என்னாச்சு இந்தக் கன்னட சினிமாக்காரர்களுக்கு என்று கேட்கும் அளவிற்கு சமீப காலங்களில் கன்னடத் திரைபடங்கள் பெரும் பாராட்டுகளையும் வசூல்களையும் குவித்து வருகின்றன.
கே.ஜி.எஃப் (பாகம் 1 மற்றும் 2), சார்லி 777, கருட காமன விருஷப வாகன, விக்ராந்த் ரோனா போன்ற படங்களின் பட்டியல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த வரிசையில் இப்பொழுது ஒரு புதிய கன்னடப் படம் சேர்ந்திருக்கிறது. அதுதான் காந்தாரா. காந்தாரா என்றால் அடர்ந்த காடு என்று அர்த்தம்.
பத்து நாட்களுக்கு முன்னர் பெரிய விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் வெளிவந்த இப்படம் இப்பொழுது இந்தியாவில் அது திரையிடப்பட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடுகிறது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதிகமான தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டு வருகின்றது.
துளுவ நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளின் பின்னணியில் உருவாக்கப்பட்ட படம் காந்தாரா. ஒரே வரியில் சொல்லிவிடக்கூடிய கதை. புதிதான கதைக் களமும் அல்ல, ஆனால் கதை சொல்லப்பட்ட விதமும், திரைப்படமாக எடுக்கப்பட்ட விதமும் இப்படத்தை உச்சத்தில் நிறுத்தியிருக்கிறது.
19ஆம் நூற்றாண்டில் ஒரு மன்னர் மன அமைதி இல்லாமல் இருக்கிறார். அமைதியைத் தேடி அலைகிறார். அவருக்கு ஒரு காட்டில் அங்குள்ள மக்கள் வழிபடும் தெய்வத்தின் கல்லின்முன் அமைதி கிடைக்கிறது. அந்தக் கல்லை அவர் எடுத்துச் செல்ல விழைகிறார். அதற்கு மாறாக தன்வசம் உள்ள பல ஏக்கர் நிலங்களைக் காட்டில் வசிக்கும் மக்களிடம் கொடுக்கிறார். கதை 1970 ஆம் வருடத்திற்கு நகர்கிறது. அந்த ராஜாவின் வாரிசு தன் மூதாதையர் கொடுத்த நிலத்தை மறுபடியும் எடுத்துக்கொள்ள பார்க்கிறான். அப்பொழுது இறந்துவிடுகிறான். கதை 1990 ஆம் வருடம் நகர்கிறது.
இப்பொழுது நான் சொல்லியிருக்கும் கதை திரைப்படத்தில் வரும் முதல் 10 நிமிடக் காட்சிகள் மட்டுமே. மீதி கதையைத் திரையரங்கில் சென்று படத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
இப்படத்தை ஓடிடியிலோ (OTT) , வீட்டில் தொலைக்காட்சியிலோ பார்ப்பதைவிட தியேட்டரில் பார்ப்பது நல்ல அனுபவத்தைத் தரும். காட்சிகள் உருவாக்கப்பட்ட விதம், பின்னணி இசை, காட்சி நகர்வுகள் அனைத்தையும் பெரிய திரையில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.
ஒரு நல்ல திரைப்படத்திற்கு உண்டான அனைத்து அம்சங்களும் இருக்கின்றன. நல்ல திரைக்கதை, காட்சி அமைப்பு, இசை, பாடல்கள், காதல் காட்சிகள், சண்டை, நகைச்சுவை, அமானுஷ்யம் என அனைத்து அம்சங்களும் ஒன்றோடு ஒன்று கதையில் இணைந்து வருகின்றன. ‘வராக ரூபம்’ என்ற பாடல் அஜனீஸ் லோக்நாத் இசையில் மெய் சிலிர்க்க வைக்கிறது.
கன்னட மொழி தெரியாதவர்களும் இப்படத்தைப் பார்க்கலாம். மொழி தெரிந்திருந்தால் நகைச்சுவைக் காட்சிகளை நன்கு புரிந்துகொள்ள முடியும். மாற்று மொழி கொண்ட மாநிலங்களில் இப்படம் ஆங்கிலத் துணை தலைப்புடன் வெளி வந்திருக்கின்றன. விரைவில் இப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவர இருக்கிறது.
இரண்டரை மணி நேரம் படத்தின் கதை தொய்வில்லாமல், அலுப்பு தட்டாமல் செல்கிறது. உள்ளூர் மண் மனம் மாறாமல் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால் இப்படத்தை தயாரிப்பாளர்கள் பான் இந்தியா படமாக தயாரிக்கவில்லை. இருப்பினும் இப்படம் பான் இந்தியா படத்திற்கான தகுதியைப் பெற்றுவிட்டது.
இந்தப் படத்தின் சிறப்பு, கதாபாத்திரங்களின் நடிப்புதான். அதிலும், கதாநாயகனாக நடித்து இருக்கும் ரிஷப் ஷெட்டி பிரம்மாண்டமாக நடித்திருக்கிறார். படத்தின் தொடக்கத்தில் வரும் கம்பாலா போட்டியிலும், குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளிலும் ரிஷப் ஷெட்டி தன் நடிப்பால் பார்வையாளர்களை அசத்தி விட்டார்.
படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் ரிஷப் ஷெட்டி பார்வையாளர்களைக் கட்டிப் போட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய உடல் அங்கங்கள் ஒவ்வொன்றும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றன. இப்படத்துக்காக நிச்சயம் நிறைய விருதுகளை வாங்கப்போகிறார்.
பொல்லாதவன், ஜெயம் கொண்டான், ஹரிதாஸ் போன்ற தமிழ்ப் படங்களில் நடித்த கிஷோர் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் வன அலுவலராக நடித்து இருக்கிறார். இவர்களைத் தவிர அச்யுத் குமார் (கே.ஜி.எப்-ல் வில்லனாக நடித்தவர்), சப்தமி கவுடா (கதாநாயகியாக) என்று இன்னும் பல கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் கதாநாயகனாக ரிஷப் ஷெட்டிதான் இப்படத்தின் கதையை எழுதிய நாயகனும்கூட. அவரேதான் இயக்குனரும். கே.ஜி.எப் படத்தைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ்தான் இப்படத்தையும் தயாரித்திருக்கிறது. சிறிய பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து அதை வெற்றிப் படமாக்கியது மேலும் ஒரு சிறப்பு.
கன்னட திரைத்துறையில் தற்பொழுது ஷெட்டிகள்தான் கோலோச்சுகிறார்கள். 777 சார்லி படத்தை தயாரித்து நடித்த ரக்ஷித் ஷெட்டி; கருட காமனா விருஷப வாகனாவை எழுதி தயாரித்து நடித்த ராஜ் பி ஷெட்டி (இந்தப் படத்திலும் ரிஷப் ஷெட்டி நடித்திருக்கிறார்); மற்றும் தற்பொழுது வெளி வந்திருக்கிற காந்தாரா திரைப்படத்தை எழுதி, நடித்து, இயக்கியிருக்கிற ரிஷப் ஷெட்டி ஆகிய மூன்று ஷெட்டிகளும்தான்.
இப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம் கடைசியில் இந்தப் படம் தந்திருக்கும் செய்தி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கலாம், ஆனால் நோக்கம் ஒன்றாக இருக்குமேயானால் அனைவரும் ஒன்றாக செயல்படவேண்டும். இன்றைய வாழ்வியலிலும், இயற்கைக்கு அப்பாற்பட்ட விஷயங்களும் செயல்படுகின்றன என்று இத்திரைப்படம் நமக்கு சொல்லாமல் சொல்லியிருக்கிறது. ஆக மொத்தத்தில் ‘காந்தாரா’ அடர்ந்த காட்டில் ஓர் அட்டகாசம் என்று சொன்னால் மிகையாகாது.
0