Skip to content
Home » கல்லும் கலையும் #8 – அங்கண் ஏர் வானத்து அணிநிலாத் திகழ்தரும் திங்களும் தெறுகதிர்க் கனலியும் நீ!

கல்லும் கலையும் #8 – அங்கண் ஏர் வானத்து அணிநிலாத் திகழ்தரும் திங்களும் தெறுகதிர்க் கனலியும் நீ!

கல்லும் கலையும்

விறல்மிகு விழுச்சீர் அந்தணர் காக்கும்
அறனும் ஆர்வலர்க்கு அளியும் நீ!
திறனிலோர் திருத்திய தீதுசீர் சிறப்பின்
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ!
அங்கண் ஏர் வானத்து அணிநிலாத் திகழ்தரும்
திங்களும் தெறுகதிர்க் கனலியும் நீ!
ஐந்தலை உயரிய அணங்குடை அருந்திறல்
மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ!
நலமுழுது அளைஇய புகரறு காட்சிப்
புலமும் பூவனும் நாற்றமும் நீ!
வலனுயர் எழிலியும் மாக விசும்பும்
நிலனும் நீடிய இமயமும் நீ!

அதனால்,

இன்னோர் அனையை இனையையால் என
அன்னோர் யாம் இவண் காணாமையின்
பொன்னணி நேமி வலங்கொண்டு ஏந்திய
மன்னுயிர் முதல்வனை ஆதலின்
நின்னோர் அனையை நின்புகழொடும் பொலிந்தே!

இது பன்னிரு ஆழ்வார்கள் எழுதிய திவ்யப் பிரபந்தத்தில் வருவதில்லை. சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் வருவது. எழுதியவர் பெயர் தெரியவில்லை. நாம் இதுவரை பார்த்திருக்கும் எண்ணற்ற சிற்பங்களை ஆக்கியவர் பெயர் தெரியாததுபோலவே, அருமையான தமிழில் விஷ்ணுமீது இயற்றப்பெற்றிருக்கும் மிகச் சிறப்பான இந்தப் பாடலுக்கு இணையாக வேறு எங்கும் நான் கண்டதில்லை. இது பரிபாடலின் முதல் பாடலான கடவுள் வாழ்த்தில் வரும் ஒரு சிறு பகுதி மட்டுமே. சுமார் முப்பது ஆண்டுகளுக்குமுன் முதன்முதலாகப் பரிபாடலைப் படிக்கத் தொடங்கியபோது நான் அடைந்த வியப்பு இன்றுமட்டில் தீர்வதாயில்லை.

அந்தணர்கள் பேணிக் காக்கும் அறமாகிய வேதம் நீ! உன்மீது அன்பு வைத்திருக்கும் ஆர்வலர்களுக்கு அள்ளி அளிப்பவன் நீ! குற்றமற்ற சிறப்பினை உடைய மறம் நீ! உன் பகைவர்களைக் கண்டமாத்திரத்திலேயே கதிகலங்க வைப்பவன் நீ! அழகான வானில் ஒளியைப் பரப்பும் சந்திரனும் நீ, அனைத்தையும் எரித்துப் பொசுக்கிவிடும் சூரியனும் நீ! ஐந்து தலை ஆதிசேஷனின்கீழ் அமர்ந்து பகைவர்களை நடுங்கவைப்பவன் நீ! அனைத்தையும் அழிக்கும் ஆற்றல் கொண்ட ஊழிக்காலக் கூற்றமும் நீ! வேதம் நீ, பிரமன் நீ, அவன் படைப்புகள் அனைத்துள்ளும் இருப்பவனும் நீ! மேகம் நீ, அது பரந்து அலையும் விசும்பு நீ, அது தரும் மழையைப் பெற்றுப் பலனடையும் பூமி நீ, அந்தப் பூமியில் நெடிதுயர்ந்து நிற்கும் இமயமலை நீ!

இப்படி அனைத்தும் நீயாகி, அவை உருவாகக் காரணமும் நீயாகி, அனைத்தையும் படைத்து, காத்து, அழிப்பவனும் நீ! உன் இத்தன்மைக்கு இணையாக யாருமே இல்லை, எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதனால், கையில் சக்கரம் ஏந்தி இவ்வுலகு அனைத்தையும் காத்து இரட்சிக்கும் முதல்வனே, தலைவனே, உன் பெரும் புகழொடு விளங்கியபடி, உனக்கு நீயே ஒப்பானவனாக உள்ளாய்.

விஷ்ணு - தக்கோலம், படம் வி.கே. ஸ்ரீனிவாசன்
தக்கோலம், படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

விஷ்ணு, நாராயணன், வாசுதேவன், அச்சுதன் என்று தொடங்கி ஆயிரம் திருநாமங்கள் கொண்ட திருமாலின் வழிபாடு காஷ்மீரம் தொடங்கி தமிழகம் வரையிலும், குஜராத் தொடங்கி வங்காளம் வரையிலும், இந்தப் பகுதிகளுக்கு அப்பாலும், பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவிவருவது. விஷ்ணுவுடைய மூர்த்திகளை விஷ்ணு கோவில்களில் (விண்ணகரம்) காணலாம், சிவன் கோவில்களிலும் காணலாம்.

சிவன் கோவில்களை நிர்மாணிக்க சைவ ஆகமங்கள் பயன்படுகின்றன என்று ஏற்கெனவே பார்த்தோம். 28 சிவாகமங்கள், அவற்றுக்கு எண்ணற்ற உபாகமங்கள் உள்ளன. அவைபோலவே வைணவத்தைப் பொருத்தமட்டில் பாஞ்சராத்ரம், வைகானசம் என இரு வைணவ வழிபாட்டு முறைகள் உள்ளன. இவை இந்தியப் பெருநிலம் முழுதும் பரவியிருந்தன. ஆனால் பல காரணங்களால் இன்று தென்னிந்தியாவில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன; அதுவும் முக்கியமாகத் தமிழகத்தில் அதிகமாகவும் கர்நாடகத்திலும் ஆந்திரத்திலும் ஓரளவுக்கும் உள்ளன. கேரளத்தில் வைணவ வழிபாட்டு முறையில் பற்பல மாறுதல்கள் உள்ளன.

பாஞ்சராத்ரம் என்றால் ‘ஐந்து ராத்திரிகள்’ என்றும், ஒரு சமயத்தில் வேதங்களை ஓர் அசுரன் எடுத்துக்கொண்டுபோனதால் ஆதிசேஷன், கருடன், விஷ்வக்சேனர், பிரம்மா, சிவன் ஆகியோர் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டதாகவும் விஷ்ணு அடுத்தடுத்த ஐந்து இரவுகளில், இந்த ஐவருக்கும் உபதேசம் செய்ததாகவும், இந்த உபதேசங்களின் தொகுப்பே பாஞ்சராத்ர சம்ஹிதைகள் என்றும் சொல்லப்படுகிறது. மற்றொரு பெயர்க்காரணம், ஐந்துவிதமான அறிவுகளின் தொகுப்பு, அதாவது தத்துவம், முக்தி, பக்தி, யோகம், வைசேஷிகம் ஆகியவை பற்றி என்றும் கருதப்படுகிறது.

வைகானசம் என்பது, விகனசர் என்ற முனிவருக்கு விஷ்ணுவே நேரடியாக உபதேசம் செய்தது. விஷ்ணு ஆயிரம் கோடி சுலோகங்களைத் தந்தார். விகனசர் அவற்றைத் தன் சீடர்கள் பலருக்கும் சுருக்கி, ஒன்றரை கோடி சுலோகங்களாக உபதேசித்தார். அவர்களுள் மரீசி, பிருகு, அத்ரி, கஷ்யபர் ஆகியோர் தாம் கேட்டதை நான்கு லட்சம் சுலோகங்களாக எழுதிவைத்தனர். அவ்வாறு நமக்குக் கிடைத்தவையே வைகானச சம்ஹிதைகள் என்று அறிகிறோம்.

பாஞ்சராத்ர சம்ஹிதைகள் பலவும் தொலைந்துவிட்டன. இப்போது கிடைக்கும் சிலவற்றிலும்கூட ஒருசிலவற்றை அறிஞர்கள் போலியானவை என்று கருதுகிறார்கள்.

சைவ ஆகமங்களைப் போன்றே வைணவ சம்ஹிதைகளிலும் நான்கு பகுதிகள் (பாதங்கள்) உண்டு. அவை: ஞான பாதம், யோக பாதம், க்ரியா பாதம், சர்யா பாதம் எனப்படும். இவற்றில் க்ரியா பாதம் என்பதுதான் கோவில் கட்டுமான அமைப்பு, சிலைகள் அமைப்பது போன்றவை குறித்தது. சர்யா பாதம் என்பது, கோவிலின் தினசரி வழக்கங்கள், திருவிழாவை நடத்தும் முறைகள் போன்றவை குறித்தது.

கோபிநாத ராவ், தன் புத்தகத்தில் வைகானச சம்ஹிதைகளை மட்டுமே கருத்தில் எடுத்துக்கொள்கிறார். காரணமாக அவர் சொல்வது, பாஞ்சராத்ர சம்ஹிதைகள் கிடைக்காமையும், கிடைத்தவற்றுள்ளும் சிற்பங்கள் குறித்த தகவல்கள் இல்லாமையும். ஆனால் அவர் காலத்துக்குப்பின் பல பாஞ்சராத்ர சம்ஹிதைகள் இந்தியாவிலும் நேபாளத்திலும் கிடைத்துள்ளன. ஆராய்ச்சிக் கட்டுரைகள், மொழிமாற்றங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன.

பொதுவான சில கருத்துகளிலிருந்து ஆரம்பிப்போம். நம் முந்தைய வாரப் பகுதிகளிலிருந்து இங்கே நாம் சற்றே கடினமான பகுதியைக் காணப்போகிறோம். ஆனால் இவற்றைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

பாஞ்சராத்ரம், பிரளயத்துக்குப் பின்னான உலக உருவாக்கம் குறித்துப் பேசுகிறது. பிரம்மத்துக்கு ஒரு பகல் என்பது 43,20,00,000 மனித ஆண்டுகளுக்குச் சமம். ஓர் இரவு என்பது இதே காலகட்டம். ஒவ்வொரு 43.2 கோடி ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு சிறு பிரளயம் ஏற்படும் – இதற்கு அவாந்தரப் பிரளயம் அல்லது நைமித்திக பிரளயம் என்று பெயர். அதாவது ஒரு பிரம்மப் பகல் முடியும்போது பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும், அதில் உள்ள உயிருள்ள, உயிரற்ற பொருள்கள் அழியும், ஆனால் அடிப்படைத் தத்துவங்கள் அழியா. பிரம்ம இரவின்போது பிரம்ம-அண்டம், அதாவது பெருமுட்டை, அடங்கியிருக்கும். மீண்டும் மறுநாள் பிரம்மப் பகல் தொடங்கும்போது சிருஷ்டி மறுபடி தொடங்கும்.

இவ்வாறு 36,000 முறை அவாந்தர பிரளயச் சுழற்சி முடிந்தபின், மஹா பிரளயம் அல்லது பிரக்ருத பிரளயம் ஏற்படும். இப்போது ஒட்டுமொத்தமாக அனைத்துப் பொருள்கள், தத்துவங்கள் எல்லாமே பிரம்மத்தில் அடங்கிவிடும். இந்தக் காலகட்டத்தை பாஞ்சராத்ரம் புருஷப் பகல் என்கிறது. அதாவது 36,000 x 43.2 x 2 கோடி = 31,10,400 கோடி = 31 லட்சம், 10 ஆயிரத்து 400 கோடி மனித ஆண்டுகள். இதே அளவு கொண்டது புருஷ இரவு.

இந்தப் புருஷ இரவின்போது விஷ்ணு கண்ணயர்ந்துள்ளார். இரவின் இறுதிப் பகுதியில், சட்டென்று மின்னல் வெட்டுவதுபோல் அவர் கண் விழிக்கிறது. லக்ஷ்மி உருவாகிறாள். ஆறு குணங்கள் உருவாகின்றன. அவையாவன ஞானம், ஐஸ்வர்யம், சக்தி, பலம், வீர்யம், தேஜஸ் என்பன. இவற்றுக்குப் பொதுவாக அகராதி தரும் பொருள் அல்ல இங்கே. ஞானம் என்றால் அனைத்தையும் அறியும் அறிவு. ஐஸ்வர்யம் என்றால் தடுக்க முடியாத செயல்பாடு. சக்தி என்றால் எதையும் உருவாக்கக்கூடிய ஆற்றல். பலம் என்றால் தொய்வில்லாமல் தாங்கிநிற்கும் தன்மை. வீர்யம் என்றால் சற்றும் குறைவே ஏற்படாத வகையில் மாற்றமில்லாத் தன்மை. தேஜஸ் என்றால் எதன்மீதும் சார்ந்திருக்காத சுயச்சார்புத் திறன்.

இந்த ஆறு குணங்களும் இணைந்து, வாசுதேவர், லக்ஷ்மி ஆகிய வடிவங்களாக ஆகின்றன. இதன்பின்னர் இந்த ஆறு குணங்களில் இரண்டிரண்டாக வெளிப்படும் வகையில் மூன்று வடிவங்கள் உருவாகின்றன.

ஞானமும் பலமும் வெளிப்படும் வடிவம் சங்கர்ஷணன்.
ஐஸ்வர்யமும் வீரமும் வெளிப்படும் வடிவம் பிரத்யும்னன்.
சக்தியும் தேஜஸும் வெளிப்படும் வடிவம் அநிருத்தன்.

சங்கர்ஷண, பிரத்யும்ன, அநிருத்த வடிவங்கள் மூன்றுமே விஷ்ணுதான். ஆனால் ஆறு குணங்களில் இரண்டை மட்டும் முதன்மையாக வெளிப்படுத்துபவை. எந்த வகையிலும் வாசுதேவ வடிவத்திலிருந்து இவை குறைவுபட்டதல்ல. வாசுதேவன், சங்கர்ஷணன், பிரத்யும்னன், அநிருத்தன் என நான்கும் சேர்ந்தவை வியூக வடிவங்கள் எனப்படும். இந்த நான்கு வடிவங்களுக்கும் கூடவே லக்ஷ்மி மட்டும், அல்லது லக்ஷ்மி (ஶ்ரீதேவி), பூதேவி என இருவரும் அருகருகே சக்தி வடிவாக இருப்பார்கள்.

இந்தப் பெயர்கள் சற்றே குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதனால் இங்கே விளக்கிவிடுவோம். புராண, இதிஹாச வழக்கில் வாசுதேவன் என்பது கிருஷ்ணனின் பெயர். வசுதேவனின் மகன் வாசுதேவன். வாசுதேவ கிருஷ்ணனின் அண்ணன் பலராமன் ஆதிசேஷனின் வடிவம். இவனுக்கு சங்கர்ஷணன் என்றும் பெயர். பிரத்யும்னன் என்பது கிருஷ்ணனுக்கும் ருக்மிணிக்கும் பிறந்த மகனின் பெயர். அநிருத்தன் என்பது பிரத்யும்னனுக்கும் ருக்மாவதி என்பவளுக்கும் பிறந்த மகனின் பெயர். ஆக கிருஷ்ணன், அவனுடைய அண்ணன், கிருஷ்ணனின் மகன், கிருஷ்ணனின் பேரன் ஆகியோரின் பெயர்கள் அப்படியே வியூக வடிவ விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன. இதை மட்டும் ஞாபகத்தில் வையுங்கள்.

இன்னுமொரு குழப்பத்தைச் சேர்த்துக்கொள்வோம். பரப் பிரம்மமாக இருக்கும் விஷ்ணு, நாராயணனுக்குப் பரவாசுதேவன் என்ற பெயர் உண்டு. ஆக பரவாசுதேவன், அடுத்து வியூக-வாசுதேவன், வியூக-சங்கர்ஷணன், வியூக-பிரத்யும்னன், வியூக-அநிருத்தன்.

ஆக, விஷ்ணுவின் பர வடிவத்திலிருந்து வியூக வடிவங்கள் தோன்றுகின்றன. பின்னர், சங்கர்ஷண, பிரத்யும்ன, அநிருத்தர்கள் ஒன்றுசேர்ந்து படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்கின்றனர். பாஞ்சராத்ர சம்ஹிதைகளில் இந்த வியூக வடிவங்களுக்கு மேலும் தீவிரமான செயல்கள், பொருள்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு வடிவத்தின் நிறமும் கொடுக்கப்பட்டுள்ளது.

சரி, இவையெல்லாம் வடமொழி சம்ஹிதைகளில் உள்ளவை. தமிழ் இலக்கியத்துக்கு இவையெல்லாம் தெரியுமா? பரிபாடலின் மூன்றாம் பாடலான, கடுவன் இளவெயினனாரின் அற்புதமான பாடலில் இரண்டு வரிகள் வருகின்றன.

செங்கண் காரி, கருங்கண் வெள்ளை
பொன்கண் பச்சை, பைங்கண் மாஅல்

சிவந்த கண்கள், கரிய திருமேனி – வாசுதேவன். கரிய கண்கள் வெள்ளைத் திருமேனி – சங்கர்ஷணன். பொன்னிறக் கண்கள், பச்சைத் திருமேனி – பிரத்யும்னன். பச்சைக் கண்கள், பவளத் திருமேனி – அநிருத்தன். இவைதான் வைணவ சம்ஹிதைகள் குறிப்பிடும் இலக்கணம். அப்படியே பரிபாடலில் வருகிறது.

வைகானச ஆகமும் பர, வியூக வடிவங்களை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் வியூக வடிவங்களுக்கு அது அளிக்கும் பெயர்கள் வேறு. குணங்களுக்கு அது அளிக்கும் பெயர்களும் வேறு.

  • முதலாவது வியூக வடிவத்துக்கு புருஷன் என்று பெயர். இவரது முதன்மைக் குணம் தர்மம்.
  • இரண்டாவது வியூக வடிவத்துக்கு சத்யன் என்று பெயர். முதன்மைக் குணம் ஞானம்.
  • மூன்றாவது வியூக வடிவத்துக்கு அச்சுதன் என்று பெயர். முதன்மைக் குணம் ஐஸ்வர்யம்.
  • நான்காவது வியூக வடிவத்துக்கு அநிருத்தன் என்று பெயர். முதன்மைக் குணம் வைராக்யம்.

இரண்டு சம்ஹிதைகளும் விஷ்ணுவின் வடிவங்களாக, பர, வியூக, விபவ, அர்ச்ச, அந்தர்யாமி எனும் ஐந்தை முன்வைக்கின்றன.

பர, வியூக இரண்டையும் பார்த்தோம். விபவ என்பது அவதாரங்கள். மச்ச, கூர்ம தொடங்கி கல்கி வரை செல்லும் அவதாரங்கள் தசாவதாரங்கள் எனப்படும். விஷ்ணுவின் அவதாரங்கள் பல. இந்தப் பத்தும் அவற்றில் ஒருசில மட்டுமே. ஆனால் அதிகம் அறியப்படுபவை. அர்ச்ச என்பவை பல்வேறு கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மூர்த்தங்கள். அந்தர்யாமி எனப்படுபவை அவரவர் மனத்துள் நிறைந்திருக்கும் வடிவம்.

இந்த விபவ அவதாரங்களில் வராக, நரசிம்ம, வாமன-திரிவிக்கிரம வடிவங்கள் முக்கியமானவை.

இந்தப் பின்னணியில் விஷ்ணுவின் வழிபடப்படும் வடிவங்களை விரிவாகப் பார்க்கலாம்.

0

கருவறையில் விஷ்ணு நிர்மாணிக்கப்படும்போது மூன்று வடிவங்களில் காணப்படுகிறார். நின்றான், இருந்தான், கிடந்தான் என்று ஆழ்வார்களால் பாடப்பட்ட மூன்று வடிவமே இவை. வடமொழியில் ஸ்தானக மூர்த்தி, ஆசன மூர்த்தி, சயன மூர்த்தி என்று இம்மூன்று வடிவங்களுக்கும் பெயர்.

விஷ்ணுவாக பர வடிவிலும் சரி, வியூக வடிவங்களிலும் சரி, அவர் நின்ற நிலையிலும் இருந்த நிலையிலும் இருப்பார். வியூக வடிவங்கள் கிடந்த நிலையில் இரா.

விஷ்ணுவின் கையில் பொதுவாக என்னவெல்லாம் இருக்கும்? அவர் பொதுவாக நான்கு கைகள் கொண்டிருப்பார். அவற்றில், சக்கரம், சங்கு, கதை, தாமரை (பத்மம்) ஆகிய நான்கும் இருக்கும். அல்லது பின்னிரு கைகளில் சக்கரமும் சங்கும், முன்னிரு கைகள் அபய வரத முத்திரையுடன் இருக்கும்.

கோபிநாத ராவ், வைகானச சம்ஹிதைகளின் பின்னணியில் விஷ்ணுவின் வடிவங்களை இவ்வாறு பிரித்துக்கொள்கிறார். அவையாவன:

(1) யோக மூர்த்தி – முக்தி அடைய விரும்புவோருக்கு
(2) போக மூர்த்தி – மகிழ்ச்சி அடைய விரும்புவோருக்கு, செல்வம் பெற விரும்புவோருக்கு
(3) வீர மூர்த்தி – ஆற்றல் அடைய விரும்புவோருக்கு
(4) ஆபிசாரிக மூர்த்தி – எதிரிகளை அழிக்க விரும்புவோருக்கு

இந்த நான்கையும் மேலே உள்ள மூன்றோடு சேர்த்தால் கிடைப்பது 12 வடிவங்கள். அவையாவன:

யோக ஸ்தானக மூர்த்தி, போக ஸ்தானக மூர்த்தி, வீர ஸ்தானக மூர்த்தி, ஆபிசாரிக ஸ்தானக மூர்த்தி, யோக ஆசன மூர்த்தி, போக ஆசன மூர்த்தி, வீர ஆசன மூர்த்தி, ஆபிசாரிக ஆசன மூர்த்தி, யோக சயன மூர்த்தி, போக சயன மூர்த்தி, வீர சயன மூர்த்தி, ஆபிசாரிக சயன மூர்த்தி

இந்த ஒவ்வொரு வடிவத்திலும் மூன்று வகைகள் உண்டு. அவை: உத்தம, மத்யம, அதம. அவற்றையும் பார்ப்போம்.

ஸ்தானக மூர்த்தி – நின்றான்

யோக ஸ்தானக மூர்த்தி கருநீல நிறத்தில் இருப்பார். கிரீட மகுடம் அணிந்திருப்பார். உடலெங்கும் ஆபரணங்கள் அணிந்திருப்பார். பீதாம்பர (மஞ்சள்) ஆடை அணிந்திருப்பார். பூணூல் அணிந்திருப்பார். அவருக்கு நான்கு கைகள். வலது பின் கையில் சக்கரம், இடது பின் கையில் சங்கம். வலது முன் கை அபய அல்லது வரத முத்திரையில் இருக்கும். இடது முன் கை, இடுப்பில் கை வைத்திருக்கும் (கடி ஹஸ்தம்). இவருக்கு அருகில் தேவிகள் இருக்க மாட்டார்கள். விஷ்ணுவின் காலடியில் பிருகு, மார்க்கண்டேயர் ஆகிய ரிஷிகள் மண்டியிட்ட நிலையில் அமர்ந்திருப்பர். அல்லது மார்க்கண்டேயரும் பூதேவியும் அங்கே இருப்பர். விஷ்ணுவுக்கு வலதுபுறச் சுவரில் பிரம்மாவும் இடதுபுறச் சுவரில் சிவனும் செதுக்கப்படவேண்டும். பிரம்மா கமண்டலம், அக்கமாலை ஆகியவற்றைக் கையில் வைத்திருக்கவேண்டும். சிவன் மழு, மான் ஆகியவற்றைக் கையில் வைத்திருக்கவேண்டும். சிவனும் பிரம்மாவும் விஷ்ணுவை வணங்கியபடி இருக்கவேண்டும்.

மேலே சொல்லப்பட்ட அனைத்து இலக்கணங்களும் அமையப்பெற்றால், அது உத்தம யோக ஸ்தானக மூர்த்தி எனப்படும். சிவனும் பிரம்மாவும் இல்லை என்றால், மத்யம யோக ஸ்தானக மூர்த்தி. காலடியில் முனிவர்களும் பூதேவியும் இல்லை, தனியாக உள்ளார் என்றால் அதம யோக ஸ்தானக மூர்த்தி.

விஷ்ணு - ஆதிவராக மண்டபம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி
ஆதிவராக மண்டபம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

மேலே நீங்கள் காண்பது மாமல்லையின் ஆதிவராக மண்டபத்தில் இருக்கும் விஷ்ணு மூர்த்தி. கீழே பிருகுவும் மார்க்கண்டேயரும் இருப்பதைக் காண்பீர்கள். பல கோவில்களில் இந்த ரிஷிகளுக்கு வெவ்வேறு பெயர்களைக் கொடுத்து அந்த ரிஷிகளின் பெண்ணை விஷ்ணுவுக்கு மணமும் செய்துகொடுத்து, ஒரு ஸ்தல புராணத்தை ஏற்படுத்திவிடுவார்கள். மேலே உள்ள வரையறையின்படி, இதை மத்யம யோக ஸ்தானக மூர்த்தி என்று சொல்லலாம்.

திருச்சி மலைக்கோட்டை, படம்: உமா ருத்ரன்

திருச்சி மலைக்கோட்டையில் பாண்டியர்-முத்தரையர் காலக் குகைக்கோவில் ஒன்று உள்ளது. அறுமதங்கள் தொடர்பான சிற்பங்கள் இங்கே உள்ளதை முன்னமேயே சுட்டிக்காட்டியுள்ளேன். எதிரெதிராக விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் சன்னிதிகள். பக்கவாட்டுச் சுவரில் கணபதி, சுப்ரமணியன், பிரம்மா, சூரியன், துர்கை ஆகிய ஐவருக்கும் சிற்பங்கள். இங்கே விஷ்ணு சன்னிதியில் சுவரிலேயே செதுக்கப்பட்ட விஷ்ணு சிற்பம் ஒன்று உள்ளது. மேலே கைகளை விஸ்மயத்தில் வைத்தபடி இரு கணங்கள். காலடியில் மார்க்கண்டேய ரிஷி ஒருபுறமும் பூதேவி இன்னொரு புறமும் இருப்பதைக் காணலாம். இதுவும் மத்யம யோக ஸ்தானக மூர்த்திதான்.

மாமல்லை பெருந்தவச் சிற்பத் தொகுதி, படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

மாமல்லையிலேயே, பெருந்தவச் சிற்பத் தொகுதி என்ற கங்கை கீழே இறங்கிவரும் காட்சி காணப்படுகிறது. அங்கே கங்கைக் கரையில் ஒரு கோவில் சிற்பம் அற்புதமாகச் செதுக்கப்பட்டிருக்கும். இந்தக் கருவறையில் விஷ்ணு தனியாக இருப்பார். எனவே அதம யோக ஸ்தானக மூர்த்தி.

பொதுவாக யோக மூர்த்திகள் தனியான இடங்களில், கிராமங்களுக்கு வெளியே, காடுகளில், ஆற்றோரங்களில், மலைமீது என்று ஸ்தாபிக்கப்படவேண்டும்.

நார்த்தாமலையில், விஜயாலய சோழீசுவரத்துக்கு எதிரில் ஒரு வித்தியாசமான குகைக்கோவில் உள்ளது. சுந்தரபாண்டியனின் 13-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு இக்கோவிலை பதினெண்பூமி விண்ணகரம் என்று குறிப்பிடுகிறது. ஆனால் இதன் கருவறையில் லிங்கத்துக்கான பீடம் வெட்டப்பட்டுள்ளது. இக்குகைக்கோவிலின் அர்தமண்டபத்தில் வரிசையாக பன்னிரண்டு விஷ்ணு சிற்பங்கள், கிட்டத்தட்ட ஒரேமாதிரி செதுக்கப்பட்டுள்ளன. பக்கவாட்டு எதிரெதிர் சுவரில் ஒவ்வொன்று, கருவரையை ஒட்டிய சுவரில் கருவரைக்கு இருபுறமும் பக்கத்துக்கு ஐந்து என்று மொத்தம் பன்னிரண்டு. ஏன் இவ்வாறு செதுக்கினர் என்பதற்கான புரிதல் தெளிவாக இல்லை. சுமார் 9, 10-ம் நூற்றாண்டாக இருக்கலாம். நின்ற மூர்த்திகளிலேயே மிக அழகிய மூர்த்திகள் என்று இவற்றில் பலவற்றைச் சொல்லலாம். ஒன்றே ஒன்றை மட்டும் இங்கே எடுத்துக்காட்டுக்குச் சேர்த்திருக்கிறேன்.

நார்த்தாமலை பதினெண்பூமி விண்ணகரம்

போக ஸ்தானக மூர்த்தியும் கருநீல நிறத்திலேயே இருப்பார். யோகமூர்த்தி போன்றே அணிகலன், ஆடைகள், ஆயுதங்கள், முத்திரைகள் ஆகியவை இருக்கும். அத்துடன் அவருக்கு வலதுபுறம் ஶ்ரீதேவியும் இடதுபுறம் பூதேவியும் இருப்பர். ஶ்ரீதேவி கையில் தாமரையும் பூதேவி கையில் மலர்ந்த அல்லியும் இருக்கும். இருவருமே முகத்தில் ஆச்சரியத்துடன், சற்றே திரும்பி, விஷ்ணுவைப் பார்த்தபடி நிற்பர். இருவருக்கும் ஒரு கால் நேராகவும் மற்றொரு கால் முழங்காலிலிருந்து சற்றே வளைந்தும் இருக்கும். ஶ்ரீதேவி பொன்னிறத்தில் அல்லது பவழ நிறத்திலும் பூதேவி கரிய நிறத்திலும் இருப்பர்.

பின் சுவரில் மாயா, சம்ஹலாதினி ஆகியோர் சாமரம் வீசிக்கொண்டிருப்பர். தும்புரு, நாரதர் இருவரும் இசைத்துக்கொண்டிருப்பர். சூரியன், சந்திரன், சனகாதி முனிவர்கள், யக்ஷர்கள், வித்யாதரர்கள், கின்னரர்கள் எனப் பலரும் இருப்பர். காலடியில் பிருகு, மார்க்கண்டேயர், வலதுபுறம் பிரம்மா, இடதுபுறம் சிவன் ஆகியோரும் இருப்பர்.

உத்தரமேரூர் ஸ்தானக மூர்த்தி

இவ்வாறு அனைவரும் இருந்தால், உத்தம போக ஸ்தானக மூர்த்தி. பிரம்மா, சிவன், சாமரம் வீசுவோர், வாத்தியம் இசைப்போர், யக்ஷர்கள், இன்னபிறர் இல்லாவிட்டால், மத்யம போக ஸ்தானக மூர்த்தி. ரிஷிகள் இல்லாமல், தேவியர் மட்டும் இருந்தால், அதம போக ஸ்தானக மூர்த்தி.

மேலே நீங்கள் காண்பது உத்தரமேரூரில் கருவறையில் இருக்கும் அதம போக ஸ்தானக மூர்த்தி.

வீர ஸ்தானக மூர்த்தி வடிவம் குறித்து வைகானச சம்ஹிதைகளில் சில மாறுபாடுகள் உள்ளன. போகமூர்த்தியைப் போன்றே இங்கே ஶ்ரீதேவி, பூதேவி இருவரும் இருக்கவேண்டும். ஆனால் இருவரும் விஷ்ணுவை நோக்கிக் கைகளைக் கூப்பி வணங்கியபடி இருக்கவேண்டும். விஷ்ணுவின் கைகளில் சக்கரம், சங்கு, கதை, பத்மம் ஆகிய நான்கும் இருக்கவேண்டும். கிராமத்துக்கு வெளியே நிர்மாணிக்கப்படவேண்டும்.

பின் சுவரில் சாமரம் வீசுபவர்களாக கிஷ்கிந்தன், சுந்தரன் என இருவர், சூரியன், சந்திரன், சனகர், சனத்குமாரர் ஆகியோர் இருத்தல் வேண்டும். காலடியில் பிருகு, மார்க்கண்டேயர் என இரு முனிவர்கள்.

இப்படி அனைவரும் இருந்தால் உத்தம வீர ஸ்தானக மூர்த்தி. பின் சுவரில் யாரும் இல்லாவிட்டால், மத்யம வீர ஸ்தானக மூர்த்தி. காலடியில் முனிவர்களும் இல்லையெனில் அதம வீர ஸ்தானக மூர்த்தி.

லக்ஷ்மிநரசிம்மன் எழுதியுள்ள ‘A Study of Vaikhānasa Iconography’ என்னும் அருமையான புத்தகத்தில், இரு எடுத்துக்காட்டுகள் சொல்லப்பட்டுள்ளன. ஒன்று திருத்தணிக்கு அருகில் நெமலி என்னுமிடத்தில் இருக்கும் வைகுண்டவாசப் பெருமாள் கோவிலில் கருவறைக்கு வெளியே உள்ள சிற்பம். மற்றொன்று, திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோவிலில் உள்ள சிற்பம்.

சிவன் கோவில்களிலும் சைவ ஆகமங்களின்படி கருவறையின் பின் சுவரில் (பொதுவாக மேற்கு பார்த்து) விஷ்ணுவை நின்ற கோலத்தில் வடித்திருப்பார்கள். இவற்றை வைகானச, பாஞ்சராத்ர சம்ஹிதைகளின் அடிப்படையில் பார்த்தால் அதம யோக ஸ்தானக மூர்த்தி என்பதாக வரும். இங்கே சில படங்களைத் தந்துள்ளேன்.

சோழமாதேவி, எரும்பியூர், மேலப்பழுவூர், படம்: சீனிவாசன் ராஜகோபாலன்

அனைத்திலுமே கையில் சக்கரம், சங்கு, அபய ஹஸ்தம், கடி ஹஸ்தம், கிரீட மகுடம், பீதாம்பர ஆடை, அணிகலன்கள் என்று விஷ்ணு விளங்குகிறார்.

ஆபிசாரிக மூர்த்திகளைத் தேடுவது கொஞ்சம் கடினம்தான்.

நின்ற திருக்கோலத்தில் இந்தியா முழுமையிலும் விஷ்ணு மூர்த்திகள் உள்ளன. வட இந்தியாவில் பெரும்பாலும் புழக்கத்தில் இருந்தது பாஞ்சராத்ரம்தான். இந்த மூர்த்திகளில் பல வித்தியாசங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் பார்ப்போம்.

இந்தத் தொடரில் உதயகிரி பற்றிப் பலமுறை பார்த்துவிட்டோம். ஐந்தாம் நூற்றாண்டு குப்தர்கள் குகைக்கோவில். இங்கே பல ஆரம்பநிலைச் சிற்பங்களைப் பார்க்கலாம். நின்ற நிலையில் பிரம்மாண்டமான விஷ்ணு சிற்பத்தை இங்கே காணமுடிகிறது. நான்கு கைகளைக் கொண்டிருக்கிறார். ஆனால் பின்னிரு கைகளில் சங்கும் சக்கரமும் மேல்நோக்கிப் பிடித்த நிலையில் இல்லை. மாறாக இரு ஆயுதங்கள் ஆயுத புருஷர்களாகக் கீழே நின்றபடி உள்ளன. பின்னிரு கைகள் கீழ்நோக்கி வந்து அந்த ஆயுத புருஷர்களைத் தொட்டபடி உள்ளதைப் பார்க்கிறோம். விஷ்ணுவின் ஆயுதங்கள் யாவை? சுதர்சனம் (ஆண்) எனும் சக்கரம், பாஞ்சஜன்யம் (பூதம்) எனும் சங்கு, கௌமோதகி (பெண்) எனும் கதை, நந்தகம் (பெண்) எனும் வாள், சார்ங்கம் (பெண்) எனும் வில் ஆகிய ஐந்துமே அவை. இங்கே கௌமோதகி, கதையாகப் பெண் வடிவில் வலதுபுறம் நிற்கிறாள். தலையில் கதை போன்ற வடிவம் இருப்பதைப் பாருங்கள். இடதுபுறம் சுதர்சனச் சக்கரம் ஆண் வடிவில் உள்ளது.

உதயகிரி, படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

இந்த வகையில் வெவ்வேறு ஆயுத புருஷர்கள் கீழே நிற்பதையும் அவர்களை விஷ்ணு தொட்டபடி இருப்பதையும் வேறு பல சிற்பங்களில் காணப்போகிறோம்.

விஷ்ணுவின் தலைக் கிரீடம், மிகச் சிறப்பாக, தென்னிந்திய வகையிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. மேல்நோக்கிக் குவியவில்லை இந்தத் தலையணி. மாறாக மேல்நோக்கி விரிகிறது. முன்னிரு கைகள் இரண்டும் இடுப்பில் கைவைத்து பலத்தைக் காட்டும் வகையில் நிற்கிறது.

கீழே நீங்கள் பார்ப்பது பாதாமியில் சாளுக்கியர் விஷ்ணு குகை எண் மூன்றில் காணப்படும் விஷ்ணு வடிவத்தை. நின்ற திருக்கோலம்தான். ஆனால் எட்டு கரங்கள். வலது கைகளில் சக்கரம், அம்பு, கதை, வாள். இடது கைகளில் சங்கு, கேடயம், வில், கடி ஹஸ்தம். ஜார்ஜ் மிஷெல் இந்த வடிவத்தை விசுவரூபம் எடுக்கும் விராட விஷ்ணு என்று குறிப்பிடுகிறார்.

பாதாமி, படம்: வி.கே. ஶ்ரீனிவாசன்

சாளுக்கியர்கள் பாதாமியில் வெட்டுவித்த இரு விஷ்ணு குகைகளைத் தவிரக் கட்டுவித்த பல சிவாலயங்களிலும் விஷ்ணுவின் சிற்பங்கள் உள்ளன. அவை பலவும் யோக ஸ்தானக மூர்த்திகளே. அவற்றில் ஒன்றை ஆயுதபுருஷர்கள் உதாரணத்துக்காகக் காண்பிக்கிறேன். மாலெகித்தி சிவாலயம் என்னும் கட்டுமானக் கோவில், மிக அழகான ஒரு சிறு மேட்டின்மீது அமைக்கப்பட்டுள்ளது. இக்கட்டுமானக் கோவிலின் பக்கவாட்டில் ஒருபுறம் சிவன் சிற்பமும் மறுபுறம் விஷ்ணு சிற்பமும் உள்ளன.

மாலெகித்தி சிவாலயம், படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

விஷ்ணு சிற்பம், நான்கு கரங்களுடன் உள்ளது. பின்கரங்கள் இரண்டிலும் சக்கரமும் சங்கும் உள்ளன. வலது முன்கரம் எதையோ கையில் பிடித்துள்ளது. தெளிவாகத் தெரியவில்லை. இடது முன்கரம், இடுப்பில் வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவுக்கு வலதுபுறம் ஒரு பெண் உருவம், வித்தியாசமான தலை அலங்காரத்துடன் உள்ளது. இடதுபுறம், சற்றே கோரமான உருவம் கொண்ட பூதம் ஒன்று குள்ளமாக உள்ளது. விஷ்ணுவின் மேலே சற்றே அழகிய இரு குள்ள உருவங்கள், பறந்தபடி உள்ளன. அதில் ஒன்று கையில் மாலையை ஏந்தியபடி உள்ளது. விஷ்ணுவுக்கு வலதுபுறம் உள்ள உருவத்தின் தலை அலங்காரத்தை வைத்து அதனைக் கௌமோதகி என்றும் இடப்புற பூத உருவத்தை பாஞ்சஜன்யம் என்றும் உருவகப்படுத்திக்கொள்ளலாம்! அல்லது வலப்புறம் உள்ள பெண் உருவத்தை ஶ்ரீதேவி என்று எடுத்துக்கொள்ளலாம்.

போகமூர்த்திக்கு எடுத்துக்காட்டாக, ஹொய்சளர்களின் ஹரனஹள்ளி சிற்பம் ஒன்றைப் பார்ப்போம். மாபெரும் சிற்பம் இது. நான்கு கரங்கள் கொண்ட விஷ்ணு, நின்ற கோலத்தில். பின் இரு கைகளில் சங்கு, சக்கரம். முன் இரு கைகளில் பத்மம், கதை.

ஹரனஹள்ளி, படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

ஹொய்சளர்களுக்கே உரித்தான நுணுக்கமான கல் வேலைப்பாடு. இருபுறமும் இரு தேவியர். விஷ்ணுவின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்குதான் தேவியர்களின் உயரம். சம்ஹிதைகளின் அடிப்படையில் இது அதம போக ஸ்தானக மூர்த்தி ஆகும்.

ஆசன மூர்த்தி – இருந்தான்

நின்ற திருக்கோலத்துக்குப் பிறகு நாம் பார்ப்பது அமர்ந்த திருக்கோலத்தை (ஆசன மூர்த்தி). அமர்ந்த கோலத்தில், சிம்மாசனத்தில் அல்லது ஆதிசேஷனின்மீது (அனந்தாசனத்தில்) விஷ்ணு அமர்ந்திருப்பார். அமர்ந்திருப்பது, சுகாசனத்தில் அல்லது ராஜலீலாசனத்தில். இந்த வடிவத்துக்கு வைகுண்டமூர்த்தி என்றும் பெயர். மற்றபடி, ஸ்தானக மூர்த்திக்குரிய அதே விளக்கங்களே ஆசன மூர்த்திக்கும் உண்டு. யோக, போக, வீர, ஆபிசாரிக வடிவங்கள். ஒவ்வொன்றிலும், உத்தம, மத்யம, அதம வித்தியாசங்கள்.

யோக மூர்த்தியாக, விஷ்ணு தனியாக அமர்ந்திருப்பார். போக மூர்த்தியாக, விஷ்ணுவின் இரு பக்கங்களிலும் ஶ்ரீதேவி, பூதேவி அதே ஆசனத்தில் ஒரு கையில் தாமரை, அல்லி, மறு கை, டோலஹஸ்தமாகத் தொங்குமாறு அமர்ந்திருப்பர். வீர மூர்த்தியாக, ஶ்ரீதேவி, பூதேவி இருவரும் விஷ்ணுவின் அருகே அமராமல், கீழிருந்தவாறு வணங்கியபடி முழங்காலிட்டு அமர்ந்திருப்பர்.

உத்தம வடிவில், பக்கச் சுவர்களில் பிரம்மா, சிவன், காலடியில் ரிஷிகள் பிருகு, மார்க்கண்டேயர், பின் சுவரில் சூரிய, சந்திரர், சாமரம் வீசுவோர், சனத்குமாரர்கள் என்று அனைவரும் இருப்பர். மத்யம வடிவில் சிவன், பிரம்மா, சூரியன், சந்திரன் ஆகியோர் இருக்கமாட்டார்கள். அதம வடிவில் தனியாக விஷ்ணு மட்டும் இருப்பார்.

விஷ்ணு கோவில் கருவறை, சுற்றுச் சுவர் ஆகியவை தவிர, சிவன் கோவில்களின் மேற்குப் பகுதிச் சுவர், விமானக் கழுத்து ஆகிய பகுதிகளிலும் ஆசன மூர்த்திகளைக் காணலாம். பெரும்பாலும் இவை தேவியர் இல்லாமல் தனித்தே இருக்கும்.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் நான் கொடுத்துள்ள படம் தக்கோலம் சிவன் கோவிலில் கருவறைப் பின் சுவரில் உள்ள விஷ்ணு யோக ஆசன மூர்த்தி. சோழர் கலையில் மிக அழகாக, சுகாசனத்தில் விஷ்ணு அமர்ந்துள்ளார். பாண்டியர்களின் ஒற்றைக்கல் தளியான வெட்டுவான்கோவிலில், இதைவிடப் பிரமாதமான அழகில் ராஜலீலாசனத்தில் விஷ்ணு அமர்ந்துள்ளார். அருகிலேயே புள்ளமங்கை பராந்தகன் காலத்துச் சோழர் கோவிலிலும், ஹொய்சளர்களின் ஹொசஹொளலு லக்ஷ்மிநாராயணர் கோவிலிலும்.

வெட்டுவான்கோவிலில் விஷ்ணு அமர்ந்திருப்பது சிம்மாசனத்தின்மீது. புள்ளமங்கையிலும் ஹொசஹொளலுவிலும் அனந்தாசனத்தில் (ஆதிசேஷன்மீது). வெட்டுவான்கோவிலிலும் புள்ளமங்கையிலும் ஒரு கையை ஊன்றி, ஒரு காலை உயர்த்தி, ஆசனத்தின்மீது இருத்தி, மறு காலைக் கீழே தொங்கவிட்டுள்ளார். அந்தக் காலைத் தாங்கிப் பிடிக்கிறது ஒரு தாமரை மலர். ஹொசஹொளலுவில் ஒரு கையை ஊன்றி, மறு கையை டோலஹஸ்தமாக முழங்கால்மீது இருத்தித் தொங்கவிட்டுள்ளார். அனைத்திலும் பின்னிரு கைகளில் சக்கரமும் சங்கும் ஏந்தியுள்ளார். புள்ளமங்கை, வெட்டுவான்கோவில் இரண்டிலுமே இரண்டாவது முன்கை உடைந்துபோயுள்ளது!

சென்னை அருங்காட்சியகத்திலும் நியூ யார்க் மெட்ரோபாலிடன் அருங்காட்சியகத்திலும் மிகப் பெரிய அளவிலான விஷ்ணு யோக ஆசன மூர்த்திகள் உள்ளன. சென்னை அருங்காட்சியகச் சிலையே மிகப் பெரிது. நியூ யார்க் மெட் விஷ்ணு அதைவிடச் சில அடிகள் பெரிதாக இருக்கவேண்டும். இப்படியான சிலைகளெல்லாம் எப்படி வெளிநாடுகளுக்குப் போய்ச் சேர்ந்தன என்பது பெரும் கதை. கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சிலைகள். இரண்டுமே சிம்மாசனத்தின்மீது சுகாசனத்தில் அமர்ந்துள்ளவை. முதலாவது பல்லவர் கலைப்பாணி. இரண்டாவது பாண்டியர் கலைப்பாணி.

படம்: வி.கே. ஶ்ரீனிவாசன்

உத்தரமேரூர் கோவிலில் மூன்று தளங்கள் உள்ளன. தரைத்தளத்தில் (முதல் தளம்) கிழக்கு பார்த்த கருவறைக்குள் போக ஸ்தானக மூர்த்தி (படம் மேலே ஏற்கெனவே தரப்பட்டுள்ளது). சுற்றிலும் வியூக வடிவங்களுக்கான கருவறைகள், தெற்கு, மேற்கு, வடக்கு பார்த்து உள்ளன. இரண்டாம் தளத்தில் கிழக்கு பார்த்த கருவறைக்குள் போக ஆசன மூர்த்தி, அனந்தாசனத்தில், ஶ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்துள்ளார். படத்தைக் கீழே காணலாம்.

உத்தரமேரூர் ஆசன மூர்த்தி

இங்கேயும் நான்கு கருவறைகள், மற்ற மூன்றும் தெற்கு, மேற்கு, வடக்கு பார்த்து உள்ளன. இவை குறித்துச் சற்று நேரத்தில் பார்ப்போம். மூன்றாவது தளத்தில் ஒரேயொரு கருவறை, கிழக்கு பார்த்து. அதில் சயன மூர்த்தி.

பாதாமியில் மூன்றாவது குகைக்கோவிலில் விஷ்ணுவின் அமர்ந்த கோலம் ஒன்று உள்ளது. அதனைக் கீழே காணலாம். இங்கே விஷ்ணு மட்டும் அனந்தாசனத்தில் அமர்ந்துள்ளார். ஆனால் அவருக்கு இருபுறத்திலும் இரு தேவியர் நின்ற நிலையில் உள்ளனர். கூர்ந்துபார்த்தால், அவர்கள் இருவர் தலைமீதும் நாகத்தின் படம் தெரிகிறது. இவ்விருவரும் யார்? இவர்கள் இருவரும் நிச்சயமாக ஶ்ரீதேவி, பூதேவியே. அனந்தனுக்கு ஆயிரம் தலைகள். சிற்பங்களில் மூன்று, ஐந்து, ஏழு என்று மட்டுமே காண்பிப்பார்கள். இங்கே, இருக்கும் இடத்தில், விஷ்ணுவுக்குப் பெரும்பாலான பகுதியைக் கொடுத்துவிட்டு, பக்கவாட்டுச் சுவரில் ஶ்ரீதேவி, பூதேவியைக் காட்டுவதால், அவர்கள் தலைமீதும் ஒரு நாகத் தலையைச் செதுக்கியுள்ளனர். ஆக, ஆதிசேஷனின் குடையின்கீழ், விஷ்ணு, ஶ்ரீதேவி, பூதேவி அனைவரும் இருப்பதாகவே இதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.

பாதாமி, படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

லக்ஷ்மிநரசிம்மன், இந்த வடிவத்தை வீராசனமூர்த்தி என்கிறார். ஆனால் கோபிநாத ராவ், இதனை போகாசனமூர்த்தி என்கிறார். நான் கோபிநாத ராவுடன்தான் ஒத்துப்போகிறேன். காலடியில் வலது பக்கம் கருடன் ஒய்யாரமாக அனந்தன்மீது சாய்ந்திருக்கிறார். இடதுபக்கம் இன்னொரு தேவி அதே ஒய்யாரத்துடன் சாய்ந்துகொண்டிருக்கிறாள். அவள் யார்? ஶ்ரீவைஷ்ணவத்தில் நீளா தேவி என்ற மூன்றாவது தேவி குறிப்பிடப்படுகிறாள். சம்ஹிதைகள் யோகமாயையையும் ஒரு தேவி வடிவில்தான் குறிப்பிடுகின்றன. அவளாகவும் இருக்கலாம்.

வீராசனமூர்த்தி என்றால் அது நிச்சயமாக பரமேச்சுர விண்ணகரம் என்று அழைக்கப்படும் காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவிலில் உள்ளதுதான். அதிலும் உத்தம வீராசனமூர்த்தி. எளிதில் அழிந்துபோகும் மணற்கல்லால் ஆன இந்தச் சிற்பத்தின்மீது கொஞ்சம் மோசமான விதத்தில்தான் சமீப காலங்களில் சுதை பூசப்பட்டுள்ளது. அழகைத் தாண்டி, சம்ஹிதைகள் சொல்லும் உத்தம வீராசன மூர்த்தி என்பதைப் புரிந்துகொள்வதற்காக இந்தச் சிற்பத்தைப் பாருங்கள்.

காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவில், படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

சுகாசனத்தில் அமர்ந்திருக்கும் விஷ்ணுவுக்கு அருகில் இல்லாமல், காலடியில் இருபுறமும் கைகளைக் கூப்பியபடி இரு தேவியர் – ஶ்ரீதேவி, பூதேவி. காலுக்கடியில் அஞ்சலி முத்திரையில் ஒருவர் – அது கருடனாக இருக்கவேண்டும், இறக்கைகள் தெரியவில்லை. இருபுறமும் பிரமனும் சிவனும் கைகளைக் கூப்பியபடி உள்ளனர். மேலே இருவர் கையில் சாமரத்துடன் – அவர்கள் கிஷ்கிந்தனும் சுந்தரனும். அவர்களுக்கு இருபுறமும் வித்யாதரர்கள். விஷ்ணு பின்கைகளில் சக்கரமும் சங்கும். முன்கைகளில் அபய வரத ஹஸ்தம்.

சயன மூர்த்தி – கிடந்தான்

நின்ற திருக்கோலமும் அமர்ந்த திருக்கோலமும் சிற்பத் தொகுதியாகப் பெரிய வித்தியாசம் இல்லாதவை. ஆனால் கிடந்த திருக்கோலமான சயன மூர்த்தி இவற்றிலிருந்து மாறுபட்டது. அங்கே ஒரு பெரிய கதையே நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

துர்கையின் படிமங்கள் குறித்துப் பார்த்தபோது தேவி மாஹாத்மியம் சயன கோல விஷ்ணு குறித்துச் சொன்னதைப் பார்த்தோம். அதே கதைதான் இங்கே. ஆனால் யோகமாயைக்கு முதன்மை கிடையாது. கதையை மீண்டும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

விஷ்ணு யோகநித்திரையில் ஆழ்ந்திருக்க, அவரது நாபிக்கமலத்திலிருந்து தோன்றிய தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மா படைப்புத் தொழிலைச் செய்துகொண்டிருக்கிறார். அப்போது அங்கே வரும் அசுரர்களான மதுவும் கைடபனும் பிரம்மாவை ஒழித்துக்கட்ட முனைகின்றனர். பிரம்மா விஷ்ணுவை வேண்ட, யோகநித்திரையிலிருந்து விழித்தெழும் விஷ்ணு மது, கைடபர்களுடன் போரிட்டு அவர்களைக் கொல்கிறார். பாஞ்சராத்ர சம்ஹிதைகளில் மது, கைடபர்களைக் கொல்வது ஹயசீர்ஸ (ஹயக்ரீவ) வடிவம்.

சயன விஷ்ணுவை அமைக்கும்போது மது கைடபர்களையும் சேர்த்தே அமைப்பதாக வைகானச சம்ஹிதைகள் சொல்கின்றன. சயன மூர்த்தங்களிலும் யோக, போக, வீர, ஆபிசாரிக வடிவங்கள் உள்ளன.

யோக சயன மூர்த்தி, தேவியர் யாரும் இல்லாமல் தனியாக, ஆதிசேஷனின் பாம்புப் படுக்கையில் படுத்திருப்பார். தலையிலிருந்து தொடங்கி உடலில் கால் பாகம் சற்றே மேலே எழும்பியிருக்கும். பார்க்க உடம்பு வில்போல இருக்கவேண்டும். தலை மேல் நோக்கியும், சற்றே வெளிப்புறம் திரும்பியும் அமைக்கப்படவேண்டும். பாம்புப் படுக்கை, மொத்தச் சிற்பத்தின் உயரத்தில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும். விஷ்ணுவின் கால்கள் இரண்டில் ஒரு கால் (உட்புறக் கால்), சற்றே உயர்த்தப்பட்டு இருக்கலாம். யோக சயன மூர்த்திக்கு இரண்டு கைகள்தான் இருக்கும். உட்புறக் கை, கால்கள்மீது படரவிடப்பட்டிருக்கும். அல்லது முழங்கையிலிருந்து சற்றே மேலெழும்பி கடக முத்திரையைக் காண்பிப்பதாக இருக்கலாம். வெளிப்புறக் கை கிரீடத்துக்கும் தலையணைக்கும் இடையில் வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது கீழே தொங்கலாம். அல்லது இந்தக் கை கீழே அமர்ந்திருக்கும் முனிவர் மார்க்கண்டேயர் தலைமீது வைக்கப்படலாம். அல்லது சில இடங்களில் இளம் வயது பிரகலாதன் கீழே அமர்ந்திருக்க, அவன் தலைமீது வைக்கப்படலாம்.

மிக முக்கியமானது, சயன மூர்த்தியின் தலை வடக்குத் திசையில் இருக்காது. வேறு எந்தத் திசையில் வேண்டுமானாலும் இருக்கலாம். கருவறை கிழக்கு நோக்கி இருந்தால் நேராகப் பார்த்துக்கொண்டிருக்கும் நம் இடது பக்கத்துக்குத் தலையும் வலதுபக்கத்துக்குக் காலும் இருக்கும். அதே கருவறை மேற்கு பார்த்து இருந்தால் நம் வலது பக்கம் தலையும் இடது பக்கம் காலும் இருக்கும். இந்த சம்ஹிதை விதி பற்றியப் புரிதல் இல்லாமல் பல கதைகள் உலவுகின்றன. அவற்றைக் கணக்கில் கொள்ளவேண்டாம். ஶ்ரீரங்கத்தில் தெற்கு பார்த்த கருவறை. இங்கே உள்ள சயனமூர்த்தியின் தலை நமக்கு இடது, வலது என்று எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால் நமக்கு இடதுபுறம்தான் (மேற்குத் திசையில்) உள்ளது.

ஸ்தானக, ஆசன மூர்த்தங்களைப் போலவே, பிருகு, மார்க்கண்டேயர் இருவருமோ, அல்லது மார்க்கண்டேயர், பூதேவி இருவருமோ விஷ்ணுவை வணங்குவதுபோல அமைக்கப்படவேண்டும். விஷ்ணுவின் ஆயுதபுருஷர்கள் ஐவருமோ அல்லது அதற்கும் குறைவானவர்களோ உருவிய ஆயுதங்களோடு ஆக்ரோஷமாகக் காட்டப்படவேண்டும். இந்த ஆயுத புருஷர்கள், மது கைடபர்களைத் தாக்குவதற்காகச் செல்கிறார்கள். விஷ்ணு உறங்கிக்கொண்டிருக்கிறார்; மதுவையும் கைடபனையும் ஒழிக்க அவர் விழிக்கவேண்டிய அவசியமில்லை; ஆயுதங்கள் தாங்களே போதும் என்று முடிவெடுக்கின்றன. இன்னொரு பக்கமோ ஆதிசேஷன் கடும் கோபம் கொண்டு தன் விஷத்தைத் தீச்சுவாலைகளாகக் கக்குகிறான். ஆதிசேஷனின் வாயிலிருந்து கிளம்பும் தீக்கங்குகள் மது கைடபர்களை நோக்கிச் செல்வதாகக் காண்பித்திருப்பார்கள்.

ஸ்தானக, ஆசன மூர்த்திகளின் பின்புறச் சுவரில் நிறையப் பேர் இருப்பதைப் பார்த்திருக்கிறோம் என்றால், சயன மூர்த்தியின் அகலம் அதிகம்; இங்கே இன்னும் பலப்பலரைப் பார்க்கப்போகிறோம். சப்தரிஷிகளும் பின்புறம் இருப்பார்கள். கருடன், விஷ்வக்சேனன் இருவரும் விஷ்ணுவின் வலது, இடது புறத்தில் முறையே நிற்கவேண்டும். விஷ்ணுவின் வலதுபுறம் பிரம்மாவும் இடதுபுறம் சிவனும் அமர்ந்த நிலையில் இருக்கவேண்டும். விஷ்ணுவுக்கு கல்கீ, பாரதீ என இரு பெண்கள் சாமரம் வீசிக்கொண்டிருப்பர்.

மதுவும் கைடபனும் பிரம்மாண்டமாகக் காட்டப்படவேண்டும். இருவரும் கையில் பெரும் கதையைக் கொண்டு தாக்கவருவதாக இருக்கவேண்டும். அதே நேரம், ஆதிசேஷனின் சுட்டெரிக்கு விஷக் கங்குகள் தம்மீது படுவதால், அதிலிருந்து தப்பிக்கும் முகமாகத் தங்கள் முதுகைக் காட்டியபடி, ஒரு கையால் முதுகை மறைக்க முற்படுவதாகக் காண்பிக்கவேண்டும்.

இவ்வாறு அனைவரும் சேர்ந்து இருக்கும் நிலை உத்தம யோக சயன மூர்த்தி. பிரம்மா, சிவன், சப்தரிஷிகள், விஷ்வக்சேனர் போன்றோர் இல்லாவிட்டால் மத்யம யோக சயன மூர்த்தி. மது, கைடபன், பிருகு, மார்க்கண்டேயர் என யாருமே இல்லாமல் தனியாக இருந்தால் அதம யோக சயன மூர்த்தி.

ஶ்ரீரங்கம் ரங்கநாதர்

வைணவத் தலங்களிலேயே தலையானது ஶ்ரீரங்கம். அங்கே கருவறையில் சுதையால் ஆன திருமூர்த்தி, சயன கோலத்தில் உள்ளது. இது அதம யோக சயன மூர்த்தியாகும். இதனை மேலே காணலாம்.

சயன மூர்த்திகளிலேயே மிகப் பழமையானது என்று பார்த்தால் ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான உதயகிரி குப்தர்கள் குகையைச் சொல்லலாம். இங்கேதான் பல மூர்த்திகளின் தொடக்கம் நமக்குக் கிடைக்கிறது. இங்கே உள்ள சயன மூர்த்தியை அவ்வளவு எளிதில் படம் எடுத்துவிட முடியாது. கம்பிகள் போட்டு மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளது. நண்பர் விகே ஶ்ரீனிவாசன், பல துண்டுகளாகப் படமெடுத்து, வெட்டி, ஒட்டி கீழ்க்கண்ட படத்தை உருவாக்கியுள்ளார். ஆதிசேஷனின் சுருள் மிகவும் வித்தியாசமாக இருப்பதைக் காணலாம். குப்தர்கள் வராகமானாலும் சரி, நின்ற விஷ்ணு மூர்த்தியானாலும் சரி, சயன விஷ்ணுவானாலும் சரி, வனமாலையை விடுவதில்லை. பின்பக்கச் சுவரில் சிறிது சிறிதாகப் பல உருவங்களைக் காணமுடிகிறது. கையில் பெரும் தடி ஏந்திய மது, கைடபன், ஓரிரு தாமரை மலர்கள் ஆகியவற்றுடன், நீங்கள் கூர்ந்து பார்த்தால் சில ஆயுத புருஷர்களும் தென்படுவார்கள்.

தலையில் சக்கரத்துடன் சுதர்சனம், சற்றே தடியான ஓர் உருவம், பெண்போல் தெரிகிறது, எனவே கௌமோதகி, அருகில் நிற்போர் யார் எனத் தெளிவாகச் சொல்ல முடியவில்லை. இது மத்யம யோக சயனமூர்த்தி ஆகும்.

உதயகிரி, படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

ஆனால், மிக அற்புதமான யோக சயனமூர்த்தி என்றால், மாமல்லபுரத்தின் மஹிஷாசுரமர்தினி மண்டபத்தில் கிடைப்பதுதான். கல்லைக் குடையும் சகல சாத்தியங்களும் கைவரப்பெற்ற பல்லவச் சிற்பிகள் உருவாக்கிய பேரற்புதம் அது.

இந்தச் சிற்பத்தில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று பார்த்துவிடுவோம். விஷ்ணு சயன கோலத்தில். ஐந்து தலைகளுடன் ஆதிசேஷன். விஷ்ணுவின் ஒரு கை கடக முத்திரையில். மற்றொன்று கீழ் நோக்கி. சற்று தொலைவில் மதுவும் கைடபனும். ஒருவன், ஆதிசேஷனின் தீக்கங்குகள் தாளாமல் முதுகைக் கையால் மறைத்துக்கொண்டு நிற்கிறான், மற்றொருவன் தடியைக் கையில் வைத்தபடி தாக்கத் தயாராக நிற்கிறான். மேலே இரண்டு பேர் மது கைடபனைத் தாக்கத் தயாராகப் பாய்கிறார்கள். அவர்களுடைய வடிவத்தைக் கொண்டு யார் யார் என்று தீர்மானிக்கலாம். சற்றே குண்டாகப் பூத வடிவில் இருப்பது பாஞ்சஜன்யம். பெண் வடிவில் பாய்வது கௌமோதகியாகவும் இருக்கலாம், அல்லது நந்தகம், சார்ங்கம் ஆகியோரில் ஒருவராகவும் இருக்கலாம். பெரும்பாலும் கௌமோதகி என்று கொள்வோம்.

கீழே மூவர். கைகூப்பி வணங்கி மண்டியிட்ட நிலையில் பூதேவி. மற்ற இருவரில் பூதேவிக்கு அருகில் இருப்பவர் மார்க்கண்டேய முனிவர். தலையில் ஜடாமுடி அதைக் காண்பித்துவிடுகிறது. இன்னொருவர் யார்? தலையைக் கூர்ந்து பார்த்தால் சக்கரம் தெரியும். கூடவே அவரது கை தர்ஜனி முத்திரையைக் கொண்டுள்ளது. தர்ஜனி என்றால் ‘தொலைத்துவிடுவேன்’ என்று எச்சரிக்கை செய்யும் முத்திரை. எனவே அது சுதர்சனம் எனும் சக்கரம்.

மாமல்லை மகிஷமர்தினி மண்டபம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

இங்கும் உதயகிரிபோல் பாம்பின் சுருள்கள் உள்ளன; ஆனால் இடைவெளி இன்றி அழகாகச் சுருட்டப்பட்டு. சந்தேகமே இல்லாமல், மிகச் சிறப்பான சயன மூர்த்தி வடிவம் இது என்று சொல்வேன். ஆனால் இத்துடன் போட்டிபோட இன்னொரு வடிவம் உள்ளது.

போக சயனமூர்த்தி வடிவம், யோக சயனமூர்த்தி வடிவம் போன்றதே. சில மாற்றங்கள் உண்டு. விஷ்ணு தனியாக இல்லாமல், ஶ்ரீதேவி, பூதேவியுடன் இருப்பார். ஶ்ரீதேவி தலைமாட்டிலும் பூதேவி கால்மாட்டிலும். அவ்வாறு இருந்தால் ஶ்ரீதேவி மிக நெருக்கமாக விஷ்ணுவின் உடலில் படுமாறு இருப்பார். விஷ்ணுவின் கால், பூதேவியின் மடிமீது இருக்கும். அல்லது ஶ்ரீதேவி, பூதேவி இருவருமே கால்மாட்டில் அருகருகே அமர்ந்திருப்பர், ஒவ்வொருவரது மடியிலும் விஷ்ணுவின் ஒவ்வொரு கால் வைக்கப்பட்டிருக்கும். விஷ்ணுவுக்குப் பொதுவாக இரு கரங்கள், அவற்றில் ஆயுதம் இருக்காது. சில இடங்களில் நான்கு கரங்கள் இருந்தாலும் ஆயுதம் இருக்காது.

ஏற்கெனவே பார்த்த அனைவரும் – மது, கைடபன், ஆயுத புருஷர்கள், பிருகு, மார்க்கண்டேயர், கருடன், விஷ்வக்சேனர், பிரம்மா, சிவன், சப்த ரிஷிகள் ஆகியோர் இருப்பர். கூடவே, தும்புரு, நாரதர், அசுவினி தேவர்கள், சூரியன், சந்திரன், பிள்ளையார், துர்கை என வேறு பலரும் இருப்பர்.

குப்தர்களின் தேவகட் மிகச் சிறந்த, மிக அழகான மூன்று பெருஞ்சிற்பங்களைக் கொண்டது. அதில் ஒன்றுதான் இந்தச் சயனமூர்த்தி சிற்பம். ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது இந்தச் சிற்பம் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். விஷ்ணுவின் கால் பூதேவியின் மடியில் உள்ளது. பூதேவி மிருதுவாக இரு கைகளாலும் காலைப் பிடித்துவிடுகிறாள். மேல் வரிசையில் மயில்மீது சுப்ரமணியர், யானைமீது இந்திரன், தாமரைமீது பிரம்மா, காளைமீது சிவன், பார்வதி ஆகியோரும் பறக்கும் வித்யாதரன் ஒருவனும் உள்ளனர். கால்மாட்டில் பூதேவிக்கு அருகில் கையில் கதை ஏந்திய ஒரு பெண். கௌமோதகி. அருகில் கழுத்தில் பாம்பணிந்த ஓர் ஆண். இந்த உருவத்தின் நெற்றியைக் கூர்ந்து கவனித்தால் சங்கு வடிவம் இருப்பதைக் காணலாம். எனவே இது பாஞ்சஜன்யமே.

தேவகட், படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

கீழே அறுவர் நிற்கின்றனர். (பஞ்ச பாண்டவர்களும் திரௌபதியும் என்று விக்கிபீடியாவரை வந்துவிட்டது! அவர்களை மன்னித்துவிடுங்கள்!) இந்த அறுவரில் இருவர் ஒரு பக்கம், அவர்களை எதிர்த்து மூவர் மறு பக்கம். இறுதியில் ஒரு பெண். இடது கோடியில் இருக்கும் இருவரும் மது, கைடபர்கள். இருவர் கையிலும் தடிக் கழி இருந்துள்ளது, ஆனால் ஒருவரது கையில் உள்ள கழி உடைந்துவிட்டது என்பதை நீங்கள் எளிதில் யூகிக்கலாம். அவர்களுக்கு எதிர்த்தரப்பில் உள்ளவர்கள் யார் யார்?

வாளை உறையிலிருந்து உருவுவது நந்தகம். வைகானச சம்ஹிதை நந்தகமும் சார்ங்கமும் பெண்ணாக இருக்கவேண்டும் என்கிறது. ஆனால் அவ்வாறு எல்லா இடங்களிலும் இருப்பதில்லை. நந்தகத்தை அடுத்து இருப்பது சார்ங்கம். அடுத்து இரு கைகளையும் கட்டியபடி இருப்பது சுதர்சனம். தலைமீது பிரயோகச் சக்கர வடிவம் இருப்பதைக் காணமுடிகிறது. அடுத்து இருக்கும் பெண் ஶ்ரீதேவி.

இந்தச் சிற்பத்தில் ஆதிசேஷனையும் சேர்த்து மொத்தமாகப் பதினேழு நபர்கள். அனைவரும் கொள்ளை அழகு. அனைவரது ஆடைகள், தலையலங்காரங்கள், கிரீட மகுடம், அணிகலன்கள், ஆயுதங்கள், நிற்கும் பாவம், முகபாவம், கைகளை வைத்திருக்கும் விதம், மேலே குழுமியிருக்கும் கடவுள்களின் முகத்தில் ஆச்சரியம் என, சிற்பத்தில் ஒரு பெரும் கதையையே தீட்டியிருக்கிறார்கள். இது மத்யம போக சயனமூர்த்தி எனும் வகையில் வரும்.

இந்தக் குறிப்பிட்ட குப்தர்கள் காலச் சிற்பிகளுக்கு ஈடு இணையே இல்லை எனலாம்!

போக சயனமூர்த்திகளிலேயே மிக விரிவானதாக, உத்தம போக சயனமூர்த்தி ஒன்று பாண்டியர் காலத் திருமெய்யம் குகைக்கோவிலில் காணப்படுகிறது.

கீழே நீங்கள் காணும் படத்தை உங்கள் புகைப்படக் கருவியில் அப்படியே பிடித்துவிட முடியாது. உதயகிரி சயனமூர்த்தியை விகே ஶ்ரீனிவாசன் பல படங்கள் எடுத்து வெட்டி ஒட்டியதைப்போல், மிகச் சிறந்த புகைப்படக் கலை நிபுணரான அசோக் கிருஷ்ணசாமி, திருமெய்யம் கருவறையில் தூண்கள் மறைத்திருக்கும் சயன மூர்த்தியைப் பல படங்களாக எடுத்து, வெட்டி ஒட்டி, இந்த அருமையான காட்சியை நமக்கு அளிக்கிறார். உத்சவர் சிலைகளை வைப்பதற்காக துரதிர்ஷ்டவசமாக முன்னால் ஒரு மேடையை அமைத்துள்ளனர். இதனால் நாம் எதையேனும் இழந்துவிட்டோமா என்று தெரியவில்லை.

இந்தப் பெரும் சிற்பத் தொகுதியில் ஏகப்பட்ட பேர் உள்ளனர். முதலாவது விஷ்ணு, சயனக் கோலத்தில், இரு கரங்களுடன், ஒன்றில் கடக முத்திரை, மற்றொன்று தலைக்கு அருகில் செல்கிறது. ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் பாம்புப் படுக்கை. ஆதிசேஷனிடமிருந்து செல்லும் தீச்சுவாலைகள் தெரியுமாறு செதுக்கப்பட்டிருக்கிறது. கால் பகுதியில் பிரம்மாண்டமாக மதுவும் கைடபனும். அதில் ஒருவன் முதுகு எரிவதனால் அதனைக் காப்பதற்குக் கையை அங்கே கொண்டுசெல்கிறான். கீழே, தலைமாட்டில் மார்க்கண்டேயர் அமர்ந்துள்ளார். கருடன் கைகளைக் கட்டியபடி நின்றுகொண்டிருக்கிறான். கால்மாட்டில் பூதேவியா, ஶ்ரீதேவியா, எளிதில் சொல்ல முடிவதில்லை. பூதேவி என்றால் இந்தச் சிற்பம் யோக சயனமூர்த்தி. ஶ்ரீதேவியாகக் கருதினால் போக சயனமூர்த்தி. ஏனெனில் போகவடிவத்துக்குத்தான் பின் சுவரில் நிறைய தேவர்கள், ரிஷிகளைச் சொல்லியிருக்கிறது.

திருமெய்யம், படம்: அசோக் கிருஷ்ணசுவாமி

பின்புறம் தலைமாட்டிலிருந்து கால்மாட்டை நோக்கிச் செல்வோம். சூரியன் தலைமாட்டில், சந்திரன் கால்மாட்டில், இருவரும் ஒவ்வொரு கோடியில். சூரியனை அடுத்து, சனத்குமாரர்கள், நாரதர், தும்புரு. நாரதரும் தும்புருவும் கையில் இசைக்கருவி வைத்துள்ளனர். சற்றே வித்தியாசமான முகம் கொண்டவர் தும்புரு. தலைமாட்டில் சிறு பிறை போன்ற பகுதியில் மூவர் அமர்ந்துள்ளனர். அதில் இருவர் அசுவினி தேவர்களாக இருக்கலாம். மூன்றாமவர் ரிஷிபோல் இருக்கிறார், யார் என்று தெரியவில்லை.

தும்புருவை அடுத்து, ஆயுத புருஷர்கள் தொடங்குகின்றனர். முதலில் பூத வடிவில் பாஞ்சஜன்யம். அடுத்து சுதர்சனச் சக்கரமாக இருக்கவேண்டும். அடுத்து நான்கு தலையுடன் பிரம்மா தாமரை மலர்மீது. அவருக்கு இருபுறமும் சுருள் கொம்பு மான் தலையுடன் ஒருவரும் ஒரு பெண்ணும். மான் தலை உடையவர் ரிஷ்யசிருங்கராக இருக்கலாம். ஆட்டின் தலையுடைய தக்ஷணாக இருக்கச் சாத்தியம் இல்லை. பெண் யார் என்று தெரியவில்லை. மீண்டும் மூன்று ஆயுத புருஷர்கள், ஓர் ஆண், இரு பெண்கள். ஆண் சார்ங்கமாகவும், பெண்கள் நந்தகம், கௌமோதகியாகவும் இருக்கலாம். யார் எவர் என்று தெளிவாகச் சொல்லமுடியவில்லை. அடுத்து சப்தரிஷிகளும் அவர்களுக்குப் பின் ஓரிருவரும்.

இவ்வளவு விரிவான சயன மூர்த்தி சிற்பத்தொகுதி இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லை. பாண்டியர்களின் அற்புதக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டு இது.

வீர சயனமூர்த்தி வடிவத்தில் சில மாறுதல்கள் மட்டுமே. இங்கு விஷ்ணு நான்கு கைகள் கொண்டவராக இருக்கிறார். பின்னிரு கைகளில் சக்கரமும் சங்கும் ஏந்தியிருக்கிறார். ஶ்ரீதேவி, பூதேவி இருவரும் கால்மாட்டில் அமர்ந்திருக்கின்றனர். பிருகு, மார்க்கண்டேயர் கீழே மண்டியிட்டு அமர்ந்துள்ளனர். சூரியன், சந்திரன், தும்புரு, நாரதர், சப்த ரிஷிகள் ஆகியோருடன் பதினொரு ருத்ரர்கள், பன்னிரு ஆதித்யர்கள், கின்னரர்கள், பிரம்மா, சிவன், சனத்குமாரர்கள் என அனைவரும் இருந்தால் உத்தம வீர சயனமூர்த்தி. ஒருசிலர் மட்டும் இருந்தால் மத்யம வீர சயனமூர்த்தி. விஷ்ணு, ஆதிசேஷன், ஶ்ரீதேவி, பூதேவி மட்டும் இருந்தால் அதம வீர சயன மூர்த்தி.

இவ்வகைச் சிற்பங்கள் அரிதாகவே கிடைக்கின்றன. ஹம்பியில் பாறை முகப்புகளில் இரு இடங்களில் இவ்வகைச் சிற்பங்கள் உள்ளன. இது அதம வீர சயனமூர்த்தி ஆகும்.

வீர சயனமூர்த்தி, ஹம்பி

ஆபிசாரிக வடிவங்களும் சயன மூர்த்தியில் உண்டு. மாமல்லபுரத்தில் கடற்கரைக் கோவில்களுக்கு இடையே ஆதிசேஷன்மீது அல்லாது தரையில் படுத்திருக்கும் சயனப் பெருமாள் ஆபிசாரிக மூர்த்தியாக இருக்கவேண்டும் என்று கோபிநாத ராவ், லக்ஷ்மிநரசிம்மன் இருவருமே குறிப்பிடுகிறார்கள்.

வைகுண்டச் சதுர்மூர்த்தி

இந்தியா முழுதும் வழக்கத்தில் இருந்த பாஞ்சராத்ரத்தில் வியூக வடிவங்கள் வெவ்வேறு விதமாக வெளிப்படுகின்றன. முக்கியமாக காஷ்மீரம், நேபாளப் பகுதிகளில் வைகுண்டச் சதுர்மூர்த்தி என்ற வடிவம் காணக்கிடைக்கிறது. இன்று பெரும்பாலும் அருங்காட்சியகங்களில் மட்டுமே இந்த வடிவம் உள்ளது. இந்தியாவின் தென்பகுதியில் இந்த வடிவம் காணக்கிடைப்பதில்லை.

வைகுண்டச் சதுர்மூர்த்தி
வைகுண்டச் சதுர்மூர்த்தி, லாஸ் ஏஞ்சல்ஸ் அருங்காட்சியகம்

விஷ்ணுதர்மோத்தரம் என்னும் நூல் பல பகுதிகளைக் கொண்டிருந்தாலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அதன் சிற்ப, ஓவியம் குறித்த பகுதிகளாகும். அதில் வைகுண்ட விஷ்ணு எனும் சிற்பம் குறித்த தகவல் வருகிறது. எட்டு கரங்கள், நான்கு முகங்கள், அவற்றில் இரண்டு வராக, நரசிம்ம முகங்களாக இருக்கவேண்டும் என்கிறது விஷ்ணுதர்மோத்தரம். இதே நூலில், விஷ்ணுவின் நான்கு வியூகங்களும் இணைந்த, நான்கு முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட வடிவம் ஒன்றும் பேசப்படுகிறது. பாஞ்சராத்ர சம்ஹிதைகள், வியூக வடிவங்களின் குணங்களைச் சொல்கின்றன என்று பார்த்தோம். இதே குணங்களை விஷ்ணுதர்மோத்தரம், வைகுண்டச் சதுர்மூர்த்தியின் நான்கு முகங்களுக்கும் தருகிறது.

கிழக்கு பார்த்த மனித முகம் – பலம் – வாசுதேவன்
தெற்கு பார்த்த சிம்ம முகம் – ஞானம் – சங்கர்ஷணன்
மேற்கு பார்த்த ரௌத்ர (காபில) முகம் – ஐஸ்வர்யம் – பிரத்யும்னன்
வடக்கு பார்த்த வராஹ முகம் – சக்தி – அநிருத்தன்

இவற்றை இணைத்துப் பார்த்தால் வாசுதேவன் மனித முகத்தையும் சங்கர்ஷணன் நரசிம்ம முகத்தையும் பிரத்யும்னன் காபில முகத்தையும் அநிருத்தன் வராஹ முகத்தையும் கொண்டதாக ஆகிறது.

சதுர்விம்ஸதி விஷ்ணு வடிவங்கள்

பாஞ்சராத்ரம், விஷ்ணுவின் வியூக வடிவங்களிலிருந்து மேலும் பல வடிவங்கள் உருவாவதாகச் சொல்கிறது. இந்த வடிவங்களுக்கு வியூகாந்தரம் அல்லது மூர்த்தியாந்தரம் என்று பெயர். இடைப்பட்ட வியூகங்கள் அல்லது மூர்த்திகள் என்று பொருள் கொள்ளலாம்.

வாசுதேவ => கேசவ, நாராயண, மாதவ
சங்கர்ஷண => கோவிந்த, விஷ்ணு, மதுசூதன
பிரத்யும்ன => திரிவிக்ரம, வாமன, ஶ்ரீதர
அநிருத்த => ஹ்ரிஷிகேச, பத்மநாப, தாமோதர

பன்னிரண்டு மாதங்களுக்கும் பன்னிரண்டு ஆதித்தியர்களுக்கும் மேலே சொல்லப்படும் விஷ்ணுவின் வியூகாந்தர வடிவங்கள் அதிதேவதைகள் ஆவார்கள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வண்ணமும் ஆயுதங்களும் தரப்பட்டுள்ளன. முக்கியமாக வைணவர்கள் உடலில் திருமண் இட்டுக்கொள்ளும்போது உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் இந்தப் பெயர்களைச் சொல்லியபடி இட்டுக்கொள்ளவேண்டும். இந்த வடிவங்கள் அனைத்துமே விஷ்ணுவுக்கான அடிப்படை இலக்கணங்களைக் கொண்டிருக்கும். நான்கு கரங்கள் இருக்கும். இந்த நான்கு கரங்களிலும் சங்கு, சக்கரம், கதை, பத்மம் (தாமரை) ஆகியவை இருக்கும். நான்கு பொருள்களை மாற்றி மாற்றி வைத்தால் மொத்தமாக நமக்குக் கிடைக்கும் வடிவங்கள் = 4x3x2x1 = 24 ஆகும். பாஞ்சராத்ரம், மேலே உள்ள பன்னிரண்டுடன், மேலும் பன்னிரண்டு வியூகங்களைத் தருகிறது. இவற்றுக்கு வித்யேசுவரர்கள் என்று பெயர்.

வியூக வாசுதேவ => வாசுதேவ 2 => புருஷோத்தம => ஜனார்தன
வியூக சங்கர்ஷண => சங்கர்ஷண 2 => அதோக்ஷஜ => உபேந்திர
வியூக பிரத்யும்ன => பிரத்யும்ன 2 => நரசிம்ம => ஹரி
வியூக அநிருத்த => அநிருத்த 2 => அச்யுத => கிருஷ்ண

இங்கே நாம் கவனமாக இருக்கவேண்டியது, வாசுதேவ, சங்கர்ஷண, பிரத்யும்ன, அநிருத்த ஆகிய பெயர்கள் இங்கு மீண்டும் வருவதில். வியூக வடிவில் இப்பெயர்களின் பொருள் வேறு, வியூகாந்தர, வித்யேசுவர வடிவில் இவற்றின் பொருள் வேறு. மொத்தமாக இந்த 24 வடிவங்களின் எந்தெந்தக் கைகளில் என்னென்ன இருக்கும் என்பதைக் கீழே உள்ள பட்டியல் தருகிறது.

எண் பெயர் பின் வலக்கை பின் இடக்கை முன் இடக்கை முன் வலக்கை
1 கேசவ சங்கு சக்ரம் கதை பத்மம்
2 நாராயண பத்மம் கதை சக்ரம் சங்கு
3 மாதவ சக்ரம் சங்கு பத்மம் கதை
4 கோவிந்த கதை பத்மம் சங்கு சக்ரம்
5 விஷ்ணு பத்மம் சங்கு சக்ரம் கதை
6 மதுசூதன் சங்கு பத்மம் கதை சக்ரம்
7 திரிவிக்ரம கதை சக்ரம் சங்கு பத்மம்
8 வாமன் சக்ரம் கதை பத்மம் சங்கு
9 ஸ்ரீதர சக்ரம் கதை சங்கு பத்மம்
10 ஹ்ரிஷிகேச சக்ரம் பத்மம் சங்கு கதை
11 பத்மநாப பத்மம் சக்ரம் கதை சங்கு
12 தாமோதர சங்கு கதை சக்ரம் பத்மம்
13 வாசுதேவ சங்கு சக்ரம் பத்மம் கதை
14 சங்கர்ஷண சங்கு பத்மம் சக்ரம் கதை
15 பிரத்யும்ன சங்கு கதை பத்மம் சக்ரம்
16 அநிருத்த கதை சங்கு பத்மம் சக்ரம்
17 புருஷோத்தம பத்மம் சங்கு கதை சக்ரம்
18 அதோக்ஷஜ கதை சங்கு சக்ரம் பத்மம்
19 நரசிம்ம பத்மம் கதை சங்கு சக்ரம்
20 அச்சுத பத்மம் சக்ரம் சங்கு கதை
21 ஜனார்தன சக்ரம் சங்கு கதை பத்மம்
22 உபேந்திர கதை சக்ரம் பத்மம் சங்கு
23 ஹரி சக்ரம் பத்மம் கதை சங்கு
24 கிருஷ்ண கதை பத்மம் சக்ரம் சங்கு

ஹொய்சளர்களின் அனைத்து விஷ்ணு கோவில்களிலும் இந்த 24 வடிவங்களையும் காணலாம். 24-ல் 23 வடிவங்கள் ஹொஸஹொளலு எனுமிடத்தில் உள்ள லக்ஷ்மிநாராயணர் கோவிலில் கிடைக்கின்றன. இவற்றைப் படமெடுத்து, தேடி, ஒழுங்குபடுத்திக் கொடுத்துள்ளது நண்பர் விகே ஶ்ரீனிவாசன்.

கேசவன் முதல் மதுசூதனன் வரை.

திரிவிக்ரமன் முதல் தாமோதரன் வரை.

வாசுதேவன் முதல் அதோக்ஷஜன் வரை.

நரசிம்மன் முதல் கிருஷ்ணன் வரை. இதில் உபேந்திரன் கிடைக்கவில்லை.

மேலே, திரிவிக்ரமனைக் குறிக்கையில் மூவுலகம் அளந்த கோலத்தையும், நரசிம்மனுக்கு சிம்ம முகத்தையும், வாசுதேவனுக்கு அமர்ந்த கோலத்தையும் இரு கைகள் ஆயுதங்களின்றி யோக முத்திரையிலும் இருப்பதையும் கவனிக்கவும். திரிவிக்ரமன், நரசிம்மன் ஆகியவை இங்கே விபவ அவதாரங்களைக் குறிப்பதில்லை என்றாலும் இவ்வாறு செய்துள்ளனர் என்பது சுவாரசியமே.

வைகுண்டச் சதுர்மூர்த்தி, சதுர்விம்ஸதி வடிவங்கள் பாஞ்சராத்ரத்தின் பிரத்யேகமான வடிவங்கள். இப்போது, வைகானசத்தின் வியூகக் கோவில்களைப் பார்ப்போம்.

வைகானச வியூகங்கள்

பாஞ்சராத்ரத்தில் எவ்வாறு பர வாசுதேவ வடிவம், வியூக வாசுதேவ, சங்கர்ஷண, பிரத்யும்ன, அநிருத்த வடிவங்களாக ஆகி, அங்கிருந்து வியூகாந்தர, வித்யேசுவர வடிவங்களாக, 24 விஷ்ணு வடிவங்களாக ஆயின என்று பார்த்தோம்.

வைகானசத்தில் பர வடிவத்துக்கு விஷ்ணு என்று பெயர். இந்த விஷ்ணுதான் பரப்ரம்மம். ஆதிமூர்த்தி. இந்த வடிவம், விஷ்ணு, மஹாவிஷ்ணு, சதாவிஷ்ணு, வ்யாபின் என்று நான்காக ஆகி, ஒவ்வொன்றிலிருந்தும் வியூக வடிவங்களான புருஷ, சத்ய, அச்யுத மற்றும் அநிருத்த ஆகியவை ஏற்படுகின்றன.

ஒரு கோவிலில் ஒரேயொரு கருவறை மட்டும் இருந்தால் அதில் விஷ்ணு எனும் ஆதிமூர்த்தி கிழக்கு நோக்கி அமைவார். இந்தக் கருவறையைச் சுற்றிய கோஷ்டங்களில் முன்புறம் கதவுக்கு அருகில் கிழக்கு நோக்கி புருஷ வடிவமும், சுற்றுச் சுவரில் தெற்கு நோக்கி சத்ய வடிவமும், மேற்கில் அச்யுத வடிவமும், வடக்கில் அநிருத்த வடிவமும் அமையப் பெறும். அநிருத்த வடிவம் மட்டும் ஆதிசேஷன்மீது அமர்ந்த நிலையில் இருக்கும். மற்ற வடிவங்கள் நின்ற நிலையிலோ அமர்ந்த நிலையிலோ இருக்கும்.

தரைத்தளத்தில் நான்கு கருவறைகளும் அதற்கு மேல் தளத்தில் ஒரு கருவறையும் இருந்தால், தரைத்தளத்தில் ஒவ்வொரு கருவறையிலும் புருஷ, சத்ய, அச்யுத, அநிருத்த வியூக வடிவங்களும், முதல் தளத்தில் அமர்ந்த நிலையில் ஆதிமூர்த்தி விஷ்ணுவின் பர வடிவமும் இருக்கும். இவ்வாறு ஐந்து பர, வியூக வடிவங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கு பஞ்ச மூர்த்தி பிரதிஷ்டை என்று பெயர்.

தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என ஆறு கருவறைகள் கொண்டிருந்தால் ஷண்மூர்த்தி பிரதிஷ்டை நடைபெறும். தரைத்தளத்தில் நான்கு வியூக வடிவங்கள் நின்ற நிலையில, முதல் தளத்தில் அமர்ந்த நிலையில் ஆதிமூர்த்தி விஷ்ணு, இரண்டாம் தளத்தில் சயனமூர்த்தி.

தரைத்தளத்தில் நான்கு கருவறைகள், முதல் தளத்தில் நான்கு கருவறைகள், இரண்டாம் தளத்தில் ஒரு கருவறை என்று இருந்தால், நவமூர்த்தி பிரதிஷ்டை நடைபெறும். தரைத்தளத்தில் நான்கு வியூக வடிவங்களான புருஷ, சத்ய, அச்யுத, அநிருத்த. முதல் தளத்தில் கிழக்கு நோக்கி ஆதிமூர்த்தி விஷ்ணு, தெற்கு நோக்கி நர நாராயண, மேற்கு நோக்கி நரசிம்ம, வடக்கு நோக்கி வராக பிரதிஷ்டை. இரண்டாம் தளத்தில் சயனமூர்த்தி. இப்படிப்பட்ட நவமூர்த்தி பிரதிஷ்டை உத்தரமேரூரில் காணப்படுகிறது.

இம்மாதிரியான கோவிலில் படிக்கட்டில் நிர்மாணிக்கப்படவேண்டிய சிற்பங்கள் குறித்தும் வைகானச சம்ஹிதைகள் குறிப்பிடுகின்றன. கிழக்கில் கஜலக்ஷ்மி, தெற்கில் வாக்தேவி, மேற்கில் மன்மதன், வடக்கில் முத்கல ரிஷி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரமேரூரில் தெற்கு, மேற்கு, வடக்கு சோபானபித்திச் சிற்பங்கள் கீழே.

கட்டுமானத்தில் சில மாற்றங்கள் செய்யும்போது கஜலக்ஷ்மியை வாக்தேவி இருக்கவேண்டிய இடத்தில் பிரதிஷ்டை செய்துவிட்டார்களோ என்ற சந்தேகம் வருகிறது.

0

விஷ்ணுவின் நின்ற, அமர்ந்த, கிடந்த திருக்கோலங்களையும், பர, வியூக, வியூகாந்தர வடிவங்களையும் வைகுண்ட சதுர்மூர்த்தி வடிவத்தையும் விரிவாகவே பார்த்தோம். விபவ அவதாரங்களில் முன்னமேயே வராஹ அவதாரத்தைத் தனியாகப் பார்த்துவிட்டோம். மேலும் சிலவற்றை வரும் வாரங்களில் காண்போம்.

சயன மூர்த்தியுடன் தொடர்புடைய ஒரேயொரு வடிவத்துடன் இந்தப் பகுதியை நிறைவு செய்வோம். கோபிநாத ராவ் இந்த வடிவத்தை ஜலசாயி என்று குறிப்பிடுகிறார்.

மஹாபிரளயத்தின் இறுதியில் விஷ்ணு ஆதிசேஷன்மீது சயனித்திருக்கிறார். சுற்றிலும் நீர். முக்கால்வாசி படுத்தும், கால்வாசி (தலைப்பகுதி) உயர்ந்தும் உள்ளார். கால்மாட்டில் ஶ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள். விஷ்ணுவின் ஒரு கால் அவள் மடியில் இருக்கிறது. மறு கால் முதல் காலுக்கு மேலாக உள்ளது. தலைமாட்டில் பூதேவி அமர்ந்திருக்கிறாள். ஆயுதங்களான சங்கு, சக்கரம், கதை ஆகியவை தனியாகப் பக்கத்தில் உள்ளன. விஷ்ணுவின் ஒரு கை உடலையொட்டி. மறுகை தலையைப் பிடித்தபடி. ஒரு கை கடக முத்திரையில். இன்னொரு கை மாலையைப் பற்றியுள்ளது. தொப்புளிலிருந்து தாமரை மலர், அதில் பிரமன் அமர்ந்திருக்கிறார். காலடியில் கருடன் நிற்கிறார். பிரமனுக்கு இருபுறமும் தசாவதாரங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் கிருஷ்ணருக்கு பதில் புத்தர் உள்ளார். மத்ஸ்யமும் கூர்மமும் விலங்குகளாகவும் கல்கி குதிரைமீது அமர்ந்தும் உள்ளார். விஷ்ணுவின் தலைமீது ஒரு ரிஷி அமர்ந்துள்ளது தெரிகிறது. கோபிநாத ராவ், அது மார்க்கண்டேயராக இருக்கவேண்டும் என்கிறார். பிரளயமே என்றாலும் அவர் சிரஞ்சீவி என்பதால்.

ஜலசயன மூர்த்தி, பாதாமி, படம் வி.கே. ஸ்ரீனிவாசன்

இந்தச் சிற்பம், பாதாமியில் ஓரிடத்தில் பாறையில் செதுக்கப்பட்டுக் கிடைக்கிறது.

(தொடரும்)

பகிர:
பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர். சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் இளநிலையும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியக் கணிதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். வரலாறு, தொழில்நுட்பம், இந்தியவியல் போன்ற துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *