சிறுமணவூர் முனுசாமி முதலியார், நடராஜ பத்து என்ற பெயரில் பத்து அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார். இந்தப் பத்து பாடல்களில் இரண்டாவது பாடல் இது:
மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட
கோனாட வானுலகு கூட்டமெலாமாட குஞ்சர முகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை முருகேசனாட
ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு முனியட்ட பாலகருமாட
நுரை தும்பை யறுகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட
வினை ஓட உனைப்பாட எனை நாடி யிதுவேளை விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனைஈன்ற தில்லைவாழ் நடராசனே
சிவன் ஆடுகிறார். அவரோடு அவர் கையில் ஏந்தியிருக்கும் மானும் மழுவும் ஆடுகின்றன. அவர் தலையில் சூடியிருக்கும் மதியும் கங்கைப் புனலும் ஆடுகின்றன. கூடவே சிவகாமி ஆடுகிறாள். பிரமன் ஆடுகிறார். திருமால் ஆடுகிறார். நான்மறைகளும் ஆடுகின்றன. குஞ்சர முகத்தானாகிய விநாயகர் ஆடுகிறார். குழந்தை முருகன் ஆடுகிறான். இவர்கள் மட்டுமா? ஞானசம்பந்தப் பெருமானும் கூட ஆடுகிறார். பதினெண் சித்தர்கள் ஆடுகிறார்கள். எண்திசைகளின் திக்பாலகர்கள் ஆடுகிறார்கள். நந்திப் பெருமான் ஆடுகிறார். அபசரஸ்கள் ஆடுகின்றனர். தில்லைவாழ் நடராசன் ஆடுகையில் இவ்வுலகில் ஆடாதவரே யாருமில்லை எனலாம்.
மேலே நீங்கள் காண்பது சாளுக்கியர்களின் பாதாமி குகைக்கோவிலில் குகை எண் ஒன்றில் உள்ளே நுழையும்போதே சிவன் நாட்டியமாடும் தோற்றத்தை. பதினாறு கரங்கள் கொண்டவராக ஆடல்வல்லான் இருக்கிறார். அவர் கையில் கொலைக்கருவிகளும் உள்ளன, இசைக்கருவிகளும் உள்ளன, நாட்டிய ஹஸ்த முத்திரைகளும் காட்டப்படுகின்றன. நந்தி வாகனமாக உள்ளது. பல்வேறு கடவுள்கள் இல்லை, சிவகாமியும் இல்லை. ஆனால் குஞ்சர முகத்தான் ஆடிக்கொண்டிருக்கிறார். அருகில் தோல்கருவியில் தாளம் இசைப்பவர் ஒருவரைக் காணமுடிகிறது.
வழிபடப்படும் பிரதிமைகளாக சிவனின் லிங்க வடிவத்தைப் பற்றிப் பார்த்தோம். தக்ஷிணாமூர்த்தி உருவத்தைப் பற்றியும் பார்த்தோம். லிங்கமாக அல்லாது, சிவனைக் கீழே தரப்பட்டுள்ள வடிவங்களில் வழிபடுகிறோம்:
- சம்ஹார மூர்த்தி: சிவன் அழிக்கும் கடவுளாக அல்லது அடக்கும் கடவுளாகக் காட்சிதரும் கோலம் இவை.
- அனுக்ரஹ மூர்த்தி: பக்தர்களுக்கும் பிற கடவுள்களுக்கும் அருள் தரக்கூடிய வடிவங்களாகக் காட்சிதரும் கோலங்கள் இவை.
- ந்ருத்த மூர்த்தி: சிவனின் நாட்டியமாடும் வடிவங்கள் இவை.
- பிற: மேலே சொன்ன மூன்று வகைகளிலும் இல்லாமல் சிவன் காட்சிதரும் பல வடிவங்கள் உள்ளன. உதாரணமாக சந்திரசேகர மூர்த்தி, ஆலிங்கன மூர்த்தி, ஹரிஹரன், அர்தநாரி போன்ற பல வடிவங்கள்.
இவை ஒவ்வொன்றையும் நாம் வரக்கூடிய வாரங்களில் பார்க்க உள்ளோம். இந்த வாரம் நாம் பார்க்க உள்ளது ந்ருத்த மூர்த்திகள். சிவனின் நாட்டிய வடிவங்கள்.
இந்திய மதச் சிற்பங்கள் அனைத்துமே ஒருவிதத்தில் நாட்டியத்துடன் தொடர்புடையவையே. கடவுள்களின் கைகள் நாட்டியத்தில் பின்பற்றப்படும் ஹஸ்த முத்திரைகளைக் காட்டுபவையே. அதேபோல நிற்கும் பாவனைகளும் நாட்டியத்தில் சொல்லப்படும் கரணங்களைக் காட்டுபவையே. நாட்டியத்தின் தலையாய நூலான பரதரின் நாட்டிய சாஸ்திரம் 108 கரணங்களைப் பற்றிப் பேசுகிறது. சைவ ஆகமங்கள், சிவன் இந்த 108 கரணங்களையும் ஆடியதாகச் சொல்கிறது. ஆனால் இவ்வாறு இருக்கும் 108 சிவன் சிற்பங்கள் நமக்குக் கிடைக்கவில்லை. விஜயநகர, நாயக்க காலங்களில் (15-ம் நூற்றாண்டு முதலாக) ஏற்கெனவே இருக்கும் கோவில்களுக்குப் பெரும் சுற்றுச் சுவர்களும் மாபெரும் கோபுரங்களும் கட்டப்பட்டன. சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில், நாட்டியப் பெண்டிர் 108 கரணங்களிலும் ஆடுவதுபோல் சிற்பங்கள் உள்ளன. அந்தச் சிற்பங்களுக்குக் கீழேயே நாட்டிய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள கரணங்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
சிவன் 108 கரணங்களையும் ஆடியதாகச் சொன்னாலும் சைவ ஆகமங்கள் சில ஆடல் வகைகளை மட்டுமே குறிப்பிட்டு விளக்கிச் சொல்கின்றன. மேலும் சிவன்தான் நாட்டியத்தை முதலில் உருவாக்கி, பிறருக்குக் கற்றுத் தந்தது என்ற கருத்தும் நிலவுகிறது. மாமல்லபுரத்தின் தர்மராஜ ரதத்தில் சில பிரத்யேகமான, வேறு எங்குமே காணக் கிடைக்காத சிற்பங்கள் சில உள்ளன. அதில் ஒன்று, சிவன் தண்டுவுக்கு நாட்டியம் கற்பிப்பது. தண்டு அவ்வாறு தான் கற்றுக்கொண்டதைப் பரப்பியதே தாண்டவம். கூடவே சிவன் வீணாதாரராக அதே ஒற்றைக்கல் தளியில் இசைப்பதையும் சேர்த்தாற்போல் மேலே காணலாம்.
பின்னால் வரப்போகும் பல ந்ருத்த மூர்த்திகளுக்கான தொடக்கமாக மாமல்லையின் உழக்கெண்ணெய் ஈசுவரர் கட்டுமானக் கோவிலில் நடனமாடும் சிவனின் சிற்பம் ஒன்று காணக்கிடைக்கிறது.
இந்த நடனம் நாட்டிய சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எதைப்போன்றுமே இல்லையே என்கிறார் கோபிநாத ராவ். ஆலிதாசனம் போன்ற ஒன்று என்கிறார். எட்டு கரங்கள், ஒரு கரம் கஜஹஸ்தம் போல் – தும்பிக்கை நீண்டிருப்பதுபோலும், ஒன்று பதாகம் போலவும், ஒன்று சதுரம் போலவும் உள்ளன என்கிறார். கைகளில் சில ஆயுதங்களும் உள்ளன. ஆனால் மேலே உழக்கெண்ணெய் ஈசுவரர் கோவிலில் சிற்பம் பல இடங்களில் தேய்ந்துபோயுள்ளது. முனைவர் நாகசுவாமி, இதனை தன் ஓவியப்பாவை நூலில் ‘அந்தி நடனம்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது சந்தியா தாண்டவம். முனைவர் துரை ரங்கசுவாமி, தன் ‘The Religion and Philosophy of Tēvāram’ என்ற புத்தகத்தில், சிவனார் ஆடும் பல ஆட்டங்களுமே அந்தி வேளையில் நடப்பதால், அவை அனைத்துமே சந்தியா தாண்டவங்களே என்று குறிப்பிடுகிறார். எனில் இதனை அந்தி நடனம் என்று வைத்துக்கொள்வோம். இதற்கு ஒப்பான நடனக் காட்சிகள் காஞ்சிபுரத்தில் பிறவாதீசுவரர் கோவிலிலும் கைலாசநாதர் கோவிலிலும் உள்ளன. பிறவாதீசுவரர் கோவிலில் தேய்ந்துபோன சிற்பம். ஆனால் கைலாசநாதர் கோவிலில் மிகச் சிறப்பாகத் தனித்து நிற்கக்கூடியதாக இருக்கிறது இந்தச் சிற்பம். இதனை நாகசுவாமி, ‘ஆடுகின்ற அண்ணலும் அமர்ந்து காணும் அன்னையும்’ என்று கவித்துவமாகக் குறிப்பிடுகிறார்.
முதலில் பிறவாதீசுவரர் சிற்பத்தைப் பார்ப்போம்.
அடுத்து, கைலாசநாதர் கோவில் சிற்பம்.
இங்கே எத்தனை எத்தனை காட்சிகள்! ஒரு பக்கம் அண்ணல், அந்தி நடனத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அருகில் நந்தி அமர்ந்திருக்க, அன்னையோ ஒயிலாக ஒரு கையைத் தரையில் அமர்த்தி, சாய்ந்தபடி அந்த நடனத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். கீழே சில கணங்கள் அண்ணலின் நடனத்தைப் பிரதியெடுக்க முனைந்துகொண்டிருக்கின்றன. அருகில் மத்தளத்தை ஒருவர் இசைக்க, கணங்கள் குழலையும் கிணியையும் இசைக்கின்றன. சிவனுடைய நாட்டியச் சிற்பங்களிலேயே மிகச் சிறந்ததும் தனித்துவம் வாய்ந்ததும் இந்தச் சிற்பமே என்று உறுதிபடக் கூறலாம்.
கைலாசநாதர் கோவிலில் மேலும் பல நடனக் காட்சிகள் உள்ளன. அதில் அடுத்ததாக நாம் பார்க்கவேண்டியது ஊர்த்வ தாண்டவம் எனப்படும் இந்தக் காட்சி.
சிவன் ஒரு காலைத் தரையில் ஊன்றியிருக்கிறார். மறு காலோ, நேராக மேலே எழும்பி (ஊர்த்வமாக), தலைக்குமேல் செல்கிறது. அருகில் நந்தியும் ஒரு கணமும் ஆடுகின்றனர். சிவனுக்கு இருபுறமும் விஷ்ணுவும் பிரம்மாவும் ஆச்சரியத்துடன் இந்த நடனத்தைக் காண்கின்றனர்.
காளி, தாருகாசுரன் என்பவனைக் கொன்றவுடன் உன்மத்தம் கொண்டவளாக, வெறி தலைக்கேறியவளாக இருக்கையில் அவளுடைய செருக்கை அடக்க சிவன் அங்கே வருகிறார். இருவருக்கும் நாட்டியப் போட்டி நடைபெறுகிறது. அப்போது சிவன் ஆடும் ஆட்டத்தில் காலை மேலே தூக்கி ஆடுகிறார். காளியால் முடியாமல் போகிறது.
ஆனால் மேலே சிவனது இந்த ஆட்டத்தில் கூடப் போட்டி போடும் காளியைக் காண முடிவதில்லை. பின்னர் நாம் பார்க்க இருக்கும் சில நாட்டிய சிவன் சிற்பங்களில் அருகில் காளி நடனமாடுவதைக் காண முடியும்.
இந்த நாட்டியத்தை பரதரின் நாட்டிய சாஸ்திரம், லலாட திலகம் என்று அழைக்கிறது. காலாலேயே நெற்றியில் பொட்டு இடுவதைக் குறிக்கிறது. சிவன் தன் காதில் உள்ள குண்டலங்களைக் காலாலேயே சரி செய்தார் என்பதாக ஒரு குறிப்பும் உண்டு.
இந்த நாட்டிய வடிவங்களுக்கான பெயர்களில் பல குழப்பங்கள் உள்ளன. இதற்குக் காரணம், பொதுவான நாட்டியங்களுக்கு பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் சில பெயர்கள் வழங்குகின்றன. சைவ ஆகமங்களில் சில நாட்டிய வகைகள் குறிப்பிடப்பட்டுள்ளன, ஆனால் நாட்டிய சாஸ்திரப் பெயர்கள் அவற்றில் இல்லை. தமிழ் சைவ இலக்கியங்களில் சில பெயர்களும் வகைமைகளும் வருகின்றன. தலபுராணங்கள் சில பெயர்களை வழங்குகின்றன. இவையெல்லாம் ஒத்துப்போவதில்லை.
நாம் அதிகம் பார்க்கும் நடராஜ வடிவம் குறித்து இன்னும் சற்று நேரத்தில் காண உள்ளோம். அதனை ஆனந்த தாண்டவம் என்று ஆகமங்கள் வழங்குகின்றன. இந்தக் குறிப்பிட்ட வடிவம் மகேந்திரவர்மனின் சீயமங்கலம் என்னும் குகைக்கோவிலில் முதன்முதலில் தென்படுகிறது. ஆனால் அதன்பின் பல்லவர்களின் எந்தவொரு குகைக்கோவிலிலும் காணப்படுவதில்லை. நாம் மேலே பார்த்த நடன வடிவங்கள்தாம் தென்படுகின்றன. ஆனால் பல்லவர் காலத்தைத் தாண்டி, சோழர்கள் காலம் வந்ததும், அதுவும் செம்பியன் மாதேவிகள் கோவில் எடுப்பிக்கத் தொடங்கியதும், கல்லில் ஆனந்த தாண்டவ நடராஜர் வடிவத்தை நாம் காணத் தொடங்குகிறோம். அது செப்புத் திருமேனிகளிலும் தொடர்கிறது. சோழர்கள் மட்டுமில்லாமல், பின்வந்த பாண்டிய, விஜயநகர, நாயக்க காலத்திலும் நடராஜ வடிவம் தமிழகமெங்கும் காணக் கிடைக்கின்றன.
பல்லவர் குகைகளிலும் கட்டுமானக் கோவில்களிலும் காணப்படும் நாட்டிய சிவ வடிவிலிருந்து வேறுபட்டதான ஒன்றே பாண்டியர் குகைக்கோவில்களில் கிடைக்கிறது. திருமலாபுரம், திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் இதனைக் காணலாம்.
மேலே நீங்கள் காண்பது திருமலாபுரம் நாட்டிய சிவனை. இங்கே கால்களை வைத்திருக்கும் பாணியில் ஒரு சாய்சதுர வடிவம் உருவாகிறது. இந்தவகை நாட்டியத்தை நாட்டிய சாஸ்திரம், சதுரம் என்கிறது.
தமிழகத்துக்கு வெளியே பல இடங்களில் நாட்டிய சிவனை நாம் காண்கிறோம். மேலே முதலில் பார்த்த பாதாமி சாளுக்கியச் சிற்பத்தைப் போன்றே, ஐஹொளே சாளுக்கியர் குகையில் காண முடிகிறது. பட்டதகல்லின் நாகரி கோவில்களின் முகப்பில் சிவனுடைய ஆடும் சிற்பம் காணப்படுகிறது.
ஒரு கையை கஜஹஸ்தமாக – நடராஜரை நினைவுபடுத்தும்படியாக – வைத்துக்கொண்டு நாட்டியமாடுகிறார் சிவன். ரிஷப வாகனத்தின்மீது சாந்தபடி நிற்கிறார். அருகில் சிவகாமி அம்மை, சாய்ந்தபடி நடனத்தைப் பார்க்கிறார். புவனேஸ்வரத்தில் வேதாள தேவன் கோவில் முகப்பில் இதற்கு இணையான ஒரு சிற்பத்தை நம்மால் காணமுடிகிறது.
கோபிநாத ராவ் இந்தவகை நடனத்தை லலிதம் என்கிறார். கால்கள் குட்டிதமாக இருக்கவேண்டும். அதாவது ஒரு கால் வலுவாகத் தரையில் ஊன்றியிருக்கவேண்டும். மறு கால் கட்டைவிரல் தரையைத் தொட்டுக்கொண்டிருக்கவேண்டும். குதிகால் தரையைத் தட்டத் தயாராக இருக்கவேண்டும். உடல் நன்கு வளைந்திருக்கவேண்டும்.
நாம் வட இந்தியாவில் காணும் பெரும்பாலான சிவ நர்த்தன வடிவங்கள் இவ்வகையைச் சார்ந்தவையே.
பட்டதகல் விரூபாக்ஷர் கோவிலில் மற்றுமொரு நாட்டிய வடிவம் கிடைக்கிறது.
ஒரு காலை முயலகன் (அபஸ்மாரன்) மீது ஊன்றி, ஒரு காலை நன்கு உயர்த்தி, ஒரு கை கஜஹஸ்தமாகவும் ஒரு கையில் உடுக்கை, ஒரு கையில் ரிஷபக்கொடியை ஏந்தியவாறும் உள்ள இந்த வடிவத்தை கோபிநாத ராவ், தலசம்ஸ்போடிதம் என்கிறார். ஒரு கால் கீழே இருக்க, மறு கால் தட் தட்டென்று தரையை அடிக்க ஆயத்தமாக இருப்பதுதான் இந்த வகை நாட்டியம்.
இங்கே தலசம்ஸ்போடிததம், லலிதம், சதுரம் முதலிய பெயர்கள் நாட்டிய சாஸ்திரத்தில் வரும் பெயர்களே. ஆகமங்களில் இந்தப் பெயர்கள் காணப்படுவதில்லை.
இப்போது நாம் ஆனந்த தாண்டவத்துக்கு வருவோம். இன்று உலகப் பிரசித்தி பெற்ற நடராஜர் சிலையின் வடிவம் இதுதான். தக்ஷிணாமூர்த்தி போலவே கிட்டத்தட்ட தமிழ்நாட்டுக்கு மட்டுமே பிரத்யேகமான ஒரு வடிவமாக இது விளங்குகிறது. இதன் முதற்கட்ட சிற்பம், சிறியதாக, மகேந்திரனின் சீயமங்கலம் குகைக்கோவிலில் காணக் கிடைக்கிறது.
ஒரு காலைத் தரையில் பதித்து, ஒரு காலைத் தூக்கி ஆடுகிறார் சிவன். கீழே ஒரு பாம்பு படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கிறது. அருகில் ஒரு கணம் மத்தளம் இசைக்க, இன்னொரு கணம் கைகூப்பி வணங்குகிறது. பிற்காலத்தில் கஜஹஸ்தமாக, உடலின் குறுக்காக ஒரு கை வரும். அது இங்கே இல்லை. வெறுமனே டோலஹஸ்தமாக தொங்கவிடப்பட்டுள்ளது. ஒரு கையில் நெருப்பு, சற்றே பெரிதாக. மறு கையில் மழு. தலையில் ஜடாமுடி விரித்து விடப்பட்டுள்ளது.
நாட்டிய சாஸ்திரம் இதனை புஜங்க த்ராஸிதம் என்று அழைக்கிறது. திடீரென ஒரு பாம்பு வந்துவிட்டால் பதறி ஒரு காலை மேலே தூக்கி நிற்பதுபோன்ற வடிவம் என்பதுதான் இதன் பொருள். புஜங்கம் என்றால் பாம்பு. ஒருவேளை அதைக் குறிப்பிடும் வண்ணம் கீழே தூக்கிய காலுக்கடியில் பாம்பைப் படமெடுத்து ஆடவிட்டார்களோ என்னவோ!
இங்கே காணப்பட்டாலும் அடுத்த சில நூற்றாண்டுகள் இந்த வடிவத்தைத் தமிழகத்தில் யாரும் கண்டுகொள்ளவில்லை.
சோழர்கள் காலத்தில் கட்டுமானக் கோவில்கள் கல்லில் வடிக்கப்படலாயின. முதலில் எளிமையான சிறு கருவறைகள், கோஷ்டங்களே இல்லாமல் உருவாயின. அடுத்து மூன்று கோஷ்டங்களுடன் கருவறைகள் மட்டுமே உள்ள கோவில்கள். அடுத்து சிறு அந்தராளம், அர்தமண்டபம் ஆகியவற்றுடன் ஐந்து கோஷ்டங்கள் கொண்ட கோவில்கள் உருவாயின. இந்த ஐந்து கோஷ்டங்களில் (கிழக்கு பார்த்த சிவன் கோவிலில்), தெற்கில் கணபதி, தக்ஷிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர் அல்லது மஹாவிஷ்ணு, வடக்கில் பிரம்மா, துர்கை ஆகியோர் அமைக்கப்பட்டனர்.
பின்னர் செம்பியன் மாதேவி ஏற்கெனவே உள்ள செங்கற்தளிகளைக் கற்றளிகளாக ஆக்கும்போதும் புதிய கோவில்களைக் கட்டும்போதும் அர்தமண்டபத்தை மேலும் விரிவாக்கி ஒன்பது கோஷ்டங்களை நிர்மாணிக்கச் செய்தார். இப்போது தெற்கில் இரண்டும் வடக்கில் இரண்டுமாக நான்கு புதிய கோஷ்டங்கள் கிடைத்தன. அவற்றில் எம்மாதிரியான சிற்பங்களை நிர்மாணிப்பது என்ற கேள்வி எழுந்தது.
தெற்கில் அகத்தியர் சிற்பமும் ஆடலரசன் (நடராஜர்) சிற்பமும் வைக்கப்படலாயின. வடக்கில் ரிஷபாந்திகர், ரிஷபாந்திக அர்தநாரி, கஜசம்ஹாரர், வீணாதாரர் போன்ற பல சிற்பங்கள் வரலாயின.
உத்தம சோழன் காலத்தில் கட்டப்பட்ட செம்பியன் மாதேவியின் பல கோவில்களைத் தொடர்ந்து, ராஜராஜனின் தஞ்சைப் பெரிய கோவில், ராஜேந்திரனின் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் என்று பெரும் கோவில்களில் தெற்குத் திசையில் நடராஜர் சிற்பங்கள் வரலாயின.
செம்பியன் மாதேவியின் காலத்தில்தான் உலோகத்தில் நடராஜர் சிற்பங்கள் உருவாக ஆரம்பித்தன. இன்று நாம் காணும் நடராஜர் சிற்பங்கள் அனைத்துமே ஒருவகையில் செம்பியன் மாதேவி கொடையில் முழுமையாக்கப்பட்ட சிற்ப வடிவம் என்றே சொல்லவேண்டும். முதலில் உத்தம சோழன் காலத்தில் செம்பியன் மாதேவியால் அவர் கணவர் கண்டராதித்தன் நினைவாகக் கட்டப்பட்ட கோனேரிராஜபுரத்துக் கோவிலில் உள்ள கல் நடராஜர் சிற்பத்தைக் காண்போம்.
புஜங்க த்ராஸித கரணத்தில் சிவபெருமான் ஆடிக்கொண்டிருக்கிறார். அவருடைய விரிசடையை நாம் காண்கிறோம். கஜஹஸ்தத்தில் பாம்பு வளைந்து சுருண்டபடி உள்ளது. அருகே காளி நடமாடுவதை நாம் காண்கிறோம். மற்றொருபுறம் பிருங்கி நடனமாடுகிறார். சிவனது இடதுபுறம் ரிஷபமும் சிவகாமி அம்மையும் நிற்கின்றனர். கீழே சில கணங்கள் இசைக்கருவிகளை வாசிக்கின்றன. வலப்புறம் வணங்கிக்கொண்டிருக்கிறார். கண்டராதித்தராகக்கூட இருக்கலாம்.
கோபிநாத ராவ், புஜங்க த்ராஸிதம் போலவே புஜங்க லலிதம் என்பதையும் குறிப்பிடுகிறார். இங்கே ஒரேயொரு மாற்றம்தான். தூக்கிய கால், நிலையான காலின் முழங்காலுக்குமேல் தூக்கப்பட்டிருந்தால் அது புஜங்க லலிதம். சற்று கீழாக இருந்தால் புஜங்க த்ராஸிதம்.
மேலே நீங்கள் பார்ப்பது தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் காணப்படும் நடராஜர் சிற்பம். முயலகன்மீது புஜங்க த்ராஸித கரணத்தில் ஆடிக்கொண்டிருக்கிறார் நடராஜர். கஜஹஸ்தமாக நீண்டிருக்கும் கையில் சுற்றியிருக்கும் பாம்பு. கீழே ஓர் அம்மை ஆச்சரியத்துடன் நடனத்தைக் கண்டு ரசிப்பதைக் காண்முடிகிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் இந்தச் சிற்பம் மேலும் சிறப்பைப் பெறுகிறது.
இங்கே முயலகன் மிகத் திருத்தமாக வடிக்கப்பட்டு, பாம்புடன் விளையாடிக்கொண்டிருக்கிறான். பின்புறம் காளியின் நடனம் தெரிகிறது. கூடவே இந்தப் படத்தில் பாதி மறைக்கப்பட்ட நிலையில் பிருங்கி நடனமாடுவதும் தெரிகிறது. காஞ்சி கைலாசநாதர் கோவிலைப் போன்றே அன்னை ரிஷபத்தின்மீது சாய்ந்து அண்ணலின் நாட்டியத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். தக்ஷிணாமூர்த்தியின் கல்லால மரம் போன்றே, அதே இலக்கணங்களுடன் கூடிய ஒரு மரத்தின் அடியில் நாட்டியம் நிகழ்கிறது. நடனத்தைக் காண முருகன் மயிலேறி வந்துள்ளார். அருகில் கணபதி மூஞ்சூறின்மீதேறி. கணங்கள் பல இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டிருக்கின்றன. நடராஜரின் பாதத்துக்குக்கீழே, பேயுருவம் கொண்ட பெண்ணொருத்தி, குச்சிக் கால்களுடனும் தொங்கும் முலையுடனும் கையில் கிணிகளைக் கொண்டு மோதி இசைக்கிறார். அவர்தான் காரைக்கால் அம்மையார். நாயன்மார்களில் தேவார மூவருக்கும் முன்னே தோன்றியவர். இவர் எழுதியவை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் என்று அழைக்கப்படுகிறது.
புனிதவதி என்ற இயற்பெயர் கொண்ட இவர் நாயன்மாராக ஏற்றம் பெற்ற கதையை இன்னொரு சமயத்தில் பார்க்கலாம். தன்னைப் பிற ஆண்கள் கண்ணுற்று ஆசைகொள்ளும் நிலை வரக்கூடாது என்பதற்காகவே உடலின் அழகு போய்ப் பேயுரு கிடைக்க ஈசனிடம் வரம் பெற்றவர் இவர். கயிலைக்குச் சென்று சிவனைக் காணும் பேறு பெற்ற இவர், ஈசன் வசிக்கும் இடத்தில் கால் படக்கூடாது என்பதற்காகவே தலையால் நடந்து சென்றார். அங்கிருந்து திருவாலங்காடு வந்து ஈசன் காளியுடன் நடத்திய நாட்டிய யுத்தத்தை மீண்டும் காண ஆசைப்பட்டார். காரைக்கால் அம்மையாருக்கெனவே அந்த நடனத்தை மீண்டும் நிகழ்த்திக் காட்டியதைத்தான் இங்கே ராஜேந்திர சோழன் தன் கோவிலில் சிற்பமாக வடிக்கச் செய்துள்ளான்.
ஆகமங்கள் இந்த நாட்டிய வடிவம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று சொல்கின்றன?
அம்சுமத்பேதாகமம், நடராஜரின் முன் இடது கரம் கஜஹஸ்தமாக இருக்கவேண்டும் என்கிறது. பின் இடது கரத்தில் அக்னி ஒரு பாத்திரத்தில் அல்லது நேராகக் கையிலேயே இருக்கவேண்டும். முன் வலதுகை அபய ஹஸ்தமாக இருக்கவேண்டும். இந்தக் கரத்தில் சர்ப்ப வளையம், பாம்பு சுருட்டியபடி இருக்கவேண்டும். பின் வலதுகையில் உடுக்கை. வலது கால் அபஸ்மாரன் (முயலகன்) மீது வைக்கப்படவேண்டும். இடது கால், உயரத் தூக்கி வலது காலுக்குக் குறுக்காக, புஜங்க த்ராஸித கரணத்தில் இருக்கவேண்டும். நடராஜரின் தலையில் ஜடாமகுடத்தில் ஊமத்தம்பூ, எருக்கம்பூ, ஒரு பாம்பு, அணிகலன்கள், சிரிக்கும் கபாலம்,பிறைச் சந்திரன், நாரை இறகுகள் (சில இடங்களில் மயிலிறகுகள் என்று வருகிறது) ஆகியவற்றைச் சூடியிருக்கவேண்டும். ஜடைகள் விரிக்கப்பட்டு ஐந்து, ஆறு, ஏழு, பதினொன்று என்று இழைகள் இருபுறமும் இருக்கவேண்டும். அல்லது சுற்றி வட்டமாகக் கட்டப்பட்டிருக்கலாம்.
உடலில் பூணூல், (யக்ஞோபவீதம்), மார்பில் உரஸ்ஸூத்ரம் எனும் பட்டை, நடுவிரல் தவிர அனைத்துக் கைவிரல்களிலும் கால்விரல்களிலும் வளையங்கள், காலில் சிலம்புகள், அணிந்திருக்கவேண்டும். முகம் சிரித்தபடி இருக்கவேண்டும். குமிழ் சிரிப்பாக இருந்தால் போதும். உடலெங்கும் திருநீறும், மார்பில் மட்டும் குங்குமக் குழம்பும் அணிந்திருக்கவேண்டும். இடையில் புலித்தோல்.
தாருகவனத்தில் மீமாம்சக ரிஷிகள் சிவனை அழிக்க யாகம் செய்தனர். அந்த யாகத்திலிருந்து பல்வேறு விலங்குகள் சிவனைத் தாக்க வந்தன. அவ்வாறு வந்த புலியைத் தன் நகங்களால் கீறித்தான் புலித்தோல் ஆடையை உருவாக்கி அணிந்தார் சிவன். அப்படித் தாக்க வந்த ஒருவன்தான் அபஸ்மாரன். அவனைக் கீழே தள்ளி அவன்மீது ஆடத் தொடங்கினார் சிவன். அவன் எழுந்திருக்க முனையும்போதெல்லாம் காலால் அவனை அழுத்தி மேலும் வேகமாக ஆடினார் அவர். இதனைக் குறிக்கும் வகையிலேயே அபஸ்மாரன்மீது நாட்டியமாடும் வகையில் நடராஜச் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அபஸ்மாரனின் தலை சிவனுடைய வலதுபக்கமும் கால்கள் இடதுபக்கமும் இருக்கவேண்டும். (சில இடங்களில் மாறியும் உள்ளது.) அவன் ஒரு கையில் பாம்பையும் இன்னொரு கையைக் குவித்து பாம்புபோல் வைத்துக்கொண்டிருக்கும் நாகமுத்திரையையும் கொண்டதாக இருக்கவேண்டும். மேலே சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள உலோகச் சிற்பத்திலிருந்து அபஸ்மாரனின் உருவத்தைப் பாருங்கள்.
நடராஜரின் இடதுபக்கம் பார்வதி நிற்கவேண்டும்.
உத்தர காமிகாமம் மேலே சொன்னதிலிருந்து மேலும் சிலவற்றைச் சேர்க்கிறது. ஜடையின் வலதுபக்கம், கங்கையை மேல்பாதிப் பெண்ணாகவும் கீழ்ப்பாதி ஓடும் ஆறாகவும் உருவகித்து, அவர் அஞ்சலி முத்திரையில் இருப்பதாகக் காண்பிக்கவேண்டும். கழுத்தில் பல கழுத்தணிகள் இருக்கவேண்டும். ஒன்று முத்தால் ஆனது. ஒன்று பாம்பால். மூன்றாவது வகுள மலர்களால் ஆன மாலை. நான்காவது மாலையில் கடல்சங்கு, காட்டுப்பன்றியின் கோரைப்பல், புலிநகம், மணிகள், ஆமை ஓட்டினால் செய்யப்பட்ட ஹாரம் ஆகியவை இருக்கவேண்டும். அவருடைய தோளின்மீது புலித்தோல், மான்தோல் அல்லது பருத்தியால் ஆன துணி இருக்கவேண்டும். இடது காதில் ஓலைக் குண்டலம், வலது காதில் மகர குண்டலம். கால்களில் சிறுசிறு மணிகள் பதித்த சிலம்பு. அவருடைய வண்ணம் வெண்மையாக இருக்கவேண்டும்.
நடராஜருக்கு இருபுறமும் காளியும் பிருங்கி முனிவரும் ஆடுவதுபோல அமைக்கப்படவேண்டும்.
சில்பரத்தினம், நடராஜரைச் சுற்றி சூரியனின் கதிர்களைப் போல பிரபாமண்டலம் அமைக்கப்படவேண்டும் என்கிறது. இவையெல்லாம் சேர்ந்த நடராஜ வடிவைத்தான் நாம் உலோகச் சிற்பங்களாகக் காண்கிறோம்.
வழிபாட்டில் இருக்கும் அனைத்து சிவன் கோவில்களிலும் நடராஜ, சிவகாமி செப்புத் திருமேனிகளைக் காணலாம். இதையே ஓவிய வடிவில் திருப்புடைமருதூர் கோவிலில் இருப்பதைக் கீழே காணலாம்.
இங்கே சிற்பத்துக்கான அதே இலக்கணம் ஓவியத்திலும் வந்துள்ளதைக் காணலாம். இடதுபுறம் சிவகாமி அம்மை. காலடியில் காரைக்கால் அம்மையார். வலப்புறம் பலர், முக்கியமாக வியாக்ரபாதர், பதஞ்சலி எனும் இரு முனிவர்கள்.
இந்தக் கட்டத்தில் நாம் தமிழகத்தில் வழக்கில் இருக்கும் கதைகளைக் கண்ணுறவேண்டும்.
தமிழகத்தில் முக்கியமான சிவத்தலம் சிதம்பரம். இங்கே பொன்னம்பலத்தில் நடராஜர் ஆடும் வடிவம் மிக முக்கியமானதாக வழிபடப்படுகிறது. தமிழகத்தில் ஐந்து சிவன் கோவில்கள் நடராஜ வடிவத்துக்கு முதன்மை பொருந்தியதாகக் கருதப்படுகின்றன. திருப்புத்தூர்ப் புராணம் என்ற நூல் புத்தூர் எனும் ஊரின் தலபுராணமாக அச்சிடப்பெற்றுள்ளது. அது புத்தூரையும் சேர்த்து ஆறு இடங்களில் நடராஜர் வடிவம் முக்கியத்துவம் பெறுவதாகச் சொல்கிறது.
- சிதம்பரம், கனகசபை (தமிழில் பொன்னம்பலம்), ஆனந்த தாண்டவம்
- மதுரை, ரஜதசபை (வெள்ளியம்பலம்), சந்தியா தாண்டவம்
- திருப்புத்தூர், சித்சபை, கௌரி தாண்டவம்
- திருக்குற்றாலம், சித்ரசபை, திரிபுர தாண்டவம்
- திருவாலங்காடு, ரத்னசபை, காளிகா தாண்டவம்
- திருநெல்வேலி, தாம்ரசபை, முனி தாண்டவம்
ஆனால் இந்த ஊர்க் கோவில்களின் தல புராணங்கள் வெவ்வேறு கதைகளைச் சொல்கின்றன. ‘கோயில் புராணம்’ எனும் நூல் சிதம்பரத்தில் கனகசபையில் நடைபெறும் ஆனந்த தாண்டவத்தை விவரிக்கிறது. தாருகவன ரிஷிகள் ஆபிசாரிக யாகம் நடத்தி சிவபெருமானைக் கொல்ல புலி, நெருப்பு, பாம்பு, அபஸ்மாரன் ஆகியோர் தொடங்கிப் பலரை அனுப்புகின்றனர். சிவபெருமானோ அவற்றையெல்லாம் விளையாட்டுப் பொருள்களாகக் கருதித் தன் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டு ஆட்டம் ஆடுகிறார். புலி கிழிபட்டு, ஆடையாகிறது. நெருப்பு கையில் சிறிய பொருளாக அடங்கிவிடுகிறது. பாம்பு சர்ப்ப வளையமாக. அபஸ்மாரன் ஆடும் களமாக ஆகிவிடுகிறான்.
இந்த ஆட்டத்தைப் பார்க்க விரும்பி, ஆதிசேஷன் சிவனை வேண்டிக் கேட்க, இந்தப் பிரபஞ்சத்தின் மையமான தில்லையில் நடராஜராக மீண்டும் ஆடிக் காண்பிக்கிறார் சிவன். வியாக்ரபாதரும் பதஞ்சலியும் இந்த ஆட்டத்தை எப்போதும் பார்த்தவண்ணம் இருக்கின்றனர்.
மதுரையின் புராணங்கள் எவையும் சந்தியா தாண்டவம் குறித்துப் பேசுவதில்லை. ஆனால் ‘கால் மாறி ஆடிய நடம்’ குறித்துப் பேசுகின்றன. மதுரையின் வெள்ளியம்பலத்தில், நடராஜர் இடது காலைக் கீழே வைத்து, வலது காலை உயர்த்தியவாறு உள்ளார். ஆனால் வேறு எந்த மாற்றமும் இல்லை.
திருக்குற்றாலத் தலபுராணம் ‘மஹா பரம ரஹஸ்யம்’ என்ற நாட்டியத்தைப் பற்றிப் பேசுகிறது. அண்ணல், எந்த ஜீவாத்மாவும் காண முடியாத பரவெளியில் சுத்த ஞானமாக ஆடும் ஆட்டத்தை, அன்னை மட்டுமே காண்கிறாள். அனைத்துப் பொருள்களும் இந்த ஆட்டத்தின் முடிவில் பரமனுடன் கலந்துவிடுகின்றன.
தேவர்களும் ரிஷிகளும் இந்த நடனத்தைக் காண ஆசைப்படுகின்றனர். வாசுகி எனும் பாம்பு கைலாயம் வந்து சிவனிடம் வேண்டுகிறான். எப்படி தில்லையில் ஆதிசேஷனுக்காக இறைவன் ஆனந்த தாண்டவத்தை நிகழ்த்தினானோ அதேபோல தேவர்களுக்காக இந்தப் பரம ரஹஸ்ய நடனத்தை நிகழ்த்திக் காட்டவேண்டும் என்கிறான். சிவன் வாசுகியிடம் தன் மற்ற நாட்டியங்களையெல்லாம் பற்றிப் பேசி, அவையெல்லாம் அனைவரும் காணக் கூடியது, ஆனால் பரம ரஹஸ்ய நாட்டியம் அன்னை பார்வதிக்காக மட்டுமேயானது என்கிறான். இதையடுத்து வாசுகி தவம் செய்கிறான். எனவே சிவன் இறங்கிவந்து ரஹஸ்ய நடனத்தை நிகழ்த்திக் காட்டுகிறார். அதை பிரமன் ஓவியமாக குற்றாலத்தின் சித்ரசபையில் வரைந்துவைக்கிறான். இதுதான் தலபுராணத்தில் சொல்லப்படுவது.
துரை ரங்கசுவாமி, ஆகமங்களில் கூறப்பட்டுள்ள ஆட்ட வடிவங்களை நாட்டிய சாஸ்திரத்திலும் திருப்புத்தூர்ப் புராணத்தில் சொல்லப்பட்டவற்றையும் இணைத்துப் பார்க்கிறார்.
- காளிகா தாண்டவம் என்பது ஆக்கலின் நடனம். சதுரமும் கடிசமமும் இந்த வகையைச் சேர்ந்தவை.
- கௌரி தாண்டவமும் புஜங்க த்ராஸமும் காத்தலின் நடனம். இவற்றுக்கு ரக்ஷா தாண்டவம், லக்ஷ்மீ தாண்டவம் என்றும் பெயர். ஊர்த்வஜானு என்பது இந்த வகை.
- சந்த்யா தாண்டவம் என்பதும் காத்தலின் நடனம். லலிதம் இந்த வகையைச் சேர்ந்தது.
- சங்கார தாண்டவம் என்பது அழித்தலின் நடனம். தலசம்ஸ்போடிதம் என்பது இந்த வகை.
- திரிபுர தாண்டவம் என்பது துடைத்தெடுத்தலின் நடனம்.
- ஊர்த்வ தாண்டவம் என்பது அருள்தலின் நடனம். இதற்கு காளி தாண்டவம் அல்லது சண்ட தாண்டவம் என்றும் பெயர்.
சங்க இலக்கியங்களில் கலித்தொகையின் கடவுள் வாழ்த்துப் பகுதியில் சிவனுடைய சில நாட்டிய வடிவங்கள் பேசப்படுகின்றன. அந்தப் பாடலை முழுமையாகப் பார்ப்போம்:
ஆறறி அந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து,
தேறுநீர் சடைக் கரந்து திரிபுரம் தீமடுத்துக்
கூறாமல் குறித்ததன்மேல் செல்லும் கடும்கூளி,
மாறாப்போர் மணிமிடற்று எண்கையாய் கேளினி
படுபறை பலஇயம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ
கொடுகொட்டி ஆடும்கால் கோடுயர் அகலல்குல்
கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ
மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணையெழில் அணைமென்தோள்
வண்டரற்றும் கூந்தலாள் வளர்தூக்கு தருவாளோ
கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவல்புரளத்
தலையங்கை கொண்டுநீ காபாலம் ஆடும்கால்,
முலையணிந்த முறுவலாள் முன்பாணி தருவாளோ
என ஆங்கு
பாணியும் தூக்கும் சீரும் என்றிவை
மாணிழை அரிவை காப்ப
ஆணமில் பொருளெமக்கு அமர்ந்தனை ஆடி
ஆறு வேதாங்கங்களை நன்கு கற்றறிந்த அந்தணர்களுக்கு வேதங்களை மொழிந்தவனே, தலையில் கங்கையை வைத்திருப்பவனே, முப்புரங்களையும் தன் சிரிப்பினாலேயே அழித்தவனே, நீ உண்ட விஷம் கழுத்திலே தங்கிப்போனதால் நீல மணிபோன்ற நிறம் கொண்ட கழுத்தை உடையவனே, எட்டு கரங்களைக் கொண்டவனே!
பலவிதமான பறைகள் தாள ஓசை எழுப்ப, பல உருவங்களை எடுத்துக்கொண்டு நீ கொடுகொட்டி எனும் நாட்டியத்தை ஆடும்போது அழகிய கொடிபோன்ற இடுப்பை உடையவளான உமையாள் சீர் எனும் இசைப்பாடலை இசைப்பாளா?
உடல் முழுதும் நீறைப் பூசிக்கொண்டு பாண்டரங்கம் எனும் நடனத்தை அண்ணலே நீ ஆடும்போது வண்டுகள் மொய்க்கும் பூங்களை அணிந்த கூந்தலை உடைய அன்னையானவள் தூக்கு என்னும் இசையை இசைப்பாளா?
தாருகவனத்தில் உன்னைத் தாக்கவந்த புலியை நகத்தால் உரித்து உடலில் அணிந்து கொன்றை மலர்களைச் சூடி உன் அழகிய கையிலே மண்டையோட்டை வைத்துக்கொண்டு காபாலம் எனும் நாட்டியத்தை நீ ஆடுகையில் அழகிய சிரிப்பையுடைய பார்வதியானவள் பாணி எனும் பாடலைப் பாடிக்கொண்டிருப்பாளா?
இவ்வாறு அன்னை, பாணி, தூக்கு, சீர் ஆகியவற்றைத் தன் கையில் எடுத்துக்கொள்ள, சிறுமையே இல்லாத சீரிய பொருளான நீ ஆடுகிறாய்!
சகோதரர்களான முனைவர் ராமசேஷன், வலையப்பேட்டை கிருஷ்ணன் ஆகியோர் ‘மகேச்வர வடிவங்கள்’ எனும் அருமையான புத்தகத்தை எழுதியுள்ளனர். சதாசிவனான சிவனுக்கு ஐந்து முகங்கள் – கிழக்கு பார்த்த தத்புருஷம், தெற்கு பார்த்த அகோரம், மேற்கு பார்த்த சத்யோஜாதம், வடக்கு பார்த்த வாமதேவம், ஆகாயம் பார்த்த ஈசானம். (முகலிங்கம் குறித்துப் பார்த்தபோது இதனை நாம் கண்டிருந்தோம்.) இந்த ஒவ்வொரு முகத்திலிருந்தும்தான் சைவாகமங்களான 28 ஆகமங்களும் தோன்றின என்பது ஐதீகம்.
இந்த முகம் ஒவ்வொன்றிலிருந்தும் ஐந்தைந்து மூர்த்திகள் தோன்றின.
- ஈசான மூர்த்தி => சோமாஸ்கந்தர், நிருத்த மூர்த்தியான நடராஜர், ரிஷபாரூடர், கல்யாணசுந்தரர், சந்திரசேகரர்.
- தத்புருஷ மூர்த்தி => பிக்ஷாடனர், காமதகனர், காலாரி, ஜலந்தரவதர், திரிபுராந்தகர்
- அகோர மூர்த்தி => கஜசம்ஹாரர், வீரபத்திரர், தக்ஷிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, விஷாபஹரணர்
- சத்யோஜாத மூர்த்தி => லிங்கோத்பவர், சுகாஸனர், உமாசஹிதர், ஹரிஹரர், அர்தநாரீ
- வாமதேவ மூர்த்தி => கங்காளர், சக்ரதானர், கஜமுக அனுக்ரஹர், சண்டேச அனுக்ரஹர், ஏகபாதர்
இந்த இருபத்தைந்து மூர்த்தங்கள் குறித்தும் இந்தத் தொடரில் காணப்போகிறோம்.
தம் புத்தகத்தில் ராமசேஷனும் கிருஷ்ணனும் இந்த மூர்த்தங்கள் குறித்து விரிவாக எழுதியுள்ளனர். நடன மூர்த்தி குறித்து எழுதுகையில் கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் ஆகிய நடனங்கள் குறித்து விவரிக்கின்றனர்.
உமை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கையில், அண்ணல் அவுணர்களை அழித்தபிறகு போர்க்களத்தில் அச்சம், வியப்பு, விருப்பு, அழகு முதலிய மெய்ப்பாடுகளைக் காண்பித்தபடி ஆடிய ஆட்டம் கொடுகொட்டி. சிலப்பதிகாரத்தில், கூத்தச் சாகையர் ஆடும் கூத்துகள் என்று நடுகற்காதையில் கொட்டிச் சேதம் என்ற பெயரில் கொடுக்கப்பட்டிருப்பதும் இந்த நாட்டியமே.
திரிபுரம் எரித்தகாலத்தில் ஊழிக்காலக் காற்றைப்போல் சுழன்று ஆடிய கூத்து பாண்டரங்கம் எனப்படும்.
பிரமனுடைய தலையைக் கிள்ளியபின் அந்தத் தலையைக் கையில் வைத்துக்கொண்டு ஆடிய கூத்து காபாலம் எனப்படும்.
திருமூலர் தன் திருமந்திரத்தில் கொடுகொட்டி, பாண்டரங்கம் ஆகியவற்றைச் சுட்டுவதை ராமசேஷனும் கிருஷ்ணனும் எடுத்துக் காட்டுகின்றனர்.
கொடுகொட்டி பாண்டரங் கோடு சங்கார
நடமெட்டோ டைந்தாறு நாடியுள் நாடும்
திடமுற் றெழுந்தேவ தாருவாம் தில்லை
வடமுற்ற மாவன மன்னவன் தானே
என்கிறார் திருமூலர். கொடுகொட்டியும் பாண்டரங்கமும் மட்டுமல்ல, எட்டு சங்கார நடனங்கள், முப்பது வேறுவகை நடனங்கள் என்று 40 வகை நடனங்களை சிவபெருமான் ஆடுகின்றார் என்பது திருமூலர் வாக்கு.
நடராஜர் சிற்பம் குறித்துத் தனியாகப் பேசும் ராமசேஷனும் கிருஷ்ணனும் அப்பர் பெருமானின் அற்புதமான இந்தப் பாடலை முன்வைத்து விளக்குகிறார்.
குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே
குனித்த புருவம் என்பது பரதக்கலையின் மெய்ப்பாடை உணர்த்துவது.
குமிண் சிரிப்பு, தன்னை அடைக்கலம் புகுந்தோரை அருளோடு வரவேற்று, பிழைபொறுத்து, வாழ்வளிக்கும் மாட்சியைக் குறிப்பது. கீழே நீங்கள் காண்பது சென்னை அருங்காட்சியகத்தில் காணப்படும் திருவாலங்காடு நடராஜர் பிரதிமையின் முகம் மட்டும். குமிழ் சிரிப்பை அப்படியே செப்பு வார்ப்பில் கொண்டுவந்துவிட்ட சிற்பியின் திறன் என்னே!
பனித்த சடை, சிவநெறிக்கு உரிய தவ ஒழுக்கச் சிறப்பைக் காட்டுகிறது. புறநானூறு ‘தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோன்’ என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்க.
பவளமேனி, இறைவனின் தீ போன்ற வண்ணத்தைக் குறிக்கிறது. தன்பால் எய்தும் பொருள்களையெல்லாம் தூய்மையாக்கிப் புனிதம் அடையச் செய்வதுபோல, அடியார்களின் மலமான மாசுகளை நீக்கி மாண்புறச் செய்யும் அருள் திறனைக் குறிக்கிறது.
பால்வெண்ணீறு, தூய இயல்பினையும் அழியாத் தன்மையையும் குறிக்கிறது. செந்நிற மேனியில் வெண்ணீறு அணிந்த கோலம் எவரையும் ஈர்க்கவல்லது. ஆகமங்கள் நடராஜ மேனியில் வெண்ணீறு பூசியிருக்கவேண்டும் என்பதைக் கணக்கில் கொள்க.
இனித்தமுடைய எடுத்த பொற்பாதம் என்பது இறைவனின் தூக்கிய இடது பாதம். அப்பர் இன்னோர் இடத்தில், ‘ஆட எடுத்திட்ட பாதமன்றோ நம்மை ஆட்கொண்டதே’ என்று பாடுகிறார். தொண்டர்களை கரை ஏற்ற தூக்கிய பாதம் இது.
சிவனுடைய நடனத் திருமேனிகளைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் ஒரேயொரு மூர்த்தியை மட்டும் இறுதியாகப் பார்ப்போம்.
மேலே நீங்கள் காண்பது வங்காளத்தைச் சேர்ந்த பாலர் கலை அமைப்பு. ஆனால் இந்தச் சிற்பம் இருப்பதுவோ மேலக்கடம்பூர் என்னும் ஊரில் உள்ள அமிர்தகடேசுவரர் கோவில் எனப்படும் முதலாம் குலோத்துங்கன் கால ரத வடிவிலான கோவிலில். தேவாரத் தலமாக இந்தக் கோவில் இருப்பதனால் இங்கு ஏற்கெனவே ஒரு கோவில் இருந்து, முதலாம் குலோத்துங்கன் காலத்தில் மீண்டும் எடுத்துக் கட்டுவிக்கப்பட்டிருக்கவேண்டும். இந்தக் கோவிலில் பிரதோஷ தினத்தன்று மட்டுமே மேலே நீங்கள் பார்க்கும் சதுர தாண்டவ மூர்த்தி ராஜேந்திர சோழன் கங்கை கொள்ளச் சென்ற போரில் கைப்பற்றப்பட்டு எடுத்துவந்த சிற்பம் என்று கருதப்படுகிறது. வங்காளப் பாலர்களின் கற்சிற்பங்களும் இதேபோன்ற வடிவம் கொண்டவையே. பத்து கரங்கள். அவற்றில் ஆயுதங்கள். ஒரு கரம் பதாகமாகவும் ஒரு கரம் கஜஹஸ்தமாகவும். நின்று ஆடுவது நந்தியின்மீது. சுற்றிலும் கணங்கள் இசைக்க, நாட்டியமாட, இந்த முழுச் சிற்பத்தையும் தூக்கிச் செல்லும் கணங்களும் ஆடிக்கொண்டே செல்கிறார்கள்.
எட்டி இலவம் ஈகை சூரை காரை படர்ந்தெங்கும்
சுட்ட சுடலை சூழ்ந்த கள்ளி சோர்ந்த குடர்கெளவப்
பட்ட பிணங்கள் பரந்த காட்டிற் பறைபோல் விழிகட்பேய்
கொட்ட முழவங் கூளி பாடக் குழகன் ஆடுமே
என்னும் காரைக்கால் அம்மையின் பாடலுடன் இந்தப் பகுதியை நிறைவுசெய்வோம்!
(தொடரும்)
மிகவும் அருமை. நீங்கள் கூறியது போல் சிவனுடைய நடனம் பற்றி இன்னும் வேண்டும் என்று தோன்றுகிறது. தொடக்கமான நடராஜர் பத்து சரியாக பொருந்தியதை இங்கு குறிப்பிட வேண்டும்.
“கிழக்கு தளத்தில்” மிக சிறப்பான கட்டுரைகள். உங்களை போன்றவர்கள் ஆற்றும் பணி தமிழுக்கும் தமிழ் அரசியலுக்கும் மத்தியில் மிகவும் தேவை