Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #1 – முன்னுரை

கறுப்பு அமெரிக்கா #1 – முன்னுரை

கறுப்பின அடிமைகள்

1865 ஏப்ரல் மாதம் ஆபிரகாம் லிங்கன் படுகொலை செய்யப்பட்டார். அப்போது அமெரிக்க உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்திருந்தது. அமெரிக்காவில் இருந்த கறுப்பின அடிமைகள் அனைவரும் சுதந்திர மனிதர்களாக மாற்றப்பட்டிருந்தனர். அடிமை முறையை எதிர்த்துப் போர் புரிந்திருந்த வடமாநிலங்கள் பெரும் வெற்றியை அடைந்திருந்தன. அடிமை முறையை ஆதரித்திருந்த தென் மாநிலங்கள் அனைத்தும் போரின் முடிவில் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியும், பொருளாதாரத்தில் சீர்குலைந்தும் இருந்தன.

அடிமைகளை விடுவித்து சட்டம் இயற்றியது மட்டுமல்லாது, அதை அரசியலமைப்பில் சேர்க்க வேண்டும் என்ற லிங்கனின் ஆணையை ஏற்று ஆரம்பக்கட்டப் பணிகளும் ஆரம்பித்திருந்தன. நாடு புதிதாக ஒரு பாதையில் தலை நிமிர்ந்து பயணிக்கத் தயாராகியிருந்தது.

கறுப்பினத்தவர் தங்களது புதிய சுதந்திர வாழ்வை எதிர்நோக்கி இருந்தார்கள். அவர்களது வாழ்வின் கடினமான நாட்கள் கடந்திருந்ததாகவே எண்ணினார்கள். அவர்களது பழைய முதலாளிகளின் தோட்டங்களும் சொத்துக்களும் பெரும்பாலும் பாழ்பட்டுப் போயிருந்தது. அவர்களும் முன்பிருந்தது போன்ற அரசியல் பலமும், அதிகாரமும் கொண்டவர்களாக இல்லை. விடுதலை பெற்ற கறுப்பினத்தவருக்கு நிலம் வழங்கப்படப் போவதாக வதந்தி பரவிக்கொண்டிருந்தது. வாக்குரிமையும் குடியுரிமையும் கறுப்பினத்தவர்க்கு வழங்கப்படப் போவதாக அரசியல்வாதிகள் பேசிக்கொண்டிருந்தார்கள். எதிர்காலம் பிரகாசமாகவே தெரிந்தது.

ஆனால் இவை எதுவும் நடக்கவில்லை. உண்மையில் விடுதலை அடைந்த கறுப்பினத்தவரின் வாழ்வு முன்பைக் காட்டிலும் அதிகம் இழிவை நோக்கியே நகர்ந்தது. அவர்கள் எதிர்பார்த்த உரிமைகள் சட்டமாக மாற்றப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அந்த உரிமைகளை நிலைநாட்ட முடியவில்லை. அவர்களுக்கு ஆதரவான அரசியல் சூழல் இல்லாமல் போனது. வெள்ளையரின் இனவெறியை அவர்கள் இன்னமும் ஒரு நூற்றாண்டிற்கு அனுபவிக்க வேண்டி இருந்தது.

அமெரிக்காவின் வரலாறு தியாகங்களாலும் போராட்டங்களாலும் மட்டுமே எழுதப்பட்டது அல்ல. ரத்தத்தாலும்தான். எண்ணற்ற அநீதிகள் அந்த மண்ணில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. தாங்கமுடியாத அநியாயங்கள் நிகழ்ந்துள்ளன. எல்லாமும் சரியாக நிகழ்ந்து வெற்றியைப் பறிக்கும் நேரத்தில் அமெரிக்காவின் வரலாறு தலைகீழாக மாறுகிறது. போரில் தோல்வியடைந்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள். வெற்றி பெற்றவர்கள் அதை நழுவ விடுகிறார்கள்.

உள்நாட்டுப் போரின் முடிவும் அப்படித்தான் இருந்தது. எதற்காகப் போர் நடந்ததோ அது நிறைவேறாமலே போனது. அடுத்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாகக் கறுப்பினத்தவர் சொல்லவியலாத அளவிற்குத் துன்பத்தை அனுபவித்தார்கள். இன்னமும் அமெரிக்கா தனது காயங்களை எல்லாம் ஆற்றிக் கொள்ளவில்லை.

போரின் முடிவில் குடியரசுக் கட்சி வேறு விதமாக நடந்து கொண்டிருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்குமா என்பதும் சந்தேகமே. உண்மையில் கறுப்பினத்தவரை இரண்டாம்தர மனிதர்களாக வைத்திருப்பதை எதிர்த்து, போரின் முடிவில், மிகவும் தீவிரமாகவே குடியரசுக் கட்சி இயங்கியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. ஏன் என்பதைப் பார்க்கப் போகிறோம்.

அந்தத் தோல்வி கறுப்பினத்தவரின் வாழ்வை எப்படியான சித்திரவதைக்கு உள்ளாக்கியது என்பதையும் பார்க்கப் போகிறோம். இன்றைக்குக் கிட்டத்தட்ட நூற்றெழுபது வருடங்களுக்கு முன்னர் அடிமைத்தளையிலிருந்து விடுபட்டும், போதுமான அரசியல் அதிகாரத்தை அடையவிடாமல், வெள்ளையரின் கைகளை நோக்கியே நிற்க வைத்த சட்டங்களைப் பற்றிப் பார்க்கப் போகிறோம்.

‘அடர்த்தியான இருளில்தான் நட்சத்திரங்களைக் காணமுடியும்’ என்று தன்னுடைய பிரசங்கம் ஒன்றில் குறிப்பிட்டார் மார்ட்டின் லூதர் கிங். மனிதர்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்த பின்னரே வாழ்வில் வெளிச்சத்தைக் காண முடியும். இது இருளின் வரலாறு மட்டுமல்ல. சின்னச் சின்ன வெளிச்சங்களின் கதையும்தான்.

0

எனக்கு எப்போதும் அமெரிக்காவின் இந்தக் காலகட்டம் சாதியக் கட்டமைப்புகளையே நினைவுக்குக் கொண்டுவரும். அமெரிக்கர்கள் கறுப்பினத்தவரைத் தங்களுக்குக் கீழே வைக்கவும், அவர்கள் ஏன் மேலே வர முடியாது என்பதற்காகக் கூறிய காரணங்களும் இன்னமும் இந்தியச் சமூகத்தில் எதிரொலிக்கும் அதே காரணங்கள்தான். இயற்கையாகவே ஆளப்பிறந்தவர்கள், தரம் என்றால் என்ன, எதற்காகத் தரம் தேவைப்படுகிறது, எல்லோரும் சமம் என்றாலும் ஏன் சிலர் பிறப்பால், தங்கள் நிறத்தால் மேன்மக்களாகிறார்கள் என்று பல விவாதங்களும் இந்தியாவில் நிகழ்வது போலவே அமெரிக்காவில் இனத்தை மையமாக வைத்து இன்னமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் சாதிக் கட்டமைப்பின் இறுக்கம் போல் இந்த விவாதங்கள் இல்லை என்பதுதான் வித்தியாசம்.

தங்களிடம் இருந்து வேறுபடும் மனிதர்களை ஏன் ஒருவன் தன்னிலும் தாழ்வாக நினைக்கிறான்? அதன் சமூக, மத, இனக் காரணிகள் என்னவாக இருக்கும்? உலகம் முழுவதும் இத்தகைய பாகுபாடுகள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு வடிவங்களில் நீடிப்பது ஏன்? இந்தப் பாகுபாடுகள் வெறுப்பாகவும் வெறுப்பு வன்முறையாகவும் மாறுவது ஏன்? இதன் பயனாளிகள் யார், பலிகடாக்கள் யார்?

இந்தக் கேள்விகளை எல்லாம் அறிவுத்தளத்தில் எழுப்பிக்கொண்டிருக்கிறோம். கூர்மையான விவாதங்களைக் கிளப்பிக்கொண்டிருக்கிறோம். லூசியானா மாநிலத்தின் எரிக்கும் மதிய வெயிலில், ஒரு வாய் நீருக்காக, பொதுவில் இருக்கும் குழாயை நோக்கி ஆவலுடன் சென்ற பின்னர், அங்கே ‘Whites only’ என்ற வார்த்தைகளை வாசிக்கும் ஒரு கறுப்புச் சிறுவனுக்கு இந்த அறிவுத்தள விவாதமெல்லாம் தெரிந்திருக்குமா என்பது ஐயம்தான். ஆனால் யதார்த்தம் எவ்வளவு வலி மிகுந்தது என்பது அவனுக்குத் தெரியும். அவனுக்கு மட்டும்தான்.

0

அமெரிக்க வரலாற்றின் முக்கியமான ஓர் அத்தியாயத்தை ஒரு நூலாக விரித்து நாம் காணவிருக்கிறோம். முன்னதாக வெளிவந்த என்னுடைய ‘அமெரிக்க உள்நாட்டுப் போர்’ எனும் நூலின் தொடர்ச்சியாக இது அமைகிறது. அந்நூல் விட்ட இடத்திலிருந்து இது தொடர்கிறது.

நாம் இங்கே பார்க்கவிருக்கும் கறுப்பு அமெரிக்கா கடந்த காலத்தின் கதை என்றாலும் அது நிகழ்காலத்திலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உள்நாட்டுப் போரின் முடிவில் தொடங்கி 1968ஆம் வருடத்துடன் இந்நூலின் நிகழ்வுகள் நிறைவடைகின்றன.

ஏன் குறிப்பாக 1968 என்ற கேள்விக்கும் புத்தகத்தில் பதில் இருக்கிறது. உள்நாட்டுப் போரின்போது நாம் பல பெரும் தலைவர்களையும் தளபதிகளையும் பார்த்தோம். ஆனால் அதற்கடுத்த இந்த 100 வருடங்களில் ஒன்றல்ல, பல பெரும் தலைவர்களைப் பார்க்கப் போகிறோம். வில்லியம் டூ பாய்ஸ், ரூஸ்வெல்ட், தர்குட் மார்ஷல், புக்கர் வாஷிங்டன், ஐடா வெல்ஸ், மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ், லிண்டன் ஜான்சன் எனப் பலரும் வருவார்கள்.

அவர்களுடன் பல சாமானியர்களின் குரலையும் நாம் காதுகொடுத்துக் கேட்கப் போகிறோம். அவர்களது கடிதங்கள், நாட்குறிப்புக்கள் எனப் பல விதமான தரவுகளை அலசப்போகிறோம். தங்களது வாழ்வின் இழிவுகளை, கொடுமைகளை, நம்பிக்கைகளைப் பதிவு செய்தவர்கள் இவர்கள். வரலாற்றை உருவாக்குபவர்கள், மாற்றியமைப்பவர்கள் இவர்களும்தான்.

இன்றைய கறுப்பினத்தவரின் உலகம் மிகவும் வேறுபட்டது. இருந்தாலும் அவர்கள் மீதான அதிகாரத்தின் வன்முறையும், அவர்களை இழிவு செய்யும் மனநிலையும் அப்படியே இருக்கிறது. இது பல நேரங்களில் கறுப்பினத்தவரை மட்டுமல்லாது, பழுப்பர்களை (தெற்காசிய நாடுகளின் மனிதர்கள்), மஞ்சள் நிறத்தவர்களை (சீன வம்சாவளியினரை) என அனைவரை நோக்கியும் நீள்கிறது.

கடந்த காலத்தின் இழிவுகளை நோக்கி நமது கண்ணாடியைத் திருப்புவதன்மூலம், மீண்டும் அப்படியான நிலைக்கு நாம் மட்டுமல்ல, எவரும் செல்லக்கூடாது என்னும் பாடத்தை நாம் படித்துக்கொள்கிறோம். இந்தப் பாடத்தைத்தான் வரலாறு நமக்குக் கற்றுக்கொடுக்க முயன்றுகொண்டிருக்கிறது. இந்தப் பாடத்தைத்தான் நாம் அடிக்கடி மறந்து போய்விடுகிறோம். அந்த வகையில் கறுப்பு அமெரிக்கா ஒரு நினைவூட்டலாகவும் அமையும் என்று நம்புகிறேன்.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *