அமெரிக்காவின் புகழ்பெற்ற புதினமான ‘மொபி டிக்’கை எழுதிய ஹெர்மன் மெல்வில், 1866ஆம் ஆண்டு தன்னுடைய கவிதைத் தொகுப்பு ஒன்றைப் பதிப்பித்தார். “Battle-Pieces and Aspects of the War” என்ற அந்தத் தொகுப்பு 72 கவிதைகளைக் கொண்டிருந்தது. ஒரு வருடத்திற்கு முன்னர் முடிந்திருந்த அமெரிக்க உள்நாட்டுப் போரைப் பற்றியக் கவிதைகள் அவை. மெல்வில் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவரது கவிதைகளில் வெற்றிப் பெருமிதமோ கொண்டாட்டமோ இல்லை. மாறாக அவரது கவிதைகள் போரில் ஏற்பட்ட இழப்புகளைப் பேசுவதாக இருந்தது. இன்னொரு விதத்தில், ஐந்து வருடப் போரின் வரலாற்றைப் பதிவுச் செய்வதாகவும் இருந்தது. மெல்விலின் கவிதைகள் அவர் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், நாம் இங்கே கவிதைகளைப் பேசப் போவதில்லை.
மாறாக, மெல்வில் புத்தகத்தின் இறுதியில் பின்குறிப்பாக எழுதியிருந்ததுதான் நமக்குத் தேவையானது. போருக்குப் பின்னான மறுகட்டமைப்புப் பற்றிய தனது சிந்தனைகளை அவர் எழுதியிருக்கிறார். மிகவும் சிந்தனையுடன், வடமாநில மனிதன் ஒருவனின் சிந்தனைகளாக எழுதப்பட்டிருக்கும் அந்தக் கட்டுரையில் அவர், தென் மாநிலத்தவர்களை எப்படி அணுக வேண்டும் என்று எழுதுகிறார்.
“வடமாநில எழுத்தாளர்கள் எவ்வளவு தேசப்பற்று உள்ளவர்களாக இருந்தாலும், இறந்துப்போன சிங்கத்தைச் சுற்றி வரும் நாயைப்போல நடந்து கொள்ளக் கூடாது; அதற்காக நமது வெற்றியைக் கொண்டாடக்கூடாது என்றில்லை. நமது நாட்டையும் மனிதகுலத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த வெற்றி உதவியதற்காகக் கொண்டாடலாம்.” என்று ஆரம்பிக்கும் அவர், “ஒரு விதத்தில், தென் மாநிலங்களில் இரண்டு இனங்களும் – கறுப்பினத்தவர்கள் அடிமைகளாக இருக்கிறார்களோ, சுதந்திரமாக இருக்கிறார்களோ – சேர்ந்து வாழ்வது என்பதே பெரும் தீமையாக இருக்கிறது (ஆபிரகாம் லிங்கனிற்கும் அப்படியே தோன்றியது). கறுப்பினத்தவர்களுக்கு விடுதலை கொடுத்தது நமது நாட்டின் மீதிருந்த பழியை அகற்றி இருந்தாலும் அதன் பின்னான பேரழிவை முழுவதுமாகத் தடுக்கவில்லை” என்று தொடர்ந்து பேசுகிறார்.
இறுதியாக, “நமது சகோதர வெள்ளையர்களிடம் நல்ல கிறிஸ்துவர்களாகவும், நமது சகமனிதர்களான கறுப்பினத்தவர்களிடம் தாராளமனத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்” என்கிறார். பெரும்பாலான வடமாநிலத்தவர்களின் எண்ணமும் இப்படியே இருந்தது எனலாம். கறுப்பினத்தவர்களுக்குச் சமஉரிமை தர வேண்டும் என்பது பொதுவான கருத்தாக இருந்தாலும், வெள்ளையர்களைத் தண்டிக்கவோ தாழ்வாக நடத்தவோ கூடாது என்பதும் அவர்களது எண்ணமாக இருந்தது.
இதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதில் இருக்கும் சிக்கலை யாரும் உணரவில்லை. பொதுவாகக் கருத்துக்களைத் தெரிவிப்பதும் செல்லும் பாதைக்கான நோக்கத்தைச் சொல்வதும் வேறு. அதே பாதையைத் திட்டமிட்டு அமைத்து, அதை அமைத்ததன் நோக்கத்தை நிறைவேற்றுவது என்பது வேறு. இதை அமெரிக்கா உணரத் தொடங்கியது.
இரண்டு வருடங்களில் (1866-68) பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியச் சட்டங்கள், கறுப்பினத்தவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அதுவரை வேண்டியிருந்த பல உரிமைகளை உறுதிச் செய்தது. அவர்களும் குடியுரிமைப் பெற்றவர்கள் என்பதை எந்தச் சந்தேகமுமின்றிச் சட்டத்தில் எழுதி வைத்தது. அவர்களுக்கும் வாக்குரிமைக் கொடுத்து, அரசியல் அதிகாரத்தில் பங்களித்தது. ஆனால் இவற்றை எப்படி நடைமுறைப்படுத்துவது?
0
மறுகட்டமைப்புச் சட்டங்களின் முதல் மாற்றம், பத்துத் தென்மாநிலங்களும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்ததுதான். அதுவரை குடியரசுத் தலைவர் ஆண்ட்ரு ஜான்சன் மன்னித்து ஒன்றியத்தில் இணைந்திருந்த மாநிலங்கள் உட்பட அனைத்தும் ஐந்து ராணுவ மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றையும் நிர்வகிக்க ஜெனரல் ஒருவரும் நியமிக்கப்பட்டார். அவர்களது மாவட்டத்தின் அனைத்தையும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கவும், சில நேரங்களில் இறுதி முடிவு எடுக்கவும்கூட அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் அடிமைமுறைக்கு எதிரானவர்களாக, கறுப்பினத்தவர்களுக்குச் சம உரிமையை நிலைநாட்டுபவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவை அனைத்தும் தலைமை தளபதி ஜெனரல் கிராண்டின் கட்டுப்பாட்டில் வந்தது.
இது தென்மாநிலங்களுக்குப் பெரிய மாற்றமாகும். அவர்களது மாநிலங்கள் அனைத்தும் இப்போது ராணுவ ஆக்கிரமிப்பில் வந்துவிட்டன. ஒன்றியத்தின் நேரடிப் பார்வையில் நிர்வாகம் நடந்து கொண்டிருந்தது. வெள்ளையர்கள் கைகளில் இருந்த அதிகாரம் இப்போது பகிர்ந்து கொடுக்கப்பட்டது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சுதந்திரமடைந்தவர்களின் துறைக்குத் தேவையான அனைத்து பாதுகாப்பும் புதிய சட்டங்களை அமுல்படுத்துவதற்குத் தேவையான பலமும் கொடுக்கப்பட்டன.
மீண்டும் ஒன்றியத்தில் அனுமதிக்கப்பட புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அந்த நிபந்தனைகள், மாநிலத்தில் இருக்கும் வாக்குரிமைப் பெற்ற அனைவரும் ஒன்றியத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி ஏற்றுக்கொள்ளவேண்டும், அதன் பின்னர் அவர்கள் வாக்களிக்கப் பதிவு செய்துக்கொள்ளலாம், அரசியல் சட்ட சாசனக் குழுவை கூட்டி பதினான்காம் சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும், வாக்குரிமை பெற்ற கறுப்பினத்தவர்கள் வாக்கு செலுத்துவதைத் தடுக்கக்கூடாது ஆகியவை ஆகும்.
இவை ஒருபக்கம் இருந்தாலும், அங்கிருந்த கறுப்பினத்தவர்களின் நிலை என்ன என்ற கேள்வியும் எழத்தான் செய்யும்.
0
1866ஆம் வருட மாற்றங்கள் கறுப்பினத்தவர்களுக்குப் பெரும் நம்பிக்கையைத் தருவதாக அமைந்ததை மறுக்கமுடியாது. சுதந்திரமடைந்தவர்களின் துறைக்கு அதிக அதிகாரமும் ராணுவத்தின் மூலமாக பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது பல உடனடி மாற்றங்களைக் கொண்டுவந்தன.
இவற்றில் முக்கியமானதும் முதன்மையானதும் தென் மாநிலங்கள் எங்கும் முதல் முறையாகத் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும், அவற்றில் எந்தப் பாகுபாடுமின்றிக் கறுப்பு, வெள்ளை குழந்தைகளைச் சேர்த்ததும்தான்.
போருக்கு முந்தைய நாட்களில் அடிமைகள் படிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. கறுப்பினத்தவர்கள் வாசிக்கவோ கற்றுக்கொள்ளவோ ஒன்றாகக் கூடுவது என்பதே குற்றமாக பார்க்கப்பட்டது. விர்ஜினியாவில் அடிமைகளும் சுதந்திரமான கறுப்பினத்தவர்களும் கற்பதுமே குற்றமாக கருதப்பட்டது. ஆங்காங்கே புத்தகங்களைத் திருடியோ, வார்த்தைகளைத் தெரிந்து வைத்திருந்த ஒன்றிரண்டு நபர்களைக் கொண்டோ இரவில், திருடர்களைப் போலவே அவர்கள் கற்றுக் கொண்டிருந்தார்கள். வடமாநிலங்களுக்குத் தப்பிச் சென்ற அடிமைகள் முதலில் கற்பதையே தங்களது குறிக்கோளாக வைத்திருந்தார்கள். பிரடெரிக் டக்ளஸ், தன்னுடைய தோட்ட முதலாளியின் வீட்டில் திருட்டுத்தனமாக ஆரம்பக் கல்வி நூல்களைத் வாசித்தே அடிப்படை கல்வியறிவைப் பெற்றார்.
எனவே, கறுப்பினத்தவர்களுக்குப் பள்ளிகளைத் திறந்துவிட்டது மறுகட்டமைப்பு நாட்களின் பெரும் சாதனை என்பதை மறுக்க முடியாது. அந்த நூற்றாண்டின் பெரும் கல்வியியலாளரான புக்கர் வாஷிங்டன் சொல்வதைப்போல ‘ஒரு இனமே பள்ளிகளை நோக்கி சென்றது’ என்பது சிறிதும் மிகையில்லாத விவரிப்பாகும். ‘சிலர் மிகவும் இளமையாக இருந்தார்கள். ஆனால் கற்பதற்கு வந்த எவரும் தங்களுக்கு வயதானதாகவே கருதவில்லை. ஆசிரியர்கள் கிடைத்துவிட்டால் பகல் நேர பள்ளிகள் மட்டுமல்ல, இரவு நேர பள்ளிகளும் நிரம்பின’ என்கிறார் வாஷிங்டன்.
தென் மாநிலங்கள் முழுவதும் பள்ளிகளில் கறுப்பினத்தவர்கள் நிரம்புவது நிகழ்ந்தது. அவற்றிற்கு ஆசிரியர்கள் வடமாநிலங்களில் இருந்து பெரும்பாலும் வந்தார்கள். வடமாநில தேவாலய சபைகள் இதில் முன்னிருந்து வழிநடத்தின. பெரும்பாலான பள்ளிகள் ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்களுடன் நடைபெற்றன. இவற்றை அரசாங்கமே நடத்தியதால், ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதும் பள்ளிகளுக்கு இடம் கிடைப்பதும் எளிதாகவே இருந்தது. ஆனாலும் இந்தக் காலகட்டத்தில், கறுப்பினத்தவர்களும் முனைப்புடன் தங்களுக்குத் தேவைகளுக்கான பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிர்மாணிக்க ஆரம்பித்தனர்.
போரின் முடிவில், 1866ல் அமெரிக்க ராணுவத்தின் 62வது கறுப்பினத்தவர்கள் பிரிவை சேர்ந்த கறுப்புப் போர்வீரர்கள், தங்களது வெள்ளை அதிகாரியான ரிச்சர்ட் பாஸ்டருடன் இணைந்து, தங்களது சேமிப்பை உபயோகித்து மிசூரி மாநிலத்தில் கறுப்பினத்தவர்களுக்கான பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பித்தார்கள். தங்களுக்கு அடிமைமுறையில் இருந்து விடுதலைப் பெற்றுத் தந்த லிங்கனின் பெயரால், லிங்கன் கல்லூரி (இப்போது பல்கலைக்கழகம்) என்று அழைக்கப்பட்டது. அந்த வீரர்களின் சேமிப்பான 6300 டாலர்கள் முதலுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்தப் பல்கலைக்கழகம், கறுப்பினத்தவர்களுக்குக் கல்வி தருவதை முதன்மையாகக்கொண்டு இன்னமும் இயங்கி வருகிறது. அதற்கு முன்னரே வடமாநிலங்களில் கறுப்பினத்தவர்களுக்கான பல்கலைக்கழகங்கள் இயங்கி வந்தாலும், இது தென்மாநிலங்களுக்கான ஆரம்பமாக இருந்தது. தொடர்ந்து அடுத்த 100 வருடங்களில் பல பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் கறுப்பினத்தவர் கல்வியை முதன்மையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டன.
ஆனால், இந்தப் பள்ளிகளும் அதன் ஆசிரியர்களும் எதிர்ப்புகளைச் சந்திக்காமல் இல்லை. இவை வெறும் மிரட்டல்களாக மட்டுமில்லாது, சில நேரங்களில் வன்முறையாகவும் வெடித்தது. எனவே ராணுவத்தின் பாதுகாப்பு என்பது பல இடங்களில் தேவையானதாக இருந்தது.
இந்தப் பள்ளிகளின் தாக்கம் அடுத்தப் பத்து, இருபது வருடங்களிலேயே தெரிய ஆரம்பித்தது. கறுப்பினத்தவர்கள் தங்களது உரிமைகளை நன்றாகப் புரிந்து கொண்டதாலும், தங்களது உலகை புரிந்து கொண்டதாலும் அடுத்து வந்த வருடங்களில் அவர்களிடையிலிருந்து பல தலைவர்கள் வந்தார்கள். அதே நேரத்தில் வெள்ளையர்கள், கறுப்பினத்தவர்களின் கல்வியைத் தடுக்கச் சட்டத்தின் மூலமாகவும் வன்முறையின் மூலமாகவும் என்னவெல்லாம் செய்யமுடியுமோ அனைத்தையும் செய்தனர்.
0
இரண்டாவது பெரிய மாற்றம், கறுப்பினத்தவர்கள் தங்களது வாக்குரிமையைச் செலுத்த ஆரம்பித்தது. அதாவது வாக்கைச் செலுத்துவது மட்டுமல்லாமல் அரசியலிலும் பெருமளவில் பங்கெடுக்க முன்வந்தனர். இதற்கும் சுதந்திரமடைந்தவர்கள் துறையும், ராணுவ பாதுகாப்பும் முக்கியமான காரணிகள் என்பதைச் சொல்ல தேவையில்லை.
1867ஆம் வருடம் மட்டும் தென் மாநிலங்களில் 80 சதவிகித கறுப்பினத்தவர்கள் வாக்குச் செலுத்தப் பதிவு செய்து கொண்டார்கள். 1870ல் அமெரிக்கச் செனட் சபைக்கு மிஸ்ஸிஸிப்பி மாநிலத்தில் இருந்து ஹிரம் ரிவேல்ஸ், முதல் கறுப்பினத்தவர் செனட்டராகச் சென்றார். அந்த வருடமே ஜோசப் ரைனி என்பவர் பிரதிநிதிகள் சபைக்குச் சென்றார். இவர்கள் ஆரம்பித்த மாற்றம், மறுகட்டமைப்பு முடிந்தும்கூட இருபது வருடங்களுக்கு மேல் தொடர்ந்தது.
இங்கே போருக்குப் பின்னான நாட்களில் தென் மாநிலங்களில் அரசியல் அதிகாரம் எப்படியாக இருந்தது என்று தெரிந்துகொள்வது அவசியம்.
முன்பே கூறியதுபோல, இந்த நாட்களில், வடமாநிலங்களில் இருந்து பெரிய எண்ணிக்கையில் பலரும் தென்மாநிலங்களுக்கு வந்தார்கள். இவர்கள் பொதுவாக ஆசிரியர்கள், பாதிரிகள், வணிகர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்கள். போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட தென்மாநில பொருளாதாரத்திற்குப் பெரிய அளவில் முதலீடு தேவைப்பட்டது. இந்த முதலீடு வடமாநில முதலாளிகளின் மூலமாகவே வந்து கொண்டிருந்தது. ஆனாலும், தங்களது கெட்ட காலத்தில் எல்லாவற்றையும் மலிவாக வாங்கவும், அதில் இருந்து லாபம் ஈட்டவும் முயலுபவர்களாக இவர்கள் தென்மாநில வெள்ளையர்களால் கட்டமைக்கப்பட்டார்கள்.
அதே நேரத்தில், அனைத்து தென்மாநில வெள்ளையர்களும் இப்படியாக இல்லை. அவர்களில் சிலர், அதிகாரத்தில் இருப்பவர்களுடன் இணைந்து கொள்வது தங்களுக்குத் தேவையானவற்றைச் சாதித்துக்கொள்ள உதவும் என்று நினைப்பவர்களாகவும் உண்மையாகவே போருக்குப் பின்னான நாட்களில் மனம் மாறியவர்களாகவும்கூட இருந்தனர். இவர்களையும் பெரும்பாலான வெள்ளையர்கள் போக்கிரிகள் என்றே அழைத்தார்கள். முந்தைய வடமாநிலத்தவர்களை விட இவர்கள் வெகுவாக வெறுக்கப்பட்டார்கள்.
மறுகட்டமைப்பின் நாட்களில் இந்த இரண்டு குழுக்களும் கறுப்பினத்தவர்களும் கூட்டணியாக இணைந்தே தங்களது அரசியல் அதிகாரத்தைப் பெற்றார்கள். தென் மாநில சட்ட சபைகளை எல்லாம் குடியரசுக் கட்சி கைப்பற்றியதன் காரணம் இவர்கள்தான். ஆனால், இவர்கள் பெரும்பாலும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முற்போக்காளர்கள் என்பதால் இந்தக் காலகட்டம் மாநிலங்களின் ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பெரும் வரமாக அமைந்தது என்பதில் மாற்றமில்லை.
0
இவை மட்டுமல்லாது, கறுப்பினத்தவர்கள் நிலங்களை வாங்கவும் விற்கவும் தேவையான உதவிகள் அரசாங்கம் மூலமாகவும் வங்கிகள் மூலமாகவும் கொடுக்கப்பட்டன. அவர்கள் விவசாயம் செய்யவும் உதவி செய்யப்பட்டது. ஆனால் இவைப் பரவலாக நடக்கவில்லை என்பதே உண்மை. இதற்கு, இன்னமும் பெருமளவிலான நிலம் வெள்ளை தோட்ட முதலாளிகளின் கைகளில் இருந்ததுதான் காரணம்.
பொது இடங்களில் கறுப்பினத்தவர்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. எந்த விதத்திலும் பாகுபாடு பார்ப்பது குற்றச்செயலாக்கப்பட்டது. கறுப்பினத்தவர்களையும் அரவணைத்துக் கொண்டு, புதிய தெற்கு ஒன்றை கட்டமைக்கும் பார்வை முன்வைக்கப்பட்டது. பொருளாதாரம் மெதுவாகச் சரி செய்யப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில், இவை அனைத்தும் தென்மாநில கறுப்பினத்தவர்களுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது என்பதை மறுக்கமுடியாது.
ஆனால், கடுமையான சீர்திருத்தம் என்பது கடுமையான எதிர்ப்பையும் சந்திக்கும் என்பது நியதி. அப்படியே நிகழ்ந்தது.
(தொடரும்)
___________
படம்: ஜார்ஜியாவில் ஒரு கறுப்பினத்தவர் பள்ளி.