Skip to content
Home » கல்லும் கலையும் #11 – திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்

கல்லும் கலையும் #11 – திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்

நரசிம்மர்

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு

போதரும் சிங்கத்தைப் பற்றி ஆண்டாள் பாடுகிறாள். இவ்வாறு புறப்படும் சிங்கத்தை மணிவண்ணன், நாராயணனுக்கு ஒப்புமைப்படுத்துகிறாள் ஆண்டாள்.

மழைக்காலம். ஒரு மலைக்குகை. அதனுள் ஒரு சிங்கம் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கிறது. அது சீரிய சிங்கம். காட்டின் அரசன். எனவே அதற்குப் பயமில்லை. எனவே ஆழ்ந்த தூக்கம். திடீரென அறிவுறுகிறது. தூக்கத்திலிருந்து விழித்துக்கொள்கிறது. தீவிழிக்கிறது. கண்கள் இரண்டும் தீக்கங்குகள் போல ஜொலிக்கின்றன. அப்படியே எழுந்து நிற்கிறது. பிடரிமயிர் சிலிர்க்கத் தன் உடலை ஒரு குலுக்கு குலுக்கி சோம்பல் முறிக்கிறது. மூரி நிமிர்கிறது. உடலைப் பின்னிலிருந்து முன்னோக்கி நகர்த்தித் தலை இடலினின்றும் எழும்பி மேலே உயர்கிறது. ஒரு கர்ஜனை. காட்டுயிர்களையெல்லாம் அதிர்ந்து நடுநடுங்கவைக்கும் முழக்கம். புறப்படுகிறது. வேட்டைக்கு.

நரசிம்மத்துக்கு இம்மாதிரி பொறுமையாக, தன் இரையைத் தானே தேடி, வேட்டையாடும் வாய்ப்பு இல்லை. பெரும் காடு இல்லை வேட்டையாட. தூணா, துரும்பா, எங்கேயிருந்து வெளிப்படவேண்டும் என்பது தெரியாத நிலை.

கதையின் தொடக்கத்துக்குச் செல்வோம்.

கஷ்யபர், திதி ஆகியோரின் மைந்தர்கள் பலர். ஆனால் இருவர் முக்கியம். ஒருவன் ஹிரண்யாக்ஷன். ஏற்கெனவே வராக அவதாரத்தின்போது இவனைப் பார்த்தோம். விஷ்ணு காட்டுப்பன்றி உருவத்தில் தோன்றி இவனைக் கொன்றார். ஹிரண்யாக்ஷனின் தம்பி ஹிரண்யகஷிபுவுக்கு அப்போதிலிருந்தே விஷ்ணுவின்மீது கடும் வெறுப்பு.

பிரமனை நோக்கிக் கடும் தவம் செய்து நிறையச் சக்திகளைப் பெற்றுக்கொண்டான்.

ஒரு கட்டடத்தின் உள்ளேயோ வெளியேயோ தனக்கு மரணம் வரக்கூடாது; இரவிலோ பகலிலோ மரணம் கூடாது; பிரமனால் உருவாக்கப்பட்ட யாராலும் மரணம் வரக்கூடாது; தரையிலும் மரணம் கூடாது, ஆகாசத்திலும் கூடாது; மனிதர்களாலும் கூடாது, மிருகங்களினாலும் கூடாது; தேவர்களாலும், அசுரர்களாலும், பாம்புகளாலும் மரணம் கூடாது; உயிருள்ளோராலும் கூடாது, இறந்தோராலும் கூடாது; தன் வலிமை அளவுக்கு யாருக்கும் இருக்கக்கூடாது; தான் ஒருவன் மட்டும்தான் இவ்வுலகில் உள்ள உயிர்கள் அனைத்தையும் ஆட்சி புரிபவனாக இருக்கவேண்டும்.

இவைதான் ஹிரண்யகஷிபு பிரமனிடம் பெற்றுக்கொண்ட வரங்கள். கம்பன் இவற்றை மிக அழகாக விளக்குவார்:

பெண்ணில் பேர் எழில் ஆணினில் அலியினில் பிறிதும்
உண்ணிற்கும் உயிர் உள்ளதில் இல்லதில் உலவான்
கண்ணில் காண்பன கருதுவ யாவினும் கழியான்
மண்ணில் சாகிலன் வானிலும் சாகிலன் வரத்தால்

தேவர் ஆயினர் ஏவரும் சேணிடைத் திரியும்
யாவரேயும் மற்று எண்ணுதற்கு அரியராய் இயன்ற
கோவை மால் அயன் மான் இடன் யாவரும் கொல்ல
ஆவி தீர்கிலன் ஆற்றலும் தீர்கிலன் அனையான்

நீரின் சாகிலன் நெருப்பினும் சாகிலன் நிமிர்ந்த
மாருதத்தினும் மண்ணின் மற்று எவற்றினும் மாளான்
ஓரும் தேவரும் முனிவரும் பிறர்களும் உரைப்பச்
சாரும் சாபமும் அன்னவன்தனைச் சென்று சாரா

உள்ளில் சாகிலன் புறத்தினும் உலக்கிலன் உலவாக்
கொள்ளைத் தெய்வ வான் படைக்கலம் யாவையும் கொல்லா
நள்ளின் சாகிலன் பகலிடைச் சாகிலன் நமனார்
கொள்ளச் சாகிலன் ஆர் இனி அவன் உயிர் கொள்வார்

எல்லாக் கதைகளிலும் வருவதைப் போன்றே, வரங்களைப் பெற்றுக்கொண்ட ஹிரண்யன் தன் ஆட்டத்தைத் தொடங்கலானான். மூவுலகங்களிலும் உள்ள அனைவரையும் வென்றான். தேவதச்சன் விஸ்வகர்மாவைக் கொண்டு தனக்கென மாபெரும் மாளிகை ஒன்றைக் கட்டிக்கொண்டான். தேவர்களைத் துன்புறுத்தினான். பிரமன், விஷ்ணு, சிவன் எனும் மூவர் தவிர மற்ற அனைத்து தேவர்களையும் தன் அரண்மனை வாசலில் காத்துக்கிடக்க வைத்தான். தும்புருவும் நாரதரும் அவனுக்கு இசைக்கவேண்டும். இந்திரனின் சிம்மாசனத்தைப் பிடுங்கிக்கொண்டு அதில்தான் அமர்ந்தான். கந்தர்வர்கள், சித்தர்கள், முனிவர்கள், வித்யாதரர்கள், அப்சரஸ்கள் ஆகியோர் அவனைத் துதித்துக்கொண்டே இருக்கவேண்டும். யாகங்களிலிருந்து வரும் பலனை தேவர்களுக்குத் தராமல் அனைத்தையும் ஹிரண்யனே எடுத்துக்கொண்டான்.

இவ்வாறு பல யுகங்கள் கழிந்தன.

தாங்கமுடியாத துன்பத்தால் தேவர்கள் அனைவரும் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். விஷ்ணு அவர்களிடம், எப்போது ஹிரண்யகஷிபு தன் மகன் பிரஹ்லாதனுக்குத் துன்பம் தர முற்படுகிறானோ, அப்போது நான் தலையிட்டு அவனை அழிப்பேன் என்று வாக்களித்தார்.

0

ஹிரண்யகஷிபுவுக்கு நான்கு மகன்கள் இருந்தனர். அனுஹ்லாதா, ஹ்லாதா, ப்ரஹ்லாதா, சன்ஹ்லாதா என்போரே அவர்கள் என்று விஷ்ணு புராணம் அவர்களுடைய பெயர்களைத் தருகிறது. ஆனால் இந்த நால்வரில் ப்ரஹ்லாதன் மட்டுமே விஷ்ணுமீது அளவற்ற பக்தி வைத்திருந்தான். இது எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விஷ்ணு புராணம் சொல்வதில்லை. பாகவத புராணம் இந்தப் பகுதியை விரிவாக்கித் தருகிறது.

ஹிரண்யகஷிபு தவம் செய்ய மந்தர மலைக்குச் சென்றிருந்தபோது இந்திரன் தலைமையில் தேவர்கள் ஹிரண்யனுடைய நகரின்மீது படையெடுத்து வந்தனர். இந்திரன் ஹிரண்யனின் மனைவியைப் பிடித்துக்கொண்டான். அவள் அப்போது கர்ப்பமாக இருந்தாள். அவளையும் அவள் வயிற்றில் இருந்த குழந்தையையும் கொன்றுவிடும் முடிவில் இருந்தான் இந்திரன். அப்போது நாரதர் அங்கே வந்தார். வயிற்றில் உள்ள குழந்தை எந்தக் குற்றமும் செய்யாதது; அதனைக் கொலை செய்தல் தகுமன்று என்று அவனைத் தடுத்தார். அவர் சொல்லைக் கேட்டு இந்திரனும் அவர்களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டான். ஹிரண்யன் திரும்ப வரும்வரை அவர்களைத் தன்னிடத்திலேயே வைத்துப் பார்த்துக்கொண்டார் நாரதர்.

ப்ரஹ்லாதன் பிறந்ததும், நாரதர் ப்ரஹ்லாதனுக்கும் அவனுடைய தாய்க்கும் விஷ்ணுவை வழிபடுதல் குறித்தும் விஷ்ணுவின் தன்மைகள் குறித்தும் பல விஷயங்களைப் போதித்தார். அதன்பின் அவர்கள் ஹிரண்யனைச் சென்று சேர்ந்துகொண்டனர். ப்ரஹ்லாதனின் தாய் நாரதர் சொன்னதை மறந்துவிட்டாள். ஆனால் ப்ரஹ்லாதன் மறக்கவில்லை. பிறந்த நாள் முதலாகவே அவன் விஷ்ணு பக்தனாக இருந்தான்.

0

குழந்தைகள் அனைவரும் அசுர குரு சுக்ரனின் மகனிடம் பாடம் பயின்றுவந்தனர். ஒருநாள் ஹிரண்யன் ப்ரஹ்லாதனை அழைத்து, மடியில் கிடத்தி, இதுவரை என்ன கற்றுவந்திருக்கிறாய் என்று சொல் எனக் கேட்டான். ப்ரஹ்லாதனோ விரிவாக விஷ்ணுமீது ஒன்பது வகைகளில் எப்படி பக்தி செலுத்துவது என்று விவரித்தான். கொதித்தெழுந்த ஹிரண்யன் சுக்ரனின் மகனிடம் இதெப்படி நடந்தது என்று கடுமையாகக் கேட்டான். அவனோ நடுநடுங்கிப்போய், ‘ஐயா, இதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. இவ்வாறு நான் ஒருபோதும் கற்றுக்கொடுக்கவில்லை. அவனாகவோ இப்படியெல்லாம் பேசுகிறான்’ என்றான்.

‘நீ கற்றுக்கொடுக்கவில்லை என்றால் இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது?’ என்று வினவினான் ஹிரண்யன். ‘இதெல்லாம் இன்னொருவர் சொல்லிக்கொடுத்து வருவதில்லை. நாமே முயன்றாலும் வராது. விஷ்ணுவின் அருள் இருந்து அவருடைய கடைக்கண் பார்வை நம்மீது படுவதால் மட்டுமே விஷ்ணுவைக் குறித்த புரிதல் நமக்கு வரும்’ என்னும் ப்ரஹ்லாதன் விஷ்ணுவைக் குறித்து மேலும் விளக்கலானான்.

காலமும் கருவியும் இடனும் ஆய் கடைப்
பாலமை பயனும் ஆய் பயன் துய்ப்பானும் ஆய்
சீலமும் அவை தரும் திருவும் ஆய் உளன்
ஆலமும் வித்தும் ஒத்து அடங்கும் ஆண்மையான்

ஓம் எனும் ஓர் எழுத்து அதனின் உள் உயிர்
ஆம் அவன் அறிவினுக்கு அறிவும் ஆயினான்
தாம மூஉலகமும் தழுவிச் சார்தலால்
தூமமும் கனலும்போல் தொடர்ந்த தோற்றத்தான்

இன்னது ஓர் தன்மையன் இகழ்வுற்று எய்திய
நல் நெடுஞ் செல்வமும் நாளும் நாம் அற
மன்னுயிர் இழத்தி என்று இறைஞ்சி வாழ்த்தினேன்
சொன்னவன் நாமம் என்று உணரச் சொல்லினான்

இதற்குமேல் ஹிரண்யனுக்குப் பொறுக்கவில்லை. ‘மகன் செய்தது பெருங்குற்றம், அவனைக் கொன்றிடுக’ என்று தன் சேவகர்களுக்கு ஆணையிட்டான்.

உடனே அசுரர்கள் தங்கள் திரிசூலங்களால் ப்ரஹ்லாதனைத் துளைத்தெடுத்தனர். ஆனால் ப்ரஹ்லாதனுக்கோ ஒன்றுமே ஆகவில்லை. யானைகளைக் கொண்டுவந்து அவனை மிதிக்கச் செய்தனர். ம்ஹூம். பாம்புகளைக் கொணர்ந்து அவனைக் கடிக்கச் செய்தனர். பயனில்லை. மலைமுகட்டிலிருந்து கீழே உருட்டித் தள்ளினர். தூசியைத் தட்டிவிட்டு எழுந்துகொண்டான் ப்ரஹ்லாதன். விஷத்தைக் கொடுத்தனர். அன்புடன் வாங்கிப் பருகினான் ப்ரஹ்லாதன். உணவு தராமல் இருளறையில் அடைத்துவைத்தனர். நெருப்பில் தூக்கிப் போட்டனர். கடும் காற்றை அவன்மீது ஏவினர்.

இவை எவற்றாலும் ப்ரஹ்லாதனுக்கு ஒன்றுமே ஆகவில்லை.

ஓய்ந்துபோன அசுரர்கள் ஹிரண்யனிடம் வந்து வீழ்ந்தனர். ‘ஐயா, எல்லாமும் செய்து பார்த்துவிட்டோம். அவன் என்ன மாயமந்திர வித்தை தெரிந்துவைத்திருக்கிறானோ தெரியவில்லை, அவனை எங்களால் கொல்லமுடியவில்லை. நாங்கள் தோற்றுவிட்டோம்’ என்றனர். அப்போது சுக்ரனின் இரு மகன்கள் ஹிரண்யனிடம், ‘ஐயா, எங்கள் தந்தை சுக்ராச்சாரியார் வந்தவுடன் இவனை என்ன செய்வது என்று உபாயம் சொல்வார். அதுவரை இவனைக் கட்டி வையுங்கள்’ என்றனர்.

ஆனால் கட்டிவைக்கப்பட்ட ப்ரஹ்லாதனோ அசுரச் சிறுவர்களுக்கு ஹரியின் பெருமையைச் சொல்லி அவர்களை நல்வழிப்படுத்த முனைந்தான். இதைக் கவனித்த சுக்ரனின் மகன் ஓடிச்சென்று ஹிரண்யனிடம், ‘ஐயா, இவன் உள்ளேயே பெரும் கலகம் விளைவிப்பான்போல் இருக்கிறது. எல்லாச் சிறுவர்களின் மனத்தையும் இவன் மாற்றிக்கொண்டிருக்கிறான். ஏதாவது செய்யவேண்டும்’ என்றான்.

ஹிரண்யன் ப்ரஹ்லாதனை உடனே அழைத்துவரச் செய்தான். ‘அடேய், என்னைக் கண்டால் மூவுலகங்களும் நடுங்குகின்றன. உனக்கோ என்னிடம் பயமே இல்லை. யாருடைய சக்தியை வைத்துக்கொண்டு நீ இந்த ஆட்டம் ஆடுகிறாய்’ என்று மிரட்டினான்.

ப்ரஹ்லாதன் தந்தையிடம், ‘என் சக்தி மட்டுமல்ல, இவ்வுலகில் உள்ள அனைவருடைய சக்தியும் அவர்மூலமாகவே வருகிறது. ஏன் உன் சக்தியும் கூடத்தான். உலகில் உள்ள அனைத்து ஆற்றலுமே அவருடையது. படைத்தல், காத்தல், அழித்தல் என அனைத்துமே அவரால்தான் நடக்கின்றன’ என்றான்.

‘அப்படிப்பட்ட சக்தி படைத்தவன் ஒருவன் இருக்கிறான் என்றால் அவன் எங்கே இருக்கிறான்? காட்டு அவனை’ என்றான் ஹிரண்யன்.

‘அவன் எங்கும் இருக்கிறான்’ என்றான் ப்ரஹ்லாதன்.

‘எங்கும் இருப்பவனை ஏன் என் கண்ணால் காண முடியவில்லை? ஏன் இந்தத் தூணில் அவன் காணப்படவில்லை?’ என்று கேட்டான் ஹிரண்யன்.

ப்ரஹ்லாதன் அந்தத் தூணைப் பார்த்து, ‘ஏன், இதோ என் கண்ணுக்கு தெரிகிறானே?’ என்று சொல்லி வணங்கினான்.

கொதித்தெழுந்த ஹிரண்யன் தன் மகனிடம், ‘இப்போதே உன் தலையை வெட்டித் தள்ளப்போகிறேன். நீ சொல்பவன் அந்தத் தூணில் இருந்தால் வந்து உன்னைக் காக்கட்டும்’ என்று தன் வாளை உருவியபடி தன் ஆசனத்தில் இருந்து தாவிக்குதித்து ப்ரஹ்லாதன் இருக்குமிடம் அடைந்து அவன் வணங்கிக்கொண்டிருக்கும் தூணை எட்டி உதைத்தான். தோன்றியது அந்த நரசிங்கம்.

மயிர்க்கூச்செறிய வைக்கும் இந்தக் காட்சியைக் கம்பன் சொல்லில் பார்ப்போம்.

சாணிலும் உளன் ஓர் தன்மை அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன் மா மேருக் குன்றினும் உளன் இந் நின்ற
தூணினும் உளன் நீ சொன்ன சொல்லினும் உளன் இத் தன்மை
காணுதி விரைவின் என்றான், நன்று எனக் கனகன் நக்கான்

உம்பர்க்கும் உனக்கும் ஒத்து இவ் உலகு எங்கும் பரந்துளானை
கம்பத்தின் வழியே காணக் காட்டுதி, காட்டிடாயேல்
கும்பத் திண் கரியைக் கோள் மாக் கொன்றென நின்னைக் கொன்று உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி உடலையும் தின்பென் என்றான்

என் உயிர் நின்னால் கோறற்கு எளியது ஒன்றன்று, யான்
முன் சொன்னவன் தொட்ட தொட்ட இடம்தொறும் தோன்றானாயின்
என் உயிர் யானே மாய்ப்பல் பின்னும் வாழ்வு உகப்பல் என்னின்
அன்னவற்கு அடியேன் அல்லேன் என்றனன் அறிவின் மிக்கான்

நசை திறந்து இலங்கப் பொங்கி நன்று நன்று என்ன நக்கு
விசை திறந்து உருமு வீழ்ந்ததென்ன ஓர் தூணின் வென்றி
இசை திறந்து உயர்ந்த கையால் எற்றினான் எற்றலோடும்
திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்

திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம். தூணைப் பிளந்துகொண்டு திசைகளும் அண்டமும் கிழிய வெளியே வந்த அந்தச் செங்கட் சீயம் ஹா ஹாவென்று சிரித்தது. முழங்கிப் புறப்பட்டு என்று ஆண்டாள் பாடினாளே, அதுபோன்ற இடி கர்ஜனையுடனான சிரிப்பு.

அப்போது அந்த அரங்கில் இருவர் மட்டுமே பிரதானமாயினர். தூணை எற்றிய அந்த ஹிரண்யன். சிரித்த அந்த செங்கட் சீயம். நரசிங்கத்தின் கண்கள் உருக்கி ஊற்றப்பட்ட தங்கம்போல மின்னின என்கிறது பாகவத புராணம். தீவிழித்து என்று ஆண்டாள் பாடியதுபோல. கண்களே தீயாக. பிடரி மின்ன, முகமே பொலிவாக இருந்தது என்கிறது பாகவதம். வேரிமயிர் பொங்க என்கிறாள் ஆண்டாள். சிங்கத்தின் பற்கள் வாள் போல் வளைந்து கூரியதாக இருந்தது என்கிறது பாகவதம். காதுகள் நிமிர்ந்து அசையாமல் இருந்தன. புருவம் நெரிந்திருந்தது. வாயும் மூக்கும் திறந்து மலைமுழைஞ்சு போல் இருந்தன. பிளந்த வாய் படு பயங்கரமாக இருந்தது.

‘வா, என்னுடன் போருக்கு’ என்றான் ஹிரண்யன். ‘அதற்குத்தான் வந்தேன்’ என்றது நரசிங்கம். விஷ்ணு பலமுறை விசுவரூபம் எடுத்துள்ளார். இப்போது நரசிங்கமாக எடுக்கிறார். கம்பனின் வார்த்தைகளில்,

பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம் பின்னை
வளர்ந்தது திசைகள் எட்டும் பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது அப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறையகிற்பார்
கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது கீழும் மேலும்

ககன முட்டை மேலும் கீழும் கிழிய வானுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்தது அந்தச் சீயம். கருடன் எவ்வாறு சர்ப்பம் ஒன்றைக் கையால் கவ்வுவானோ அதைப்போல ஹிரண்யனைக் கவ்வியது நரசிங்கம். சர்ப்பம் எவ்வாறு கருடனிடமிருந்து நழுவுமோ அவ்வாறு ஹிரண்யன் நரசிங்கத்திடமிருந்து நழுவினான். பாம்பு எவ்வாறு சுண்டெலியைப் பிடிக்குமோ அவ்வாறு சீயம் ஹிரண்யனைக் கவ்விற்று. தன் இரு கைகளால் அவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது என்கிறது பாகவதம்.

அரண்மனையின் பெரிய அரங்கின் வாயிலில் உள்ளேயும் இல்லாமல் வெளியேயும் இல்லாமல் வாயில் நிலையில் உட்கார்ந்துகொண்டு, தன் தொடைமீது அவனைப் பரப்பி, இந்திரனால் ஒரு கீற்றல்கூட விழாத ஹிரண்யனின் தோலை, கருடன் பாம்பைக் கீறுவதுபோல் கீறிக் கிழித்தது நரசிங்கம் என்கிறது பாகவதம்.

கம்பனின் ஹிரண்யனோ நரசிங்கத்துடன் பொருதுகிறான். பெரும் சண்டை நிகழ்கிறது. ஆனால் இறுதியில் அதே முடிவுதான்.

ஆயவன் தன்னை மாயன் அந்தியின் அவன் பொன் கோயில்
வாயிலில் மணிக் கவான்மேல் வயிர வாள் உகிரின் வாயின்
மீயெழு குருதி பொங்க வெயில் விரி வயிர மார்பு
தீயெழப் பிளந்து நீக்கி தேவர்தம் இடுக்கண் தீர்த்தான்

வயிற்றைக் கிழித்து ரத்தத்தைக் குடித்து குடலைப் பிடித்தெடுத்துத் தனக்கு மாலையாகப் போட்டுக்கொண்டது நரசிங்கம்.

ஹிரண்யனைக் கொன்றும்கூட நரசிங்கத்தின் வெறி அடங்கவில்லை. பிரமனும், சிவனும், இந்திராதி தேவர்களும் சூழ்ந்து தொழுகின்றனர். இந்த வெறி அடங்க, திருமகள் அங்கே வந்தால்தான் முடியும் என்ற தேவர்கள் அவளை வேண்டுகின்றனர். அவள் வருகிறாள். கம்பனின் வார்த்தைகள் இவை:

பூவில் திருவை அழகின் புனைகலத்தை
யாவர்க்கும் செல்வத்தை வீடு என்னும் இன்பத்தை
ஆவித் துணையை அமுதின் பிறந்தாளை
தேவர்க்கும் தம் மோயை ஏவினார் பாற்செல்ல

செந்தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும்
நந்தா விளக்கை நறுந்தார் இளங்கொழுந்தை
முந்தா உலகும் உயிரும் முறைமுறையே
தந்தாளை நோக்கினான் தன் ஒப்பு ஒன்று இல்லாதான்

தீது இலாஆக உலகு ஈன்ற தெய்வத்தைக் காதலால் நோக்குகிறது நரசிங்கம். திருமகளைக் கண்டதும் கோபம் தணியத் தொடங்குகிறது. இப்போது ப்ரஹ்லாதனும் அருகே வந்து தொழுகின்றான். அவனை அள்ளி அணைத்து, நரசிம்மம் சொல்கிறது: ‘உன் தந்தையை நான் தண்டிக்கும்போதும்கூட உன் சிந்தை மாறவில்லை. என்மீது அளவற்ற அன்பு வைத்தவனே, உனக்கு நான் ஒரு வரம் தருகிறேன். இனி உன் குடும்பத்தாருக்கு நான் ஒரு தீங்கும் செய்யமாட்டேன். அவர்கள் எப்படிப்பட்ட பிழை செய்தாலும் சரி, அவர்களை நான் கொல்லமாட்டேன்.’

விஷ்ணு சிற்பங்கள் தோன்றும்போதே வராக உருவும் நரசிம்ம உருவும் தோன்ற ஆரம்பித்துவிட்டன. கிட்டத்தட்ட பொயு இரண்டாம் நூற்றாண்டு முதற்கொண்டே நரசிம்மச் சிற்பங்கள் காணக் கிடைக்கின்றன. குப்தர்களின் உதயகிரி நான்காம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட குகைகள் ஆகும். இங்கே விஷ்ணுவின் பிற உருவங்களோடு வராகத்தையும் நரசிம்மத்தையும் காண முடிகிறது.

எப்படிப்பட்ட நரசிம்மம்! ககன முட்டை கிழிய, வானும் மண்ணும் அளந்த மாபெரும் நரசிம்மம். நான்கு கைகள். இரண்டு கைகளை இடுப்பில் வைத்து தன் ஆக்ருதியைப் பறைசாற்றும் வடிவம். மற்ற இரு கைகள் ஆயுதங்களை ஏந்தியுள்ளன, ஆனால் நாம் பொதுவாகப் பார்க்கும் முறையில் அல்ல. ஆயுதபுருஷர்களாக. சக்கரம் நன்றாகத் தெரிகிறது. ஆனால் இன்னொன்று கதையாக இருக்கவேண்டும். வெகுவாகத் தேய்ந்துவிட்டது. விஷ்ணுவுக்கே உரித்தான, குப்தர் கலைக்கே உரித்தான வனமாலையை உடல்முழுதும் பரவுமாறு அணிந்துள்ளது நரசிங்கம்.

உதயகிரி நரசிம்மர், படம்: வி.கே. ஸ்ரீனிவாசன்

இந்த நரசிங்கத்தின்முன் நிற்கையில் அதன் முழு பலத்தையும் நம்மை உணரச் செய்துவிடுகிறது.

ஹூனர்கள் அந்நிய நிலப்பரப்பிலிருந்து இந்தியா உள்ளே நுழைந்து குப்தர்களைத் தோற்கடிக்கின்றனர். அந்தக் காலகட்டத்தில் ஏரன் என்னும் இடத்தில் தன்யவிஷ்ணு என்பவன் மாபெரும் வராஹம் ஒன்றை முழு மிருகவடிவில் நிறுவுகிறான். இதைக் குறித்து வராஹம் பற்றிய கட்டுரையில் பார்த்தோம். அதே வளாகத்தில் ஒரு நரசிங்கம் முழுச் சிற்பமாக (புடைப்புச் சிற்பமாக அல்லாது) உள்ளது. இப்போது கீழே விழுந்துவிட்டது. அப்படியே விழுந்த நிலையிலேயே உள்ளது.

ஏரன் நரசிம்மர், படம் வி.கே. ஶ்ரீனிவாசன்

உதயகிரி போன்ற அதே ஆடை. கைகள் இரண்டும் உடைந்துவிட்டன. முகம், கேசம் ஆகியவற்றில் நிறைய முன்னேற்றத்தைப் பார்க்கிறோம்.

சாளுக்கியர்களின் பாதாமியில் விஷ்ணு குகை ஒன்றில் நிற்கும் நிலையிலான ஒரு நரசிம்மம் உள்ளது.

பாதாமி நரசிம்மர், படம்: வி.கே. ஸ்ரீனிவாசன்

இங்கே வனமாலை இல்லை. வஸ்த்ர யக்ஞோபவீதத்தை நிவீதமாக அணிந்துள்ளது. தலைமீது அழகான தாமரை மலர். ஆயுதங்கள் அனைத்துமே ஆயுத புருஷர்களாக அருகில் நின்றுகொண்டிருக்கின்றனர். இது ஆச்சரியமான ஓர் அமைப்பு. பார்க்க இதேபோன்ற அமைப்பில், இதேபோன்ற ஆடையில், ஐஹொளேயின் சாளுக்கியர் கட்டுமானக் கோவிலான துர்கை கோவிலில் ஒரு நரசிம்மர் உண்டு. இப்போது ஆயுதபுருஷர்கள் போய், கையில் சங்கும் சக்கரமும். சக்கரம் உள்ள கை உடைந்துவிட்டது.

ஐஹொளே நரசிம்மர்

மதுரையின் புறநகர்ப் பகுதியான ஆனைமலை அடிவாரத்தில் பாண்டியர் கால யோக நரசிம்மப் பெருமாள் கோவில், சென்னையின் புறநகர்ப் பகுதியான சிங்கப்பெருமாள் கோவிலில் பல்லவர் கால பாடலாத்ரி நரசிம்மர் கோவில், நாமக்கல்லின் அதியமான் கால நரசிம்ம சுவாமி கோவில் ஆகிய மூன்றும் நரசிம்மருக்கு என்றே வெட்டுவிக்கப்பட்ட குகைக் கோவில்களாகும். இவை மூன்றுமே 7-8-ம் நூற்றாண்டுகளில் உருவாக்கப்பட்டவை. இதில் முதல் இரண்டிலும் பாறையிலேயே வெட்டுவிக்கப்பட்ட நரசிம்மர் சிற்பங்கள் கருவறைகளில் உள்ளன. நாமக்கல்லில் கருவறையில் வழிபடும் நரசிம்மர் தனியாகச் செய்துவைக்கப்பட்டது. ஆனால் அருகில் உள்ள சுவரில் நரசிம்மர் ஹிரண்யனைக் கொல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. வழிபாட்டில் உள்ளதால் நல்ல புகைப்படங்கள் கிடைப்பது எளிதாக இல்லை.

ராஜசிம்மப் பல்லவனின் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் நரசிம்மரும் ஹிரண்யனும் சண்டையிடும் காட்சி மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது.

நரசிம்ம-ஹிரண்யப் போர், காஞ்சி கைலாசநாதர் கோவில், படம்: வி.கே. ஸ்ரீனிவாசன்

இதேபோன்ற ஒரு காட்சி, நந்திவர்மப் பல்லவனின் வைகுண்டப் பெருமாள் கோவிலிலும் உள்ளது.

நரசிம்ம-ஹிரண்யப் போர், வைகுண்டப் பெருமாள் கோவில், படம்: வி.கே. ஸ்ரீனிவாசன்

ஆனால், நரசிம்ம-ஹிரண்யப் போர் என்றாலே அது எல்லோராவில் ராஷ்டிரகூட மன்னன் முதலாம் கிருஷ்ணனால் வெட்டுவிக்கப்பட்ட அதி அற்புத கைலாசநாதர் கோவிலில் காணப்படும் சிற்பம்தான்.

நரசிம்ம-ஹிரண்யப் போர், கைலாசநாதர் கோவில், எல்லோரா

ஜூடோ சண்டைபோல, இரு கைகளால் ஹிரண்யனைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றி அடித்துத் தன் மடியில் கிடத்தப் போகிறார். இந்த அளவுக்கு இயங்கு சிற்பமாக நரசிம்மமும் ஹிரண்யனும் சண்டையிடுவதை வேறு யாருமே வடித்ததில்லை. அடுத்த நிலையைப் பல இடங்களிலும் காணலாம். கீழே இருப்பது வைகுண்டப் பெருமாள் கோவில் சிற்பம். இதேபோல்தான் நாமக்கல் குகையில் உள்ள சிற்பமும்.

ஹிரண்யனை கிழிக்கும் நரசிம்மர், வைகுண்டப் பெருமாள் கோவில், படம்: விஜய் பட்

வைகானச ஆகமத்தின்படி, நரசிம்மர் சிலையை விமானத்திலோ, கோபுரத்திலோ அல்லது கோஷ்டங்களிலோ தெற்கு அல்லது மேற்கு திசைகளில் பிரதிஷ்டை செய்யலாம். பாஞ்சராத்ரத்தில் நரசிம்மர் பெரும்பாலும் தெற்கில்தான் காணப்படுவார். சைவ ஆகமங்களின்படி, சிவாலயங்களில் நரசிம்மரை மேற்கு திசையில்தான் பிரதிஷ்டை செய்வார்கள்.

வைகானசக் கோவில்களில் நவமூர்த்தி பிரதிஷ்டை என்பதைப் பற்றி முந்தைய பகுதியில் பார்த்தோம். மூன்று தளங்களில், நின்றான், இருந்தான், கிடந்தான் ஆகிய பிரதிமைகளை பிரதிஷ்டை செய்யும்போது, இரண்டாம் தளத்தில் மேற்கு திசையில், அமர்ந்த நிலையிலான நரசிம்மரை நிறுவுவார்கள். பாஞ்சராத்ரக் கோவில்களில் கிழக்கு பார்த்து கருவறையில் விஷ்ணு இருக்க, சுற்றி மூன்று பக்கமும் கோஷ்டங்களில் தெற்கில் நரசிம்மம், மேற்கில் திரிவிக்ரமம், வடக்கில் வராஹம் ஆகிய மூர்த்திகள் இருக்கும். இவை முறையே வியூஹ வடிவங்களான வாசுதேவ, சங்கர்ஷண, பிரத்யும்ன, அனிருத்த வடிவங்களோடு இணைந்துபோகும். இதையேதான் நாம் வைகுண்ட சதுர்மூர்த்தி வடிவத்தோடு இணைத்துப் பார்த்தோம்.

வைகானசத்தின்படி, நரசிம்மர் பெரும்பாலும் இருவகைப்படுவார். கிரிஜ நரசிம்மர், ஸ்தூனஜ நரசிம்மர்.

கிரிஜ வடிவம் என்பது இயல்பாக, மலைமுழைஞ்சிலிருந்து, குகையிலிருந்து வெளிவரும் சிங்கம். வைகானச சம்ஹிதைகளில் இதற்கான கதை உண்டு. நாம் ஏற்கெனவே மேலே பார்த்த கதைதான். ஆனால் நரசிம்மர் ஹிரண்யனைக் கொல்வதற்காக அவனுடைய நகரத்துக்கு அருகில் உள்ள மலையில் இறங்குவார். ஹிரண்யனைக் கொன்றபின், தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மலையிலேயே தங்கிவிடுவார். எனவே கிரிஜ நரசிம்மர்.

ஸ்தூனஜம் என்றால் தூணிலிருந்து வெளிப்படும் வடிவம். இதுதான் புராணங்களில் காணப்படும் கதை. தூணைப் பிளந்துகொண்டு வெளியே வந்து ஹிரண்யனைக் கொல்லும் வடிவம்.

சோளிங்கர் (திருக்கடிகை), அஹோபிலம் போன்ற மலை சார்ந்த நரசிம்மர் கோவில்கள், கிரிஜ வடிவத்தை முன்வைப்பவை. இங்கே மலையே நரசிம்மர் என்று எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் மலையிலேயே உறைந்தவராக இருக்கிறார். இதேதான் நாம் ஏற்கெனவே பார்த்த சிங்கப்பெருமாள் கோவில், ஆனைமலை, நாமக்கல் ஆகிய இடங்களும். குன்றிலேயே உருவான நரசிம்மர் கோவில்கள் இவை. கிரிஜ நரசிம்மர், மூன்று வகைகளாகக் காட்சி தருவார். சுகாசன நரசிம்மர், யோகாசன நரசிம்மர், கேவல நரசிம்மர்.

நரசிம்மர் சிம்மாசனத்தின்மீது, சுகாசனம் அல்லது வீராசனம் அல்லது ராஜலீலாசனத்தில் அமர்ந்திருப்பது சுகாசன நரசிம்மர். அருகில் ஶ்ரீதேவி, பூதேவி இருக்கலாம். நான்கு கைகள் உடையவராக இருப்பார். பின்னிரு கைகளில் சக்கரமும் சங்கும். முன் கைகள், அபயம், வரதம், கடகம் போன்ற முத்திரைகளுடனோ அல்லது இடுப்பிலோ அல்லது மடியிலோ வைக்கப்பட்டிருக்கும். வெண்ணிறம் கொண்டவராக இருப்பார். சிவப்பு ஆடை அணிந்திருப்பார். தலையில் கரண்ட மகுடம் அணிந்திருப்பார். பிடரி மயிர் அதைத்தாண்டி வெளியில் தெரியும்.

தலைக்குமேல் ஆதிசேஷனின் ஐந்து தலைகள் படம் எடுத்தபடி இருப்பதாகவும் அமைக்கலாம். வலப்பக்கம் கையில் தாமரையுடன் ஶ்ரீதேவி, இடப்பக்கம் கையில் அல்லியுடன் பூதேவி ஆகியோர் அமைக்கப்படலாம். ஶ்ரீதேவி தங்க நிறத்திலும் பூதேவி நீலப்பச்சை நிறத்திலும் இருப்பார்கள். பிரம்மா வலதுபுறத்திலும் சிவன் இடதுபுறத்திலும் இருப்பதுபோல அமைக்கலாம். பிருகு, மார்க்கண்டேயர் ஆகியோர் கீழே மண்டியிட்டு அமர்ந்திருப்பதுபோல அமைக்கலாம்.

தேவியரோ ரிஷிகளோ யாருமின்றி, நரசிம்மர் மட்டும் இம்மாதிரியாக அர்த-உத்குடிகாசனத்தில் அமர்ந்திருக்குமாறு மலையடிப்பட்டி முத்தரையர் குகையில் காணப்படுகிறார். பின்னிரு கைகளில் சக்கரம், சங்கு. முன் வலது கை கஜஹஸ்தமாகவும் இடது கை ஊருன்யஸ்தமாகவும் (தொடைமீது வைத்தபடியும்) உள்ளன.

மலையடிப்பட்டி நரசிம்மர்

அடுத்தது யோக நரசிம்மர் வடிவம். ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்திருப்பார். கால்களைச் சுற்றி யோகபட்டம் இருக்கும். இப்படிப்பட்ட நரசிம்மரின் மிகப் பிரபலமான சிற்பம், ஹம்பியில் விஜயநகரக் கலையம்சத்தில் உள்ளது. சேதப்படுத்தப்பட்ட நிலையிலும் இந்தச் சிற்பத்தின் அழகு குறையவே இல்லை.

யோக நரசிம்மர், ஹம்பி

சென்னை அருங்காட்சியகத்தில் செப்புப் படிமமாக ஒரு யோக நரசிம்மர் சிற்பம் உள்ளது. அர்த உத்குடிகாசனத்தில் அமர்ந்து, யோகபட்டம் கட்டிய நிலையில் உள்ளார் நரசிம்மர். பின்னிரு கைகளில் சக்கரமும் சங்கும். முன் கைகள் அபய ஹஸ்தமாகவும் கஜஹஸ்தமாகவும் உள்ளன. கரண்ட மகுடம் அணிந்திருக்கிறார். மார்பில் சன்னவீரம்.

யோக நரசிம்மர், சென்னை அருங்காட்சியம்

கேவல நரசிம்மர் என்பது, நரசிம்மர், யாரும் அருகில் இல்லாமல், தனியாக இருப்பது. இது அமர்ந்த நிலையிலும் இருக்கலாம், நின்ற நிலையிலும் இருக்கலாம். நாம் மேலே பார்த்த உதயகிரி, ஏரன், பாதாமி, ஐஹொளே ஆகிய நான்குமே இப்படிப்பட்ட சிற்பங்களாகும். காஞ்சிபுரம் வைகுண்டப்பெருமாள் கோவிலிலும் நின்ற நிலையில் கேவல நரசிம்மர் சிற்பம் உள்ளது. இந்தச் சிற்பம் பல இடங்களில் தேய்ந்துவிட்டது. மேலிரு கைகளில் சக்கரமும் சங்கும் ஏந்தியுள்ளார். கீழ்க் கைகள் கடக முத்திரை, சூச்சி முத்திரை தாங்கியுள்ளன.

கேவல நரசிம்மர், வைகுண்டப் பெருமாள் கோவில், படம்: வி.கே. ஸ்ரீனிவாசன்

ஸ்தூனஜ நரசிம்ம வடிவங்கள் தூணிலிருந்து வெளிப்பட்டு, ஹிரண்யனை மடியில் வைத்து வதம் செய்வதுபோல் இருக்கும். பொதுவாக இப்படிப்பட்ட ஒரு சிற்பத்தைக் கருவறையில் காண்பது அரிது. ஆனால் புடைப்புச் சிற்பமாக சுவர்களில் அல்லது கோஷ்டங்களில் காணப்படலாம் அல்லது செப்புப் படிமமாகக் காணப்படலாம்.

நாம் ஏற்கெனவே வைகுண்டப் பெருமாள் கோவிலின் சுவரில் இந்தக் காட்சியை மேலே பார்த்துவிட்டோம். சண்டேலர்களின் கஜுராஹோவில் இரு மிகப்பெரிய கோவில்கள் அடுத்தடுத்து உள்ளன. ஒன்று வைணவ லக்ஷ்மணர் கோவில், அடுத்தது சைவ கந்தரியா மஹாதேவர் கோவில். இரண்டிலும் நரசிம்மர் ஹிரண்யனை மாய்ப்பது பெருஞ்சிற்பமாகக் கிடைக்கிறது. இரண்டிலுமே நரசிம்மர் தூணிலிருந்து வெளிவந்து ஹிரண்யனைப் பிளந்துகொண்டிருக்கிறார். அவர்மீது பல அசுரர்கள் பாய்ந்து தாக்கிக்கொண்டிருக்கின்றனர்.

ஹிரண்ய வதம், கஜுராஹோ, படம்: வி.கே. ஸ்ரீனிவாசன்

ஹொய்சளர்களின் பல்வேறு வைணவக் கோவில்களில் இந்தமாதிரியான சிலைகள் இல்லாமல் இருக்காது. இன்னும் ஒருபடி மேலே போய், நரசிம்மர் ஹிரண்யனின் குடலை உருவி மாலையாகப் போடுவதும் காண்பிக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக பேலூர் கோவிலின் ஒரு நரசிம்மரைக் காணலாம்.

ஹிரண்ய வதம், பேலூர், படம்: வி.கே. ஸ்ரீனிவாசன்

கல்லில் திரிதிரியாக குடல் அப்படியே மேலெடுக்கப்பட்டு அதில் இரு விரல் நுனிகள் நுழைக்கப்பட்டு, அப்படியே தனக்கே அந்தக் குடல் மாலையாகப் போடப்படுவதாகச் செதுக்கப்பட்டுள்ளது இந்தச் சிற்பம். சுற்றிலும் அசுரர்கள் வீழ்ந்துகிடக்கின்றனர். கருடன் அஞ்சலி ஹஸ்தத்தில் இருப்பதை இங்கே காண்கிறோம். பல ஹொய்சளர் கோவில்களிலும் இதே போன்ற சிற்பம் இருந்தாலும் குடல் மாலை பல இடங்களிலும் உடைந்திருக்கும். இது எளிதில் உடைந்துவிடக்கூடிய மென்மையான கல் என்பதை மனத்தில் கொள்ளுங்கள். கிரானைட்டில் இப்படி நுணுக்கமாகச் செய்யமுடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

சென்னை அருங்காட்சியகத்தில் மிகப் பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட ஸ்தூனஜ நரசிம்மர் செப்புப் படிமம் ஒன்று உள்ளது. செப்பு என்பதால் இங்கும் குடலை உருவிக் கழுத்தில் போடுவதைக் காண்பிக்க முடியும்.

ஸ்தூனஜ நரசிம்மர், சென்னை அருங்காட்சியம்

ஹொய்சளர்களின் கலையைப் பற்றிப் பேசும்போது மேலும் இரு படங்களை உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். ஹொய்சளர்கள் நூற்றுக்கும் மேல் நரசிம்மர் சிற்பங்களைச் செய்திருப்பார்கள். அவற்றில் சில மேலே உள்ளதைப் போலத் தனித்து நிற்கும். அதில் ஒன்று நுக்கேஹள்ளியின் யோக நரசிம்மர். இருபுறமும் கருடனும் ப்ரஹ்லாதனும் நரசிம்மரை வணங்கியபடி இருக்கிறார்கள்.

யோக நரசிம்மர், நுக்கேஹள்ளி, படம்: வி.கே. ஸ்ரீனிவாசன்

கோபிநாத ராவ், யானக நரசிம்மர் என்னும் வடிவம் வைகானசத்தில் உள்ளது என்பதைக் குறிப்பிடுகிறார். ஆதிசேஷனின் நிழலின்கீழ் உள்ள நரசிம்மரை கருடன் தாங்குவதாக உள்ள சிற்பம் இது. ஆனால் இம்மாதிரியான எந்தச் சிற்பமும் இதுவரை கிடைக்கவில்லை என்று கோபிநாத ராவ் குறிப்பிடுகிறார். ஆனால் ‘வைகானச ஐகனோகிராபி’ புத்தகத்தின் ஆசிரியர் லக்ஷ்மிநரசிம்மன், சிம்ஹாசலத்தின் நரசிம்மர் கோவிலில் இப்படி ஒரு சிற்பம் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

வைகானசம் அடுத்துக் குறிப்பிடுவது லக்ஷ்மி நரசிம்மர் என்ற வடிவத்தை. நரசிம்மரின் கட்டுங்கடங்காத கோபத்தைத் திருமகள் தன் கடைக்கண் பார்வையால் எவ்வாறு தணித்தாள் என்பதைக் கம்பனின் வார்த்தைகளில் பார்த்தோம். அந்த லக்ஷ்மியைத் தன் தொடையில் அம்ர்த்தியிருக்கும் வடிவம்தான் லக்ஷ்மி நரசிம்மர். ஹரனஹள்ளியில் உள்ள ஹொய்சளச் சிற்பம் ஒன்று மிகப் பிரம்மாண்டமான லக்ஷ்மி நரசிம்ம வடிவத்தை நமக்குக் காண்பிக்கிறது.

லக்ஷ்மி நரசிம்மர், ஹரனஹள்ளி, படம்: வி.கே. ஸ்ரீனிவாசன்

நரசிம்மர் சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். அவர் கரங்களில் பத்மம், கதை, சங்கு, சக்கரம் ஆகியவை சதுர்விம்ஸதி விஷ்ணு வரிசையில் நரசிம்மர் என்ற வடிவத்துக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. அவர் தொடையில் லக்ஷ்மியும் சுகாசனத்தில் அமர்ந்துள்ளாள். அவள் கையில் தாமரையை ஏந்தியுள்ளாள். அவளுடைய பாதம், கீழே ஒரு யானையின்மீது படுமாறு அமைக்கப்பட்டுள்ளது. இருபுறமும் ப்ரஹ்லாதனும் கருடனும் அஞ்சலி செய்தவண்ணம் உள்ளனர். இருபுறமும் சாமரம் வீசுவோர், கையில் படையல் பொருள்களை ஏந்திவருவோர், அஞ்சலி செய்வோர், பாடுவோர், ஆடுவோர், துதிப்போர் என்று ஏகப்பட்ட பேர் உள்ளனர். அவர் தலைமீதான தோரணத்தில் தசாவதாரமும் உள்ளன.

0

விஜயநகர, நாயக்கக் கலையில் நரசிம்மருக்கு மிக முக்கியமான இடம் உள்ளது. பெரும் சிற்பங்களாக அவர்கள் நரசிம்மர் ஹிரண்யனைப் பிளப்பதைப் பெரும் தூண்களில் செதுக்கிவைத்தனர். அதே நேரம், சிறு சிறு சிற்பங்களாகவும் தூண்களில் நரசிம்மரின் அனைத்துவித மூர்த்தங்களையும் செதுக்கிவைத்தனர். ஶ்ரீரங்கத்தில் பல்வேறு சன்னிதிகளின் பெரும் தூண்களில் சிறுசிறு புடைப்புச் சிற்பங்களாகக் கீழே உள்ளவற்றைக் காணலாம்.

மேல் வரிசை – தூணைப் பிளந்துகொண்டு வரும் நரசிம்மர், ஹிரண்யனைப் பிடித்து வீழ்த்தும் செயலில் உள்ள நரசிம்மர் – அருகே ப்ரஹ்லாதன் இரு கைகளையும் உயர்த்தி வணங்கிக்கொண்டிருக்கிறான், ஹிரண்யனை மடியில் கிடத்திக் கொல்லும் நரசிம்மர். கீழ் வரிசை – சுகாசன மூர்த்தி, யோக நரசிம்மர், லக்ஷ்மி நரசிம்மர்,  நின்றுகொண்டிருக்கும் வடிவம் கேவல நரசிம்மர், ஆனால் இரண்டு கைகள், கையில் வில், அம்பு ஆகியவை ஆயுதங்கள். இது மிகப் புதுமையானது. வேறு எங்கும் பார்த்திராதது.

0

சிவன் கோவில்களில் மேற்குத் திசையில் தேவகோஷ்டத்திலோ, விமான கோஷ்டத்திலோ, அல்லது கிரீவத்திலோ நரசிம்மரைப் பிரதிஷ்டை செய்வது வழக்கம். இதனைப் பல்லவர் காலத்திலிருந்தே பார்க்கிறோம். மாமல்லபுரம் கட்டுமானக் கோவிலான முகுந்த நாயனார் கோவிலில் நரசிம்மர் சிற்பம் உள்ளது. பாண்டியர்களின் மிகச் சிறந்த ஒற்றைக்கல் தளியான வெட்டுவான்கோவிலில் மிக அழகான நரசிம்மர் சிற்பம் உள்ளது. சற்றே சிதைந்திருந்தாலும் தனித்துவம் வாய்ந்த சிற்பம் இது.

வெட்டுவான்கோவில் நரசிம்மர்

நான்கு கைகள். பின்னிரு கைகளில் பிரயோகச் சக்கரமும் சங்கும். வலது முன் கை கடக முத்திரை கொண்டதாக இருக்கலாம் என்று யூகிக்கிறேன். இடதுகை உடைந்துவிட்டது. சுகாசனத்தில் அமர்ந்துள்ளார். தொங்கவிட்டுள்ள காலின்கீழ் தாமரைப் பூ.

முற்காலச் சோழர்களின் புள்ளமங்கைக் கோவிலில் மேற்குத் திசையின் விமான கோஷ்டத்தில் ஹிரண்யனுடன் போரிடும் நரசிம்மரின் சிற்பம் உள்ளது.

புள்ளமங்கை நரசிம்மர், படம்: வி.கே. ஸ்ரீனிவாசன்

நின்ற நிலையில் கால்களால் ஹிரண்யன் தப்பிச் செல்லமுடியாதபடிக்கு அணைத்து, தன் நகங்களால் அவனுடைய முதுகைப் பிராண்டிக் கீறியிருப்பதைக் கீழே நின்றபடிக்கு நாம் தெளிவாகக் காணமுடியும்.

0

சில வைணவக் கோவில்களில் நரசிம்மரையும் சுதர்சனச் சக்கரத்தையும் (சக்கரத்தாழ்வான்) இருபக்கங்களில் பிரதிஷ்டை செய்வதைக் காணலாம். முக்கியமாக ஶ்ரீரங்கத்தில் சக்கரத்தாழ்வான் சந்நிதியில் கருவறையில் கிழக்கு பார்த்த சக்கரத்தாழ்வான், அவருடைய முதுகுப் பக்கம், மேற்கில் நரசிம்மர் இருக்கிறார். சில இடங்களில் சுதர்சனச் சக்கரத்துக்கு நடுவே நரசிம்மர் இருப்பதாகவும் பிரதிஷ்டை உண்டு. ஶ்ரீரங்கம் தவிர, காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலிலும் மேலும் சில இடங்களிலும் இதுபோன்ற சிற்பங்கள் உண்டு.

0

ஆண்டாளிடம் தொடங்கிய இந்தப் பகுதியை நம்மாழ்வாரின் பாசுரத்துடன் நிறைவு செய்வோம்.

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என்
சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே!

(தொடரும்)

பகிர:
பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர். சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் இளநிலையும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியக் கணிதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். வரலாறு, தொழில்நுட்பம், இந்தியவியல் போன்ற துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.View Author posts

4 thoughts on “கல்லும் கலையும் #11 – திசை திறந்து அண்டம் கீறச் சிரித்தது செங்கட் சீயம்”

  1. The article is given the knowledge of narasimmhar in bhakthi and sakthi way pictures are given divine seeing pl.given more articles about narasimmha thank you

  2. A scholarly treatment. Not sure if I can ever wrap my head around it completely. Some paragraph subtitles wld be helpful in selective navigation.

    Power to your team and you!!!! No buttons to follow?

  3. உதயகிரி நரசிம்மர் படம் ஆங்கிலப் படத்தில் வரும் aliens போல் இருக்கிறது.
    அவதாரமே கட்டுக்கதை என்று ஒரு கணம் கருதினாலும், ஹிரண்யகசிப்பின் வரம் யாசிப்பும், அந்த விதிகள் மீறாது அவனை கொல்வதற்கு தூணில் இருந்து செங்கட் சீயம் வருவது மகத்தான கணம்/படிமம். நரசிம்ஹ அவதாரமே ஒரு ஆச்சரியம்தான்.

    பத்ரி சரியாக பொருத்தி செல்கிறார்

  4. ஹிரண்யனை மடியில் வைத்து வதம் செய்வதுபோல் இருக்கும். பொதுவாக இப்படிப்பட்ட ஒரு சிற்பத்தைக் கருவறையில் காண்பது அரிது. —> Maddur Ugra Narasimha temple (near Mysore). In garbagriha, such sculpture is there.

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *