Skip to content
Home » கல்லும் கலையும் #13 – ஓங்கி உலகளந்த உத்தமன்

கல்லும் கலையும் #13 – ஓங்கி உலகளந்த உத்தமன்

ஓங்கி உலகளந்த உத்தமன்

விஷ்ணு புராணத்தின் மூன்றாவது புத்தகம், இரண்டாவது அத்தியாயத்தில் ஒரே ஒரு வரி மட்டுமே உள்ளது. “விஷ்ணுவே கஷ்யபருக்கும் அதிதிக்கும் வாமனன் என்ற மகனாகப் பிறந்தார்; மூன்றடிகளால் இந்த உலகையே அடக்கி அதை இந்திரனுக்கு வழங்கி அவனுடைய அவமானத்தைத் துடைத்தார்.”

ப்ரஹ்லாதனைப் பற்றிப் பக்கம் பக்கமாக, அத்தியாயம் அத்தியாயமாகப் பேசிய விஷ்ணு புராணம், ஒரே வரியில் நரசிம்ம அவதாரத்தையும் முடித்துவிட்டது. “பலவிதமான முயற்சிகளால் ப்ரஹ்லாதனைக் கொல்லமுடியாமல் போக, பின் நரசிம்மர் ஹிரண்யகஷிபுவைக் கொல்ல, ப்ரஹ்லாதன் ஆட்சிக்கு வந்தான்.” அவ்வளவுதான்!

ஆனால் பாகவத புராணம் மிக விரிவாக ஹிரண்யனுக்கும் நரசிம்மருக்கும் நடந்த சண்டையை விவரித்தது. அதனை நாம் ஏற்கெனவே பார்த்தோம். அதேபோல, வாமன அவதாரக் கதையையும் திரிவிக்கிரம விஸ்வரூபத்தையும் அறிந்துகொள்ள நாம் பாகவத புராணத்தையே நாடவேண்டியுள்ளது.

ப்ரஹ்லாதனின் மகன் விரோசனன். விரோசனனுக்கும் விசாலாக்ஷிக்கும் பிறந்தவன் பலி. அவன் இந்திரனுடன் கடும் யுத்தம் புரிந்தான். ஆனால் அதில் தோற்றுப்போனான். எனவே அசுர குருவான சுக்ராச்சாரியார், அவனுடைய பலத்தை அதிகப்படுத்த முனைந்தார்.

பிருகு வம்சத்தைச் சேர்ந்த பிராமணர்கள் விஸ்வஜித் என்ற யாகத்தைச் செய்தனர். அந்த யாகத்தின் முடிவில் பொன்னாலான தேர் ஒன்று வெளிப்பட்டது. தங்க வில்லும் முடிவே இல்லாத அம்புகளைக் கொண்ட தூணியும் வெளிப்பட்டன. தாத்தா ப்ரஹ்லாதன் வாடாமலர்களைக் கொண்ட மலர்வளையத்தை அவன் தலைமீது சூடினார். குரு சுக்ராச்சாரியார் சங்கு ஒன்றைக் கொடுத்தார்.

பலி, யாகம் செய்த பிராமணர்களையும் ப்ரஹ்லாதனையும் வணங்கித் தேரில் ஏறினான். கவசங்களை அணிந்துகொண்டான். தங்க வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டான். நேராக இந்திரனை எதிர்கொள்ளக் கிளம்பினான். விஸ்வகர்மாவால் கட்டப்பட்ட இந்திரனின் தலைநகரை முற்றுகையிட்டான்.

இந்திரன் தன் குருவான பிரஹஸ்பதியிடம், பலியை எவ்வாறு எதிர்கொள்வது என்று ஆலோசித்தான். அவர், “பலியின் சக்தி, பிராமணர்கள் செய்த யாகத்தின் விளைவாகக் கிடைத்தது. அவனை இப்போதைக்கு நாராயணன் ஒருவரால்தான் வெல்ல முடியும். ஆனால் நாளடைவில் பிராமணர்களை அவனே அவமதிப்பான். அதனால் தன் சக்தியை இழப்பான். தனக்கும் தன் உற்றார் உறவினர்க்கும் அழிவைக் கொண்டுவருவான். அதுவரை தேவர்கள் ஒளிந்து வாழவேண்டியதுதான்” என்றார். அதன்படியே தேவர்கள் தம் நகரத்தை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். பலி அந்த நகரத்தைக் கைப்பற்றி தன் ஆட்சியின்கீழ்க் கொண்டுவந்தான். நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்து, இந்திர பதவியைத் தானே கைப்பற்றிக்கொண்டான்.

கஷ்யப முனிவருக்கு இரு மனைவியர். திதி, அதிதி. அசுரர்கள் திதியின் மக்கள். தேவர்கள் அதிதியின் மக்கள். தன் மக்கள் இவ்வாறு சொத்து சுகம் இழந்து வாடுவதைக் கண்ட அதிதி, கஷ்யபரிடம் சென்று முறையிட்டாள். கஷ்யபர், அதிதிக்கு ‘பயோவ்ரதம்’ என்ற நோன்பைச் சொல்லிக்கொடுத்தார். விஷ்ணுவின்மீது செய்யப்படும் நோன்பு இது. ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்னும் பன்னிரண்டு எழுத்து மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவேண்டும். நறுமணம் கமழும் அரிசியைப் பாலில் சமைத்து, நெய், வெல்லம் சேர்த்து ஹரிக்கு நைவேத்யம் செய்யவேண்டும். விஷ்ணு சிலைக்கு பால், தயிர், நெய், தேன், சர்க்கரை ஆகியவற்றால் (பஞ்சாம்ருதம்) திருமஞ்சனம் செய்யவேண்டும். பிராமணர்களுக்கு உணவளிக்கவேண்டும். தக்ஷிணை அளிக்கவேண்டும். அனைத்து மக்களுக்கும் உணவளித்துவிட்டுத்தான் உண்ணவேண்டும். வேறு பல யமங்களையும் நியமங்களையும் பின்பற்றவேண்டும்.

அதிதி, கஷ்யபர் சொன்னபடி பன்னிரண்டு நாள் இந்த நோன்பைப் பின்பற்றினாள். கையில் சங்கு, சக்கரம், கதையுடன் பீதாம்பரம் அணிந்த மஹாவிஷ்ணு அவள்முன் தோன்றினார். அவள் நெடுஞ்சாண்கிடையாகக் கீழே விழுந்து வணங்கினாள். துதித்தாள். போற்றினாள்.

விஷ்ணு அவளுடைய மனத்தில் உள்ளதைப் புரிந்துகொண்டார். பயோவ்ரதத்தைச் சரியாக செய்ததால் மகிழ்ந்த அவர், அவளுக்குத் தானே மகனாகப் பிறப்பதாகவும், அவளுடைய மகன்களான தேவர்களைக் காப்பதாகவும் வரம் கொடுத்தார். அதேபோல அதிதியின் வயிற்றில் மகனாகவும் பிறந்தார்.

வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட
கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே

என்று பெரியாழ்வார் ஆய்ப்பாடியில் நடந்த நிகழ்வுகளைப் படமெடுத்துக் காட்டியதுபோல, அதிதிக்கு மகனாக விஷ்ணு பிறந்ததும் சங்கங்கள் முழங்கின. முரசுகள் அதிர்ந்தன. இசைக்கருவிகள் இசைத்தன. அப்சரஸ்கள் ஆடினர். கந்தர்வர்கள் பாடினர். தேவர்கள் விஷ்ணுவைப் புகழ்ந்தனர். அதிதியின் குடிலைப் பூக்களால் நிறைத்தனர்.

பெயர்சூட்டல் சடங்குகள் நிகழ்ந்தன. பின்னர் உபநயனச் சடங்குகள் நிகழ்ந்தன. சூரியனே காயத்ரி மந்திரத்தைச் சொல்லிக்கொடுத்தான். பிரஹஸ்பதி யக்ஞோபவீதம் அணிவித்தார். தந்தை கஷ்யபர் நாணல் புல்லால் ஆன மௌஞ்சியை இடுப்பில் கட்டினார். நிலமடந்தை மான்தோல் தந்தாள். தாய் அதிதி கோமணம் தந்தாள். வானுலகு குடை கொடுத்தது. பிரமன் கமண்டலம் கொடுத்தார். சப்தரிஷிகள் தர்பைப் புல் கொடுத்தனர். சரஸ்வதி மணி மாலை அளித்தாள். உபநயனச் சடங்குகள் முடிந்ததும் குபேரன் பிச்சைப் பாத்திரம் அளித்தான். உமை அன்னை முதல் பிச்சையை இட்டாள்.

இதற்கிடையில் பலி (இன்றைய குஜராத்தின்) நர்மதை ஆற்றங்கரையில் அஸ்வமேத யாகம் செய்துகொண்டிருந்தான். வாமனர் நேராக அங்கு சென்றார். கையில் குடை, கழி, கமண்டலம் ஆகியவற்றுடன் யாகசாலையை அடைந்தார். ஒளிப்பிழம்புபோல் நடந்துவரும் வாமனரைக் கண்டவர்கள் இவன் சூரியனோ, அக்னியோ, சனத்குமாரரோ என்றெல்லாம் பேசிக்கொண்டனர்.

பலி வாமனரை வரவேற்று உபசரித்து அமரச் செய்தான். ‘நீ எதையோ நாடி இங்கே வந்திருக்கிறாய். ஓ பிராமணனே, உனக்கு என்ன வேண்டுமோ கேள், தருகிறேன்’ என்றான். வாமனர் அவனையும் அவனுடைய குடும்பத்தையும் வெகுவாகப் புகழ்ந்தார். தனக்கு மூன்றடி மண் மட்டும் போதும் என்றார். உடனே பலி சிரித்துக்கொண்டே, ‘வேண்டிய அளவு எடுத்துக்கொள்’ என்று சொல்லி கையிலிருந்த கமண்டலத்திலிருந்து வாமனர் கையில் நீர் வார்க்கச் சென்றான்.

அப்போது சுக்ராச்சாரியார் பலியைத் தடுத்தார். ‘இந்த பிரம்மச்சாரிப் பையன் சாட்சாத் விஷ்ணுவே. நீ விளைவுகளை எதிர்பாராமல் சத்தியம் கொடுத்துவிட்டாய். இதனால் தைத்யர்களுக்குப் பெரும் அழிவுதான் வரப்போகிறது. இந்தப் பையன் தன் உருவத்தைப் பெருக்கி, அனைத்து உலகத்தையும் உன்னிடமிருந்து பறித்து இந்திரனுக்குக் கொடுக்கப்போகிறான். எனவே இந்தச் செயலைச் செய்யாதே’ என்றார்.

ஆனால் பலி கேட்கவில்லை, ‘ப்ரஹ்லாதனின் வழித்தோன்றலான நான் சொன்ன சொல்லிலிருந்து நழுவமாட்டேன். ததீசி, இந்திரனுக்கு வஜ்ராயுதம் செய்வதற்காகத் தன் எலும்பைக் கொடுத்தார். சிபிச் சக்கரவர்த்தி, புறாவுக்காகத் தன் உடலையே கொடுத்தார். வந்தது விஷ்ணுவாகவே இருக்கட்டும். என் எதிரியாகவேகூட இருக்கட்டும். சொன்ன சொல்லைக் காப்பேன்’ என்றான்.

தன் சொல்பேச்சைக் கேட்காத பலியை சுக்ராச்சாரியார் சபித்தார். அதைப்பற்றிக் கவலைப்படாத பலி தன் மனைவி விந்தியாவலியுடன் சேர்ந்து, வாமனரின் கால்களைத் தங்கப் பாத்திரத்திலிருந்து நீர் வார்த்துக் கழுவினான். அந்த நீரைத் தன் தலையில் தெளித்துக்கொண்டான். தெரிந்தே தான் ஜெயித்த மூவுலகங்களையும் தன் எதிரிகளுக்கு இழக்கத் தயாரானான். இந்தச் செயலைக் கண்ட தேவர்களே அவனை வெகுவாகப் பாராட்டினர். அவன்மீது மலரைச் சொரிந்தனர்.

வரத்தைப் பெற்றுக்கொண்ட விஷ்ணு தன் விஸ்வரூபத்தை எடுக்கலானார். பலியும் அசுரர்களும் விஷ்ணுவின் உடலில் பிரபஞ்சத்தையே கண்டனர். திரிவிக்கிரம சொரூபத்தில் விஷ்ணு ஒரு பாதத்தில் பலியின் பூலோகத்தைக் கடந்தார். ஆகாசத்தைத் தன் உடலால் நிறைத்தார். இன்னொரு பாதத்தால் வானுலகைக் கடந்தார். மஹர்லோகம், ஜனலோகம், தபலோகத்தைக் கடந்து அவருடைய பாதம் சத்யலோகத்தை அடைந்தது.

அங்கே பிரமன் இருந்தார். அவர் விஷ்ணுவின் பாதத்தை வணங்கினார். தன் கையிலிருந்த கமண்டலத்தால் அவருடைய தாமரைப் பாதங்களை அலம்பினார். அந்த நீர் வானில் கங்கை நதியாயிற்று. விஷ்ணு பலியை ஜெயித்ததைக் கொண்டாட, கரடிகளின் அரசன் ஜாம்பவான் தோல் கருவிகளைக் கொட்டியபடி மகிழ்ந்தார்.

ஆனால் அசுரர்களோ கடும் கோபம் அடைந்தனர். தங்களை ஏமாற்றி, மூன்றடி நிலம் என்று சொல்லி, அனைத்தையும் கைப்பற்றிக்கொள்ள முயலும் செயலைக் கண்டித்தனர். பாகவதத்தில் இல்லை, ஆனால் பெரியாழ்வார் பாசுரத்தில் இவ்வாறு வருகிறது:

என்னிது மாயம் என்னப்பன் அறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாயென்ன
மன்னு நமுசியை வானில் சுழற்றிய
மின்னுமுடியனே அச்சோவச்சோ வேங்கடவாணனே அச்சோவச்சோ

பலியின் மகன் நமுசி. அவன் வாமன-திரிவிக்கிரமனிடம், ‘என் தந்தைக்கு இதெல்லாம் புரியவில்லை. நீ என்ன மாயம் செய்கிறாய்? இவ்வாறு உருவத்தை மாற்றிக்கொண்டு அளக்கலாகாது. எனவே பழைய உருவத்துக்கு வந்து மூன்றடியை அளந்துகொள்’ என்கிறான். ஆனால் அவனை அப்படியே காலால் எத்தி உதைக்கிறார் திரிவிக்கிரமன். அவன் வானில் சுழன்று பறக்கிறான். இந்தக் காட்சி முக்கியம். இது அப்படியே சிற்பமாவதைப் பார்க்கப்போகிறோம்.

பலியின் அசுர வீரர்கள் ஒருபக்கம் அணி திரள்வதைக் கண்டதும் வைகுண்டத்தில் இருக்கும் விஷ்ணுவின் காவலர்கள் இந்தப் பக்கம் அணி திரண்டனர். நந்தன், சுனந்தன், ஜயன், விஜயன், பலன், பிரபலன், குமுதன், குமுதாக்ஷன், விஷ்வக்சேனர், கருடன், ஸ்ருததேவன், புஷ்பதந்தன், சாத்வதன் ஆகியோர், ஒவ்வொருவரும் பத்தாயிரம் யானை பலம் கொண்டவர்கள், அசுரப் படையுடன் மோதப் புறப்பட்டனர்.

இதனைக் கண்ட பலி, தன் படைகளிடம், ‘ஓ விப்ரசித்தி, ராஹு, நேமி! சண்டை வேண்டாம். பின்வாங்குங்கள். நிலைமை நமக்குச் சாதகமாக இல்லை. விஷ்ணுவிடம் சண்டை போடுமளவுக்கு நமக்குச் சக்தி கிடையாது. இதுநாள்வரை நமக்குச் சாதகமாகவும் தேவர்களுக்கு எதிராகவும் இருந்த கடவுள் இன்று தேவர்களுக்கு ஆதரவாக ஆகியுள்ளார். மீண்டும் விதி நமக்குச் சாதகமாக ஆகும். அதுவரை பொறுத்திருங்கள்’ என்றான்.

விஷ்ணுவின் படையினரால் தோற்கடிக்கப்பட்ட தைத்ய, தானவப் படைகள், பலி சொன்னதைக் கேட்டு, ரசாதல லோகத்துக்குள் புகுந்தனர். இதற்கிடையில் கருடன் பலியை வருணனின் பாசக்கயிற்றால் பிணைத்து விஷ்ணுவிடம் கைதியாக அழைத்துச் சென்றான்.

விஷ்ணு பலியிடம், ‘அசுரனே, நீ எனக்கு மூன்றடி மண் கொடுப்பதாகச் சொன்னாய். ஆனால் அனைத்து உலகங்களையும் நான் இரண்டே அடியால் கடந்துவிட்டேன். மூன்றாவது அடிக்கு இடம் கொடு. பொய்யான வாக்குறுதியைக் கொடுத்தால் உனக்கு நரகம்தான்’ என்றார்.

‘நான் ஒருகாலத்திலும் பொய் வாக்குறுதி கொடுக்கமாட்டேன். பொய்யாக நடந்துகொண்டது நீங்கள்தான். குறளனாக வந்து யாசகம் பெற்றபின் உருவத்தை மாற்றிக்கொண்டது நீங்கள்தான். இருந்தாலும் என் வாக்கு தவறாது. நான் பொய்யனாக மாட்டேன். மூன்றாவது அடியை என் தலைமீது வையுங்கள்’ என்றான்.

அப்போது ப்ரஹ்லாதனும் அங்கே வந்து விஷ்ணுவை வணங்கினான். பலியின் மனைவி விந்தியாவலியும் விஷ்ணுவை வணங்கினாள். விஷ்ணு பலியை வாழ்த்தினார். அவனுக்கென விஷ்வகர்மாவைக் கொண்டு சுதலம் என்று உலகில் வசிக்கச் செய்வதாகவும் அங்கே அவனை யாரும் எதிர்க்கமுடியாது என்றும் சுதர்சனச் சக்கரம் பலியையும் அவனுடைய மக்களையும் காக்கும் என்றும் வரமளித்தார். பலி, விஷ்ணுவை வணங்கி, தன் உற்றார் உறவினரோடு சுதலத்துக்குச் சென்றான். ப்ரஹ்லாதனையும் விஷ்ணு வாழ்த்தி, அவனையும் சுதலம் சென்று பலியுடன் இருக்குமாறு அனுப்பினார்.

அதன்பின், விஷ்ணு, பலியிடம் பெற்ற அனைத்து உலகங்களையும் இந்திரனுக்கு வழங்கி, அதிதிக்குத் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றினார்.

திரிவிக்கிரமர் – மாமல்லை, படம்: விஜய் பட்

மேலே நீங்கள் காண்பது மாமல்லையில் வராஹ மண்டபத்தில் காணப்படும் திரிவிக்கிரமச் சிற்பத் தொகுதி. கிட்டத்தட்ட வாமன திரிவிக்கிரமக் கதையின் முக்கியமான நிகழ்வுகளும் இந்தப் பெரும் தொகுதிக்குள் வந்துவிடுகின்றன. இந்தத் தொகுதிக்குள் மொத்தம் பதினொருவர் இருக்கின்றனர். நடுநாயகமாக இருப்பது விஷ்ணு, திரிவிக்கிரமனாக. எட்டு கரங்கள். வலது கரங்களில் சுதர்சனச் சக்கரம், உயரத் தூக்கிய கௌமோதகி எனும் கதை, உருவிய நந்தக வாள். நான்காவது வலது கரம் திறந்தபடி வானை நோக்கிச் செல்கிறது. இடது கரங்களில் சார்ங்கம் என்னும் வில், கேடயம், பாஞ்சஜன்யம் எனும் சங்கு. நான்காவது இடது கரம் நீண்டு செல்லும் கால் போகும் திசையைச் சுட்டிக் காட்டிக்கொண்டிருக்கிறது. வலது கால் தரையில் ஊன்றியுள்ளது. இடது கால் மேலே மேலே உயர்ந்து முகத்தின் உயரத்துக்குச் சென்றுவிட்டது.

கேடயத்துக்குக் கீழே இடதுபுறம் சந்திரன். வலதுபுறம், கதை பிடித்துள்ள கையின் கீழே சூரியன். சந்திரனுக்கு அருகில் வானில் சுழற்றி அடிக்கப்பட்ட பலியின் மகனான நமுசி. நீண்டு சத்யலோகம்வரை சென்றுள்ள இடது காலை பத்மத்தின்மீது அமர்ந்திருக்கும், நான்கு கரங்கள் கொண்ட பிரம்மா, தன் கமண்டலத்தால் அலம்புகிறார். அவருக்கு அருகில் ஜாம்பவான் மிருதங்கம் வாசிக்கிறார். மறுபக்கம், நான்கு கரங்களுடன் சிவன் பத்மாசனத்தில் அமர்ந்திருகிறார்.

கீழே நான்கு அசுரர்கள் திகைப்புடன் அமர்ந்துள்ளனர். அவர்கள் பலி, விப்ரசித்தி, ராஹு, நேமி ஆகியோராக இருக்கவேண்டும். ஒருவன் விஸ்மய முத்திரையைக் காண்பிக்கிறான். இன்னொருவன் உடைவாளை உருவ யத்தனிக்கிறான்.

காலகட்டத்தில் இதற்கும் முந்தையவை, பாதாமியில் உள்ள இரு வைணவக் குகைகளில் காணப்படும் பிரம்மாண்டமான வாமன திரிவிக்கிரமச் சிற்பத் தொகுதிகள். முதலில் குகை எண் இரண்டில் உள்ள சிற்பத்தைக் காண்போம்.

திரிவிக்கிரமர் – பாதாமி (குகை எண் 2), படம்: வி.கே. ஸ்ரீனிவாசன்

இங்கே முதலில் நாம் காண்பது இரு கைகளுடன், குள்ளமான பிரம்மச்சாரியாக வாமனரை. இடக்கையில் குடை பிடித்துள்ளார். வலக்கையை முன்னோக்கி நீட்டியுள்ளார். அருகில் பலி, தலையில் கிரீடம் இல்லாமல், தன் மனைவி விந்தியாவலி அருகில் நிற்க, கமண்டலத்தை இரு கைகளாலும் பிடித்தபடி வாமனரின் கையில் நீரை வார்க்கும் செயலில் உள்ளான். அவன் பின் நான்கு அசுரர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர்.

திரிவிக்கிரமனாக எட்டு கரங்களுடன் விஷ்ணு, கிட்டத்தட்ட பல்லவ சிற்பத் தொகுதியில் நாம் கண்டதைப் போன்றே உள்ளார். ஆனால் சில மாறுதல்கள். வலக்கரங்களில் பிரயோகச் சக்கரம், உயர்த்திப் பிடித்த கதை, வாள், கூடவே ஒரு கையில் அம்பு. இடக்கரங்களில் சங்கு, கேடயம், வில், நான்காவது உயர்ந்து செல்லும் காலைச் சுட்டிக் காட்டுகிறது. இங்கே இடக்கால் வயிற்று உயரத்தில் உள்ளது. அருகே சுழன்று கீழே விழும் நமுசி. மேலே கரடி ஜாம்பவான். அருகில் கையை உயர்த்தியபடி பறக்கும் ஓர் உருவம். அருகில் பிறைநிலவு. அதற்கு அருகில் வித்தியாசமான ஒரு முகம்.

மறுபக்கம், இரு அசுரர்கள். அவர்களில் ஒருவன் திரிவிக்கிரமனின் காலை இறுக்கப் பிடித்துக்கொண்டிருக்கிறான். இன்னொருவன் ஆவென உயர்ந்துகொண்டிருக்கும் உருவத்தைப் பார்த்துக் கையை நீட்டி ஏதோ சொல்ல முயல்கிறான்.

இந்தச் சிற்பத்தொகுதியில் பிரம்மாவும் சிவனும் இல்லை. இதேபோன்ற இன்னொரு சிற்பம், இதைவிடப் பெரியது, குகை எண் மூன்றில் உள்ளது.

திரிவிக்கிரமர் – பாதாமி (குகை எண் 3), படம்: வி.கே. ஸ்ரீனிவாசன்

இங்கே துரதிர்ஷ்டவசமாக வாமனரின் சிற்பம் முழுவதுமாகச் சிதைந்துபோய்விட்டது. குடை மட்டுமே தெரிகிறது. அருகில், தலையில் கிரீடம் இல்லாத பலி நீர் வார்க்கும் செயலில் உள்ளான். ஆனால் அவன் கையைப் பிடித்துத் தடுக்க முற்படும் சுக்ராச்சாரியார், அருகில், தலையில் கிரீடத்துடன் உள்ளார். அவருக்குப் பக்கத்தில் விந்தியாவலி நிற்கிறாள்.

திரிவிக்கிரமனின் வலது கால் தரையில் ஊன்றியிருக்க, இடது கால் வயிற்றளவில் உயர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. வலது கரங்களில் மாற்றம் ஏதுமின்றி, சக்கரம், அம்பு, கதை, வாள். கதை கீழ்நோக்கி உள்ளது. இடது கரங்களில் சங்கு, வில், கேடயம், நான்காவது கரம் உயரும் காலைச் சுட்டிக்காட்டுகிறது. காலுக்கடியில் நமுசி தலைகுப்புற விழுந்துகொண்டிருக்கிறான். அருகில் சூரியன் தெளிவாகத் தெரிகிறது. அதற்குமேல் வித்தியாசமான முகம். வில்லுக்குமேல் பிறைச் சந்திரன். மேலே உள்ள உருவங்களில் ஜாம்பவானை மட்டும் அடையாளம் காணமுடிகிறது. இங்கும் பிரம்மா, சிவன் காணப்படல்லை. கீழே ஒரேயொருவன் மட்டும் விஷ்ணுவின் வலதுகாலைப் பிடித்துக்கொண்டிருக்கிறான்.

காஞ்சிபுரத்தில் உலகளந்த பெருமாள் கோவில் என்றே ஒன்று உள்ளது. இங்கே கருவறையில் திரிவிக்கிரமனின் மாபெரும் சுதைச் சிற்பம் உள்ளது. அவருக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டுமே. இரண்டு கைகளும் அகல விரித்தபடி உள்ளன. இந்தக் கோவில் பல்லவர் காலத்துக்கும் முற்பட்டது என்று சொல்லப்படுகிறது.

வைணவ சம்ஹிதைகளின்படி வராகம், நரசிம்மம் போன்றே கருவறையில் வழிபடத் தக்க விபவ அவதாரம் திரிவிக்கிரம அவதாரம் ஆகும். வாமனரைத் தனியாகக் கருவறையில் வைத்து வழிபடக்கூடாது. திரிவிக்கிரமனாக (ஓங்கி உலகளந்த உத்தமனாக) இருக்கலாம். அல்லது திரிவிக்கிரமன் முதன்மையாகவும் அருகில் வாமனரும் இருக்கலாம். அதே நேரம், சுவரிலோ அல்லது பிரபாவளியிலோ தசாவதாரச் சிற்பங்கள் இருக்கையில் அங்கே வாமனரைத் தனியாகக் காட்டலாம். எடுத்துக்காட்டாக குஜராத்தில் பாட்டனில் இருக்கும் ராணி கி வாவ் படிக்கிணற்றிலும் ஒடிஷா புவனேஸ்வரத்திலும் தனியாகக் காணப்படும் வாமனச் சிற்பங்கள் கீழே.

வாமனர் – குஜராத் மற்றூம் ஒடிஷா

வாமனருக்கு எப்போதும் இரண்டு கரங்கள் மட்டுமே. பிரம்மச்சாரிக்கு உரிய இலக்கணங்கள் இருக்கவேண்டும். குடை அதில் ஒன்று. சிறு பிள்ளை என்பதால் தொந்தியும் தொப்பையுமான உடல். மேலுடம்பில் உபவீதம். முதல் சிற்பத்தில் மான்தோலை உபவீதமாக அணிந்திருப்பது காட்டப்பட்டுள்ளது. அணிந்திருப்பது கோமணம் மட்டுமே. இரண்டாவதில் கையில் ஒரு கழி உள்ளது. பஞ்ச தாளமாக அமைக்கப்பட்டுள்ளது. சம்ஹிதைகளின்படி, அவர் வலதுகை விரலில் தர்பையால் ஆன பவித்திரம் அணிந்திருக்கவேண்டும். சிற்பத்தில் அது தெரிவதில்லை.

வாமனரை மிக அழகான முகத்துடனோ அல்லது சற்றே அழகற்ற முகத்துடனோ அமைக்கலாம்.

திரிவிக்கிரமனை உத்தம தசதாளத்தில் அமைக்கவேண்டும். திரிவிக்கிரமனின் எந்தக் கால் தரையில் பதிந்திருக்கவேண்டும், எந்தக் கால் உயர்த்தப்படவேண்டும்? பெரும்பாலும் இடக்கால் உயர்த்தப்பட்டிருக்கும். சில இடங்களில் இது மாறியிருக்கும். வைகானசப் படிமவியல் குறித்து எழுதியிருக்கும் லக்ஷ்மிநரசிம்மன் சில காரணங்களைக் குறிப்பிடுகிறார். திரிவிக்கிரமனின் முகம் தெற்கு நோக்கித் திரும்பக் கூடாது. எனவே மேற்கு நோக்கி திரிவிக்கிரமன் சிற்பம் இருந்தால் இடக்காலுக்கு பதில் வலக்கால் உயர்த்தப்படலாம். அரசர்களின் விருப்பத்துக்கு ஏற்பவே இந்தச் சிற்பங்கள் அமைக்கப்படுகின்றன. அரசர்கள் எத்திசையில் உள்ள ராஜ்ஜியங்களை ஜெயிக்க விரும்புகிறார்களோ அத்திசையை நோக்கிக் காலை உயர்த்துமாறு சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம்.

வைகானச ஆகமங்களின்படி, திரிவிக்கிரமனுக்கு இரண்டு, நான்கு அல்லது எட்டு கரங்கள் இருக்கலாம். இரண்டு கரங்கள் கொண்ட திரிவிக்கிரமனை நிறுவி வழிபட்டால் செல்வம், ஞானம், பெருமை ஆகியவை கிடைக்கும். நான்கு கரங்கள் கொண்ட திரிவிக்கிரமனை நிறுவி வழிபட்டால் நாட்டின் அரசனாக முடியும். எட்டு கரங்களைக் கொண்ட திரிவிக்கிரமனை நிறுவி வழிபட்டால் பேரரசனாக ஆகலாம், வெற்றிகளை ஈட்டலாம்.

வைகானச ஆகத்தின்படி நான்கு கரங்கள் இருந்தால், பின்னிரு கைகளில் சக்கரமும் சங்கும் இருக்கவேண்டும். முன்னிரு கைகள் ஒன்று மேல் நோக்கியும் இன்னொன்று நீண்டுகொண்டிருக்கும் காலைச் சுட்டியபடியும் இருக்கவேண்டும். இன்னொரு விதத்தில், சங்கு சக்கரத்துக்குபதில், அபய வரத ஹஸ்தமாக இருக்கலாம்.

எட்டு கரங்கள் கொண்டிருந்தால், சங்கு, சக்கரம், கதை, பத்மம், வில், அம்பு, சக்தி, வாள் ஆகியவை இருக்கலாம். அல்லது பத்மத்துக்கு பதில் கேடயம் இருக்கலாம். அல்லது கேடயத்துக்கு பதில் தடிக்கழி ஒன்று இருக்கலாம். அல்லது கலப்பை, பிந்திபாலம் என்னும் ஈட்டி போன்றவையும் இருக்கலாம்.

திரிவிக்கிரமனின் உயர்த்திய கால் மூன்றுவிதமாக இருக்கலாம்.

  1. முழங்கால் அளவுக்கு உயர்ந்த பாதம். பூமியை அளந்ததை இது குறிக்கும். இந்த நிலையில் சூரிய சந்திரர்கள், திரிவிக்கிரமனின் மார்பு உயரத்தில் இருப்பார்கள். நாட்டைக் கைப்பற்ற விரும்புவோர், இந்தவகைச் சிலையை நிறுவுவார்கள்.
  2. வயிறளவுக்கு உயர்ந்த பாதம். அந்தரீக்ஷம் எனப்படும் ஆகாசத்தை அளந்த நிலையை இது குறிக்கிறது. இங்கே சூரிய சந்திரர்கள் திரிவிக்கிரமனின் தொடை உயரத்தில் காண்பிக்கப்படுவார்கள். வானுலகை அடைய விரும்புவோர் நிறுவித் தொழவேண்டிய வடிவம் இது.
  3. நெற்றியளவு உயர்ந்த பாதம். சுவர்கத்தையும் தாண்டிய நிலை இது. சூரிய சந்திரர்கள் திரிவிக்கிரமனின் முழங்கால் அளவில் இருக்கவேண்டும். அனைத்துலகையும் வெற்றிகொள்ள விரும்புவோர் நிறுவி வழிபடவேண்டிய வடிவம் இது.

கற்பக விருக்ஷமும் இந்திரனின் குடையும் திரிவிக்கிரமனுக்குப் பின்புறம் காணப்படவேண்டும். ஹொய்சளர் சிற்பங்களில் கற்பகத் தரு கட்டாயம் இருக்கும். ஆனால் பிற சிற்பங்களில் அதிகம் காணப்படுவதில்லை. ஜவனன், ஜலேசன் (வருணன்) ஆகியோர் திரிவிக்கிரமனின் இருபுறமும் சாமரம் வீசவேண்டும். அவர்களுக்கு இருபுறமும் சனக சனத்குமார முனிவர்கள் காணப்படவேண்டும். பிரம்மா கமண்டலத்தால் திரிவிக்கிரமனின் பாதத்தை அலம்பிய நீர் கங்கை நதியாகப் பெருக்கெடுத்து ஓடவேண்டும். பெருகி ஓடும் நீரில், கங்கை மேல்பாதி உடல் (கங்காதரர் சிற்பத்தில் காணப்படுவதுபோன்று) அஞ்சலி செய்யும் விதமாகக் காட்டப்படவேண்டும். இந்திரன் கையில் வனமாலையையும் சாமரத்தையும் வைத்துக்கொண்டு திரிவிக்கிரமனின் வலதுபுறம் நின்றுகொண்டிருக்கவேண்டும். சூரியன் வலதுபுறமும் சந்திரன் இடதுபுறமும் மேலே கூறியதுபோல் வெவ்வேறு உயரங்களில் இருக்கவேண்டும். கையில் வாளும் கேடயமும் கொண்ட நமுசி (பலியின் மகன்) பல்டி அடித்தபடிக் கீழே விழும்வகையில் காட்டப்படவேண்டும். ஜாம்பவான் மிருதங்கம் அல்லது வல்லரி எனும் கருவியை அடித்து, பலியை விஷ்ணு வெற்றிகொள்வதைக் கொண்டாடுமாறு காட்டப்படவேண்டும். இராமாயணத்தில் ஜாம்பவான், தான் திரிவிக்கிரமன் விஸ்வரூபம் எடுத்ததைப் பார்த்ததாகச் சொல்வது வருகிறது.

வாமனருக்கு பலி நீர் வார்க்கும் காட்சியில் பலியைத் தடுக்கும்விதத்தில் சுக்ராச்சாரியார் அமைக்கப்படவேண்டும். அதேபோல் திரிவிக்கிரமத் தொகுதியில் கருடன் சுக்ராச்சாரியாரைப் பிடித்து முஷ்டியால் குத்துவதுபோல் காட்டவேண்டும். சில சம்ஹிதைகளில் பிருகு, மார்க்கண்டேயர் ஆகியோரும் இந்தத் தொகுதியில் அமைக்கப்படவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ப்ரஹ்லாதன் அஞ்சலி ஹஸ்தத்தில் இருக்குமாறு அமைக்கப்படவேண்டும் என்றும் சில சம்ஹிதைகளில் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல ஆதிசேஷன், வாசுகி போன்றோரும் அமைக்கப்படவேண்டும் என்றும் சில இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

திரிவிக்கிரமனின் வர்ணம் பசுநீலமாக இருக்கவேண்டும். இந்திரன், வருணன், நமுசி, வாமனன் ஆகியோர் கருநீல நிறம். சந்திரன், கங்கை, சுக்ராச்சாரியார் ஆகியோர் வெண்ணிறம். யமன், வாயு கருநிறம். பிரமன் மஞ்சள் அல்லது தங்க நிறம். பலி தங்க நிறம். ஜாம்பவான் நீலம். சூரியன் நெருப்பு நிறம். கருடன், பல வண்ணங்களில். இவற்றுக்கு மாறான வண்ணங்களும் சில சம்ஹிதைகளில் சொல்லப்பட்டுள்ளன.

காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் சிவன் கோவிலிலும் வைகுண்டப் பெருமாள் விஷ்ணு கோவிலிலும் திரிவிக்கிரமச் சிற்பத் தொகுதிகள் உள்ளன. அவை கீழே:

திரிவிக்கிரர் – காஞ்சி கைலாசநாதர் மற்றும் வைகுண்டப் பெருமாள் கோவில், படம்: வி.கே. ஸ்ரீனிவாசன்

கைலாசநாதர் கோவில் சிற்பம் தேவகுளிகைக்குள் உள்ளது, எனவே அதனை மூன்று கோணங்களில் எடுத்த படங்களாகக் காண்பித்துள்ளேன். இடது ஓரத்தில் மிக அழகான வாமனருக்கு பலி கையில் நீரை வார்க்கிறான். அடுத்து எட்டு கரங்கள் கொண்ட திரிவிக்கிரமனின் விஸ்வரூபம். ஓங்கி உயரும் இடக்கால் முகத்தின் உயரத்துக்குச் செல்கிறது. இறுதியாக, கருடன் ஓர் உருவத்தைக் கீழே தள்ளிக் குத்த முயல்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாதாமியிலும் மால்லையிலும் இல்லாத இந்தப் பகுதி இப்போதுதான் காணக் கிடைக்கிறது. வைகானச சம்ஹிதைகள் இப்படி கருடனிடம் குத்து வாங்குவது சுக்ராச்சாரியார் என்கின்றன. ஆனால் பாகவதத்திலோ திரிவிக்கிரமனின் மூன்றாவது அடியைத் தலையில் வாங்காமல் ஓடிவிடக்கூடாது என்பதனால் வருணனின் பாசக்கயிறைக் கொண்டு பலியை கருடன் பிணைத்துவைக்கிறான் என்று சொல்லப்படுகிறது. எனவே கருடனிடம் பிடிபடுவது சுக்ரனா, பலியா?

அடுத்தது, காஞ்சி வைகுண்டப் பெருமாள் கோவிலில் உள்ள திரிவிக்கிரமத் தொகுதி. இங்கேயும் கருடன் சுக்ரனையோ அல்லது பலியையோ பிணைத்துவைத்துள்ளார். எட்டு கரங்கள் கொண்ட திரிவிக்கிரமனின் இடது கால் முகத்தின் உயரத்துக்கு மேலே எழும்பியுள்ளது. இங்கே பிரமன் பாதத்தை நீரால் அலம்புகிறார். திரிவிக்கிரமனின் இடப்புறம் இருப்பது பலியாகவோ நமுசியாகவோ இருக்கலாம்.

பாதாமிக்குப் பிறகு சாளுக்கியர் கைவண்ணத்தில் பட்டதகல் மற்றும் ஆலம்பூரில் இரு அழகான திரிவிக்கிரமச் சிற்பங்களைக் காணமுடிகிறது.

திரிவிக்கிரமர் – பட்டதகல் மற்றும் ஆலம்பூர், படம்: வி.கே. ஸ்ரீனிவாசன், பத்ரி

பாதாமிபோல் இவை பெரும் பலகைச் சிற்பம் கிடையா. தேவகோஷ்டச் சிற்பங்கள். ஆனாலும் இந்தக் குறுகிய இடத்துக்குள்ளுமே முழுக்கதையையும் சாளுக்கியச் சிற்பிகள் கொண்டுவந்துவிடுகிறார்கள். முதல் வித்தியாசம், இரண்டுமே ஆறு கரங்கள் கொண்டவை. முதலாவது, பட்டதகல்லில் உள்ளது. இங்கே இடதுகால் முகத்தின் உயரத்தைத் தாண்டிச் சென்றுவிட்டது. திரிவிக்கிரமனின் வலதுபக்கம் வாமனருக்குக் கையில் நீர்வார்க்கும் பலியையும் தடுக்க முனையும் சுக்ரனையும் காணலாம். மேலே வலது கோடியில் ஜாம்பவான் வாத்தியம் கொட்டுவதைக் காணலாம். கீழே இடப்புறம் கருடன் சுக்ரனைக் கீழே தள்ளி, கையை முறுக்கிக் குத்த முற்படுவதைக் காணலாம்.

அடுத்தது, ஆலம்பூர் நவபிரம்மா கோவில்களில் ஒன்றில் காணப்படுவது. இங்கே வலது கால் உயர்த்தப்பட்டு முகத்துக்குக் கீழே சென்றிருக்கவேண்டும். உடைக்கப்பட்டுள்ளது. கீழே வாமனர் கதையின் இரு பகுதிகள் காட்டப்பட்டுள்ளன. ஒன்றில் பலியும் சுக்ராச்சாரியாரும் அருகருகே அமர்ந்துள்ளனர். வாமனர் யாசகம் பெற வந்துள்ளார். பலிக்குப் பின்புறம் விந்தியாவலி நின்றுகொண்டிருக்கிறாள். அதற்கடுத்த காட்சியில் பலி எழுந்திருந்து வாமனர் கையில் நீர் வார்க்கிறார். சுக்ராச்சாரியார் தடுக்க முனைகிறார்.

நடுப்பகுதியில் ஜாம்பவான் மத்தளம் கொட்டுகிறார். மேலே கால் எழும்பும் திசையில் ஒரு முகம் மட்டும் தென்படுகிறது. இடப்புறம் கருடன் சுக்ரனைக் கீழே தள்ளி அடிப்பது தெரிகிறது.

பாதாமியின் இரு சாளுக்கியச் சிற்பங்களிலும் ஆலம்பூரின் சாளுக்கியச் சிற்பத்திலும் காணப்படும் வித்தியாசமான முகம் ஒன்றைக் குறித்து கோபிநாத ராவ் சில சிந்தனைகளைத் தருகிறார்.

சாளுக்கியச் சிற்பங்களில் காணப்படும் வித்தியாசமான முகம்

சிரிக்கும் முகம், கோரைப் பற்கள். பெரிய கண்கள். யார் இது? திரிவிக்கிரமனின் கால்கள் உயர்ந்து செல்லும்போது பிரம்மாண்டம் (முட்டை) உடைந்து கிழிந்து அதன் கிழிசலின்வழியே பிரபஞ்ச நீர் பெருக்கெடுத்து ஓடியது என்று வராஹ புராணம் குறிப்பிடுகிறது என்கிறார் கோபிநாத ராவ். அந்த பிரம்மாண்டத்தை உருவகப்படுத்திய முகமோ இந்தச் சிரிக்கும் முகம் என்னும் கருத்தாக்கத்தை ராவ் முன்வைக்கிறார். ஆனால் இந்த உருவம் குறித்து லக்ஷ்மிநரசிம்மன் ஒரு கருத்தையும் கூறவில்லை.

திரிவிக்கிரமச் சிற்பங்கள் இந்தியா முழுவதிலும் கிடைக்கக்கூடியவையே. மிக அழகான ஒன்று தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது. பிரதிஹாரர்கள் கலை.

திரிவிக்கிரமர் – தில்லி தேசிய அருங்காட்சியம், படம்: வி.கே. ஸ்ரீனிவாசன்

சிற்பத்தின் பல பகுதிகள் உடைந்திருந்தாலும் அழகில் ஒரு சிறு குறைபாடும் இல்லை. சிரிக்கும் முகம் இங்கும் தென்படுகிறது. உயர்ந்த காலைத் தொட்டபடி. திரிவிக்கிரமன் வனமாலை அணிந்திருக்கிறார். வாமனருக்கு பலி நீர் வார்ப்பதும் பின்னால் சுக்ராச்சாரியார் நிற்பதும் தெரிகிறது.

திரிவிக்கிரமச் சிற்பங்களைப் பற்றிப் பார்க்கும்போது முக்கியமாக ஹொய்சளச் சிற்பங்களைச் சொல்லவேண்டும். தமிழகத்தில் சிவன் கோவில்கள் அளவுக்கு விஷ்ணு கோவில்கள் கிடையாது. விஷ்ணு கோவில்களிலும் தேவகோஷ்டங்களிலோ கிரீவகோஷ்டங்களிலோ பழங்காலக் கற்சிற்பங்கள் குறைவே. அவற்றிலும் திரிவிக்கிரமச் சிற்பங்கள் குறைவு. பெரும்பாலும் சிவன் கோவில்களில் நரசிம்மச் சிற்பமோ அல்லது விஷ்ணுவின் சிற்பமோ இருக்குமே தவிர திரிவிக்கிரமச் சிற்பம் இருக்காது.

மாறாக ஹொய்சளர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் விஷ்ணு கோவில்களைக் கட்டினர். ஒவ்வொன்றிலும் கட்டாயமாக திரிவிக்கிரமச் சிற்பம் இல்லாமல் இருக்காது. நான்கு கோவில்களில் உள்ள திரிவிக்கிரமச் சிற்பங்களைக் கீழே காணலாம்.

ஹொய்சளர்களின் திரிவிக்கிரமச் சிற்பங்கள் – ஹலேபீடு, நுக்கெஹள்ளி, ஜாவகல், ஹொஸஹளலு, படம்: விஜய் பட், வி.கே.ஶ்ரீனிவாசன்

இவை முறையே, ஹலேபீடு ஹொய்சளேஸ்வரா கோவில், நுக்கெஹள்ளி, ஜாவகல், ஹொஸஹளலு ஆகிய இடங்களில் காணப்படுபவை. அனைத்துமே ஒரே மாதிரியில் கட்டமைக்கப்பட்டவை. அனைத்திலும் வலது கால் உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்தும் வயிற்றின் உயரத்தில் உயர்த்தப்பட்டவை. உயர்த்திய காலை பிரம்மா அலம்புவது கட்டாயமாக நடக்கிறது. இவ்வாறு அலம்பிய நீர் கங்கை ஆறாகப் பிரவாகம் எடுத்துக் கீழே வருவது கட்டாயமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, இந்த ஆற்றில் மீன்கள் செல்வதுவரை காணலாம்.

அனைத்திலும் திரிவிக்கிரமருக்கு நான்கு கைகள். நான்கு கைகளிலும் கதை, சக்கரம், சங்கு, பத்மம் (வலது பின் கை, இடது பின் கை, இடது முன் கை, வலது முன் கை) என்ற அமைப்பே உள்ளது. இது சதுர்விம்ஸதி (24) விஷ்ணு வடிவங்களில் திரிவிக்கிரமன் என்ற பெயருள்ள விஷ்ணுவின் வடிவத்துக்கான ஆயுத அமைப்பு. இதனை திரிவிக்கிரமருக்கான பொது வடிவமாகவே ஹொய்சளர்கள் எடுத்துக்கொண்டனர். அனைத்துச் சிற்பத் தொகுதிகளிலும் கருடன் உள்ளார். திரிவிக்கிரமனுக்குமேல் இருப்பது கற்பகத் தருவா அல்லது அழகுக்கான கொடி அலங்காரமா என்பதைச் சொல்ல முடிவதில்லை. ஏனெனில் பிற அனைத்துச் சிற்பங்களின்மேலும் இதே வடிவத்தைக் காணமுடிகிறது.

‘மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி’ என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார். பரிபாடலில் மட்டுமின்றி, சங்க இலக்கியங்களில் பல இடங்களில் வாமன திரிவிக்கிரமனைக் காண்கிறோம்.

விஷ்ணுவின் விஸ்வரூப வடிவங்களில் மிக முக்கியமான வடிவம் இது.

(தொடரும்)

பகிர:
பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாளர். சென்னை ஐஐடியில் இயந்திரப் பொறியியலில் இளநிலையும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். இந்தியக் கணிதத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறார். வரலாறு, தொழில்நுட்பம், இந்தியவியல் போன்ற துறைகளில் தீவிர ஆர்வம் கொண்டவர்.View Author posts

1 thought on “கல்லும் கலையும் #13 – ஓங்கி உலகளந்த உத்தமன்”

  1. சில நாட்களுக்கு முன் ஒரு சிந்தனை . ஹிரண்யன் மகன் பிரகலாதன் நரசிம்ம அவதாரம் கண்ட பின் அவன் மனநிலை எப்படி இருந்து இருக்கும் ? பிரகலாதன் அரசாட்சி ஏற்ற பின் ,வயதில் பெரியவர் ஆன பின்னரும் ஹரி மேல் பக்தியோடு இருந்தாரா ? அவர் சந்ததியினர் பெருமாள் வழிபாடு செய்தார்களா ? என்று பல கேள்வி .அந்த கேள்விகளுக்கு ஓரளவு பதில் போல் இருந்தது திரு .பத்ரி சேஷாத்ரி அவர்களின் இந்த கட்டுரை கல்லும் கலையும் #13 – ஓங்கி உலகளந்த உத்தமன். அவசியம் படிக்கவும் .

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *