Skip to content
Home » கல்லும் கலையும் #1 – ஞாயிறு போற்றுதும்

கல்லும் கலையும் #1 – ஞாயிறு போற்றுதும்

சூரியன்

பத்தாண்டுகளுக்கு மேல் இருக்கும். சென்னையிலிருந்து ஒரு சிறு குழுவாகப் புறப்பட்டு, சமணர் தலங்கள் சிலவற்றைக் காண்பது நோக்கம். ரீச் ஃபவுண்டேஷன் ஏற்பாடு செய்திருந்தது. தமிழகத் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு ராமச்சந்திரன் வழிகாட்டியாக வந்திருந்தார். திருப்பாண்மலை, திருமலை ஆகிய இடங்களை நோக்கிய பயணம். திருமலையில் குந்தவை ஜினாலயம் என்ற சோழர் கால சமணர் கோவில் உள்ளது. பல சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் இங்கே உள்ளன. ராஜராஜனின் தமக்கை குந்தவை பெயரால் எழுப்பப்பட்ட ஆலயம். ஆனால் அதற்கு முன்னமே பாறையில் பல்லவர் காலத்தில் செதுக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பங்களும் இங்கே உள்ளன. பின்னர் அவற்றையும் பார்க்கப் போகிறோம்.

சூரியன்
சூரியன், தமிழ்நாடு

ஆனால் இந்தப் பயணத்தின்போது என் நினைவைவிட்டு நீங்காதது, வழியில், தெருவோரத்தில் நாங்கள் கண்ட சூரியனின் முழுமையான சிற்பம். ஆளுயரத்துக்கும் சற்றே பெரியது. மேலே உள்ள படத்தில் இந்தச் சிற்பத்தையும் அருகில் எங்கள் குழுவில் சிலர் நிற்பதையும் பார்க்கலாம். தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே மிகச் சிறந்த சூரியனின் சிற்பங்களின் முதன்மை இடத்தில் இது வரக்கூடும்.

இதைப் பார்த்த மாத்திரத்திலே இதனைச் சூரியன் என்று எவ்வாறு சொல்வது? மொழிக்கு இலக்கணம் இருப்பதுபோல இந்திய சமயச் சிற்பங்களுக்கும் இலக்கணம் உள்ளது. இதனை சமஸ்கிருதத்தில் பிரதிமா லக்ஷணம் என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் ஐகனோகிராஃபி என்று அழைக்கப்படும். தமிழில் படிம இலக்கணம் அல்லது படிமவியல் எனலாம்.

சூரியனைச் சுட்டிக்காட்ட தலையைச் சுற்றி ஒளிவட்டம் இருக்கும். மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் அற்புதமான வட்டமாக இதனைப் பார்க்கலாம். சிவனுக்கோ விஷ்ணுவுக்கோ வேறு கடவுளர்களுக்கோ இம்மாதிரியான ஒளிவட்டம் பொதுவாக இருக்காது. சூரியனுக்கு உண்டு, சந்திரனுக்கும் உண்டு. நியாயம்தானே? இருவரும்தானே வட்டமாக வானில் ஒளியைத் தருகிறார்கள்? அடுத்து இரண்டு கைகளிலும் தாமரை மலர்கள். தாமரையின் தண்டினை அவ்வளவு நேர்த்தியாகப் பிடித்திருக்குமாறு சிற்பி செதுக்கியுள்ளார். மற்ற இலக்கணங்கள் கிட்டத்தட்ட அனைத்துக் கடவுளர்களுக்கும் பொருந்தக்கூடியதே. தலையில் மகுடம், காதுகளில் குண்டலங்கள், கழுத்தில், கைகளில் அணிகலன்கள். இடுப்பில் உடுப்பு, இதழில் புன்சிரிப்பு. யாரோ ஒருவர் தோளில் வைத்துவிட்டுப்போன காட்டு மஞ்சள் பூ ஒன்று இந்தப் படிமத்துக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

ஆனால் ஏன் இந்தச் சிலை தெருவோரத்தில் நிற்கிறது? ஏன் இது ஒரு கோவிலுக்குள் இல்லை?

சூரியன் வேதத்திலே வரும் தெய்வம். ஆதி சங்கரர் அறு மதங்கள் என்ற கருத்தை உருவாக்கி அளித்தார். அவை முறையே சிவன் (சைவம்), விஷ்ணு (வைஷ்ணவம்), கணபதி (காணாபத்யம்), குமரன் (கௌமாரம்), சக்தி (சாக்தம்), சூர்யன் (ஸௌரம்) ஆகிய கடவுள்களை வழிபடுவது ஆகும். திருச்சி மலைக்கோட்டையில் இரண்டு குகைக் கோவில்கள் அமையப்பெற்றுள்ளன. பொதுவாக மக்கள் உச்சிப் பிள்ளையார், தாயுமானவர் கோவில்களுக்குச் செல்வார்களே தவிர, இந்த குகைக் கோவில்களுக்குப் போகமாட்டார்கள். இதில் ஒன்று, காலத்தால் முற்பட்டது, ஆறாம் நூற்றாண்டில் மகேந்திரன் செதுக்குவித்த லலிதாங்குர பல்லவேஸ்வர கிருகம் – மிக அழகியது. இதில் அற்புதமான கங்காதரர் சிற்பம் ஒன்று உள்ளது. வானிலிருந்து வீழும் கங்கையை ஒற்றைச் சடைமுடியில் சிவனார் தாங்கும் சிற்பம். அத்துடன் ஒரு சிலேடைப் பாடல். இதனைப் பின்னர் காண உள்ளோம்.

மற்றொரு குகைக் கோவில், எட்டாம் நூற்றாண்டில், பாண்டியர் காலத்தில் செதுக்கப்பட்டது. முத்தரைய மன்னர்கள் செய்திருக்கக்கூடும். இங்கே சங்கரரின் அறு மதங்களுக்கான கடவுள்களை அழகுற உருவாக்கியிருப்பார்கள். எதிரெதிராக சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் சந்நிதிகள். பக்கவாட்டுச் சுவரில் வரிசையாக கணபதி, குமரன், நடுவில் பிரம்மா, பின் சூரியன், துர்கையாகிய சக்தி. இங்கே சூரியனுக்கு மற்ற ஐந்து கடவுளர்களுக்கு இணையான ஓரிடம்தான்.

ஆதித்ய ஹ்ருதயம் என்று தோத்திர வடிவில் சூரியன் இன்றும் வழிபடப்படுகிறார். ஆனால் நாளடைவில் தனித்த கடவுளாக வழிபடப்பட்ட சூரியன், தேவர் குழாமாக, சிவனையும் விஷ்ணுவையும் அடுத்து காணப்படலானார். பல்லவக் குடைவரைக் கோவில்களில், மாமல்லையின் பெருந்தவ சிற்பத் தொகுதியில், வராக மண்டபத்தின் வராக, திரிவிக்கிரம சிற்பத் தொகுதியிலெல்லாம் வானையும் கடந்து செல்லும் விஸ்வரூபத்தைக் குறிப்பிட சூரிய சந்திரர்களை இருபுறமும் வடித்து வைத்திருப்பார்கள்.

சூரியச் சிற்பங்களை இந்தியா முழுவதிலும் காணலாம். நாம் மேலே பார்த்ததுபோல், தலையில் ஒளிவட்டம் கட்டாயம் இருக்கும். இரு கைகளிலும் தாமரை கட்டாயம் இருக்கும். கூடவே, பல சிற்பங்களில் ஏழு குதிரை பூட்டிய ரதத்தில் வருவதாகச் செதுக்கப்பட்டிருக்கும். இந்த ரதத்தின் சாரதி அருணன். இந்த அருணன், விஷ்ணுவின் வாகனமான கருடனின் தமையன். கஷ்யபர் என்ற ரிஷிக்கும் வினதை என்பவளுக்கும் பிறந்த இரு குழந்தைகள் அருணனும் கருடனும். கஷ்யபருக்கு வினதை மட்டுமல்ல, கத்ரு என்ற மனைவியும் இருந்தாள். மனைவிகளுக்குள் போட்டி. கத்ரு தனக்கு ஆயிரம் குழந்தைகள் வேண்டுமென்று கேட்டாள். வினதையோ, இரண்டு போதும், ஆனால் மிகப் பலம் பொருந்தியவர்களாக வேண்டும் என்றாள். கத்ரு ஆயிரம் முட்டைகள் இட்டாள்; அவை அனைத்தும் நாகப் பாம்புகளாகப் பிறந்தன. வினதையின் இரண்டு முட்டைகளோ வெகு காலமாகப் பொரியாமல் இருந்தன.

வினதைக்கு ஆர்வக்கோளாறு, ஒரு முட்டையை லேசாக உடைத்துப் பார்த்தாள். காலம் போதாமையால் கீழ்ப்பகுதியே இல்லாத குறையுடன் பிறந்தான் அருணன். கோபம் கொண்ட அருணன், வினதை கத்ருவின் அடிமையாக ஆவாள் என்றும், மற்றொரு முட்டையிலிருந்து பிறந்துவரும் கருடன் தன் தாயை அடிமைத்தளையிலிருந்து மீட்பான் எனவும் சபித்துவிட்டான். பின்னர் இந்தத் தொடரில் கருடனின் அற்புதமான சிற்பத்தையும் இந்தக் கதையின் தொடர்ச்சியையும் காண உள்ளோம்.

கஷ்யபர் அருணனுக்கு சூரியனின் சாரதியாக ஆகும் வரத்தை அருள்கிறார். இதைத்தான் பல சூரியச் சிற்பங்கள் காண்பிக்கின்றன.

சூரியனை ஒட்டி உஷா, பிரத்யுஷா என்னும் இரு பெண் தெய்வங்கள் கையில் வில்லேந்திக் காணப்படுவதையும் நாம் பல சிற்பங்களில் பார்க்கிறோம். இவர்கள் அம்பெய்து இருட்டைப் போக்குவதையே இந்தச் சிற்பங்கள் உணர்த்துகின்றன.

கீழே, சாளுக்கியர்களின் பட்டதகல்லில் விரூபாக்ஷர் கோவிலில் விதானத்தில் வடிக்கப்பட்டுள்ள சிற்பத்தைக் காணலாம். சூரியனைத் தவிர, அருணன், ஏழு குதிரைகள், உஷா, பிரத்யுஷா என அனைவரையும் காணலாம்.

விரூபாக்ஷர் கோவிலில் சூரியனின் சிற்பம்
விரூபாக்ஷர் கோவிலில் சூரியனின் சிற்பம்

சூரியனுக்கு ஒரு சுவாரசியமான கதையும் உண்டு. இது பெரும்பாலும் எங்கும் காணப்படுவதில்லை; ஆனால் பட்டதகல்லில் மற்றொரு கோவிலில் இது வடிக்கப்பட்டுள்ளது. சிற்பிகளின் கடவுளான விசுவகர்மாவின் மகள் சஞ்சனா சூரியனை மணந்துகொள்கிறாள். அவர்களுக்கு இறப்பின் கடவுள் யமன் மகனாகப் பிறக்கிறான். ஆனால், சூரியனின் கடுமையான வெப்பத்தைத் தாள முடியாத சஞ்சனா, தன் நிழலையே (சாயா) பெண் வடிவாக ஆக்கி, தன்னிடத்தில் விட்டுவிட்டுப் போய்விடுகிறாள். வெகு நாட்கள் இது சூரியனுக்குத் தெரிவதில்லை. பின்னர் சாயாவுக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. சாயா குழந்தைகளுக்கு இடையே வேறுபாடு காட்டுவதைக் கண்ட சூரியன் தன் சந்தேகத்தை நேரடியாகவே கேட்க, சாயா தான் சஞ்சனா இல்லை என்ற உண்மையைத் தெரிவிக்கிறாள்.

சூரியன், விசுவகர்மாவிடம் சென்று தன் வெப்பத்தைத் தணித்துத் தருமாறு கேட்க, அவர் அங்கே இங்கே கொஞ்சம் செதுக்கி, சூரியனின் வெப்பத்தைத் தணிக்கிறார். இதற்கிடையில் சஞ்சனாவோ குதிரை வடிவில் காடுகளில் சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறாள். சூரியனும் குதிரை வடிவெடுத்து சஞ்சனாவைத் தேடிச் சென்று அவளைத் திரும்பிவருமாறு கேட்கிறான். அந்நேரத்தில் இருவரும் சேர்ந்து அசுவினி தேவர்கள் எனும் குதிரை வடிவ இரட்டையர்களைப் பிறப்பிக்கிறார்கள்.

சூரிய வழிபாடு உச்சத்தில் இருந்தபோது சூரியனுக்கு என்றே இந்தியா முழுவதும் பல கோவில்கள் இருந்திருக்கின்றன. முக்கியமான மூன்று கோவில்களைச் சொல்லவேண்டும். தீயூழ், இந்தக் கோவில்களில் இன்று வழிபாடு ஏதும் இல்லை. ஒன்று இந்தியாவின் மேற்கில் குஜராத்தில் மோடேரா என்னும் இடத்தில் இருக்கும் கோவில். இரண்டாவது இந்தியாவின் கிழக்கில் ஒடிஷாவில் கோனாரக் என்னும் இடத்தில் கட்டப்பட்ட, பெருமளவு இடிந்துபோன, ஆனால் மீதி இருக்கும் எச்சத்திலேயே மிகப் பிரம்மாண்டமாக இருக்கும் கோவில்.

மோதேரா, குஜராத்
மோடேரா, குஜராத்

மோடேரா சூரியக் கோவிலின் சுற்றுச் சுவர்களில் பன்னிரு ஆதித்தியர்களைக் காண முடியும். சூரியனை ஆதித்தியன் என்று குறிப்பிடுவது உண்டு. ஆதித்ய என்னும் சொல், அதிதியின் மகன் என்பதைக் குறிக்கும். அதிதிக்குப் பன்னிரண்டு மகன்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து பன்னிரு ஆதித்தியர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சூரியனை, இந்தப் பன்னிரு ஆதித்தியர்களுடன் சேர்த்துச் சிற்பமாக வடிப்பதும் உண்டு, அல்லது மோடேரா சூரியக் கோவிலில் உள்ளதுபோல், பன்னிரு ஆதித்தியர்களையும் தனித்தனிச் சிற்பமாகக் கோவிலின் சுற்றுச் சுவரில் வடிப்பதும் உண்டு.

கோனாரக், ஒடிஷா
கோனாரக், ஒடிஷா

கோனாரக்கில் கோவிலின் முக்கியப் பகுதியான கருவறையின்மேல் எழுப்பப்பட்டுள்ள பிராசாதா இடிந்துவிட்டது. ஆயினும் சூரியனின் மூன்று சிற்பங்கள் அங்கே காணக்கிடைக்கின்றன. கிழக்கு நோக்கிய கோவிலின் தெற்கு, மேற்கு, வடக்குச் சுவர்களில் இவை உள்ளன. தெற்குத் திசையில், காலையில் உதிக்கும் உதயசூரியன். மேற்குச் சுவரில் மதியச் சூரியன். வடக்கில் நாள் முழுதும் வேலை செய்து களைப்புற்று அஸ்தமனமாகும் சூரியன்.

மோடேராவும் கோனாரக்கும் மட்டுமல்ல, சூரியனின் மிகப் பிரபலமான மூன்றாவது கோவில் ஜம்மு காஷ்மீரின் மார்த்தாண்டனின் கோவிலாகும். எட்டாம் நூற்றாண்டில் லலிதாதித்யன் என்ற மன்னனால் எழுப்பப்பட்ட இந்தக் கோவில் பதினான்காம் நூற்றாண்டில் சிகந்தர் ஷா மீரி என்ற மன்னனால் இடிக்கப்பட்டது. இன்றும் இந்தக் கோவிலின் இடிபாடுகள் காணக்கிடைக்கின்றன. மிகப் பிரம்மாண்டமான கோவிலின் கருவறையும் சுற்றுச் சுவர்களும் இன்று துண்டு துண்டுகளாகச் சிதைந்துகிடக்கின்றன.

மார்த்தாண்டனின் கோவில், ஜம்மு காஷ்மீர்
மார்த்தாண்டனின் கோவில், ஜம்மு காஷ்மீர்

காலம் செல்லச் செல்ல, சூரியன் சிவனுடனும் விஷ்ணுவுடனும் சேர்ந்து சிவசூரியனாகவும் சூரியநாராயணனாகவும் உருமாற்றம் அடைந்தான். தனியான கோவில்கள் காணாமல் போயின, இடிந்துபோயின. ஸௌரம் என்னும் மதம் சைவத்திலும் வைணவத்திலும் கரைந்துபோயிற்று. இன்று பல கோவில்களில் நவகிருகங்களில் ஒன்றாக மட்டுமே சூரியன் காணப்படுகிறான்.

இந்தியா முழுதும் ஏகப்பட்ட சூரியச் சிற்பங்களைப் பார்த்துள்ளேன். ஆயினும், வட தமிழகத்தில் அருங்குன்றம் என்ற சின்னஞ்சிறு கிராமம் ஒன்றில் தெரு ஓரத்தில் காணப்பட்ட, கடினமான கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட, மென்னகை ததும்பும் அந்தச் சூரியனையே மிகச் சிறப்பான சூரியச் சிற்பமாகச் சொல்வேன்.

சூரியனில் தொடங்கி நாம் இந்தியா முழுவதும் பயணம் செய்ய உள்ளோம். பல்வேறு கடவுளர் சிற்பங்களைக் காண உள்ளோம். இந்து மதம் மட்டுமின்றி, பௌத்த, சமணச் சிற்பங்களையும் பார்க்க இருக்கிறோம்.

(தொடரும்)

பகிர:
பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர். சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் இளநிலையும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியக் கணிதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். வரலாறு, தொழில்நுட்பம், இந்தியவியல் போன்ற துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.View Author posts

8 thoughts on “கல்லும் கலையும் #1 – ஞாயிறு போற்றுதும்”

 1. பொன். மகாலிங்கம்

  மிக அழகிய சிற்பம். நல்ல தகவல்களைக் கொண்ட கட்டுரைத் தொடரின் முதல் அத்தியாயமே சிறப்பாகத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து ஆவலோடு எதிர்பார்க்கிறேன். நன்றி.

 2. இந்தத் தொடருக்கான notification மட்டும் எவ்வாறு பெறுவது?

  1. vaidehi

   குறிப்பிட்ட ஒரு தொடருக்கு மட்டும் நோட்டிஃபிகேஷன் பெறுவது இப்போதைக்குச் சாத்தியமில்லை. பத்ரியின் ‘கல்லும் கலையும்’ தொடர் ஒவ்வொரு திங்களும் வெளிவரும். எனவே திங்கள்தோறும் கிழக்கு டுடே தளத்தில் நீங்கள் இத்தொடரை எளிதாக வாசிக்கலாம்.

 3. வாழ்த்துக்கள் ஐயா, சூரியக் கடவுளின் சிற்பத்தை முதல் முறையாகப் பார்க்கிறேன். கல்லும் கலையும் என்ற தொடர் கட்டுரையை முதல் முறையாக வாசித்தேன் மிகவும் அற்புதமாக இருந்தது. 41 – வது வரியில் “தேவர் குழாமாக” என்பது சற்று விளங்கவில்லை. நன்றி

 4. குழாம் என்றால் குழு , கூட்டம் என்று பொருள் கொள்ளலாம். https://sorkuvai.com/?q=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D

  இப்போது சூரியன் தனி பெரும் கடவுளாக இல்லாமல் , மற்ற தேவர்களுள் ஒரு தேவராக குழுவில் ஒருவராக காணப்படுகிறார் என்ற பொருளில் கட்டுரையாசிரியர் சொல்கிறார்.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *