Skip to content
Home » கல்லும் கலையும் #3 – மானம் இலாப் பன்றி!

கல்லும் கலையும் #3 – மானம் இலாப் பன்றி!

மாமல்லபுரத்தின் மிகச் சிறந்த குகைக்கோவில் என்றால் அது வராக மண்டபம்தான். மண்டபத்தின்முன் ஓர் அகழி. இரு யாளித் தூண்கள் நம்மை வரவேற்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போதே ஒற்றைக் கருவறை தெரிகிறது. அதன் உள்ளே யாரும் இல்லை. இரு துவாரபாலகர்கள் தெரிகின்றனர். கருவறைக்கு முன்னர் உள்ள அர்த மண்டபத்தில் சுற்றிலும் பல சிற்பங்கள் தெரிகின்றன. அகழியைத் தாண்டி இடது வலமாகச் சிற்பங்களைப் பார்க்கலாம் என்று உள்ளே நுழைகிறீர்கள். அவ்வளவுதான். உங்களை கண்களை அதற்குமேல் நகர்த்திவிட முடியாதவாறு முதல் சிற்பமே உங்களைக் கவ்வி இழுத்துவிடுகிறது.

சுவரில் கிட்டத்தட்ட சதுர வடிவிலான சட்டகம். அதனுள்ளே ஒன்பது உருவங்கள். மையத்தில் நம் கதையின் நாயகனான வராக மூர்த்தி. அவருடைய இடதுகால் தரையில் அழுந்தப் பதிந்துள்ளது. வலது கால் ஐந்து தலை நாகத்தின்மீது. அந்த நாகம் ஆதிசேஷன்.

வராக மண்டபம், மாமல்லபுரம்
வராக மண்டபம், மாமல்லபுரம்

விஷ்ணுவுக்கு ஆதிசேஷன் எப்படிப்பட்டவன் என்று பொய்கையாழ்வார் தன் பாசுரத்தில் விளக்குகிறார்:

சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்,
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்
புணையாம் மணி விளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு

விஷ்ணு நடந்துபோனால் ஆதிசேஷன் குடையாகி அவர்மீது வெயிலும் மழையும் வீழாமல் பார்த்துக்கொள்வான். விஷ்ணு உட்காரப்போனால், ஆதிசேஷன் சட்டென்று சிம்மாசனம் எனும் இருக்கை ஆகிவிடுவான். நின்றால் காலில் செருப்பாக ஆவான். பாற்கடலில் விஷ்ணு சயனிக்க நினைத்தால் பூம்பட்டுப் போன்ற பஞ்சு மெத்தையாகிவிடுவான்.

அந்த ஆதிசேஷன்தான் வராகர் விசுவரூபம் எடுக்கும்போது அவர் கால் அழுந்தப் பதியுமாறு தன் தலைகளை விரித்து நிற்கிறான். வராக மூர்த்தியின் காலடியில் அலைகள் தாமரை மலர்களை வீசியடித்தபடி புரண்டுகொண்டிருக்கின்றன. அவரின் பின்னிரு கைகள் சக்கரமும் சங்கும் தாங்கி நிற்கின்றன. சக்கரமானது, பிரயோகச் சக்கரம் எனும்படியாக அவர் கையிலிருந்து விர்ரென்று புறப்பட ஆயத்தமாக நின்றுகொண்டிருக்கிறது. முன்னிரு கைகள் ஒரு பெண்ணை ஆரத் தழுவிக்கொண்டிருக்கின்றன. அந்தப் பெண் அவரது வலது தொடையில் உட்கார்ந்திருக்கிறாள். வராக மூர்த்தியின் ஒரு கை அவள் இடையைச் சுற்றி வளைத்துள்ளது. மற்றொரு கையோ அவளது காலைப் பிடித்து அவள் விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறது. அவள்தான் பூமித்தாய்.

வராக மூர்த்தியைச் சற்றே கூர்ந்து கவனியுங்கள். கழுத்து வரை மனித உடலாகவும் கழுத்துக்குமேல் காட்டுப் பன்றியின் முகமாகவும் உள்ளது. அந்த முகம் வாஞ்சையுடன் பூமிதேவியின் மார்பை முகர்கிறது. தலையில் மணிகள் பதித்த மகுடம் தெரிகிறது.

வராகத்துக்கு இரு புறமும் சூரிய சந்திரர்கள், நடந்துகொண்டிருப்பது விசுவரூபம் என்பதை அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். வராகருக்குப் பக்கத்தில் நான்கு தலைகளுடன் பிரம்மா (இங்கே உடைந்துள்ளது). பிரம்மாவுக்கு நான்கு கைகள், ஒன்றில் ஸ்ருக் எனப்படும் நெய்க்கரண்டி. அருகில் ஜடைமுடியுடன் ஒரு ரிஷி. நாரதராக இருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள். வராகரைப் பார்த்துக் கூப்பிய கரங்களுடன் இருவர்; ஒரு பெண், அவள் ஆதிசேஷனின் மனைவியாக இருக்கலாம். இன்னொரு ரிஷி.

இது ஓர் இயங்கு சிற்பம். ஒருமுறை சிற்பத்தைப் பார்த்துவிட்டு கண்களை மூடிக்கொள்ளுங்கள். இப்போது, நீரைக் கிழித்துக்கொண்டு வராக ரூபம் கையில் பூமிதேவியைப் பற்றிக்கொண்டு அப்படியே உயர உயர விசுவரூபமாக எழுந்துகொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இந்தக் காட்சி முடிந்துவிடவில்லை. விசுவரூபத்துக்கு ஏது முடிவு? இந்நிகழ்வு அப்படியே நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. வராகத்தின் உடலிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்துகொண்டிருக்கிறது. பூமிதேவிக்கும் அப்படியே.

ஆண்டாள், நாச்சியார் திருமொழியில் பாடுகிறாள்:

பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொரு நாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே

இரணியாட்சன் என்ற அரக்கன் பார்மகளை – பூமிதேவியைச் சுருட்டி எடுத்துச் சென்று பாதாளத்தில் நீரின் அடியில் கொண்டுபோய் வைத்துவிடுகிறான். பாசி தூர்த்துக்கிடக்கிறாள் அவள். பிரமனின் படைப்புத் தொழில் நடைபெறவேண்டும் என்றால் பூமி மீண்டும் வெளியே வரவேண்டும். எனவே திருவரங்கச் செல்வனான விஷ்ணு வராக ரூபம் எடுத்து, கடலுக்கு அடியில் சென்று, இரணியாக்ஷனைக் கொன்று, அழுக்கான உடம்பில் நீர் ஒழுக, ‘மானம் இலாமல்’, தம் உருவம் குறித்த கவலை இலாமல், பூமிதேவியை நீரின் அடியிலிருந்து அள்ளி எடுத்து மேலே கொண்டுவருகிறார்.

0

மாமல்லபுரத்துக்கு நூறுமுறைக்குமேல் சென்றுவந்திருப்பேன். முதன்முதலாக, வெறும் பயணியாக இல்லாமல், ஓரளவு புரிதலோடு சென்றது பேராசிரியர் சுவாமிநாதனோடுதான். காணொளிக் காட்சியின் உதவியோடு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள் குறித்தும் கட்டுமானங்கள் குறித்தும் எங்கள் அலுவலக ஊழியர்களுக்கு அவர் பாடம் எடுத்திருந்தார். பின்னர் ஒரு குழுவாக நாங்கள் சிலர் அவருடன் மாமல்லபுரம் சென்றோம். குகைக்கோவில்கள், ஒற்றைக்கல் தளிகள், கட்டுமானக் கோவில்கள், திறந்தவெளிப் புடைப்புச் சிற்பங்கள் என்று பலவற்றைக் குறித்தும் விளக்கினார். அந்த முதல் பயணத்தில் அவர் சொன்னதில் சிறிதுகூட மனத்தில் தங்கவில்லை. ஆனால் இந்த வராகப் பெருஞ்சிற்பத்தைப் பார்த்தது நன்கு ஞாபகம் இருக்கிறது. அதன்பின் ஒவ்வொரு முறை செல்லும்போதும் வேறு எந்த இடத்தைப் பார்த்தாலும் பார்க்காவிட்டாலும், வராக மண்டபத்துக்குப் போகாமல் இருக்கமாட்டேன்.

இந்தியர்கள் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யக்கூடிய திறன் பெற்றிருந்தார்களா என்ற கேள்வி, விநாயகர் குறித்து பிரதமர் நரேந்திர மோதி பேசிய ஒரு குறிப்பிட்ட பேச்சின் விளைவாக சர்ச்சை ஆனது. அறிவியல்ரீதியாக இன்றுகூட எளிதில் சாத்தியமாகாத ஒரு துறை இது. ஆனால் கலாபூர்வமாக பல்லவச் சிற்பிகள் இங்கே வெற்றிகண்டிருந்தனர். விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில் இரண்டு, வராகமும் நரசிம்மமும். மனித உடல் – காட்டுப்பன்றியின் தலை சேர்ந்தது நர-வராகம். மனித உடல் – சிங்கத்தின் தலை சேர்ந்தது நர-சிம்மம். பெரும்பாலும் நரசிம்மத்தைக் காண்பிக்கையில் சிங்க முகம் நேராக நம்மைப் பார்ப்பதுபோல் இருக்கும். மனிதக் கழுத்துக்கு நேர்மேல் சிங்க முகத்தை வைப்பது சிக்கலில்லாமல் நடந்துவிடும். ஆனால் வராகப் பன்றியின் முகமோ பக்கவாட்டில் வைக்கப்படவேண்டியிருக்கும். ஏனெனில் அவர் பக்கவாட்டில் உள்ள பூமிதேவியுடன் உறவாடவேண்டும். அப்போது பன்றியின் முகத்தை எந்தக் கோணத்தில் மனித உடலின்மீது பொருத்தவேண்டியிருக்கும்?

வராக அவதாரத்தை இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் சிற்பிகள் செதுக்கியுள்ளனர். ஒவ்வொருவரும் அவரவர் கற்பனையைப் பயன்படுத்தி இதனைச் சாதித்துள்ளனர். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் காணப்படும் சில வராகங்களையும் அவற்றுக்கு ஒப்பாக மாமல்லையின் வராகத்தையும் கீழே காட்சிப்படுத்தியுள்ளேன். பார்க்கும்போது உங்களுக்கே தெரியும், மாமல்லையில் தனித்துவத்துடன் இதனை எப்படிச் சாத்தியப்படுத்தியுள்ளனர் என்று.

கோபிநாத ராவ், வைகானச ஆகமத்தின் அடிப்படையில் இந்த உருவத்தை பூவராகம் அல்லது ஆதிவராகம் என்கிறார். ஆகமத்தின் அடிப்படையில் இந்த உருவம், மனித உடலும் காட்டுப்பன்றியின் முகமும் சேர்ந்ததாக இருக்கவேண்டும். நான்கு கரங்கள் இருக்கவேண்டும். அதில் சங்கு, சக்கரம். வலது கால் ஆதிசேஷனின் விரிந்த படத்தின்மீது பதிந்திருக்கவேண்டும். ஆதிசேஷனை அவருடைய மனைவியுடன் சேர்ந்தாற்போல் வடித்திருக்கவேண்டும். வராகத்தின் வலதுகை பூமிதேவியின் இடுப்பைச் சுற்றி இருக்கவேண்டும். வராகத்தின் முகம் சற்றே மேலே தூக்கியவாறு பூதேவியின் மார்பகத்தை முகர்வதுபோல் இருக்கவேண்டும். வராகத்தின் நிறம் சூரியன் மறையும் அந்தி நேரத்தின் சாம்பல் நிறத்தில் இருக்கவேண்டும். பூதேவி தன் கைகளை அஞ்சலி முத்திரையில் வைத்திருக்கவேண்டும். அவள் ஆடை உடுத்தி, பூக்களாலும் அணிகளாலும் அலங்கரிக்கப்பட்டவளாக இருக்கவேண்டும். அவளுடைய நிறம் கருமையாக இருக்கவேண்டும். அவள் வராக மூர்த்தியைப் பார்த்தவாறு முகத்தில் வெட்கமும் மகிழ்ச்சியும் ஒருசேர இருந்தாற்போல வடிக்கப்படவேண்டும். அவளது தலையின் உச்சி, வராகத்தின் மார்பளவுக்குமேல் இருக்கக்கூடாது. வராகம் தச தாளத்திலும் பூதேவி பஞ்ச தாளத்திலும் இருக்கவேண்டும்.

இதுதான் கோபிநாத ராவ், வைகானச ஆகமங்களிலிருந்து எடுத்துத் தரும் செய்தி. இது அப்படியே மாமல்லையின் வராக மண்டபத்து வராக மூர்த்தி சிற்பத் தொகுதிக்குக் கச்சிதமாகப் பொருந்திப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.

சைவ ஆகமங்கள் போன்றே, வைணவக் கோவில்களை நிர்மாணிக்க, வழிபாடு செய்ய வைகானச, பாஞ்சராத்ர சம்ஹிதைகள் எனப்படும் இரு பெரும் பிரிவுகளுக்கான கிரந்தங்கள் உள்ளன. கோபிநாத ராவ் தன் புத்தகத்தை எழுதிப் பதிப்பித்த காலத்தில் பாஞ்சராத்ர கிரந்தங்கள் அவ்வளவாகக் கிடைக்கவில்லை என்றும் கிடைத்தவற்றுள் சிற்பங்கள் குறித்த தகவல்கள் அதிகம் இல்லை என்றும், தான் பெரும்பாலும் வைகானச சம்ஹிதைகளின் அடிப்படையிலேயே சிற்பங்கள் குறித்துத் தகவல்களைக் கொடுத்துள்ளதாகவும் சொல்கிறார்.

மேலும் அவர், அக்னி புராணம், சில்ப ரத்தினம், விஷ்ணு தர்மோத்தரம் ஆகிய புராண, சிற்ப சாத்திர நூல்களிலிருந்தும் வராகச் சிற்பங்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதற்கான மேலதிகத் தகவல்களைச் சேகரித்துத் தருகிறார். மேலே நான் தந்திருக்கும் சில பிராந்திய வேறுபாடுகளைப் பாருங்கள்.

பாதாமியில் சாளுக்கியர் கால இரு வைணவ குகைகளில் வராகர் தம் உள்ளங்கையில் பூதேவியை ஏந்திக்கொண்டிருக்கிறார். பூதேவியோ வராகத்தின் முகம் அல்லது தோளைக் கையால் பிடித்துக்கொண்டிருக்கிறாள். ஹொய்சாளர் சிற்பமாக நான் கொடுத்துள்ள ஒன்றில், பூதேவி அவருடைய தோளிலேயே உட்கார்ந்திருக்கிறாள். ஹொய்சாளர் சிற்பங்களில், கொல்லப்பட்ட இரணியாக்ஷன்மீது கால்களை வைத்தபடி இருக்கிறார் வராகர். எல்லோரா சிற்பம் பாதாமி சிற்பத்தை ஒத்தபடி உள்ளது. கிழக்குக் கோடி ஒடிஷாவிலும் மேற்குக் கோடி குஜராத்திலும் கிடைக்கும் சிற்பங்களில் வராகத்தின் தூக்கிய முழங்கைமீது உட்கார்ந்திருக்கிறாள் பூதேவி. பஞ்ச தாளத்துக்கும் குறைவான தாளமானத்தில் – அளவுகளில் பூதேவி இந்தப் பல சிற்பங்களில் காணப்படுகிறாள்.

இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் வராக ரூபத்தை எடுத்துக்கொண்டால் இந்தியா முழுமையிலும் அடிப்படையில் பெரிய வித்தியாசம் இல்லை எனலாம். மேலும் நீங்கள் வராகத்தைக் காணாத பகுதி என்று இந்தியாவில் ஓரிடமும் இருக்காது.

வைகானச கிரந்தங்களின் அடிப்படையில் கோபிநாத ராவ் வராக ரூபத்தை மூன்றாகப் பிரிக்கிறார். முதலாவதாக நாம் மேலே பார்த்த பூவராகர் அல்லது ஆதிவராகர். இரண்டாவது யக்ஞ வராகர். மூன்றாவது பிரளய வராகர்.

யக்ஞ வராகர், நான்கு கரங்களுடன் பின்னிரு கரங்களில் சங்கு சக்கரத்துடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, அவரது இரு புறமும் லக்ஷ்மியும் பூதேவியும் உட்கார்ந்திருக்கவேண்டும். லக்ஷ்மி வலதுபுறம், கையில் தாமரையுடனும் பூதேவி இடதுபுறம் கையில் நீலோத்பலத்துடனும் இருப்பர். லக்ஷ்மி தங்கமும் மஞ்சளுமான நிறத்திலும் பூதேவி கருநிறத்திலும் இருப்பார்கள். வராகர் வெள்ளை நிறத்தில் இருப்பார்.

பிரளய வராகர், நீல நிறம் கொண்டவராக, சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். நான்கு கரங்கள். சங்கு, சக்கரம். அவரது வலதுபுறம் பூதேவி, முகத்தில் மிகுந்த ஆச்சரியத்துடன் வராகரை நோக்கித் திரும்பி அவரைப் பார்த்தபடி அமர்ந்திருப்பாள். அவள் கையில் அல்லி மலர் இருக்கும்.

இந்தக் கடைசி இரண்டு வடிவங்கள் கருவறையில் வழிபடப்படுமாறு இருப்பதை நீங்கள் சில விஷ்ணு கோவில்களில் பார்த்திருப்பீர்கள். கருவறையில் இருப்பதால் நல்ல படம் உங்களுக்குக் கிடைத்திருக்காது. ஆடை, பூ அலங்காரங்கள் இருப்பதனால் முகம், கைகள் தவிர வேறு எதுவும் உங்களுக்குக் காணக்கிடைக்காது.

விஷ்ணு பல்வேறு வடிவங்களில் வழிபடக் கிடைக்கிறார். அவர் பர-வாசுதேவராக, நான்கு வியூக மூர்த்திகளாக (வாசுதேவர், சங்கர்ஷணர், பிரத்யும்னர், அனிருத்தர்), விபவ அவதாரங்களாக, அர்ச்சாவதார விஷ்ணு மூர்த்திகளாக வழிபடப்படுகிறார்.

விஷ்ணு, நிற்றல் (ஸ்தானக மூர்த்தி), இருத்தல் (ஆசன மூர்த்தி), கிடத்தல் (சயன மூர்த்தி) என்று மூன்று வகைகளில்தான் மிக அதிகமாக வழிபடப்படுகிறார். விபவ அவதாரத்தில், விஷ்ணு ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக ஒரு குறிப்பிட்ட வடிவம் எடுத்து அந்த அவதாரக் காரணம் முடிந்தவுடன் தம் உடலை விடுத்து பாற்கடல் சென்றுவிடுவார். மத்ஸ்ய, கூர்ம, வராக என்று தொடங்கும் பத்து அவதாரங்களை புராணங்கள் சொல்கின்றன. கொலு பொம்மையாக இந்தப் பத்து அவதாரங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் விஷ்ணுவுக்கு பத்துக்கும் மேற்பட்ட பல அவதாரங்கள் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் மிக அதிகமாக வழிபடப்படுவது, வராக, நரசிம்ம, வாமன-திரிவிக்கிரம அவதாரங்களே.

சிவன் கோவில்களின் கோஷ்டங்கள் பற்றிச் சொல்லும்போது தென் திசையில் தக்ஷிணாமூர்த்தி இருக்கவேண்டும் என்று சென்ற வாரம் குறிப்பிட்டிருந்தேன். அதேபோல விஷ்ணு கோவில்களில் மூன்று கோஷ்டங்கள் இருந்தால் அவற்றில் நரசிம்மம், வாமன-திரிவிக்கிரமம், வராகம் என்று மூர்த்திகளை அமைப்பது வழக்கம். விமானத்தின் கிரீவத்திலும் இதே வடிவங்களைக் காணலாம். தமிழகத்தில் மாமல்லையின் வராக மண்டபத்தைப்போல வராக, நரசிம்ம, வாமன-திரிவிக்கிரவ அவதாரங்களை நாமக்கல் நரசிம்மர் குடைவரையில் காணலாம். பாதாமியில், எல்லோராவில் என்று பல குகைக்கோவில்களில் இந்த அவதாரங்களை விரிவாகக் காணலாம். பின்னர் கட்டுமானக் கோவில்கள் வருகையில், பெருஞ்சிற்பத் தொகுதிகளாக வடிப்பது நின்றுபோய் கருவறை அல்லது கோஷ்ட மூர்த்திகளாக, சிறியதாக ஆகிவிட்டன.

இந்தியாவிலேயே, இந்து மதத்துக்கான சிற்பக் கலை மகத்தாக உருவாகத் தொடங்கியது குப்தர்கள் காலத்தில்தான். தற்போது கிழக்கு டுடேவில் கிருஷ்ணன் எழுதிவரும் குப்தர்கள் வரலாறு குறித்த தொடரைப் படியுங்கள். பேராசிரியர் சுவாமிநாதன் முன்னெடுப்பில் நாங்கள் சிலர் தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நடத்திவருகிறோம். அதன்கீழ் பல நிகழ்ச்சிகளைச் செய்துவருகிறோம். அதில் ஒன்று, ஆண்டுதோறும் நாங்கள் மேற்கொள்ளும் கலையுலா. இந்தியாவில் முக்கியமான பல இடங்களைக் குறித்துவைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட கருத்தின் அடிப்படையில் சில இடங்களைத் தேர்ந்தெடுத்து, மூன்று மாதம் அதற்கான தயாரிப்புகளைச் செய்து, நிபுணர்களை உடன் அழைத்துக்கொண்டு இந்த இடங்களுக்குச் சென்றுவருவோம். அவ்வாறு 2019 ஜனவரியில் நாங்கள் சென்றுவந்த இடம் மத்தியப் பிரதேசம். இந்தப் பயணத்தின்போது இரண்டு மிக முக்கியமான வராக வடிவங்களைப் பார்த்தோம். முதலாவது உதயகிரி என்னும் இடத்தில் இருந்த குகையில் காணப்பட்ட மாபெரும் நர-வராகம். அடுத்தது ஏரன் என்ற இடத்தில் வெட்டவெளியில் ஒரு கூரைகூட இல்லாமல் இருந்த, முழுமையான காட்டுப்பன்றி வடிவ வராகம்.

இந்தியா முழுமையிலுமே வராக வடிவங்கள் இருக்கின்றன என்றாலும் இந்த வடிவத்துக்குப் பெயர்போனது மத்தியப் பிரதேசம்தான் என்று உறுதியாகக் கூறமுடியும். உதயகிரியின் ஐந்தாம் எண்ணுள்ள குகையில் மாபெரும் வராக உருவைக் காண முடியும். காலையில் சூரிய உதயத்தைக் காணவேண்டும் என்பதற்காக முன்கூட்டியே வந்து காத்திருந்தோம். சூரியக் கிரணங்கள் அப்படியே எழுந்துவருகையில் குகையே வெளிச்சத்தில் அமிழ்ந்து சுவரில் செதுக்கப்பட்டுள்ள பல்வேறு சிற்பங்கள் உயிர்பெற்று எழுந்துவருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, மிருதுவான கற்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள் சில சிதைந்துபோயுள்ளன.

வராகம், உதயகிரி - குகை எண் 5
வராகம், உதயகிரி – குகை எண் 5, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

வனமாலை அணிந்த பிரம்மாண்டமான வராகர் சுவர் முழுவதையுமே ஆக்கிரமித்து நிற்கிறார். வலது கால் தரையில் அழுந்தப் பதித்து நிற்கிறது. இடதுகால் ஆதிசேஷனின் சுற்றுகளின்மீது. ஆதிசேஷன் தன் இரு கைகளையும் கூப்பி வராகரை வணங்கிக்கொண்டிருக்கிறான். வராகரது முகத்துக்கு அருகில் தாமரை மலரில் நிற்கும் பூதேவி (தலை உடைந்துவிட்டது) வராகரின் வாயைப் பற்றிக்கொண்டிருக்கிறாள். வராகரின் வலது பக்கத்தில் லக்ஷ்மி (சிதைந்துள்ளது), தாமரையின்மீது நின்றபடி கையில் ஒரு தாமரையின் தண்டைப் பற்றியபடி இருக்கிறாள். அந்தத் தாமரை உயரே சென்று வராகத்தின் தலைமீது கவிந்தபடி நிற்கிறது. வராகருக்கு இரண்டே கரங்கள்தாம். வலதுகை தம் இடுப்பைப் பற்றியபடியும், இடதுகை தம் தொடைமீது அழுந்தப் பதிந்தபடியும் உள்ளது. சுற்றி நிற்கும் பலரும் யார்?

அங்கே யார்தான் இல்லை? பிரம்மா, சிவன், அஷ்ட வசுக்கள், பதினொரு ருத்ரர்கள், பன்னிரு ஆதித்தியர்கள், கங்கையும் யமுனையும், ரிஷிகள், கின்னரர்கள், அபசரஸ்கள் என்று தேவர்களும் ரிஷிகளும் கடவுள்களும் கணங்களும் புடைசூழ இந்த வராக விசுவரூபம் நடைபெறுகிறது. ஐந்தாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்த மாதிரியான விரிவான சிற்பமாக இதனை உருவாக்கிப் படைத்திருக்கிறார்கள். நீங்கள் நேரில் இந்த வராகத்தின்முன் நிற்கவேண்டும். அதன் வேகம், பலம் இரண்டையும் உணர்வீர்கள்.

குப்த அரசர்களிலேயே மிகவும் புகழ்வாய்ந்த இரண்டாம் சந்திரகுப்தன் காலத்தில் இது உருவாகியிருக்கவேண்டும். சிதைந்த இரு சிற்பங்களில் சந்திரகுப்தனும் அவனுடைய அமைச்சரும் இருப்பதாகச் சில அறிஞர்கள் கருதுகிறார்கள். குப்தப் பேரரசு அதன் உச்சத்தில் இருந்தபோது இந்த வராகம் வடிக்கப்பட்டது. அதைவிடப் புகழ்வாய்ந்தது அடுத்து நாம் பார்க்க இருக்கும் ஏரன் வராகம். இது குப்தப் பேரரசு சிதையும்போது உருவாக்கப்பட்டது.

ஏரன், மக்கள் வசிக்கும் பகுதியே கிடையாது. சின்னஞ்சிறு கிராமங்கள், காட்டுப்பகுதி ஆகியவற்றைத் தாண்டி இந்தியத் தொல்லியல் கழகம் பராமரிக்கும் இந்த இடத்தைத் தேடி வந்தோம். வேறு சில சுற்றுலாப் பயணிகளும் வந்திருந்தனர். உதயகிரி, காலை சூரிய உதயத்தின்போது என்றால், ஏரன், மாலை சூரிய அஸ்தமனத்தின்போது. தூரத்திலிருந்தே அந்த வராக மூர்த்தியைப் பார்க்க முடிந்தது. இது நர-வராகம் அன்று. நான்கு கால்களைத் தரையில் அழுந்தப் பதிந்து தாவி எகிறிச் செல்லும் முழுமையான விலங்கு வராகம்.

வராகம், ஏரரன்
வராகம், ஏரன், படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

இதையும் யக்ஞ வராகம் என்றே அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். தன்யவிஷ்ணு என்பவர், இறந்துபோன தன் சகோதரர் மாத்ரிவிஷ்ணு என்பவரது ஞாபகார்த்தமாக இந்த வராகத்தை நிறுவுகிறார். ஆண்டு பொயு 485 தொடங்கி 500 வரை செல்கிறது. ஆரம்பத்தில் புத்தகுப்தர் என்பவரைக் குறிப்பிட்டு அவர் ஆட்சியின்கீழ் மாத்ரிவிஷ்ணு, தன்யவிஷ்ணு ஆகியோர் குறுநில மன்னர்களாக இருப்பதாக ஆரம்பித்த கல்வெட்டு, சிலை நிறுவப்பட்டதும் ஏற்பட்ட மாற்றத்தையும் குறிக்கிறது. இடையில் குப்தர்களை ஹூனர்கள் தோற்கடித்துவிடுகின்றனர். தோரமானன் என்று ஹூன அரசன் கைக்கு இந்தப் பகுதி வந்துவிடுகிறது. அவனது ஆட்சியாண்டு ஒன்று என்பதை தன்யவிஷ்ணு குறிப்பிடுகிறார். அந்தவிதத்தில் இந்த வராகத்தில் அமைந்த கல்வெட்டுகள் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றன.

ஹரிப்ரியா ரங்கராஜன் என்ற ஆராய்ச்சியாளர் மத்தியப் பிரதேசத்தின் வராகச் சிலைகளை மிக விரிவாக ஆய்வு செய்து அவற்றின் படிமவியல் குறித்து ஒரு புத்தகம் (Varaha Images in Madhya Pradesh: An Iconographic Study) எழுதியிருக்கிறார். இவர் குஜராத்தின் மத்ஸ்ய, கூர்ம, வராக உருவங்கள் குறித்தும் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். ஏரன் வராகம் குறித்து கேதரைன் பெக்கர் என்பவர் விரிவான ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளார். இவற்றைப் படிப்பதன்மூலம் வராக மூர்த்திகள் குறித்த பல நுண்ணிய தகவல்களை நாம் பெற முடியும். ஏரனின் வராகம், இம்மாதிரியான முழு விலங்குவகை வராகத்தின் ஆரம்பகட்ட சிற்ப வடிவமாக இருக்கவேண்டும். அதன்பின்னர் இதைப்போன்ற பல வராகங்கள் உருவாக்கப்பட்டன. குப்தர்கள் காலம் தொடங்கி, காலச்சூரிகள், பிரதிஹாரர்கள், பரமாரர்கள், சண்டேலர்கள் என்று பல்வேறு ஆட்சியாளர்கள் மத்தியப் பிரதேசப் பகுதிகளில் பல்வேறு வராகங்களை நிறுவியுள்ளார்கள். இந்தியாவிலேயே இந்த எண்ணிக்கையில் நீங்கள் வேறு எங்கும் வராகங்களைக் காண முடியாது!

இந்தக் குறிப்பிட்ட ஏரன் வராகத்தின் உடல்மீது 1000-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதன் நாவில் வாக்தேவி. அதன் தலைக்குமேல் தூண் வடிவிலான ஒரு பகுதி. இதனை யாகம் செய்யும்போது உருவாக்கப்படும் யூபத் தூண் என்கிறார்கள். அந்தத் தூணின் நான்கு புறங்களிலும் சிற்பங்கள். இவை விஷ்ணுவின் வியூக வடிவங்களாக இருக்கலாம். வராகத்தின் முன் மார்பில், நின்ற நிலையில் விஷ்ணு சிற்பம் உள்ளது. பின்னர் சிவன், பிரம்மா, ஏழு கிருகங்கள் (ராகு, கேது இல்லை), 27 நட்சத்திரங்கள், அக்னி முதலான தேவர்கள், ஏகப்பட்ட ரிஷிகள் என்று உடலில் ஓர் அங்குலம்கூட விட்டுவைக்காமல் செதுக்கியுள்ளனர்.

இந்திய மரபில் பூலோகம் தொடங்கி மேல் நோக்கி ஏழு உலகங்கள் இருப்பதாகச் சொல்வதுண்டு. பூவுலகம், புவருலகம், சுவருலகம் (சுவர்கம்), மஹருலகம், ஜனவுலகம், தபவுலகம், சத்ய உலகம் என்பவை இவை. இவற்றில் பிறப்பு, இறப்பு இல்லா ரிஷிகள் தப, ஜன, மஹர் உலகத்தில் இருக்கிறார்கள். பிரளய காலத்தில் அனைத்து உலகங்களும் நீரால் சூழப்பட்டுவிடுகின்றன. இந்த ரிஷிகள் அப்படியே நீருக்கடியில் இருக்கிறார்கள். ஸ்வயம்புவ மன்வந்தரத்தில் ஸ்வேத வராக கல்பத்தில் வராகர் பூதேவியை மீட்டெடுத்து எழுந்துவரும்போது இந்த மூன்று உலகங்களிலும் உள்ள ரிஷிகள், வராகத்தின் உடலிலுள்ள ரோமத்தைப் பற்றிக்கொண்டு அப்படியே மேலெழும்பி வருகிறார்கள்.

பூதேவி, வராகத்தின் தந்தத்தைப் பற்றியபடி மேலெழும்பி வருகிறாள். ஆதிசேஷனின் பாம்புச் சுற்றுகள் தெரிகின்றன, ஆனால் சிற்பம் உடைந்துபோயுள்ளது, மேல் பகுதி காணவில்லை.

நேரில் ஏரன் சென்றபோது, அருகில் வராகத்தைப் பார்த்தபோது அடைந்த சிலிர்ப்பும் பிரமிப்பும் அபாரமானது. இந்தச் சிறு வீடியோ நண்பர் வி.கே.ஶ்ரீனிவாசன் எடுத்தது.

மல்லை வராகமோ, உதயகிரி வராகமோ, ஏரன் வராகமோ, நம் கற்பனையில் எந்த மாற்றமும் தேவையில்லை. நீரைக் கிழித்துக்கொண்டு மேலெழும்பி வரும் வராக உருவம். அது விலங்கு வடிவமானதாக இருக்கலாம், அல்லது நர-வராகமாக இருக்கலாம். ஒட்டியபடி வரும் பூதேவி. இந்த அரும் காட்சியைக் காண வந்திருக்கும் தேவர்கள், கடவுள்கள், ரிஷிகள். வராகத்தின் ரோமங்களைப் பற்றியபடி மேலெழும்பிவரும் ரிஷிகள்.

இந்திய அரசர்கள் தங்களை வராகத்தின் வடிவமாகவே பார்த்தனர். வராகம் என்பது பிருத்வி என்னும் நிலத்தை மீட்கக்கூடியது. எனவே பெருநிலத்தைக் கைப்பற்றிய அரசர்கள் வராக உருவத்தை நிறுவி வழிபாடு செய்தனர். அவற்றுள் மிகச் சிறந்தவை, மிகப் பிரம்மாண்டமானவை, கற்பனாசக்தியில் சிறந்துவிளங்குபவை என்றால் மத்தியப் பிரதேசப் பகுதியுடையவை என்றே சொல்லவேண்டும். கலாபூர்வமாக, மிக அழகாகவும் நேர்த்தியாகவும் வடிக்கப்பட்டது என்றால் மாமல்லையின் வராக மண்டபத்து மூர்த்தியைத்தான் சொல்லவேண்டும்.

(தொடரும்)

பகிர:
பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர். சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் இளநிலையும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியக் கணிதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். வரலாறு, தொழில்நுட்பம், இந்தியவியல் போன்ற துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.View Author posts

3 thoughts on “கல்லும் கலையும் #3 – மானம் இலாப் பன்றி!”

  1. Ethirajan Srinivasan

    ஸ்ரீநிவாசநல்லூர் கொரங்கநாதர் கோவிலிலுள்ள ஒரு மகரதோரணத்தில் ஒரு அதியற்புதமான பூவராகர் இருக்கிறார்!

  2. அற்புதம் பத்ரி. பொதுவாக பக்கவாட்டிலேயே வராகத்தின்முகம் காணப்படுவதை அறிவோம். கேரளத்தின் பாலக்காட்டில் பன்னியூர் எனுமிடத்தில் பரசுராமரால் முதன்முதலில் உருவாக்கப்பட்ட ஆதி மஹா வராஹ க்ஷேத்ரமுண்டு. நான்காயிரம் ஆண்டு பழமையானதென நம்பப்படுகிறது. தற்போதுள்ள மூல விக்ரஹம் 1758ல் வடிக்கப்படதாக கூறப்படுகிறது. மடியில் பூதேவி சகிதமுள்ள மிகவும் சக்தி வாய்ந்த இந்த வராஹ மூர்த்தியின் முகம் முன்புறம் நோக்கியிருக்கும். கோவிலின் பரப்பளவு மிகமிகப் பெரியது. குருவாயூரிலிருந்தும் சென்றுவரலாம். ஒருமுறை சென்று தரிசித்து வாருங்கள். இந்த வராஹரை வரையும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *