Skip to content
Home » கல்லும் கலையும் #4 – இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

கல்லும் கலையும் #4 – இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் – கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா

நான் பேசக் கற்றுக்கொண்ட சில நாட்களிலேயே மழலை மாறாத பருவத்தில் மனப்பாடம் செய்யக் கற்றுக்கொண்ட முதல் பாடல்களில் இதுவும் ஒன்று. பச்சைமா மலைபோல் என்று தொடங்கும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரம் இன்னொன்று. மேலும் சில தமிழ்ப் பாசுரங்களும், சமஸ்கிருதச் சுலோகங்களும் இவற்றில் உண்டு. அதேபோல என் மகள் பேசக் கற்றுக்கொண்டவுடன் அவளுக்கு மனப்பாடமாகச் சொல்லிக்கொடுத்தவற்றுள் இந்தப் பாடலும் உண்டு.

ஔவையார் இயற்றியதாகச் சொல்லப்படும் இந்தப் பாடல் விநாயகர் மீதானது. விநாயகர், கணேசர், கணபதி, விக்னேஸ்வரர், கஜானனர், பிள்ளையார் என்னும் பல பெயர்களின் வழங்கும் யானைமுகக் கடவுள் மீதானது. துங்கக் கரிமுகம் என்பதன்மூலம் தெளிவாக விளங்குகிறது.

திருமூலரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. அதன் பாயிரமாகத் தொடங்குவதும் பிள்ளையார்மீதான பாடலே.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியின் வைத்தடி போற்றுகின் றேனே

இந்த இரண்டு பாடல்களிலுமே அடிப்படையாக உள்ள ஒரு கருத்தைக் காணலாம். பிள்ளையார் ஞானக் கொழுந்து. அவர் இயல், இசை, நாடகம் எனும் சங்கத் தமிழ் மூன்றையும் தர வல்லவர்.

புள்ளமங்கை, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

கடைசி இரண்டு வாரம் நான் எழுதியது தக்ஷிணாமூர்த்தி, வராகர் இருவரையும் பற்றி. ஆழ்வார்கள் வராகருக்கு ஞானப்பிரான் என்றே பெயர்சூட்டினர். நம்மாழ்வார் திருவாய்மொழியில், ‘ஞானப்பிரானை அல்லால் இல்லை நான் கண்டதுவே’ என்கிறார். சைவத்தில் தக்ஷிணாமூர்த்தியே ஆதிகுரு. கலைகள் பயில்விப்பவர். யோகம் பயில்விப்பவர். இசை பயில்விப்பவர். அதன் தொடர்ச்சியாகவே கணபதியையும் எழுத முற்படுகிறேன்.

பிள்ளையார் ஞானம் அருள்பவர் மட்டுமல்ல. இடையூறுகளைக் களைபவர். இடையூறுகளை அளிப்பவரும்கூட! இடையூறு என்பதன் வடமொழிச் சொல்லான விக்னம் என்பதிலிருந்துதான் விக்னேஸ்வரர் என்ற பெயரே வருகிறது. விக்னங்களின் ஈசுவரன்.

பிள்ளையார் குறித்து நமக்குப் பல கதைகள் வருகின்றன. ஒன்று அவர் பிறந்த அல்லது உருவான கதை. அடுத்து அவர் மகாபாரதம் எழுதிய கதை. மூன்றாவது, ஶ்ரீரங்கம் உருவான தல வரலாறு. நான்காவது பிள்ளையாருக்கும் முருகனுக்குமான திருவிளையாடல் புராணத்தில் வரும் மாம்பழப் போட்டி குறித்த கதை. மேலும் எண்ணற்ற கதைகள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் ஆகமங்களிலும் தல வரலாறுகளிலும் வருகின்றன. ஆனால் நாம் மேலே சொன்ன நான்கு கதைகளோடு நிறுத்திக்கொள்வோம். இவற்றிலுமே பல்வேறு புராணங்களில் பலப்பல மாறுதல்கள் உள்ளன. அவை அனைத்தையும் விரித்தால் நேரமும் இடமும் போதா.

கணபதி தொடக்கத்திலிருந்தே சிவன், பார்வதி ஆகியோரின் மகனாகவேதான் புராணங்களில் தோன்றுகிறார். பார்வதி தனக்கென ஒரு பிரத்யேகமான உதவியாளர் வேண்டுமென்று தன் உடலிலிருந்து அழுக்கைத் திரட்டி ஓர் உருவமாகப் படைத்து, யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றதாகவும், சிவன் அந்நேரம் பார்த்து உள்ளேவர, பார்வதி உருவாக்கிய வடிவம் சிவனைத் தடுத்து நிறுத்த, சிவன் அதன் தலையை அரிய, பார்வதி இதனால் கடும் கோபம் கொள்ள, சிவன் தன் கணங்களை அனுப்பி வடக்குத் திசைவழிச் சென்று கிடைக்கும் முதல் உருவத்தின் தலையைக் கொணர்ந்து அறுபட்ட உடலில் சேர்க்கச் சொல்ல, அப்படியாக யானைத் தலை கிடைத்த உருவம்தான் கணபதி எனும் களிற்றுருவக் கடவுள் என்று படிக்கிறோம். இன்னொரு கதை, சிவனும் பார்வதியும் யானை வடிவில் உறவுகொண்டதன்மூலம் பிறந்த குழந்தைதான் யானைவடிவக் கடவுள் கணபதி என்பது. இந்த யானைக்கு ஒற்றைத் தந்தம் மட்டுமே இருந்ததால், ஏகதந்தம் என்ற பெயரும் கணபதிக்கு வருகிறது. இதோடு ஒத்ததுதான் அடுத்த கதை.

வியாசர் மகாபாரதம் எழுத முற்பட்டபோது அவர் சொல்லும் வேகத்துக்கு எழுத யாருமே இல்லை என்றதாகவும் இறுதியில் கணபதி தான் எழுத ஒப்புக்கொண்டு தன் ஒரு கொம்பையே ஒடித்து, அதைக்கொண்டு எழுதியதாகவும் படிக்கிறோம். இதனால்தான் ஒற்றைக் கொம்புடனும், உடைத்த கொம்பு ஒன்றைக் கையில் பிடித்தவாறும் கணபதி காட்சியளிக்கிறார்.

ஶ்ரீரங்கம் குறித்த தல வரலாற்றில் பிள்ளையார் முக்கியத்துவம் பெறுகிறார். ராம ராவண யுத்தம் முடிந்து விபீஷணனுக்குப் பட்டம் அளித்தன்பின், ராமன் அயோத்தி சென்று பட்டாபிஷேகம் செய்துகொள்கிறான். அப்போது அங்கு வரும் விபீஷணன், ராமனின் முன்னோர்களான இக்ஷுவாகு வம்சத்தினர் வழிவழியாக வழிபட்டுவந்த ரங்கநாதர் சிலையைத் தான் பெற்றுச் செல்கிறான். ஆனால் ஒரு இக்கு உள்ளது. அந்தச் சிலையைத் தரையில் எங்கும் வைத்துவிடக்கூடாது. வைத்தால் மீண்டும் எடுக்க முடியாது. அங்கேயே பிரதிஷ்டை ஆகிவிடும். ஶ்ரீரங்கம் வழியாக விபீஷணன் வரும்போது மாலையில் சந்தியாவந்தனம் செய்வதற்கான நேரம் ஆகிவிடுகிறது. அப்போது அங்கு வரும் சிறுவன் ஒருவன் கையில் சிலையைக் கொடுத்துவிட்டு விபீஷணன் மாலைக்கடனை முடிப்பதற்குள் அந்த விஷமக்காரச் சிறுவன், ரங்கநாதர் சிலையை அங்கேயே காவிரிக்கரையில் வைத்துவிடுகிறான். அப்படி உருவானதுதான் ஶ்ரீரங்கம் எனும் க்ஷேத்திரம். இந்தப் பிள்ளையார்தான் திருச்சி மலைக்கோட்டையில் உச்சிப் பிள்ளையாராக அமர்ந்திருப்பதாக ஐதீகம்.

அடுத்தது திருவிளையாடல் புராணத்தில் வரும் கதை. திரைப்படமாக வந்து தமிழகத்தில் அனைவருக்கும் தெரிந்த கதை. இன்றும் பெற்றோர் தம் குழந்தைகளுக்குச் சொல்லும் கதைகளில் தொடக்கத்திலேயே வருவது. சிவன் பார்வதி தெய்வ தம்பதியினருக்கு அரியதொரு மாம்பழம் நாரதர்மூலம் கிடைக்கிறது. இந்தப் பழத்தை வெட்டித் துண்டாக்கக்கூடாது. முழுதாகத்தான் தரவேண்டும். தம் இரு பிள்ளைகளான பிள்ளையாருக்கா முருகனுக்கா, யாருக்குத் தருவது என்பதைப் போட்டியாக வைக்கிறார் சிவன். யார் உலகத்தை வேகமாகச் சுற்றி முதலில் வந்துசேருகிறார்களோ, அவர்களுக்குத்தான் மாம்பழம் என்கிறார். முருகன் தன் வாகனமான மயிலில் ஏறிக் காற்றைவிடக் கடிதாகச் சுற்றிவர, பிள்ளையாரோ, அம்மை அப்பன் இருவரும் சேர்ந்ததே உலகம் என்று தர்க்கரீதியாகப் பேசி, தாய் தந்தையரைச் சுற்றிவந்து பழத்தைப் பெற்றுக்கொள்கிறார். முருகன் கோபித்துக்கொண்டு மலைமீது ஏறிவிடுகிறார். அவரைப் பார்வதி சமாதானம் செய்வதற்காகச் சிவனின் திருவிளையாடல்கள் அனைத்தையும் எடுத்துச் சொல்கிறார். இதுதான் திருவிளையாடல் புராணத்தின் கதை.

அரிட்டாபட்டி, படம்: VK லக்ஷ்மி, விக்கிமீடியா காமன்ஸ்

‘கணபதி என்னும் களிறு’ ஏதோ தமிழகத்துக்கு அந்நியம் என்றும் முருகன்தான் அக் மார்க் தமிழ்க் கடவுள் என்றும் தமிழகத்தில் பல ஆண்டுகளாகப் பிரசாரம் நடைபெற்று வருகிறது. ஆனால் உண்மைத் தகவல்களைத் தோண்டும்போது நமக்குக் கிடைப்பது பல ஆச்சரியங்கள். தமிழகத்தில் கிடைக்கும் எந்த முருகன் சிலைக்கும் முற்பட்டதாகப் பல விநாயகர் சிற்பங்கள் நமக்குக் கிடைக்கின்றன. தமிழகத்தில் இன்றைக்கு நமக்குக் கிடைப்பது ஐந்தாம் நூற்றாண்டு இறுதி, ஆறாம் நூற்றாண்டு தொடக்கத்தில் பல்லவர்களும் பாண்டியர்களும் வெட்டுவித்த கருங்கற் குகைக்கோவில்கள். இதில் பாண்டியரின் பெரும்பாலான குகைக்கோவில்களில் முருகன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிள்ளையார் சிற்பங்கள் இருப்பதைக் காணலாம். பிள்ளையார்பட்டி, அரிட்டாபட்டி, புதுக்கோட்டை திருகோகர்ணம், குன்றாண்டார்கோவில், திருப்பரங்குன்றம், திருமலாபுரம், திருச்சி மலைக்கோட்டை கீழ்க்குகை, இன்னும் பல பாண்டியர் குகைகளில் பிள்ளையார் சிற்பத்தைக் காணலாம்.

மேலே அரிட்டாபட்டியில் காணப்படும் மிக அருமையான பாண்டியர் காலக் கணபதியைப் பாருங்கள். அதற்கும் மேலே புள்ளமங்கையில் சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பிள்ளையார் சிற்பத்தையும் பாருங்கள். பிள்ளையார் சிற்பத்தின் படிமவியல் குறித்தி விரைவில் விரிவாகப் பார்க்க உள்ளோம். ஆனால் இந்த இரண்டையும் முதலில் பார்த்துவிடுவோம். இரண்டிலுமே யானைத் தலை. பெரிய முறம் போன்ற காதுகள். பானை போன்ற பெரிய வயிறு. நான்கு கரங்கள். யானை முகமாதலால் ஒரு தும்பிக்கை. பொதுவாக நான்கு கரங்களும் கூட ஒரு தும்பிக்கையும் இருப்பதால், ‘ஐந்து கரத்தான்’ எனப்படுகிறார் கணபதி. இரு சிற்பங்களிலுமே ஒரு தந்தம் இல்லாமல், ஒரு தந்தம் மட்டும் இருப்பதைக் காணலாம். அதுவும் இடதுபக்கத் தந்தம் உள்ளது. வலது தந்தம் இல்லை. குட்டைக் கால், குட்டைக் கைகள். ஒரு முக்கிய வேறுபாடு, புள்ளமங்கையில் தும்பிக்கை வலது-இடமாகச் சுருண்டிருக்கிறது. இதற்கு இடம்புரி விநாயகர் என்று பெயர். அரிட்டாபட்டி விநாயகர் இடமிருந்து வலமாகச் சுருண்டிருக்கும் தும்பிக்கையைக் கொண்டிருக்கிறார். இவர் வலம்புரி விநாயகர். பொதுவாகப் பெரும்பான்மை விநாயகர் சிற்பங்கள் வலம்புரியாகத்தான் இருக்கும்.

பல்லவர் குகைக்கோவில்களில் வல்லம் என்னும் இடத்தில் மிக அருமையான கணபதி சிற்பத்தைக் காண முடிகிறது. மகாபாரதம் எழுத உடைத்த ‘இந்தின் இளம்பிறை போலும் எயிற்றை’ அதாவது சந்திரனின் இளம்பிறை போன்று வளைந்திருக்கும் தந்தப் பல்லைக் கையில் ஏந்தியபடி இருக்கும் வலம்புரி விநாயகர்.

வல்லம், படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

பாண்டியர் குகைக்கோவில்களில் உள்ள எண்ணிக்கையில் பல்லவர்களின் குகைக்கோவில்களில் யில கணபதி இல்லைதான். ராஜசிம்மன் காலத்தில்தான் பெரும் எண்ணிக்கையில் காஞ்சிபுரத்தின் பிறவாஸ்தானம், கைலாசநாதர் கோவில் போன்ற சில இடங்களில் காண முடிகிறது. காஞ்சி கைலாசநாதர் கோவிலில் மட்டுமே பதினைந்துக்கும் மேற்பட்ட கணேசர் சிற்பங்களைக் காண முடிகிறது. ஆனால் மாமல்லபுரத்தில் ஓரிரண்டு மட்டும்தான் தென்படுகின்றன.

0

இன்றைக்குத் தமிழகத்தில் தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோவில்கள் இருப்பதைக் காணலாம். இவை அனைத்துமே கடந்த இரு நூற்றாண்டுகளுக்குள் கட்டப்பட்ட கோவில்களே. பள்ளிக்கூடங்களுக்குள் ஒரு சிறு கோவில் இருந்தால் அது பெரும்பாலும் பிள்ளையார் கோவிலாகத்தான் இருக்கும். ஓர் அடுக்ககத்தில் ஒரு கோவில் இருந்தால் அதுவும் பெரும்பாலும் பிள்ளையார் கோவிலாகத்தான் இருக்கும்.

ஆனால் தொடக்க காலத்தில் – அதாவது ஆறாம் நூற்றாண்டில் கற்கோவில்கள் உருவாகத் தொடங்கிய நிலையில், தனித்த விநாயகர் கோவில்கள் இருந்தனவா?

அந்தக் காலகட்டத்தில் சிவன், விஷ்ணு ஆகியோருக்குத்தான் முதன்மையாகக் கோவில்கள் உருவாக்கப்பட்டன. அப்படி உருவாக்கப்பட்ட கோவில்களில் விநாயகர், முருகன், துர்கை ஆகியோருக்கும் சிலைகள் செதுக்கப்பட்டன. பிரம்மாவும் பல இடங்களில் இருப்பதைக் காண்கிறோம். பிள்ளையார்பட்டியில் பிள்ளையாருக்கு முதன்மை கொடுக்கப்பட்டாலும் அது அடிப்படையில் சிவனுக்காக உருவாக்கப்பட்ட குகைக் கோவிலே. அதேபோல திருப்பரங்குன்றத்தின் குகைக்கோவில், முதன்மையாக சிவனுக்கும் விஷ்ணுவுக்குமாக உருவாக்கப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை கீழ்க்குகையில் இதனைத் தெளிவாகக் காணலாம். உள்ளே நுழைந்ததும் இடப்புறம் சிவனுக்கும் வலப்புறம் விஷ்ணுவுக்குமான தனித்தனிக் கருவறைகள். நேராக நாம் பார்க்கும் சுவரில் வரிசையாக கணபதி, முருகன், பிரம்மா, சூரியன், துர்கை ஆகியோருக்கு வரிசையாக ஐந்து சிற்பங்கள். இங்கே நின்ற நிலையில் உள்ள கணபதியைக் காணலாம்.

மலைக்கோட்டை கீழ்க்குகை, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

முறையாக கட்டுமானக் கோவில்கள் உருவாகத் தொடங்கியதும் சிவன் கோவில்களுக்கென ஒரு வடிவம் கொஞ்சம் கொஞ்சமாக முறைப்படத் தொடங்கியது. முதலில் எளிமையான சிறு கருவறை மட்டுமே இருந்தது. இந்தக் கருவறையின் முன்பக்க வாசலைத் தவிர மற்ற மூன்று சுவர்களும் முதற்கட்டத்தில் சமதளமாக, சிலைகள் ஏதும் இன்றி இருந்தன. பின்னர் இந்த மூன்று சுவர்களிலும் கோஷ்டங்கள் எனப்படும் பிறைகள் உருவாகின. ஆக மூன்று கோஷ்டங்கள். கிழக்கு பார்த்த கருவறையில் தெற்கு, வடக்கு, மேற்கு கோஷ்டங்களில் முறையே, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய கடவுளர்களின் வெவ்வேறு வடிவங்கள் சிற்பங்களாகச் செதுக்கி வைக்கப்பட்டன. தெற்குத் திசையில் சிவனின் வடிவமாக நாம் ஏற்கெனவே பார்த்த தக்ஷிணாமூர்த்தி வரத்தொடங்கினார். மேற்குத் திசையில் விஷ்ணு தனியாகவோ, அல்லது நரசிம்ம வடிவமாகவோ அல்லது சிவனும் விஷ்ணுவும் சேர்ந்த ஹரிஹர வடிவமாகவோ, பின்னர் லிங்கோத்பவ அல்லது அர்தநாரி வடிவங்களும்கூட வரத் தொடங்கின. இந்த வடிவங்களையெல்லாம் விரிவாக இந்தத் தொடரில் காண இருக்கிறோம். வடக்குத் திசையில் பிரம்மா வடிவம் மாற்றமின்றித் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது.

அடுத்து, கட்டுமானக் கோவில்கள் விரிவாகத் தொடங்கின. கருவறைக்குமுன்பாக அர்தமண்டபம் எனப்படும் முன்மண்டபம் ஏற்பட்டது. இப்போது கருவறையைச் சுற்றி மூன்று கோஷ்டங்களும் அர்தமண்டபத்தின் இருபுறமும் – தெற்கிலும் மேற்கிலும் – பக்கத்துக்கு ஒரு கோஷ்டமுமாக ஐந்து கோஷ்டங்கள் உருவாகின. இப்போது மேலும் இரண்டு சிற்பங்களை வைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அப்படி தெற்கில் அர்தமண்டபக் கோஷ்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் கணபதியின் சிற்பம். அதற்கு இணையாக வடக்கில் அர்தமண்டபத்தில் துர்கையின் சிற்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கிழக்கு பார்த்த சிவன் கோவிலில் ஐந்து கோஷ்டங்கள் இருக்கும்போது நீங்கள் அக்கோவிலைச் சுற்றிவந்தால், கணபதியையும் தக்ஷிணாமூர்த்தியையும் தெற்கிலும், பெரும்பாலும் லிங்கோத்பவரை மேற்கிலும், பிரம்மாவையும் துர்கையையும் வடக்கிலும் அடுத்தடுத்துக் காணமுடியும். சில சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து இல்லாமல் மேற்கு பார்த்து இருக்கக்கூடும். எடுத்துக்காட்டாக மயிலாப்பூரின் கபாலீசுவரர் கோவில். இக்கோவிலைச் சுற்றிவரும்போது நீங்கள் வடக்கு தெற்காகச் சுற்றிவருவீர்கள். இப்போது நீங்கள் துர்கையையும் பிரம்மாவையும் வடக்கில் அடுத்தடுத்தும், கிழக்கில் லிங்கோத்பவரையும், தெற்கில் தக்ஷிணாமூர்த்தியையும் கணபதியையும் அடுத்தடுத்துக் காண்பீர்கள்.

சிவன் கோவில்கள் மேலும் மேலும் பெரிதாகத் தொடங்கியபோது ஒன்பது கோஷ்டங்கள், அதற்குமேலும் எண்ணிக்கையாலன கோஷ்டங்கள் என்று ஏற்பட்டன. ஐந்துக்குமேல் கோஷ்டங்கள் என்றாலே தெற்கில் முதலாவது கோஷ்டத்தில் கணபதி என்பது கட்டாயம் என்ற அளவுக்கு அவருக்கான இடம் உறுதியாகியது. கவனியுங்கள் – முருகனுக்கு இப்படி உறுதியாகச் சொல்ல முடியாது. பல சிவன் கோவில் கோஷ்டங்களில் முருகன் சிற்பம் இல்லாமலேகூடப் போகலாம்; கணபதி இல்லாமல் இருக்காது என்றாகியது.

ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெரும் கோவில்கள் எழுப்பப்பட்ட நிலையில் பரிவார தேவதைகளுக்கான ஆலயங்கள் கோவில் சுற்றுச் சுவரை ஒட்டி உட்புறமாக எழுப்பப்பட்டன. இன்று மிகச் சில கோவில்களே இப்படியுள்ளன. பரிவார ஆலயங்கள் முற்றிலும் வளர்ந்த நிலையில் சிவனின் மைய ஆலயத்தைச் சுற்றி எட்டு உப ஆலயங்கள் உருவாகின. அவற்றில் ஒன்று அம்பாளுக்கானது. சிவன் கிழக்கு பார்த்து இருந்தால், அம்பாள் தெற்கு பார்த்து இருப்பதாகக் கருவறை இருக்கும். பிற ஏழு ஆலயங்கள், சூரியன், சப்த மாதர்கள், கணபதி, முருகன், ஜ்யேஷ்டா எனும் தவ்வை, சந்திரன், சண்டிகேசர் ஆகியோருக்கானது. இந்த அமைப்பை புதுக்கோட்டையின் திருக்கட்டளை எனும் கோவிலில் முழுமையாகப் பார்க்கலாம். இங்கே நாம் பேசும் பலவற்றை நான் இப்போது முழுமையாக விளக்காவிட்டாலும் விரைவில் இவை ஒவ்வொன்றைப் பற்றியும் பேசப்போகிறேன். பின்னர் பல கோவில்களில் சூரியன், சந்திரன், தவ்வை, சப்த மாதர்கள், தவ்வை ஆகியோருக்குத் தனிச் சன்னிதி என்பது போய்விட்டது. கணபதி, முருகன், சண்டிகேசர் எனும் மூவருக்கு மட்டுமே சன்னிதிகள் எஞ்சின.

இதில் சப்த மாதர்கள் என்பது ஏழு பெண் தெய்வங்களைக் குறிக்கும். சிலர் சப்த கன்னியர் என்றும் சொல்வார்கள். ஆனால் இந்தியாவின் பல பகுதிகளில் இந்தத் தெய்வங்கள் ஒவ்வொன்றும் கையில் குழந்தை ஒன்றை ஏந்தியிருப்பதாகச் செதுக்கப்பட்டிருக்கும். எனவே சப்த மாதர்கள் என்று குறிப்பதே சரியானதாக இருக்கும். இந்த சப்த மாதர்கள் பல்வேறு கடவுளரின் சக்தி வடிவாகக் கருதப்பட்டு, இந்தக் கடவுளர்களிடமிருந்து வெளியே வந்ததாகவும் எடுத்துக்கொள்வர். அப்படியாக பிரம்மாவிடமிருந்து பிராமணி, விஷ்ணுவிடமிருந்து வைஷ்ணவி, மகேசுவரன் எனும் சிவனிடமிருந்து மாகேசுவரி, இந்திரனிடமிருந்து ஐந்திரி, முருகன் எனும் குமரனிடமிருந்து கௌமாரி, வராகத்திடமிருந்து வாராகி, துர்கை எனும் தேவியிடமிருந்து சாமுண்டி என்ற எழுவரும் உருவாகினர். இந்த ஏழு மாதர்களையும் அருகருகே வைக்கும்போது அவர்களின் இருபுறமும் வீரபத்திரர், கணபதி என்ற இருவரையும் வைப்பர். இதில் வீரபத்திரர் என்பது சிவனின் ஓர் அம்சம். தக்ஷனின் யாகத்தை நிர்மூலமாக்கி தக்ஷனை அழிக்க என்று சிவன் உருவாக்கிய வடிவமே வீரபத்திரர். இவ்வாறாக, சப்த மாதர்களுக்கு அருகிலும் கணபதியைக் காண முடியும்.

இவற்றை இப்போது மொத்தமாகத் தொகுத்துக் கொள்வோம்.

1) கணபதிக்குத் தனிக் கோவில்கள், பெரும்பாலும் சிறு கோவில்கள் இருக்கும்.

2) பெரும் சிவன் கோவில்களில் சிவன் சன்னிதியைச் சுற்றி ஐந்து கோஷ்டங்களாவது இருக்கின்றன என்றால், அதில் தெற்குத் திசையில் கட்டாயமாக கணபதிக்கு ஒரு கோஷ்டம் கொடுக்கப்பட்டிருக்கும்.

3) சிவன் கோவிலைச் சுற்றி ஏழு பரிவார ஆலயங்கள் இருக்கும்போது தென்மேற்கு மூலையில் கணபதிக்கான ஆலயம் இருக்கும்.

4) சிவன் கோவிலைச் சுற்றி மூன்றே மூன்று பரிவார ஆலயங்கள்தான் உள்ளன, சிவாலயம் கிழக்கு பார்த்து உள்ளது என்றால், மேற்குத் திசையில் அடுத்தடுத்து கணபதிக்கும் முருகனுக்கும் கிழக்கு பார்த்த ஆலயங்கள் இருக்கும்; சண்டிகேசர் ஆலயம் வடக்குத் திசையில், தெற்கு பார்த்து இருக்கும்.

5) சில பெருஞ்சிற்பத் தொகுதிகளில் சிவன் அல்லது விஷ்ணு முதன்மையாகத் தம் தொழிலைச் செய்துகொண்டிருக்கையில் பிற தெய்வங்கள் அனைவரும் அச்செயலைக் காணக் கூடிவந்திருப்பர். அக்குழுவில் கணபதியும் இருக்கலாம். உதாரணமாக, பாதாமி, ஐஹொளே ஆகிய இடங்களில் சிவன் நர்த்தனம் ஆடிக்கொண்டிருப்பார். அருகில் கணபதியும் நடனம் ஆடிக்கொண்டிருப்பார். சிவன் முப்புரம் எரிக்கும் திரிபுராந்தகச் சிற்பத்தில் கணபதியும் குமரனும் துர்கையும் தத்தம் வாகனத்தில் வந்து நிகழ்வைப் பார்த்துக்கொண்டிருப்பர். விஷ்ணு யோக நித்திரையில் இருந்தபடி மது கைடபனுடன் சண்டை நிகழ்த்திக்கொண்டிருக்கும் சிற்பங்களில் கணபதி, சிவன், குமரன், பிரம்மா ஆகியோருடன் இந்தப் போரைக் காண வந்திருப்பார்.

6) தவிர பெரிய விமானங்களோ கோபுரங்களோ இருக்கையில் ஆங்காங்கே இருக்கும் இடத்துக்கு ஏற்றவாறு கணபதிக்கான ஒரு அல்லது பல சிற்பங்கள் இருக்கும். மயிலாப்பூர் கபாலீசுவரர் ஆலயத்தின் கிழக்கு கோபுரத்தில் ஏழு நிலைகள் உள்ளன. நிலைக்கு ஒன்றாக கணபதியின் ஒரு சிற்பம் வீதம் மொத்தம் ஏழு கணபதிகளைக் காணலாம். இந்த கோபுரம் மிகச் சமீபத்திய காலத்தையதுதான். ஆனால் மிகப் பிரமாதமான ஒன்று. நம் தொடரில் சில வாரங்கள் இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரத்தின் சிற்பங்களைப் பற்றி மட்டுமே பேசப்போகிறோம்!

0

ஆகமங்களிலும் சிற்ப நூல்களிலும் எத்தனை விதமான கணபதி வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளன? அவர் கையில் என்னென்ன ஆயுதங்கள் அல்லது பொருள்கள் இருக்கும்? நமக்கு வழிகாட்டுபவர் கோபிநாத ராவ்தான்.

1. பால கணபதி
2. தருண கணபதி
3. பக்தி விக்னேஸ்வரர்
4. வீர விக்னேஸ்வரர்
5. சக்தி கணேசர் (லக்ஷ்மி கணபதி, உச்சிஷ்ட கணபதி, மஹா கணபதி, ஊர்த்வ கணபதி, பிங்கள கணபதி)
6. ஹேரம்ப கணபதி
7. பிரசன்ன கணபதி
8. த்வஜ கணபதி
9. உன்மத்த உச்சிஷ்ட கணபதி
10. விக்னராஜ கணபதி
11. புவனேச கணபதி
12. நிருத்த கணபதி
13. ஹரித்ரா கணபதி
14. பாலசந்திர கணபதி
15. சூர்பகர்ண கணபதி
16. ஏகதந்த கணபதி

இவற்றை முழுமையாக விளக்கத் தொடங்கினால் இடம் போதாது. எனவே ஒருசில வடிவங்களைப் பற்றி மட்டும் மேலோட்டமாகப் பார்ப்போம்.

பால கணபதி, தருண கணபதி, பக்தி விக்னேஸ்வரர் எனும் மூன்று வடிவங்களும் நான்கு கரங்களைக் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு கரத்திலும் வெவ்வேறு உணவுப்பொருளைக் கொண்டிருக்கும். பால கணபதியின் நான்கு கரங்களில் மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம், கரும்பு ஆகியவையும் தும்பிக்கையில் விளாம்பழமும் இருக்கும். தருண கணபதியின் நான்கு கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவையும் விளாம்பழம், நாவல் பழம், எள்ளுருண்டை, பிரம்பு ஆகியவற்றில் ஏதேனும் இருக்கும். பக்தி விக்னேஸ்வரர் கரங்களில் தேங்காய், மாம்பழம், வெல்லக்கட்டி, பாயசம் ஆகியவை இருக்கும்.

வீர விக்னேஸ்வரர் பதினாறு கரங்கள் கொண்டு, அனைத்திலும் ஆயுதங்களுடன் விளங்குவார். சக்தி ஆயுதம், வில், அம்பு, வாள், கேடயம், சுத்தியல், கதை, பாசம், அங்குசம், மழு, கொடி ஆகியவை கொண்டிருப்பார்.

சக்தி கணேசர், கூட ஒரு தேவியுடன் இருப்பார். இதில் பல வடிவங்கள் இருந்தாலும் மஹா கணபதி என்ற ஒன்றைமட்டும் விளக்குகிறேன். இவர் பத்து கரங்கள் கொண்டவராக இருப்பார். இந்தக் கரங்களில் தாமரை, மாதுளம், கமண்டலம், கதை, உடைந்த தந்தம், கரும்பு, நெற்கதிர், பாசம் ஆகியவை இருக்கும். இவருடைய மடியில் சக்தி அமர்ந்திருப்பாள். இந்தச் சக்திக்கும் விக்னேஸ்வரி என்று பெயர். அவள் கையில் தாமரை ஒன்று இருக்கும்.

இன்னொரு வடிவத்தில், கணபதி, சித்தி, புத்தி என்னும் இரு தேவியருடன் இருப்பதாகக் காட்டப்படுவார். சித்தி என்பது கேட்டது கிடைப்பது. புத்தி என்பது அறிவு. இவ்விரண்டுடன் கூட இருக்கும் கணபதி அறிவையும் கேட்ட வரத்தையும் தருவார்.

ஹேரம்ப கணபதி, மிகப் பிரத்யேகமான வடிவம். சிவனின் சதாசிவ வடிவம் போன்றது. சதாசிவ வடிவத்தைப் பற்றிப் பின்னர் பார்க்க உள்ளோம். ஹேரம்ப கணபதிக்கும் ஐந்து தலைகள். ஆகமங்களின்படி ஐந்துமே யானைத் தலைகள். நான்கு தலைகள் நான்கு திசைகளைப் பார்த்தபடியும் இந்த நான்கின்மேல் ஐந்தாவது தலை வானை நோக்கியபடியுமாக இருத்தல்வேண்டும். இந்த கணபதி வடிவம் சிங்கத்தின்மீது வீற்றிருக்கும். பெரும்பாலும் மற்ற வடிவங்களில் மூஞ்சூறுதான் விநாயகரின் வாகனம். சில இடங்களில் ஹேரம்ப கணபதிக்கான ஐந்து தலைகளில் ஒன்று மட்டும் யானைத் தலையாகவும் மற்றவை வெவ்வேறு மிருகத் தலையாகவும் வடிக்கிறார்கள். ஆனால் கோபிநாத ராவ், ஐந்துமே யானைத் தலை என்றுதான் சொல்கிறார். கையில் பாசம், தந்தம், அக்கமாலை, பரசு, மூன்று தலை கொண்ட சுத்தியல், கொழுக்கட்டை ஆகியவற்றுடன் ஒரு கை அபயஹஸ்தம் (காக்கும் கரம்), மற்றொரு கை வரத ஹஸ்தம் (வரம் தரும் கை) என மொத்தம் எட்டு கரங்களுடன் இருக்கும்.

நர்த்தன கணபதி, பெயருக்கேற்றபடி ஆட்டம் போடுபவர். ஹொய்சளக் கோவில்கள் பலவற்றிலும் நர்த்தன கணபதியைக் காண முடியும்.

ஹோய்சள நர்த்தன கணபதி

பாதாமியில் சிவனுடன் சேர்ந்து நடனமாடும் கணபதியைக் காணலாம்.

பாதாமி, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

தமிழகக் கோவில் கட்டுமானத்தில் கணபதி எங்கெல்லாம் இருப்பார் என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இந்தியா முழுமையிலும் இவ்வாறு தெளிவான ஆகமக் கட்டுப்பாட்டு விதிகள் இன்றி பலவகையான கணபதி சிற்பங்களைப் பார்க்க முடிகிறது. அவற்றில் இரண்டை மட்டும் உங்களுக்குக் காண்பிக்கிறேன். ஒன்று ஒடிஷாவில் வேதாள தேவன் கோவில் எனப்படும் சிவன் கோவிலில் உள்ள ஒரு பிள்ளையார்.

வேதாள தேவன் கோவில், ஒடிஷா

அடுத்தது ஆந்திராவில் லேபாக்ஷி எனுமிடத்தில் உள்ள விஜயநகர காலக் கோவிலில் மாபெரும் சிற்பமாக ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்டிருப்பது.

ஒற்றைக் கல் சிற்பம், லேபாக்ஷி

அழகு என்று வரும்போது தமிழகத்தில் பல பாண்டியர் குடைவரைப் பிள்ளையார்களையும் குறிப்பிடுவேன். திருகோகர்ணம் பிள்ளையார் கருவறையின் சுவரில் இருப்பதால் நல்ல படங்கள் கிடைப்பதில்லை. மிக அழகான சிற்பம் அது. பிள்ளையார்பட்டி பிள்ளையாரின் தரமான படங்கள் கிடைப்பதும் அரிது. அதிலும் அலங்காரங்கள் இன்றிக் கிடைப்பது மிக மிகக் கடினம். வல்லத்துப் பல்லவப் பிள்ளையார் மிக மிக அழகு. ஆனாலும், முதலாம் பராந்தக சோழன் காலத்துப் புள்ளமங்கையின் முழுமையான பிள்ளையார் சிற்பத் தொகுதிக்கு என்று ஒரு பேரழகு உள்ளது. இதனைப் பாருங்கள்.

புள்ளமங்கை, படம்: வி.கே.ஶ்ரீனிவாசன்

பிள்ளையார் பத்மத்தின்மீது வீற்றிருக்கிறார். அவருக்குமேல் அழகான கவிந்த குடை. குடைக்குமேல் இரு கந்தர்வர்கள். சுற்றிலும் மிக அழகான எட்டு கணங்கள். அதில் ஒரு கணம் மூஞ்சூறு வாகனத்துடன் விளையாடிக்கொண்டிருக்கிறது. ஒரு கணம் யாழ் இசைக்கிறது. ஒரு கணம் சாமரம் வீசுகிறது. ஒரு கணம் கையில் கொழுக்கட்டைப் பாத்திரத்தை ஏந்தி, விஸ்மய (ஆச்சரிய) முத்திரையுடன் உள்ளது. இரண்டிரண்டாக இருக்கும் கணங்கள் ஆண்-பெண் கணங்கள். கைகளில் படையல் உணவுடன் அமர்ந்திருக்கின்றனர். அனைவரது தலை அலங்காரங்களும் தனித்துவம் மிக்கவையாக உள்ளன.

கணபதி கரண்ட மகுடம் அணிந்துள்ளார். வயிற்றைச் சுற்றி நாகப் பாம்பை இழுத்துக் கட்டி அணிந்துள்ளார். இடம்புரியாகத் தும்பிக்கை உள்ளது. அதனுள் விளாம்பழம். பின் வலது கை பாசமும் பின் இடது கை கரும்பும் கையில் பிடித்துள்ளன. முன் வலது கையில் இருப்பது ஏதோ உணவுப்பொருள்தான். அது கொழுக்கட்டையா அல்லது ஏதேனும் பழமா என்று தெளிவாகச் சொல்லமுடியவில்லை. முன் இடதுகை இடுப்பில் (கடி ஹஸ்தம்) வைக்கப்பட்டுள்ளது. அளவுகள் அவ்வளவு கச்சிதமாகப் பொருந்தியுள்ளன.

முற்காலச் சோழர் கோவில்களில் ஆதித்தன் – பராந்தகன் காலத்தில்தான் அர்தமண்டபமும் ஐந்து கோஷ்டங்களும் உருவாகத் தொடங்கியிருந்தன. அங்கிருந்து கணபதி இல்லாத சிவன் கோவிலே இல்லை என்பதாக ஆயிற்று. இவற்றில் ஏகப்பட்ட கோவில்களில் மிக நேர்த்தியான, மிக அழகான கணபதி சிற்பங்கள் உள்ளன. ஆனால் ஒரு சிற்பத் தொகுதியாக, புள்ளமங்கை கணபதி நம்மை வெகுவாக ஈர்க்கிறார். மயக்குகிறார்.

(தொடரும்)

பகிர:
பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர். சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் இளநிலையும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியக் கணிதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். வரலாறு, தொழில்நுட்பம், இந்தியவியல் போன்ற துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.View Author posts

3 thoughts on “கல்லும் கலையும் #4 – இந்தின் இளம்பிறை போலும் எயிற்றன்!”

  1. புள்ளமங்கை விநாயகர் அமர்ந்திருப்பது லலிதாசனம் தானே? பத்மாசனத்தில் அமர்ந்தால் பாதங்கள் முழங்கால் மடிப்புக்கு வெளியே அல்லவா வந்திருக்கும்?

    1. பத்மத்தின்மீது அமர்ந்துள்ளார் என்று மாற்றிவிட்டேன். நன்றி.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *