‘டேவி சீம்ஸுக்கு. நல்ல பிள்ளையாக நடந்துகொள். ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்டைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, உன் துப்பாக்கியை இரவில் சுடுவதையும் விட்டுவிடு. தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும். ஆற்றுக்கு மேலே இருக்கும் பெரிய பாறையில் நான் வசிக்கிறேன். லிங்கன் கவுன்டியில் இருந்து போருக்குச் சென்று 1861இல் மனசாஸ் சண்டையில் இறந்து விட்டேன். இப்போது பகலில் வெட்டுக்கிளியாகவும் இரவில் உன்னையும் உன்னைப் போன்றவர்களையும் கவனித்துக்கொண்டு, உன்னுடைய இடம் என்ன என்று உணர்த்த கு க்ளக்ஸ் என்னை அனுப்பியிருக்கிறது.
தினமும் உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். தினமும் மாலை முதல் இரவு வரை நான் ஆற்றங்கரையில் இருப்பேன். உன்னை அங்கே சனிக்கிழமைப் பார்க்க விரும்புகிறேன். பிளாட் மாடிசனுக்கும் உனக்கும் ஒரு பெட்டித் தயாராக இருக்கிறது. உன்னையும் உன் போன்றோர்களையும் பெட்டியில் வைத்துக் கேகேகேவிற்கு அனுப்புவோம். இதுவரை அதுபோல இறந்தவர்கள் நாட்டில் 2,00,000 பேர் இருக்கிறார்கள். அவர்கள் உன்னையும் மற்றவர்களையும் நல்ல ஜனநாயகக் கட்சியினராக மாற்றி, வெள்ளை மக்களோடு சேர்ந்து வாக்கு செலுத்த வைப்பார்கள்.
கு க்ளக்ஸ் க்ளான்.’
லிங்கன் கவுன்டி, ஜார்ஜியாவில் புதிய ஷெரிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த டேவிட் சீம்ஸுக்கு எழுதப்பட்ட ஒரு மிரட்டல் கடிதம் – 1868
0
பிரதிநிதிகள் சபைக்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் என்று முன்பே பார்த்தோம். எனவே சபையில் சட்டங்கள் இயற்றப்பட்டவுடன், அவற்றை நடைமுறைப்படுத்தும் நிர்பந்தமும் மிகவும் அவசரத்துடன் இருந்தது. அடுத்தத் தேர்தலுக்குள் அவற்றை வெற்றிகரமாக நடத்திக் காட்டி வாக்குச் சேகரிக்க வேண்டியதாகவும் இருந்தது.
ஆனால் இந்த வேகம் கொண்டு வந்த மாற்றம் வெள்ளையர்களுக்கு எப்படியாக இருந்தது என்பதை ஆழமாக யோசிக்க வேண்டியதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் இன்னமும் கறுப்பினத்தவர்களை அடிமைகள் என்று எண்ணுவதில் இருந்தே வெளிவரவில்லை. இதுவரை இலவசமாகக் கிடைத்து வந்த அவர்களது உழைப்பிற்கு இனி கூலி கொடுக்க வேண்டும் என்பதும் அவர்களுக்கு உவப்பானதாக இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, சுதந்திரம் அவர்களுக்குத் தந்திருந்த சுயமரியாதை வெள்ளையர்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
ஆனால் தெற்கில் தோட்ட முதலாளிகள் மிகவும் குறைவான சதவிகித்தினர்தான். மற்றவர்கள் கூலி வேலைச் செய்யும் எளிய வெள்ளையர்கள். இப்போது சுதந்திரம் பெற்று எங்கு வேண்டுமென்றாலும் யார் வேண்டுமென்றாலும் வேலைச் செய்யலாம் என்ற நிலையில் இருந்த கறுப்பினத்தவர்களை அவர்கள் தங்களது போட்டியாகப் பார்த்தார்கள். மேலும் தங்களுக்குக் கீழே இருந்த ஒரு இனம், தங்களுடன் இணையாகப் போட்டிப்போடுவதையும் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
மூன்றாவதாக தோல்வியில் துவண்டிருந்த முன்னாள் வீரர்கள், போருக்குக் காரணமாகக் கறுப்பினத்தவர்களைப் பார்த்தார்கள். தாங்கள் ‘மாநில உரிமைக்காக’ போரிட்டும் இப்போது தோல்வி அடைந்ததை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
0
நேதன் பெட்போர்ட் பாரஸ்ட், நடந்து முடிந்திருந்த அமெரிக்க உள்நாட்டுப் போரில் தென்மாநில கூட்டமைப்பின் மேற்குமுனைக் குதிரைப்படைத் தளபதி. போரில் சரணடைந்த நூற்றுக்கணக்கானக் கறுப்புப் போர்வீரர்களைக் கொன்று குவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர். போருக்குப் பின்னான நாட்களில் வெள்ளையர்களுக்குப் பெரும் அநீதி இழைக்கப்படுவதாகக் கூறி, கு க்ளக்ஸ் கிளான் இயக்கத்தில் தலைவராகச் சேர்ந்தார்.
கு க்ளக்ஸ் கிளான் (Ku Klux Klan – KKK) என்பது 1866-67ல் தென் மாநில கூட்டமைப்பின் வீரர்களால் வெள்ளையர்களின் உரிமையைக் காக்க வேண்டும் என்ற காரணத்தோடு தொடங்கப்பட்ட வெள்ளை இனவெறி இயக்கம். வெள்ளையர்களே உலகை ஆள பிறந்தவர்கள், மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்ய வேண்டியவர்கள், அமெரிக்க அரசாங்கம் எப்போதும் வெள்ளையர்களின் அரசாங்கமே என்பது போன்ற கருத்துக்களோடு அந்த அமைப்பு தொடங்கப்பட்டது.
கறுப்பினத்தவர்களுக்குக் குடியுரிமையும் வாக்குரிமையும் கொடுக்கப்பட்டது அரசாங்கத்திற்கு ஆபத்தாக முடியும் என்று கருதிய அந்த அமைப்பு, அதனைத் தடுக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தது. அதற்கு வன்முறையைக் கைக்கொள்ளவும் தயங்கவில்லை.
உண்மையில், கேகேகே ஒரு தீவிரவாத இயக்கம். அதன் உண்மை நோக்கம் கறுப்பினத்தவர்களைப் பயத்தில் வைத்திருப்பதன் மூலமும் அவர்களது வாய்ப்புகளை மறுப்பதன் மூலமும் வெள்ளையர்களை அரசியல், சமூக அதிகாரங்களோடு வைத்திருப்பதே ஆகும். பகலில் ஆசிரியர், வணிகர் என்று பல வேலைகளைப் பார்த்தவர்களும் இரவில் கேகேகே உறுப்பினர்களாக இருந்தார்கள். தங்களது அடையாளங்களை மறைத்துக்கொள்ள, முகத்தை மறைக்கும் வெள்ளைத் தொப்பியும் அணிந்து கொண்டார்கள். அவர்களது உடையும் கறுப்பினத்தவர்களைப் பயமுறுத்தும் நோக்கத்திலேயே இருந்தது.
மற்றொரு கூட்டமைப்பு ஜெனரலான ஜார்ஜ் கோர்டானும் இதில் பெரும் பங்கு வகித்தார். இவரைப் போன்றவர்கள் கேகேகேவில் உறுப்பினர்களாக இருந்தது, தென் மாநில வெள்ளையர்களை ஈர்ப்பதாக இருந்தது. வெள்ளையர்களின் வாழ்வுமுறைக்கு ஆபத்து என்கிற, காலம்காலமாக மனதின் அடியாழ அச்சத்தைப் பயன்படுத்தி இந்த இயக்கங்கள் வேகமாக வளர ஆரம்பித்தன.
ஆனால் கேகேகே மட்டுமே இந்தக் காலகட்டத்தில் இருந்த வெள்ளை இனவெறி இயக்கமில்லை. தெற்கு கரோலினாவில் சிவப்புச் சட்டைகள் (Red Shirts), லூசியானாவில் வைட் நைட்ஸ் ஆப் காமிலியா, தெற்கின் மைந்தர்கள் (Native Sons of South), டெக்சாஸில் நைட்ஸ் ஆப் ரைசிங் சன் என ஒவ்வொரு மாநிலத்திலும் அங்கிருந்த வெள்ளையர்களால் பல குழுக்கள் தொடங்கப்பட்டன. இவை அனைத்தின் நோக்கமும் அடிப்படையில் ஒன்றாகவே இருந்தது. அது, பயங்கரவாதத்தின் மூலமாக அரசியல் மாற்றத்தைக் கொண்டு வருவதே. அதை நோக்கியே இவர்கள் அனைவரும் பயணித்தார்கள்.
0
கறுப்பினத்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குரிமை வெள்ளையர்களை அச்சப்படுத்தியது. அதன் மூலமான சமூக, அரசியல் மாற்றத்தை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். எனவே, இவர்கள் அனைவரும் வெள்ளையருக்கு ஆதரவாக இருந்த ஜனநாயகக் கட்சியை ஆதரித்தனர். அவர்களை மீண்டும் அரசியல் அதிகாரத்திற்குக் கொண்டு வருவதன் மூலமே தங்களது நோக்கத்தை அடையமுடியும் என்பதைத் தெளிவாகத் தெரிந்திருந்தார்கள்.
இவர்களில் பலரும் முன்னாள் போர்வீரர்கள் என்பதால் இவர்களுக்கு ஆயுதங்களும் மற்ற பொருட்களும் கிடைப்பதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. வெள்ளையர்கள், இதனையும் தங்களது சமூகக் கடமையாகவே பார்த்தார்கள். எனவே இந்தக் குழுக்களுக்கு ஆட்கள் சேர்ப்பதும் எந்தவிதத்திலும் சிரமமாக இல்லை.
தேர்தல் நேரங்களில் வன்முறை உச்சகட்டத்தை அடைந்தது. ஒவ்வொரு தேர்தலின்பொழுதும் கேகேகே போன்ற குழுக்களின் வன்முறை அதிகரித்தது. குறிப்பாகக் குடியரசு கட்சியினரின் சார்பாகப் போட்டியில் இருப்பவர்கள், அந்தக் கட்சிக்காக வேலை பார்ப்பவர்கள், கறுப்பினத்தவர்கள் என அனைவரும் வன்முறைக்கு இலக்கானார்கள். ஜனநாயகக் கட்சி ‘நாங்கள் அமைதியாக வெற்றிப் பெறவே விரும்புகிறோம். ஆனால் வன்முறை மூலமாகத்தான் வெற்றியை பெற முடியும் என்றால், அதற்கும் தயங்கமாட்டோம்.’ என்று வெளிப்படையாகவே அறிவித்தது. இது வெள்ளை இனவெறி குழுக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளாகவே பார்க்கப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் (1865-77), தெற்கில் குடியரசு கட்சியின் சார்பில் வேலை செய்தவர்களில் பத்தில் ஒருவர் வன்முறைக்கு இலக்கானதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. கறுப்பினத்தவர்களும் மற்றவர்களும் வாக்குப்பதிவிற்கு முன்னிரவுகளில் அருகில் இருந்த காடுகளுக்குச் சென்றுவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அவர்களது வீடுகளைக் குறிவைத்து நடத்தப்படும் வன்முறையைத் தவிர்க்கவே இப்படி செய்ய வேண்டியிருந்தது.
1868ம் வருட குடியரசுத் தலைவர் தேர்தலில் அமெரிக்கப் போர்படையின் தலைமைத்தளபதியாக இருந்த யூலிஸிஸ் கிராண்ட், குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். தான் குடியரசுத் தலைவரானால், லிங்கனின் கொள்கைகளைத் தீவிரமாக அமுல்படுத்தப் போவதாகத் தெரிவித்தார்.
ஐந்து வருடங்கள் நடந்த அமெரிக்க உள்நாட்டுப் போரில், தொடர்ச்சியாகத் தெற்கு கூட்டமைப்பின் படைகள் வெற்றி பெற்றிருந்தும், இறுதியாகக் கிராண்டின் படைகளிடம் தோல்வி அடைந்ததை அவர்களால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. தங்களின் வெற்றித் தட்டிப் பறிக்கப்பட்டதாகவே அவர்கள் நினைத்தார்கள்.
நேதன் பாரஸ்ட், தேர்தலுக்கு முன், வெள்ளையர்களுக்கு விட்ட அறைகூவலில் இதைத் தெளிவாகக் கூறுகிறார்.
‘கறுப்பர்களும் பாட்டுப் பாடும் கிறிஸ்துவப் பொறுக்கிகளும் மெத்தடிஸ்ட் சபையும் அந்தக் கொலைகாரனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். கிராண்டின் வெற்றிகளுக்கு, அவனது ராணுவத் திறமையை விட முட்டாள்தனமே முதற்காரணம். ரிச்மண்டை நோக்கிச் சென்ற போது, அவனது படைகள் பல முறை பயங்கரமாகத் தோற்கடிக்கப்பட்டன. அதைச் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால், அந்த இடத்திலேயே போர்விதிகளின்படி சரணடைந்திருப்பான். ஆனால் அவனது மரமண்டையும் கோவேறு கழுதையைப் போன்ற புத்தியும், அவனையும் அவனது படைகளையும் காப்பாற்றியது.’
இதைத் தொடர்ந்து கிராண்ட் தொடர்ச்சியாகப் பெற்ற வெற்றிகளைப் பட்டியலிட்டு, அவை அனைத்தும் உண்மையில் தோல்விகள் என்றும், கிராண்ட் சரணடைய விருப்பமில்லாமல் சண்டையிட்டதால் வெற்றிப் பெற்றதாகவும் கூறுகிறார். இந்த ஒரு பக்கத்துண்டு பிரசுரத்தைச் சிரிக்காமல் வாசிப்பது சிரமமே. ஆனால் கூட்டமைப்பின் சிறந்த குதிரைப்படை தளபதியிடம் இருந்து வந்த இந்த விஷம பிரச்சாரம், அப்போது வெள்ளையர்களால் உண்மையாகவே பார்க்கப்பட்டது.
எனவே 1868ல் இருந்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும், தென் மாநிலங்களில் வன்முறை தலைவிரித்தாடியது. முந்தைய தேர்தலில் 3000 வாக்குகள் பதிவான ஒரு கவுன்டியில், அடுத்தத் தேர்தலில் 1 வாக்கு மட்டுமே பதிவானது.
இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட மிரட்டல் கடிதம் அப்படியான ஒன்றே. டேவிட் சீம்ஸ், ஜார்ஜியாவின் லிங்கன் கவுன்டியின் முதல் கறுப்பு ஷெரிப். தெற்கில் இருந்த பல கறுப்பர்களுக்கும் தேர்தலில் பங்கெடுக்க விரும்பிய பலருக்கும் இது போன்ற மிரட்டல்கள் மட்டுமல்லாது, வன்முறையும் பரிசாகக் கிடைத்தது.
ஆனால், இந்த நேரத்தில், தென் மாநிலங்கள் ராணுவ மாவட்டங்களாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததையும் மறந்து விடக்கூடாது. பல இடங்களிலும் ராணுவப் பாதுகாப்புடன் தேர்தல்கள் நடந்தன. கறுப்பினத்தவர்கள் வாக்களிக்க மட்டுமல்லாமல், அரசியல் அதிகாரத்தில் பங்கெடுக்கவும் முடிந்தது. ஆனால், ராணுவம் மக்களின் அன்றாட வாழ்வில் அதிகாரம் செலுத்தியது மேலும் அதிருப்தியை வளர்க்கவே உதவியது.
தெற்கு முழுவதும் ராணுவம் கறுப்பினத்தவர்களை வாக்குச் செலுத்த பதிவு செய்யவும் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லவும் செய்தது. புதிய பள்ளிகளைத் திறப்பது, அந்தப் பகுதிகளில் மதுக்களை தடை செய்வது, சாதாரணச் சிக்கல்களில் பஞ்சாயத்துச் செய்வது என்று ராணுவத்தின் பங்கு எல்லா விதங்களிலும் மக்களின் அன்றாட வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனாலும் அவர்களால் வன்முறையை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.
எண்ணிக்கைகள் சரியாகத் தெரியவில்லை என்றாலும், 1868ம் வருட தேர்தலுக்கு முன் லூசியானா மாநிலத்தில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட கறுப்பினத்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அர்கன்சாஸ் மாநிலத்தில் 2000க்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம். இதுபோக, காயமடைந்தவர்கள் எண்ணிக்கை எந்தக் கணக்கிலும் இல்லை. புதிதாக விடுதலை பெற்றிருந்த கறுப்பினத்தவர்கள் தங்களுக்கு எனப் பெயரோ, இடமோ கொண்டவர்கள் இல்லை. பெரும்பாலும் அவர்களது முதலாளிகளின் பெயரே அவர்களுக்கும் இருந்தது. எனவே கொலையுண்டவர்களின் எண்ணிக்கையும் சரியாகத் தெரியவில்லை.
போரில் ஈடுபட்ட கறுப்பு வீரர்கள், சில இடங்களில் ஒன்றாகச் சேர்ந்து எதிர்ப்பைக் காட்டினார்கள். அந்த இடங்களில் வன்முறைச் சிறிது குறைவாக இருந்தாலும், பொதுவாக எல்லாத் தென் மாநிலங்களிலும் வன்முறை அதிகமாகவே இருந்தது. கறுப்பு வீரர்களும் குடிமக்களும் ஆயுதமேந்துவதை அரசாங்கம் விரும்பவில்லை. ‘இனப்போருக்கு’ அது இட்டுச் சென்றுவிடும் என்ற அச்சம் அதிகமாக இருந்தது.
இப்படியான வன்முறை நிறைந்த சூழலிலேயே 1868ம் வருடக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்து முடிந்தது. குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட யூலிஸிஸ் கிராண்ட், அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(தொடரும்)