மாஹேஷ்வர வடிவங்கள் என்று இருபத்தைந்து வடிவங்கள் உள்ளன என்பதைப் பற்றி சிவனுடைய ந்ருத்த வடிவங்களைப் பற்றிப் பார்க்கையில் குறிப்பிட்டிருந்தேன். சிவபெருமானுக்கு சம்ஹார, அனுக்ரஹ, ந்ருத்த வடிவங்கள் உள்ளன. சிவனுடைய சதாசிவ தத்துவங்களான தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம் எனப்படும் ஐந்திலிருந்தும் ஐந்தைந்து வடிவங்கள் தோன்றின. இந்த இருபத்தைந்து வடிவங்களே மாஹேஷ்வர வடிவங்கள் ஆகும். இவற்றில் சம்ஹார வடிவங்களாவன:
- வீரபத்திரர்
- காமதஹனர்
- காலாரி
- கங்காளர்
- கஜசம்ஹாரர்
- திரிபுராந்தகர்
- ஜலந்தரசம்ஹாரர்
இவை தவிர மேலும் சில சம்ஹார சிவ வடிவங்களும் உள்ளன. அவற்றையும் கோவில்களில் நாம் காணலாம். முதலில் மேலே உள்ளவற்றைப் பார்த்துவிடுவோம்.
1. வீரபத்திரர்
தக்ஷன் (தமிழில் தக்கன்) என்பவன் பிரமனின் மகன். பிரமனால் மக்கள் திரளைப் படைப்பதற்காக உருவாக்கப்பட்ட பல பிரஜாபதிகளில் ஒருவன். எனவே தக்ஷ பிரஜாபதி என்றும் அழைக்கப்படுபவன். இவன் பல மக்களைப் பெற்று அவர்கள் மூலமாகப் பெரும் ஜனத்திரளை உருவாக்கினான். இவனுடைய ஒரு மகள் சதி. தக்ஷனின் மகள் என்பதால் தாக்ஷாயனி என்று அழைக்கப்பட்டாள். பிரமனின் வற்புறுத்தலால் சதியை சிவனுக்கு மணம் செய்வித்துக் கொடுத்தான்.
ஒருமுறை நைமிசாரண்யத்துக்கு தக்ஷன் வந்திருந்தபோது அங்குள்ள ரிஷிகள் அனைவரும் எழுந்திருந்து அவனுக்கு வணக்கம் தெரிவித்தனர். ஆனால் அங்கேயிருந்த சிவன், எழுந்திருக்கவும் இல்லை, தக்ஷனுக்கு வணக்கம் செலுத்தவும் இல்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தக்ஷன், சிவனைப் பலவாறாகத் திட்டி சபித்தான். இதனால் வெகுண்டெழுந்த நந்தி, பதிலுக்கு தக்ஷனைச் சபித்தார். தக்ஷன் கடும் கோபத்தில் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டான்.
சிவனை எப்படியும் அவமதிக்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டிருந்த தக்ஷன், பெரும் யாகம் ஒன்றைச் செய்யும் ஏற்பாட்டில் இறங்கினான். அந்த யாகத்துக்கு, சிவனைத் தவிர அனைவரையும் அழைத்தான். விஷ்ணு, பிரமன், இந்திரன் முதலான தேவர்கள், சூரியன், சந்திரன், ரிஷிகள் என அனைவரையும் அழைத்திருந்தான். அனைவரும் வந்து குவிந்தனர்.
அப்போது ததீசி என்ற ரிஷி மட்டும் தக்ஷனிடம், சிவனையும் அழையாமல் யக்ஞம் நடத்துவது முறையல்ல என்று வாதிட்டார். அதற்கு தக்ஷன் மறுமொழியாக, சிவனோ மயானத்தில் இருப்பவன், பூத, பேய், பிசாசுகளின் தலைவன், அமங்கலமானவன், வெறுக்கத்தக்கவன், வேதத்துக்கு வெளியில் இருப்பவன், எனவே அழைக்கமுடியாது என்று திட்டவட்டமாகக் கூறினான். இதனால் ததீசி அந்த இடத்தைவிட்டு வெளியேறினார். மற்றவர்களோ அமைதியாக அங்கேயே இருந்தனர்.
இதற்கிடையே, தக்ஷன் யக்ஞம் நடத்தும் தகவல் சதிக்குச் சென்று சேர்ந்தது. அவள் கடும் கோபம் அடைந்தாள். அதெப்படித் தன் தந்தை தன்னையும் தன் கணவரான சங்கரரையும் அழைக்காமல் யாகம் செய்யலாம் என்று சினந்தாள். வருந்தினாள். நேராக சிவனிடம் சென்று, தான் தக்ஷ யக்ஞம் நடக்கும் இடம் சென்று தக்ஷனைக் கேள்வி கேட்கப்போவதாகச் சொன்னாள். சிவன் அவளைத் தடுத்தார். அங்கே செல்வதால் பயனில்லை என்றார். ஆனால் சதி கேட்பதாக இல்லை. எனவே அவளுடன் எண்ணற்ற பூதகணங்களைப் பாதுகாப்புக்கு அனுப்பினார்.
நேராக யக்ஞம் நடக்கும் இடம் சென்ற சதி, தன் தந்தையிடம், எப்படி சிவனையும் தன்னையும் அழைக்காமல் யாகத்தை நடத்தலாம் என்று கேட்டாள். சுற்றியுள்ள விஷ்ணு, பிரமன் முதலானோரையும் அதே கேள்வியைக் கேட்டாள். தக்ஷனோ, தன் மகளையே மிகவும் அவமதித்தான். தன் தந்தை பிரமனின் வற்புறுத்தலால்தான் சதியை சிவனுக்குத் திருமணம் செய்துகொடுத்ததாகவும், மற்றபடி மஹாதேவர்மீது எந்த மரியாதையும் இல்லை என்று கூறினான். ‘இருந்தால் இரு, இல்லாவிட்டால் இடத்தைவிட்டுப் போ! நீ ஏன் முதலில் இங்கே வந்தாய்? நான் உன்னை அழைக்கவே இல்லையே? பேய், பிசாசு, பூதங்களின் தலைவனான உன் கணவன் அமங்கலமானவன். வேதத்திலிருந்து விலக்கப்பட்டவன். அதனால்தான் அவனை அழைக்கவில்லை, உன்னையும் அழைக்கவில்லை’ என்றான்.
இப்படி அவமதிக்கப்பட்டபிறகு மீண்டும் எப்படி சிவன் இருக்கும் இடம் செல்வது என்று யோசித்தாள் சதி. இனி வாழ்ந்து என்ன பயன் என்ற முடிவுக்கு வந்தாள். அப்படியே அங்கே யாக குண்டத்தில் வளர்ந்துள்ள நெருப்பில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். அவள் கூடவந்த கணங்கள் அதிர்ந்துபோயின. இருபதாயிரம் கணங்களும் அங்கேயே தம் உயிரை மாய்த்துக்கொண்டன.
நாரதர் நேராகச் சென்று நடந்ததை சங்கரனிடம் கூறினார். சிவன் தாளமுடியாத கோபம் கொண்டார். தன் தலையிலிருந்து ஒரு முடிக்கற்றையைப் பிடுங்கி எடுத்துக் கீழே வீசி எறிந்தார். அங்கே வீரபத்திரன் தோன்றினான். கூடவே காளியும் தோன்றினாள். வீரபத்திரன் சிவனிடம், ‘என்னை எதற்காக அழைத்தீர்கள்? நான் என்ன செய்யவேண்டும். உடனே சொல்லுங்கள்’ என்றான்.
‘தக்ஷனின் யக்ஞத்தை அழித்து நாசமாக்கு!’ என்றார் சிவன். வீரபத்திரனும் காளியும் நந்தியும் கோடிக்கணக்கான கணங்களும் தக்ஷன் இருக்கும் இடம் நோக்கிப் புறப்பட்டனர்.
அங்கே தக்ஷன் துர்நிமித்தங்களைக் கண்டான். கலக்கமுற்றான். விஷ்ணுவிடம் தன் யாகத்தைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டான். விஷ்ணுவோ தக்ஷனைக் கடிந்துகொண்டார். ‘உன் தவறான செய்கையால் நீ இப்போது அனைவருக்கும் அழிவைக் கொண்டுவந்துள்ளாய். நம் அனைவருடைய சக்தியும் ஒன்றுசேர்ந்தாலும் வீரபத்திரனை எதிர்க்க முடியாது’ என்றார்.
அதே நேரம் வீரபத்திரன், காளி, காத்யாயனி, ஈசானை, சாமுண்டி, முண்டமர்தினி, பத்ரகாளி, பத்ரை, த்வரிதை, வைஷ்ணவி எனும் நவ துர்கைகளுடனும், பூதங்களுடனும், சாகினிகளுடனும், தாகினிகளுடனும் யோகினிகளுடனும், பிரமதர்களுடனும், குஹ்யகர்களுடனும் உள்ளே நுழைந்தான். அனைவருமே சிவனைப் போலவே பத்து கரங்களுடனும் மூன்று கண்களுடனும் இருந்தனர். வீரபத்திரனின் தேரை ஈராயிரம் குதிரைகளும் லட்சம் சிங்கங்களும் இழுந்துவந்தன. கணங்கள் யக்ஞ மேடையில் புகுந்து காண்பதையெல்லாம் அடித்து நொறுக்கிப் பொடிப் பொடியாக்கின.
உடனே தேவர்கள் இந்திரனின் தலைமையில் திரண்டு யாகத்தைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். யமன், குபேரன், வருணன், அக்னி, நிர்ருதி, சுரர்கள், யக்ஷர்கள், சாரணர்கள் அனைவரும் திரண்டனர். விஷ்ணுவும் வேறு வழியின்றி தேவர் குழாத்துடன் சேர்ந்துகொண்டார்.
வீரபத்திரன் விஷ்ணுவிடம், ‘தாங்கள் ஏன் இந்தக் குழுவில் இணைந்தீர்கள்? சிவனுக்கு நடந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா? தாக்ஷாயனிக்கு நடந்ததையும் கண்டீர்கள் அல்லவா? என் பலம் உங்களுக்குத் தெரியுமே? மேலும் நீங்கள் எனக்கு சம்புவைப் போன்றவர் ஆவீர். ஆனாலும் என்னை எதிர்த்தீர்கள் என்றால் உங்களோடு சண்டை போடுவதைத் தவிர வேறு வழியில்லை’ என்றான்.
‘வீரபத்திரனே, நீ மஹேஷ்வரனின் தேஜஸினால் உருவானவன். ஆனால் தக்ஷன் என்னை வேண்டிக் கேட்டுக்கொண்டான். பக்தர்களைக் காக்கவேண்டியது என் கடமை. சிவனும் அவ்வாறே நடந்துகொள்வார். எனவே நாம் இருவரும் சண்டையிடுவோம். ஒன்று நீ ஜெயிப்பாய், அல்லது நான்’ என்றார் விஷ்ணு.
இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். விஷ்ணு சுதர்சனச் சக்கரத்தை வீரபத்திரன்மீது எறிந்தார். வீரபத்திரன் தன் வாயைத் திறந்து சக்கரத்தை விழுங்கிக்கொண்டான். விஷ்ணு அவன் வாயை அழுத்த, அவன் சக்கரத்தைத் துப்பினான். அதை எடுத்துக்கொண்டு விஷ்ணு அந்த இடத்தைவிட்டு வெளியேறி வைகுண்டம் சென்றுவிட்டார்.
அதன்பின் வீரபத்திரனும் கூட வந்த அவன் படைகளும் அந்த இடத்தையே அதகளப்படுத்தினர். யாகம் செய்யும் பிரஹஸ்பதியான பிருகுவைக் கீழே தள்ளி மீசையையும் தாடியையும் அறுத்துத் தள்ளினான் வீரபத்திரன். சூரியனின் வாயில் அடித்து, பற்களை உடைத்தான். கண்ணைக் குத்தினான். அக்னியின் கையை வெட்டினான். சந்திரனை உதைத்துத் தள்ளினான். சரசுவதியின் மூக்கை அரிந்தான். பிரமனின் தலையை அரிந்தான். இந்திரனோ இந்த அடிதடியிலிருந்து தப்பிக்க, ஒரு குயில்போல் வடிவமெடுத்து, மரத்தின்மேல் ஏறி ஒளிந்துகொண்டான். ஒரே களேபரம்.
இப்படி சுற்றி நின்ற அனைவரையும் அடித்து நொறுக்கியபின், வீரபத்திரன், பாய்ந்து தக்ஷனைப் பிடித்து, தலையை ஒரேயடியாக வெட்டி, யாக குண்டத்தில் போட, மடிந்தது வேள்வி.
பிரமனும் தேவர்களும் நேராக சிவனைக் காணச் சென்றனர். பணிந்து வேண்டினர். சிவன் அவர்களுடன் யாகம் நடக்கும் இடத்துக்கு வந்தார். அடிபட்ட, அறுபட்ட தேவர்கள் அனைவரையும் பழைய நிலையை அடையச் செய்தார். ஆனால் தக்ஷனின் தலை போனது போனதுதான். எனவே ஓர் ஆட்டின் தலையை தக்ஷ பிரஜாபதிக்குத் தலையாக வைத்தார்.
மேலே நாம் பார்த்தது ஸ்கந்த புராணத்தின் தொடக்கத்தில் வரும் தக்ஷ யக்ஞம் குறித்த கதை. பிற புராணங்களில் சிற்சில மாறுதல்கள் உள்ளன.
தேவார மூவரும் மாணிக்கவாசகரும் வீரபத்திரன் தோற்றத்தையும் தக்க யாக அழிவையும் நிறையவே பாடியுள்ளனர். மாணிக்கவாசகர், உந்திபறத்தல் என்ற வகைமையின்கீழ் திருவுந்தியார் என்ற பதிகத்தை இயற்றியுள்ளார். உந்திபறத்தல் என்றால் இரு சிறுமியர் ஒருவர் கையை ஒருவர் கைமாற்றிப் பிடித்து பாடிக்கொண்டே சுற்றிச் சுற்றி வருதல். அதிலிருந்து சில வரிகளைப் பார்ப்போம்:
சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடிய வாபாடி உந்தீபற, உருந்திர நாதனுக்கு உந்தீபற
ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டன்று
சாவாது இருந்தானென்று உந்தீபற, சதுர்முகன் தாதையென்று உந்தீபற
வெய்யவன் அங்கி விழுங்கத் திரட்டிய
கையைத் தறித்தான் என்று உந்தீபற, கலங்கிற்று வேள்வியென்று உந்தீபற
பார்ப்பதியைப் பகை சாற்றிய தக்கனைப்
பார்ப்பதென்னேயடி உந்தீபற, பணைமுலை பாகனுக்கு உந்தீபற
புரந்தரனார் ஒரு பூங்குயில் ஆகி
மரந்தனில் ஏறினார் உந்தீபற, வானவர் கோன் என்றே உந்தீபற,
வெஞ்சின வேள்வி வியாத்திரனார் தலை
துஞ்சியவா பாடி உந்தீபற, தொடர்ந்த பிறப்பற உந்தீபற
ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டியவா பாடி உந்தீபற, கொங்கை குலுங்கி நின்று உந்தீபற
உண்ணப் புகுந்த பகன் ஒளிந்து ஓடாமே
கண்ணைப் பறித்தவா உந்தீபற, கருக்கெட நாமெல்லாம் உந்தீபற
நாமகள் நாசி சிரம் பிரமன் படச்
சோமன் முகன் நெரித்து உந்தீபற, தொல்லை வினைகெட உந்தீபற
நான்மறையோனும் அகத்திய மான்படப்
போம்வழி தேடுமாறு உந்தீபற, புரந்தரன் வேள்வியில் உந்தீபற
சூரியனார் தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவா உந்தீபற, மயங்கிற்று வேள்வி என்று உந்தீபற
தக்கனார் அன்றே தலையிழந்தார் தக்கன்
மக்களைச் சூழநின்று உந்தீபற, மடிந்தது வேள்வியென்று உந்தீபற
சோழ அரசர்கள் விக்கிரம சோழன், அவனுடைய மகன் இரண்டாம் குலோத்துங்கன், பேரன் இரண்டாம் ராஜராஜனின் ஆகியோரது அவைப்புலவராக இருந்தவர் ஒட்டக்கூத்தர். அவர் இந்த மன்னர்கள்மீது விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா ஆகிய நூல்களை இயற்றினார். இரண்டாம் ராஜராஜ சோழன் காலத்தில்தான் சோழர்களின் மிகப்பெரிய நான்கு கோவில்களில் ஒன்றான தாராசுரம் கோவில் எழுப்பப்பட்டது. அவனுடைய காலத்தில்தான் ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணி என்ற பரணி நூலை எழுதினார். தக்கனின் யாகம், சிவன் அவமதிக்கப்படுதல், சதி உயிர்விடுதல், வீரபத்திரரின் தோற்றம், யாகம் அழிக்கப்படுதல் என அனைத்தும் இந்தப் பரணியில் கிடைக்கிறது.
காஞ்சி கைலாசநாதர் கோவிலில் மையக் கருவறையைச் சுற்றி சுவரில் தேவகோஷ்டங்களைக் காணலாம். அதைச் சுற்றி தேவகுளிகைகள் எனப்படும் சிறுசிறு கோவில்களைக் காணலாம். தெற்கு பிராகாரத்தில் உள்ள தேவகுளிகைகளில் வரிசையாக இருப்பவை சம்ஹாரமூர்த்திகள். வடக்கில் இருப்பவை அனுக்கிரஹ மூர்த்திகள். தெற்குக் குளிகை ஒன்றில் வீரபத்திரன் தக்ஷனின் யாகத்தை அழிக்கும் சிற்பம் ஒன்று உள்ளது.
சுற்றிலும் தேவர்கள் வீழ்ந்துகிடக்கின்றனர். மேலே வலது மூலையில் ஆட்டுத் தலை ஒன்று தென்படுகிறது. கீழே காண்பது அக்னியை, இரு தலைகளும் ஓர் உடலுமாக. பாண்டியர், சோழர் கோவில்களில் இந்த வடிவத்தை நான் அவ்வளவாகக் கண்டதில்லை. ஆனால் பின்னர் விஜயநகர எழுச்சிக்குப்பின் வீரபத்திர வடிவம் அனைத்துக் கோவில்களிலும் அவர்களால் நிர்மாணிக்கப்பட்டது. லெபாக்ஷியில் வீரபத்திரருக்கு என்றே பெரும் கோவில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் விஜயநகர, நாயக்கக் கோவில் விரிவாக்கங்களின்போது வீரபத்திரரின் பெரும் சிலைகள் வாயிலில் நிறுவப்பட்டன.
கீழே நீங்கள் காண்பது கர்நாடகத்தில் உள்ள நந்தி மலையில் கட்டப்பட்ட கோவிலில் உள்ள ஒரு தூண் சிற்பம்.
எத்தனை கைகள் உள்ளனவோ அதற்கு ஏற்ப ஆயுதங்கள் இருக்கும். முக்கியமாக வாளும் கேடயமும் தவறாமல் இருக்கும். தவிர, பிற கைகளில் சூலம், வில், அம்பு என்று தொடங்கி பிற ஆயுதங்கள். அருகில் ஆட்டுத் தலையுடன் தக்ஷன் இருப்பதைக் காணலாம்.
ஶ்ரீதத்வநிதி வீரபத்திரருக்கான படிம இலக்கணத்தைக் கொடுக்கிறது. அவருக்கு நான்கு கரங்கள், மூன்று கண்கள் இருக்கவேண்டும். முகம் கொடூரமாகவும் கோரைப் பற்களுடனும் இருக்கவேண்டும். கைகளில் வில், அம்பு, வாள், கதை ஆகியவை இருக்கவேண்டும். கபாலங்களால் ஆன மாலை அணிந்திருக்கவேண்டும். கால்களில் செருப்பு அணிந்திருக்கவேண்டும். வீரபத்திரருக்கு அருகில் பத்ரகாளியின் சிற்பமும் இருக்கவேண்டும். வலப்புறம் ஆட்டுத்தலையுடன் தக்ஷன் இருக்கவேண்டும். தக்ஷனின் கைகள் அஞ்சலி செய்யுமாறு காண்பிக்கப்படவேண்டும்.
காரணாகமத்தில் வேறு வடிவம் சொல்லப்படுகிறது. நான்கு கரங்கள், மூன்று கண்கள். தலையில் ஜடை, நெருப்பை உமிழ்ந்துகொண்டிருக்கவேண்டும். கோரைப்பற்கள் இருக்கவேண்டும். கழுத்தில் கபாலம், மணி, தேள் ஆகியவற்றால் ஆன மாலைகளை அணிந்திருக்கவேண்டும். பாம்பால் ஆன பூணூல் அணிந்திருக்கவேண்டும். கால்களில் செருப்பு அணிந்திருக்கவேண்டும். வீரபத்திரரின் வண்ணம் சிவப்பு. முகம் கோபம் கொண்டதாக இருக்கவேண்டும். கைகளில் வாள், கேடயம், வில், அம்பு ஆகியவை இருக்கவேண்டும்.
மேலே, மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலின் நாயக்கர் கால வீரபத்திரர் சிற்பத்தைக் காணலாம். இதேபோன்ற மாபெரும் வீரபத்திரர் சிற்பங்களை நாயக்கர் கால விரிவாக்கத்தில் பல கோவில்களில் காணலாம்.
2. காமதஹனர்
சதியின் இறப்புக்குப்பின் சிவன் இமயமலைக்குச் சென்று கடுந்தவம் இயற்றத் தொடங்கினார். அவரைச் சுற்றி எண்ணற்ற ரிஷிகளும் கணங்களும் இருந்தனர்.
இந்நிலையில் தாரகன் என்ற அசுரன், பல வரங்களைப் பெற்று தேவர்களை மிகுந்த அல்லலுக்கு உள்ளாக்கினான். இந்தக் கதையை விரிவாக சுப்ரமணியர் குறித்த அத்தியாயத்தில் பார்த்தோம். சிவனுக்குப் பிறக்கும் மகனால்தான் தாரகனுக்கு அழிவு என்பதைப் புரிந்துகொண்ட தேவர்கள் அனைவரும் பிரமனிடம் சென்றார்கள். அவருடைய அறிவுரையின்படி, தேவர்கள் ஹிமவானிடம் சென்று உதவி கேட்டனர்.
ஹிமவான்தான் இமயமலை. அவன் அவர்களிடம், தான் நகரவே முடியாத ஒரு மலை, தான் எப்படி அவர்களுக்கு உதவமுடியும் என்று கேட்டான். சிவனை மணந்துகொள்ளக்கூடிய ஒரு பெண்ணை அவர் பெற்றுத்தரவேண்டும் என்று தேவர்கள் ஹிமவானை வேண்டிக்கொண்டனர்.
அதன்படியே ஹிமவானுக்கும் அவனுடைய மனைவி மேனாவுக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. சதியே அவர்களுடைய மகளாகப் பிறந்தாள். அந்தக் குழந்தை, பர்வதத்தின் குழந்தை என்பதால் பார்வதி (மலைமகள்), கிரிஜா என்றெல்லாம் பெயர் பெற்றது.
அந்தக் குழந்தை வளர்ந்ததும் ஹிமவான் அவளை அழைத்துக்கொண்டு சம்புவைக் காண வந்தார். ஆனால் சிவனோ அவளை அருகில் நெருங்க விடவில்லை. பின் ஹிமவான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தனக்கு சேவை செய்ய பார்வதிக்கு அனுமதி அளித்தார்.
மறுபக்கம் தேவர்கள் கவலை கொண்டனர். பார்வதியும் சிவனும் விரைவில் இணைய என்ன செய்வது என்று யோசித்தனர். பிருஹஸ்பதி, காமதேவனான மன்மதனால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று யோசனை அளித்தார். அதன்படி இந்திரன் கூப்பிட்டனுப்ப, மலர் அம்புகளையும் கரும்பு வில்லையும் கொண்ட மன்மதன், தன் தேவியான ரதியுடன் அங்கு வந்தான். தேவர்கள் அவனிடம், ‘உடனடியாக சிவன் இருக்கும் இடம் போ. பார்வதியை சிவனோடு சேர்த்துவை’ என்றனர்.
மன்மதன், தன்னுடன் ரம்பை, ஊர்வசி, புஞ்சிகஸ்தலீ, சும்லோசா, மிஶ்ரகேஶி, சுபாகா, திலோத்தமை ஆகிய அப்சரஸ்களுடன் சிவன் இருக்கும் இடத்துக்கு விரைந்தான். சுவ கணங்களும் வீரபத்திரனும் அப்சரஸ்களை வெட்கமின்றி சூழ்ந்துகொண்டனர். மரங்கள் பூத்துக் குலுங்கின. அன்னங்களும் யானைகளும் மயில்களும் காமத்தால் சூழப்பட்டன. நந்தி இவற்றைக் கண்டு, இது அரக்கர்களின் வேலையோ என்று கவலைகொண்டார்.
இதற்கிடையில் மன்மதன், ஐந்து மலர் அம்புகளைத் தயாராக எடுத்து வைத்துக்கொண்டான். சிவனை நோக்கிக் குறிவைத்தான்.
அப்போது அங்கே பார்வதி, தன் தோழிகளுடன் வந்தாள். தங்க நிற மலர்களால் ஆன மாலையை சதாசிவருக்கு அணிவித்தாள். அவர் தன் கண்களைத் திறந்து கிரிஜாவைக் கண்டார். அப்போது மன்மதன், அவர்மீது மோஹனம் என்னும் அம்பை எய்தான். அம்பால் அடிபட்ட சிவனின் மனத்தில் ஆசை பொங்கியது. பார்வதியின் முகம் அழகு பொருந்தியதாக இருந்தது. அவளுடைய இதழ்கள் வில்வப் பழம்போல இருந்தன. கண்கள் அவளுடைய புன்னகையால் பொலிவடைந்தது. பற்கள் பிரகாசித்தன. அவள் நெருப்பிலிருந்து வெளிவந்தவள்போல ஜொலித்தாள். உலகையே மயக்கும் அழகை உடையவளாக இருந்தாள்.
சிவன் யோசித்தார். தாம் எந்தக் குறைகளும் அற்ற தவம் செய்துகொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் இந்தப் பெண்ணால் தம்மை எப்படி ஈர்க்க முடிந்தது? யார் இதற்குக் காரணம்? அனைத்துத் திசைகளிலும் பார்த்தார். தெற்கில் கையில் வில்லுடன் இருக்கும் மன்மதனைக் கண்டார். அவன் அவரை மீண்டும் தாக்கத் தயாராக இருந்தான்.
சிவனுடைய நெற்றிக்கண் திறந்தது. அந்த நொடியே, மன்மதன் நெருப்பால் எரிக்கப்பட்டு சாம்பலானான். பார்த்துக்கொண்டிருந்த தேவர்கள் துயரத்தில் கூக்குரலிட்டனர். மஹாதேவரை வேண்டினர். ‘ஐயா, பார்வதிக்கு உதவவே நாங்கள் மன்மதனை அனுப்பினோம். நீங்கள் அவனை எரித்துவிட்டீர்களே! தேவர்களாகிய நாங்கள் தாரகனால் மிகுந்த துயரத்துக்கு ஆளாகியுள்ளோம்’ என்றனர்.
ஆனால் சிவனோ, காமம், குரோதம் முதலியவற்றை விடுத்தலே நல்லது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மறைந்துவிட்டார்.
அதன்பின் என்ன ஆனது? இந்தக் கதையைப் பின்னர் சிவ-பார்வதி கல்யாணத்தின்போது பார்ப்போம். இப்போதைக்கு, கடும் கோபத்தால் காமனைக் கண்ணால் எரித்த காமதஹன மூர்த்தி பற்றி மட்டும் தெரிந்துகொள்வோம்.
காமதஹன மூர்த்தி, பார்ப்பதற்கு யோக தக்ஷிணாமூர்த்திபோலவே இருப்பார் என்கின்றன ஆகமங்கள். ஆனால், அருகில் மன்மதன் கீழே விழுந்திருப்பதுபோலக் காண்பிக்கவேண்டும். மன்மதன் கையில் ஐந்து மலரம்புகள் இருப்பதைப் போல் காண்பிக்கவேண்டும். மன்மதனுடன் ரதியும் இருக்கவேண்டும். மன்மதனின் வலதுகரத்தில் அம்புகளும் இடதுகரத்தில் வில்லும் இருக்கவேண்டும். ஐந்து அம்புகளுக்கு பதில் ஓர் அம்பு இருப்பதுபோலவும் செதுக்கலாம். சிவனுக்கு நான்கு கரங்களும் மூன்று கண்களும் இருக்கவேண்டும் என்கிறது பூர்வகாரணாகமம். அவரது முகம் கடும் கோபத்தில் இருக்கவேண்டும். ஒரு கையில் நாகம், ஒரு கையில் அக்கமாலை, ஒரு கையில் சூச்சி முத்திரை, மறு கையில் பதாக முத்திரை ஆகியவை இருக்கவேண்டும்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் காமதஹன மூர்த்தியின் சிற்பம் ஒன்று உள்ளது. கோஷ்டத்தைச் சுற்றியுள்ள சிற்பங்களில் மன்மதன் கதையைக் காணலாம். தக்ஷிணாமூர்த்தி வடிவில், வலக்கரங்களில் நாகத்தையும் சூச்சி முத்திரையையும் காணலாம்.
தாராசுரம் கோவிலில் முழுக் கதையாகவே இதனை நாம் காணலாம். தக்ஷிணாமூர்த்தி போன்ற அதே வடிவம். தலையில் ஜடாபாரம். இடப்புறம் மன்மதன் அம்பெய்வதையும், அதன்பின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டு கீழே வீழ்வதையும், அருகில் ரதி கைகூப்பி நிற்பதையும் காண முடிகிறது.
3. காலாரி மூர்த்தி
ம்ரிகண்டு என்றொரு முனிவர் இருந்தார். அவருக்கு மனஸ்வினி என்ற மனைவி. வெகு காலமாக இவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. எனவே ம்ரிகண்டு சிவனை வேண்டினார். சிவன் அவரிடம், பல காலம் வாழக்கூடிய, ஒன்றுக்கும் உதவாத பல பிள்ளைகள் வேண்டுமா, அல்லது பதினாறு ஆண்டுகள் மட்டுமே வாழக்கூடிய, அறிவில் சிறந்த ஒரே ஒரு பிள்ளை வேண்டுமா என்று கேட்டார். ம்ரிகண்டு அதிகம் யோசிக்கவில்லை. குறைந்த காலம் வாழ்ந்தாலும் பரவாயில்லை, அறிவில் சிறந்தவனாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்படிப்பட்ட வரத்தின் காரணமாகப் பிறந்தவனே மார்க்கண்டேயன்.
சிறந்த ஞானவானாக இருந்தான் மார்க்கண்டேயன். ஆனால் வயது ஆக ஆக, அவனுடைய பெற்றோர்கள் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாயினர். மார்க்கண்டேயன் இதற்கான காரணத்தைத் தெரிந்துகொண்டான். ஜனனமும் மரணமும் கடவுள் நினைத்தால்தான் என்று சொல்லிவிட்டு தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டான். இப்படியே பல தலங்களுக்குச் சென்று தரிசித்து, தன் உயிர் போகவேண்டிய நாள் அன்று ஒரு கோவிலை அடைந்தான் மார்க்கண்டேயன். லிங்கத்தை வழிபடலானான்.
இதற்கிடையில் யமன் தன் கிங்கரர்களிடம் மார்க்கண்டேயனின் ஆன்மாவைப் பற்றி எடுத்துக்கொண்டு வருமாறு ஆணையிட்டான். ஆனால் அவர்களால் இயலவில்லை. இதனால் யமன் தானே சென்று பார்க்க முடிவு செய்தான். லிங்கத்தைப் பூஜை செய்துகொண்டிருந்த மார்க்கண்டேயன்மீது தன் பாசக் கயிற்றை வீசிக் கட்டினான். இழுக்கலானான். ஆனால் மார்க்கண்டேயனோ லிங்கத்தைத் தழுவிப் பிடித்துக்கொண்டான்.
அப்போது லிங்கத்திலிருந்து மஹாதேவர் வெளிவந்தார். யமனைத் தன் காலால் ஓங்கி உதைத்தார். அவன் கையிலிருந்த பாசத்தைப் பிடுங்கிக்கொண்டு அவனைக் கீழே தள்ளினார்.
யமன் வேறு வழியின்றி மார்க்கண்டேயனை ஒன்றும் செய்யாமல் செல்லவேண்டியதாகியது. மார்க்கண்டேயனும் ‘என்றும் பதினாறு’ என்ற நிலையில் சாகாவரம் பெற்றவனானான். எல்லோரா தசாவதாரக் குகையில் இந்தக் காட்சி மிகச் சிறப்பாகச் செதுக்கப்பட்டுள்ளது.
லிங்கத்திலிருந்து வெளியே வரும் பிரம்மாண்டமான சிவன் நான்கு கரங்கள் கொண்டவராக இருக்கிறார். ஒரு கையில் சூலாயுதத்தின் அடிப்பாகம். அதன் கூர்முனையைப் பற்றும் மற்றொரு கை, யமனின் மார்பை நோக்கிச் செல்கிறது. ஒரு கை தொடையின்மீது. மறு கை வானை நோக்கிக் காட்டுகிறது. யமன் கீழே விழும் நிலையில் இருக்கிறான். இருவருக்கும் இடையில் மார்க்கண்டேயன் தரையில் மண்டியிட்டு லிங்கத்தைப் பூஜிக்கும் நிலையில் இருக்கிறான்.
பல்லவர், சோழர் இருவருமே இந்தக் காலாரிமூர்த்தி வடிவத்தைக் கோஷ்டங்களில் நிர்மாணித்தனர். காஞ்சிபுரத்தில் பிறவாஸ்தானம், இறவாஸ்தானம், முக்தேஸ்வரர், மாதங்கேஸ்வரர் ஆகிய சிறிய கோவில்களுடன் கைலாசநாதர் என்ற மாபெரும் கோவிலும் உள்ளது. இவை எல்லாவற்றிலுமே காலாரிமூர்த்தியின் அழகான சிற்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கீழே நீங்கள் காண்பது முறையே, இறவாஸ்தானம், முக்தேஸ்வரர், கைலாசநாதர் ஆகிய கோவில்களில் காணப்படும் காலாரிமூர்த்தி வடிவம்.
ஒவ்வொன்றிலும் யமனின்மீது சிவன் வெவ்வேறு விதமாக நர்த்தனம் ஆடிக்கொண்டிருக்கிறார். ஒன்றில் சூலம் மேல்நோக்கிச் செல்கிறது. மற்றொன்றில் கீழே யமனை நோக்கி. சிவனுக்கு முதலிரண்டில் நான்கு கைகள், மூன்றாவதில் நான்குக்கும் மேற்பட்ட கைகள். முதலாவதில் மேல் மூலையில் மார்க்கண்டேயன் லிங்கத்தைக் கட்டிப்பிடிப்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காஞ்சி கைலாசநாதர் கோவிலிலேயே தேவகோஷ்டத்தில் மிக மிக அழகான காலாரிமூர்த்தி சிற்பம் இன்னொன்று உள்ளது. இரு கைகளில் சூலாயுதத்தைப் பற்றியுள்ளார். ஒரு கையில் யமனிடமிருந்து பிடுங்கிய பாசக் கயிற்றைக் கொண்டு கீழ் நோக்கி அடிக்கும் பாவத்தில் இருக்கிறார். ஒரு கை விஸ்மயம், ஒரு கை சூச்சி முத்திரை.
இதன் மிக அழகான வடிவத்தை முதலாம் பராந்தக சோழன் காலத்தில் பூதி விக்கிரமகேசரி என்ற இருக்குவேளிர் சிற்றரசர் கொடும்பாளூரில் கட்டிய மூவர் கோவிலில் காணலாம். சிற்பச் சட்டகத்தில் யமனுக்குக் கொடுக்கப்படும் இடம் குறைக்கப்படுகிறது. வெற்றிடம் அதிகமாக்கப்படுகிறது. சிவனுடைய வடிவத்தில் மேலும் நளினம் கூட்டப்படுகிறது. சிவனுடைய நான்கு கைகளில் மழு, மான், பாசம், சூச்சி முத்திரை. சூச்சி, யமனைச் சுட்டுகிறது. சோழர்களின் பிற கோவில்களிலும் தொடர்ந்து காலாரிமூர்த்தி வடிவங்கள் செதுக்கப்பட்டாலும் கொடும்பாளூர் காலாரிமூர்த்திக்கு இவை யாவும் இணையாகமாட்டா.
தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளையின் சின்னமாக இதனையே பேராசிரியர் சுவாமிநாதன் தேர்ந்தெடுத்தார்.
இந்தக் காலாரிமூர்த்தியின் புன்னகை தனித்துச் சொல்லப்படவேண்டியது. ஒரு சிறு செதுக்கல் புன்னகையை மொத்தமாக மாற்றிவிடும் என்பார் பேராசிரியர் சுவாமிநாதன். கைலாசநாதர் கோவில் காலாரிமூர்த்தியிடம் ஒரு புன்னகை தொடங்குகிறது. அங்கே வாய்க்குள் உள்ள பல் வெளியே லேசாகத் தெரிகிறது. இங்கே கொடும்பாளூரில் வாயே திறவாத புன்னகை. கைலாசநாதர் சிற்பத்தில் முகம் ரௌத்ரத்தைக் காண்பிக்கிறது. கொடும்பாளூரில் ரௌத்ரம் கிட்டத்தட்ட காணாமல் போய்விடுகிறது.
ஆகமங்களில் காலாரிமூர்த்தியின் வடிவம் நான்கு அல்லது எட்டு கரங்களுடனும் மூன்று கண்களுடனும் இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. வாயில் கோரைப்பற்கள் இருக்கவேண்டும். பல்லவர்களின் சிற்பங்களில் கோரைப்பற்களைக் காணலாம். ஆனால் கொடும்பாளூர் சிற்பத்தில் காணமுடிவதில்லை. நான்கு கரங்கள் இருந்தால் சூலம், மழு, வரத முத்திரை, சூச்சி முத்திரை ஆகியவை இருக்கவேண்டும். எட்டு கரங்கள் இருந்தால் சூலம், மழு, வஜ்ரம், வாள், பாசம், கேடயம் ஆகியவற்றுடன் விஸ்மயம், சூச்சி ஆகிய முத்திரைகளையும் கொண்டிருக்கவேண்டும். சூலம் எவ்வாறு உயர்த்தப்பட்டிருக்கவேண்டும், கால்கள் எவ்வளவு உயரத்தில் தூக்கப்பட்டிருக்கவேண்டும், மழுவின் கூர்முனை எப்பக்கம் திரும்பியிருக்கவேண்டும் என்றெல்லாம் ஆகமங்களில் சொல்லப்பட்டாலும், கிடைத்துள்ள சிற்பங்களைப் பார்க்கும்போது கிட்டத்தட்ட அனைத்துமே மீறப்பட்டுள்ளன.
4. கங்காள மூர்த்தி
சிவ வடிவங்கள் சில, விஷ்ணுவின் அவதாரங்களை முடித்துவைப்பவையாக உருவாக்கப்பட்டுள்ளன. மச்சசம்ஹாரர், கூர்மசம்ஹாரர், வராகசம்ஹாரர், சரபேஸ்வரர், கங்காளர் ஆகியவை முறையே மத்ஸ்ய, கூர்ம, வராஹ, நரசிம்ம, வாமன அவதாரங்களை முடித்துவைப்பதாக வரும். இவற்றை சைவ, வைணவ மறைமுகப் போராகவும் கருதலாம். யார் யாரைவிடப் பெரியவர் என்பதைப் பேசுவதற்காக உருவாக்கப்பட்டவையாகக் கருதலாம். எனவே கங்காளரை முன்வைத்து மற்ற நான்கையும் சேர்த்தே பேசுவோம்.
இவை அனைத்தைப் பற்றியும் ஆகமங்களில் தகவல்கள் இருப்பதில்லை. தேவாரப் பாடல்களிலும் அனைத்தைப் பற்றியும் குறிப்பிடப்படுவதில்லை. ஆனால் சிலவற்றுக்கு சைவ ஆகமங்கள், சைவ புராணங்கள், தேவாரப் பதிகங்கள் ஆகியவற்றில் குறிப்புகள் உள்ளன. இவற்றுக்குப் பின் தோன்றிய சில சைவப் பாடல்களில் குறிப்புகளும் சில கோவில்களில் சிற்பங்களும் கிடைக்கின்றன.
சிவநெறிச் செய்யுள் திரட்டு என்னும் நூலில் மச்சசம்ஹாரர் எனும் சிவ வடிவம் குறித்த தகவல் வருகிறது. செருக்குடன் கடலில் உலவித் திரியும் திருமாலின் அவதாரமான மீனை பறவை வடிவில் சென்று பற்றிக் கொணர்ந்து, அந்த மீனின் கண்ணைப் பறித்து தன் கை விரலில் அணிந்துள்ள மோதிரத்தில் மணிபோலப் பதித்தார் சிவன் என்று இந்த நூல் குறிப்பிடுகிறது.
கூர்மாவதாரத்தை நிறைவு செய்த கூர்ம சம்ஹாரர் குறித்தும் வராஹ அவதாரத்தை நிறைவு செய்த வராஹ சம்ஹாரர் தேவாரப் பதிகங்களில் குறிப்புகள் வருகின்றன. நடராஜர் குறித்த பகுதியில் அவர் ஆமையோடு, பன்றிப்பல், புலிநகம் ஆகியவை கொண்ட மாலையை அணிந்திருப்பார் என்ற தகவல் ஆகமங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்தோம்.
மந்தர மலையை மத்தாக வைத்து வாசுகியைப் பாம்பாக வைத்து பாற்கடலைக் கடைந்தது தன்னால்தான் என்ற செருக்குடன் திருமாலின் கூர்மாவதாரமான ஆமை கடலில் திரிந்ததால், அதன் செருக்கை அடக்கி, ஆமையோட்டினைத் தனது தலைமாலையில் கோத்து சிவன் அணிந்துகொண்டார். இது சுந்தரர் தேவாரத்தில் ‘ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்டு உகந்து’ என்று பன்றிக் கொம்பையும் ஆமை ஓட்டையும் விரும்பி அணியும் பெருமான் என்று வருகிறது. சுந்தரர் தேவாரத்தில் பல இடங்களில் இதேமாதிரி வருகிறது.
வராஹ அவதாரம் முடிந்தபிறகு திருமாலின் பன்றி உரு செருக்குடன் காட்டில் அலைந்து அங்குள்ள உயிர்களுக்கெல்லாம் தொல்லை கொடுத்து வந்ததால், வேடன் வடிவில் சிவபெருமான் அந்தப் பன்றியை வேட்டையாடி, அதன் கொம்பினைப் பறித்து அணிந்துகொண்டார். அப்பர் தேவாரத்தில் ‘கொம்பினார் குழைத்த ஏனற் கோமகன் கோல நீர்மை நம்பினார் காணலாகா வகையதோர் நடலை செய்தார்’ என்று பாடுகிறார். பன்றி உருக்கொண்ட திருமாலின் செருக்கை அடக்க, அதன் ஒரு கொம்பை ஒடித்து தம் மார்பில் சூடிக்கொண்டார் என்று பொருள்.
நரசிம்ம அவதாரம், ஹிரண்யகசிபுவை அழித்தபிறகு, கோபம் தணியாமல் உலகைத் தொல்லை செய்தது. அதற்கு அறிவுரை கூற சிவன், வீரபத்திரரை அனுப்பினார். ஆனால் நரசிம்மம் கேட்கவில்லை. எனவே சரபம் என்ற ஒருபாதி விலங்கு, ஒருபாதி பறவை என்ற உருவெடுத்து எட்டுக் கால்கள், கூரிய நகங்கள், இரண்டு இறக்கைகள், நீண்ட வால், கூர்மையான பற்கள், வளைந்த மூக்கு, இருண்டு திரண்ட பெரிய கண்கள், இரு கரங்களில் மானும் மழுவும், மற்ற இரு கரங்கள் அபய முத்திரையுடன் நரசிம்மத்தைக் கவ்வி, வாலினால் கால்களைக் கட்டி, மார்பையும் கழுத்தையும் மழுவால் பிளந்து, பற்றி இழுத்து ஆகாயத்தில் பறந்து, அலைக்கழித்து அதன் செருக்கை அடக்கினார்.
சரபர் வடிவம் தாராசுரம், துக்காச்சி, திரிபுவனம் போன்ற கோவில்களில் காணப்படுகிறது. துக்காச்சி விக்கிரம சோழன் காலத்தைய கோவில். தாராசுரம், இரண்டாம் இராசராசன் காலத்தையது. திரிபுவனம், மூன்றாம் குலோத்துங்கனுடைய காலத்தையது. கீழே துக்காச்சி சரபேஸ்வரர் படத்தைக் காணலாம்.
இதன் தொடர்ச்சியாகத்தான் கங்காள மூர்த்தி வடிவம் வருகிறது.
திருமால் வாமன அவதாரம் எடுத்து மஹாபலியிடம் சென்று மூன்றடி மண் கேட்டு, பெற்றதும் உடனே திரிவிக்கிரம அவதாரம் எடுத்து வானையும் மண்ணையும் அளந்து மூன்றாவதாக மஹாபலியின் தலைமீதே கால் வைத்து அழுத்தி அவனைப் பாதாளத்தில் கொண்டுசேர்த்தார். அந்த வாமன-திரிவிக்கிரமர் உக்கிரம் தணியாதவராக உலகையே அழிக்கத் தொடங்க, தேவர்கள் முறையிட்டதனால் சிவன் கங்காள வடிவம் கொண்டு, வஜ்ஜிராயுதத்தினால் வாமனனை ஓங்கி அடித்து, வாமனத்தின் முதுகெலும்பை உருவி அதனைத் தண்டாக வைத்துக்கொண்டு அதில் வாமனத்தின் எலும்புகளைச் சேர்த்துக் கட்டிவைத்துக்கொண்டார்.
இதன் வேற்றுக் கதையை சுந்தரர் தேவாரத்தில் காணலாம்.
ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து
நிறைக்க மால் உதிரத்தினை ஏற்றுத்
தோன்று தோள்மிசைக் களேபரம் தன்னைச்
சுமந்த மாவிரதத்த கங்காளன்
சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன்
தன்னைத் தன்னிலா மனத்தார்க்கு
மான்று சென்றணையாதவன் தன்னை
வலிவலந்தனில் வந்து கண்டேனே
பிரமனின் ஒரு தலையை அறுத்து, திருமாலின் இரத்தத்தைப் பருகி, தனது தோளின்மீது திருமாலின் எலும்புக்கூட்டைத் தாங்கியவன் கங்காளமூர்த்தியாகிய சிவபெருமான் என்கிறார் சுந்தரர்.
கங்காளமூர்த்தியின் வடிவத்தை அம்சுமத்பேதாகமம், காமிகாகமம், காரணாகமம் போன்றவை கொடுக்கின்றன. அவர் நின்றகோலத்தில் இருப்பார். இடக்கால் பூமியில் ஊன்றியிருக்கும். வலக்கால் வளைந்து அவர் நடந்து செல்வதைக் குறிக்கும். தலையில் ஜடாமகுடம். அதில் ஊமத்தைப்பூ, நாகம், சந்திரன் ஆகியவற்றைச் சூடியிருப்பார். மகிழ்ச்சியான முகத்துடன் இனிய பாடல்களை இசைத்துக்கொண்டபடி அவர் நடப்பார். அவருடைய பற்கள் தெரியுமாறு, புன்னகையுடன் அவர் முகம் இருக்கும். நான்கு கரங்கள் கொண்டிருப்பார். ஒரு வலக்கரம் நாகத்தைப் பற்றியிருக்கும் அல்லது உடுக்கையைக் கொண்டிருக்கும். இன்னொன்று மானுக்குப் புல் கொடுக்கும். இடக்கரத்தில் கங்காள தண்டம் ஏந்தி, அதில் இறந்தோரது எலும்புகள் கோக்கப்பட்டிருக்கும். மயில் இறகாலும் கொடியாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
அரையில் கச்சமும் அதில் வெள்ளிப்பிடியுடன் அமைந்த தங்கக் குறுவாளும் இருக்கும். கால்களில் மரத்தாலான பாதுகைகளை அணிந்திருப்பார். உடலெங்கும் பாம்புகள் அணிகளாகத் திகழும். அவரைச் சுற்றி பூதகணங்களும் பெண்களும் ஆடிப்பாடிக்கொண்டிருப்பர். ஒரு பூதம் பெரிய பாத்திரம் ஒன்றைத் தலையில் ஏந்திக்கொண்டிருக்கும். அதில் பிச்சை எடுத்த உணவுப் பொருள் சேமிக்கப்பட்டிருக்கும். கங்காள மூர்த்தியிடம் கொண்ட காமத்தால் பெண்கள் ஆடை நெகிழ்ந்து நிற்பர். முனிவர்கள், தேவர், கந்தர்வர், வித்தியாதரர் ஆகியோர் அவரைச் சுற்றி வணங்கியபடி நிற்பர். கங்காளமூர்த்தி நடந்து செல்ல ஏதுவாக, வாயு தெருவை சுத்தம் செய்வார். வருணன் நீர் தெளிப்பார். தேவர்கள் மலர் தூவுவர். முனிவர்கள் வேதம் ஓதுவர். சூரியனும் சந்திரனும் குடைபிடிப்பர். நாரதரும் தும்புருவும் இசைப்பர்.
இத்தகைய விரிவான விளக்கத்தை இராமசேஷன், கிருஷ்ணன் ஆகியோரின் ‘மகேச்வர வடிவங்கள்’ என்ற புத்தகத்தில் கொடுத்துள்ளனர். அத்துடன் கங்காள மூர்த்திக்கும் பிக்ஷாடனருக்குமான வித்தியாசங்கள், கங்காள மூர்த்திக்கும் பைரவருக்குமான வேறுபாடுகள் ஆகியவற்றையும் விளக்கியுள்ளனர்.
கங்காள மூர்த்தி வடிவம் ஆடை அணிந்திருக்கும், பிக்ஷாடனர் வடிவம் ஆடையின்றி இருக்கும். சோழர் கோவில்கள் பலவற்றிலும் பிக்ஷாடனரைக் கோஷ்டங்களில் காணலாம். பிக்ஷாடனர், வலது முன்கையால் மானுக்கு உணவளிப்பார். கங்காளர் வலது பின்கையால் மானுக்கு உணவளிப்பார். பிக்ஷாடனர் வலது பின்கையில் உடுக்கை வைத்திருப்பார், கங்காளர் இடதுமுன்கையில் உடுக்கை வைத்து, வலது முன்கையால் பனா என்ற குச்சியை வைத்து அதைத் தட்டுவார். கீழே முதலில் பிக்ஷாடனர் சிற்பங்களைக் காண்போம்.
இப்போது கங்காளமூர்த்தியின் சிற்பங்களைக் காண்போம்.
கங்காளமூர்த்தியின் விரிவான சிற்பத்தொகுதி பிரம்மதேசத்தில் உள்ளது. சுவரில் அமைக்கப்பட்ட பல சிற்பங்களையும் சேர்த்தே கண்டு மகிழலாம்.
கையில் கங்காளத்தை ஏந்துவது தொடர்பாக இன்னுமொரு கதையும் வழங்குகிறது. பிரமனுக்கு தொடக்கத்தில் ஐந்து தலைகள் இருந்தன. சிவனுடைய சதாசிவ தத்துவத்தின்படி அவருக்கும் ஐந்து தலை. தான் சிருஷ்டி தொழிலைச் செய்வதாலும் தனக்கும் ஐந்து தலை இருப்பதாலும் பிரமன் தன்னை சிவனுக்கு இணையாக நினைத்து கர்வம் கொண்டிருந்தான். அந்த கர்வத்தை அடக்க, சிவன் தன் புருவத்தின் நடுவிலிருந்து பைரவரைத் தோற்றுவித்தார். பைரவர் பிரமனின் ஒரு தலையை அரிந்தார். ஆனால் அதன் காரணமாக சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பிரம்ம கபாலம் சிவனுடைய கையைவிட்டு நீங்கவில்லை. இந்த தோஷத்தை நிவர்த்தி செய்யும் வழி கேட்டு சிவன் விஷ்ணுவைக் காணச் சென்றார். அப்போது விஷ்வக்சேனர் சிவனை உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. எனவே கையில் இருந்த தண்டத்தால் விஷ்வக்சேனரை அடித்துக் கொன்று அவர் உடல் எலும்புகளை அள்ளிக் குவியலாக்கிக் கட்டிக்கொண்டார். ஆனால் இப்படிப்பட்ட மூர்த்தி பைரவ மூர்த்தியே என்கின்றனர் இராமசேஷனும் கிருஷ்ணனும். இந்த மூர்த்திக்கும் கங்காள மூர்த்திக்கும் அடிப்படையில் வேறுபாடு உள்ளது என்கின்றனர்.
பிரமனின் சிரசு அரிந்த பிரம்மசிரச்சேதக மூர்த்தி வடிவம் காஞ்சி கைலாசநாதர் கோவிலில் காணப்படுகிறது. இதுபோன்ற வடிவம் அதிகம் கிடைப்பதில்லை. ஆனால் இத்துடன் தொடர்புடைய பைரவ வடிவம் கற்சிலைகளாகக் கோஷ்டங்களிலும் செப்புப் படிமங்களாகவும் நிறையவே கிடைக்கின்றன. கோபிநாத ராவ், எட்டு பைரவ வடிவங்களை முதலில் தருகிறார். அவையாவன:
1. அஷ்டாங்க பைரவர்
2. ருரு பைரவர்
3. சண்ட பைரவர்
4. க்ரோத பைரவர்
5. உன்மத்த பைரவர்
6. காபால பைரவர்
7. பீஷண பைரவர்
8. சம்ஹார பைரவர்
இந்த எட்டு பைரவர்கள் ஒவ்வொன்றுக்கும் எட்டு உப வடிவங்கள் இருப்பதாகவும், எனவே மொத்தம் அறுபத்து நான்கு பைரவ வடிவங்கள் உள்ளதாகவும் கோபிநாத ராவ் கூறுகிறார். இவை குறித்து ருத்ர யாமளத்தில் தகவல்கள் உள்ளன.
இவை தவிர, வடுக பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் எனும் இரு வடிவங்களையும் அவர் விளக்குகிறார். கோவில்களில் இன்று நாம் அதிகம் காண்பது வடகிழக்கு மூலையில் மேற்கு அல்லது தெற்கு பார்த்த திசையில் நாய் அருகில் இருக்கும் காலபைரவர் சிற்பத்தை. சிவனுடைய பிரம்மஹத்தி தோஷம் காசியில் போக்கப்பட்ட காரணத்தால், காசி நகரின் தெய்வமாக பைரவர் கருதப்படுகிறார்.
5. கஜசம்ஹார மூர்த்தி
கஜசம்ஹார மூர்த்தி குறித்த கதைகளில் கஜாசுரன் யார் என்பதில் சில குழப்பங்கள் உள்ளன. கோபிநாத ராவ், அந்தகாசுரன் குறித்த கதையில் நீலன் என்னும் ராக்ஷசன் யானை உருவில் வந்ததைக் குறிப்பிட்டு அந்த யானையைக் கொன்றதை கஜாசுர வதமாகக் குறிப்பிடுகிறார். எனவே அந்தகாசுரன் கதையை முதலில் பார்த்துவிடுவோம்.
ஒருமுறை சிவபெருமானின் கண்களை பார்வதி விளையாட்டாக மூடியபோது அகில உலகங்களிலும் இருள் சூழ்ந்துகொண்டது. அச்சத்தால் பார்வதியின் உடலில் வியர்வை பரவியது. அந்த வியர்வையிலிருந்தும் இருளிலிருந்தும் காண்பதற்கு அருவருக்கத்தக்கவனும் கண் பார்வை அற்றவனுமான அந்தகாசுரன் தோன்றினான். ஆக, சிவனும் பார்வதியுமே அவனுடைய பெற்றோர்.
ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகஷிபு என்னும் திதியின் இரு பிள்ளைகளை விஷ்ணு வராக, நரசிம்ம அவதாரம் எடுத்து வதம் செய்தார். இவர்களில் ஹிரண்யாக்ஷன் வதம் செய்யப்பட்டபிறகு அசுரர்களின் தலைவனாக அந்தகாசுரன் ஆனான். பல்வேறு தவங்களை மேற்கொண்டு, வரங்களைப் பெற்றான்.
செருக்கு அதிகமானவுடன் கைலாயத்தின்மீதே படையெடுத்து, பார்வதியைக் கைப்பற்ற முனைந்தான். அச்சமயத்தில்தான் நீலன் என்ற அசுரன் யானை வடிவெடுத்து சிவனைத் தாக்கிக் கொல்ல வந்தான். அந்த யானையை அழித்து, தோலை உரித்து அணிந்துகொண்ட வடிவம்தான் கஜசம்ஹார மூர்த்தி வடிவம். க்ருத்திவாஸன் என்ற அதேபொருளைத் தரும் சொல்லும் இறைவனுக்கு அப்போதுதான் ஏற்பட்டது.
அந்தகாசுரனுடனான யுத்தம் மிகக் கடுமையாக நடந்தது. சிவன் தன் திரிசூலத்தால் அந்தகாசுரனைக் குத்த, கீழே விழும் ஒவ்வொரு ரத்தத் துளியும் புதிய அந்தகாசுரன்களாக முளைத்தன. அப்போதுதான் பல்வேறு கடவுள்களின் சக்திகளான சப்தமாதர்கள் உருவாயினர். சிவன் யோகேஸ்வரி என்ற இன்னொரு சக்தியையும் உருவாக்கினார். இந்த மாதர்கள் அனைவரும் அந்தகாசுரனின் ரத்தத்தை உறிஞ்சினர். புதிதாக உருவான அந்தகாசுரன்களை மாய்த்தனர். இறுதியில் அந்தகாசுரன் முற்றிலுமாகக் கொல்லப்பட்டான்.
அந்தகாசுர வதம் மிகப் பிரம்மாண்டமாக மும்பை எலிபண்டா குகையிலும் (கரபுரி) எல்லோராவின் பல குகைகளிலும் காட்டப்பட்டுள்ளன. கரபுரி குகையின் சிற்பங்கள் வெகுவாக அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் அந்த அழிவையும் மீறி அதன் தாக்கத்தை நம்மால் உணரமுடியும்.
சிவனுக்கு எட்டு கரங்கள். அவற்றில் இரண்டில் திரிசூலத்தை ஏந்தி அந்தகாசுரனைத் துளைக்கிறார். அவனுடைய உடலிலிருந்து ரத்தம் சிந்துகிறது. அதனை யோகேஸ்வரி கீழே அமர்ந்தபடி தன் கையில் வைத்துள்ள கோப்பையில் பிடிக்கிறாள். சிவன் கையிலேயே கபாலம் உள்ளது. அதைக்கொண்டும் அவர் அந்தகாசுரனின் ரத்தம் கீழே சிந்திவிடாமல் சேகரிக்கிறார்.
எல்லோராவில் உள்ள அந்தகாசுர வதத்தில் அவர் ஒரே நேரத்தில் அந்தகனையும் வதம் செய்கிறார், கஜாசுரனான நீலனையும் வதம் செய்கிறார். யானையின் தோலை உரித்து அதனைத் தன்னைச் சுற்றி விரித்துப் பிடித்திருக்கிறார்.
அந்தகாசுர வத வடிவம் அதிகம் தமிழகப் பகுதிகளில் கிடைப்பதில்லை. பட்டதகல், புவனேஸ்வரம் ஆகிய இடங்களில் முற்றிலும் வேறான சிற்ப மாதிரிகளாக, ஆனால் பெரும்பாலும் அதே இலக்கணத்தில் அந்தகாசுர வத மூர்த்தங்களைக் காணலாம். கோஷ்டங்களுக்குள் அமைக்கவேண்டியிருப்பதால், யோகேஸ்வரி, பார்வதி ஆகியோர் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.
கஜசம்ஹார மூர்த்திகளைப் பொருத்தமட்டில், எல்லோரா கைலாசநாதர் கோவிலின் சிற்பம் மிகவும் முக்கியமானது. கோவிலுக்குள் நுழையும் வாயிலில் ஒரு பெரும் சுவரில் இந்த மாபெரும் சிற்பத்தைக் காணலாம். குவியலாக அசுரர்களைக் கீழே தள்ளி மிதித்தபடி, பத்து கரங்களுடன், யானைத் தோலைக் கிழித்துப் போர்த்தியபடி, அனைத்துவித ஆயுதங்களையும் கையில் ஏந்திக்கொண்டு நிற்கிறார் கஜசம்ஹாரர். அருகில் பார்வதி அமர்ந்திருக்கிறாள்.
காஞ்சிபுரத்தில் பல்லவர்களின் இறவாஸ்தானம், முக்தேசுவரர் கோவில், மாதங்கேஸ்வரர் கோவில் மூன்றிலுமே கஜசம்ஹார வடிவம் கிடைக்கிறது. இவை ஒவ்வொன்றிலும் சிற்சில வேறுபாடுகளைக் காணலாம்.
காஞ்சி கைலாசநாதர் கோவிலில் தேவகுளிகை ஒன்றிலும் தேவகோஷ்டத்தின் மேல் உள்ள சிற்பம் ஒன்றிலும் காணப்படும் கஜசம்ஹார வடிவங்கள் கீழே.
இந்த வடிவத்தை சோழர்கள் பெரிதும் விரும்பி எடுத்துக்கொண்டனர். கீழே சோழர்களில் நான்கு கஜசம்ஹார மூர்த்திகளைப் பார்த்துவிடுவோம். இவை முறையே கொடும்பாளூர், கீழப்பழுவூர், திருப்பழனம், தஞ்சை அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் இருப்பவை. கோஷ்டத்தின் அளவைப் பொருத்து மூர்த்தியின் அகலத்தை மாற்றிக்கொள்வதைக் காண முடிகிறது. தேவகோஷ்டத்திலோ, விமான கோஷ்டத்திலோ எங்கு வேண்டுமானாலும் கஜசம்ஹார மூர்த்தி வடிவத்தை அமைத்துள்ளனர்.
கஜசம்ஹாரமூர்த்தி வடிவத்துக்கு நான்கு அல்லது எட்டு கரங்கள் இருக்கலாம். நான்கு கரங்கள் இருந்தால் அவற்றில் ஒரு கையில் பாசம், மற்ற கைகள் யானைத் தோலைக் கிழித்தபடி இருக்கவேண்டும். எட்டு கரங்கள் இருந்தால் ஐந்தில் திரிசூலம், உடுக்கை, பாசம், கபாலம், யானைத் தந்தம் ஆகியவற்றையும் இரண்டு யானைத் தோலைக் கிழித்தபடியும் ஒன்று விஸ்மய முத்திரையைக் காட்டியபடியும் இருக்கும். ஒரு கால் யானைமீது வலுவாகப் பதிந்தபடி இருக்கும். மற்றொன்று நன்றாக உயர்த்தித் தூக்கியபடி இருக்கும். உடல் வெகுவாக வளைந்திருக்கும்.
கஜசம்ஹார மூர்த்தி வடிவங்களை மிகச் சிறிய குறுஞ்சிற்பங்களாகவும் சிறு பலகைச் சிற்பங்களாகவும் சோழர் கோவில்களில் வடித்துள்ளனர். அங்கே நாடகீயத் தன்மை சேர்க்கப்பட்டிருப்பதையும் காணலாம்.
கோனேரிராஜபுரத்தில், குழந்தை குமரன் தந்தை சிவனது கடும் செயலைக் கண்டு அஞ்சுவதாகவும், தாய் பார்வதியின் கையிலிருந்து தாவுவதாகவும் தாவும் குழந்தையை அருகில் ஒரு சேடிப் பெண் வாங்கிகொள்வதாகவும் சிறிய சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. அதைவிடச் சிறியதாக புள்ளமங்கையில் கைக்குள் அடங்கக்கூடிய சிற்பத்தில் மேலும் நாடகீயத் தன்மை கூட்டப்படுகிறது. இங்கே கோனேரிராஜபுரத்தின் அதே காட்சி. கூடவே பார்வதி, ‘போதும் போதும் உங்கள் விளையாட்டு! நிறுத்துங்கள், குழந்தை பயந்துவிட்டான்’ என்று சொல்வதுபோலக் கையை உயர்த்துவதாகவும் சேர்த்தே வடிக்கப்பட்டுள்ளது.
6. திரிபுராந்தகர்
இந்த அத்தியாயத்தின் தலைப்பு புறநானூற்றுப் பாடலிலிருந்து வருகிறது.
மதுரை மருதன் இளநாகனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்கு அறிவுரை சொல்லும் வகையில் இந்தப் பாடலைப் பாடுகிறார். ‘உன்னிடம் நால்வகைப் படைகள் இருந்தாலும், நடுநிலை தவறாத அறநெறியே உன் வெற்றிக்கு அடிப்படை’ என்கிறார். அப்படிப்பட்ட பாடலில் போகிற போக்கில் சிவபெருமான் முப்புரங்களை எரித்ததைச் சொல்லிச் செல்கிறார்.
ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வெற்றி தந்த
கறைமிடற்று அண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல
என்று செல்லும் இந்தப் பாடல். ஒரு மலையை வில்லாக்கி, பாம்பை நாணாக்கி, ஒரு கணையால் மூன்று நகரங்களைப் பொடிப்பொடியாக்கினார் கழுத்தில் கறை கொண்ட, நெற்றியில் கண் கொண்ட அண்ணல். இதுதான் தகவல். ஆனால் தமிழின் மிக ஆரம்பகட்ட இலக்கியங்களிலேயே இந்தக் கதை வெகுவாக ஆழ ஊன்றியிருக்கிறது என்பதுதான் இங்கு முக்கியம்.
முப்புரங்கள், மூன்று நகரங்கள் எவை? ஏன் அவற்றை சிவபெருமான் அம்பெய்து அழிக்கவேண்டும்?
தாரகன் என்ற அசுரனை அழிக்க குமரன் பிறக்கவேண்டியிருந்தது என்று பார்த்தோம். அந்தத் தாரகனுக்கு மூன்று மகன்கள், தாரகாக்ஷன், வித்யுன்மாலி, கமலாக்ஷன். இம்மூவரும் மேரு மலை சென்று பிரமனை நோக்கிக் கடுந்தவத்தை மேற்கொண்டனர். பிரமன் நேரில் வந்தார். இவர்களும் முதலில் சாகாவரம் கேட்டனர். பிரமன் மறுத்தார். விஷ்ணு, சிவன் இருவரைத் தவிர வேறு அனைவருக்குமே தொடக்கமும் முடிவும் உண்டு. எனவே வேறு எதையாவது கேளுங்கள் என்றார்.
மூவரும், யாராலுமே துளைக்கமுடியாத மூன்று கோட்டைகளைக் கேட்டனர். விஷ்வகர்மாவைக் கொண்டு தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன கோட்டைகளை நிர்மாணித்துத் தரச் சொல்லினர். பிரமனும் அவ்வாறே செய்தார். தங்கக் கோட்டையை தாரகாக்ஷன் எடுத்துக்கொண்டான். கமலாக்ஷன் வெள்ளியால் ஆன கோட்டையை எடுத்துக்கொண்டான். வித்யுன்மாலி இரும்புக் கோட்டையைத் தனதாக்கிக்கொண்டான்.
இந்த மூன்று கோட்டைகளும் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஒரே நேர்கோட்டில் வரும். அப்போது ஒரே அம்பால் சிவன் இந்தக் கோட்டைகளை அழிக்கலாம். மற்றபடிக்குத் தங்களுக்கு அழிவே கூடாது என்ற வரத்தைப் பெற்றனர். அம்மூவருமே சிவனின் பக்தர்கள், எனவே சிவனால் தமக்கு அழிவு வராது என்று நம்பினர்.
இம்மூன்று உலகங்களும் மக்களால் நிரம்பிற்று. யானைகள், குதிரைகள், நவரத்தினங்கள் நிரம்பிய அரண்மனைகள், கல்ப விருக்ஷங்கள், பத்மராகக் கல் பதித்த தேர்கள், அப்சரஸ்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோர் நிரம்பினர். ருத்ரனுக்குக் கோவில்கள் எழும்பின. பிராமணர்கள் நிரம்பினர். வேத வேள்விகள் நிகழ்ந்தன. நீர்நிலைகள் நிரம்பின. தோட்டங்களில் பழங்கள் பெருகின. மொத்தத்தில் செல்வமும் வளமும் பெருகி மக்கள் மிக மகிழ்ச்சியாக இருந்தனர்.
தேவர்கள் இதனால் மிகுந்த கவலைக்கு உள்ளாயினர். தாரகாக்ஷனும் அவன் சகோதரர்களும் தங்களைத் துன்புறுத்துவதாக பிரமனிடம் முறையிட்டனர். அவர்களை அழிக்குமாறு வேண்டினர். ஆனால் பிரமனோ, என் வரத்தால்தான் அவர்கள் செழிப்பாக உள்ளனர், எனவே அவர்களைத் தான் அழிக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார். சிவனிடம் முறையிடச் சொன்னார்.
அவர்கள் அனைவரும் இந்திரன் தலைமையில் சிவனிடம் முறையிட்டனர். அவரோ, தாரகாக்ஷன் முதலிய மூவரும் சிவபக்தர்கள், எனவே அவர்களை ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார். விஷ்ணுவிடம் சென்று ஆலோசனை கேட்கச் சொன்னார்.
விஷ்ணு யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார். ஓர் அவதாரத்தை உருவாக்கினார். அதற்கு அரிஹத் என்று பெயர் சூட்டினார். அரிஹத், மொட்டைத் தலை, அழுக்கு ஆடை, கையில் ஒரு பாத்திரம், ஒரு பஞ்சுப் பொதி ஆகியவற்றைக் கொண்டிருந்தது. ‘தர்ம, தர்ம’ என்று உச்சரித்துக்கொண்டிருந்தது. விஷ்ணு அரிஹத்திடம், ‘பதினாறு லட்சம் பாடல்கள் அடங்கிய ஒரு ‘ஏமாற்று’ புனித நூலை அபப்ரம்ஸ மொழியில் இயற்று. திரிபுரங்களுக்கும் சென்று அங்குள்ள அசுரர்களுக்கு இந்தப் புதிய தத்துவத்தை போதி’ என்றார். அரிஹத்துக்கு நான்கு சீடர்கள் வந்தனர்.
நாரதர் திரிபுர அசுரர்களிடம் சென்று இந்தப் புதிய மதம் குறித்து எடுத்துச் சொன்னார். தானுமே அந்த மதத்தைப் பின்பற்றுவதாகச் சொன்னார். இதைக் கேட்ட அசுரர்கள் அரிஹத்தை அணுகி, அவருடைய பாதையைப் பின்பற்ற முடிவெடுத்தனர்.
அசுரர்கள் சிவ வழிபாட்டை விடுத்து வேறு மதத்துக்கு மாறியவுடன் விஷ்ணு கைலாயம் சென்று சிவனைத் துதித்தார். அசுரர்கள் புத்த மதத்துக்கு மாறியதையும் வேதச் சடங்குகளை நிறுத்திவிட்டதையும் சொன்னார். இதுதான் அவர்களை அழிக்கத் தக்க சமயம் என்றார்.
சிவன் உடனே தனக்கென சிறப்பான ஒரு தேர், தேரோட்டி, வில், அம்பு ஆகியவற்றை உருவாக்க முனைந்தார்.
விஷ்வகர்மா இந்த உலகம் அனைத்தையும் ஒன்றாக்கி ஒரு தேரை உருவாக்கினார். அதன் வலதுபக்கச் சக்கரம் பன்னிரண்டு ஆரங்களைக் கொண்டதாக இருந்தது. பன்னிரு ஆதித்தியர்களும் அதைத் தாங்கினர். இடதுபக்கச் சக்கரம் பதினாறு ஆரங்களைக் கொண்டிருந்தது. சந்திரனின் பதினாறு காலங்களைக் குறித்தது. ஆறு காலங்களும் சக்கரத்தின் விளிம்புகளாயின. பிரம்மா தேரை ஓட்ட முன்வந்தார். மலைகளின் அரசன் மந்தர மலை வில்லானது. பாம்புகளின் அரசன் வாசுகி நாண் ஆனது. விஷ்ணு அம்பாக ஆனார். அக்னி அம்பின் முனை.
மூன்று நகரங்களும் நேர்க்கோட்டில் வரும்போது சிவன், விஷ்ணுவாகிய அம்பை எய்ய, முப்புரங்களும் எரிந்து சாம்பலாயின.
இதுதான் சிவபுராணத்தில் வரும் விரிவான கதை. சில மாற்றங்களும் உண்டு. தம்மால்தான் இந்தப் போரே சாத்தியமாகிறது என்று பலரும் நினைக்க, அந்தச் செருக்கை அழிக்கும் வண்ணம், சிவன் மெல்ல நகைக்க, அந்த நகைப்பொலியாலேயே முப்புரங்களும் எரிந்தன. சிரித்துப் புரமெரித்த பிரான் என்று சிவன் அழைக்கப்படுகிறார்.
திரிபுர சம்ஹாரம் விரிவான சிற்பங்களாக காஞ்சி கைலாசநாதர் கோவிலிலும் எல்லோரா குகைகளிலும் காணப்படுகிறது. பிற்காலங்களில் கோஷ்ட சிற்பங்களாக, திரிபுர விஜயர் என்னும் வடிவில் சிவன் கையில் வில்லும் அம்பும் ஏந்திய வடிவமாக ஆகிவிடுகிறது. முதலில் எல்லோராவின் தசாவதார குகையின் சிற்பத்தைக் காண்போம்.
இங்கே குதிரைகள் பூட்டிய தேர் முழுமையாக உள்ளது. அதில் சிவன் நிற்கிறார். தேரை பிரமன் இயக்குவது தெரிகிறது. சிவன் வில்லைப் பூட்டி நாணை இழுக்கத் தயாராக இருக்கிறார். இருக்கும் இடத்துக்குள் குதிரைகளைக் கொண்டுவர, அவை திரும்பிய நிலையில் பக்கவாட்டுச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன.
எல்லோராவின் கைலாசநாதர் கோவில் மாபெரும் ஒற்றைக்கல் தளியாகும். அங்கே மிகப் பிரம்மாண்டமான முறையில் திரிபுராந்தகர் சிற்பம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் பெரும்பாலும் சிதைவடைந்துள்ள நிலையிலும் அதன் தனித்தன்மையால் சிறந்துவிளங்குகிறது.
நாம் மேலே பார்த்த அதேபோன்ற அமைப்பு. குதிரைகள் மேலும் பெரிதாக உள்ளன. வளைந்து பக்கவாட்டுச் சுவரில் செதுக்கப்பட்டுள்ளன. சிவன் அம்பை எய்யும் நிலையில் உள்ளார். மிக அழகிய சிற்பம் இது. சுற்றிலும் அசுரர்கள் சிதறிக்கிடப்பதைப் பார்க்கிறோம்.
காஞ்சி கைலாசநாதர் கோவிலில் பல திரிபுராந்தகர் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் இரண்டை இங்கே காண்போம்.
முதலில் இருப்பது தேவகுளிகை ஒன்றில் காணப்படும் சிற்பம். அடுத்தது, தேவகோஷ்டத்தில் இருப்பது. இரண்டிலுமே தேரில் செல்வது போன்றே காண்பிக்கப்பட்டுள்ளது. அம்பை எய்வதுபோல அன்று.
சோழர் காலச் சிற்பங்களுக்கு வரும்போது, தேரும் பெரிதாக இருப்பதில்லை. கையில் வில், அம்பு ஏந்தியவராகக் காணப்படுவார். அவ்வளவே. இதே வடிவிலேயே செப்புச் சிலைகளும் உருவாக்கப்பட்டன. இங்கே வில்லும் அம்பும் தனித்தனியாகச் செய்துவைக்கவேண்டியிருப்பதால் கையின் வடிவத்தையும் முத்திரைகளையும் கொண்டே திரிபுராந்தகர் என்பதைக் குறிப்பிடவேண்டியிருக்கிறது.
கொடும்பாளூர் மூவர் கோவிலில் தற்போது இருக்கும் சிற்பம் ஒன்று, அங்கிருந்து பெறப்பட்டு சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள சிற்பம் ஒன்று, சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள சோழர் காலச் செப்புச் சிலை ஒன்று ஆகியவற்றைக் கீழே நீங்கள் காணலாம்.
மூன்றுமே முழுதும் வெவ்வேறு மாதிரியானவை. இதில் முதலாவது, இயங்கு சிற்பம். கிட்டத்தட்ட கஜசம்ஹாரமூர்த்திபோல் கால்களைக் கொண்டுள்ளார். அம்பை எடுத்து வில்லில் சேர்த்து எய்வதற்கான பிரயத்தனத்தில் இருக்கிறார் எனலாம். அடுத்ததில் சமபங்கத்தில் நிற்கிறார். இருபுறமும் வில்லும் அம்புத்தூணியும். மூன்றாவதில் திரிபங்கத்தில் நிற்கிறார். நான்கு கரங்கள். முன்னிரு கரங்களில் வில்லையும் அம்பையும் தாங்குவது குறிப்பால் உணர்த்தப்படுகிறது. மூன்றுமே திரிபுர சம்ஹாரத்தைக் குறிப்பவையே.
மாணிக்கவாசகரின் திருவுந்தியார் பாடலை தக்ஷ யாகத்தை அழிக்கும் வீரபத்திரர் தொடர்பில் பார்த்தோம். அதில் முதல் சில வரிகள் திரிபுராந்தகர் குறித்ததே.
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற, ஒருங்குடன் வெந்தவா உந்தீபற
ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீபற, ஒன்றும் பெருமிகை உந்தீபற
தச்சு விடுத்தலும் தாமடி யிட்டலும்
அச்சு முறிந்ததென்று உந்தீபற, அழிந்தன முப்புரம் உந்தீபற
உய்யவல் லாரெரு மூவரைக் காவல்கொண்டு
எய்யவல்லானுக்கே உந்தீபற, இளமுலை பங்கனென்று உந்தீபற
திரிபுராந்தக வடிவம் எட்டுவிதமானவையாக ஆகமங்களில் குறிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கிடையே சிறு சிறு வேறுபாடுகளே உள்ளன. நாயக்கர் காலச் சிற்பங்களிலும் அதன்பின்னர் மிகச் சமீபத்திய காலங்களில் உருவாக்கப்பட்ட சிற்பங்களிலும் தேர் குறித்து புராணங்களில் கூறியதுபோன்றும் சந்திரன், சூரியன் ஆகியவை தேர்ச் சக்கரங்களாக இருப்பதுபோன்றும் உருவாக்கப்பட்டுள்ளன.
7. ஜலந்தரவத மூர்த்தி
சிவ புராணத்தில் மிக நீண்ட கதை ஜலந்தர வதம். திரிபுர சம்ஹாரத்தை அடுத்து உடனடியாக இந்தக் கதை தொடங்குகிறது. ஜலந்தரனுடைய பிறப்பே சுவாரசியமானது.
ஒருமுறை இந்திரனும் பிற தேவர்களும் சிவனைக் காண கைலாயம் வந்தனர். அப்போது இந்திரனுடன் விளையாட எண்ணி, சிவன், வேறு வடிவமெடுத்து, வந்தவர்களைத் தடுத்தார். அவர் உடலில் ஆடையின்றி, ஜடாமுடியுடன் இருந்தார். ‘யார் நீ? எங்கிருந்து வந்திருக்கிறாய்? உன் பெயர் என்ன? சிவன் உள்ளே இருக்கிறாரா, இல்லையா?’ என்று இந்திரன் அவரிடம் கேட்டான். அந்த நபரோ பதிலே பேசவில்லை. ஒருமுறை, இருமுறை, மும்முறை கேட்டும் அந்த நபர் பதில் பேசாமல், வழியை மறித்தபடி நகராமல் நின்றுகொண்டிருந்தார். ‘அடேய், நான் கேட்டுக்கொண்டே இருந்தும் நீ பதில் சொல்லமாட்டேன் என்கிறாயா? உன்னை என் வஜ்ராயுதத்தால் இப்போதே கொன்றுபோடுகிறேன். யார் உன்னைக் காப்பார்கள் என்று பார்க்கிறேன்’ என்ற இந்திரன் வஜ்ரத்தைக் கையிலெடுத்தான்.
ஆனால் இந்திரனின் தூக்கிய கை சிவனின் சக்தியால் அப்படியே நின்றுபோனது. சிவனுடைய கோபம் கட்டுக்கடங்காமல் போனது. அவரது கண்கள் சிவந்தன. உடனே இந்திரனுடன் கூடவந்த பிருஹஸ்பதிக்கு விஷயம் தெரிந்துபோனது. அப்படியே தரையில் விழுந்து வணங்கி சிவனைத் துதிக்கலானார். இந்திரனையும் தரையில் விழுந்து வணங்கச் செய்தார். இந்திரனைக் காப்பாற்றுமாறு வேண்டிக்கொண்டார்.
சிவன் இந்தத் துதியால் மகிழ்ந்தார். இந்திரனை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டார். ஆனால் இதற்குள் அவர் நெற்றிக்கண்ணில் தோன்றிய நெருப்பை மீண்டும் உள்ளே எடுத்துக்கொள்ள முடியாதே? எனவே அதனை சமுத்திரத்தில் செலுத்தினார். அவ்வாறு சமுத்திரத்தில் செலுத்தப்பட்ட அந்த நெருப்பு ஒரு குழந்தையாக வடிவெடுத்தது. அந்தக் குழந்தை ஓவென்று பெருங்குரலெடுத்து அழத் தொடங்கியது.
அழுகைச் சத்தத்தைக் கேட்ட பிரமன் அங்கே சென்று பார்த்தார். சிவனுடைய குழந்தை அது என்று கண்டுகொண்டு வாரி அணைத்துக்கொண்டார். அந்தக் குழந்தையோ அவருடைய கழுத்தைப் பிடித்துக் குலுக்கியெடுத்து அவர் கண்ணிலேயே நீர் வருமாறு செய்துவிட்டது. பிறகு ஒருவாறு தன்னை விடுவித்துக்கொண்ட பிரமன், அக்குழந்தைக்கு ஜலந்தரன் என்று பெயர் வைத்தார். சமுத்திர ராஜனை அழைத்து, அந்தக் குழந்தையை நன்கு பார்த்துக்கொள்ளுமாறு சொன்னார். சிவனைத் தவிர வேறு யாராலும் அவனை வெல்ல முடியாது என்பதுபோன்ற பல வரங்களை அக்குழந்தைக்கு அருளிவிட்டுச் சென்றார்.
ஜலந்தரன் வளர்ந்து பெரியவனானதும் காலநேமி என்று அசுரனின் மகள் விருந்தா என்பவளை அவனுக்கு மணம் செய்வித்தனர். ஜலந்தரன், அசுரர் குலத் தலைவனானான்.
ஒருமுறை ஜலந்தரனைக் காணப் பலரும் வந்திருந்தனர். அவர்களில் ராஹுவும் ஒருவன். ராஹுவின் தலை இல்லா உடலைக் கண்ட ஜலந்தரன் அதற்கான காரணத்தைத் தன் குருவிடம் கேட்டான். அவர் பாற்கடல் கடையப்பட்டபோது நடந்தவற்றையும், அமிர்தம் வேண்டி ராஹு நடந்துகொண்டவிதத்தையும், விஷ்ணுவால் அவன் உடல் வெட்டப்பட்டதையும் சொன்னார். பாற்கடலைக் கடைந்தபோது நிறைய மதிப்புமிக்க ரத்தினக் கற்கள் வெளிவந்ததையும் அவற்றையெல்லாம் இந்திரன் முதலானோர் எடுத்துக்கொண்டு சென்றதையும் அவர் சொன்னார்.
கடும் கோபம் அடைந்த ஜலந்தரன் ஒரு தூதனை இந்திரனிடம் அனுப்பி, சமுத்திரத்திடமிருந்து பெற்ற அனைத்தையும் திருப்பித் தருமாறு கேட்டான். இந்திரன் மறுக்க, ஒரு பெரும் தேவாசுர யுத்தம் நடைபெற்றது. தேவர் தரப்பில் செத்துவிழும் தேவர்களை தேவகுரு, துரோண மலையிலிருந்து கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு எழுப்பிக்கொண்டிருந்தார். இதைத் தெரிந்துகொண்ட ஜலந்தரன், அந்த மலையையே பெயர்த்தெடுத்துக் கடலில் போட்டுவிட்டான். இதனால் தேவர்கள் தோற்று ஓடினர்.
தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். விஷ்ணு ஜலந்தரனுடன் போர் செய்ய வந்தார். விஷ்ணுவின் மனைவியான லக்ஷ்மியும் சமுத்திரத்திலிருந்து வந்ததால், ஜலந்தரன் விஷ்ணுவை தன் மைத்துனன் என்று அழைத்தான். யுத்தம் கடுமையாகச் சென்றது. ஜலந்தரனை விஷ்ணுவால் தோற்கடிக்க முடியவில்லை. அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று விஷ்ணு கேட்க, விஷ்ணுவும் லக்ஷ்மியும் அவனுடைய நகரமான ஜலந்தரத்தில் அவனுடன் சேர்ந்து வசிக்கவேண்டும் என்று ஜலந்தரன் கேட்டுக்கொண்டான். விஷ்ணுவும் வேறு வழியின்று சம்மதிக்கவேண்டியிருந்தது.
தேவர்கள் நிலை தெரியாமல் தடுமாறினர். நாரதர் ஒரு வழியை யோசித்தார். நேராக ஜலந்தரனிடம் சென்று, கைலாயத்தையும் பார்வதியையும் பற்றி அவனிடம் விரிவாகப் பேசினார். ‘நீ என்னதான் மூவுலகங்களையும் வென்றாலும் அவையெல்லாம் கைலாயத்துக்கு ஈடாகா. அதேபோல பார்வதியின் அழகுக்கு ஈடு இணையே இல்லை’ என்று நாரதர் சொன்னதால் ஜலந்தரனுக்குப் பார்வதியின்மீது கடும் காமம் ஏற்பட்டது.
உடனே ஒரு தூதனை கைலாயம் அனுப்பி, சிவனிடம் பார்வதியைத் தன்னிடம் அனுப்பிவைக்குமாறு ஆணையிட்டான். சிவன் கடும் கோபம் அடைந்தார்.
இதற்கிடையில் பார்வதியை நேரில் காண விரும்பிய ஜலந்தரன், சிவனுடைய வடிவத்தை எடுத்துக்கொண்டு சென்றான். பார்வதி முதலில் அது சிவன் என்று நினைத்து வந்து, பின் உண்மையை உணர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாள். மிகுந்த கோபம் அடைந்து விஷ்ணுவை அழைத்து, ‘இதென்ன? ஜலந்தரன் செய்த செயலைப் பார்த்தீர்களா? ஏதாவது செய்து அவனுடைய கொட்டத்தை அடக்கவேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாள்.
ஆனால் ஜலந்தரனை யாராலும் தோற்கடிக்க முடியாது. விருந்தாவின் கற்பின் வலிமையே இதற்குக் காரணம் என்பதை அறிந்த விஷ்ணு, இதற்கென ஓர் உபாயத்தை யோசித்தார். விருந்தாவின் கனவில் துர்சொப்பனங்கள் நிறையத் தோன்றின. பயந்துபோன அவள் காடுகளில் அலைந்தாள். அப்போது அவள் ஒரு முனிவரைச் சந்தித்தாள். அவரிடம் இரு வானரங்கள் இருந்தன. அவர் கண் காட்டியதும் அந்த வானரங்கள் ஜலந்தரனின் இறந்துபோன உடலை அவளிடம் கொண்டுவந்து காண்பித்தன. இதனை விருந்தாவால் புரிந்துகொள்ள முடியவில்லை. யாராலும் வெல்லப்பட முடியாத தன் கணவன் எவ்வாறு கொல்லப்பட்டிருப்பான் என்று புலம்பினாள். அந்த முனிவரிடம் தன் கணவனுடைய உயிரை மீட்டுத்தரக் கேட்டுக்கொண்டாள்.
அதெல்லாம் சாத்தியமே இல்லை என்று முதலில் சொன்ன அந்த முனிவர், பின்னர் அந்த உருவத்தை உயிர்பெறச் செய்தார். பின் அவ்வாறு உயிர்பெற்ற உருவமும் விருந்தாவும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி உறவுகொண்டனர். அப்போதுதான் விருந்தாவுக்கு உண்மை தெரியவந்தது. விஷ்ணு ஜலந்தரன் உருவம் எடுத்துத் தன்னை ஏமாற்றிவிட்டதை அவள் தெரிந்துகொண்டாள். பின்னொரு காலத்தில் தன் மனைவியை இழந்து வாடுவார் என்று விஷ்ணுவைச் சபித்தாள். வானரங்களின் உதவிகொண்டே அந்த மனைவியைத் திரும்பப் பெறமுடியும் என்றும் சபித்தாள். பிறகு தீயில் பாய்ந்து தன் உயிரை மாய்த்துக்கொண்டாள். அவளுடைய உடலிலிருந்து பெரும் ஒளி தோன்றி கைலாயத்தில் உள்ள பார்வதியின் உடலில் சென்று இணைந்துகொண்டது.
இப்போது ஜலந்தரன்மீதான கற்பின் வலிமை போய்விட்டது. அவன் பார்வதியைத் தேடி சிவன் இருக்குமிடம் சென்றான். இருவருக்கும் இடையில் பெரும் யுத்தம் ஏற்பட்டது. சிவன், தன் கால் கட்டை விரலால் தரையில் ஒரு வட்டம் ஏற்படுத்தினார். அதிலிருந்து சுதர்சனச் சக்கரம் உருவானது. அதைக் கொண்டு ஜலந்தரனின் கழுத்தை வெட்டினார். ஜலந்தரன் அழிந்தான். அவனுடைய உடலிலிருந்து பெரும் ஒளி தோன்றி, சிவனுடைய உடலில் சென்று புகுந்துகொண்டது.
இந்தக் கதை பொதுவாக அதிகம் கோவில்களில் காணப்படுவதில்லை. ஆனால் காஞ்சி கைலாசநாதர் கோவிலில் பல இடங்களில் ஜலந்தரவதமும் காட்டப்பட்டுள்ளது, ஓரிடத்தில் ஜலந்தரன் பிறப்பும் காட்டப்பட்டுள்ளது. கூடவே காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவர் கோவில்களான இறவாஸ்தானம், முக்தேச்வரர் ஆகியவற்றிலும் ஜலந்தர சம்ஹாரம் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
முதலில் கைலாசநாதர் கோவிலில், கைலாயத்தில் சிவனைக் காண வரும் இந்திரன், சிவனை அடிக்க வஜ்ரத்தை ஓங்கும் சிற்பத்தைக் காண்போம்.
கீழே வலது மேற்புறத்தில் ஒரு கண வடிவில் இருப்பது சிவனே. அது சிவன்தான் என்பதைக் குறிக்க, அவர் பத்மத்தின்மீது இருப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. புராணத்தில் சிவன், கண வடிவில் இல்லாமல் மிகப் பெரிய உருவில், உடலில் ஆடைகளின்றி இருப்பதாக வருகிறது. ஆனால் இந்தச் சிற்பத்தில் கணவடிவில்தான் சிவன் உள்ளார். கையை ஓங்கி வஜ்ரத்தால் அடிக்க முற்படுவது இந்திரன். சிவபுராணம், ஓங்கிய அவனுடைய கை அப்படியே உறைந்து நின்றுபோனது என்கிறது. ஆனால் இங்கே பிரமனும் தேவர்களும் அவனைப் பிடித்து நிறுத்துகின்றனர். ஜடாமுடியுடன் இருப்பது தேவகுரு பிருஹஸ்பதி. வலது கீழ்ப்புறத்தில் கைகூப்பியபடி, சிறு குழந்தை வடிவில், பாதி உடல் தெரியுமாறு இருப்பது ஜலந்தரன். அவன் இருப்பது சமுத்திரத்தில் என்று தெரிவதற்காக சுற்றிலும் தாமரை மலர்கள் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தச் சிற்பத்தில் ஜலந்தரன் பிறப்பு காட்டப்பட்டுள்ளது. அடுத்து, காஞ்சியில் பல கோவில்களிலும் உள்ள ஜலந்தரவதத்தைப் பார்ப்போம்.
முதலில் இறவாஸ்தானம், அடுத்து முக்தேஸ்வரர், அடுத்து கைலாசநாதர். அனைத்திலும் ஸ்வஸ்திகாசனத்தில் சிவன் அமர்ந்துள்ளார். யோகபட்டம் கட்டியுள்ளார். கையில் அக்கமாலை, கமண்டலம் போன்றவை. கீழே பெரிதாக இருப்பது ஜலந்தரன். ஆனால் அவனை வதம் செய்யும் காட்சி அவ்வளவு தெளிவாக இருப்பதில்லை. காஞ்சி கைலாசநாதர் கோவிலின் மற்றுமொரு சிற்பத்தில் இந்தக் காட்சி மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.
ஒரு சக்கரம் மிகத் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. அது ஜலந்தரனின் கழுத்தை வெட்டிக்கொண்டிருக்கிறது. சிவன் யோக நிலையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு மேலாக சூரியனும் சந்திரனும் அஞ்சலி செய்தவண்ணம் உள்ளனர். பக்கவாட்டில் பிரமனும் விஷ்ணுவும் விஸ்மய முத்திரையும் அஞ்சலி முத்திரையும் காட்டியபடி உள்ளனர்.
பல்லவர்களின் காஞ்சிபுரக் கோவில்களைத் தாண்டி வேறு இடங்களில் நான் ஜலந்தரசம்ஹார மூர்த்தியைக் கண்டதில்லை. ஒருவேளை சில இடங்களில் இருக்கலாம்.
0
சிவனுடைய சம்ஹார வடிவங்கள் மேலும் சில உள்ளன. ஆனால் விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். முக்கியமாக, மாகேஷ்வர வடிவங்கள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுவிட்டன.
(தொடரும்)