ஓர் அடிமையின் வாழ்வை நம்மால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியாது. வாசிக்கலாம், யோசிக்கலாம், படங்கள் பார்க்கலாம். ஆனால் அந்த வாழ்வு கொண்டுவரும் இயலாமையை, எதையும் செய்யவியலாத நிலையை நம்மால் எள்ளளவும் நினைத்துப் பார்க்க முடியாது. இருந்தாலும் முயற்சி செய்வோம்.
வாழ்வில் பிறந்ததில் இருந்து அடிமையாக இருக்கிறீர்கள். வேறு ஒரு வாழ்வு எப்படி இருக்கும் என்றே தெரியாது. தோட்டத்தில் வேலை செய்வதோ, சமையலறையில் வேலை செய்வதோ மட்டுமே தெரியும். உங்களது உடைகள், தங்குமிடம் என அனைத்தும் எப்படியோ கிடைத்துக் கொண்டிருக்கிறது. விடுமுறை நாட்கள் என்று எதுவும் கிடையாது. வாரத்தின் ஏழு நாட்களும் வேலை மட்டுமே. சில நாட்களின் இரவுகளில் நீங்களே காய்ச்சிய கோதுமை அல்லது பார்லி சாராயம் மட்டுமே சிறிது மகிழ்ச்சியைத் தரும்.
படிப்பு என்பது பற்றியோ, உலக நடப்புகள் பற்றியோ கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அவை உங்கள் வாழ்வில் என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றிச் சரியாகத் தெரியாது. குடும்பம், குழந்தைகள் என்றெல்லாம் இருந்தாலும், உங்களது முதலாளி எப்போது வேண்டுமென்றாலும் அவர்களைப் பிரித்து, விற்றுவிடலாம் என்பது தெரிந்திருந்ததால், அவர்களுடன் உங்களால் நிம்மதியாக இருக்கவே முடியாது.
சிறு தவறு செய்தாலும், சவுக்கால் விளாசிவிடும் கங்காணிகளைக் கண்டு பயப்பட வேண்டும். உங்கள் மனைவியோ, தாயோ, சகோதரியோ எந்த நேரத்திலும் கங்காணியாலோ முதலாளியாலோ யாரோ ஒரு வெள்ளையனாலோகூடப் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகலாம். நீங்கள் எதுவும் செய்ய முடியாது. தப்பித்து ஓட எத்தனித்தால் சட்டமும் முதலாளியின் நாய்களும் உங்களை வேட்டையாடும். எந்தவித மாற்றங்களும் இல்லாமல், நித்தமும் இப்படி வாழ்வைக் கழிக்கவேண்டியிருக்கும்.
ஒருநாள் உங்களது முதலாளிகள் உங்களைத் தனியே விட்டுவிட்டு சென்றுவிடுகிறார்கள். உங்களுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால் சுதந்திரம் என்றால் என்னவென்பது தெளிவாக இல்லை. யாரோ உங்களுக்கு நிலம் தரப் போவதாகக் கூறப்படுகிறது. என்னன்னவோ உங்களைச் சுற்றி நடந்தாலும், சுதந்திரம் என்பது நன்றாகவே இருக்கிறது. மீண்டும் பழைய வாழ்க்கைக்குச் செல்லாமல் இருப்பதற்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று மட்டும் தெரிகிறது.
0
வாழ்நாள் முழுவதும் அடிமைகளாக இருந்தவர்கள், விடுதலை அடையும்போது என்ன செய்வார்கள்? 1865ம் வருடத்தின் இறுதியில் தென் மாநிலங்களில் இருந்தவர்கள் அதைத்தான் கண்டறிந்தார்கள்.
முதலில், தோட்டங்களில் அதுவரை அடைபட்டுக் கிடந்த கறுப்பினத்தவர்கள் வெளியேற ஆரம்பித்தார்கள். தோட்டங்களில் தாங்கள் இனி கட்டயாமாக வேலை செய்ய வேண்டியதில்லை என்பதால் வெளியேறுவது எளிதாக இருந்தது. போரின் காரணமாகத் தோட்டங்களில் இருந்து வெளியேறியிருந்த முதலாளிகள் இன்னமும் திரும்பவில்லை என்பதும் அவர்களுக்கு உதவியாக இருந்தது. அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் குடும்பத்துடன் அலைந்து திரிவது அவர்களுக்குச் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது.
1865ம் ஆண்டின் இறுதியிலேயே குடியரசு தலைவர் ஆண்ட்ரு ஜான்சனின் பொது மன்னிப்பு வேடிக்கையும் ஆரம்பமாகியிருந்தது. தென் மாநிலத் தோட்ட முதலாளிகள், நேரடியாகக் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, தங்களது மாறாத விசுவாசத்தைத் தெரிவித்து, போர்க்கால நடவடிக்கைகளுக்கு மன்னிப்பை பெற்றுக் கொண்டிருந்தனர். அவர்களது நிலங்களும் தோட்டங்களும் திரும்பவும் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களால் தங்களது அதிர்ஷ்டத்தை நம்பவே முடியவில்லை. அப்படியாக 1866ல் தங்களது தோட்டங்களுக்குத் திரும்பிய அவர்கள், அங்கே தங்களது பழைய அடிமைகளைக் காணாமல் விழித்தனர். தோட்டத்தை எப்படி, யாரைக் கொண்டு வேலை செய்வது? என்ற கேள்வி பெரிதாக எழுந்து நின்றது.
தோட்டத்தில் எஞ்சியிருந்த சுதந்திரமடைந்தவர்களின் நடவடிக்கைகளும் மாறியிருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் யாரும் வேலைக்கு வருவதில்லை. பெண்கள் பெரும்பாலும் வேலைக்குச் செல்வதை விட்டுவிட்டு, வீட்டில் குழந்தைகளைக் கவனிக்க நேரத்தைச் செலவழிக்க ஆரம்பித்தனர். புதிதாக அமைக்கப்பட்டிருந்த சுதந்திரமடைந்தவர்களின் துறையின் பள்ளிகளுக்குத் தங்களது குழந்தைகளை அனுப்ப ஆரம்பித்திருந்தனர். இவை எல்லாம் வெகுவாக வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கையைக் குறைத்திருந்தது. அதுவரை தங்கள் சொல்வதைத் தவிர வேறெதையும் செய்யாத கறுப்பினத்தவர்களை எப்படிக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்பதும் பெரிய கேள்வியாக இருந்தது.
0
கறுப்பு வழிமுறைகள் (Black codes) என்பது சமூகத்தில் கறுப்பினத்தவர்களின் இடம் என்ன, அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகள். இவை வெறும் அறிவுரைகளாக இருக்கவில்லை. மாநிலங்களில் சட்டங்களாக இயற்றப்பட்டிருந்தன. போருக்கு முந்தைய நாட்களில் இப்படியான சட்டங்கள் தென் மாநிலங்களில் பரவலாக இருந்தது. அப்போது அடிமைகளாக இருந்த கறுப்பினத்தவர்களைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு உதவும் வழியில் இந்தச் சட்டங்கள் இருந்தன.
இப்போது, போருக்கு பிந்தைய நாட்களில், புதிதாகச் சுதந்திர காற்றைச் சுவாசிக்கும் கறுப்பினத்தவர்களை மீண்டும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய விதிகளைச் சட்டமாக்க வேண்டிய நிர்பந்தம் வெள்ளைத் தோட்ட முதலாளிகளுக்கு இருந்தது.
மாநிலங்களில் அதிகாரத்தைத் திரும்பவும் கைப்பற்ற ஆரம்பித்திருந்த வெள்ளையர்கள் இதைத் தங்களது முதலாவது வேலையாக எடுத்துக் கொண்டனர். கறுப்பினத்தவர்களைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து வேலை வாங்க முடியவில்லை என்றால் தென் மாநிலங்களின் பருத்திப் பொருளாதாரமே சீர்குலைந்துவிடும். அதுவரை கறுப்பினத்தவர்களின் ‘கூலி இல்லாத’ உடல் உழைப்பை ஆதாரமாகக் கொண்டே அந்தப் பொருளாதாரம் இயங்கி வந்தது. இப்போது அதை மாற்றுவது என்பது அந்தத் தொழிலின் லாபத்தைக் குறைத்து விடும். இதுவே இந்தச் சட்டங்களுக்கான மூலக் காரணம். எனவே ஒவ்வொரு மாநிலமாக இத்தகைய சட்டங்களை இயற்ற ஆரம்பித்தன. இந்தச் சட்டங்களில் முக்கியமானது ‘நாடோடி’ சட்டங்கள் (Vagrancy laws) என்பதாகும். 1866ல் விர்ஜினியா மாநிலத்தில் முதலில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது.
இது போன்ற சட்டங்கள் முன்னரே ஐரோப்பாவில் பரவலாக இருந்தது. அங்கிருந்த ஜிப்ஸிகள் மற்றும் நாடோடிகள் பல நாடுகளுக்கிடையேயும், நகரங்களுக்கிடையேயும் சென்று கொண்டிருந்ததால் அங்கே நிகழும் குற்றங்களைக் கண்டறிய முடியவில்லை என்பதால் இத்தகைய சட்டங்கள் இயற்றப்பட்டன என்று கூறப்பட்டது. ஆனால் சட்டங்கள் இவர்களின் நடமாட்டத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தவே ஏற்படுத்தப்பட்டன என்பதுதான் உண்மையான காரணம்.
புதிதாக விடுதலை பெற்று, இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்த கறுப்பினத்தவர்கள் இப்போது வெள்ளையர்களுக்குப் பெரும் ஆபத்தாகத் தெரிந்தார்கள். அவர்களது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது, தோட்டங்களில் ஏற்பட்டிருந்த வேலையாட்களின் தேவையையும் தீர்க்கும் என்பதால், இந்தச் சட்டங்களைத் தேவையானதாகப் பார்க்க ஆரம்பித்தார்கள்.
அமெரிக்காவில் இயற்றப்பட்ட சட்டங்களும் இது போன்ற நோக்கங்களோடே இயற்றப்பட்டன. கறுப்பினத்தவர்களின் நடமாட்டத்தை வெகுவாகக் கட்டுப்படுத்துவதுடன், அவர்களை வேறிடங்களுக்குச் செல்வதைக் குற்றமாகவும் ஆக்குவதுதான் இதன் நோக்கம். சரியான காரணம் இல்லாமல் வேறிடங்களில் அலைந்து கொண்டிருக்கும் கறுப்பினத்தவர்களை அவர்களது தோட்டத்தில் கட்டி போடுவதுதான் இந்தச் சட்டங்களின் முதல் நோக்கம்.
ஆனால் இந்தச் சட்டங்கள் வெறுமனே கறுப்பினத்தவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதோடு நிறுத்தவில்லை. அவர்கள் சொத்துகள் வாங்குவதையும், தொழில் செய்வதையும், அவர்கள் பொது இடங்களுக்கு வருவதையும் கூடத் தடை செய்தன. மேலும், அவர்கள் வேலையின்றி இருப்பதையும் அல்லது வெள்ளையர்கள் தங்களது வேலையென்று நினைத்த வேலைகளைச் செய்வதையும் குற்றமாகப் பார்த்தன.
இந்தச் சட்டங்களில் இன்னமொரு மோசமான விதியும் இருந்தது. வருடாந்திர வேலை ஒப்பந்தங்கள் என்ற பெயரில் கறுப்பினத்தவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக, கொத்தடிமைகளாக வைத்திருப்பது. இந்தச் சட்டங்களைக் கடுமையானதாக இயற்றியதன் மூலமாக இன்னுமொரு பயனும் இருந்தது. ‘ஒப்பந்தக் குற்றவாளிகள்’ என்ற முறை. அதாவது மேலே குறிப்பிட்ட சட்டங்களை மீறும் கறுப்பினத்தவர்களை, அரசாங்கமே ஒப்பந்தக் கூலி முறையில், தோட்டங்களில் வேலை செய்ய அனுப்பி வைக்கும் முறைதான் இது. இதன் மூலமாகத் தோட்டங்களுக்குக் குறைந்த செலவில் வேலையாட்கள் கிடைத்து விடுவார்கள். அதே நேரத்தில் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் தோட்ட முதலாளிகளுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்த இத்தகைய சட்டங்கள் உதவின.
0
இப்படியாக இங்கே அலைந்து திரிந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் தோட்டத் தொழிலாளிகள் மட்டுமல்ல. ஒன்றிய ராணுவத்தில் வீரர்களாகவும் வேறு பல வேலைகளும் செய்து கொண்டிருந்த கறுப்பினத்தவர்களும்தான் இவர்களில் அதிகம். இவர்களில் பலருக்கும் தோட்ட வேலை தெரியாது. மேலும் இவர்கள் அந்த அடிமை வாழ்விற்கு மீண்டும் திரும்பவும் விரும்பவில்லை.
எனவே இவர்களில் பெரும்பாலோர் நகரங்களில் சென்று தங்க ஆரம்பித்தனர். தென் மாநிலங்கள் மட்டுமல்லாது, வட மாநிலங்களிலும் இருக்கும் பெரும் நகரங்கள் போரில் இருந்து திரும்பி, புது வாழ்வைத் தேடிக் கொண்டிருக்கும் கறுப்பினத்தவர்களால் நிரம்பிக் கொண்டிருந்தது. இதனால் நகரங்களின் வெள்ளையர் பெரும்பான்மை குறைந்தது. இனவெறி கலவரங்கள் வெடிப்பதற்கான அனைத்துச் சூழல்களும் அங்கே இருந்தது.
அதே நேரத்தில் இந்தக் கலவரங்களின் பின்னணியில் இருக்கும் ஏழை வெள்ளையர்களின் கதையையும் சிறிது பார்த்துவிடலாம். 1850களில் ஐரோப்பாவின் ஐயர்லாந்து நாட்டில் பெரிதாக உருளைக்கிழங்கு பஞ்சம் வந்தது. கடுமையான குளிரின் காரணமாகத் தொடர்ச்சியாக உருளைக்கிழங்கு விளைச்சல் குறையவே, மக்கள் பசியால் மடிந்து கொண்டிருந்தனர். அதனால் பெரும்பாலான ஐரிஷ் மக்கள் அமெரிக்காவை நோக்கி குடிபெயரலாயினர்.
இவர்கள் அமெரிக்காவின் பல பெரும் நகரங்களில் சிறிய சிறிய வேலைகளைச் செய்தும், சிறு தொழில்களைச் செய்தும் பிழைத்து வந்தனர். இவர்களது மொழியும், மதமும் (பெரும்பாலோர் ரோமன் கத்தோலிக்கர்) வேறாக இருந்ததால், அமெரிக்க வெள்ளையர்கள் இவர்களையும் சந்தேகத்துடன், இரண்டாம் தர குடிமக்களாகவே பார்த்தார்கள். பெருமளவில் ஐரிஷ் இளைஞர்களும் உள்நாட்டுப்போரில் பங்கெடுத்திருந்திருந்தனர். ஆனால் உழைக்கும் வர்க்கங்களாக அவர்கள், தங்களது சகோதர வர்க்கமான கறுப்பினத்தவர்களுடன் இணையாமல், இனவெறியால் உந்தப்பட்டு அவர்களுடன் மோதல் பாதையில் இருந்தனர்.
1866 மே மாதம் டென்னிசி மாநிலத்தின் மெம்பிஸ் நகரில் முதல் கலவரம் தொடங்கியது. 1860ல் மெம்பிஸ் நகரில் 3000மாக இருந்த கறுப்பினத்தவர்களின் எண்ணிக்கை, 1866ல் 20,000 ஆக இருந்தது. நகரில் இருந்த 20,000 வெள்ளையர்களும் இவர்களைத் தங்களது தினசரி வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகவே பார்த்தனர். வேலைகளில் தங்களது போட்டியாகவும், தங்களுடைய வாழ்வுமுறையை உடைப்பவர்களாகவுமே கறுப்பினத்தவர்களைப் பார்த்தார்கள்.
அமெரிக்க ராணுவத்தில் இருந்து வந்திருந்த மூன்று கறுப்பு இளைஞர்களுக்கும், நான்கு ஐரிஷ் காவலர்களுக்குமான வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. செய்தி நகரில் பரவவும், பெரும்பாலான வெள்ளையர்கள், கறுப்பினத்தவர்கள் குடியிருப்புப் பகுதிக்கு சென்றனர். பெரும் கலவரம் மூண்டது. கறுப்பினத்தவர்களின் வீடுகளும், கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. கறுப்புப் பெண்கள் வன்புணர்வு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. மூன்று நாட்களுக்கு மேல் நடந்த கலவரத்தில் ஐம்பதுக்கும் அதிகமானோர் இறந்தனர். இன்னமும் பல நூறு பேர் காயமடைந்தனர். பெருமளவில் பொருட் சேதம் ஏற்பட்டது.
ஆனால் மெம்பிசில் நடந்தது ஓர் ஆரம்பமே. அங்கிருந்து தென் மாநிலங்களில் மட்டுமல்லாது, வட மாநிலங்களிலும் கலவரம் பரவ ஆரம்பித்தது. சிறிதும், பெரிதுமாக நடந்த கலவரங்களின் உச்சம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் ஜூலை மாதம் எட்டப்பட்டது.
அங்கேயும் போரில் பங்கெடுத்த கறுப்பு வீரர்கள் தங்களது உரிமைகளை மீட்டெடுக்க வேண்டி, கூட்டமாகக் கூடியிருந்தனர். அங்கே வெள்ளையர்கள் அவர்களைப் பயமுறுத்த வேண்டி தங்களது தாக்குதலை நடத்தினார்கள். 200 கறுப்பினத்தவர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். காயமடைந்தவர்கள் எண்ணிக்கைக்கும், பொருட் சேதத்திற்கும் எண்ணிக்கையே இல்லை. அந்தக் கலவரத்தின் முடிவு வட மாநில குடியரசு கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
அதுவரை குடியரசுத் தலைவரின் மன்னிப்புகளையும், கறுப்பினத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் சிறிது பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்த அவர்களுக்கு, நடந்த கலவரங்கள் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்ததோடு, அவர்களது கோபத்தைக் குடியரசுத் தலைவரை நோக்கித் திருப்பியது. இனியும் மறுகட்டமைப்புத் திட்டங்களைக் குடியரசுத் தலைவரின் பொறுப்பில் விடுவது, போரில் தாங்கள் பெற்ற வெற்றியை முழுவதும் அர்த்தமில்லாததாக ஆக்கிவிடும் என்பதை உணர்ந்தார்கள்.
அந்த வருடம் நடந்த பிரதிநிதிகள் சபைத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் பிரதிநிதிகள் 77% வாக்குகளையும், மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான தொகுதிகளையும் வென்றனர். செனட் சபையிலும் அவர்களது எண்ணிக்கை அதிகரித்தது. ஸ்கேயலர் கால்பாக்ஸ் தலைமையிலான பிரதிநிதிகள் சபை, நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பைத் தன்னுடைய கையில் எடுத்துக் கொள்ள முடிவு செய்தது. குடியரசுத் தலைவருடனான மோதல் வெளிப்படையாக ஆரம்பித்தது.
(தொடரும்)