Skip to content
Home » கல்லும் கலையும் #2 – மௌனகுருவே!

கல்லும் கலையும் #2 – மௌனகுருவே!

என் பெற்றோர் ஶ்ரீரங்கத்தில் வசிக்கின்ற காரணத்தால் நான் தொடர்ந்து ஶ்ரீரங்கம் சென்றுவருவது உண்டு. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கும். ஶ்ரீரங்கம் போய்விட்டு வரும்போது அருகில் எங்கெங்கெல்லாம் சென்றுவிட்டு வரலாம் என்று பேராசிரியர் சுவாமிநாதனிடம் கேட்டேன். “சீனிவாசநல்லூர் போய் தக்ஷிணாமூர்த்தி பார்த்துவிட்டு வா” என்றார்.

இந்தியப் பாரம்பரியக் கலைகளைப் பொருத்தமட்டில், பேராசிரியர் சுவாமிநாதன், எங்கள் பலருக்கு வழிகாட்டி. டெல்லி ஐஐடியில் மெக்கானிகல் எஞ்சினியரிங் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஐஐடியில் இருக்கும்போதே இந்தியக் கலைகள் குறித்து ஆய்வுசெய்யத் தொடங்கினார். ஆவணப்படுத்தத் தொடங்கினார். பாடத்துக்கு அப்பால், மாணவர்களிடம் இவைகுறித்து உரையாற்றத் தொடங்கினார். வாய்மொழியாக சமஸ்கிருதம் எவ்வாறு செழித்துவளர்ந்தது, அஜந்தாவின் ஓவியக்கலை, தமிழில் யாப்பு, புதுக்கோட்டையின் கலைச் சின்னங்கள், மாமல்லபுரத்தின் பல்லவர் கலை, சித்தன்னவாசலின் அழியும் ஓவியங்களைப் பாதுகாப்பது எப்படி, மகேந்திரவர்மனின் கலைச் சின்னங்கள், 5000 வருடத்தைய இந்தியக் கலைகள் என்று பல்வேறு தலைப்புகளில் இந்த உரைகள் விரிந்தன. இவற்றை அவர் சிறு கையேடுகளாகவும் பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன்களாகவும் ஆக்கியிருக்கிறார்.

சீனிவாசநல்லூர் எங்கே இருக்கிறது என்று விசாரித்துக்கொண்டு போனேன். காவிரியின் வடகரையில், திருச்சி-சேலம் சாலையில் முசிறி, தொட்டியம் பகுதியில் இருக்கும் சிறு கிராமம். இப்போதுபோல் கூகிள் மேப்பை அவ்வளவாகப் பயன்படுத்தாத காலம். அங்கே போய் யாரிடம் என்னவென்று கேட்பது என்ற யோசனை. ஆனால் சாலையிலிருந்து பார்க்கும்போதே திடீரென வலதுபுறம் ஒரு பழைய கோவிலின் சிகப்புக்கல் கட்டுமானம் தென்பட்டது. நாம் தேடிச் செல்லும் கோவிலாக இருக்குமோ என்று வண்டியை நிறுத்திவிட்டுச் சென்றால், இந்தியத் தொல்லியல் நிறுவனத்தின் நீலத் தகவல் பலகையும் கம்பிவேலியும் இந்தக் கோவில்தான் என்பதை உறுதிப்படுத்தின. சுற்றிலும் வீடுகள், தோட்டம், நடுவில் கம்பிவேலிக்குள் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாகக் கொரங்கநாதர் கோவில். அந்தக் கோவிலில் நம்மை முதலில் வசீகரித்து இழுப்பது இந்த அபூர்வமான தக்ஷிணாமூர்த்தியின் சிற்பம்.

சீனிவாசநல்லூர் தக்ஷிணாமூர்த்தி
சீனிவாசநல்லூர் தக்ஷிணாமூர்த்தி

கோவில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு, டக்ளஸ் பாரெட், இந்தக் கோவில் பொயு 927-ல், பராந்தக சோழனின் 20-வது ஆட்சியாண்டில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்கிறார். எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், இந்தக் கோவில், ஆதித்த சோழனின் காலத்தில் பொயு 894-ல் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்கிறார். ஆனால் கோவிலின் கட்டுமானத்தைக் கவனமாகப் பார்த்தால் பாரெட் சொல்வதுதான் சரி என்று முடிவு செய்யவேண்டியிருக்கிறது. இந்தத் தொடரில் நாம் பல்வேறு அறிஞர்களைப் பற்றியும் பேசுவோம். அவர்கள் எவ்வாறு ஒரு கோவிலின் காலத்தை நிர்ணயிக்கிறார்கள், என்னமாதிரியான வரலாற்று ஆராய்ச்சிகள் நிகழ்ந்துவருகின்றன என்பதையும் பார்ப்போம்.

பொன்னியின் செல்வன் நாவலைப் படித்தவர்களுக்கும் திரைப்படத்தின் முதல் பாகத்தைப் பார்த்தவர்களுக்கும் சோழர்களின் வரலாறு அத்துப்படியாக இருக்கும். இவன் முதலாம் பராந்தகன். முற்கால சோழ சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன். அவனுடைய மகனான இந்தப் பராந்தக சோழன் நீண்டகாலம் ஆட்சியில் இருந்தான். இவனுடைய மகனான ராஜாதித்தன்தான் ராட்டிரகூடர்களுக்கு எதிராகத் தக்கோலம் என்னுமிடத்தில் நடந்த போரில் மாண்டான். யானைமேல் துஞ்சிய தேவர் என்று பெயர்பெற்றான். ராஜாதித்தனின் தம்பிகள்தாம் கண்டராதித்தன், அரிஞ்சயன் ஆகியோர். கண்டராதித்தனின் மனைவி செம்பியன்மாதேவி. நாம் மீண்டும் மீண்டும் பார்க்கப்போகும் பெயர். கண்டராதித்தனும் அரிஞ்சயனும் மிகக் குறைவான காலமே ஆட்சி செய்தனர். அரிஞ்சயனின் மகன் இரண்டாம் பராந்தகன் என்னும் பராந்தக சுந்தர சோழனைத்தான், பொன்னியின் செல்வனான ராஜராஜனின் தந்தையைத்தான், திரைப்படத்தில் பார்த்திருப்பீர்கள். இவர்களை வெறும் திரைப்பட உருவங்களாகக் காணாமல் அவர்கள் நிஜமாகவே விட்டுச் சென்ற கோவில்களின் அடிப்படையில் நாம் பார்க்க உள்ளோம்.

முதலாம் பராந்தகன் காலத்தில் உருவான கோவில்கள் ஒவ்வொன்றும் சொக்கத் தங்கத்தை உருக்கி வார்க்கப்பட்டவை என்று சொல்லலாம். கல்லை இப்படியும் செய்யமுடியுமோ என்று சொக்கி அதிசயித்துப் போவதைத்தவிர நமக்கு வேறு வழியில்லை. சோழர்களின் இந்தக் கோவில் கட்டுமானக் கலைக்கு அடித்தளம் இட்டவனே ஆதித்த சோழன்தான். அவனுக்குமுன் விஜயாலயன் ஏதும் கட்டியதாகவோ அல்லது கட்டி அது எஞ்சியதாகவோ நமக்குத் தகவல்கள் இல்லை. திருச்சி-புதுக்கோட்டை சாலையில் இருக்கும் நார்த்தாமலை என்னுமிடத்தில் விஜயாலய சோழீசுவரம் என்ற பெயரில் ஒரு கோவில் இருக்கிறது. ஆனால் இது நிச்சயமாக விஜயாலயன் காலத்தில் எழுப்பப்பட்டது கிடையாது. விஜயாலயன் காலத்தில் மிகச் சிறிதாக முத்தரையர்களால் உருவாக்கப்பட்டு, பாண்டியர் காலத்தில் விரிவாக்கப்பட்டு, விஜயாலயன் பெயர் மட்டும் புழங்குவதாக இந்தக் கோவில் இருக்கவேண்டும்.

ஆதித்தன் தொடங்கி, முதலாம் பராந்தகன் காலத்தில் விரிந்து, இரண்டாம் பராந்தகன், செம்பியன் மாதேவடிகள், மதுராந்தக உத்தம சோழன் ஆகியோர் காலத்தில் சோழ மன்னர்களாலும் அவர்களுடைய ஆட்சிக்குக்கீழ் இருந்த முத்தரையர், இருக்குவேளிர், பழுவேட்டரையர் ஆகியோர்களாலும் கட்டப்பட்டு இன்றும் நாம் அனைவரும் சென்று பார்க்கக்கூடிய அளவில் நூற்றுக்கணக்கில் கற்றளிகள் உள்ளன. இதற்குப் பின்னர்தான் ராஜராஜன் என்னும் அருள்மொழிவர்மனின் ஆட்சி வருகிறது. அவன் சிறிய கோவில்கள் என்று இருந்ததை மாபெரும் கோவில் என்னும் கனவாக மாற்றுகிறான்; தஞ்சைப் பெரியகோவில் உருவாகிறது.

ஆனால் நாம் பெரும்பாலும் முற்காலச் சோழர்களைத் தாண்டிச் செல்லப்போவதில்லை. காரணம் போகப்போக உங்களுக்கே தெரியவரும்.

பராந்தகனிடமிருந்தும் சோழர்களிடமிருந்தும் கொஞ்சம் விலகி, தக்ஷிணாமூர்த்திக்கு வருவோம். கை, கால் இரண்டுமே உடைக்கப்பட்ட சிற்பம். யாரால் உடைக்கப்பட்டது என்று தெரியவில்லை. இன்று இந்தக் கோவில் வழிபாட்டில் இல்லை. அமைதி தவழும் முகம். கோவில் சுவரில், கோஷ்டத்தில், தெற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். நான்கு கைகள். முன்னிரு கைகள் உடைந்திருந்தாலும் பின் கை ஒன்றில் அக்கமாலை (ருத்திராக்ஷம்) உள்ளது. இரு கைகளும் ஏதோ ‘முத்திரை’யைக் காண்பிக்கின்றன. காலடியில் ஒரு பாம்பு, ஒரு மான். படுத்திருக்கும் சற்றே குள்ளமான ஓர் உருவத்தின்மீது ஒரு கால். மற்றொரு கால், மடித்துவைக்கப்பட்டுள்ளது.

தலையில் முடி அலங்காரம் மிகச் சுவாரசியமானதாக உள்ளது. சடைகள் விரிந்து, சுருட்டப்பட்டு, சிறு சிறு குழல்களாக, பூக்களை வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது. நெற்றியில் ஒரு பட்டை, அதில் ரத்தினம்போல் அலங்காரம். காதுகளில் குண்டலங்கள். தலைச் சடையில் ஒரு மண்டையோடு அலங்காரமாகச் செருகப்பட்டுள்ளது.

அவர் ஒரு மரத்தின்கீழ் அமர்ந்திருக்கிறார். அந்த மரம் கல்லால மரமாம். அதாவது நாம் பொதுவாகப் பார்க்கும், விழுதுகள் கொண்ட ஆலமரம் அல்ல. உயிரியல் பெயர் முறைப்படி ஆலமரத்துக்கு Ficus religiosa என்று பெயர், ஆங்கிலத்தில் Fig அல்லது Peepal என்றும் அழைப்போம். அதிலிருந்து சற்றே வேறுபட்ட Indian Rock Fig எனப்படும் Ficus arnottiana எனப்படும் மரம் இது. இந்த மரத்தில் பல விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மரத்தின் பொந்திலிருந்து ஓர் ஆந்தை எட்டிப்பார்க்கிறது. தேவாங்குபோல் ஏதோ ஒன்று மரத்தில் ஏறிச் சென்றுகொண்டிருக்கிறது. ஓரத்தில் குரங்கு ஒன்று இருப்பதுபோல் தெரிகிறது. மரத்திலிருந்து அக்கமாலை ஒன்று தொங்குகிறது. அருகில் ஒரு பை தொங்குகிறது.

சரி, இந்தச் சிற்பத்தைச் சுற்றிலும் என்ன நடக்கிறது. தக்ஷிணாமூர்த்தி சிலையின் இரு பக்கங்களையும் மும்மூன்றாகப் பிரித்து ஆறு சிற்பத் தொகுதிகள் காணக்கிடைக்கின்றன. மேலே நமக்கு இடதுபுறம் காதுகளை மூடித் துணி அணிந்த இருவர், சற்றே குள்ளமானவர்கள், உட்கார்ந்திருக்கின்றனர். வலதுபுறம், ஓர் இணை – தொடர்ந்து இந்திய சமயக் கலைமரபைப் பின்பற்றிவருவோருக்கு இவர்கள் கின்னரர்கள் என்று புரியவரும். கையில் யாழ் போன்ற இசைக்கருவி வைத்திருக்கிறார்கள். கின்னரர்களுடைய மேலுடம்பு மனிதர்கள் போன்றும் கீழுடம்பு பறவைகள் போன்றும் இருக்கும்.

இடைப்பட்ட பகுதியில் ஒருபக்கம் சிங்கங்கள், இன்னொரு பக்கம் புலிகள், மிக அமைதியாகத் தூங்குகின்றன. கீழே பக்கத்துக்கு இருவராக இருவர் அமர்ந்திருக்கின்றனர். நடுவில் இருக்கும் தக்ஷிணாமூர்த்தி உபதேசம் செய்பவர் என்றால் அருகில் அமர்ந்திருக்கும் இருவரும் அந்த உபதேசத்தைக் கேட்கும் சீடர்கள் எனலாம்.

யார் இந்த தக்ஷிணாமூர்த்தி?

சாட்சாத் சிவனேதான் இந்த தக்ஷிணாமூர்த்தி. அனைத்துக் கலைகளையும் கற்றுக்கொடுக்க வந்த குரு இவர். இவர்தான் ஆதிகுரு என்று அறியப்படுபவர். கலைகள் என்றால், யோகம், இசை, அனைத்துவிதமான வித்தைகள், சாத்திரம் என்று அனைத்தும். இவர் தென்திசைக் கடவுள், தென்முகக் கடவுள் என்றெல்லாம் தமிழில் அழைக்கப்படுகிறார். தக்ஷிணம் என்றால் தெற்கு. ஆலமரத்தின்கீழ் அமர்ந்திருப்பதால், சங்க இலக்கியங்களிலும் சிலப்பதிகாரத்திலும் ஆலமர் செல்வன், ஆலமர் கடவுள் என்றும் அழைக்கப்பட்டார்.

வடமொழியில் ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம், தக்ஷிணாமூர்த்தியின் பண்புகளை விளக்குவது. மௌனமொழியால் தம் சீடர்களின் மனத்தில் அறிவைப் புகட்டும் ஆசான் என்றே தொடங்குகிறார் சங்கரர். யௌவனம் மிகுந்த குருவின்முன் வயதுமுதிர்ந்த ரிஷிகள் சீடர்களாக அமர்ந்திருப்பது என்னே ஆச்சரியம் என்கிறார் சங்கரர். குரு மௌனமாக இருக்கிறார். மௌனம்தான் அவருடைய விளக்கம். அந்த மௌனமே சீடர்களின் மனத்தில் உள்ள சந்தேகங்களை அறுத்தெறிகிறது என்கிறார் சங்கரர்.

அவர் இருக்கும் இடத்தில் பகை இல்லை. அதனால்தான் எந்தப் பயமுமின்றி மானும் சிங்கம் புலிகளும் அருகருகே அமைதியாகப் படுத்துக்கிடக்கின்றன. அஞ்ஞானத்தின் உருவாகிய முயலகன் (வடமொழியில் அபஸ்மாரன்) அவருடைய காலடியில் கிடக்கிறான். சுற்றி பல ரிஷிகள் அமர்ந்திருக்கவேண்டும். ஆனால் சிற்பத்தில் இரண்டு, நான்கு அல்லது அதற்குமேல் இடம் இருப்பதற்குத் தக்கவாறு காண்பிப்பார்கள். கின்னரர்கள்போல் மறுபக்கம் இருப்போருக்குக் காதுபொத்தர்கள் என்று பெயர் என்கிறார் தொல்லியலாளர் ஶ்ரீதரன். கல்லால மரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் பையில் என்ன இருக்கிறது? திருநீறுதான். அந்தப் பைக்குப் பொக்கணம் என்று பெயர் என்கிறார் ஶ்ரீதரன்.

தக்ஷிணாமூர்த்தியின் படிமவியலை விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் குடவாயில் பாலசுப்ரமணியன். மாபெரும் அறிஞர் இவர். தக்ஷிணாமூர்த்தியின் இருபுறமும் அமர்ந்திருப்பது சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் சனகாதி முனிவர்கள் என்றும் கர்ணபிராவிதர் என்று வடமொழியில் அழைக்கப்படும் தவசீலர்களே தமிழில் காதுபொத்தர் என்று அழைக்கப்பட்டு, காதுகளைத் துணியால் மூடிக் காண்பிக்கப்படுவோர் என்றும் பாலசுப்ரமணியன் குறிப்பிடுகிறார். அவர்கள் சிவ தத்துவம்தவிர வேறு எதையும் கேட்க விரும்பாதவர்களாகத் தங்கள் காதுகளைப் பொத்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த முக்காடிட்ட உருவங்கள் தமிழகத்தில் சீனிவாசநல்லூரிலும் திருக்கருகாவூரிலும் மட்டும்தான் காணப்படுகின்றன என்னும் இவர், சுந்தரமூர்த்தி நாயனாரின் திருமுறையிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்:

காது பொத்தரைக் கின்னரர் உழுவை
கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயம்
கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக்
கோல ஆல்நிழற் கீழறம் பகர
வேதஞ் செய்தவர் எய்திய இன்பம்
யானுங் கேட்டுநின் இணையடி யடைந்தேன்
நீதி வேதியர் நிறை புக ழுலகில்
நிலவு தென்றிரு நின்றியூ ரானே

இந்த வரிகளைப் படித்தாலே போதும். அப்படியே, சீனிவாசநல்லூரின் சிற்பத்துக்குப் பொருந்திப்போகிறதல்லவா? காதுபொத்தர், டிக். கின்னரர், டிக். கடிக்கும் பன்னகம் (பாம்பு), டிக். பிடிக்க முடியாத சீயம் (சிங்கம்), டிக். கோதில் மாதவர் குழு – ரிஷிகள், டிக், ஆல் நிழலின் கீழ் அறம் பகர்பவர் – தக்ஷிணாமூர்த்தியாகிய சிவன்.

சிற்பிகள் எந்த அடிப்படையில் இதுபோன்ற சிற்பங்களை உருவாக்குகிறார்கள்? சுந்தரர் தேவாரத்தைப் படித்தா? சுந்தரரின் காலம் எட்டாம் நூற்றாண்டு. ஆதிசங்கரரின் ஸ்தோத்திரத்தைப் படித்தா? அவருடைய காலமும் எட்டாம் நூற்றாண்டாகத்தான் இருக்கவேண்டும் என்கிறார்கள். அப்படியானால் கோவில்கள் எந்த அடிப்படையில் கட்டப்பட்டன? எட்டாம் நூற்றாண்டுக்குமுன் கோவில் கட்டுமானக் கலை, படிம இலக்கணம் ஆகியவை எங்கே குறிப்பிடப்பட்டுள்ளன?

சிவன் கோவில் கட்டுமானத்துக்கு அடிப்படையாக இருப்பது சைவ ஆகமங்கள் எனப்படும் நூல்கள் ஆகும். காமிகாகமம், காரணாகமம், அஜிதாகமம், சுப்ரபேதாகமம் என்று தொடங்கி 28 ஆகமங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆகமங்கள், ஒரு சிவன் கோவில் எவ்வாறு அமைக்கப்படவேண்டும், அக்கோவிலில் என்னென்ன கடவுள் சிலைகளைப் பிரதிஷ்டை செய்யவேண்டும், கோவில்களில் நித்யப்படி பூஜை என்னென்ன, திருவிழாக்கள் எவை எவை என்று அனைத்தையும் குறிப்பிடுகின்றன. ஒரு கோவிலை ஒரு குறிப்பிட்ட ஆகமத்தின் அடிப்படையில் நிர்மாணிப்பார்கள். அக்கோவிலைக் கட்டக்கூடிய ஸ்தபதியானவர் கோவிலின் பூசகராகிய சிவாச்சாரியாருடனும் கோவிலைக் கட்டும் யஜமானனுடனும் சேர்ந்து கோவிலின் விஸ்தீரணம், கோவிலைக் கட்டுவதற்கான நிதி ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுமானப் பொருள்கள் முதற்கொண்டு கட்டுமானம், சிற்பங்கள் ஆகியவற்றைத் தீர்மானிப்பார்.

ஸ்தபதிகள், கட்டுமானத்தைத் தீர்மானிக்கும் வாஸ்து சாஸ்திரம், படிம இலக்கணங்களைத் தரும் சிற்ப சாஸ்திரம் ஆகியவற்றுக்கெனப் பிரத்யேக நூல்களை வைத்திருப்பார்கள். இது இவர்களுக்கென்றே இருப்பது. அதன் அடிப்படையில் அவர்கள் சிற்பத்தின் கூறுகளையும் அளவுகளையும் தீர்மானிப்பார்கள்.

ஒவ்வொரு கடவுளுக்கும், கடவுளின் வடிவங்களுக்கும் ஆகமங்கள் தியான ஸ்லோகம் என்ற ஒன்றைத் தருகின்றன. தக்ஷிணாமூர்த்திக்கென குறிப்பிட்ட ஆகமத்தில் ஒரு தியான ஸ்லோகம் இருக்கும். சிற்பியானவர், இந்த ஸ்லோகத்தை மனத்தில் இருத்தி தியானம் செய்துகொண்டே இருப்பார். இந்த தியானத்தின் இறுதியாகச் சிற்பியின் மனத்தில் ஓர் உருவம் தோற்றமளிக்கும். அதனை அவர் வடிக்கத் தொடங்கிவிடுவார். இந்தியப் பாரம்பரியத்தில், கோட்டோவியமாகச் சிற்பங்களை வரைந்துவைத்து, அதனைப் பார்த்துச் செதுக்குவது என்பது கிடையாது என்று பாரம்பரியச் சிற்பிகள் சொல்கிறார்கள். மனத்தில் இருப்பதை அப்படியே உளி, சுத்தியல் கொண்டு உருவாக்கிவிடவேண்டியதுதான்.

இவையெல்லாம் பாரம்பரியக் கலைகள் என்றால் தக்ஷிணாமூர்த்தியை எந்த அடிப்படையில் இவர்கள் செதுக்கியுள்ளனர் என்று நாம் எப்படித் தெரிந்துகொள்வது? நம் நல்லூழ், டி.ஏ.கோபிநாத ராவ் என்னும் தொல்லியலாளர் மிகுந்த பிரயாசையுடன் Elements of Hindu Iconography [இந்துப் படிமவியலின் கூறுகள்] என்ற மாபெரும் நூலை நான்கு தொகுதிகளாக எழுதியுள்ளார். இதற்காக அவர் சைவ ஆகமங்கள், வைணவ சம்ஹிதைகள், சாக்த தந்திரங்கள், சிற்ப நூல்கள், வாஸ்து கிரந்தங்கள் ஆகியவற்றைத் தீவிரமாகக் கற்று அவற்றிலிருந்து பெற்றவற்றைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். இந்தப் புத்தகங்கள் இன்று அச்சு நூலாகவும் மின்புத்தகமாகவும் கிடைக்கின்றன.

தக்ஷிணாமூர்த்தி சிற்பம் பற்றி கோபிநாத ராவ் எழுதிய பல்வேறு பக்கங்களைப் படிக்கும்போது ஏகப்பட்ட தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. தக்ஷிணாமூர்த்தி நான்கு வடிவங்களில் சிற்பமாகக் கிடைக்கிறார்: யோக தக்ஷிணாமூர்த்தியாக, வீணாதார தக்ஷிணாமூர்த்தியாக, ஞான தக்ஷிணாமூர்த்தியாக மற்றும் வியாக்கியான தக்ஷிணாமூர்த்தியாக. நாம் சீனிவாச நல்லூரில் காண்பது வியாக்கியான தக்ஷிணாமூர்த்தி – சாத்திரங்களைப் போதிப்பவர். அந்நிலையில்தான் அவரைச் சுற்றிப் பல ரிஷிகள் அமர்ந்திருப்பர். ஆனால் வெவ்வேறு ஆகமங்கள் அவர்களை வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றன. நாம் மேலே காண்பதுபோல சனத்குமாரர்கள் என்று ஆகமங்கள் சொல்லவில்லை. அம்சுபேதாகமம், இந்த ரிஷிகளை நாரதர், ஜமதக்னி, வசிஷ்டர், பிருகு, பாரத்வாஜர், சனகர், அகஸ்தியர் என்கிறது. காமிகாகமமோ, இவர்களை கௌசிகர், கஷ்யபர், பாரத்வாஜர், அத்ரி மற்றும் கௌதமர் என்கிறது. காரணாகமமோ, அகஸ்தியர், புலஸ்தியர், விசுவாமித்திரர், ஆங்கீரசர் என்கிறது. வியாக்கின தக்ஷிணாமூர்த்தியாக, அவருடைய கரங்களில் வியாக்கியான முத்திரை காணப்படுகிறது. இந்த முத்திரைகளைப் பற்றியே நாம் தனியாகக் காண இருக்கிறோம்.

ஞான தக்ஷிணாமூர்த்தியாக, இவர் கிட்டத்தட்ட வியாக்கியான தக்ஷிணாமூர்த்தி போன்றே காணப்படுவார். ஆனால் கூடவே அவருடைய பின் வலது கரத்தில் அக்கமாலை (ருத்திராக்‌ஷம்) இருக்கும்.

யோக தக்ஷிணாமூர்த்தியாக அவர் அமர்ந்திருக்கும் நிலையில் கால்களை உயர்த்தி யோகபட்டம் கட்டப்பட்டிருக்கும். அவருடைய முன் வலதுகை யோகமுத்திரையில் இருக்கும்.

இறுதியாக வீணாதார தக்ஷிணாமூர்த்தியாக அவர் கையில் வீணை ஏந்தி வாசித்துக்கொண்டிருப்பார்.

0

முதலாம் பராந்தக சோழனின் சீனிவாச நல்லூருக்கு முன்னதாக தக்ஷிணாமூர்த்தி சிற்பமே நமக்குக் கிடைக்கவில்லையா?

ஏன் இல்லை?

இங்கும் பல்லவர்களே நமக்கு முன்னோடி. மகேந்திரவர்மனின் குகைக்கோவில்கள் ஆறாம் நூற்றாண்டு இறுதிமுதலே நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவை எவற்றிலும் தக்ஷிணாமூர்த்தி வடிவம் நமக்குக் கிடைப்பதில்லை. முதன்முதலில் நமக்குக் கிடைப்பது மாமல்லையில் உழக்கெண்ணை ஈசுவரர் என்ற கட்டுமானக் கோவிலில்தான். இது மகிஷமர்தினி மண்டபத்தின்மேல் கட்டப்பட்டது. இக்கோவிலின் சுவரில் தென்திசையைப் பார்த்துக்கொண்டு கால்களில் யோகபட்டம் கட்டிய யோக தக்ஷிணாமூர்த்தி தென்படுகிறார். ஆலமரத்தின்கீழ் அமர்ந்திருக்கிறார். மற்றபடி பெரும்பாலும் இந்தச் சிற்பம் தேய்ந்துபோய்விட்டது. ஆயினும் பல்லவர் காலத்துக்கே உரிய பேரழகினைக் காணமுடிகிறது. இந்தக் கோவில் ராஜசிம்மப் பல்லவன் எனும் இரண்டாம் நரசிம்மவர்மன் காலத்தையது. ஏழாம் நூற்றாண்டின் இறுதி அல்லது எட்டாம் நூற்றாண்டின் தொடக்கம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

மாமல்லை உழக்கெண்ணை ஈசுவரர் கோவில் தக்ஷிணாமூர்த்தி

அடுத்து, காஞ்சிபுரத்தில் ராஜசிம்மனால் கட்டப்பட்ட பல சிறு கோவில்களில் தக்ஷிணாமூர்த்தி வடிவங்களைத் தொடர்ச்சியாகக் காணமுடிகிறது. அதன் உச்சகட்டமாகக் காஞ்சி கைலாசநாதர் கோவிலில் மிகப் பிரம்மாண்டமான, மிக அழகான யோக தக்ஷிணாமூர்த்தியைக் காணமுடிகிறது.

காஞ்சி கைலாசநாதர் கோவில் தக்ஷிணாமூர்த்தி
காஞ்சி கைலாசநாதர் கோவில் தக்ஷிணாமூர்த்தி, படம்:வி.கே.ஶ்ரீனிவாசன்

பல்லவர்கள் போன்றே பாண்டியர்களின் குகைக்கோவில்களில் எங்குமே தக்ஷிணாமூர்த்தியைக் காண முடிவதில்லை. ஆனால் பாண்டியர்களின் ஒரேயொரு ஒற்றைக்கல் தளியான கழுகுமலை வெட்டுவான்கோவில் என்னும் மாபெரும் அதிசயத்தில் மிகப் பிரத்யேகமாக, எந்த ஆகமத்திலும் கொடுக்கப்படாத ஒரு தக்ஷிணாமூர்த்தி வடிவம் கிடைக்கிறது. அக்கோவிலின் கிரீவம் எனும் கழுத்துப்பகுதியில், மிருதங்கம் வாசிக்கும் ஒரு தக்ஷிணாமூர்த்தி வடிவம் உள்ளது.

கழுகுமலை வெட்டுவான்கோவில் தக்ஷிணாமூர்த்தி
வெட்டுவான்கோவில் தக்ஷிணாமூர்த்தி, படம்: சீனிவாசன் ராஜகோபாலன்

வீணை வாசிக்கும் தக்ஷிணாமூர்த்தி சிற்பங்கள் சோழர்களின் பல கோவில்களில் காணக்கிடைக்கின்றன. ஆதித்த சோழனும் முதலாம் பராந்தக சோழனும் இணை அரசர்களாக இருந்த காலத்தில் கட்டப்பட்டது நாகேசுவரன் கோவில் என்று அழைக்கப்படும் கும்பகோணத்தில் உள்ள கோவில். இன்று கும்பகோணத்தில் திரும்பிய பக்கமெல்லாம் பல கோவில்கள் இருந்தாலும், நாகேசுவரன் கோவில்தான் காலத்தால் முற்பட்டது. அந்தக் கோவிலின் விமானத்தின் கழுத்துப் பகுதியில் வீணை வாசிக்கும் தக்ஷிணாமூர்த்தியை அமர்ந்த நிலையில் காணலாம்.

நாகேசுவரன் கோவில் தக்ஷிணாமூர்த்தி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

கொடுத்திருக்கும் இடத்துக்குள்ளாக அமர்ந்த நிலையில் அல்லது நின்ற நிலையில், வீணாதாரராக, யோகமூர்த்தியாக, ஞானமூர்த்தியாக, அல்லது வியாக்கியானமூர்த்தியாக தக்ஷிணாமூர்த்தியை அமைக்கமுடியும். தக்ஷிணாமூர்த்தி மட்டும் தனியாகவா, அல்லது முனிவர்கள், கின்னர, கிம்புருடர்கள், விலங்குகள், பாம்பு, அபஸ்மாரன், அனைத்துவித அலங்காரங்களோடுமான கல்லால மரம் என்று அனைத்தும் சேர்ந்தா என்பதை இருக்கும் இடம்தான் முடிவு செய்யும்.

0

இந்தியா முழுதும் சிவனுக்கான கோவில்கள் பல உண்டு. தக்ஷிணாமூர்த்தி என்ற கருத்தாக்கமும் அதன் உள்ளார்ந்த தத்துவமும் இந்தியா முழுதும் பரவியிருந்தது. ஆனால் ஆச்சரியமாக, தமிழகத்தில் இருக்கும் எண்ணிக்கையில் தக்ஷிணாமூர்த்தி சிற்பங்கள் பிற மாநிலங்களில் இல்லை. சாளுக்கியர்களின் பட்டதகல் விரூபாக்ஷர் கோவிலில் ஒரு தக்ஷிணாமூர்த்தி சிற்பம் உள்ளது. ஆனால் பெரும்பாலும் பிற இடங்களில் காண்பது கடினமே. தமிழகத்தைப் பொருத்தமட்டில் பல்லவர், பாண்டியர் காலம் தொடங்கி (ஆறாம் நூற்றாண்டு இறுதிமுதல்) சோழர் காலம் வழியாக, பின் உருவான எந்தச் சிவன் கோவிலிலும் தென்திசை என்றால் தக்ஷிணாமூர்த்தி என்பது உறுதி. இன்றைக்குக் கட்டப்படும் தமிழக சிவன் கோவில்களிலும் இதுதான் நிலை.

ஆனால் இன்று மிகக் குழப்பமாக தக்ஷிணாமூர்த்தியாகிய சிவன் என்னும் குருவை, குரு என்னும் வியாழன் கிருகத்துடன் கலந்துகட்டி, குருப் பெயர்ச்சியின்போது தக்ஷிணாமூர்த்தியை வழிபடுகிறார்கள். தக்ஷிணாமூர்த்தியை என்றும் வழிபடலாம் என்பது வேறு விஷயம். வடமொழியில் குரு என்றால் அது ஆசிரியரையும் குறிக்கும், கனம் என்பதையும் குறிக்கும். சூரியக் குடும்பக் கோள்களில் மிகக் கனமான கோள் வியாழன் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவும்.

தக்ஷிணாமூர்த்தி என்றாலே தமிழகம்தான் என்று நினைத்துக்கொண்டிருந்த எனக்கு ஆந்திர-தெலுங்கானா எல்லையில் பேரதிர்ச்சி காத்திருந்தது. கர்னூலுக்கு அருகில் ஆலம்பூர் என்ற இடம் உள்ளது. அங்கே நவபிரம்மா கோவில்கள் என்று ஒன்பது கோவில்கள் உள்ளன. சாளுக்கியர்களின் காலத்தில் கட்டப்பட்டது. கிட்டத்தட்ட பட்டதகல் விரூபாக்ஷர் கோவிலுக்கும் சற்றுமுந்தைய காலமாக இருக்கவேண்டும். மிக மோசமான அந்நியத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள கோவில்கள் இவை. இங்குள்ள சிலைகள் தேடித் தேடி உடைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியே அவற்றைப் பார்த்தபடி வந்துகொண்டிருந்த எனக்கு, திடீரெனக் கண்ணில் பட்டது மிக அற்புதமான தக்ஷிணாமூர்த்தியின் சிலை.

ஆலம்பூர் தக்ஷிணாமூர்த்தி
ஆலம்பூர் தக்ஷிணாமூர்த்தி

அப்படியே சீனிவாசநல்லூரை நினைவுபடுத்தியது இந்தச் சிலை. காதுபொத்தர்கள், கின்னரர்கள் சூழ, யௌவனமே வடிவான மிக அழகான தக்ஷிணாமூர்த்தி யோகபட்டம் கட்டிக்கொண்டு யோகத்தில் ஆழ்ந்திருக்கிறார். அவருடைய கைகள் அனைத்தும் சிதைக்கப்பட்டுள்ளன. கீழே நான்கு ‘மா-தவர்கள்’ கைகட்டி ஆர்வமாக அமர்ந்திருக்கிறார்கள். மான் அல்லது அபஸ்மாரன் சிதைக்கப்பட்டிருக்கிறது.

மேலே நான் காண்பித்ததில் யார்தான் அதிக அழகு? சீனிவாசநல்லூரா, காஞ்சி கைலாசநாதரா, ஆலம்பூரா? இல்லை, வெட்டுவான்கோவிலா அல்லது எண்ணற்ற சோழர் கோவில்களில் தென் திசையில் அமர்ந்து யோகம் செய்துகொண்டிருக்கும், வீணை வாசித்துக்கொண்டிருக்கும், வியாக்கியானம் அருளிக்கொண்டிருக்கும் மூர்த்திகளா?

இப்போதைக்கு ஆலம்பூர்தான் என் நம்பர் ஒன்.

_____________

பிகு1: சிவன் கோவில்களில் மட்டுமல்ல, சில வைணவக் கோவில்களிலும் தெற்குத் திசையில் தக்ஷிணாமூர்த்தி சிற்பத்தை வைப்பது வழக்கம்!

பிகு2: எந்தச் சிற்பத்திலும் காண்பிக்கவேமுடியாத தக்ஷிணாமூர்த்தியின் மிக விரிவான ஓவியம் தஞ்சைப் பெரிய கோவிலின் சாந்தார அறையினுள் உள்ள ஓவியங்களில் காணப்படுகிறது. இதனை நம்மால் இன்று நேரில் காணமுடியாது. ஆனால் இந்த ஓவியம் டிஜிட்டல் படமாகக் கிடைக்கிறது. கோட்டோவியமாக மாற்றியும் கிடைக்கிறது. கல்லில் இல்லை என்பதால் இந்தத் தொடரில் நான் காண்பிக்கவில்லை.

பகிர:
பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர். சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் இளநிலையும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியக் கணிதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். வரலாறு, தொழில்நுட்பம், இந்தியவியல் போன்ற துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.View Author posts

8 thoughts on “கல்லும் கலையும் #2 – மௌனகுருவே!”

  1. பொன். மகாலிங்கம்

    தென்முகக் கடவுள் குறித்து இவ்வளவு விரிவான தகவல்களை இன்றுதான் படிக்கிறேன். காதுபொத்தர்கள் எனக்கு முற்றிலும் புதிய தகவல். அடுத்தமுறை தேடிப் பார்க்கவேண்டும். மிக்க நன்றி இந்தக் கட்டுரைக்கு.

  2. இக்கட்டுரை அளவிட முடியாத அளவுக்கு மகிழ்வைத் தருகிறது. எளிமையான, ஆனால் தெளிவான நடை. சுருக்கமாக, ஆனால் அனைத்து விபரங்களையும் உள்ளடக்கி எழுதும் நுட்பம். மிகவும் ரசித்துப் படிக்கிறேன். இதே பாணியில் இத்தொடரில் வரும் மற்ற கட்டுரைகளும் எழுதப்பட்டால், சமீப காலங்களில் இத்துறையைப் பற்றிய தமிழ் நூல்களில் ஆகச் சிறந்த நூலாக இது விளங்கக்கூடும்.

  3. விழுப்புரம் கோ.செங்குட்டுவன்

    தட்சிணாமூர்த்தி சிற்பம் குறித்த ஆய்வும் கட்டுரையும் மிகச் சிறப்பு. வாழ்த்துகள் சார்!

    விழுப்புரம் அருகே எசாலம் கிராமத்தில் உள்ள இராமநாதீஸ்வரர் கோயில். இராஜேந்திர சோழனின் குருவான சர்வசிவ பண்டிதரால் எழுப்பப்பட்ட ஆலயம்.

    இவ்வாலயத்தின் விமானத்தில் உள்ள வீணாதார தட்சிணாமூர்த்தி சிற்பம் அழகும் சிறப்பும் வாய்ந்தது!

  4. அருமையான பதியவு. முருகனைப் போலவே தக்ஷினாமூர்த்தியும் வட மானிலங்களில் பெரிய அளவிள் வழிபடாதது ஆச்சரியமே.
    ஒரு கேள்வி – சனகாதி முனிவர்கள் முதலில் வைகுண்டம் ப்ரம்மலோகம் கைலாசம் உபதேசம் வேண்டி சென்ற்தாகவும், அங்கு திருமால், ப்ரம்மன் மற்றும் சிவன், தத்தம் மனைவிகளுடன் இல்லறத்தில் இருப்பதைக்கண்டடு மனம் நொந்ததான், பரமசிவனே ப்ரம்மச்சாரி வேடம் பூண்டு அவர்களுக்கு உபதேசம் செய்தததாக கதை கேட்டிருக்கிறேன்.அது எந்த புராணம், அல்லது தல புராணத்தில் உள்ளது என்று தெரியுமா?

  5. சைவ ஆகமங்களின் காலம் எது என்று கூறவில்லையே?

    1. ஆகமங்களின் காலம் குறித்துச் சொல்ல என்னிடம் தகவல்கள் இல்லை. ஆனால் நிச்சயமாக பல்லவர் காலத்துக்கு முன்பே இருந்தது தெளிவாகிறது.

  6. தக்கோலம்(திருவூறல்) தலத்தில் உள்ள அபராஜித பல்லவர் காலத்திய தட்சிணாமூர்த்தி உத்கடி ஆசனத்தில் அமர்ந்துள்ளார்.
    என்னுடைய நம்பர் ஒன்

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *