் படிப்படியாக இழந்து ஒரு கட்டத்தில் உதிர்ந்துவிடுகிறது. அப்படி உதிர்ந்த இடத்தில் மொட்டுக்களின் வளர்ச்சியால் புதிய இறகு தோன்ற ஆரம்பிக்கும்.
இந்த நிகழ்வின்போது மென்மையாக இருக்கும் எபிடெர்மல் திசு நீண்டகாலம் தாக்குப்பிடிக்கும் வகையில் கடினமான அமைப்பாக மாறுகிறது. இந்நிகழ்வில் கெரட்டின் எனும் புரதம் இறகு முழுவதும் நிரம்புகிறது. இறகின் பார்ப்கள் விரியத் தொடங்குகின்றன. இப்படி இறகு விரிந்தவுடன் இந்நிகழ்விற்குக் காரணமான உயிர் கொடுத்த ‘பல்ப்’ எனும் பகுதி பைக்குள்ளே இழுக்கப்படுகிறது. இதனால் இறகு தோன்றிய ஒரு நிகழ்வே நடக்காதது போல் இருக்கிறது.
ஆனால் அடியில் இறகில் காணப்படும் சிறு துவாரமே இந்த மொத்த நிகழ்வு நடந்ததற்கு அடையாளமாக நிற்கிறது. இந்தப் பை இறகின் கலாமஸ் பகுதியை இறுக்கிப் பிடித்திருப்பதால் இறகு பிடிமானத்தோடு நிற்கிறது. இறகு பிடிமானத்தோடு நிற்பதற்கு இறுக்கத்தால் ஏற்படுகிற தசையின் உராய்வு விசையும் காரணமாகின்றது. சில நேரங்களில் அதீத பயம் காரணமாகத் தசையின் இறுக்கமும் தசையின் உராய்வு விசையும் தளர்ச்சியடைகின்றன. அதனால் இறகுகள் உதிர்வதும் உண்டு. இதைத்தான் ‘பய உதிர்வு’ என அழைக்கிறார்கள்.
இறகுகளின் வண்ணங்கள்
இறகுகளின் வண்ணங்களுக்கு அளவில்லை. பெயரிட முடியாத வகையில்கூட வண்ணங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இது பறவைகளில் காணப்படும் ஒரு சிறப்பான அம்சமாகும். இறகுகளின் வண்ணங்களுக்குக் காரணமாக மெலனின், கரோடினாய்டு மற்றும் பர்பைரின் ஆகிய மூன்று நிறமிகளைக் கூறலாம்.
இவற்றில் கரோடினாய்டு என்னும் நிறமி மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, நீலம் மற்றும் பச்சை ஆகிய நிறங்கள் தோன்றக் காரணமாக அமைகின்றது. பர்பைரின் என்னும் நிறமி தேர்ந்த வண்ணங்களான மண்ணிறம் மற்றும் உயர் ரக பச்சை நிறம் தோன்றவும் காரணமாக இருக்கிறது. மெலெனின் எனும் நிறமி கருமை சார்ந்த நிறங்களுக்குக் காரணமாக உள்ளது.
அல்பினோ பறவைகளைத் தவிர அனைத்துப் பறவைகளும் மெலெனின் நிறமிகளை இறகுகளில் கொண்டுள்ளன. இந்த மெலெனினைத் தைரோசின் (Tyrosine) எனும் அமினோ அமிலத்தில் உள்ள மெலெனோ பிளாஸ்ட் செல்கள் உருவாக்கி. பார்ப் மற்றும் பார்பியூல் செல்களுக்கு அனுப்பி வைக்கிறது. மெலெனின், யூமெலெனின் (Eumelanin), பாமெலனின் (Phamelanin) என இரு வகைப்படும்.
யூமெலெனின் பெரிதாகவும் மண் நிறம், கருமை, இளங்கருமை ஆகிய வண்ணங்களை உருவாக்குவதாகவும் இருக்கும். பாமெலெனின் சிறிதாக, ஒழுங்கற்றதாக, சிவப்பாக அமைந்து. இளம் சிவப்பு கலந்த மண்ணிறம், மஞ்சள் ஆகிய வண்ணங்களை உருவாக்குகிறது. காலவோட்டத்தினால் இறகில் ஏற்படும் சிதைவையும் இவை தடுக்கின்றன.
வேகமாகவும் அதிக நேரமும் பறக்கக்கூடிய கடற்காகம் (Gull) போன்ற பறவையின் இறகு நுனியில் அதிக அளவில் இருக்கும் மெலெனின் அவ்விறகுகளை வேகம் மற்றும் நேரத்தினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது. இதைப் போன்று பாலைவனப் பகுதிகளில் வாழும் பறவைகளின் இறகுகளில் உள்ள மெலெனின் அவ்விறகுகளை வெயிலின் தாக்கத்திலிருந்து சிதையாமல் பாதுகாக்கிறது.
கரோடினாய்டு என்னும் நிறமி மெலனினுக்கு அடுத்ததாக அதிக அளவில் காணப்படும். பெரும்பாலும் இவை பறவைகள் உண்ணும் உணவுகளிலிருந்தே பெறப்படுகின்றன. கரோடினாய்டு எளிதில் கொழுப்பில் கரையும் தன்மையைக் கொண்டிருப்பதால் பறவையின் முட்டையிலும் அதன் உடல் கொழுப்பிலும் சேமித்து வைக்கப்படுகிறது. இப்பண்பே கரோட்டினாய்டை எளிதில் ஆராய்வதற்கு இடமளிக்கிறது.
மூன்றாவது நிறமியான பார்பைரினின் வேதியியல் பண்புகள் ஹிமோகுளோபினுடனும் பைல் நிறமிகளுடனும் ஒத்துப்போகின்றன. இந்தப் பார்பைரின் பெரும்பாலும் சிவப்பு மற்றும் மரவண்ணம் கொண்ட 13 வரிசையாகச் சேர்ந்து பறவை இனங்களின் இறகுகளில் காணப்படுகிறது. இவை அமைப்பு நிறங்கள் ஆகும். கிளியின் பச்சை, நீலப்பறவையின் நீலம், தேன் சிட்டின் ஒளிவிடும் வண்ணக் கலவை ஆகியன இறகுகளில் படும் ஒளியினால் ஏற்படும் இயற்பியல் மாறுபாட்டின் விளைவால் இந்த அமைப்பு நிறங்கள் தோன்றுகின்றன. குறைந்த அலை நீளமுடைய துகள்களிடமிருந்து இது உருவாகிறது. மீதமுள்ள அலைநீளத்தில் வேறுபட்ட நிறமிகள் பறவைகளில் வெவ்வேறு அடுக்குகளில் அமைந்திருக்க அவற்றில் சூரிய ஒளி படும்போது இயற்பியல் மாற்றம் ஏற்பட்டு அங்கு ஒரு பெரிய வண்ணத்தொகுதி உருவாகிறது. இந்த வண்ணத் தொகுதி ஒளிபடும் திசையைப் பொறுத்தும் அதன் வண்ண நிலை மாறும்.
இந்த நிறங்களின் ஒளிர்வு பறவைகளின் இனக்கவர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. மிகுதியாக ஒளிரும் வண்ண இறகுகள் கொண்ட ஓர் ஆண் பறவை ஒரு பெண் பறவையை இணை சேர்வதற்காக எளிதில் கவர முடியும். புறவைகளின் இறகுகளில் வெளி ஒட்டுண்ணிகளாகச் சில பூச்சி இனங்கள் இருக்கின்றன. இவை இறகுகளை உண்ணும் பழக்கம் உடையதாகவோ ரத்தம் அல்லது திசுக்களை உண்ணும் பழக்கம் கொண்டதாகவோ இருக்கின்றன. பெரும்பாலான ஒட்டுண்ணி இனங்கள் குறிப்பிட்ட இனப்பறவைகளுடனேயே ஒத்து வாழ்கின்றன.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இறகுகளே அழிந்துபோன மற்றும் அழிந்துவரும் பறவை இனங்களின் பாதிப்பிற்கு உரிய காரணமாகவும் விளங்குவது கவனிக்கவேண்டிய உண்மை. பறவைகளின் அழிவிற்குக் காரணமாக இருக்கின்ற அதே எழில் நிறைந்த இறகுகள்தான் கற்காலம் தொட்டு மனிதனின் கண்களுக்குக் காட்சி விருந்தாக விளங்குகின்றன என்பது உண்மையாகும்.
(தொடரும்)

செயங்கொண்ட சோழபுரத்தில் பிறந்து தற்போது திருச்சிராப்பள்ளியில் வசித்து வருபவர். திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். ஓவியத்தில், குறிப்பாக கேலிச்சித்திரம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். தொடர்புக்கு : gokulae@yahoo.com