Skip to content
Home » கல்லும் கலையும் #7 – மாலொடு தண்தாமரையானும் நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்!

கல்லும் கலையும் #7 – மாலொடு தண்தாமரையானும் நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்!

கல்லும் கலையும்

இந்தத் தொடரின் ஆரம்பத்தில் ஞானகுருவாகிய தக்ஷிணாமூர்த்தி பற்றிப் பார்த்தோம். சிவனின் ஒரு வடிவம்தான் தக்ஷிணாமூர்த்தி எனும் தென்திசைக் கடவுள், சிவனுடைய கருவறை சுற்றுச் சுவரில் தெற்குக் கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தியின் சிலை வைக்கப்படும் என்றும் பார்த்தோம்.

சிவன் கோவிலில் கருவறையில் வழிபடப்படுவது யார்?

விதிவிலக்குகள் மிகச்சில தவிர்த்து, சிவ வழிபாடு என்பது லிங்க வடிவில் சிவனை வழிபடுவதே. இந்தியா முழுமையிலும் சிவன் கோவில்கள் என்றாலே கருவறையில் லிங்க வடிவத்தைத்தான் நீங்கள் காண்பீர்கள்.

லிங்க வடிவில் சிவன் - பாதாமி, கடம்பர் மலை, பைரவகோனா
லிங்க வடிவில் சிவன் – பாதாமி, கடம்பர் மலை, பைரவகோனா

மேலே உள்ள படங்களைப் பாருங்கள். முதலாவது, வட கர்நாடகத்தின் பாதாமியில் சாளுக்கிய குகைக் கோவில்களைத் தாண்டி, அருகில் உள்ள மாபெரும் குளத்தைச் சுற்றிச் சென்றால் ஒரு சிறு குன்று தென்படும். அந்தக் குன்றின் ஒருபுறத்தில் பல சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். அதில் சிறு பிறை ஒன்றில் எந்தவித அலங்காரங்களும் இல்லாமல் ஒரு லிங்கம் செதுக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது, புதுக்கோட்டையின் நார்த்தாமலைக்கு அருகில் உள்ள கடம்பர் மலை. அருகருகாக மூன்று கோவில்கள். ஒன்று சோழர் காலக் கட்டுமானக் கோவில், மற்ற இரண்டு பாண்டியர் காலக் கட்டுமானக் கோவில்கள். ஒட்டிய குன்றின்மீது சிறு பிறையில் பீடத்தின்மீது லிங்கம். அந்தப் பிறையைச் சுற்றி கோவில் போல ஒரு கட்டுமானத்தைச் செதுக்கியுள்ளனர்.

அதற்கு அருகில் நீங்கள் பார்ப்பது ஆந்திராவில் உள்ள பைரவகோனா என்னும் இடம். அங்கே அடுத்தடுத்து குகைக்கோவில்கள் வெட்டப்பட்டுள்ளன. அதில் ஒரு சுவரில் கோவில் போன்ற புடைப்புச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. பாதாமியில் பார்த்ததிலிருந்து கடம்பர் மலை சற்று முன்னேற்றம் என்றால், பைரவகோனாவில் முழு விமானத்தைப் பார்க்க முடிகிறது. அதிஷ்டானம், பாதவர்கம், பிரஸ்தரம், கண்டம், சிகரம், ஸ்தூபி எனப்படும் ஆற அங்கக் கோவில் கட்டுமானத்தையும் கருவறையில் மிகத் தோராயமாக ஒரு லிங்கத்தையும் செதுக்கியுள்ளனர்.

கோவில்கள் முதலில் குகைக் கோவில்களாகவும் பின்னர் ஒற்றைக்கல் தளிகளாகவும் அடுத்து கட்டுமானக் கோவில்களாகவும் உருப்பெற்றன. தமிழகத்தைப் பொருத்தமட்டில் குகைக்கோவில்களையும் ஒற்றைக்கல் தளிகளையும் பல்லவர்களும் பாண்டியர்களும் மட்டுமே அமைத்தனர். பின்னர் கட்டுமானக் கோவில்களைக் கட்டத் தொடங்கினர். சோழர்கள் அதே முறையைப் பின்பற்றி கட்டுமானக் கோவில்களை மட்டுமே கட்டினர்.

பல்லவர்கள் தாம் வெட்டுவித்த சிவன் கோவில் கருவறைகளில் அடிப்பாறையில் சிவலிங்கங்களை உருவாக்கவில்லை. பின்சுவரில் நேரடி ஓவியங்களாக, அல்லது மரப்பலகையில் செதுக்கி, அல்லது மரச்சட்டகம் பொருத்திய துணியில் சுவரில் பொருத்தி வழிபட்டுள்ளனர். கைலாசநாதர் கோவில் சுற்றுப்பாதையில் உள்ள சில சன்னிதிகளில் ஓவிய வடிவம் சிதைந்த நிலையில் நமக்குக் கிடைக்கிறது.

கைலாசநாதர் கோவில்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்

கற்சுவரில் சிற்பமாகச் செதுக்கியும் வழிபட்டுள்ளனர். உதாரணத்துக்கு மாமல்லபுரத்தின் பல கோவில்களை எடுத்துக்கொள்ளலாம். கீழே சாளுவன்குப்பம், அதிரணசண்ட மண்டபத்தைப் பாருங்கள்.

அதிரணசண்ட மண்டபம் - சாளுவன்குப்பம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி
சாளுவன்குப்பம் அதிரணசண்ட மண்டபம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

இங்கே தாய்ப்பாறையிலேயே கருவறை வெட்டப்பட்டு, வாயிலில் துவாரபாலகர்களும் உள்ளே பின்சுவரில் சோமாஸ்கந்த வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது. ஆனால் லிங்கம் மட்டும் வேறு கல்லில் (கரிய பஸால்ட்) தனியாகச் செய்து பொருத்தப்பட்டிருக்கிறது. பல பட்டைகளால் ஆன லிங்கம். இதற்குத் தாரா லிங்கம் (Dhārā liṅga) என்று பெயர். இதுகுறித்துப் பின்னர் பார்ப்போம்.

மாறாக, பாண்டியர்கள் தாய்ப்பாறையிலேயே லிங்கத்தை வெட்டினார்கள். பாண்டியர்களின் குகைக் கோவில்கள் காவிரிக்குத் தெற்கே திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து தொடங்கி காரைக்குடி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்யாகுமரி என்று பரவியுள்ளவை. உதாரணத்துக்கு புதுக்கோட்டை நார்த்தாமலையில் திருச்சுனை ஈசுவரம் என்ற பெயருடைய ஒரு சுவாரசியமான குகைக்கோவிலை எடுத்துக்கொள்வோம். இது பெரும்பாலும் ஒரு நீர்ச்சுனைக்கு அடியில் இருக்கும் குகை. தூரத்திலிருந்து சிலமுறை நீருக்கடியில் இருக்கையில் பார்த்துள்ளேன். மிகச் சமீபத்தில்தான் இந்த குகையின் உள்ளே சென்று பார்த்தேன். நான் நினைத்ததைவிடப் பெரிய குகை. சில இளைஞர்கள் இந்தச் சுனையின் நீரை இறைத்து வெளியேற்றி கருவறையை சுத்தப்படுத்தியுள்ளனர்.

திருச்சுனை ஈசுவரம் - நார்த்தாமலை
திருச்சுனை ஈசுவரம் – நார்த்தாமலை

தாய்ப்பாறையிலேயே செதுக்கப்பட்ட பீடமும் லிங்கமும். லிங்கத்தைப் பார்க்கும்போது இது வேறு கல்லோ என்று உங்களுக்குத் தோன்றலாம். இல்லை. அதே பாறைதான். தேய்த்துத் தேய்த்து மெருகேற்றப்பட்டிருக்கிறது. மீண்டும் மழை பெய்தால் இந்த முழுக் குகையும் நீரில் மூழ்கிவிடும்.

0

லிங்க வழிபாடு எங்கிருந்து தொடங்குகிறது? லிங்க வழிபாடு எதனைக் குறிக்கிறது?

தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை குறித்தும் பேராசிரியர் சுவாமிநாதன் குறித்தும் முன்னமேயே நான் குறிப்பிட்டுள்ளேன். ஒவ்வோர் ஆண்டும் தொல்லியல் பார்வையில் முக்கியமான இடங்களுக்கு ஒரு வாரக் கலையுலா ஒன்றை நாங்கள் நடத்துகிறோம். 2015-ல் குஜராத் சென்றிருந்தோம். குஜராத்தில் மோதேரா சூரியக் கோவில், ராணி கி வாவ் படிக்கிணறு முதலாகப் பல இடங்களுக்குப் போனோம். ஆனால் அந்தப் பயணத்தில் முக்கியமானவை லோதல், தோலாவீரா எனும் சிந்து சரஸ்வதி நாகரிகத்தின் இரு நகரங்கள்.

தோலாவீரா கிட்டத்தட்ட பாகிஸ்தானை ஒட்டிய, ஆள் அரவமே இல்லாத, கட்ச் பகுதியில் உள்ளது. இங்குள்ள செங்கல் கட்டுமான எச்சங்களைப் பார்வையிட்டபடி வந்த நாங்கள் கீழ்க்காணும் கம்ப வடிவிலான பொருளைக் கண்டோம்.

தோலாவீரா
தோலாவீரா

இது வெறும் கட்டுமானப் பொருள் அல்ல என்பது தெளிவு. மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கல்லை மிக அழகாகச் செதுக்கி, அதற்கு ஒரு குறிப்பிட்ட முனையைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இதுகுறித்து நாம் மேலே எதுவும் சொல்ல முடியாததற்குக் காரணம், சிந்து நாகரிகம் குறித்து எழுதப்பட்ட தகவல்கள் என்று நாம் எதையும் பெறாததே. ஆனால் மேலே உள்ள பொருள் ஆண் குறியை ஒத்ததாக இருப்பதை மட்டும் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து நாம் பார்க்கவேண்டியது ஆந்திராவில் குடிமல்லம் என்ற இடத்தில் கிடைத்துள்ள லிங்கத்தை. தோலாவீராவில் கிடைத்ததை லிங்கம் என்று எப்படிச் சொல்லலாம் என்று ஒருவர் கேட்கலாம். ஆனால் குடிமல்லம் லிங்கத்தில் அப்படிப்பட்ட பிரச்னையே வராது.

செதுக்கப்பட்டிருப்பது ஆண்குறிதான் என்பதைத் தெளிவாகக் காட்டும் சிற்பம். அதன் முன்புறத்தில் ஓர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. மிக அழகான தலைப்பாகை. குறைவான ஆனால் நிறைவான அணிகலன்கள். இடது கையில் நிச்சயமாக மழு. வலது கையில் சுருள் கொம்புகளைக் கொண்ட செம்மறி ஆடு. அந்த உருவத்துக்கு மேலாடை இல்லை. கீழாடை அணிந்திருந்தாலும் அந்த உருவத்தின் ஆண்குறி தெளிவாக மேல் நோக்கி எழும்பியுள்ளது. இந்த உருவம், பூதகணம் போன்ற ஒரு குள்ள உருவத்தின் தோளின்மீது நின்றுகொண்டிருக்கிறது.

இது லிங்கத்தின்மீது சிவனின் முழு உருவத்தைச் செதுக்கிய வடிவம் என்றே நிபுணர்கள் அனைவரும் சொல்கின்றனர். குடிமல்லத்தில் கிடைத்த இந்த லிங்க வடிவைக் கொண்டு பின்னர் பரசுராமேஷ்வரா ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தின் காலக் கணக்கீட்டில் நிறையக் குழப்பங்கள் உள்ளன. பொயுமு 1-ம் நூற்றாண்டு என்பதிலிருந்து பொயு 7-ம் நூற்றாண்டு என்கிறார்கள். என் கணிப்பில் இது நிச்சயமாக பொயு 3-ம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக இருக்கவேண்டும். சாதவாகனர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். குப்தர்களின் காலத்துக்குக் கட்டாயம் முற்பட்டதாக இருக்கவேண்டும். கீழே பரசுராமேஷ்வரா ஆலயத்தில் உள்ள சிற்பம், அருகிலேயே சந்திரகிரி கோட்டையில் வைக்கப்பட்டிருக்கும் இந்தச் சிற்பத்தின் நகலின் படம், இரண்டையும் இணைத்துள்ளேன்.

அசல் - பரசுராமேஷ்வரா கோவில், குடிமல்லம்; நகல் - சந்திரகிரி கோட்டை அருங்காட்சியகம், படம் : முரளி நடராஜன்
அசல் – பரசுராமேஷ்வரா கோவில், குடிமல்லம்; நகல் – சந்திரகிரி கோட்டை அருங்காட்சியகம், படம் : முரளி நடராஜன்

கோபிநாத ராவ், பிதா (Bhitā) என்ற இடத்தில் கிடைத்த, தற்போது லக்னோ அருங்காட்சியகத்தில் உள்ள, எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஒரு லிங்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இது குடிமல்லம் லிங்கத்தின் காலத்துக்கு முற்பட்டதாக, பொயுமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக, அதன் எழுத்தமைதியைக் கொண்டு அறியப்படுகிறது. ‘கஜஹுதி புதனம் லிங்கோ பதிடாபிதோ வாசேதி புதேன நாகசிரினா பிய இதம் தேவதா’ என்கிறது பிராகிருத மொழி, பிராமி எழுத்துக் கல்வெட்டு. ‘வாசேதியின் மகன் நாகசிரி, கஜஹுதியின் லிங்கத்தை நிர்மாணித்தான். கடவுள் மகிழ்ச்சி அடையட்டும்’ என்பது இதன் பொருள்.

லிங்கம் என்ற சொல்லுக்கு வடமொழியில் ஒரு பொருள் ஆண்குறி. யோனி என்பதற்கான பொருள் பெண்குறி. நிச்சயமாக சிவன் வழிபாடு ஆண்குறி வழிபாட்டுடன் இணைந்தது என்பதையே குடிமல்லம் சிற்பம் நமக்குக் காட்டுகிறது. இந்த அடிப்படையில்தான் தோலாவீரா சிற்பம் நமக்கு ஒரு காட்சியைக் கொடுக்கிறது.

இந்தியாவில் லிங்க வழிபாடு பல மாறுதல்களை அடைந்துள்ளது. இன்று கோவிலுக்குச் செல்வோர் எல்லோருமே ‘ஆண் குறியை வணங்கப் போவோம், வா!’ என்று சொல்லிவிட்டுச் செல்வதில்லை. அப்படித்தான் இந்து மதத்தைக் கேவலப்படுத்த முற்படுவோர் கேலி செய்கின்றனர். இந்து மதம் விரிவடைந்தபடியும் மாறியபடியுமே இருந்துவந்துள்ளது. தாய் தெய்வ வழிபாடு, பெண்குறி வழிபாடு, ஆண்குறி வழிபாடு போன்றவை கருவளம் (fertility), செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இந்தியாவில் லஜ்ஜா கௌரி வழிபாடு என்பதும் புழக்கத்தில் இருந்தது. இன்று சில கோவில்களின் அருகில் அல்லது அருங்காட்சியகங்களில் இந்தச் சிற்பங்கள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம், லஜ்ஜா கௌரி என்பது தலை இல்லாத, முழுமையான பெண் உடலைக் கொண்ட சிற்பம். இந்தச் சிற்பத்தில் பெண்ணின் யோனி முதன்மைப்படுத்தப்பட்டு, யோனி விரித்தபடி, கால்களை அகட்டி அமர்ந்திருக்கும். தலை இருக்கும் இடத்தில் தாமரை மலர் இருக்கும். உடலில் ஆடைகள் ஏதும் இருக்காது.

லஜ்ஜா கௌரி - ஆலம்பூர் அருங்காட்சியகம் ; நியூயார்க் மெட் அருங்காட்சியகம், படம் வி.கே. ஸ்ரீனிவாசன்
லஜ்ஜா கௌரி – ஆலம்பூர் அருங்காட்சியகம்; நியூயார்க் மெட் அருங்காட்சியகம், படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

லிங்க வழிபாடு ஆரியர்களுக்கானதல்ல என்றும் ஆரியர்களின் வேதமானது, லிங்க வழிபாட்டை ஆரம்பத்தில் எதிர்த்து, பின்னர் ஏற்றுக்கொண்டது என்றும் சிலர் கருதுகிறார்கள். அதற்குச் சான்றாக, ரிக் வேதத்தில் இந்திரன் கூறும் கூற்றாக, ‘எவரெல்லாம்  ஆண்குறியை (ஶிஶ்ந) வழிபடுகிறார்களோ, அவர்களை நம் புனிதச் சடங்குகள் நடக்கும் இடத்தில் அனுமதிக்காதீர்கள்’ என்று வருவதை எடுத்துக்காட்டுகிறார்கள். இதனைச் சுட்டிக்காட்டும் கோபிநாத ராவ், வேதங்களுக்கு உரை எழுதிய யாஸ்கர் (பொயுமு 4-ம் நூற்றாண்டு), சாயணர் (பொயு 14-ம் நூற்றாண்டு) ஆகியோர் ஶிஶ்ந என்பதற்கு ஆண்குறி என்பதைவிட, கெட்ட பழக்கம் உடையவர்கள் என்றும், துர்காசார்ய என்பவர், விலைமாதருடன் உறவு வைத்திருப்பவர்கள் என்றும் பொருள் கொள்வதைச் சுட்டிக்காட்டுகிறார்.

ஒன்று தெளிவு. காலம் செல்லச்செல்ல, வழிபடும் சிற்பமான லிங்கம் பெரும் மாற்றம் அடையத்தொடங்கியது. ஆகமங்கள் இந்தச் சிற்பத்தில் பல சிக்கலான அளவுக் கணக்குகளை அறிமுகப்படுத்தின. தொடக்ககாலச் சிற்பங்கள் இயல்பாக, வட்டார வழக்குகளாக இருப்பதிலிருந்து, தெளிவான வரைமுறைகளுக்கு உட்பட்டதாக ஆகத் தொடங்கியது.

0

லிங்கம் இரு வகைப்படும். சல லிங்கம், அசல லிங்கம். அசல லிங்கம் என்பது நகராதது. கருவறையில் நிறுவப்படுவது. பெரும்பாலும் கல்லால் ஆனது. சல லிங்கம் என்பது பல்வேறு பொருள்களால், பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப்படுவது. சுட்ட மண், உலோகம், ரத்தினக் கற்கள், மரம், கருங்கல் போன்றவற்றினால் இந்த லிங்கம் இருக்கலாம். லிங்காயத்துகள், வீரசைவர்கள் எனும் கர்நாடக மாநில சைவப் பிரிவினர் தம் உடலில் அணிந்து செல்லும் லிங்கம் இந்த வகையே.

ஆகமங்கள் பல்வேறு விதமான லிங்கப் பிரதிஷ்டைகள் குறித்துப் பேசுகின்றன. ஸ்வயம்பு லிங்கம் என்றால் தானாக உருவான லிங்கம். அதேபோல கணங்கள், தேவர்கள், ரிஷிகள் ஆகியோர் நிர்மாணித்து வழிபடும் லிங்கங்கள் குறித்தும் ஆகமங்கள் பேசுகின்றன. நாம் மனிதர்கள் உருவாக்கி வழிபடும் மானுஷ லிங்கங்களை மட்டும் பார்ப்போம். கருவறையில் வைக்கப்படும் மானுஷ லிங்கத்துக்கு மூன்று பாகங்கள் இருப்பதாக ஆகமங்கள் சொல்கின்றன. அவையாவன, பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம். பிரம்ம பாகமானது அடிப்பகுதி. இதன் குறுக்குவெட்டு சதுரமாக இருக்கும். அதற்கு அடுத்தது நடுப்பகுதியான விஷ்ணு பாகம், எண்கோண வடிவு கொண்டது. அதற்கு மேற்பட்ட ருத்ர பாகத்தின் குறுக்குவெட்டு வட்ட வடிவமானது. இது மேலே ஒரு கோளத்தைப் போல வளைவானதாக இருக்கும். இந்த ருத்ர பாகத்துக்கு பூஜா பாகம் என்றும் பெயர். இந்த ருத்ர பாகத்தில் பிரம்ம சூத்திரம் எனப்படும் கோடுகள் வரையப்பட்டிருக்கும்.

ஆகமங்களில் இந்த ஒவ்வொரு பாகத்தின் ஒப்பீட்டு நீளம், இவை ஒவ்வொன்றின் சுற்றளவு ஆகியவை குறித்துப் பல்வேறு விவரங்கள் வருகின்றன. உதாரணத்துக்கு மட்டும் ஒருசில தகவல்களைப் பார்ப்போம்.

பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் ஆகியவை சம நீளங்கள் கொண்டவையாக இருந்தால் அதற்குச் சர்வசம லிங்கம் என்று பெயர்.

விஷ்ணு பாகம், பிரம்ம பாகத்தைவிட நீளமாகவும், ருத்ர பாகம், விஷ்ணு பாகத்தைவிட நீளமாகவும் இருக்கும் லிங்கங்களுக்கு வர்த்தமான லிங்கம் என்று பெயர். இவற்றின் நீளங்கள் முறையே 4:5:6 அல்லது 5:6:7 அல்லது 6:7:8 அல்லது 7:8:9 என்ற விகிதங்களில் இருக்கலாம்.

சைவாதிக லிங்கம் என்றால், அதில் பிரம்ம பாகமும் விஷ்ணு பாகமும் ஒரே அளவு கொண்டவையாக இருக்கும்; ருத்ர பாகம் மட்டும் இவ்விரண்டையும்விட நீளமாக இருக்கும். அதாவது, 3:3:4 அல்லது 4:4:5 அல்லது 5:5:6 அல்லது 7:7:8 என்று இருக்கலாம்.

சரி, நீளம் பற்றிய விகிதங்கள் தரப்பட்டுள்ளன. அகலம் அல்லது சுற்றளவு?

லிங்கத்தின் மொத்த நீளத்தைப் பதினாறு பாகங்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். அதில் ஆறு பாகம் அகலம் இருந்தால் அதற்கு ஆத்ய லிங்கம் என்று பெயர். அகலம் ஐந்து பாகமாக இருந்தால் அனாத்ய லிங்கம். நான்கு பாகமாக இருந்தால் சுரேத்ய லிங்கம். இவை தவிர ஆகமங்கள் இன்னொரு விதமான லிங்கத்தைக் குறிப்பிடுகின்றன.

மொத்த லிங்கத்தின் நீளத்தை ஒன்பது பங்குகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள். அதில் எட்டு பங்குதான் பிரம்ம பாகத்தின் குறுக்குவெட்டான சதுரத்தின் சுற்றளவு. விஷ்ணு பாகத்தின் குறுக்குவெட்டான எண்கோணத்தின் சுற்றளவு ஏழு பங்கு. ருத்ர பாகத்தின் குறுக்குவெட்டான சுற்றளவு ஆறு. இப்படிப்பட்ட லிங்கத்தை திரைராசிக லிங்கம் என்று ஆகமங்கள் குறிப்பிடுகின்றன.

ஆனால், இவை தோராயமான கணக்கீடுகளே. உதாரணமாக, லிங்கத்தின் நீளம் ஒன்பது அடி என்றால், சதுரத்தின் சுற்றளவு எட்டு அடி. அப்படியானால் சதுரத்தின் ஒரு பக்கத்தின் நீளம் இரண்டு அடி. இதற்குள் பொருந்தும் சமபக்க எண்கோணத்தின் சுற்றளவு என்னவாக இருக்கும்? இதற்குள் பொருந்தக்கூடிய சமபக்க எண்கோணத்தின் ஒரு பக்கத்தின் நீளம் \frac{2}{1+\sqrt{2}} = 0.8284

அப்படியானால் எண்கோணத்தின் சுற்றளவு 6.63 ஆகும். இதனை ஆகமங்கள் தோராயமாக 7 என்கின்றன. அதேபோல வட்டத்தின் சுற்றளவு 2 \pi = 6.3

இதனை ஆகமங்கள் 6 என்று தோராயமாகச் சொல்கின்றன.

ருத்ர பாகத்தின் மேல்பகுதியின் வளைவு, பலவிதங்களில் அமைக்கப்பெறுகின்றன. இவற்றுக்கு, குடைபோன்றது (சாத்ராகார), வெள்ளரிபோன்றது (திரிபுஷாகார), கோழிமுட்டைபோன்றது (குக்குடாண்டாகார), அரைநிலவுபோன்றது (அர்த சந்த்ராகார) மற்றும் நீர்க்குமிழிபோன்றது (புத்புத சத்ரிஷா) என்று பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றை அமைப்பதற்கான கணித வரைமுறைகள் மிக விரிவாகத் தரப்பட்டுள்ளன என்றும் அவை மிகவும் சிக்கலான கணக்குகள் என்பதால் அவற்றைத் தன் புத்தகத்தில் சேர்க்கவில்லை என்றும் கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார்.

இந்தக் கணக்குகளிலும் பெயர்கள் தருவதிலும் வெவ்வேறு ஆகமங்களில் பல வேறுபாடுகளும் உள்ளன. இவற்றை இங்கே விவரமாகப் பேசுவதன் காரணம், இந்த லிங்க மூர்த்தங்கள் இஷ்டத்துக்கு உருவாக்கப்படுபவை அல்ல, மிகத் தெளிவான வடிவ கணித அடிப்படையில் உருவாக்கப்படுபவை என்பதைக் குறிப்பிடத்தான்.

பிரம்ம சூத்திரம் என்ற கோடுகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். இந்தக் கோடுகள் இல்லாவிட்டால், ஒரு லிங்கம் வழிபட ஏற்றதல்ல என்கிறார் கோபிநாத ராவ். இதில் வரும் நேர்கோடுகளின் நீளம், அவற்றுக்கிடையேயான இடைவெளி, வளைகோடுகளின் பாதை என அனைத்துக்கும் கணக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வளைகோடுகளுக்கு பார்ஸ்வ சூத்திரங்கள் என்று பெயர்.

மானுஷ லிங்கங்களில் வேறு சில வகைப்பாடுகளும் உள்ளன. அவையாவன: அஷ்டோத்தர சத லிங்கம், சஹஸ்ர லிங்கம், தாரா லிங்கம் மற்றும் முக லிங்கம்.

லிங்கத்தின் ருத்ர பாகத்தில் 108 லிங்கங்களைச் சிறிது சிறிதாகச் செதுக்கி உருவாக்குவது அஷ்டோத்தர சத லிங்கம். இதற்கும் கணக்கு உண்டு. கிடைமட்டமாக பூஜாபாகத்தில் நான்கு கோடுகளை சம தூரத்தில் வரைந்துகொள்ளவேண்டும். இவற்றுக்குச் செங்குத்தாக நீளவாக்கில் 27 கோடுகளைச் சம இடைவெளியில் வரைந்தால் (27 x 4 = 108) கிடைக்கும் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு லிங்கத்தைச் செதுக்கவேண்டும்.

அதே பூஜா பாகத்தில் 1001 லிங்கங்களை உருவாக்கினால் கிடைப்பது சஹஸ்ர லிங்கம். ஆகமம் இதற்குத் தருவது 11 x 99 = 1089 என்னும் கணக்கு. அதாவது தோராயமாக 1001 லிங்கங்களுக்கான இடங்கள். புவனேஸ்வரத்தின் பரசுராமேஸ்வரா ஆலயத்தில் இதனைக் காணலாம். ஆனால், ஆகமக் கணக்குகளில் இல்லாத வகையில் 20 கிடைமட்ட வரிசைகளில் வரிசைக்கு 50-ஆக வெட்டப்பட்டுள்ளது. வரிசைக்கு 50 இருக்கும் என்பது ஒரு யூகம்தான். நான் அங்கே சென்றபோது பொறுமையாக எண்ணவில்லை.

சஹஸ்ர லிங்கம் - பரசுராமேஸ்வரா கோவில், புவனேஸ்வர்
சஹஸ்ர லிங்கம் – பரசுராமேஸ்வரா கோவில், புவனேஸ்வர்

அடுத்தது, தாரா லிங்கம். மாமல்லபுரத்தின் அதிரணசண்ட மண்டபத்தைப் பற்றிப் பேசும்போது அங்கே கருவறையில் உள்ள லிங்கம் தாரா லிங்கம் என்று சொல்லியிருந்தேன். ருத்ர பாகத்தின் குறுக்குவெட்டு வட்டமாக இல்லாமல் பட்டை பட்டையாக வெட்டப்பட்டிருந்தால் அதற்குப் பெயர்தான் தாரா லிங்கம். இது ஐந்து முதல் அறுபத்து நான்கு பட்டைகளாக வெட்டப்படலாம். ஒவ்வொரு ஆகமமும் ஒவ்வொரு கணக்கைக் கொடுக்கின்றன. அதிரணசண்ட மண்டபத்தின் தாரா லிங்கம் பதினாறு பட்டைகள் கொண்டதாக உள்ளது.

அடுத்து முகலிங்கம். பிதா, குடிமல்லம் போன்ற இடங்களில் கிடைத்த மிகப் பழமையான லிங்கங்கள் எல்லாமே உருவம் பொறித்த லிங்கங்களே. ஆனால் ஆகம காலத்துக்கு முந்தையவை என்று தெரிகிறது. ஆகமங்கள் வரையறுக்கப்பட்ட காலத்தில் முகலிங்க உருவாக்கத்துக்கும் கட்டுப்பாடுகள் உருவாகின்றன.

முதலில் லிங்கம், சர்வசம லிங்கமாக இருக்கவேண்டும், அதாவது அதன் பிரம்ம, விஷ்ணு, ருத்ர பாகங்கள் சம நீளம் கொண்டவையாக. இதன் ருத்ர பாகத்தில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு அல்லது ஐந்து முகங்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டிருக்கவேண்டும். இந்த ஐந்து முகங்களும் சிவனின் ஐந்து அம்சங்களான தத்புருஷ (கிழக்கு), அகோர (தெற்கு), வாமதேவ (வடக்கு), சத்யோஜாத (மேற்கு) மற்றும் ஈசான (வானம்) வடிவங்களைக் குறிக்கும்.

கருவறையில் கிழக்கு நோக்கி ஒரே ஒரு கதவு மட்டும் இருந்தால் ஒற்றை முகலிங்கமாக, கிழக்கு நோக்கிய தத்புருஷ வடிவமாக இருக்கும். கிழக்கு, மேற்கு இருபுறமும் கதவுகள் இருந்தால், இருமுக லிங்கமாக தத்புருஷ, சத்யோஜாத வடிவங்கள் இருக்கும். மூன்று கதவுகள் இருந்தால், அவை மேற்கு தவிர்த்த மூன்று திசைகளில் தத்புருஷ, அகோர, வாமதேவ வடிவங்கள் கொண்ட மூன்றுமுக லிங்கமாக இருக்கும். நான்கு திசைகளிலும் கதவுகள் இருந்தால், நான்கு முகங்கள் கொண்ட லிங்கமாக இருக்கும். அல்லது நான்குடன் சேர்த்து, ஐந்தாவது முகமாக, கிழக்கு பார்த்த ஈசானம் நான்கு முகங்களுக்கும் மேலே இருக்கும்.

வட இந்தியாவில் முக லிங்கங்கள் ஏகப்பட்டவை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதே எண்ணிக்கையில் தென்னிந்தியாவில் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஐந்தாம் நூற்றாண்டு குப்தர்களின் உதயகிரிக் குகையில் தாய்ப்பாறையிலேயே செதுக்கப்பட்ட ஒற்றைமுக லிங்கத்தைக் காணலாம்.

ஒற்றைமுக லிங்கம் - உதயகிரி, படம் வி.கே. ஸ்ரீனிவாசன்
ஒற்றைமுக லிங்கம் – உதயகிரி, படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

பீடத்துக்கு மேல் தெரியும் ருத்ர பாகத்தில் அருமையான ஒற்றைமுக லிங்கம். கூர்ந்து பார்த்தால் பிரம்ம்ம சூத்திரக் கோடு ஓரத்தில் போவதைக் காண்பீர்கள். ஜடாமுடி, நெற்றியில் மூன்றாவது கண் போன்றவற்றைக் காணலாம்.

கர்நாடகத்தில் சாளுக்கியர் கட்டுமானத்தில் உருவான மஹாகூடா என்ற கோவில் உள்ளது. இன்றும் வழிபாட்டில் உள்ள கோவில் இது. இந்தக் கோவிலுக்குள் ஒரு குளம். அந்தக் குளத்தில் நான்கு கால் மண்டபம். இந்த மண்டபத்தில் நடுவில் அழகிய சதுர்முக லிங்கம் ஒன்று உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சௌமுக்நாத் கோவில் என்று அழைக்கப்படும் கோவிலில் கீழே நீங்கள் பார்க்கும் நான்குமுக லிங்கச் சிலை உள்ளது. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. வட இந்தியாவில் பல இடங்களில் சதுர்முக லிங்கங்கள் உள்ளன என்றாலும் கீழே உள்ள இந்த ஒரு லிங்கத்துக்கு அவை யாவும் ஈடாகமாட்டா.

படம்: சப்யசாசி கோஷ்

லிங்கம் பெரும்பாலும் ஒரு பீடத்தின்மீதே அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் பீடத்துக்குப் பிண்டிகை என்றும் பெயர். இவை பற்பல வடிவங்களில் இருக்கலாம். சதுரமாக, செவ்வகமாக, எண்கோணமாக, நீண்ட எண்கோணமாக, அறுகோணமாக, நீண்ட அறுகோணமாக, பன்னிரு கோணமாக, நீண்ட பன்னிரு கோணமாக, பதினாறு கோணமாக, நீண்ட பதினாறு கோணமாக, வட்டமாக, நீள்வட்டமாக, அரைவட்டமாக, முக்கோணமாக இருக்கலாம். உயரவாக்கில் மிக எளிமையாக இருந்த பீடங்கள் நாளடைவில் திராவிடக் கட்டுமானக் கலையின் அதிஷ்டானங்களை ஒத்து உருவாக்கப்பட்டன. கோபிநாத ராவ், சில வடிவங்களைப் படமாகக் கொடுக்கிறார். லிங்கப் பிரதிஷ்டையின்போது, பிரம்ம பாகம், விஷ்ணு பாகம் ஆகியவை பீடத்துக்கு உள்ளே சென்றுவிடும். ருத்ர பாகம் மட்டுமே பீடத்துக்கு வெளியே நம் பார்வைக்குத் தெரியவரும்.

லிங்கபீடத்தின்மீது நாளம் எனும் நீர் போவதற்கான பாதை இருக்கும். லிங்கத்தின்மீது அபிஷேகம் செய்யும் நீர் வெளியேறும் பாதை இது. கிழக்கு, மேற்கு என்று லிங்கம் எந்தத் திசையைப் பார்த்து இருந்தாலும், இந்த நாளம் வடக்கு திசை நோக்கி இருக்குமாறு பிரதிஷ்டை செய்யப்படும்.

அதேபோல இதே திசை நோக்கியே கருவறையிலிருந்து அபிஷேக நீர் வெளியேறும் பாதையான ‘பிரநாளம்’ என்பதும் அமைக்கப்பட்டிருக்கும். ஆரம்பகாலக் கோவில்கள் சிலவற்றில் கட்டுமான காலத்திலேயே பிரநாளம் அமைக்கப்படாமையால், பிற்காலத்தில் மோசமாக உடைத்துக் கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். மிக அழகிய பிரநாளங்கள் கொண்ட அமைப்பைப் பின்னர் காணமுடிகிறது. பூதம் தாங்கி நிற்பதுபோல, பூதம் அபிஷேக ஜலத்தை அருந்துவதுபோல, யானையின் துதிக்கைபோலவெல்லாம் இவற்றை நீங்கள் காணலாம்.

0

லிங்கம் என்பது ஆண்குறி வடிவம் என்பதிலிருந்து, சிவனைக் குறிக்கும் வடிவ உருவமாக, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரையும் உள்ளடக்கியதாக, சிவனின் ஐந்து அம்சங்களைக் குறிக்கும் முகலிங்க வடிவமாக ஆகியிருப்பதைப் பார்க்கிறோம். இதே லிங்கத்துக்கு இன்னொரு பொருளைத் தரும் கதையும் புராணங்களில் உண்டு. அதுதான் அடிமுடி காணமுடியா அண்ணாமலையார் உருவம். லிங்க புராணம், சிவ புராணம், கூர்ம புராணம், வாயு புராணம் போன்றவற்றில் இந்தக் கதை காணக் கிடைக்கிறது.

கல்பத்தின் முடிவில் விஷ்ணு நீருக்கடியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது அவருக்கருகில் ஒரு பெரும் ஒளிப்பிழம்பு தோன்றியது. அதிலிருந்து பிரம்மா வெளிவந்தார். அவர் விஷ்ணுவிடம் சென்று தான்தான் உலகைப் படைப்பவர் என்று அறிமுகம் செய்துகொண்டு அவர் யார் என்று வினவினார். விஷ்ணு அவரிடம், தான்தான் உலகைப் படைப்பவர் என்றார். இருவருக்குமிடையே சண்டை மூண்டது. அப்போது அங்கே பெரும் நெருப்புப் பிழம்பு நீள் உருளை வடிவில் தோன்றியது. அதிலிருந்து தீச்சுடர்கள் தெறித்தன.

தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு பிரம்மாவும் விஷ்ணுவும் அந்த நெருப்புப் பிழம்பின் முடியையும் அடியையும் கண்டுபிடிக்க முற்பட்டனர். பிரம்மா அன்னத்தின் உருவை எடுத்துக்கொண்டு மேல்நோக்கிப் பறக்க ஆரம்பித்தார். விஷ்ணு வராக உருக்கொண்டு தரையைத் தோண்டியபடி கீழ்நோக்கிச் சென்றார். ஆனால் இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் உச்சியை அடைய முடியவில்லை. இருவரது தலைக்கனமும் அடங்கிற்று. அவர்கள் அந்த நெருப்புப் பிழம்பை நோக்கித் துதிக்கலாயினர்.

சிவன் மகிழ்ந்து அந்த நெருப்புப் பிழம்பினூடே ஆயிரம் கரங்களுடனும் கால்களுடனும் தோன்றினார். சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் அவருடைய கண்களாக இருந்தனர். கையில் பினாகம் என்னும் வில், திரிசூலம் ஆகியவற்றுடன் கரியின் தோலுடுத்து, அரவத்தைப் பூணூலாக அணிந்து, இடி போன்ற குரலுடன் அவர் பேசினார். ‘நீங்கள் இருவருமே என்னிடமிருந்து தோன்றியவர்கள். பிரமன் என் வலது தொடையிடுக்கிலிருந்தும் விஷ்ணு என் இடது தொடையிடுக்கிலிருந்தும் வெளிவந்தவர்கள். நாம் மூவருமே ஒருவரே. ஆனால் வெவ்வேறு காரியங்களை ஆற்ற மூன்றாக, பிரமன், விஷ்ணு, மஹேஷ்வரன் என்று பிரிந்திருக்கிறோம். பிற்காலத்தில் பிரமன் விஷ்ணுவிடமிருந்து தோன்றுவார். நான் விஷ்ணுவின் புருவம் கோபத்தால் நெரிக்கப்படும்போது தோன்றுவேன்’ என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார். அப்போதிலிருந்து லிங்க வடிவம் மக்களால் வழிபடப்பட்டது என்று இந்தப் புராணங்கள் கூறுகின்றன.

இந்தக் கதையில் மேலும் ஒன்றும் உண்டு. பிரம்மா மேலே சென்றுகொண்டிருக்கும்போது மேல் உச்சியிலிருந்து ஒரு தாழம்பூ கீழே விழுந்துகொண்டிருந்தது. பிரம்மா அதனிடம் விசாரிக்க, அந்தப் பூ, தான் சிவனின் ஜடாமுடியிலிருந்து விழுவதாகக் கூறியது. உடனே பிரம்மா, அந்தப் பூவை எடுத்துக்கொண்டு சிவனிடம் சென்று, தான் உச்சியை அடைந்துவிட்டதாகவும் தாழம்பூவே அதற்கான சாட்சி என்றும் சொன்னார். தாழம்பூவும் பொய் சாட்சி சொன்னது. இந்தப் பொய்யைச் சொன்னதற்காக, பிரம்மாவுக்குத் தனிக்கோவில் இல்லை என்றானது. மேலும் சிவன் கோவில்களில் தாழம்பூ அர்ச்சனைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

இந்தக் கதையின்படி உருவான மூர்த்தி வடிவமே லிங்கோத்பவர் – லிங்கத்திலிருந்து சிவன் வெளிப்படும் தோற்றம். தென்னகத்தில் மட்டுமே இந்த வடிவம் காணப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான சிவன் கோவில்களில், பின் சுவர் கோஷ்டத்தில் லிங்கோத்பவ வடிவத்தைக் காணலாம்.

கோபிநாத ராவ், பல ஆகமங்களின் அடிப்படையில் இந்த வடிவத்தின் இலக்கணத்தைத் தருகிறார். லிங்கத்தின் முன்புறம் சிவன், சந்திரசேகர மூர்த்தி வடிவமாக இருக்கவேண்டும். லிங்கத்தின் மேலும் கீழும் ஒன்றில் ஐந்து பாகம், தனியாக விடப்படவேண்டும். சந்திரசேகர வடிவத்தின் முழங்காலுக்குக் கீழ்ப்பகுதியும் ஜடாமுடியின் உச்சிப் பகுதியும் செதுக்கப்படக்கூடாது. லிங்கத்துக்கு வலப்புறம் மேற்பகுதியில் பிரம்மா அன்ன வடிவிலும் இடப்புறம் கீழ்ப்பகுதியில் விஷ்ணு வராக வடிவிலும் அமைக்கப்படவேண்டும். லிங்கத்துக்கு இருபுறமும் பிரம்மா வலப்புறத்திலும் விஷ்ணு இடப்புறத்திலும் நின்ற நிலையில் கூப்பிய கரங்களுடன் (அஞ்சலி ஹஸ்தம்) இருக்கவேண்டும். சிவன் செந்நிறத்திலும், பிரம்மா தங்க நிறத்திலும் விஷ்ணு கரிய நிறத்திலும் இருக்கவேண்டும். பிரம்மாவும் விஷ்ணுவும் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் அன்னமும் வராகமும் கட்டாயம் இடம்பெறவேண்டும். காமிகாகமம், அன்னம், சிவனின் முகத்தின் அளவும், வராகம் சிவனின் முகத்தளவைப் போல இருமடங்கும் இருக்கவேண்டும் என்கிறது. காரணாகமம், சிவனுக்கு நான்கு கரங்கள்; அவற்றில் மழு, மான், அபய, வரத முத்திரைகள் இருக்கவேண்டும் என்கிறது. சில்பரத்னம், சிவனின் கையில் சூலம் இருக்கவேண்டும் என்கிறது.

லிங்கோத்பவர் - காஞ்சி கைலாசநாதர் கோவில், படம் வி.கே. ஸ்ரீனிவாசன்
லிங்கோத்பவர் – காஞ்சி கைலாசநாதர் கோவில், படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

மேலே நீங்கள் பார்ப்பது ராஜசிம்மப் பல்லவனின் காஞ்சி கைலாசநாதர் கோவிலில் காணப்படும் லிங்கோத்பவர் வடிவம். ஆறு கரங்கள் கொண்டவராக, பிறைநிலவைச் சூடியவராக சந்திரசேகர மூர்த்தி லிங்கத்திலிருந்து வெளிப்படுகிறார். கீழே வராகம் (சிதைந்த நிலையில்) காணப்படுகிறது. ஆனால் மேலே அன்னம் இல்லை. மாறாக வலது மேல்புறத்தில் பிரமன் கால்களை மடக்கி மேல் நோக்கிப் பறப்பதாகத் தெரிகிறது. அதற்கு இணையாக இடதுபுறம் சூரியனும் சந்திரனும் ஒருவர் அஞ்சலி முத்திரையுடனும் இன்னொருவர் விஸ்மய (ஆச்சரிய) முத்திரையுடனும் பறப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். தவிர, வலப்புறம் பிரம்மாவும் இடப்புறம் விஷ்ணுவும் நின்ற நிலையில் அஞ்சலி முத்திரையாக இல்லாமல் விஸ்மய முத்திரையில் இந்த விஸ்வரூபத்தைக் கண்டு நிற்கின்றனர்.

திருஞானசம்பந்தர் இந்த வடிவை இவ்வாறு போற்றுகிறார்:

தாள் நுதல் செய்து, இறை காணிய, மாலொடு தண்தாமரை யானும்,
நீணுதல் செய்து ஒழிய நிமிர்ந்தான், எனது உள்ளம் கவர் கள்வன்

திருமூலர் இவ்வாறு பாடுகிறார்:

மண் அளந்தான் மலரோன் முதல் தேவர்கள்
எண் அளந்து இன்ன நினைக்கிலார் ஈசனை
விண் அளந்தான் தன்னை மேல் அளந்தார் இல்லை
கண் அளந்து எங்கும் கடந்து நின்றானே

பாண்டியர்களின் குடைவரையான திருமெய்யம் சத்யகிரீசுவரர் கோவிலில் மிக வித்தியாசமான லிங்கோத்பவர் சிற்பம் குகைச் சுவரில், சன்னிதிக்கு நேர் எதிரே லிங்கத்தைப் பார்த்தபடி செதுக்கப்பட்டுள்ளது. இங்கே நெருப்புப் பிழம்புத் தூண் ஒன்று குகையின் அடியிலிருந்து மேற்பகுதிவரை செல்கிறது. இருபுறமும் தீ ஜுவாலைகள் தெரியுமாறு செதுக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கத்தில் கீழ்ப்பாதியில் வேறு ஒன்றுமே இல்லை. மேல் பாதியில் இரு கரங்களுடன் சிவன் லிங்கத்திலிருந்து வெளிப்படுகிறார். ஒரு கை வரத ஹஸ்தம். மற்றொன்று இடுப்பில் வைத்த கடி ஹஸ்தம்.

லிங்கோத்பவர் – திருமெய்யம்

திருமுறைகளில் லிங்கோத்பவ வடிவம் குறித்த குறிப்புகள் தொடர்ந்து வருகின்றன. பிரமன், விஷ்ணுவைவிட மேலான சக்தி கொண்டவர் சிவன் என்பதை நிரூபிக்கும் வடிவமாக இருப்பதனால் சிவன் கோவில்களில் இந்த வடிவம் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. சோழர் காலக் கலையில் லிங்கோத்பவ வடிவம் உச்சத்தைத் தொட்டது என்று சொல்லலாம்.

லிங்கோத்பவர் - புள்ளமங்கை
லிங்கோத்பவர் – புள்ளமங்கை

மேலே நீங்கள் காண்பது புள்ளமங்கையின் லிங்கோத்பவர். சிவனுடைய உருவம் சிதைந்துள்ளது. இருபுறமும் மிக அழகாகக் காட்சி தரும் பிரம்மாவும் விஷ்ணுவும். மேலே பிரம்மா அன்ன வடிவில் இல்லை, ஆனால் பறந்து செல்கிறார். கீழே வராக வடிவில் விஷ்ணு.

லிங்கோத்பவர் - பொன்செய் மற்றும் கோனேரிராஜபுரம் கோவில்
லிங்கோத்பவர் – பொன்செய் மற்றும் கோனேரிராஜபுரம், படம் வி.கே.ஶ்ரீனிவாசன்

மேலே நீங்கள் பார்ப்பது, பொன்செய் மற்றும் கோனேரிராஜபுரம் கோவில்களில் இருக்கும் லிங்கோத்பவ மூர்த்தங்களை. பொன்செய், பராந்தக சோழன் காலத்தது. கோஷ்டத்துக்கு இருபுறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் கிடையாது. லிங்கத்தைப் பிளந்துகொண்டு சிவன் தோன்றும் இடங்களில் தீஜுவாலைகள் இருப்பதை புள்ளமங்கையிலும் பார்க்கலாம். பொன்செய், கோனேரிராஜபுரத்திலும் பார்க்கலாம். இந்த ஜுவாலைகள், திருமெய்யத்தில் ஒட்டுமொத்த லிங்கத்துக்கும் வெளியே இருந்தன. ஆனால் சோழர் கலையில் இவை சிவன் தோற்றமளிக்கும் பகுதியைச் சுற்றியே தெரிகின்றன. கைலாசநாதர் கோவில் சிற்பத்தில் தீ ஜுவாலைகள் காணப்படவில்லை.

பொன்செய்யில் பிரம்மா மேல் நோக்கிப் பறக்கிறார். அன்ன வடிவில் இல்லை. கோனேரிராஜபுரம் உத்தம சோழன் காலக் கோவிலில் பிரம்மா, அன்னத்தின்மீது அமர்ந்தபடிப் பறக்கிறார். இருபுறமும் பிரம்மாவும் விஷ்ணுவும் நின்றுகொண்டிருக்கிறார்கள். இருவர் கைகளிலும் அஞ்சலி முத்திரையும் இல்லை, விஸ்மய முத்திரையும் இல்லை. சிவன் கைகளில் மானும் மழுவும் அபய ஹஸ்தமும் கடி ஹஸ்தமும் கிட்டத்தட்ட தரப்படுத்தப்பட்டுக் கிடைக்கின்றன.

தக்ஷிணாமூர்த்தியைப் போன்றே, தமிழகத்துக்கு வெளியே அவ்வளவாகக் கிடைக்காத ஒரு வடிவமாகவே லிங்கோத்பவ வடிவம் உள்ளது. கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் மிகச் சில இடங்களில் கிடைக்கலாம். ஆலம்பூர் நவபிரம்மா கோவில்களில் ஒரேயோர் இடத்தில் மட்டுமே லிங்கோத்பவர் சிற்பம் உள்ளது. மற்ற சாளுக்கியர் கோவில்களிலோ ஹொய்சளர் கோவில்களிலோ ஒன்றைக்கூடப் பார்த்த நினைவில்லை. எல்லோராவில் ஓரிடத்தில் இருக்கிறது.

0

இந்தியாவில் மட்டுமல்ல, தென்னகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலேயேகூட மிகவும் குறைவான எண்ணிக்கையில் கிடைக்கக்கூடிய ஒரு தனித்துவமான சிவமும் லிங்கமும் இணைந்த வடிவை நாம் காணமுடியும். சிவன், தன் தோளில் தானே லிங்கத்தைத் தூக்கிச் சுமக்கும் ஒரு வடிவம். இது பேசுபொருளானது பாகுபலி என்ற திரைப்படம் வந்தபோது. அதில் நாயகன் ஒருவர் பெரிய சிவலிங்கத்தைத் தூக்கிச் சுமந்து செல்வதுபோல வரும். அப்போது ஒரு பத்திரிகைப் பேட்டியில் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், சிவன் தன் லிங்கத்தைத் தானே சுமந்த வடிவம் இரண்டு இடங்களில், கொடும்பாளூர் மூவர் கோவிலும் கீழையூர் இரட்டைக் கோவிலான அவனிகந்தர்ப ஈசுவரத்திலும் இருப்பதாகச் சொல்லியிருந்தார். இவை இரண்டுமே முதலாம் பராந்தகன் காலத்தில் இருக்குவேளிர், பழுவேட்டரையர்கள் ஆகிய சிற்றரசர்களால் கட்டப்பட்டவை. கீழே நீங்கள் பார்ப்பது கொடும்பாளூர் படம்.

கொடும்பாளூர், படம்: மது ஜகதீஷ்

கொடும்பாளூர் மூவர் கோவில், பூதி விக்ரமகேசரி காலத்தில், அவராலும் அவரது இரு மனைவியராலும் கட்டப்பட்டது. இப்போது இரண்டு கோவில்கள்தான் நின்றுகொண்டிருக்கின்றன. கோவிலில் வழிபாடு கிடையாது. மிகச் சிறந்த பல சிற்பங்கள் இந்தக் கோவில்களில் இருக்கின்றன. இவற்றில் மேலே நீங்கள் காணும் சிற்பம், தனித்துவம் வாய்ந்தது. ரிஷபாந்திகராக, காளை மாட்டின்மீது ஒரு கைவைத்துச் சாய்ந்து, ராஜலீலாசனத்தில் அமர்ந்திருக்கிறார் சிவன். பின் கைகளில் பொதுவாக மானும் மழுவும் ஏந்தியிருப்பார். மான் உள்ளது. ஆனால் மழுவுக்கு பதில், தோளின்மீது உருளையான வடிவத்தைத் தாங்கி நிற்கிறார்.

இந்த உருளையான வடிவம், லிங்கமே என்பதைக் குடவாயில் பாலசுப்ரமணியன் போன்றோர் உறுதி செய்தனர். இதேபோன்ற வடிவம் கீழையூரில் கிடைக்கிறது. பாலசுப்ரமணியன் இந்த வடிவம் காளாமுக சைவத்தவர்கள் வணங்கிய வடிவம் என்கிறார்.

கீழையூர், படம்: ஸ்ரீனிவாசன் ராஜகோபாலன்

அகில் குட்டு மேலும் தேடுகையில், இதேபோன்ற ஒரு வடிவம் திருவாவடுதுறையில் கோஷ்டத்தின்மேல் இருக்கும் தோரணத்திற்குள் சிறு சிற்பமாகக் கிடைக்கிறது என்று கண்டுபிடித்தார். பாபு மனோ, காஞ்சிபுரம் முக்தேஸ்வரர் கோவிலில் ராவண அனுக்கிரக மூர்த்தி சிற்பத்தில், கைலாயத்தில் சிவனும் பார்வதியும் அமர்ந்திருக்கும் காட்சியில், சிவன் தோளில் லிங்கம் இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

அகில் குட்டு, தன் முகநூல் பதிவில் திருமூலர் திருமந்திரத்திலிருந்து இந்த வடிவிற்கான தரவுகளைத் தருகிறார்.

தன்மேனி தற்சிவலிங்கமாய் நின்றிடுந்
தன்மேனி தானுஞ் சதாசிவமாய் நிற்குந்
தன்மேனி தற்சிவன் தற்சிவானந்த மாந்
தன்மேனி தானாகுந் தற்பரந்தானே (1750)

உருவும் அருவும் உருவோடருவும்
மருவு பரசிவன் மன்பல்லுயிர்க்குங்
குருவுமென நிற்குங் கொள்கையனாகுந்
தருவென நல்குஞ் சதாசிவன்தானே (1763)

தன்னைத் தானே அர்ச்சிக்கும் சதாசிவ வடிவமே இந்த வடிவம். இதனைக் காளாமுக சைவர்கள் போற்றி வழிபட்டிருக்கலாம். தேடித் தேடிக் காணினும் மிகக் குறைவான இடங்களிலேயே இந்த வடிவம் கிடைக்கிறது.

0

லிங்கம் என்பது ஆண்குறியைக் குறிக்கும் வடிவமா, அடியும் முடியும் கண்டறியமுடியாத அருட்பெருஞ்சோதி வடிவா, சிவன் தன்னைத்தானே வழிபடும் சதாசிவத் தோற்றமா, சிவனை உருவாக, அருவாக, அருவுருவாக வழிபடுவதற்கான வழிமுறையா? அல்லது அனைத்தும் சேர்ந்ததா?

சிவன் வேத முதல்வனா? அக்னிதான் ருத்ர சிவனா? ஶிஶ்ன வழிபாடு செய்வோர் என்று ஏளனம் செய்யப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்டோரின் கடவுளா? அவிர்பாகம் தரப்படாமல் தள்ளிவைக்கப்பட்ட கடவுளா? வேதத்துக்கு வெளியிலிருந்து வேதம் உள்ளிழுத்துக்கொண்ட கடவுள்களில் ஒருவரா? தென்னாட்டுக்கு மட்டும் உரியவரா? எந்நாட்டவர்க்கும் இறைவனா?

இன்று இந்தியப் பரப்பு முழுமையிலும் சிவ வழிபாட்டின் தன்மை வெகுவாக மாறியுள்ளது. சிவனின் வடிவங்களாக வணங்கப்படுபவை எண்ணற்றவை. அவற்றில் தக்ஷிணாமூர்த்தி, லிங்கம், லிங்கோத்பவர் ஆகியவற்றை மட்டும்தான் இதுவரை பார்த்திருக்கிறோம். இந்தத் தொடரில் மேலும் பலவற்றைத் தொடர்ந்து பார்ப்போம்.

 

பகிர:
பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர். சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் இளநிலையும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியக் கணிதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். வரலாறு, தொழில்நுட்பம், இந்தியவியல் போன்ற துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.View Author posts

1 thought on “கல்லும் கலையும் #7 – மாலொடு தண்தாமரையானும் நீணுதல் செய்தொழிய நிமிர்ந்தான்!”

  1. FYI:
    1) In Thiruvakkarai VakraKaliyamman temple, Four faced lingam is there.
    2) In Kanchipuram Valakkarutheeswarar temple, 16 pattai lingam is there.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *