1866ம் வருடத்திய காங்கிரஸ் (பிரதிநிதிகள் சபை) தேர்தல் ஒரு திருப்புமுனை என்று கூறலாம். இன, நிறவெறி அற்ற அமெரிக்காவில் தங்களது வாழ்வு எவ்வாறாக இருக்கக்கூடும் என்பதை ஒரு கீற்றாகக்காட்டிய சில வருடங்களைக் கறுப்பினத்தவர்களுக்கு வழங்கிய தேர்தல் அது. எல்லாம் அப்படியே தலைகீழாகிவிடவில்லை என்றாலும், வெள்ளையர்களும், கறுப்பினத்தவர்களும் இணைந்து முயன்றால், நாடு எப்படியாக இருந்திருக்கும் என்பதன் சிறுவெளிச்ச காலம்தான் இது.
அதற்கு முன்பு, அமெரிக்க அரசியல் முறையைச் சற்றுத் தெரிந்துகொள்வது இந்த அத்தியாயத்தையும் பின்னர் வரப்போகும் அரசியல் குழப்பங்களையும் சரியாகப் புரிந்துகொள்ள உதவும் என்பதால் இங்கே அமெரிக்கக் குடிமையியல் பற்றிய சிறுகுறிப்பை கொடுக்கிறேன்.
அமெரிக்கச் சட்ட சாசனம், அரசாங்கத்தை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறது. முதலாவது, சட்டமாமன்றம். சட்டங்களை இயற்றவும், திருத்தவும், அகற்றவும் அதிகாரம் கொண்ட அமைப்பு. இது இரண்டு பகுதிகளைக் கொண்டது. அமெரிக்க மக்கள் தொகையைக் கொண்டு நிர்ணயிக்கப்பட்ட தொகுதிகளைக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் சபை அல்லது வெறுமனே, காங்கிரஸ். இதற்கு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நேரடி வாக்களிப்பின் மூலம் தேர்தல் நடத்தப்படும்.
மன்றத்தின் இன்னொரு பகுதி செனட். செனட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு உறுப்பினர்கள் இருப்பார்கள். மாநிலத்தின் பரப்பளவோ, மக்கள் தொகையோ இங்கே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் சமமான அதிகார பகிர்வு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறாக அமைக்கப்பட்டது. செனட் உறுப்பினர்கள் ஆறு வருடங்களுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இரண்டாவது பிரிவு, நிர்வாகத்துறை. இதன் தலைவராகக் குடியரசுத் தலைவர் இருப்பார். உதவி குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவரின் அமைச்சரவை மற்றும் பெரும்பாலான ஒன்றிய நிர்வாகயந்திரமும் இதன் பகுதியாகும். சட்டமாமன்றம் இயற்றும் சட்டங்களை அமல்படுத்த வேண்டியது இந்த யந்திரத்தின் கடமையாகும். இதில் குடியரசுத் தலைவர் மட்டுமே மக்களால் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுவார். மற்றவர்கள் அவரால் நியமிக்கப்படுவார்கள்.
மூன்றாவது பிரிவு, நீதித்துறை. மாமன்றம் இயற்றும் சட்டங்கள், அரசியல் சட்ட சாசன வரைவிற்கு உண்மையாக இருப்பதை உறுதி செய்வது நீதித்துறையின் முக்கியமான பொறுப்பாகும். மாவட்ட நீதிமன்றங்கள், மாநில உச்ச நீதிமன்றங்கள், ஒன்றிய நீதிமன்றங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க உச்சநீதிமன்றம் என்று அமெரிக்க நீதித்துறையின் அமைப்பு சற்று சிக்கலானது. அவற்றிலும் எவை மாநில சட்டங்களுக்கு உட்பட்டவை, எவை ஒன்றிய சட்டங்களுக்கு உட்பட்டவை, மாநில சட்டங்கள் சட்டசாசனத்திற்கு மாறாக இருக்கின்றனவா என்று பார்ப்பது யார் என்பது பற்றி எல்லாம் பல நேரங்களில் பெரும் விவாதங்களும், நெருக்கடிகளும் உண்டாவது உண்டு. அவை மேற்சொன்ன மூன்று பிரிவுகளின் இசைவான இயக்கத்தால் சரி செய்யப்படுவதும் உண்டு.
இந்த மூன்று பிரிவுகளுக்கும் தெளிவான வரையறைகள் இருந்தாலும் அவை ஒன்றை ஒன்று சார்ந்தே இயங்குமாறு அமெரிக்கச் சட்டசாசனம் வலியுறுத்துகிறது. உதாரணமாக, மாமன்றங்கள் இயற்றும் சட்டங்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர வேண்டும். குடியரசு தலைவரின் மீது மாமன்றங்கள் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டு வந்து, அவரைப் பதவியில் இருந்து நீக்கலாம். குடியரசுத் தலைவரின் அமைச்சரவைக்குச் செனட் ஒப்புதல் தர வேண்டும். அதுபோலவே, உச்சநீதிமன்றங்களின் நீதிபதிகளைக் குடியரசு தலைவர் நியமித்தாலும், மாமன்றங்கள் தங்களுடைய ஒப்புதலை தர வேண்டும். கீழ்நிலை நீதிபதிகள், மாநில அரசின் வழக்குரைஞர்கள் எனப் பலரும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இத்தகைய, ஒன்றை ஒன்று சார்ந்து இயங்கும் பிரிவுகளின் மூலமாக, எந்தத் தனிநபரின் கையிலும் அதிகாரம் குவிக்கப்படுவது தவிர்க்கப்படுவதை அமெரிக்கச் சட்ட சாசனம் உறுதி செய்கிறது. ஆனால் இந்த வகையில் அமெரிக்க மாநிலங்கள் எப்போதும் தேர்தலை நடத்திக்கொண்டே இருக்கின்றன. மேலே சொன்னவை தவிர, மாநில ஆளுநர், அவரது அமைச்சரவை, மாநில சட்டமன்றங்கள், மாவட்ட மன்றங்கள், நகர சபைகள் என்று அமெரிக்காவில் தேர்தல் இல்லாத நாளே இல்லை எனலாம். இதன் சாதக, பாதகங்களும் நம் கதையின் அரசியல்வாதிகளின் முடிவுகளில் தெரியும்.
நமது வரலாறு நடக்கும் நாட்களிலேயே, இப்போதும் அமெரிக்காவில் இருக்கும் இரண்டுக் கட்சி ஆட்சி முறை வந்துவிட்டது. குடியரசு கட்சியும், ஜனநாயக கட்சியும் தங்களது வெளியுறவு கொள்கைகளில் ஒன்றுபோல இருந்தாலும், மற்ற விஷயங்களில் இரண்டும் முற்றிலும் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டவை.
நமது வரலாற்றின் நாட்களில் குடியரசு கட்சியினர் பெரும்பாலும் மக்கள் நலன், உழைக்கும் மக்களுக்கு உதவுவது என்று இன்றைய இடதுசாரி சித்தாந்தத்தை ஓத்திருந்த கொள்கைகளைக் கொண்டிருந்தனர். ஜனநாயக கட்சி இதற்கு நேரெதிரான கொள்கைகளைக் கொண்டிருந்தது. (பின்னாட்களில் இரண்டு கட்சிகளின் இந்தக் கொள்கைகள் நேரெதிராக மாற்றமடைந்தன.) எளிமையின் பொருட்டு நான் இவ்வாறு எழுதினாலும், இவர்களின் கொள்கைகளில் நடுவே நிரப்ப முடியாத பெரும் இடைவெளி இருந்தது என்பதுதான் உண்மை.
—
1866ல் பிரதிநிதிகள் சபையையும், செனட் சபையையும் கைப்பற்றிய குடியரசுக் கட்சியினர், இப்போது ஜனநாயக கட்சியைச் சேர்ந்த குடியரசுத் தலைவருக்கு எதிரான தங்களது யுத்தத்தைத் தொடங்கினர்.
குடியரசுக் கட்சியின் தீவிர அடிமை முறை எதிர்ப்பாளர்களே பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையாக இருந்தார்கள். அங்கே இவர்களது தலைவராகத் தேடியஸ் ஸ்டிபன்ஸ் இருந்தார்.
70 வயதை நெருங்கியிருந்த தேடியஸ் ஸ்டிபன்ஸ், பென்சில்வேனியாவை சேர்ந்த அரசியல்வாதி. தீவிர அடிமைமுறை எதிர்பாளரான அவர், கறுப்பினத்தவர்களுக்குச் சமஉரிமை கொடுக்கவேண்டும் என்பதையும் வெகுவாக வலியுறுத்தி வந்தார். அவர்களையும் சட்டத்தின் முன் சமமாக நடத்த வேண்டும் என்பதே அவரது குரலாக இருந்தது. மேலும் தென்மாநிலங்களுக்குப் பொதுமன்னிப்புக் கொடுப்பது தவறு என்றும் அவர்கள் தங்கள் தவறுகளை உணரும் வரை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்பதும், அவரது கோரிக்கையாக இருந்தது. 1866ல் அவரது விருப்பங்களை நிறைவேற்ற தேவையான பெரும்பான்மை கிடைத்தது.
இரண்டாவது, செனட் குடியரசு கட்சியின் தலைவரான சார்லஸ் சம்னர். மாசாச்சூசெட்ட்ஸ் மாநிலத்தின் செனட்டரான அவர் வெகுநாட்களாகவே தீவிரகறுப்பினத்தவர்கள் ஆதரவாளராகவும், தென்மாநில அரசியல்வாதிகளுக்குச் சிம்ம சொப்பனமாகவும் இருந்து வந்தார். 1850களில் நடைபெற்ற விவாதம் ஒன்றின் போது, அவரது பேச்சில் கோபமடைந்த தென்மாநில பிரதிநிதி ஒருவர் தனது கைத்தடியால் அவரை மண்டையில் அடித்ததில், அவரது உடல்நிலை சில வருடங்களுக்குப் பாதிக்கப்பட்டிருந்தது. அதிலிருந்து மீண்டு அவர் சபைக்குத் திரும்பியபோது, போரை நடத்திய தென்மாநிலங்களுக்குத் தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்ற முடிவோடுதான் வந்திருந்தார்.
மூன்றாவதாக, அமெரிக்க ராணுவத்தின் தலைமை தளபதியான யூலிஸிஸ் கிராண்ட். கிராண்ட், அமெரிக்க ராணுவ கொள்கைகளின்படி, எந்தக்கட்சியையும் ஆதரிப்பதை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும், அவரது ஆதரவு குடியரசு கட்சிக்கே இருந்தது. தென்மாநிலங்களில், ராணுவம், சுதந்திரமடைந்தவர்களின் துறையுடன் சேர்ந்து உதவி வந்தது. ஆனால் அவர்களது அதிகாரம் வெகுவாகக் குறைக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ற உதவிகள் மட்டுமே செய்ய முடிந்தது. கிராண்ட் இதைமாற்றி, கறுப்பினத்தவர்களுக்குப் பாதுகாப்பும், அவரது உரிமைகளைப் பெற உதவியும் புரியும்படியானஅ திகாரத்தை வேண்டினார். பிரதிநிதிகள் சபை மூலமாக அதைப் பெறமுடியுமென்றால், அதற்கும் தயாராக இருந்தார்.
1866ல் பிரதிநிதிகள் சபை 1866ன் பொது உரிமை சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம், அமெரிக்கக் குடியுரிமையாருக்கு அவர்களது உரிமைகள் என்ன என்பது குறித்து விவரித்தது. சுருக்கமாக, கறுப்பினத்தவர்களை முதல்முறையாக அமெரிக்கக் குடிமக்களாக அங்கீகரித்தது. ‘இனம், மொழி, நிறம், முன்னாள் அடிமை என’ எந்தக் காரணத்தைக் கொண்டும் குடியுரிமையை நிராகரிப்பதை ஒரு குற்றச் செயலாக்கியது. சமஉரிமைக்கான நீண்ட போராட்டத்தின் முதல்அடி என்று கூறியது. பிரதிநிதிகள் சபையும், செனட்டும் சட்டத்தைப் பெரும்பான்மை பலத்துடன் இயற்றின. குடியரசு தலைவரின் ஒப்புதலுக்குச் சென்ற சட்டத்தை, குடியரசுத் தலைவரான ஆண்ட்ரு ஜான்சன் நிராகரித்தார். அவரது நிராகரிப்பை மீறி சட்டத்தை அங்கீகரிக்க, இரண்டு சபைகளும் மீண்டும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் சட்டத்தை இயற்றின. அடுத்தடுத்து வரப்போகும் மோதல்களுக்குப் போடப்பட்ட அச்சாணியாக இது இருந்தது.
1867ம் ஆண்டுப் பிரதிநிதிகள் சபை இன்னமும் சில சட்டங்களை இயற்றியது. மறுகட்டமைப்புச் சட்டங்கள் என்றழைக்கப்பட்ட இந்தச் சட்டங்கள் சில முக்கியமான மாற்றங்களைக் கொண்டுவந்தன. இவை கறுப்பினத்தவர்களுக்கு வாக்குரிமையைக் கொடுத்தன. தென்மாநிலங்களை ஐந்து ராணுவ மாவட்டங்களாகப் பிரித்து, அவற்றை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. தென்மாநிலங்கள் மீண்டும் ஒன்றியத்தில் சேர, புதிய அரசியல் சாசனம் ஒன்றை தங்களுக்கு எழுதி ஒப்புதல் பெற வேண்டும், முன்னாள் தென்மாநில கூட்டமைப்பின் போர் வீரர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றோர் மீண்டும் அதிகாரத்திற்கு வரக்கூடாது போன்ற விதிகளும் இருந்தன. நான்கு சட்டங்களாக இயற்றப்பட்ட இவற்றை மீண்டும் குடியரசுத் தலைவர் நிராகரித்தார். மீண்டும் அவரது நிராகரிப்பை மீறி சட்டங்கள் இயற்றப்பட்டன.
அதே நேரத்தில் சட்டங்களில் தாங்கள் எடுத்துரைக்கும் கறுப்பினத்தவர் உரிமைகளை, எவரும் நீதிமன்றங்களுக்குச் சென்று மாற்றிவிடலாம் என்ற எண்ணமும் குடியரசுக் கட்சி தலைவர்களுக்கு இருந்தது. எனவே அவற்றை அரசியல் சட்டசாசனத்தில் நிரந்தரமாகப் பதிய வேண்டும் என்றும் முடிவு செய்தனர். பதினான்காவது சட்டத்திருத்தம் எழுதப்பட்டது.
இந்தச் சட்டத்திருத்தம், குடியுரிமை, குடியுரிமைக்கான கடமைகளும், பாதுகாப்புகளும், அனைவருக்கும் சமமான நீதிமுறை எனப் பலவற்றைத் தெளிவாக எடுத்துரைத்தது. கறுப்பினத்தவர்களின் குடியுரிமையையும், அதன் நீட்சியான வாக்குரிமையையும் உறுதி செய்தது.
வழக்கம் போலவே, குடியரசுத் தலைவரின் நிராகரிப்பை மீறி இரண்டு சபைகளிலும் இயற்றப்பட்டு, மாநிலங்களின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதுவும் பெறப்பட்டு, அரசியல் சாசனத்தில் இயற்றப்பட்டது. இதன் மூலமாகமா நிலங்களோ, நீதிமன்றங்களோ இந்தச் சட்டங்களை மாற்றுவதில் இருந்து பாதுகாப்புப் பெறப்பட்டது.
இந்தச் சட்டங்களின் மூலமாகத் தென்மாநிலங்கள் அனைத்தும் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டன. ஐந்து ராணுவ மாவட்டங்களையும் ஒரு ஜெனரல் தன்னுடைய நிர்வாகத்தில் வைத்திருந்தார். மாநிலங்கள் சட்டத்தில் கொடுக்கப்பட்ட விதிகளை நிறைவேற்றிய பின்னர், பிரதிநிதிகள் சபையின் ஒப்புதலுடன் மீண்டும் ஒன்றியத்திற்குள் அனுமதிக்கப்படும். ஆனால் ராணுவ கட்டுப்பாடு பிரதிநிதிகள்சபை வேண்டும் வரை தொடரும். இதன் மூலமாக வெள்ளையர்கள் மீண்டும் கறுப்பினத்தவர்களை எந்த விதத்திலும் அடிமைப்படுத்துவதில் இருந்து பாதுகாப்புக் கொடுக்கப்பட்டது.
1867-68ல் தென்மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில், பெருமளவில் கறுப்பினத்தவர்கள் தங்களது வாக்குரிமையைச் செலுத்தினார்கள். அதிக எண்ணிக்கையில் கறுப்புப் பிரதிநிதிகள் பல்வேறு அரசியல் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 11 தென்மாநிலங்களில், 10ல் குடியரசு கட்சியின் ஆட்சி அமைந்தது. முதல் முறையாக ஒடுக்கப்பட்ட, முன்னாள் அடிமைகள் அரசியல் அதிகாரத்தைச் சுவைத்தார்கள்.
குடியரசுத் தலைவர் ஆண்ட்ரு ஜான்சன் பதவிக்கு வந்தபோது, லிங்கனின் குடியரசுக் கட்சி அமைச்சரவையை அப்படியே ஏற்றுக்கொண்டார். ஆனால் இப்போது அவர்களும் பிரதிநிதிகள் சபை, செனட்டுடன் சேர்ந்து சட்டங்களை ஆதரிக்கவே, அவர்களில் மிகவும் தீவிரமான எட்வர்ட் ஸ்டான்டனை அமைச்சரவையில் இருந்து நீக்க முடிவு செய்தார். ஆனால் அவர் அதற்குச் செனட்டின் ஒப்புதலைப் பெறவில்லை.
இந்தச் சட்ட மீறலை காரணமாக எடுத்துக் கொண்டு, பிரதிநிதிகள் சபைகுடியரசு தலைவரின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தது. சட்டமியற்றும் சபைகளுக்கும், நிர்வாகச் சபைக்குமான மோதல் உச்சத்திற்கு வந்தது.
பிரதிநிதிகள் சபை மூன்றில் இரண்டு பங்குவாக்குகளுடன் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டாலும், செனட் சபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலமாக நீக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறுவதில் இருந்து ஆண்ட்ரு ஜான்சன் தப்பித்தார்.
ஆனால் 1868ம் வருட தேர்தலில் ஜான்சனை தோற்கடிப்பதற்காக எல்லா நிகழ்வுகளும் சரியாக நிகழ்ந்து முடிந்தன.
மேலே சொன்ன சட்டங்கள் மிகவும் பெரிய நோக்கத்தோடு இயற்றப்பட்டிருந்தாலும் இவற்றால் உண்மையில் பயனடைந்தது யார், இதனால் கறுப்பினத்தவர்கள் என்ன பயன்பெற்றார்கள் என்பதை அடுத்து பார்ப்போம்.
(தொடரும்)
படம்: செனட்சபையில் ஆண்ட்ருஜான்சனின்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்.