Skip to content
Home » கறுப்பு அமெரிக்கா #3 – 40 ஏக்கரும் ஒரு கோவேறு கழுதையும்

கறுப்பு அமெரிக்கா #3 – 40 ஏக்கரும் ஒரு கோவேறு கழுதையும்

சுதந்திரமடைந்தவர்களின் துறை

1863இல் லிங்கன் வெளியிட்ட விடுதலைப் பிரகடனம், நாட்டில் இருந்த கிட்டத்தட்ட 34 லட்சம் கறுப்பினத்தவர்களை அடிமைத் தளையில் இருந்து விடுவித்தது. அப்போதே, போர்க்காலப் பிரகடனமான அதை அரசியல் சாசன திருத்தத்தின் மூலமாக நிரந்தமானதாக ஆக்க வேண்டிய பணியை லிங்கன் ஆரம்பித்திருந்தார்.

அமெரிக்கச் சட்ட சாசனத்தைத் திருத்துவதற்கு முதலில் காங்கிரசும், செனட்டும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் திருத்தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர், நாட்டில் இருக்கும் மாநிலங்களில் நான்கில் மூன்று பங்கு மாநிலங்கள், அதே திருத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இவை நடந்து முடிந்தவுடன், சட்டத்திருத்தம் அமலுக்கு வந்துவிடும். எனவே சட்டத்திருத்தம் என்பது கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் விவகாரம் மட்டுமல்ல, பெரும்பான்மைக்கும் அதிகமானவர்களின் ஆதரவும் தேவைப்படுவது.

அத்தோடு, சட்டத்திருத்த மசோதாவின் விவகாரத்தில், குடியரசுத் தலைவர் தனது கருத்தைத் தெரிவிக்கலாம். அவரது கட்சியினர் எப்படியாக வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தலாம். ஆனால், அவருக்கு என்று எந்தப் பங்கும் கிடையாது. மற்ற மசோதாக்களில் அவர் கையெழுத்திடுவது அவசியம் என்றாலும், சட்டத்திருத்தங்களுக்கு அதுவும் தேவையில்லை.

எனவே கறுப்பினத்தவர்களை விடுதலை செய்து, அடிமை முறையை ஒழித்த பிரகடனத்தை லிங்கன் எழுதினாலும், அதை சட்டசாசனத்தில் நிரந்தரமாக வைக்க, அவர் காங்கிரசையும், செனட்டையும், எல்லாவற்றிற்கும் மேலாக மாநிலங்களையும் நம்பியே இருந்தார். அவரது முனைப்பில், புதிய அடிமை முறை ஒழிப்பு சட்டத்திருத்த மசோதா 1864ம் வருட ஏப்ரல் மாதம் செனட்டில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு வெற்றியடைந்தது.

ஆனால் காங்கிரஸ் பிரதிநிதிகள் அவ்வளவு எளிதாக அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. முதல் முறை தோல்வியடைந்த மசோதா, மீண்டும் 1865 ஜனவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்பில் வெற்றியடைந்தது. அப்போது போரும் முடியும் நிலையை எட்டிக் கொண்டிருந்ததால், இன்னமும் மாநிலங்களின் ஒப்புதல் மட்டுமே தேவையாக இருந்தது.

0

சுதந்திரமடைந்தவர்களின் துறை (Freedmen’s Bureau) 1865ம் ஆண்டு மார்ச் மாதம் அமைக்கப்பட்டது. போரின் முடிவில் தென்மாநிலங்களில் அடிமைத் தளையில் இருந்து விடுபட இருக்கும் கறுப்பினத்தவர்களுக்குத் தேவையான உணவு, தொழில், இருக்க இடம் முதலியவை கிடைக்கவும், அவர்களில் புலம் பெயர்ந்திருப்பவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளைச் செய்வதுமே அந்தத் துறையின் நோக்கமாக வரையறுக்கப்பட்டது.

போருக்குப் பிந்தைய நாட்களில், தென் மாநிலங்களில் தோட்ட அடிமைகளாக இருந்த கறுப்பினத்தவர்கள் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் தங்களை உணர்ந்தனர். தோட்ட முதலாளிகள், தங்களது பணத்தை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த நகரங்களுக்குச் சென்று விட்டார்கள். தனியே பெரும் தோட்டப் பங்களாக்களில், சுற்றிலும் விரைவில் விடுதலை அடையப் போகும் கறுப்பினத்தவர் அடிமைகளுடன் தனியே இருக்க அவர்களுக்கு விருப்பமில்லை. போரின் முடிவில், கறுப்பினத்தவர்கள் பெரும் புரட்சியை நிகழ்த்தலாம். அதில் தங்களது சொத்துக்கள் மட்டுமின்றி, உயிருக்கும் ஆபத்து வரலாம் என்பதே அவர்களது எண்ணமாக இருந்தது.

இதில் உண்மையில்லாமல் இல்லை. அமெரிக்காவில் அதற்கு முந்தைய 300 வருட அடிமைகளின் சரித்திரம் இது போன்ற எழுச்சிகளால் நிரம்பி இருக்கிறது. அன்றைக்கு 75 வருடங்களுக்கு முன்னர் 1794ம் ஆண்டு, ஹெய்டி நாட்டில், அந்த நாட்டு அடிமைகள் நடத்திய புரட்சியும், அதன் பின்னர் நடத்தப்பட்ட கொலைகளும் இன்னமும் அனைவரின் நினைவுகளிலும் இருந்தது.

எனவே, போர் முடிந்த நிலையில், அடுத்து என்ன நடக்கலாம் என்பது எவராலும் கணிக்க முடியாததாக இருந்தது. இந்த நிலையில் லிங்கனின் கொலையும் நாட்டில் நிலவிய குழப்பத்தை அதிகப்படுத்துவதாக இருந்தது. இந்தக் குழப்பத்தில் எந்தவித ஆதரவுமின்றித் தென் மாநிலங்கள் முழுவதும் இருந்த தோட்ட அடிமைகளின் நிலை மிகவும் பரிதாபமானதாக இருந்தது.

சுதந்திரமடைந்தவர்களின் துறை, இந்தக் குழப்பங்களின் நடுவே சிக்கியிருக்கும், புதிதாக விடுதலை பெற்ற அடிமைகளுக்கு மறுவாழ்வு அமைத்துத் தருவது என்ற பெரும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.

0

போரின் இறுதி வருடத்தில், கர்னல் ஷெர்மன் தன்னுடைய படைகளுடன் தென் மாநிலங்களின் வழியே பெரும் நாசத்தை ஏற்படுத்திக்கொண்டு சென்றுகொண்டிருந்த காலம். அப்போது ஒன்றியப் படைகளின் பாதுகாப்பை வேண்டி, படைகளுக்குப் பின்னே இலக்கின்றிச் சுற்றிக்கொண்டிருந்த கறுப்பினத்தவர்கள் கூட்டமொன்று தொடர்ந்து வந்துகொண்டிருந்தது.

வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் எனத் தொடர்ந்து வந்துகொண்டிருந்த அனைவருக்கும் ஷெர்மன் உணவு வழங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க இப்படியாக ராணுவப் படைகளின் உணவைப் பகிர்வது சரியாக இருக்கவில்லை. இதற்கு எப்படியாவது சரியான தீர்வு ஒன்றை ஏற்படுத்த முயன்றார்.

எனவே கறுப்பினத்தவர்களின் தலைவர்களுடன் ஓர் உரையாடலை நிகழ்த்தினார். கறுப்பினத்தவர்களின் மெத்தடிஸ்ட், பாப்டிஸ்ட் திருச்சபைகளைச் சேர்ந்த 20 பாதிரிகள் மற்றும் பிரசங்கிகளுடன் கலந்து ஆலோசனை செய்தார். அவர்கள் தங்களது மக்களுக்கு நிலம் மட்டுமே முக்கியத் தேவை என்றார்கள். சொந்தமாக நிலம் இருப்பது மட்டுமே அவர்களது சுதந்திரத்தை உறுதி செய்யும் என்றார்கள். நிலமின்றி இருப்பது மீண்டும் தங்களை வெள்ளையர்களின் ஒடுக்குமுறைக்குப் பலியாகவே செய்யும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

அட்லாண்டிக் கடற்கரையோரமிருந்த தெற்கு கரோலினா, ஜார்ஜியா, புளோரிடா மாநிலத் தோட்டங்கள் பெரும்பாலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தன. இவை கிட்டத்தட்ட 4,00,000 ஏக்கர் பரப்பளவு இருக்கும் என்று கணக்கிடப்பட்டது. இவற்றை 40 ஏக்கர் நிலங்களாகப் பிரித்து, அவற்றை 18,000 கறுப்பினக் குடும்பங்களுக்குப் பிரித்துக்கொடுத்து, அவர்களை அங்கே தங்க வைக்கலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

இது கறுப்பினத்தவருக்கு மறுவாழ்வு தருவதற்கு முக்கியமான வழி என்று எண்ணிய கர்னல் ஷெர்மன், சிறப்பு ஆணை எண் 15 (1865)ஐ வெளியிட்டார். இந்த ஆணையில் நிலத்தை எப்படிப் பிரிப்பது என்பதில் இருந்து, கறுப்பினத்தவர் குடும்பங்களை எப்படித் தேர்ந்தெடுத்து, நிலங்களைப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்பது வரை விரிவாகவே விளக்கியிருந்தார்.

ஆனால், இந்த ஆணையை ஒரு வழிகாட்டும் காகிதமாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால், இதை அமல்படுத்தி, நடைமுறைப்படுத்த தேவையான ஆட்பலமோ, நிர்வாக வசதிகளோ கர்னல் ஷெர்மனிடம் இல்லை. ஆனாலும், இந்த ஆணை கறுப்பினத்தவரிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியதை மறுக்க முடியாது.

இந்த ஆணையில் கோவேறு கழுதை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்றாலும், கறுப்பினத்தவரிடையே ஒன்றிய அரசாங்கம் அவர்களுக்கு 40 ஏக்கர் நிலமும், நிலத்தில் வேலை செய்ய ஒரு கோவேறு கழுதையும் கொடுக்கப் போவதாகவே செய்தி பரவியது.

0

1865ல் சுதந்திரமடைந்தவர்களின் துறை தன்னுடைய செயல்பாடுகளை ஆரம்பித்தபோது, கறுப்பினத்தவரின் எதிர்பார்ப்பு தங்களுக்கு நிலம் வழங்கப்படும் என்பதாகவே இருந்தது. துறைக்கு முதல் தலைவராக ஜெனரல் ஆலிவர் ஹோவர்ட் நியமிக்கப்பட்டார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, ஆண்ட்ரு ஜான்சனும் அப்போதுதான் குடியரசுத் தலைவரானார். தென் எல்லை மாநிலமான டென்னிசியைச் சேர்ந்த அவர், அடிமை முறையை ஒழிப்பதற்கு ஆதரவாக இருந்தாலும், அவரது மனம் தென் மாநில வெள்ளையர்களிடம் அனுதாபத்துடன் இருந்தது. எனவே பதவியேற்றது முதல் அவரது எண்ணம் தென் மாநிலங்களை எப்படி வேகமாக ஒன்றியத்திற்குள் கொண்டு வருவது என்பதாக இருந்தது. அதில் முதன்மையானது, ஒன்றியத்திற்கு விசுவாசமாக இருப்பதாகக் கூறும் எந்தத் தோட்ட முதலாளிக்கும், திரும்பவும் அவர்களது தோட்டம், நிலங்களை அப்படியே கொடுத்து விடுவது என்பதாகும்.

எனவே ஆலிவரின் முதல் கடமைகளுள் ஒன்று, கறுப்பினத்தவரிடம் சென்று அவர்களுக்கு எந்த நிலமும் கொடுக்கப்படப் போவதில்லை என்று சொல்வதாக இருந்தது. ஆனாலும், ஆலிவர் தன்னுடைய சுருக்கப்பட்ட கடமைகளுக்குள் என்னென்ன சாதிக்க முடியுமோ அவற்றைச் செய்துவிட முனைப்பாக இருந்தார்.

சுதந்திரமடைந்தவர்களின் துறை
சுதந்திரமடைந்தவர்களின் துறை

இதற்கிடையே நடந்த ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது. முன்பே சொன்னது போல, ஆண்ட்ரு ஜான்சன் அடிமைமுறையை ஒழிப்பது என்பதில் எந்தவித மாற்றமுமின்றி இருந்தார்.

அடிமைமுறையை ஒழிப்பதற்கான பதின்மூன்றாவது சட்டத்திருத்தம், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களின் ஒப்புதலுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. அப்போதிருந்த 36 மாநிலங்களில், 27 மாநிலங்கள் ஒப்புதல் தரவேண்டி இருந்தது. வடக்கில் இருந்த 24 மாநிலங்களும் தங்களது ஒப்புதலை தெரிவித்தாலும், இன்னமும் மூன்று தென் மாநிலங்களின் ஒப்புதல் வேண்டி இருந்தது.

தன்னுடைய அதிகாரத்தின் மூலம் வேகமாகத் தென் மாநிலங்களை ஒன்றியத்தில் சேர்த்துக் கொண்டிருந்த குடியரசுத் தலைவர் ஆண்ட்ரு ஜான்சன், சட்டத் திருத்தத்திற்கான ஒப்புதலை நிபந்தனையாக வைத்தார். அப்படியே மூன்று மாநிலங்கள் தங்கள் ஒப்புதலைக் கொடுக்க, அடிமை முறையை ஒழிக்கும் பதின்மூன்றாவது சட்டத்திருத்தம் 1865ம் வருட இறுதியில் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டு, அரசியல் சாசனத்தில் நிரந்தரமாக வைக்கப்பட்டது.

0

வடமாநிலங்களில் இருந்தும் பல தன்னார்வலர்களும், தெற்கின் கறுப்பினத்தவர்களுக்கு உதவுவதற்கு வந்துகொண்டிருந்தார்கள். இவர்களுக்கும் ஆலிவரின் துறை, தேவையான உதவிகளைக் கொடுத்துக் கொண்டிருந்தது. உதாரணமாக, அரசாங்க நிலங்களில் புதிதாகக் கறுப்பினக் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. அவற்றில் வேலை செய்வதற்கு, தென் மாநில வெள்ளையர்கள் யாரும் முன் வராத நிலையில், வடமாநிலங்களில் இருந்து வந்தவர்களே அங்கு ஆசிரியர் பணிகளைச் செய்து வந்தனர்.

ஆனால், ஆண்ட்ரு ஜான்சனின் முனைப்பில், நாட்டின் அரசியல் நிலைமை வேகமாக மாறிக் கொண்டிருந்தது. தென் மாநிலங்களில் மீண்டும் வெள்ளை ஆளுநர்களை நியமனம் செய்து, அவர்களது மாநிலங்கள் மீண்டும் ஒன்றியத்திற்குள் வந்துவிட்டதாக அறிவித்தார். மேலும், கிட்டத்தட்ட அனைத்துத் தோட்ட முதலாளிகளும் தங்களது தோட்டங்களைத் திரும்பப் பெற்றுவிட்டனர். துறை இயங்கினாலும், ஒரே வருடத்திற்குள் வெறும் காகிதப் புலியாகவே மாற்றப்பட்டு இருந்தது.

அரசியல் ரீதியாக எந்த அதிகாரமும் இல்லாத துறையின் மூலமாகத் தன்னால் எந்தக் கறுப்பினத்தவரையும் காப்பாற்ற முடியாது என்று உணர்ந்திருந்தாலும், ஆலிவர் தன்னுடைய கடமையைச் செய்து கொண்டிருந்தார்.

0

போரில் பெரும் தியாகம் செய்து வெற்றி பெற்றாலும், அரசியல் அதிகாரம் மீண்டும் தெற்கை நோக்கிச் செல்வதை வடமாநில மக்களும் குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் பிரதிநிதிகளும் கிட்டத்தட்ட 1865 முழுவதையும் அதிர்ச்சியிலேயே பார்த்துக் கொண்டிருந்தார்கள் எனலாம்.

1866ல் ஆண்ட்ரு ஜான்சனின் கொள்கைகளுக்கு எதிரான புதிய போர்க்கொடி எழுப்பப்பட்டது.

(தொடரும்)

பகிர:
வானதி

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.View Author posts

பின்னூட்டம்

Your email address will not be published. Required fields are marked *